‘தி பியானிஸ்ட்‘ திரைப்படத்தின் இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கியின் நேர்காணல்
தமிழில் : கு. ஜெயச்சந்திர ஹஸ்மி |
2002 ல் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், தனது ‘தி பியானிஸ்ட்’‘ படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்...
வ்லாடிஸ்லா ஸ்பில்மென்னின் புத்தகம் (இப்புத்தகத்தின் தழுவல்தான் பியானிஸ்ட் திரைப்படம்) எதனால் உங்களை இந்த அளவிற்கு கவர்ந்தது? வேறெந்த படங்களை விடவும் இந்த படத்தின் மீது நான் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லும் அளவிற்கு அந்த புத்தகத்தில் என்ன உள்ளது?
ஒரு சிறுவனாக நான் கடந்துவந்த சம்பவங்களை இப்புத்தகம் விவரித்தது. பல காலமாக, இந்த காலகட்டத்தை வைத்து ஒரு திரைப்படம் எடுப்பதற்கு நான் முயன்று கொண்டிருந்தேன். ஆனால் சரியான கருவும், ஒரு மூலமும் கிடைக்கவில்லை. இந்த புத்தகம் ஒரு வீரக்கதையை சொல்லும் மற்றோர் சாதாரணமான புத்தகம் அல்ல. ஸ்பில்மென் தன்னுடைய நினைவுகளில் இருந்து விரியும் சம்பவங்களை, அதை அனுபவித்த ஒருவனின் பார்வையிலிருந்து கூறுகிறார். போர் முடிந்த காலகட்டத்திலேயே எழுதப்பட்ட புத்தகம் இது. அதனால், 20,30 வருடங்களுக்கு பிறகு எழுதப்படும் புத்தகங்களை விட மிகவும் புதிதாக, ஒரு நிகழ்வுத்தன்மையோடு இருந்தது. இதன் முதல் சில அத்தியாயங்களை படித்தபோதே நான் முடிவு செய்துவிட்டேன், இதுதான் என்னுடைய அடுத்த திரைப்படம் என்று.
இப்படத்தின் திரைக்கதையாசிரியர் ரோனால்டு ஹார்வுட், ‘இந்த திரைக்கதையில் பொலான்ஸ்கியின் பங்களிப்பு அலாதியானது. திரைக்கதையில் ஏற்படும் பல சிக்கல்களை, வேறு யாராலும் தீர்வு சொல்ல இயலாத சிக்கல்களை, தனது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பொலான்ஸ்கி தீர்த்தார்’‘ என்று கூறியிருக்கிறார். இப்படம் எந்தளவிற்கு உங்கள் சொந்த படைப்பாக வந்துள்ளது?
பல்வேறு சமயங்களில் போரைப் பற்றிய சித்தரிப்புகள் அடங்கிய பலவற்றை நான் படித்திருக்கிறேன். அவை அனைத்தும் போரைப் பற்றி திரைப்படமாக்கும் அளவிற்கு விஷயங்கள் பொதிந்ததுதான். ஆனால் அவை என் சொந்த அனுபவங்களுக்கு மிக மிக நெருக்கமாக இருந்தன. அதனால் அதை நான் தவிர்த்துவிட்டேன். ஆனால் இந்த புத்தகத்தில் வார்சா கெட்டோ (கெட்டோ - நாஜிக்களின் ஆக்கிரமிப்பின் போது, யூதர்கள் தனிமைப்படுத்தபட்டு வாழ்ந்த இடங்கள்) வாழ்விடமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் இருந்தது க்ராக்கோ கெட்டோ வில். அதனால் திரைக்கதையில் என் சொந்த அனுபவங்களையும் பயன்படுத்த முடிந்தது. அதே சமயம் என் சொந்தக் கதையாக இல்லாமலும் இப்படத்தை எடுக்க முடிந்தது. இக்கதை நிகழும் காலகட்டம் எனக்கு மிகத்தெளிவாக நினைவில் இருந்ததால், திரைக்கதையில் ஈடுபட உதவியாக இருந்தது.
ரோனால்ட் ஹார்வுட் ஒரு பிரபலமான நாடக ஆசிரியர். அதனைத் தவிர்த்து இப்படத்திற்கு திரைக்கதை எழுத அவரை முடிவு செய்ததன் காரணம் என்ன?
இந்த களத்தைப் பற்றிய அனுபவம் உள்ள ஒரு திரைக்கதையாசிரியர் எனக்கு தேவைப்பட்டார். இக்காலகட்டத்தோடு தொடர்புடைய பல நாடகங்களையும் கதைகளையும் ரோனால்ட் எழுதியுள்ளார். அவரது ‘தி ட்ரெஸ்ஸர்’‘ என்ற நாடகத்தையும், நாஜிக்களோடு தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்ட ஃபுர்ட்வாங்க்லர் என்னும் இசை நடத்துனரைப் பற்றிய ‘டேக்கிங் சைட்ஸ்‘ என்ற நாடகத்தையும் நான் மிகவும் ரசித்துள்ளேன். குறிப்பாக ‘டேக்கிங் சைட்ஸ்‘ பார்த்தவுடன்தான், இப்படத்தின் திரைக்கதையை எழுத ரோனால்ட் சரியான ஆள் எனத் தீர்மானித்தேன்.
தி பியானிஸ்ட் படத்தின் கதையை மிகவும் தனிப்பட்ட முறையில் சித்தரித்துள்ளீர்கள். படத்தில் நீங்கள் தோன்றும் எண்ணம் ஏதேனும் இருந்ததா?
இல்லை. இல்லவே இல்லை. இப்படம் உண்மையாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டுமென நான் விரும்பினேன். படத்தில் இதுபோன்ற கேமியோ ரோல்களை செய்வது ஒரு சிறிய நகைப்புக்குரிய விஷயமாகவும் மாறிப்போய்விடும். என்னதான் அதற்கு ஒரு அர்த்தம் இருந்தால் கூட, பார்வையாளர்கள் என்னை அடையாளம் கண்டு ‘அது பொலான்ஸ்கி, அது பொலான்ஸ்கி’‘ என்று முணுமுணுப்பர். அது அவர்களை படத்தை விட்டு வெளியே கொண்டு வந்து விடும். அதை நான் விரும்பவில்லை.
படத்தின் நாயகனான பியானிஸ்ட் பாத்திரத்தை நீங்கள் எப்படி கற்பனை செய்து வைத்திருந்தீர்கள். அதற்கான தேடலில் என்ன மாதிரியான சிறப்பு குணாதிசயங்களை நீங்கள் எதிர்பார்த்தீர்கள்?
நான் எந்த உருவ ஒற்றுமையையும் எதிர்பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அது பெரிய விஷயமும் இல்லை. நான் கற்பனை செய்து வைத்திருந்த பாத்திரத்தில் பொருந்தக் கூடிய ஒரு நடிகரை நான் தேடினேன். முக்கியமாக அவர் என் கதாப்பாத்திரமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ஏற்கனவே அறியப்பட்ட ஒரு நட்சத்திரமாக இருக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். இதனால் புதுமுக நடிகர்களை தேட ஆரம்பித்தோம். இப்படம் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டதால் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். அதனால் லண்டனில் உள்ள ஒரு அறியப்படாத திறமைசாலியை கண்டெடுக்க முடிவு செய்தோம். அங்கே நாங்கள் நினைத்தது போல் யாரும் கிடைக்காததால், அமெரிக்காவில் எங்கள் தேடுதலைத் தொடர்ந்தோம்.
‘தி பியானிஸ்ட்‘ புத்தகத்தை படிக்கும்போது, போரில் தன்னைக் காப்பாற்றிய ஜெர்மன் அதிகாரியை, போருக்கு பிறகு கண்டுபிடிக்க முயலாததற்காக, ஸ்பில்மென் தன்னையே குற்றம் சாட்டுவதாக ஒரு தோற்றம் வரும். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
படத்தில் ஸ்பில்மென் இது குறித்து வருந்தி சிந்திப்பதை நீங்கள் கண்கூடாக காண முடியும். ஆனால் புத்தகத்திலும் இந்த உணர்வு வருகிறது என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்பில்மென் தன்மையாக நடந்து கொண்டதாக நான் நினைக்கிறேன். ஹோசன்ஃபெல்டினைக் காப்பாற்ற தன்னால் இயன்ற அத்தனையையும் அவர் செய்கிறார். கம்யூனிஸ்ட் அதிகாரிகளின் உதவியோடும் கூட அவருக்கு உதவ முயல்கிறார். ஆனால் பயனில்லை. போருக்குப் பின்னான அரசியல் உணர்வுகளை வைத்துப்பார்த்தால் அது ஒரு தோல்வியடைந்த முயற்சி. ஆனால் ஹோசன்ஃபெல்டின் குடும்பத்தை கண்டுபிடித்து அவர்களுடன் தொடர்பில் இருந்துவிடுகிறார். அந்த குடும்பம் ஸ்பில்மென்னைக் காண வார்சாவிற்கு வந்தது. நானும் ஹோசன்பெல்டின் மகன் ஹெல்மட்டுடன் படத்தயாரிப்பின்போது தொடர்பில்தான் இருந்தேன். அவர் போலந்தில் நடைபெற்ற படத்திரையிடலுக்கும் வந்திருந்தார்.
இப்படத்தில் நாயகனான அட்ரியல் ப்ராடி படத்தின் இயல்புத்தன்மையையும், அக்காலகட்டத்தின் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள எவ்வாறு உதவினீர்கள்?
அதை விளக்குவது மிகக்கடினம். படப்பிடிப்புத் தளத்திற்கு நீங்கள் வந்திருந்தால் உங்களுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும். காட்சியையும் படமாக்கப்பட்ட தருணத்தையும் பொருத்தே இது அமைந்தது.
இப்படத்தை போலான்டில் எடுக்கும்போது, உளவியல் ரீதியாக எப்படி உணர்ந்தீர்கள்? 1962 ல் நீங்கள் எடுத்த ‘க்னைஃப் இன் த வாட்டர்’‘ படத்திற்கு பிறகு அங்கே நீங்கள் எடுக்கும் படம் இது. இப்படத்தின் களம் உங்கள் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அமைந்திருப்பது இப்படத்திற்கு புதுப்புது பரிமாணங்களை கொண்டுவந்தததா? இதற்கு உணர்வுரீதியாக எப்படித் தயாரானீர்கள்?
தயாராக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. புத்தகத்தை படித்த அனுபவமே அதற்கு போதுமானதாக இருந்தது. ஆனால் ஏற்கனவே அறிந்த போலிஷ் மொழி, தெரிந்த இடங்கள், அந்த மொத்த சூழ்நிலை போன்றவை அனைத்தும் மிகப்பெரிய உதவி செய்தன. ஆனால் போலாண்டில் எடுப்பதை விட, ஜெர்மன் நடிகர்களை பெர்லின் மேடைகளில் நடிக்க விட்டு படமெடுப்பது எங்களுக்கு மிக எளிதாக இருந்தது என்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் உடையணிந்து சத்தமாக பேசுவதைப் பார்க்கும்போது, இந்த காட்சிகளை வேறு எங்கும் எடுக்க முடியாது என்பதை நான் உணர்ந்தேன்.
பியானிஸ்ட் படத்தை, நிஜ சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களிலேயே காட்சிப்படுத்தினீர்களா?
துரதிருஷ்டவசமாக, அக்காலத்தை பிரதிபலிக்கும் எதுவும் இப்போது இல்லை. வார்சா நாஜிக்களால் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. ஆனால் விஸ்டுலா ஆற்றின் அருகே ப்ராகா என்ற ஒரு நகர் உள்ளது. முழுதும் அழிக்கப்படாத நகரம். நான் வார்சாவில் குண்டுகள் போடப்படும் போதும் அங்கே வாழ்ந்திருக்கிறேன். அதனால் ப்ராகாவின் வீதிகள் வார்சாவை நினைவுபடுத்துவதை உணர்ந்தேன். வீதிகள், போக்குவரத்து, கட்டடங்கள் எல்லாம். அதனால்தான் எங்கள் செட்களை நாங்கள் ப்ராகாவில் போட்டோம். அத்தோடு சேர்த்து தொழில்நுட்ப வளர்ச்சியும் காலத்தை மீள்உருவாக்கம் செய்ய உதவியது. பல படங்களில் கம்யூட்டரில் செய்த காட்சிகள் தெளிவாய் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால் எங்கள் படத்தில் அப்படி இல்லை என்று நம்புகிறேன்.
ஸ்பில்மென்னுடனான உங்கள் உறவைப் பற்றி சொல்லுங்களேன். படத்தை பற்றி அவரிடம் பேசினீர்களா, அவர் கூறிய யோசனைகள் என்னென்ன?
அவர் குறிப்பாக எந்த யோசனையையும் வழங்கவில்லை. இப்புத்தகம் படமாக்கப்படுவதிலும், அதை நான் இயக்குவதிலும், அவர் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்கிறார் என்று தெரிவித்தார். நான் அவரை மூன்று முறைதான் சந்தித்தேன். முதல்முறை 1970 களில், அவரது சுற்றுப்பயணத்தின்போது லாஸ் ஏஞ்சல்ஸில் சந்தித்தேன். அடுத்து 90 களில் வார்சாவில் பத்திரிக்கையாளர் சங்கத்தில். நான் என் நண்பர்களுடன் உணவருந்திக்கொண்டிருந்தேன். ஸ்பில்மென் எங்களுடன் சேர்ந்துகொண்டார். அப்போது, அவரது வாழ்க்கையை படமாக்குவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்படத்தை உருவாக்க நான் தீர்மானித்ததவுடன், நானும் பியானிஸ்ட் படத்தின் இணை தயாரிப்பாளர் கெனே குட்டோவ்ஸ்கியும் அவரை சந்தித்தோம். தேநீர் அருந்திவிட்டு படத்தை பற்றி பேசினோம். தனது 80 களிலும் மிகவும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் அவர் இருந்தார். அவரது இறப்பு எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பியானிஸ்ட் படத்தில் பிரபலமான போலாந்து நடிகர்கள் யாரேனும் இருக்கின்றனரா?
சிறிய கதாப்பாத்திரங்களை செய்ய முன்வந்த என் நன்றிக்குரிய சில பிரபலமான போலந்து நடிகர்கள் இருக்கின்றனர்.
இப்படத்திற்காக உங்கள் சிறுவயது நினைவுகளைக் கடந்து வந்திருப்பீர்கள். நீங்கள் மீண்டும் கடக்க முடியாத ஏதேனும் சில நினைவுகள் இருக்கின்றதா?
பியானிஸ்ட் படத்திற்கான லொக்கேஷன்களைப் பார்க்க, படத்தின் ப்ரொடக்சன் டிசைனர் ஆலன் ஸ்டார்ஸ்கியுடன் க்ராக்கோ சென்றோம். பழைய கெட்டோ நகரத்தில் நாங்கள் அலைந்துகொண்டிருந்தபோது, இங்கே நான் படமெடுக்க முடியாது, படமெடுக்கக் கூடாது என்றெனக்குத் தோன்றியது. நான் க்ராக்கோவிற்கு முன்பே சென்றிருந்தாலும் கூட, மிகவும் தனிப்பட்ட காரணங்களுக்காக, எனக்கு மிகவும் அர்த்தமுள்ள சில இடங்களை நான் அபூர்வமாய்த்தான் சென்று பார்ப்பேன். என் நினைவுகளில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த இடங்களில் நான் படமெடுத்தால், அவை எனக்கு வெறும் பட செட்களாக மாறிவிடும். அப்படி நடக்க நான் விரும்பவில்லை.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |