ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 6
- பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த் |
உங்களையும் உங்கள் கலையையும் அதிகமாகப் பாதித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றி….
நான் கலைஞன் அல்ல. நான் ஒரு தொழில்வினைஞன். சில வருடங்களுக்குமுன் இயற்கை நிலப்பரப்புகளை வரைவதில் பெயர்பெற்ற ஜெர்மன் ஓவியர் காஸ்பெர் டேவிட் ஃபிரீட்ரிச்சின் ஓவியக்கண்காட்சி பாரிசில் நிகழ்ந்தது. அங்கு நான் சந்தித்த பிரெஞ்சு பத்திரிகையாளர் ஒவ்வொருவரும் என்னுடைய Heart of Glasss, Kasper Hauser படங்களை இந்தக் கண்காட்சியுடன் இணைத்துப் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு நடந்த ஜெர்மன் எக்ஸ்பிரஷனிச ஓவியக் கண்காட்சியின்போது என்னுடைய படங்களில் காணப்படும் எக்ஸ்பிரஷனிசக் கூறுகள் பற்றிப் பேச்சு எழுந்தது. அடுத்து எனது படைப்புகள் ஏன் ஜெர்மன் கற்பனாவாதத்துடன் தொடர்பில்லாதவையாக இருக்கின்றன என்று என்னைக் கேட்டார்கள். எக்ஸ்பிரஷனிசம், கற்பனாவாதம் இரண்டும் ஜெர்மனியோடு தொடர்புடையவை என்பதால் நான் இந்த இரண்டுவகை அழகியல்களையும் கட்டாயம் பயன்படுத்தியிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறேன். அமெரிக்கர்கள் என் படங்களை ரசிப்பவர்கள். எக்ஸ்பிரஷனிசம், கற்பனாவாதம் பற்றி எல்லாம் அதிகம் அறிந்தவர்கள் இல்லை. அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி என் படங்கள் நாஸிசத்தை ஆதரிப்பவையா இல்லையா என்பதே.
மனதையும், உள்ளுணர்வுகளையும் ஆழமாகப் பாதித்து நம்மை ஆட்கொள்ளும் தரிசனங்களாக மாறும் அனுபவங்களை நமது வாழ்நாளில் எதிர்பாராத தருணங்களில் அபூர்வமாகப் பெறுகிறோம். ஒரு புத்தகத்தைப் படிக்கும்போதோ இசையைக் கேட்கும்போதோ திரைப்படத்தைப் பார்க்கும்போதோ அல்லது ஒரு ஓவியத்தை உற்றுநோக்கும் நேரத்திலோ அந்த அனுபவம் நிகழலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவற்றிலிருந்து இவ்வாறான அனுபவங்களைப் பெறும் நேரங்களில் நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்வீர்கள். ஜெர்மன் எழுத்தாளரும் கவிஞருமான க்ளீஸ்ட்டின்(Kliest) கவிதைகள், பாஹ்ஹின்(Bach) Musikalisches Opfer இசைப்பகுதி, அதிகம் அறியப்படாத கவிஞர் க்யுரின் குல்மானின் (Quirin Kuhlman) கவிதைகள், டாட் பிரௌணிங்(Tod Browning) இயக்கிய Freaks திரைப்படம், கார்ள் தியடோர் ட்ரெயரின் Jeanne d’Arc திரைப்படம் போன்றவை இந்த அனுபவங்களை எனக்குத் தந்தவற்றில் சில. க்ருன்வால்ட்(Grunewald) என்னைப் பாதித்த ஓவியர்களில் முதன்மையானவராக நான் கருதுபவர். பாஷ்(Bosch), ப்ராய்கல்(Brueghel), லியனார்டோ டாவின்சி போன்ற ஓவியர்களும் இதில் அடக்கம். இவர்களின் நிலப்பரப்புகளை என் படைப்புகளில் காண முயல்கிறேன். கனவுகளில் நாம் காணும் நிலப்பரப்புகள் இவை. என்னைப்பொறுத்தவரை உண்மையான நிலப்பரப்பு என்பது வெறும் பாலைவனமோ, வனப்பகுதியோ அல்ல. Aquirre படத்தில் காணும் காடுகளாகட்டும் Fata Morgamaவில் காட்டப்படும் பாலைவனமாகட்டும் Lessons of Darkness படத்தில் எரிந்துகொண்டிருக்கும் குவெய்த் எண்ணெய்க்கிணறுகளாகட்டும் - இவை அனைத்தும் மனிதனின் ஆன்மாவை வெளிப்படுத்தும் ஆழ்மனநிலையைப் பிரதிபலிக்கும் மனப்பரப்புகள். ஓவியர் காஸ்பர் டேவிட் ஃபிடரிக்குடன் என்னை இணைக்கும் கூறுகள் இவைதான். ஆழ்மனவெளிகளை் கண்டறியும் முயற்சிகளாகவே தனது நிலப்பரப்புகளை அவர் வரைந்துள்ளார்.
முற்றிலுமாக வெளியே அறியப்படாத ஹெர்குலஸ் செகெர்ஸ் (Hercules Segers) என்ற டச்சு ஓவியருடன் மிக நெருக்கமாக என்னை உணர்கிறேன், பிறரால் மனநிலை பிறழ்ந்தவராக எண்ணப்பட்ட குடிகாரர். வறுமையான வாழ்கை வாழ்ந்துகொண்டிருந்த அவர் மேசைவிரிப்பு போன்று கையில் கிடைத்தவற்றில் வரைந்துகொண்டிருந்தார். அவ்வாறு அவரால் வரையப்பட்ட ஓவியங்கள் அவர் இறந்தபிறகு அடுமனையில் ரொட்டிகளைக் கட்டிக்கொடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வீணாக்கப்பட்டன. நல்லவேளையாக அவரை மிகவும் மதித்த புகழ்பெற்ற டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட்டிடம் செகெர்ஸின் ஓவியப்பிரதிகள் எட்டு இருந்தன. அவரின் ஒரு தைல ஓவியத்தையும் ரெம்ப்ராண்ட் வாங்கியிருந்தார். இப்போது அது ஃப்ளாரென்ஸில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. செகார்ஸின் ஓவியங்களுக்கும் எனக்குமான தொடர்பை என்னால் உணரமுடிகிறது. ஒரு தீர்க்கத்தரிசியைப் போன்று செகெர்ஸ் வரைந்த ஓவியங்கள் காலத்தால் பலநூறு வருடங்கள் முன்செல்பவை. அவருடைய நிலப்பரப்புகள் அமைதியற்ற மனநிலையையும் நம்பிக்கையின்மையையும் தனிமையையும் ஒருவித கனவுநிலையையும் வெளிபடுத்துபவை. சினிமா இன்னும் நூறு வருடங்களுக்கு முன்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு நான் இங்கு சொல்லியிருக்கும் ஓவியர்களும் கவிஞர்களும் சினிமா வழியாகத் தங்களை வெளிப்படுதியிருக்க வாய்ப்புகள் இருந்திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்.
இசை, இலக்கியப் பாதிப்புகள் பற்றி ….
மற்ற அனைத்தையும்விட இசையின் பாதிப்புதான் அதிகம் என்று சொல்வேன். திரைப்பபடத்தை உருவாக்கும் ஒருவனை மிகவும் முக்கியமாகப் பாதிப்பது இசை என்று சொன்னால் அது பலருக்கு வியப்பானதாக இருக்கலாம். மோண்ட்டேவெர்டி (Monteverdi), கெசுவால்டோ (Gesualdo), ரோலண்ட் டி லாஸ்ஸூஸ் (Roland de Lassus) போன்ற முந்தைய இசையமைப்பாளர்களை மிகவும் பிடிக்கும். அதற்கு முந்தைய சிலரையும் பிடிக்கும். இலக்கியத்தின் பாதிப்பைவிட இசையின் பாதிப்பு அதிகம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அதிகம் படிக்காவிட்டாலும் எதைப் படிக்கிறேனோ அதை ஆழமாக உள்வாங்கிக்கொள்பவன். ஜெர்மன் மொழியின் எல்லைகளைக் கடந்து செல்லும் வகை எழுத்தாளர்களான புக்னெர்(Buchner), க்ளீஸ்ட், கவிஞர் ஹோல்டெர்லின்(Holderlin), ஆஸ்திரிய எழுத்தாளர்கள் பீட்டர் ஹன்க்டே(Peter Handke) , தாமஸ் பெர்ன்ஹார்ட்(Thomas Bernhard) ஆகியோரின் எழுத்துக்கள் என்னைப் பாதித்தவை. மார்ட்டின் லூதர் மொழிபெயர்த்த பைபிள் பிடிக்கும். ஆங்கிலத்தில் ஜோசெப் கான்ராட், ஹெமிங்வே ஆகியோரின் சிறுகதைகள், லாரென்ஸ் ஸ்டெர்னின் எழுத்து போன்றவை என்னைப் பாதித்தவை. ஒரு தீவில் தனியாக இருக்க நேரிட்டால் என்னுடன் எடுத்துச்செல்ல நான் தேர்வு செய்வது ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் இருபது பகுதிகளையும்.
உங்களுடன் சேர்ந்தவர்களாக நீங்கள் உணரும் திரைப்படப் படைப்பாளிகள் பற்றி . . .
கிரிஃபித், மொர்னவ், புதோவ்கின், புனுவல், குரொசாவா ஆகியோரைச் சொல்லலாம். ஒவ்வொருவரும் அவரவரருக்கான மேதமைகளைக் கொண்டவர்கள். எனக்கு நெருக்கமான சினிமாக்கள் உண்டு. தவியானி சகோதரர்களின் Padre Padrone, ட்ரெயரின் La Passion de Jeanne D’Arc போன்றவை. இவை தவிர குங் ஃபூ, ஃபிரெட் அஸ்டையர்(Fred Astaire) படங்கள், Mad Max படங்கள். ஃபிரெட் அஸ்டையரரை மிகவும் பிடிக்கும். அது போல பஸ்ட்டர் கீட்டனையும்.
உங்கள் படங்கள் கலைப்படங்கள் (Art Films) பிரிவைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுவதை நீங்கள் ஏற்றுகொள்வதில்லை அல்லவா?
கலைஞன் என்று அழைக்கப்படும் வழக்கத்தை நான் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி எதுவும் இல்லை. அது வழக்கொழிந்துபோன ஒன்று. திரைப்படம் மனக்கிளர்ச்சியின் வெளிப்பாடு. அது கிராமப்புற சந்தைகளிலிருந்தும், சர்க்கஸ்களிலிருந்தும் வருவது. கலையிலிருந்தோ, கல்விக் கூடங்களிலிருந்தோ வெளிப்படுவது அல்ல.
என்னுடைய படைப்புகள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று என்னை நான் அடிக்கடி கேட்டுக்கொள்வது உண்டு. மைக்கெலேஞ்செலோவின் காலத்திற்கு முன்பாக சிற்பவேலை செய்தவர் எல்லாம் தங்களைக் கல்வேலை செய்பவர்களாகச் சொல்லிக்கொண்டவர்கள்தான். பதினைந்தாம் நூற்றாண்டுவரை இன்று கலைஞர் எனப்படுபவர்கள் அவ்வாறு அழைக்கப்படாது தொழில்வினைஞராகவே அறியப்பட்டார்கள். வரலாற்றின் மத்தியகாலப்பகுதியைச் சேர்ந்த பல ஓவியர்கள் அனாமதேயமாகச் செயல்பட்டவர்கள். இன்று இது சாத்தியமல்ல. திரைப்படத்தின் இயக்குநர், ஸ்கிரிப்ட் எழுதியவர் என அனைத்து படைப்பளிகளும் அறியப்படும் நேரம் இது.
உங்களின் அடுத்த குறும்படம் அமெரிக்காவில் நடைபெறும் கால்நடை ஏலம் பற்றியது. ஏலமிடுபவர்களின் உலக சாம்பியன் போட்டியைப் படமெடுத்தது பற்றி. . . .
அமெரிக்கக் கால்நடை ஏலங்களில், ஏலமிடுபவர்கள் மொழியைப் பயன்படுத்தும் முறை அபாரமானது. முதலாளித்துவத்தின் கவிதைமொழி அது. தேவாலயங்களில் பண்ணிசைத்துப் பாடப்படும் பாடல்களின் தன்மையுடன் தங்குதடையற்ற மொழிப்பிரவாகமாக வெளிப்படுவது. மொழியைப் பயன்படுத்தும் லாகவமும், சொற்களின் லயமும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதவை. தீவிர சடங்குகளில் பயன்படுத்தப்படும் மந்திர உச்சாடனங்கள் போன்று இசையுடன் வெளிப்படுபவை. .
ஏலமிடுபவர்கள் சிலருடன் எனக்கு இருந்த தொடர்பு காரணமாக இந்தப் போட்டியைப் படமாக்க முடிவுசெய்தேன். ஏலம் நடக்கும் இரண்டு மூன்று மணி நேரங்களில் இரண்டரை மில்லியன் டாலர்கள் பணப்பரிமாற்றம் நிகழ்கிறது. ஹாம்லெட் கதையைப் பதினைந்து நிமிடங்களில் படமாக்குவது போல இந்த நிகழ்வை ஒரு குறும்படமாக எடுப்பது எனது கனவாக இருந்தது.
Stroszek அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. சிலர் சொல்வது போல் இப்படத்தை அமெரிக்க முதலாளித்துவத்தின் மீதான விமர்சனம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
|
நான் Stroszek படத்தை உருவாக்கியதற்கான காரணம் வேறு. Woyzeck படத்தில் புரூனோ நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஜெர்மனியின் பிரசித்திபெற்ற Woyzeck நாடகம் பற்றி எதுவும் தெரியாது. அதன் கதையையும் அந்தப் பாத்திரத்தையும் பற்றி அவரிடம் சொல்லியிருந்தேன். திடீரென அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகர் கின்ஸ்கி என்பதை உணர்ந்தேன். அதைத் தொலைபேசியில் புரூனோவிற்குத் தெரிவித்தேன். அவரோ Woyzeck படப்பிடிப்பிற்காகத் தயாராக இருந்தார். நான் சொன்னது அவருக்கு அதிர்ச்சி அளித்ததை பேச்சினூடே உணர முடிந்தது. உடனே மற்றொரு படம் எடுக்கப்போகிறேன், அதில் அவர் தான் கதாநாயகன் என்று சொல்லிவிட்டேன். புரூனோவிற்காக நான் எழுதிய கதைதான் Stroszek . பெயர் கூட Woyzeck போன்று ஒலிப்பதாக இருக்கும். ஸ்ட்ரோஜெக், காஸ்பர் ஹவுசரை விட புரூனோவுக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம். புருனோவின் குணாதிசயங்களை முழுவதுமாகப் பிரதிபலிக்கும் பாத்திரம். ஸ்கிரிப்ட்டைப் பின்பற்றாது சில காட்சிகளை இயற்கையாகப் படமாக்கினோம். படத்தில் வரும் சம்பவங்கள் பல புருனோவின் வாழ்வில் நிகழ்ந்தவை. அவர் வழக்கமாகப் பெர்லினில் அக்கார்டியனை வாசித்த இடங்களில் அக்கார்டியன் வாசிப்பது படமாக்கப்பட்டது. அவருடைய சொந்த இசைக்கருவிகளைப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவில் பிட்ஸ்பர்கில் நான் வாழ்ந்த அனுபவங்களையும் இப்படம் பிரதிபலிக்கிறது. அமெரிக்க முதலாளித்துவத்தை மனதில் கொண்டு இப்படத்தை உருவாக்கவில்லை.
|
அமெரிக்கா பற்றி புருனோ என்ன நினைத்தார்?
அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. நியூயார்க் நகரம் அவருக்குப் பிரமிப்பூட்டியது. அங்கு படமாக்கவேண்டியவற்றை ஒரே நாளில் எடுத்து முடித்தோம். அனுமதி கிடைக்காத காரணத்தால் முழுநேரமும் போலீஸுக்குத் தெரியாமல் படமெடுக்க வேண்டியதிருந்தது. நானும் தாமஸ் மாக்கும் காரின் மேல்பாகத்தில் எங்கள் உடல்களைக் கட்டிக்கொண்டு காரில் செல்லும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். போலீஸ் காரை நிறுத்தியது. எனக்குக் கைவிலங்கிட்டார்கள். இரண்டாவது முறை போலீஸால் நிறுத்தப்பட்டபோது நாங்கள் ‘க்ராட்’ திட்ரைப்படப்பள்ளி மாணவர்கள் என்று சொல்லித் தப்பித்துவிட்டோம்.
படத்தில் எர்ரல் மோரிஸுக்கு ஏன் நன்றி கூறப்படுகிறது?
எர்ரல் மோரிஸ் பெருங்கொலைகாரர்களைப் பற்றி ஆய்வு செய்து ஏராளமான தகவல்களைத் திரட்டியிருந்தார். அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டிருந்தார். அவருடன் அந்நேரம் நான் நெருக்கமான தொடர்பில் இருந்தேன். விஸ்கான்சினில் அவர் ஆய்வுசெய்த ப்ளெயின்ஃபீல்ட் என்ற ஊர் ஐந்தாறு பெருங்கொலைகாரர்களுக்குப் பெயர்பெற்ற ஊர். அதற்கென அடிப்படையான காரணங்கள் ஏதுவும் கிடையாது. நாங்கள் அந்தப்பகுதியில் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது பத்து கிலோமீட்டர்கள் சுற்றுவட்டாரத்திற்குள் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த இடத்தை எர்ரல் முழுவதுமாக ஆவணப்படுத்தியிருந்த நேரம் எனது படத்தை அங்கு எடுத்து அந்த ஊரையும் நிலப்பரப்புகளையும் படமாக்கி நான் வெளிப்படுத்தியது அவருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் அவருக்குப் படத்தின் தொடக்கத்தில் நன்றி கூறியிருக்கிறேன் எப்படியாவது அவர் என்னை மன்னித்து சமாதானமடைந்திருந்தால் நல்லது.
கரீபியன் தீவு ஒன்று எரிமலை வெடிப்பதால் முற்றிலுமாக அழிந்துபோகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில் அங்கு சென்று எடுத்த La Soufriere படத்தில் நீங்களும் ஒளிப்பதிவாளர் ஷ்மிட் ரெய்ட்வெனும் அமிலவாயு கலந்த புகைமண்டலத்திலிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தப்படம் விசித்திரமான அபத்த சித்திரமாக உருவாக்கப்படிருக்கும் படைப்பு ….
ஓரளவுக்கு சுயஎள்ளலின் வெளிப்பாட்டைக் கொண்ட படம். மிகவும் ஆபத்தானதாகவும், அழிவிற்குரியதாகவும் இருந்தது ஒன்றுமில்லாததாக முடிந்துவிடுகிறது. அப்படி முடிந்ததற்கு கடவுளுக்கு நான் நன்றி சொல்லவேண்டும். எரிமலை வெடிப்பதால் படமெடுக்கும் எங்களின் உடல்கள் சிதறி உயிரை இழப்பது என்பது முட்டாளத்தனமான ஒன்று. La Soufriere எரிமலை இருக்கும் தீவு அழியப்போவதால் அங்கு குடியிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டது பற்றியும் ஒரு விவசாயி மட்டும் அங்கிருந்து போக மறுத்துவிட்டது பற்றியும் கேள்விப்பட்டேன். அவரைச் சந்தித்துப் பேச முடிவு செய்து அங்கு சென்றோம். எரிமலை இருக்குமிடத்தை அணுக முடியாதபடி போகும் வழியில் பல இடங்களில் சாலை தடுக்கப்பட்டிருந்தது. ஒரு காமரா இருந்தால் போதும் என்று சொல்லியிருந்தேன். ஒளிப்பதிவாளர் ஷ்மிட் ரெய்ட்வென் உடன் வந்தார். மற்றொரு உதவியாளர் லாஷ்மன் முதலில் தயங்கி பின்னர் உடன் வந்தார்.
படத்துடன் அங்கிருந்து எப்படியாவது திரும்பிவிடவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோளாக இருந்தது. தற்கொலை செய்துகொளவது போல் உயிரைப் பயணம்வைக்கும் அனுபவங்களை நான் விருமபுவதில்லை. நான் கண்மூடித்தனமாக ஆபத்தான முயற்சிகளை ஒருபோதும் மேற்கொள்பவன் அல்ல. இம்மாதிரியன அனுபவங்களை இதுவரை ஓரிரு முறைகள் மட்டுமே எதிர்கொண்டிருக்கிறேன்.
ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டு போன்று பலமடங்குகள் சக்தியுடன் அந்த எரிமலை வெடிக்கப்போவதாகச் சொல்லியிருந்தார்கள் ஏறக்குறைய அந்த எரிமலையின் விளிம்புவரை சென்றுவிட்டோம். திடீரென காற்று நாங்கள் நின்றிருந்த பக்கம் வீசத்தொடங்க அமிலத்தன்மை மிக்க வாயுவினால் சூழப்பட்டோம். தப்பித்து ஓடிவந்துவிட்டோம். அந்தக் குழப்பத்தில் லாஷ்மன் கண்னாடியை விட்டுவிட்டு வந்துவிட்டார். அவரால் பார்க்க முடியவில்லை. அதை எடுத்துவர மீண்டும் அங்கு செல்லமுயன்றோம். அதற்குள் நிலமை மோசமாகிவிட்டது. எப்படியும் இந்த ஆபத்துகளிலிருந்து தப்பித்துவிடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு அப்போது இருந்தது. நல்லவேளையாக எரிமலைக் குழம்பால் முழுவதுமாக மூடப்பட்டு அழிந்துவிடாமல் தப்பித்துவிட்டோம்.
உங்களின் Nosferatuவை மொர்னவின் படத்தின் மறுஆக்கமாகக் கணிப்பீர்களா அல்லது அதைவிட வித்தியாசமானதாக எண்ணுகிறீர்களா? அதை ஒரு செவ்வியல் பகுப்புக்குரிய படைப்பாகக் கருதுகிறீர்களா?
என்னுடைய Nosferatu படத்தை மறுஆக்கமாக அன்றி அதன் பலத்தில் நிற்கும் ஒரு தனிப்படைப்பாகக் கருதுகிறேன். ஜோன் ஆஃப் ஆர்க் பற்றி ட்ரெயரும், பிரெஸ்ஸானும் எடுத்த படங்கள் போன்று எடுத்துக்கொள்ளலாம். இரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. என்னுடைய Nosferatu ஒருவகையில் வித்தியாசமான கதை. ஜெர்மன் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புடன் தொடர்புடையது என்பதை வெளிப்படுத்தும் படம். இதைப் பகுப்பு(Genre) வகைக்குள் இயங்கும் படமாக நான் பார்க்கவில்லை, ரத்தக்காட்டேரி (Vamapire) பகுப்பை மேலும் விரிவாக்கும் முயற்சியை இப்படைப்பில் மேற்கொண்டிருக்கிறேன்.
ரத்தக்காட்டேரி பகுப்புவகை சினிமா வழக்கத்திற்கு அப்பாற்பட்ட வித்தியாசமான அனுபவங்களை அளிப்பது. கற்பனாவதம், மயக்கநிலை, கனவுகள், கொடுங்கனவுகள், பயம், மாயக்காட்சிகள், தொன்மரபியல் என அனைத்தையும் உள்ளடக்கிய வளமை வாய்ந்த பகுப்பு. உண்மையான ஜெர்மன் பாரம்பரிய கலாச்சாரத்துடன், ஜெர்மன் மௌனப்பட யுகத்துடன், மொர்னவின் படைபுகளுடன் Nosferatuவை இணைப்பது என்பது என்னுடைய முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்த வகையில் லாட்டெ ஐஸ்னெர் (Lotte H. Eisner) உங்களுக்கு மிக முக்கியமான நண்பர் அல்லவா?
லாட்டெ ஐஸ்னெர் (முக்கியமான ஜெர்மன் திரைப்பட அறிஞர்/விமர்சகர்/ வரலாற்றாளர்) எனக்கு மிகவும் முக்கியமானவர். போருக்குப்பின் ஜெர்மனியில் எங்களுக்காகப் பாட்டனார்கள்தான் இருந்தார்கள். ஏறக்குறைய அனைவரின் தந்தையரும் போரில் இறந்திருந்தனர். என்னுடைய தந்தை உயிருடன் இருந்தாலும் எங்களுடன் வாழவில்லை. ஃபாஸ்பைண்டரின் தந்தை அவர் சிறுவராக இருக்கும்போதே குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். 1960களில் வயதுக்குவந்த திரைப்படப் படைப்பாளிகள் அனைவரும் போருக்குப்பின் வந்த முதல் சந்ததியினர். அனாதைகளான எங்களுக்குக் கற்பிக்கும் ஆசான்களோ காலடித்தடத்தைப் பின்பற்றி நடக்க வழிநடத்தும் வழிகாட்டிகளோ இல்லை. கட்டாயம் பின்பற்றவேண்டிய சடங்குகளும், பழக்கவழக்கங்களும் இல்லை. மேற்கு ஜெர்மன் சினிமா அப்போதுதான் புதிதாக மலர்ந்தது போன்ற உற்சாகமான நிலையிலிருந்தது. பல வித்தியாசமான பாணிகள், வகைகளில் படைப்புகள் தோன்றத் தொடங்கின. ஹிட்லர் பதவிக்கு வந்த 30 ஜனுவரி 1930 இல் லாட்டெ ஐஸ்னர் ஜெர்மனியை விட்டு வெளியேறினார். ஃப்ரிட்ஸ் லாங்(Fritz Lang) அடுத்து வெளியேறினார். அதன் பிறகு முப்பது வருட இடைவெளியைத் தாண்டி அறுபதுகளில் இந்தப் புதியயுகம் தொடங்கியது. எங்களைப் பொறுத்தவரை எங்கள் பட்டனார்களான லாங், மொர்னவ், பாப்ஸ்ட் போன்றவர்கள் எங்களுக்கான படைப்புக்குறிப்புகளானார்கள். ஒரு திரைப்படப் படைப்பாளியாக என்னுடைய வேர்களை எனது நாட்டின் கலாச்சாரத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்வது எனக்கு முக்கியம். அதற்கு Nosferatu எனக்கு மிக முக்கியமானதாகப்பட்டது. படத்தை முடித்தவுடன் ஆற்றைக் கடந்து அடுத்த கரையை அடைந்துவிட்டதைப் போன்று உணர்ந்தேன்.
|
புதிய ஜெர்மன் சினிமாவைப் பொறுத்தவரை எங்களுக்கு ஆசி வழங்க லாட்டே ஐஸ்னர் இருந்தார். அவர்தான் எங்களின் மொத்த உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்; எங்களின் வேர்களுக்கான தொடர்பு; நாஸிசத்தின் அகதி; பழங்கால உயிர்வாசியைப் போல் ஜெர்மன் சினிமாவின் தொடக்கத்திலிருந்து அனைவரையும் அறிந்த ஒரே ஜீவன். அவர் உலகின் மிக முக்கியமான திரைப்பட வரலாற்றாளர். ஐசென்ஸ்டைனிலிருந்து கிரிஃபித், சாப்ளின், ஸ்டெர்ன்பெர்க், மொர்னவ், ரென்வார், ஏன் மெலியஸையும் லூமியெர் சகோதரர்களையும் கூட நேரடியாக அறிந்தவர். முறையான ஜெர்மன் படைப்பாளிகள் என்று எங்களை அறிவிக்க அவர் ஒருவருக்குத்தான் அதற்கான நுண்ணோக்கும், உரிமையும் இருந்தது.
என்னுடைய Signs of Life படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது என்று அறிந்தேன். அவரை 1969இல் முதலில் சந்தித்தேன். Kasper Hauser படப்பிடிப்பின்போது சிறிது நேரம் என்னுடன் இருந்தார். அனக்கு அது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இன்று ஜெர்மன் திரைப்படங்கள் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை என்று லாட்டெயிடம் ஃபிரிட்ஜ் லாங் சொல்லியபோது அவரை Signs of Life பார்க்கச் சொல்லியிருக்கிறார். அவருடைய அங்கீகரிப்பும், என் மீதான நம்பிக்கையும் பத்து வருடங்களாக என் படைப்புகள் மீது வைக்கப்பட்ட மிகக் கடுமையான விமர்சனங்களைக் கடந்து படைப்புகளைத் தொடர்ந்து நான் உருவாக்கக் காரணமாக அமைந்தன. பாரிசில் அவரைச் சந்தித்தபோது அதற்கு மேல் என்னால் திரைப்படங்களை எடுக்க முடியாது என்று சொன்னதற்குப் படமெடுப்பதை நான் நிறுத்த முடியாது, அதற்குத் திரைப்பட வரலாறு இடமளிக்காது என்று வெகு சாதாரணமாகச் சொல்லிவிட்டார். என் வாழ்வின் மிக முக்கியமான தருணம் அது.
Nosferatu திரைப்படத்திற்கு அடிப்படையாகப் ப்ராம் ஸ்டோகரின் நாவலை எடுத்துக்கொண்டீர்களா அல்லது மொர்னவின் படத்தைப் பின்பற்றிக் கதையை அமைத்தீர்களா?
மொர்னவின் படைப்பிற்கு உரிய மரியாதையைச் செலுத்தவேண்டும் என நினத்திருந்தேன். அதனால் அந்தப் படம் உருவாக்கப்பட்ட இடங்களைப் பயன்படுத்த முயன்றேன். மற்றபடி நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். மொர்னவின் படத்தில் ரத்தக்காட்டேரி ஆன்மா அற்ற திகிலூட்டும் ஜந்துவாகப் படைக்கப்பட்டிருக்கும். ஆனால் கி்ன்ஸ்கியின் ரத்தக்காட்டேரியிடமிருந்து இருத்தலின் வேதனை வெளிப்படுகிறது. இறவா வாழ்வை விரும்பும், அன்புக்கு ஏங்கும், மனிதத்தன்மையுடையதாக அப்பாத்திரத்தைச் சித்தரிக்க முயன்றிருக்கிறேன். ஸ்டோகரின் நாவல் அவர் காலத்தில் நிலவிய பல ரத்தக்காட்டேரி கதைகளின் தொகுப்பு. அப்போதைய நவீன முன்னேற்றங்களான தந்தி அனுப்பும் முறை போன்றவற்றைக் கதை சொல்லலில் பயன்படுத்தியிருக்கிறார். இன்று ஃபாக்ஸ், தொலைபேசி, மின்னஞ்சல் என்று அதிவேகமாகச் செய்திகளைப் பகிரந்துகொள்ளும் முறைகள் உருவாகியுள்ளன. ஆனால் எந்த அளவுக்கு இவை அதிகரிக்கின்றனவோ அந்த அளவு மனிதன் தனிமையை அதிகமாக அனுபவிக்க வேண்டி வரும் என்பது எனது கருத்து.
|
இந்தப்படத்திற்காக ஆயிரக்கணக்கான எலிகளை ஊரினுள் விட்டது தொடர்பாகப் பத்திரிகைகளில் அதிகமாக எழுதப்பட்டது பற்றி…
கால்வாய்கள், படகுகள் எனப் படத்தில் வரும் விஸ்மார் நகரை அப்படியே பிரதிபலிப்பது நெதர்லாந்திலுள்ள டெல்ஃப்ட் (Delft) நகரம். டெல்ஃப்ட் நகர நிர்வாகிகள் குழுவிற்கு நாங்கள் எவ்வாறு அங்கு படமெடுக்கப் போகிறோம் என்பதை விளக்கிக் கூறி அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்ட பிறகே படமெடுக்கத் தொடங்கினோம். ஏற்கெனவே அந்நகரம் முழுவதும் மிகுந்து இருந்த எலித்தொல்லை அப்போதுதான் சரிசெய்யப்பட்டிருந்தது. அதனால் அந்நகர மக்கள் இதைப் பற்றி ஓரளவு கவலையுடன் இருந்தனர் ஒரு எலி கூடத் தப்பித்துச் சென்றுவிடாதபடி ஏற்பாடுகள் செய்திருந்தோம்..
எலிகளை ஹங்கேரியிலுள்ள ஒரு பரிசோதனைச்சாலையிலிருந்து விலைக்கு வாங்கினோம். வெள்ளை நிறத்திலிருந்த அந்த எலிகளுக்குக் கறுப்பு வண்ணம் பூசவேண்டியதிருந்தது. எலிகள் தப்பித்துத் தண்ணீருக்குள் செல்ல முடியாதபடி கால்வாயின் கரைகளில் வலைகள் பொருத்தப்பட்டன. அப்படித் தப்பித்துவிடும் எலிகளைப் பிடிக்கப் படகுகளில் ஆட்கள் அமர்த்தப்பட்டனர். நகர்த்தக்கூடியவகையில் மரத்தினால் செய்த சுவர்கள் கொண்டு தெருவின் இரு பக்கங்களையும் அடைத்துவிட்டோம். ஒரு எலி கூடத் தபிக்கவில்லை.
இந்தமுறை கின்ஸ்கி எப்படி நடந்துகொண்டார்?
மிக அமைதியாக இருந்தார். ஜப்பானிய இசையைக் கேட்டுக்கொண்டிருப்பார். அவருக்கு ஒப்பனை செய்தது ஒரு ஜப்பானிய ஒப்பனையாளர். ஒப்பனைக்கு அதிக நேரமானாலும் பொறுமையுடன் ஒத்துழைத்தார். இரண்டு மணி நேரங்கள் ஓடும் அந்தப்படத்தில் அவர் தோன்றுவது பதினேழு நிமிடங்கள் போலத்தான். ஆனால படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் ரத்தக்காட்டேரியின் பாதிப்பு நிறைந்திருப்பதை உணரலாம். நொஸ்பராத்துவாக இவரை விடச் சிறப்பாக நடிப்பவரைக் கண்டுபிடிக்க இன்னும் ஐம்பது வருட அவகாசமும் ஒரு மில்லியன் டாலர்களும் தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அது எவராலும் முடியது.
டிரகுலா கோட்டை படப்பிடிப்பு எங்கு நடந்தது? Nosferatu படம் எடுத்து முடித்தகையோடு அதே குழுவையும் கின்ஸ்கியையும் வைத்து Woyzeck படத்தை எடுத்து முடித்தீர்கள். அது பற்றி ….
Nosferatu கதை நிகழ்ந்த ரொமேனியாவின் டிரான்ஸில்வெனியா பகுதியில் படமாக்க உத்தேசித்திருந்தேன். அனுமதி கிடைக்காததால் செக்கோஸ்லாவியாவில் படமக்கினோம். Nosferatu படத்தை முடித்து இரண்டு நாட்களில் Woyzeck படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் கின்ஸ்கியின் தலையில் முடி வளர்வதற்கு அவகாசம் கொடுக்கவேண்டியதிருந்தது. Woyzeckகை பதினேழு நாட்களில் எடுத்து முடித்தோம். ஐந்தே நாட்களில் எடிட்டிங்கை முடித்தோம். முதல் பகுதியை செக்கோஸ்லாவியாவிலும் இரண்டாவது பகுதியை மொரேவியா, ஸ்லொவாகியா பகுதிகளிலும் படமாக்கினோம். அதற்கான முழு ஒத்துழைப்பையும் கின்ஸ்கி அளித்தார். மிகச்சிறப்பாக அப்படத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஜெர்மனியின் கலையம்சங்களைப் பிரதிபலிக்கும் Woyzeck நாடகத்தை திரைப்படமாக்க முன்பே முடிவு செய்திருந்தேன். இம்மாதிரியாக என்னுடைய வேர்களுடன் எனது படைப்பாக்கத்தை இணைத்துக்கொள்வது எனக்கு மிகவும் முக்கியமாகப்படுகிறது. வரிசையாக நான்கு நிமிடங்கள் நீண்டு செல்லும் காட்சிகளாக அமைத்திருப்பேன். மொத்தம் இருபத்திஐந்து பகுதிகளும்(cuts), அவற்றுடன் சில சிறு பகுதிகளும் இணைந்து உருவான படம். நீண்ட ஒரே ஷாட்டில் ஒரு முழு நிகழ்வையும் காட்டிவிடும் திறமை கொண்ட படைப்பாளிகளை எனக்கு மிகவும் பிடிக்கும். மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஒரே ஷாட்டில் ஒன்றை நீங்கள் திரையில் காட்டுவதற்கு அக்காட்சி பார்வையாளரை அப்படியே இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்குத் திறம்படப் படமாக்கப்பட்டிருக்கவேண்டும்.
- தொடரும் -
பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்கு தனது வாழ்க்கை, படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக் மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘Herzog on Herzog’ நூலின் முக்கிய பகுதிகள் தமிழில் தொடராக அளிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |