திரைமொழி - அறிமுகம்
film directing
shot by shot
visualizing from concept to screen
Steven D. Katz தமிழில்: ராஜேஷ் |
Steven D. Katz அவர்களின் மிக முக்கியமான புத்தகமாகவும், உலகில் கேமரா சார்ந்து வெளிவந்திருக்கும் மிக சிறந்த புத்தகமாகவும் விளங்கும் Shot by Shot நூலை சித்திரம் பேசுதடி வாசகர்களுக்காக, தமிழில் ஒளிப்பதிவு சார்ந்து நிறைய நல்ல நூல்கள் வெளிவர வேண்டும் என்கிற நோக்கில் மொழிபெயர்த்து தருகிறோம். இதில் எங்களுக்கு உறுதுணையாக, shot by shot நூலை மொழியாக்கம் செய்துக் கொடுக்கும் நண்பர் ராஜேஷ் க்கு சித்திரம் பேசுதடி இணைய இதழ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------
|
B.E படித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன், சினிமாவால் ஈர்க்கப்பட்டு வீடியோ கடை ஒன்றைத் திறக்கிறான். அதன்பின் சினிமா ஆசையால் மண்டையே வெடித்து, ’கலெக்டர்காரி அப்பாயி’ என்ற திரைப்படத்தில் கடைக்கோடி நான்காம் அஸிஸ்டெண்ட்டாக சேருகிறான். ஆனால் அங்கே வேலை செய்யாமல், அதன் செட்களில் அலைந்து திரிந்து, அப்போது அந்த செட் அமைக்கப்பட்டிருந்த ஸ்டுடியோவின் முதலாளியின் மகனை எப்படியோ கஷ்டப்பட்டு சந்தித்து விடுகிறான். முதலாளியின் மகனிடம் ஒரே ஒரு காட்சியை மட்டும் விவரிக்கிறான். அந்தக் காட்சியால் உடனடியாகக் கவரப்பட்ட அந்த மனிதர், இவனது படத்தில் நடிக்கச் சம்மதிக்கிறார். அதைவைத்தே புத்திசாலித்தனமாக செயல்பட்டு பணத்தைத் திரட்டி அந்தப் படத்தை எடுத்து வெளியிடுகிறான் இளைஞன். அந்தத் தெலுங்குப் படம் – அந்த வருடத்தின் பிரம்மாண்ட ஹிட்களில் ஒன்று. அதுவே தமிழிலும் வர, தமிழிலும் பெரிய ஹிட். அதன்பின் அந்த இளைஞன், அவன் படித்த B.E பக்கமே செல்லவில்லை. இந்தியாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறிய அந்த இளைஞன் – ராம் கோபால் வர்மா. முதலாளியின் மகன் – நாகார்ஜுன். ராம் கோபால் வர்மா எடுத்து வெளியிட்ட முதல் படம் – உதயம்.
ராம் கோபால் வர்மாவைப்போல் நேரடியாக சினிமாவில் இறங்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் எல்லோரிடமும் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதைப்போன்ற வெற்றிகள் உலகிலேயே மிகச்சிலருக்கே கிடைத்திருக்கின்றன. கூடவே, இந்தியத் திரையுலகில் தற்போதைய காலத்தில் தெளிவாக, விஷயம் புரிந்து திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கே கதவுகள் திறக்கின்றன.
திரைப்படங்கள் என்பனவற்றை உலக அளவில் இந்தியாவிலிருந்து எடுத்துச்சென்ற மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம். ‘உலக அளவில்’ என்றால் மசாலாக்களாக அல்ல. கலாபூர்வமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் திரைப்படங்களையே சொல்கிறேன். உதாரணமாக ரித்விக் கடக். பின் சத்யஜித் ரே. இவர்களுக்குப் பின்னர் சுதீர் மிஷ்ரா, ஜான் ஆப்ரஹாம் போன்ற இயக்குநர்கள். இவர்களை திரைத்துறையை நோக்கிக் கவர்ந்தது எது? எப்படி இவர்களால், மனதில் நினைத்திருந்த அழுத்தமான கதையை காட்சிப்படுத்த முடிந்தது? அந்தத் திரைப்படங்கள் எப்படி இன்றும் அவைகளின் இருப்பை உரக்கச் சொல்லிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றன?
பொதுவில் இந்தியாவைப் பொறுத்தவரை, வணிகப்படங்களே சிறந்தவை என்றும், வணிக இயக்குநர்களே பிதாமகர்கள் என்றும் ஒரு தவறான எண்ணம் நிலவிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். இதற்கு என்ன காரணம்? இந்த எண்ணப்போக்கை எப்படி மாற்றுவது என்றெல்லாம் நாம் பார்க்கப்போவதில்லை என்றாலும், உலகின் பல நாடுகளில், அந்தந்த நாடுகளின் மசாலாப்படங்களைத் தாண்டி, உன்னதமான படைப்புகளே சிறந்து விளங்குகின்றன என்பதை மறந்துவிட இயலாது. உலகின் மசாலாப் பட்டறையான ஹாலிவுட்டில் கூட அவ்வப்போது வரும் நல்ல படங்கள் வரவேற்கப்பட்டு அவற்றின் இயக்குநர்கள் மரியாதை செய்யப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த நிலை இன்னும் வரவில்லை. ரித்விக் கடக்கின் வாழ்நாளில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கப்படவே இல்லை. அவர் இறந்த பின்னர், தற்போது அவரது படங்களைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறோம்.
திரைப்படம் என்பது எப்படிச் செயல்படுகிறது என்பதும் ஏதோ கம்பசூத்திரம் என்ற நிலை மாறி, திரைத்துறையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பலரும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.
மேலைநாடுகளில் திரைத்துறை என்பதன் பல்வேறு அம்சங்களைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் படு பிரபலம். திரைப்படக்கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது, அதன்பின் திரைப்படம் எடுத்துப் பழகுவது, பின்னர் திரைப்படங்களில் நுழைவது என்பது ஒருபுறமிருக்க, இவற்றைப்போன்ற புத்தகங்களைப் படித்தாலே ஓரளவாவது திரைப்படங்களின் நுணுக்கம் புரிபடும் என்று சொல்லமுடியும். உதாரணத்துக்கு, ‘Screenplay: The Foundations of Screenwriting’ என்ற ஸிட் ஃபீல்டின் புத்தகம் அத்தனை எளிமையானது. அதனை ஒருமுறை படித்தாலே திரைக்கதையின் நுணுக்கங்களை மிக எளிதாக உணர்ந்துகொண்டுவிடமுடியும். பலமுறை அந்தப் புத்தகத்தைப் படித்தே திரைக்கதையை எழுதிமுடித்தவர்கள் இருக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக உலக திரை ஆர்வலர்களின் அலமாரியில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் புத்தகம் அது.
இதைப்போன்றதொரு இன்றியமையாத புத்தகமே – ‘film directing: shot by shot: visuvalizing from concept to screen’ என்ற புத்தகம்.
சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம். ‘பேசாதே – காட்டு’ என்றே உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் சொல்வார்கள். நமது கையில் இருக்கும் ஒரு கதையை எப்படி திரையில் கொண்டுவருவது? நாம் நினைத்த அதே வகையில் திரையில் காட்ட முடியுமா? இடையில் பல்வேறு சிக்கல்கள் குறுக்கிடும். அவற்றில் தலையாயது பட்ஜெட். ஆக, ஒரு இயக்குநரின் மனதில் தோன்றிய கதையை அப்படியே கச்சிதமாக திரையில் காட்டவேண்டும் என்றால் அதற்கே ஒரு துல்லியமான திட்டமிடல் தேவை. எப்படி ப்ளூப்ரிண்ட் என்ற வரைபடத்தில் இருக்கும் கட்டுமானத்தை நிஜவாழ்வில் கட்டிடமாக ஒரு எஞ்சினியர் கொண்டுவருவதற்கு அனுபவமும் அவரது தொழில் நேர்த்தியும் தேவைப்படுகிறதோ அதேபோல் திரைப்படத்துறைக்கும் தெளிவான சில வறையறைகள் இருக்கின்றன. அவற்றைப்பற்றியே இந்த ஷாட் பை ஷாட் என்ற புத்தகம் அலசுகிறது. திரைக்கதையை விஷுவலைஸ் செய்ய என்ன செய்யவேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இப்புத்தகத்தால் விளக்கப்படுகின்றன. மிக விரிவாக.
முக்கியமாக, டயலாக் ஸீக்வென்ஸ் எனப்படும் வசனக் காட்சிகள், பாயிண்ட் ஆஃப் வ்யூ, காமெராவை நகரவைத்துப் படமாக்கப்படும் பான், க்ரேன் ஷாட் போன்றவையும் இப்புத்தகத்தில் விரிவாக இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், ஸ்டோரிபோர்ட்கள், ப்ரொடக்ஷன் டிஸைன் போன்றவையும் விரிவாகவே விளக்கப்பட்டிருக்கின்றன.
திரைக்கதையை முழுதுமாக தயார் செய்தபின்னர், அதனை எடுத்துக்கொண்டு செட் என்ற விஷயத்துக்குள் இயக்குநர் நுழைவதற்கு முன்னர் அவர் எப்படி தயாராக வேண்டும், அப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கத் துவங்கியபின்னர் கேமராவை எப்படிக் கையாளவேண்டும் என்பனவே இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் விஷயங்கள்.
இத்தகைய விஷயங்கள், ஸ்டோரிபோர்ட்கள் மூலமாக இந்தப் புத்தகம் முழுவதும் விளக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டோரிபோர்ட்கள் என்பது ஹாலிவுட்டில் பிரசித்தம். கதையின் முக்கியமான காட்சிகளை காமிக்ஸ் போன்ற ஒரு ஸ்டைலில் வரைந்துகொண்டு, அப்படியே காமெரா ஆங்கிள்கள் செட் செய்து திரைப்படங்களை எடுக்கும் முறை. திரைக்கதையில் வார்த்தைகளால் சொல்லப்பட்டிப்பதை இந்த ஸ்டோரிபோர்ட்கள் மூலமாக விஷுவலாக சொல்லமுடியும். அது இன்னமும் ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தும்.
திரைப்படத்துறையைப் பற்றிப் புத்தகங்கள் மிக அரிதாகவே தற்காலத்திலும் கிடைக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், இத்தகைய ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்த்தாவது விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே நோக்கம். இந்திய மொழிகளில் எதிலும் வந்திருக்காத இந்தப் புத்தகம், முதல்முறையாக தமிழில் தற்போது தொடராக வெளியிடப்படுகிறது. முடிந்தவரை எளிமையாக – அதாவது ஷாட் பை ஷாட்டாக – திரைக்கதையை விஷுவலாகக் காண்பிக்கும் விதங்களை மூலப் புத்தகத்தில் இருப்பது போன்ற அதேவகையில் விளக்க இருக்கிறோம்.
தொடரலாம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |