இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை
3. ‘தோட்டக்காரி’
1960ஆம் ஆண்டளவில் ஏ. அருணனிடமிருந்து பிரிந்து சென்ற வீ. தங்கவேலு, கலையார்வம் மிக்க இளைஞரான பி.எஸ். கிருஷ்ணகுமாருடன் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ்த் திரைப்படமொன்றை உருவாக்கத் திட்டமிட்டார்கள். பி.எஸ். கிருஷ்ணகுமார் பிரபல சிங்கள சினிமா இயக்குநர் சிறிசேன விமல வீரவிடம் பயிற்சி பெற்றார்.
அந்தத் தமிழ்ப் படத்துக்கு நடிகர் – நடிகையர் தேவை என்று விளம்பரமும் வெளிவந்துவிட்டது. கிரிபத்கொட நவஜீவன ஸ்டூடியோவில் இப்படத்துக்கான நடிகர் தேர்வு இடம்பெற்றது. இந்த நேர்முகப் பரீட்சைக்கு 20க்கு மேற்பட்ட கலைஞர்கள் வந்திருந்தார்கள்.
திரைப்படத்துக்கு ஏற்ற முகவெட்டும், நடிப்பாற்றலும், தமிழ்மொழித் தேர்ச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற கலைஞர்களை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. இதே நவஜீவன ஸ்ரூடியோவில் ‘றொடி கெல்ல’ சிங்களப் படத்திற்கான நடிகையர் தெரிவும் நடைபெற்றது.
அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகை சந்தியா குமாரி வந்திருந்தார். சந்தியா குமாரியுடன் ‘சேபாலிகா குரூஸ்’ என்ற பெண்ணும் வந்திருந்தார். அந்தப் பெண்ணின் அழகிலும், தோற்றத்திலும் விருப்பம் கொண்ட கிருஷ்ணகுமார், ‘அவரையே தனது படத்தின் கதாநாயகியாகப் போடலாமா’ என்று எண்ணினார்.
கிருஷ்ணகுமார் அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்த்தார். அவருக்கும் சினிமாவில் ஆர்வம் இருந்தது. ‘அந்தப் பெண்ணின் உருவம் திரைப்படத்திற்கு பொருத்தமானதா’ என்று பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. அவர் தேறிவிட்டார். எல்லோரது அபிப்ராயங்கின்படியும் அந்தப் பெண்ணே கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகைகளின் சொந்தப் பெயரை மாற்றுவது அப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது. ‘சேபாலிகா குரூஸ்’ என்ற அவரது பெயர் ‘ஜெயஸ்ரீ’ என்று மாற்றப்பட்டது.
படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்தினால் விமலவீரவின் வற்புறுத்தலின்படி இயக்குநர் பி.எஸ். கிருஷ்ணகுமாரே கதாநாயகனாக நடிக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. கிருஷ்ணகுமார் கதாநாயகனாகவும், ஜெயஸ்ரீ கதாநாயகியாகவும் நடிக்க படப்பிடிப்பு ஆரம்பமாகியது. அந்தத் திரைப்படத்தின் பெயர்தான் ‘தோட்டக்காரி’.
1960ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஒருநாள், கம்பளையில் உள்ள ‘ரெவன்ஸ்கிறே’ எஸ்டேட்டில் ‘தோட்டக்காரி’யின் முதலாவது படப்பிடிப்பு ஆரம்பமாகியது. தொழிலாளர் தலைவர் அமரர் கே.ராஜலிங்கம் கமராவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். தயாரிப்பாளர் வீ. தங்கவேலுவும் இப்படத்தில் நடித்தார். ‘கொழும்பு முன்னேற்ற நாடக மன்ற’க் கலைஞர்களான வீ.மோகன்ராஜ், ஆர். வரதராஜன், கே.ஆர்.ஆறுமுகம், ஜாபீர்குமார், தங்கையா, நல்லையா, பிரகாஷ், முத்துவேல், வீணைகுமாரி, சாந்தி, வசந்தி போன்றோரும் நடித்தனர்.
வெளிப்புறங்களிலும் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இவ்வேளையில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பணக் கஷ்டத்தினால் மிகவும் திண்டாடிப்போனார்கள். இவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்கினார்கள் ஒரு கலைத் தம்பதியினர். இவர்களின் பண உதவியுடன் ‘தோட்டக்காரி’ தொடர்ந்து வளர்ந்தாள். தோட்டக்காரியை வளர்த்துவிட்ட அந்தக் கலைத் தம்பதியினர்தான் திரு.எஸ்.ஆர். முத்துவேலுவும், திருமதி. ரஞ்சனி முத்துவேலுவும் ஆவார்கள்.
பாடல்களை பி.எஸ்.கே. குமார், கணேசாள் (அங்கவை) ஆகியோர் இயற்றினர். கே.ஏ.சவாஹிர் இசை அமைத்த பாடல்களை ஜி.எஸ்.பி.ராணி, புஷ்பராணி, வரதராசா, அருண்லந்தரா, கே. குமாரவேல், கௌரீஸ்வரி முதலியோர் பாடினர். கதாநாயகியின் உரையாடல்களுக்கு செல்வம் பெனாண்டோ பின்னணிக் குரல் வழங்கினார். தயானந்த விமலவீர ஒளிப்பதிவு செய்ய துவான்கபூர் படத்தொகுப்பைச் செய்தார்.
தேயிலை எஸ்டேட் முதலாளி ஸ்ரீவேலு முதலியாருக்கும், வேலைக்காரி லட்சுமிக்கும் பிறந்தவள்தான் வள்ளி. முதலியாரின் தம்பி ஸ்ரீரங்கம், தன் அண்ணனின் சொத்துக்களை வஞ்சகத்தால் கவர முனைகிறான். அதற்காக அவரைக் கொலை செய்கிறான். முதலியாரின் மகன் ஸ்ரீதரைப் பாதிரியார் ஒருவர் காப்பாற்றி சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கிறார். தோட்ட உரிமை ஸ்ரீரங்கத்துக்கு வருகிறது. அவன் தோட்ட மக்களைத் துன்புறுத்துகிறான்.
தோட்டத்தின் கணக்குப்பிள்ளையின் மகன் சுந்தர், வள்ளியைக் காதலிக்கிறான். வாக்குறுதிகள் பல கொடுத்து விட்டுக் கொழும்புக்குச் செல்கிறான். ஆடி வேல்விழா வைபவத்தில் ஸ்ரீரங்கம், வள்ளியைக் கண்டுவிடுகிறான். அவள் தப்பி ஓடி, கொழும்பில் தன் காதலன் சுந்தரைத் தேடி அலைகிறாள். அப்பொழுது சிங்கப்பூரிலிருந்து திரும்பியிருக்கும் ஸ்ரீதரால் காப்பாற்றப்படுகிறாள். அவள் தன் தங்கை என்பதை அறிந்து, சுந்தரைக் கண்டுபிடித்து அவளுக்கு வாழ்வளிக்க முனைகிறான். ஸ்ரீரங்கம் சட்டத்தின் கையில் அகப்படுகிறான். வள்ளி – சுந்தர் திருமணம் நடைபெறுகிறது.
இதுதான் தோட்டக்காரி திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். இலங்கையின் மலையகச் சூழலை வைத்தே கதை பின்னப்பட்டதால் அந்தக் காலத்தில் இந்தத் திரைப்படம் பிரதானமானதாகக் கணிக்கப்பட்டது. தென்னகப் படங்களைப் பார்த்தே பழக்கப்பட்டிருந்த எமது ரசிகர்கள், இலங்கைக் காட்சிகளை இத்திரைப்படத்தில் கண்டதும் புதுமைப்பட்டார்கள்.
தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. எஸ். தொண்டமான், ஜனநாயகத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜனாப் ஏ. அசீஸ் ஆகியோரின் உரைகளும் படத்தின் ஆரம்பத்தில் இணைக்கப்பட்டிருந்தன. இது ஆரம்பப் படமாகையால் தொழில்நுட்பரீதியில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்தன. ‘தோட்டக்காரி’ 1963.09.27இல் கொழும்பில் கிங்ஸ்லி உட்பட 9 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
இப்படம் மத்திய கொழும்பில் 2 வாரங்களும், தென் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பண்டாரவளை ஆகிய இடங்களில் தலா ஒரு வாரமும் கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன் போன்ற இடங்களில் ஒருவாரத்திலும் குறைந்த தினங்களும் ஓடியதாம். அந்தக் காலத்தில் 4 1/4 இலட்சம் ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட ‘தோட்டக்காரி’ வருமானமாக 2 1/2 இலட்சம் ரூபாவை மட்டுமே தந்ததாம்.
‘பணத்தைப் பொறுத்தவரை சிறிது இழப்புத் தானென்றாலும் எங்களாலும் இலங்கையில் தமிழ்ப் படம் தயாரிக்க முடியும் என்ற ஆத்ம திருப்தியை அப்பொழுதே பெற்றுவிட்டோம்’! என்று கூறினார் பி.எஸ். கிருஷ்ணகுமார்.
திரு. கிருஷ்ணகுமார், கொழும்பு மில்வீதி, 10 ஆம் இலக்க இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். திரைப்பட வரலாற்றை அறிவதற்காக நான் அவரை அடிக்கடி சந்தித்து வந்தேன். தனது கலைவாழ்க்கையைப் பற்றி அழகழகாகச் சொல்லுவார். தான் நெறியாண்ட இரண்டு படங்களினதும் (தோட்டக்காரி, மீனவப்பெண்) பட ஆல்பங்களை அழகாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.
ரூபவாஹினியில் பல வருடங்களாக எஸ். விஸ்வநாதன் ‘காதம்பரி’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக நான் கிருஷ்ணகுமாரை முதன்முதலில் பேட்டி கண்டேன். அவர் ‘தோட்டக்காரி’ திரைப்படத்தின் ரீல்களை இன்னும் அழகாகப் பாதுகாத்துவருகிறார். 14 றீல்கள் மொத்தமாக இருத்தல் வேண்டும். ஆனால், ஒன்று தவறிவிட்டதால் தோட்டக்காரியை மீண்டும் பூரணமாகத் திரையிடமுடியாமல் இருப்பதையிட்டுக் கவலை தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவர்களின் பெயர்களில் திரு. கிருஷ்ணகுமாரின் பெயரும் விசேடமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.
இலங்கையில் உருவான ‘தோட்டக்காரி’ திரைப்படத்துக்குப் பலரின் பாராட்டுகளும் கிடைத்தன. அப்பொழுது தலைவர் எஸ். தொண்டமானும் பாராட்டுச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். தினகரனில் (1963.08.25) ‘நியமன எம்.பி. தொண்டமானின் கருத்து’ என்ற தலைப்பில் அந்தச் செய்தி வெளிவந்திருந்தது.
‘தோட்டக்காரி’ படம், தயாரிப்பாளர் தங்கவேலுவுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். கலாசார அமைச்சர் பி.ஜி.ஜி. கலுகல்ல தலைமையில் காண்பிக்கப்பட்டபோது நானும் பார்த்தேன். இப்படம் தோட்டப்பகுதி மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதால் சிருஷ்டிக் கலைஞனுக்குச் சவால் விடும் வகையிலான விஷயமொன்றை முன்னணிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘தொழிலாளர்களும், அவர்களது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களும் இப்படத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டும்’ என்று அந்தச் செய்தியில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தச் செய்தி வெளியான அதே மாதம் 16ஆம் திகதி ‘தினகரன்’, ‘தோட்டக்காரி’ படத்துக்கு நீண்ட விமர்சனம் எழுதியது.
…இலங்கையின் முதலாவது 35 மி.மீட்டர் தமிழ்ப் படமான ‘தோட்டக்காரி’யைத் தயாரித்த ஸ்ரீ கணபதி பிக்ஸர்சாரும், வீ. தங்கவேலுவும் பாராட்டுக்குரியவர்கள். இலங்கையிலேயே ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிப்பது என்றால் அதற்கு அசாத்தியமான தைரியம் வேண்டும்.
காதல், சூழ்ச்சி, தொழிலாளர் போராட்டம் என்று ஒரு சாதாரண படத்துக்கு வேண்டிய அத்தனை அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஓரிரு பாடல்கள்கூட நன்றாக இருக்கின்றன. ஒலி-ஒளிப்பதிவுகள் திறமையாக இல்லையானாலும் இது முதல் முயற்சிதானே?
ஜெயஸ்ரீயின் நடிப்பு நம்பிக்கையூட்டுகிறது. கதாநாயகன் கிருஷ்ணகுமாரும் பரவாயில்லை. தோட்டத் துரையாக வரும் மோகன்ராஜின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.
‘தோட்டக்காரி’ முதல் முயற்சி. ஆனால், அதிகப் பிரயாசையுடன் எடுக்கப்பட்டது. இதை இந்தியப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போர் பல குறைகளைக் காணலாம். அவர்கள் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப் படம் எப்படி இருந்ததை என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். எந்தக் கலையும் படிப்படியாகத்தான் முன்னேற முடியும். அதனால், ‘தோட்டக்காரி’ தயாரிப்பாளர்கள் நிச்சயம் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள் என்று தினகரன் விமர்சனம் எழுதியது.
வீரகேசரி (11.08.63) யிலும் ‘ராஜு‘ என்பவர் விமர்சனம் எழுதினார்.
'முதலாவது திரைப்படத்தில் குறைகள் அதிகம், நிறைவுகள் சொற்பம் என்று எதிர்பார்ப்பது சகஜம். அந்த எண்ணத்துடன் சென்ற எனக்கு ஏக காலத்தில் ஏமாற்றமும், மகிழ்ச்சியுமாக இருந்தது. ‘தோட்டக்காரி’ தரமான படமாகத் தென்பட்டதே அதற்குக் காரணம். கலைஞர்களின் பெயர்கள் சிங்களத்திலும் காட்டப்படுகிறது.
பெண்கள் கொழுந்து பறிக்கும் காட்சி ‘தோட்டக்காரி’யில் முதலாவதாக இடம்பெறுகிறது. ஜெயஸ்ரீயும் கிருஷ்ணகுமாரும் ரசிகர்கள் பாராட்டும் வகையில் நடித்துள்ளார்கள். தோட்டத் துரையாக வரும் மோகன்ராஜ் பண்பட்ட நடிகராக விளங்குகிறார்.
ஸவாஹிரின் இசையமைப்பு அருமை. இலங்கையிலும் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கையில் ‘வணக்கம் சார்’ என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். வேட்டியும் சேட்டும் அணிந்திருந்த நடுத்தர வயதுள்ள மனிதர் ஒருவர் நின்றிருந்தார். அவர் தான் தயாரிப்பாளர் தங்கவேலு. ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்று பாராட்டினேன்' என்று அந்த விமர்சனம் முடிகிறது.
‘தோட்டக்காரி’யின் தயாரிப்பாளர்களில் பிரதானமானவர் வீ. தங்கவேலு. அவரது பேட்டியொன்றும் வீரகேசரியில் (25.09.63) வெளிவந்திருந்தது.
‘இலங்கையில் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. ஆனால், சந்தர்ப்பம் என்னை அந்த வழிக்கு இழுத்துச் சென்றுவிட்டது. சிறுவயது முதல் நான் நாடகம் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையும் பிறந்தது. இதனால் தந்தையுடன் சண்டைபிடித்துக்கொண்டு அவரைப் பிரிந்து வந்தேன். இது 1950ஆம் ஆண்டில் நடந்தது. பல காலமும் கஷ்டப்பட்டு கண்டியிலும் ‘மாவனல்லை’ என்ற இடத்திலும் சில்லறைக் கடையும், சைவ ஹோட்டலும் நடத்தி நல்ல முறையில் வாழ்ந்துவந்தேன்.
அப்பொழுது ‘நடிகர் தேவை’ என்ற விளம்பரத்தைக் கண்டு மகிழ்ந்து விண்ணப்பம் அனுப்பினேன். நடிகராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். சில காலத்தின் பின் ஏமாற்றப்பட்டேன். மற்றொரு படத்திலும் சேர்ந்தேன். அது படப்பிடிப்புடன் நின்றுவிட்டது. அதன் பின்பே சொந்தத்தில் படம் தயாரிக்கலாம் என்று எண்ணினேன். சில்லறைக் கடையையும் சைவ ஹோட்டலையும் விற்றேன். சொந்த ஊரில் இருந்த நிலபுலன்களையெல்லாம் விற்றேன். அந்தப் பணங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஸ்ரீ கணபதி பிக்சர்ஸ்’ சினிமா நிறுவனமாகும்.
இலங்கையின் வளத்துக்கும், வருமானத்துக்கும் இரவு பகல் என்று பாராது உழைப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்கள். அவர்களின் வாழ்க்கையைக் கதையாகக் கொண்டே படத்தைத் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதோ என் மனதில் உருவாகியிருந்தது.
எனது நண்பர் சுமணதாசவுடன் பி.எஸ். கிருஷ்ண குமாரைச் சந்தித்தேன். அவர் படத்துக்கான கதை வசனத்தை எழுதி டைரக்ஷன் செய்வதாக ஒப்புக்கொண்டார். அதன் பின் நவஜீவன ஸ்ரூடியோ அதிபர் சிறிசேன விமலவீரவின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் தனது ஸ்ரூடியோவிலேயே முதலாவது தமிழ்ப் படம் உருவாக வேண்டும் என்று விரும்பினார். ‘தோட்டக்காரி’யை ரசிகர்களின் முன்னிலையில் கொண்டுவரவேண்டுமென்று கடுமையாக உழைத்தேன். முன் அனுபவம் இல்லாத எனக்குப் பல கஷ்டங்கள் ஏற்பட்டன. பொருளாதார நெருக்கடியால் படம் வளர்வது தடைப்பட்டது. அப்போது திருமதி ரஞ்சனி முத்துவேலு பணஉதவி செய்தார். இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் ‘தோட்டக்காரி’யைத் தங்கள் சொந்தப் படம் என்று கருதி ஆதரவு தரவேண்டும்’ என்று தயாரிப்பாளர் பேட்டி கொடுத்திருந்தார்.
தயாரிப்பாளர் கெஞ்சிக் கேட்கும் அளவுக்கு நம் நாட்டுச் சினிமா ரசிகர்கள் விளங்கினார்கள். ‘நம் நாட்டுத் தயாரிப்புக்களையும் நாம் பார்க்கவேண்டும்’ என்ற தேசாபிமான உணர்வு அப்பொழுதே நம் ரசிகர் மனதில் ஏற்பட்டிருக்குமானால் இப்போதுள்ள நம் நாட்டுச் சினிமாக்கலை பெருமளவுக்கு முன்னேற்றங்களைக் கண்டிருக்கும்.
மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com
இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |