இதழ்: 19     ஆடி (15 - 30) (August 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
 
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 6 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்
--------------------------------
திரைமொழி 13 - ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 6 - தினேஷ் குமார்
--------------------------------
சினிமாவும் இலக்கியமும் - சு. தியடோர் பாஸ்கரன் - ஒலிப்பதிவு & தட்டச்சு: யுகேந்தர்
--------------------------------
அகிரா - வருணன்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 3 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 5 - பி.கே.நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 5 - ஃபெட்ரிக்கோ ஃபெலினி
--------------------------------
தமிழ்ஸ்டுடியோ குறுந்திரையரங்கம் - தினேஷ் குமார்
--------------------------------
   
   

 

 

உலக சினிமா சாதனையாளர்கள் - 5

ஃபெட்ரிக்கோ ஃபெலினி

- சீனியம்மாள் : தட்டச்சு உதவி: தினேஷ் குமார்

”எனது படங்கள் அன்பிலிருந்து பிறப்பவை, தர்க்கத்திலிருந்தல்ல” என்றான் இத்தாலிய மேதை ஃபெலினி. கலையுணர்ச்சியின் உச்சியில் தவழும் கலைஞர்கள் இருக்கும் இத்தாலியில் இருந்து ஃபெலினி போன்ற இயக்குனர்கள் உருவாவது விசித்திரமானதல்ல எனினும் அவனது படங்கள் விசித்திரமானவை. லூயிபுனுவலைப் போல திரையின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனது சுயத்தை தர்சித்தவன் ஃபெலினி. ஆளற்ற, வெறுமையான தெருக்களின் விசித்திரமான இரவுகளை அவனது காமிரா பதிவு செய்தன. யதார்த்தத்தின் பிடியிலிருந்து முற்றிலும் விடுபட்டு கனவுகளிலும், ஃபேண்டஸி புதைமணலிலும் மூழ்கியிருந்தான். அவனது உலகம் முட்டாள்களின் உலகமாயிருந்தது. கோமாளிகளின் வெண்ணிற முகங்கள் உங்கள் கனவுகளில் வந்து துன்புறுத்தும் நடிகர்களின் உடல்களிலிருந்து அமானுஷ்யமான அசைவுகளையும், முகபாவங்களையும், உருவாக்கினான். நீங்கள் எல்லாரும் தொலைத்த, இந்த நூற்றாண்டின் அனைத்து அவலங்களுக்கும் மாற்றுச்சக்தியான குழந்தைகளின் இன்னொஸன்ஸை அவன் முழுமையாக அறிந்து வைத்திருந்தான். நமது கிருஷ்ணன் நம்பியின் கதைகளைப் போல அவனது கலைப்படைப்புகளின் அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகளின் உலகமாகவே அவனது உலகம் இருந்தது. ஆளில்லாமல் காமிரா தானாகவே சென்று படமெடுத்திருக்குமோ என்று நினைக்கும்படி அகோரத் தனிமையில் நிரம்பியிருந்தன அவனது படிமங்கள். கடல்சூழ்ந்த இத்தாலியின் ஈரமான காற்றை நீங்கள் ஸ்பர்ஸிக்கலாம் தியேட்டரில் இருந்தபடியே.

அவன் பிறந்த ரிமினி நகரத்தில் இருந்து தனது 12 வயதில் ஊருக்கு வந்த நாடோடி சர்க்கஸின் கோமாளிகளின் வண்ண உடைகளிலும், தொப்பிகளிலும் மயங்கி வீட்டை விட்டு ஓடிப்போனான். பிறகு திரும்பி வந்து 17வயதில் படிப்பையும்விட்டு வெறுமையான தெருவாழ்க்கையின் சுவாரஸ்யத்திலும், போக்கிரிகளின் உலகத்திலும் வாழலானான். Florenceக்கு வந்து கார்ட்டூனிஸ்ட், புரூப்ரீடர் போன்ற வேலை, தீரமிகு பத்திரிகையாளனாக வேண்டும் என்ற வெறியோடு ரோடுக்கு வந்து பறக்கும் மனிதன் Flash Garden சித்திரக்கதைக்கு படம் வரைந்த போது அவனும் பறந்தான். பின்பு படங்கள் (தி நைட்ஸ் ஆஃப் காபிரியா) graphic artist வேலை இறுதியாக திரைப்படத்துறைக்கு ராபர்ட்டோ ரோஸலினியின் படங்களுக்கு துணையாகப் பணிபுரிந்ததன் மூலம் வந்தான். சினிமாவையும் சர்க்கஸின் உலகமாகவே கருதினான். அவனது ஆரம்பக் காலப் படங்கள் பெரும்பான்மையானவற்றில் கோமாளிகளே தாவிக் குதித்தனர். வெள்ளை முகங்கள், நீளமான கோடுகளையுடைய தொள தொள டவுசர்கள், குஞ்சங்கலுடன் கூடிய குல்லாய்களோடு முன்வைத்தது. உணர்ச்சியின் விளிம்பிலேயே சஞ்சரிக்கும் கலைஞர்கள் சார்லி சாப்ளினுக்கு அஞ்சலி செலுத்துவது போல அமைந்திருந்தது. இப்படத்தின் வெற்றி ஃபெலினியை புகழின் உச்சிக்கு கொண்டு தள்ளியது. மிருக்குணம் கொண்ட மனிதன், பெண்ணின் அன்பினால் திருந்துவது போன்ற ஜனரஞ்சகமான செண்டிமெண்டல் கதை. இத்தாலிய நியோரியலிசத்தின் பாதிப்பை இப்படத்தில் காணலாம். செண்டிமெண்டலை எதற்காகப் பயன்படுத்துவது என்பதுதான் முக்கியம். தனது படங்களின் வழியாக மக்களைப் பற்றி பேசினான், மனிதமனத்தின் ஆழ்ந்த அகவயமான பின்னல்களை அவனது படம் ஆராய்ந்தது.

ஒரு இரக்கமான இதயம் கொண்ட கழைக்கூத்தாடிக்கும், மரணத்தின் விளிம்பில் சிரிக்கும் ஒரு முட்டாளுக்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண்ணைப் பற்றி La strada பேசியது. ஃபெலினியின் மனைவி Guilettina Massina, ஜெல்சோமினா என்னும் பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு முகம் இருக்கமுடியுமா என்று சரித்திர விபத்து மாதிரி கில்லடினா மாஸ்னாவின் முகம் அமைந்திருந்தது. அப்படி ஒரு இன்னொஸண்டான முகமே படத்தை நகர்த்திச் சென்றது. திரையில் உணர்ச்சி வாதத்தின் கருத்தை முன்வைத்த இப்படத்தில் கழைக்கூத்தாடியாக ஆண்டனி குயின். முட்டாளாக வரும் கோமாளி ஏசு கிறிஸ்துவைப் போல அன்பின் செய்தியைப் பரப்புபவனாகவும் கூழாங்கற்களின் தத்துவத்தை பேசியவாறு உயிர்விடுகிறான். பிறகு ஜெல்சோமினாவும் இறக்கிறாள். இறுதியாக ஆண்டனி குயின் திருந்துகிறார் கடலின் மடியில். பலஹீனமான இதயங்களின் உன்னதங்களில் கரையும் ஜெல்சோமினாவின் பாத்திரம் முதன்முதலாக feminism பற்றிய அறிக்கையை முன்வைத்தது என்கிறார்கள் விமர்சகர்கள். இருக்கலாம்.

ஃபெலினியின் அடுத்த படம் La Dolce vita (The Sweet Life) ஒரு புகைப்படக் கலைஞனை முன்வைத்து ரோமின் வாழ்வை படம் பிடித்திருக்கிறார். ஃபெலினியின் படங்களை ‘Personal Fantasyu’ என்றும் ஒரே கட்டத்தினுள் சுலபமாகப் போட்டுவிடலாம். சுயம் சார்ந்த பேண்டஸி இயல்பான ஒன்றல்லவே. குழந்தையின் புதிர்களுள் ஒன்று அது. ஃபெலினிக்கு குழந்தைகளைப் பிடிக்கவில்லை. அவர்களோடு குழந்தையாக சண்டை போடத் தெரிந்திருந்தது. இப்படத்தில் பத்திரிக்கைத்துறை, திருப்தியுறாத தயாரிப்பாளர்கள் அவர்களோடு உள்ள உரசலை முன்வைக்கிறது. இறுதியாக இவ்வுலகைவிட்டுப் பறப்பதாக முடிகிறது. புனிதத்தை நோக்கி தற்கொலைக்கொப்பான வீழ்தலை நோக்கி.

லூசி பிரண்டல்லோவின் நாடக உத்திகளைப் போல தன்னுடைய 8 ½ (எட்டரை) திரைப்படம் எடுப்பதைப் பற்றிய திரைப்படமாக அமைந்தது. உலகத் திரைப்பட வரலாற்றிலேயே இது முக்கியமான படம். தான் எந்த விஷயத்தைப் பற்றி திரைப்படம் எடுத்தாலும் அது சுயசரிதமாகவே முடிகிறது என்று ஃபெலினி தன்னுடைய படங்களைப் பற்றிக் கூறுவதுண்டு. 8 ½ முழுமையான சுயசரிதப் படம். திரைப்படம் என்பது கனவைப்போல, இசையைப் போல என்னும் உணர்வைத் தருகிறது இப்படம். (Guido) கிடோ என்னும் இயக்குனராக வரும் மாஸ்திரியோனி ஃபெலினியின் அனைத்து குணாதிசயங்களையும் கொண்டிருந்த தார், ஃபெலினியின் தொப்பி, நடை , உடை பாவனைகள் அனைத்தும் இந்தப்படத்தின் ஆரம்பமே கனவிலிருந்து, ஃபெலினியின் சுயமான தேடல்களும், சுயத்தை நோக்கிய தேடல்களும் ஒவ்வொரு பிரேமிலும் தியானத் தன்மையோடு அமைந்திருந்தது. முழுமையான குழப்பங்களை, இறுக்கங்களை கனவுகளை குழந்தைப்பருவ நினைவுகளை மந்திரக் கலைடாஸ்கோப்பினை திருப்புவது போல இதன் வடிவம் இருந்தது. ஃபெலினி தன்னைப் பற்றிப் பேசுவதென்பதே எல்லாருக்குமானதாக இருந்தது. காமிரா என்பது அலையும் கருவி என்றது 8 1/2 . கிடோவின் பிரச்சனை என்னவெனில் தான் ஒரு எளிமையான திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்பதுதான். (8 ½ என்று இப்படத்திற்கு பெயர் வைத்த காரணம் ஃபெலினி ஆறு முழுப்படங்களையும், 3 படங்களுக்கு துணையாகப் பணி புரிந்ததையும் சேர்ந்து இதனை 8 ½ என்று அழைத்தார் என்பது உங்களுக்குத் தெரியும்).

த்ரூஃபோவினால் மிகவும் சிலாகிக்கப்பட்ட படம் கேபிரியாவின் இரவுகள் (The Nights of Cabiria) . இது விபச்சாரியின் வாழ்க்கையைப் பற்றிய படம். பெலினியின் மனைவியே விபச்சாரியாக நடித்திருந்தார்.

இவ்வுலகத்தின் கொடுரமான யதார்த்தத்தில் சிக்கித் தவித்து தனது இன்னொஸன்ஸை தக்கவைக்க முடியாமல் அலையும் விபச்சாரியின் பாத்திரம் ஃபெலினிக்கே உரியது. செண்டிமெண்டலின் எல்லைக்கே சென்றுவிடும் ஃபெலினி இப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பாணியில் இன்னொரு சாகசத்தை வைத்தார். சுயமான தர்சன நோக்கு கொண்ட ஃபெலினி பெண்ணின் சக்தியை தனது படைப்பின் உந்துசக்தியகவே கருதினார்.

தன்னுடைய திரைப்பட்த்தின் வடிவம் குறித்துப் பேசும் ஃபெலினி திரைப்படங்கள் உரைநடைக் கதையாடலை எப்போதோ விட்டுச்சென்று, கவிதையை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறதென்றான்.

தான் இப்போது தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற மரபான கதை சொல்லும் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு கவிதையாக தன்னுடைய படம் இருக்கிறதென்றார். ஜீலியட் ஆஃப் தி ஸ்பிரிட்ஸ், (Juliet of the Sprits) அவ்வகையான படமே, இதுவும் ஒரு பெண்ணின் பார்வையோடு எடுத்தபடம். இப்படத்தில் மாயாவாதம், அதீத கற்பனைகள், நம்பமுடியாத நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டு படம் நகர்கிறது. இதிலும் ஃபெலினியின் மனைவியே நடித்திருந்தார். தன்னுடைய மனைவியின் வாழ்க்கையை மனைவிக்காக, மனைவியை வைத்து எடுத்திருந்தார். அவரது முக்கியமான படங்களின் வரிசையில் இதுவும் சேர்ந்துவிட்டது.

ஃபெலினி பாதிக்காத இயக்குனர்களே இல்லையெனலாம், பெர்க்மன் முதல் ஃபாஸ்பைண்டர் வரை அனைவரும் அவருடைய கலையுணர்ச்சியினால் ஈர்க்கப்பட்டனர். நவீன சினிமாவின் பின்னலான மொழியை தொழில் நுட்ப மேதைமையுடன் வெளிப்படுத்துவதென்பது ஃபெலினிக்கு கை வந்த கலை. தனது திரைப்படங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்பது அவருக்குத் தெரியும். நியோரியலிசம், சர்ரியலிசம் என்று அவர் படங்களை வரிசைப்படுத்தினாலும் அவருடைய எல்லாப் படங்களிலும் அவர் செய்த ஒரே வேலை தன்னுடைய சுயத்தை நோக்கி இயங்கியதேயாகும். படம் முடியும்வரை தெரிந்திருக்கவில்லை. நுட்பமான புதிர்களிலும் , புதிரின் நுட்பத்திலும் நிறைந்தபடி படிமங்களில் மிதந்தார். திரைப்பட வரலாற்றின் Unique என்று இவரை அழைக்கலாம். சத்யஜித்ராய்க்குப் பிறகு போன வருடம் ஆஸ்கர் சிறப்பு விருது பெற்ற ஃபெலினி இவ்வருடம் அக்டோபர் 31 அன்று மரணமடைந்தார். ஒரு விமர்சகர் சொல்வது மிகவும் பொருந்தும். ஒன்று நீங்கள் ஃபெலினியை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். எந்த இந்தியனாவது நிராகரிக்க முடியும் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

திரைப்படப் பாணி வரலாறு:

வெரைட்டி லைட்ஸ் (1951)
தி வைட் ஷேக்(1952)
தி லோபர்ஸ் (1953)
லவ் இன் தி சிட்டி(1953)
லா ஸ்ட்ராடா (1954)
தி ஸ்விண்டில்(1955)
தி நைட்ஸ் ஆப் காப்ரியா (1956)
லா தோல்சேவித்தா (1959)
பொக்காச்சிலோ 70 (1961)
8 ½ (1963)
ஜீலியட் ஆஃப் தி ஸ்பிரிட்ஸ்(1965)
ஸ்பிரிட்ஸ் ஆஃப் தி டெட்(1967)
சட்டிரிக்கான் (1969)
தி கல்வன்(1970)
ரோமா (1971)
அமர்கார்ட் (1973)
கேசனோவா (1976)
ஆர்க்கெஸ்ட்ரா ரிகெர்ஸல்(1978)
ஜிஞர் அண்ட் ஃபிரெட்(1985)

சலனம் டிசம்பர் 93- ஜனவரி 94

- தொடரும் -

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, உலக சினிமா சாதனையாளர்கள் தொடரை இங்கே வாசகர்களுக்காக படிக்க கொடுக்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </