திரைமொழி - 2
முதல் பாகம் – Visualization – The Process
film directing
shot by shot
visualizing from concept to screen
Steven D. Katz தமிழில்: ராஜேஷ் |
-----------------------------------------------------------------------------------------------------------
|
B.Eபேசாமொழியின் முதல் இதழில் Shot by Shot என்ற புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் பார்த்தோம்.அந்தக் கட்டுரையை இங்கே க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.இனி, அந்தப் புத்தகத்தின் அத்தியாயங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கத் துவங்கலாம்.
முதல் பாகம் – Visualization – The Process
அத்தியாயம் 1 – Visualization
ஒரு சிறுவன், தனது பொம்மை சோல்ஜர்களை தரையில் பரப்பி வைத்து, தரையோடு தரையாகப் படுத்துக்கொண்டு அந்த பொம்மைகளை உற்றுப் பார்த்து விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா என்ற கேள்வியை நம்முன் வைக்கிறார் ஸ்டீவன் D காட்ஸ். இந்தக் கேள்வியோடுதான் இந்தப் புத்தகமும், இந்த அத்தியாயமும் ஆரம்பிக்கிறது. அந்தச் சிறுவன், பொம்மைகளை பொம்மைகளாகப் பார்ப்பதில்லையல்லவா?அவைகள் நிஜத்தில் அவனுக்கு முன்னர் நடமாடுவதாகக் கற்பனை செய்துகொண்டுதான் அங்கே அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.அதாவது, அந்த பொம்மைகளின் உலகில் அவனும் இருக்கிறான். இதுதான் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் அடிப்படை.விஷுவலாக காட்சிகளைக் காண்பிக்கும் உத்தியின் அடிப்படை.
Qu'est-ce que le cinéma?என்ற ஃப்ரெஞ்ச் புத்தகத்தைப் பற்றியும், அதை எழுதிய André Bazin(18 April 1918 – 11 November 1958) பற்றியும் சொல்கிறார் காட்ஸ். இந்த ஃப்ரெஞ்ச் வாக்கியத்துக்கு, ‘சினிமா என்றால் என்ன?’ என்பது பொருள். இந்தப் புத்தகத்தில், presence – நிகழ்காலம் – என்ற வார்த்தையை André Bazin உபயோகித்தே, ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் மனிதனின் இருப்பை விளக்குகிறார்.அதாவது, திரையில் என்ன நடக்கிறதோ, அங்கே அதே காலத்தில் அதே நேரத்தில் படம் பார்க்கும் நாமும் இருப்பது.பெரும்பாலும் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தில் இதுதானே நடக்கிறது?எவ்வாறு சில நூற்றாண்டுகள் முன்னர் (Renaissance) ஐரோப்பிய ஓவியர்கள் தத்ரூபமாக ஓவியங்களை வரைந்தார்களோ, எப்படி அந்த ஓவியர்கள் முப்பரிமாண அளவுகளை இரு பரிமாண சட்டகத்துக்குள் வெற்றிகரமாகக் கொண்டுவந்தனரோ, அப்படியேதான் இந்தத் திரைப்படங்களும், படம் பார்க்கும் மக்களை அவற்றின் காலத்துக்குள் கொண்டுசென்றுவிடுகின்றன. புகைப்படங்கள் ஓவியங்களின் நீட்சி.அவற்றில் இன்னமும் தத்ரூபம் அதிகரிக்கிறது.
இயல்பாகவும் இருக்கிறது.அதைவிட ஒரு படி மேலே சென்றால் அங்கே திரைப்படங்கள் விளங்குகின்றன. ஒரு ஓவியத்தையோ அல்லது புகைப்படத்தையோ பார்க்கும்போது, அவற்றின் தளம் – அங்கே உபயோகிக்கப்பட்டிருக்கும் தாள் அல்லது புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும் வழவழா காகிதம் ஆகியவை நமக்கு எளிதில் தெரிகின்றன அல்லவா? ஆனால் திரைப்படங்களைப் பார்க்கையில், அவை திரையிடப்படும் தளமான திரையைத்தான் நாம் நோக்குகிறோம் என்றாலும், திரையைக் கவனிப்பதற்கு மாறாக, அந்தத் திரையின்மேல் இடம்பெறும் காட்சிகளில் லயித்து, அவற்றின் உலகில் நுழைந்துவிடுகிறோம்.
இப்படிப்பட்ட depth - ஆழம் என்ற விஷயம்தான் திரைப்படங்களை இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் பிற கலைவடிவங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.அக்காலகட்டத்திலேயே பல ஜாம்பவான் இயக்குநர்கள் திரைப்படத்துறையில் நுழைந்து, திரை மேல் இல்லாது, திரைப்படத்தில் மட்டுமே மக்களின் கவனம் இருக்கும்படியான படங்களை எடுத்தனர்.இந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களின் பல்வேறு தொழில்நுட்பங்கள் – குறிப்பாக, திரைப்படங்களின் அறுபடாத தொடர்ச்சி (continuity) – பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலைவடிவங்களில் இருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் காட்ஸ்.
Visualization
’விஷுவலைஸ்’ என்ற பதத்துக்கு, ‘நினைத்துப் பார்ப்பது’ என்று மிக எளிதாக பொருள் கொள்ளலாம்.’மனக்கண் முன் தோற்றுவி’ என்று தமிழ் அகராதி சொல்கிறது.ஆனால், மனக்கண் முன் தோற்றுவிப்பது என்றாலே நினைத்துப் பார்ப்பது தானே?தற்போதைய உலகில் விஷுவலைஸ் என்பது ஒரு சக்திவாய்ந்த வார்த்தை.ஒலிம்பிக் வீரர்கள் தினமும் தவறாமல் செய்வது இது.
எப்போதோ வரப்போகும் ஒலிம்பிக்கில், தங்க மெடல் வாங்குவதுபோல தினமும் பலமுறை அவர்கள் நினைத்துப் பார்ப்பார்கள்.இதனால் மனம் உற்சாகம் அடைந்து, அந்த இலக்கை நோக்கி அவர்களை எடுத்துச்செல்லும் விஷயங்களை ஒவ்வொன்றாக அவர்களது ஆழ்மனதில் தோற்றுவிக்கும்.இது, அவர்களது வெற்றிக்குப் பயன்படும்.இது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மை.இப்படிப்பட்ட பாஸிடிவ் விஷயங்களில்தான் இந்த வார்த்தை தற்போது மிகவும் பயன்படுகிறது.ஆனால், திரைப்படங்களிலும் ’விஷுவல்’, ‘விஷுவலைஸ்’ ஆகிய வார்த்தைகள் அதிகம் அடிபடுகின்றன.ஒலிம்பிக் மெடல்கள், வீடு வாங்குவது, கார் வாங்குவது போன்ற குறிப்பிட்ட விஷயங்களை வேண்டுமென்றால் எளிதில் மனதில் உருவாக்கிக் கொள்ளலாம்.ஆனால் ஒரு திரைப்படத்தை உருவாக்குமுன்னர் எப்படி இந்த விஷுவலைஸேஷன் என்பது பயன்படுகிறது?
ஒரு கலைஞனின் பார்வையில், நினைத்துப் பார்ப்பது என்ற இந்த விஷுவலைஸேஷன் ஒரு ஒலிம்பிக் வீரனுக்கு எப்படி பயன்படுகிறதோ அப்படி பயன்படுவதில்லை.ஒலிம்பிக் வீரனுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் உள்ளது.எனவே அவனால் அதை ஆயிரம் முறைகள் நினைத்துப் பார்த்து, அதன்மூலம் அவனது நோக்கத்தை அடையமுடிகிறது. ஆனால் ஒரு திரைப்பட இயக்குநருக்கு இந்த விஷுவலைஸேஷன் என்பது, நோக்கத்தைத் தேடியலையும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறதே தவிர, அவரால் ஒரு நோக்கத்தை உருவாக்கிக்கொண்டு, அதனைப் பலமுறைகள் எண்ணிப் பார்த்து அதை அடைய முயல்வது சாத்தியமானதாக இல்லை. வேண்டுமென்றால் தனது திரைப்படம் ஆஸ்கர் வாங்குவது போல அவரால் லட்சம் முறைகள் எண்ண முடியலாம்.ஆனால், அந்தத் திரைப்படம் எப்படி இருக்கப்போகிறது, அதன் காட்சிகள் ஆகியவையெல்லாம் முதலிலேயே கச்சிதமாக இயக்குநரின் மனதில் உருவாகிவிடுவதில்லை என்கிறார் காட்ஸ்.இது ஒரு ஆச்சரியமான விஷயமாக இதைப் படிப்பவர்களுக்குத் தோன்றலாம்.ஏனெனில், திரைப்படங்கள் என்பதே க்ரியேட்டிவ் மீடியா என்றல்லவா அழைக்கப்படுகிறது? பொதுவாக, திரைப்பட ரசிகர்களுக்கு, இயக்குநரின் மனதில் திரைப்படம் முதலிலேயே கச்சிதமாக உருவாகி, அதன்பின்னர் அதனை அவர் படச்சுருளில் பதிவு செய்கிறார் என்ற எண்ணம்தான் உருவாகியிருக்கும். ஆனால், இந்த நினைத்துப் பார்க்கும் விஷுவலைஸேஷன் என்பது ஒரு கலைஞனுக்கு அந்த அளவு சுவாரஸ்யம் தரும் விஷயமாகக்கூட இருக்காது என்கிறார் காட்ஸ்.
காரணம்? காட்ஸின் கருத்தின்படி, விஷுவலைஸ் செய்வது என்பது மூளையோடு மட்டும் தொடர்பு கொண்ட விஷயம் அல்ல. சிந்தனைகளை, செயல்களுடன் சேர்ந்து கலந்து, நாம் நினைக்கும் வடிவத்தை உருவாக்குதலே விஷுவலைஸேஷன் என்பது அவரது விளக்கம். நமது எண்ணங்கள், இப்படியான செயல்களோடு கலந்து ஒரு பொருள் நமது கண்முன்னர் உருவாக ஆரம்பிக்கும்போதுதான் அதைப்பற்றிய மேலும் பல சிந்தனைகள் நம்முள் உருவாகி, நமது க்ரியேட்டிவிடி முழுவீச்சில் வெளிப்படுகிறது என்று அறுதியிட்டுச் சொல்கிறார் காட்ஸ்.
எடுத்துக்காட்டாக, இந்தப் புத்தகத்தைப் பற்றியே சொல்கிறார்.இந்தப் புத்தகத்தை எழுதவேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவருள் இருந்த சமயத்தில், புத்தகத்தின் அத்தனை அத்தியாயங்களையும் சுலபமாக எழுதிவிடலாம் என்றே அவர் நினைத்தாராம்.ஆனால், எழுத ஆரம்பிக்கும்போதுதான் அது கடினம் என்று அவருக்குப் புரிந்திருக்கிறது.இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை எழுதி, மூன்றுமுறை அடித்துத் திருத்தி ஒரு வடிவத்துக்குக் கொண்டுவந்ததுதான் அவரது விஷுவலைஸேஷன் என்று சொல்கிறார்.மாறாக, அத்தியாயத்தை எழுத நினைத்தது விஷுவலைஸேஷன் அல்ல என்கிறார். இந்த அத்தியாயம் படிப்படியாக அவரது கண்முன்னர் உருவாக ஆரம்பித்தபோதுதான் பல க்ரியேட்டிவ் சிந்தனைகள் அவருக்குள் தோன்றி, அத்தியாயத்தை சிறப்பாக இறுதியில் முடிக்க முடிந்திருக்கிறது அவரால்.
அவரது இந்த அனுபவத்தை, இரண்டு கூறுகளாகப் பிரிக்கிறார் காட்ஸ்.
1. நாம் உருவாக்க நினைக்கும் விஷயத்தை, நமது கண்முன்னர் உருவாக்க முனைவது
2. அப்படி செய்யும்போது, உருவாகத் துவங்கியிருக்கும் பொருளைப் பார்க்கையில் நமது மனதில் தோன்றும் க்ரியேட்டிவ் எண்ணங்கள் – அவற்றின்மூலம் அந்தப் பொருளின் உருவாக்கம் சிறப்படைதல்.
இந்த இரண்டும் சேர்ந்ததே விஷுவலைஸேஷன் என்ற அம்சம்.இது, காட்ஸின் விளக்கம்.
ஒரு திரைப்படத்தை உருவாக்க முனையும் இயக்குநரின் முன்னர் இருக்கும் பிரச்னைகளாகவும் இவை இருக்கின்றன.திரைப்பட தயாரிப்பில் இணைந்துள்ள பிரச்னைகளால், இவைகளை ஒரே சமயத்தில் செயல்படுத்த இயலாமல் போய்விடுவதுண்டு. பொதுவாக ஒரு திரைப்படத்தில், அதன் தினசரி பரபரப்புகள், பட்ஜெட், வெளியிடும் தேதி போன்ற பிரச்னைகளுக்கு நடுவே ஒரு இயக்குநரால் தன்னிச்சையாக விஷுவலைஸ் செய்வது என்பது கடினம்தான். ஆகவே, நினைத்துப் பார்த்தல் என்பது அவரைப்பொறுத்தவரை திரைக்கதை என்ற விஷயத்தில் மட்டுமே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால் இந்தத் திரைக்கதை ஒரு விஷுவல் மீடியம் அல்ல. அது, அச்சடிக்கப்பட்ட சில பக்கங்களின் தொகுப்பு.இந்தக் காட்சிகளை எண்ணிப் பார்த்தாலும்கூட, அவற்றை திரைப்படத்தில் எப்படிக் கொண்டுவருவது என்பது குழப்பம்தான்.அதாவது, ஷாட்கள் வைப்பது இத்யாதி.
ஒவ்வொரு ஷாட்டாக வைத்து, கதையை வரிசையான, தடைபடாத, சுவாரஸ்யமான திரைப்படமாகத் தருவது ஒன்று.அப்படி எல்லா சமயங்களிலும் உருவாக்கும் திரைப்படத்தை ஆராய்ந்து, அதன்மூலம் பல க்ரியேட்டிவ் எண்ணங்களை செயல்படுத்தி, அந்தப் படத்தை மேலும் மேலும் மெருகேற்றுவது இன்னொன்று.ஆக, மேலே நாம் பார்த்த இரண்டு விஷயங்களை இப்படியாகத்தான் திரைப்படங்களில் செயல்படுத்தவேண்டும் என்கிறார் காட்ஸ்.அதுதான் நினைத்துப் பார்ப்பது என்ற விஷுவலைஸேஷன்.
திரைக்கதையில் இருக்கும் கதையை திரைப்படமாக எடுக்க ஒரு இயக்குநர் முடிவுசெய்து, படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்ததும், அவர் கண் முன் இருப்பது ஒரு வெறுமையான ஃப்ரேம். காமெராவின் ஃப்ரேம்.இந்த ஃப்ரேம் தான் அவருடன் கடைசிவரை இருக்கப்போகும் ஒரே விஷயம்.ஒவ்வொரு ஷாட்டாக எடுக்கையில் இந்த ஃப்ரேமைத்தான் அவர் நிரப்பவேண்டும்.இதெல்லாம் திரைக்கதையில் இருக்காது அல்லவா?ஆகவே, எடுத்த எடுப்பில் இது ஒரு சவால். ஒவ்வொரு ஷாட்டையும் எடுக்க ஆரம்பித்து, படம் உருவாகும்போது பல சிந்தனைகள் அவரது மூளையில் உதிக்கத் துவங்கும்.அதாவது, எந்தச் செயலையும் செய்யத் துவங்கி அதனுள் செல்கையில்தான் பல க்ரியேட்டிவ் யோசனைகள் உதிக்க ஆரம்பிக்கும்.இந்த யோசனைகளை செயல்படுத்த ஆரம்பிக்கும்போது நாம் நினைத்த விஷயம் மெருகேறத் துவங்கும்.
இப்படியான விஷுவல் சாத்தியக்கூறுகளை அலசும் திறன் வேண்டும்.அதன்பின் இவற்றில் பலவிதமான மாறுபாடுகளையும் யோசித்துப் பார்த்து, அவற்றில் சிறந்ததை செயல்படுத்தும் திறனும் வேண்டும்.விஷுவலைஸ் செய்வது என்ற விஷயத்தில் தவறுகளே இல்லை; மாறாக, பலவிதமான வேறுவேறு சாத்தியக்கூறுகள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்கிறார் காட்ஸ்.அதேபோல், ஒரு ஸீனை விளக்க எண்ணற்ற ஷாட்களை உருவாக்குவது எப்படி முக்கியமோ, அதேபோல் எங்கு நிறுத்தவேண்டும் என்பதும் அதே அளவு முக்கியம்.
இப்படி ஒரு திரைப்படத்தை முதலிலிருந்து விஷுவலைஸ் செய்வதற்குப் பல விஷயங்கள் நமக்கு உதவுகின்றன.ஸ்டோரி போர்டுகள் அவற்றில் ஒன்று.திரைக்கதையை எளிய ஷாட்களாகப் பிரித்து வரைந்துவைத்துக்கொள்வது.இதனால் ஷாட் வைக்கும் வேலை எளிதாகிறது.ஆனால், திரைப்படத்தை எடுக்கத் துவங்கும்போது இந்த ஸ்டோரிபோர்டுகள் மாறக்கூடும்.அப்போதும், விஷுவலைஸ் செய்வது என்ற வேலை, புதிதுபுதிதாக யோசனைகளை உருவாக்கும் வேலையாகத்தான் இருக்கவேண்டும்.
திரைப்படம் துவங்குமுன்னரே கதையை தெளிவாக சொல்லக்கூடிய அம்சங்களை யோசிக்க ஆரம்பிக்கவேண்டும்.ஒரு குறிப்பிட்ட ஷாட்டாக அது இருக்கலாம்; கதையை திசைதிருப்பக்கூடிய ஒரு ஸீனாக அது இருக்கலாம். பேப்பரில் வரைந்துவைத்துக்கொள்ளும் ஸ்டோரிபோர்டுகளின் மூலம் இப்படி க்ரியேட்டிவ் யோசனைகள் உருவானால் மட்டுமே அது பிரயோஜனப்படும் என்று உறுதியாகக் கூறுகிறார் காட்ஸ்.
சுருக்கமாக, ஒரு திரைப்படத்தை எடுக்க ஆரம்பிக்கும் நொடியிலிருந்து ஒவ்வொரு ஷாட் – ஒவ்வொரு ஸீனையும் மேலும் மேலும் சிறக்கச்செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்று படம் முடியும்வரை யோசித்துக்கொண்டே இருக்கவேண்டும். புதிதுபுதிதான சிந்தனைகள் உதிக்கவேண்டும்.அவற்றின்மூலம் ஷாட்களை மெருகேற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.இந்த வேலையை ஒளிப்பதிவாளரோ அல்லது எடிட்டரோ பார்த்துக்கொள்வார் என்று இயக்குநர் பாட்டுக்கு இயந்திரத்தனமாக ஷாட்களை எடுத்துக்கொண்டே இருக்கக்கூடாது.ஒளிப்பதிவாளரும் எடிட்டரும், இயக்குநர் க்ரியேட்டிவாக செயல்பட்டால்மட்டுமே தங்களது சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்துவார்கள்.
இதைச்சொல்லிவிட்டு, விஷுவலைஸேஷன் என்ற நினைத்துப் பார்த்தல் குறித்த இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தின் ஆரம்ப அத்தியாயத்தை முடிக்கிறார் காட்ஸ்.
பின்குறிப்புகள்
1. ஷாட் - திரைப்படங்களில், ஒரு குறிப்பிட்ட காட்சியை கேமராவை நிறுத்தாமல் படமாக்குவதே, ஷாட் எனப்படுகிறது. கேமராவை நிறுத்திவிட்டு, அதன்பிறகு மறுபடி தொடங்குவது வேறொரு ஷாட்.
2. ஸீன் - இப்படிப்பட்ட பல ஷாட்களின் கலவையே ஒரு ஸீன். குறிப்பாக, இடம் மற்றும் காலம் ஆகியவற்றை மாற்றாமல் படமாக்குவது. படமாக்கும் காலத்தையோ இடத்தையோ மாற்றினால் அது வேறொரு ஸீன்.
தொடரலாம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |