விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 6
சென்ற இதழ் தொடர்ச்சி...
ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் – முதல் பொதுஜன தொடர்பாளர்
அன்றிலிருந்து இன்றுவரை, அதிக பிரபலத்தன்மை வாய்ந்தவர் வீற்றிருக்கின்ற மேடையில், இறுதியாகத்தான் அவர் பேச அழைக்கப்படுவார். அரங்கிற்கு வருகின்ற கூட்டத்தினருள் பெரும்பான்மையானவர்கள் அந்த பிரபலத்தின் பேச்சையே கேட்க வருவார்கள். இதனால், இவ்வழக்கம் இக்காலத்திலும் நீடித்து வருகின்றது. சிவாஜிக்கும் இதே நிலைதான்.
நாகேஸ்வரராவினது பேச்சிலுள்ள கருத்தில் உடன்படாத சிவாஜிக்கு அத்தருணத்திலேயே எதிர்வினை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமிருப்பினும், அவசரப்படாமல் தனக்கான அழைப்பு வரும்வரை அமைதியாக மேடையில் அமர்ந்திருந்தார். இறுதியாக சிவாஜிகணேசன் மேடையில் பேச அழைக்கப்படுகிறார். அவர் ஒலிப்பெருக்கியை பிடித்தநொடியிலிருந்து, மேடையிலிருந்து இறங்கும் வரையிலும் அவரது வார்த்தைகளின் அனலே அரங்கம் முழுதும் வியாபித்திருந்தது.
என்னுடைய வயதின் மூப்பினால் அன்று சிவாஜி பேசியது முழுமையாக நினைவில் இல்லையானாலும், அவ்வனலின் சூட்டிற்கு நானும் ஆட்பட்டிருந்த காரணத்தினால், என் நினைவிலிருந்தவரை அவர் பேசிய சொற்கள் இன்று இதோ:
“உன்ன உங்க அரசாங்கமே கூப்பிடுது, அதனால மறுக்க முடியாம அங்கபோற, அதுல ஏண்டா நீ தமிழன குத்தம் சொல்ற?,”தேவதாஸ்”,ங்கிற படம் தெலுங்கு மொழில தான் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆகுது. அந்தப்படம் நூறு நாள் இதே தமிழ்நாட்ல தான ஓடியிருக்கு. அதுபோக அந்தப்படமே தமிழ்ல டப் செஞ்சு மறுபடியும் நூறு நாள் ஓடுது. ”மாயக்குகை”,ங்கிற இன்னொரு தெலுங்குப்படமும் நூறு நாள் ஓடியிருக்கு, அதையும் நீ சொன்ன இதே தமிழ்நாட்டு மக்கள் தானே பார்த்திருக்காங்க.(அந்நாட்களில் தெலுங்கு திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பரவலாக திரையிடப்படுவதும், அவை கணிசமான வசூலை ஈட்டித் தருவதும் சகஜனமான ஒன்றாக இருந்தது.) உனக்கு அங்கதான் பணம் அதிகமாக் கிடைக்கும்னு சொல்லாம, தமிழங்க மேல நீ பழி போட்ற மாதிரி பேசுனத என்னால ஒத்துக்கவே முடியாது,“ என்றார் சிவாஜி. இவர் பேச்சிற்கு கரவொலி எழுப்பாதவர்களே அங்கு இல்லை எனலாம், என்னையும் சேர்த்தே.
நேர்படப் பேசுவதற்கு சிவாஜி தயங்கியதில்லை. அந்தப் பேச்சுகள் பெரும்பாலும் பாராட்டுகளாலும், சில சமயம் கோபத்திலும் வெளிப்படும். முன்பு கூறிய சம்பவம், சிவாஜியின் கோபத்திற்குள்ளான நிகழ்வு. ஆனால், சிவாஜியை தலைமையாகக் கொண்டு நாட்டிய அரங்கேற்றம் ஒன்றை நிகழ்த்தினார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதா சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்காத காலகட்டம். நாட்டிய நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபின்பு அவரின் நடனத்தின் மேன்மையை மெச்சும் விதமாக ஜெயலலிதாவினை ‘தங்கத் தாரகை’ என்று பாராட்டியுள்ளது சிவாஜியின் முதல்தரமான குணம்.
எனக்குத் தெரிந்து ஜெயலலிதாவின் கடைசிப் படம் ”நதியைத் தேடிவந்த கடல்”, படத்தொகுப்பாளர் லெனின் அதை இயக்கியிருந்தார். ஸ்ரீகாந்த் அப்படத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர். இந்தப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபொழுதுதான் ”நான் இனிமேல் நடிக்க மாட்டேன்”, என்று அரசியலில் ஜெயலலிதா முழுமையாக ஈடுபடத் தொடங்கினார்.
சிவாஜியைப் போன்றே எம்.ஜி.ஆரும் தன் மனதில் தவறெனப் பட்டதை வெளிச்சொல்லக் கூடியவர். அப்பொழுதெல்லாம் ஃபிலிம் நெகட்டிவ்களை மற்ற புகைப்படக் காரர்களைவிடவும் குறைவான விலைக்கு பிரிண்ட் போட்டுக் கொடுப்பது நான் ஒருவன்தான். 2 ரூபாய்க்கு கூட பிரிண்ட் போட்டுக்கொடுத்திருக்கின்றேன். நெகட்டிவிற்கான செலவே 2 ரூபாய்களில் அடங்கிவிடும். இவ்வாறெல்லாம் உழைத்ததை அனைவரும் அறிந்ததன் வாயிலாக நான் பிலிம் சேம்பரில் உறுப்பினாராகியிருக்கின்றேன்.
என்னை புகைப்படக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நான் பிலிம் சேம்பரின் உறுப்பினன் என்பது சிலருக்குத் தெரியாது. அந்தச் சிலருள் எம்.ஜி.ஆர் அவர்களும் அடங்கியிருப்பது என் துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்போது தலைவராக இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பின்பாக நடிகர் சங்க தலைவராக எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டு நடக்கின்ற முதல் கூட்டம். நடிகர் சங்க உறுப்பினர் மீட்டிங்கிற்கு எம்.ஜி.ஆர் வருகின்றார். தகுந்த பாதுகாப்புணர்வுடன் இக்கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. உறுப்பினர் கூட்டத்தில் ஒருவனாக என்னைப் பார்த்த எம்.ஜி.ஆர் என்னை மெதுவாக அணுகி, “ஆனந்தன் தப்பாக நினைக்க வேண்டாம். இது உறுப்பினர்களுக்கான மீட்டிங்க், அதனால் நீங்கள் பத்திரிக்கையாளர் என்பதால் தயவு செய்து வெளியில் இருங்கள்”, என்றார்.
எம்.ஜி.ஆர் சொல்கின்றார் என்பதற்காகவும், மேற்கொண்டு அவையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் அது என் பேரில் பழியாகி விடும் என்பதாலும் நான் வெளியே சென்றுவிட்டேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த உறுப்பினர்களில் ஒருவரான சோமசுந்தரம், எம்.ஜி.ஆர் அவர்களை நெருங்கி ஆனந்தனும் இதில் உறுப்பினராகயிருக்கின்றசங்கதியைச் சொன்னார்.
தன் செயலுக்கு வருத்தப்பட்ட எம்.ஜி.ஆர் , உடனேயே சோமசுந்தரத்தை அழைத்து, ”ஆனந்தனை அழைத்துவா” என்று சொல்லியிருக்கின்றார். சோமசுந்தரம் வருகின்ற வேளையில் நான் வாசற்படியினைக் கடந்திருந்தேன். என்னை தடுத்து நிறுத்தி, எம்.ஜி.ஆர் கூறியதை என்னிடம் சொன்னார் சோமசுந்தரம். ”நான் ஏதும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை, இருப்பினும் எம்.ஜி.ஆர் சொன்னதற்குப் பின்பாக நான் மீறியும் உள்ளேயிருந்து ஏதேனும் தவறான சம்பவங்களுக்கு அவை இடம்கொடுக்குமாயின் எம்.ஜி.ஆருக்கு என்பேரில் தப்பான அபிப்ராயம் ஏற்பட வாய்ப்புண்டு”, என்று என் மனதில் இருந்த விஷயங்களை பிசகாமல் சோமசுந்தரத்திடம் சொல்லி அனுப்பினேன். நானும் மனதில் பட்டதை தயங்காமல் வெளிச்சொல்லக் கூடியவனாகவே இருந்திருக்கின்றேன்.
பின்பு எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையிலேயே அவ்வருடத்தின் பொங்கல்விழாவை சங்கத்தினர் கொண்டாடினர் என்பது கூடுதல் செய்தி.
இதேபோன்று மற்றொரு சம்பவமும் எம்.ஜி.ஆரிடத்தில் எனக்கு நினைவு கூறத்தக்கது. ”நாடோடி மன்னன்”, எம்.ஜி.ஆர் நடித்தும், தயாரித்து, இயக்கமும் செய்த திரைப்படம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படத்திற்கான பிரத்யேக போட்டோக்கள் சிலவற்றையும் நான் படப்பிடிப்புத் தளத்திலேயே எடுத்துவைத்திருந்தேன். அப்புகைப்படங்களுள் சில பத்திரிக்கைகளில் வெளியாகின. படத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே இருந்தது. பின்னர் அத்திரைப்படம் வெளியான முதல் தினத்தின் (ஆகஸ்டு 22, 1958) பொழுதெல்லாம், காலை பத்துமணிக்கு காட்சி என்றால் அதற்குள் பத்திரிக்கையாளர்கள், எல்லாம் திரையரங்கத்தினுள் அமர்ந்திருப்பார்கள், அடுத்த பத்து நிமிடங்கள் கழித்துகூட எந்த பத்திரிக்கையாளர் வந்தாலும் அவர்களுக்கு திரையரங்கத்தினுள் அனுமதி மறுக்கப்படும். ஏனென்றால் பத்து நிமிடங்கள் தாமதாகமாகவந்தவர்கள் படத்தைதவறுதலாக புரிந்துகொண்டு எழுதிவிட்டால், என்னசெய்வது என்பதற்காகத்தான் அவர் இதில் உறுதியாக இருந்தார். இவ்விஷயம் எனக்கு நன்றாகவேத் தெரியும் என்பதற்காக, நான் பத்து நிமிடங்கள் முன்பாகவே ஆஜராகிவிடுவேன். என்னளவில் சில பத்திரிக்கை நண்பர்களையும் காட்சிக்கு வரும்படி உடன் அழைத்து வருவேன். அவர்களும் இப்படத்தைப் பற்றிய செய்திகளை அவரவர் பணிபுரியும் பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள். எம்.ஜி.ஆரின் விருப்பத்தின்பேரில் பத்திரிக்கையாளர் சந்திப்பினை ஏற்படுத்துவதும் நானாகத்தான் இருப்பேன். படம் வெளியான தினத்திலிருந்தே மக்களிடத்தில் வரவேற்பும் பாராட்டும் அதிக அளவில் இருந்தது. லாபமும் கூட.
படத்தின் வெற்றியைக் கொண்டாடுவது எனவும் எம்.ஜி.ஆரின் வாயிலாக முடிவுசெய்யப்பட்டது. சி.என்.அண்ணாத்துரை அவர்கள் ”நாடோடி மன்னன்”, வெற்றி விழாவை தலைமை தாங்குவதாக ஒப்புக்கொண்டதும் விழாவிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்தேறின. விழா மேடையில், இந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்காக, 120பதக்கங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன.
அப்பொழுதெல்லாம் படத்தின் வெற்றிவிழாவில் 40, 50 பதக்கங்கள் வழங்குவதே பெரியவிஷயமாக கருதப்பட்டது. அதில் நடித்த நடிகர், நடிகைகள் , தொழிற்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமான பதக்கங்களின் எண்ணிக்கைதான் நூற்றி இருபது. நாடோடிமன்னன் வெளியான காலகட்டத்திலெல்லாம் பி.ஆர்.ஓக்கள் என்பதற்கான அடையாளங்களே இல்லை. அதனால் எனக்கும் எந்த விருதும் கிடைக்கவில்லை. என் வேலைக்கும் அங்கீகாரம் கிடையாது.
G.K.ராம் என்பவர்தான் எம்.ஜி.ஆருடன் அநேக பொழுதுகளில் உடன் இருப்பவர்.
நாடோடி மன்னன் கதை ,வசனத்திலும் உதவியாக இருந்தவர். விழா முடிந்ததும் எம்.ஜி.ஆர் என்னைச் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் சிவந்த கன்னங்கள் மேலும் சிவக்க என்னை விசாரித்தார். G.K.ராம் கூறியதன்படி, ”ஆனந்தனுக்கு பரிசு ஏதும் கொடுக்கவில்லையே!”, என்று எம்.ஜி.ஆரும் உணர்ந்திருந்தார். பின்பு நானே அவரிடம், ”எனக்கு என்ன பெயரில் விருது கொடுப்பது, நான் செய்த வேலைக்கு ஓர் பிரிவேகிடையாதே!” என்றேன். ஆனால், எம்.ஜி.ஆர் சமாதானம் ஆகவில்லை, அடுத்த ஒருவார காலத்திற்குள் எனக்காக ஒரு பதக்கம் தனியாக தயார் செய்யப்பட்டு, அவரது அலுவலகத்திலேயே பதக்கத்தை எனக்கு அளித்தார். அது நூற்றி இருபத்தி ஒன்று. எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு இது ஓர் உதாரணம்.
நான் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்த முதல்படம் ’நாட்டுக்கொரு நல்லவள்’, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி,பாலைய்யா போன்றோரது நடிப்பில் 1959ல் ஜீலை மாதம் 17ஆம் தேதி வெளியானது. இதற்கு முன்னரும் இதுபோன்றுவேலை பார்த்திருக்கின்றேன், ஆனால் இதிலெல்லாம் எனக்கான அங்கீகாரமோ, பெயரோ திரையில் வந்ததில்லை, ஆனால் ”நாட்டுக்கொரு நல்லவள்”, படத்தில், பெயர் போடும் பொழுது தனி அட்டையில் ”பொதுஜன தொடர்பாளர் பிலிம்நியூஸ் ஆனந்தன்”, என்று சேர்க்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்ததும் பத்திரிக்கையாளர்கள் கூட ஆரவாரமாக துள்ளிக்குதித்தனர். உண்மையில் அவர்களுக்குத்தான் இதன் மகிழ்ச்சி தெரிந்திருக்கும். முதன் முதலில் தங்கள் துறையைச் சேர்ந்த ஒருவன் பெயரும் திரைப்பட கார்டில் வருவது கண்டு அவர்களின் முகத்தில் அலாதி இன்பம் தெரிந்தது.
இதற்குப் பிறகு தொடர்ந்து பலபடங்கள் பி.ஆர்.ஓ.வாக வேலைசெய்த நான் இறுதியாக (10 வருட இடைவெளிக்குப் பின்) மது அம்பாட் ஒளிப்பதிவில், சாரதா ராமனாதனின் இயக்கத்தில் ”சிருங்காரம்”, என்ற படத்தில் 2006ல் வேலைசெய்தேன். தேவதாசிகளின் வாழ்வையும், பொட்டுகட்டும் மூடப்பழக்கத்தையும் பற்றியது இந்த திரைப்படம் இந்தப்படத்தில் உள்ள முக்கியமான விஷயம், இந்தப்படத்திற்கு இசையமைத்தது வயலின் மேதை, லால்குடி ஜெயராமன்.. ஆனால் இப்படத்திற்கான பாடல்களை நீங்கள் வேறெங்கும் கேட்பது முடியாது. காரணம், பாடல்கள் இன்றளவும் ரிலீசாகவில்லை.
அதேநேரம், சிறந்த படம், சிறந்த ஒளியமைப்பு, சிறந்த இசை என மூன்று பிரிவுகளிலும் தேசிய விருது பெற்ற படம்தான் ‘சிருங்காரம்’. நான் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்த கடைசி படம்.
தொடரும்...
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |