இதழ்: 19     ஆடி (15 - 30) (August 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
 
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 6 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்
--------------------------------
திரைமொழி 13 - ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 6 - தினேஷ் குமார்
--------------------------------
சினிமாவும் இலக்கியமும் - சு. தியடோர் பாஸ்கரன் - ஒலிப்பதிவு & தட்டச்சு: யுகேந்தர்
--------------------------------
அகிரா - வருணன்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 3 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 5 - பி.கே.நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 5 - ஃபெட்ரிக்கோ ஃபெலினி
--------------------------------
தமிழ்ஸ்டுடியோ குறுந்திரையரங்கம் - தினேஷ் குமார்
--------------------------------
   
   

 

 

இந்திய சினிமா வரலாறு – 5

- பி.கே.நாயர் :: தமிழில் : அறந்தை மணியன் : தட்டச்சு உதவி: தினேஷ் குமார்


இந்திய சினிமா – ஓர் உற்று நோக்கல்
புராணப்படங்கள் ஏன்? – பி.கே.நாயர்


”தீமையின் மீது நன்மை பல்கிப்பெருகுகிறது”

அடுத்த காட்சியில் கம்சனின் படுக்கையறை.... இன்றைய ‘முப்பரிமாண’ தந்திரக் காட்சி போன்ற தோற்றம் அன்றே இக்காட்சியில் தூண்களும், சுவர்களும், அமைக்கப்பட்டிருக்கும் முறையிலேயே உருவாக்க முயற்சிக்கப்பட்டிருக்கிறது. திரையின் மத்தியில் உள ஒரு தூணில் கம்சனைப் பயமுறுத்தக் கூடிய ஒரு தோற்றத்தைக் காணுகிறான். அதைத் தவிர்க்க வேண்டி, கம்சன் தனது கண்களை மூடிக்கொள்ள முயலுகிறான். அதற்குள்ளாகவே அந்தத் தோற்றம் உள்ள தூண் மறைந்து, குழந்தைக் கிருஷ்ணன் உருவம் கொண்ட பொம்மை ஒன்று தரையில் கிடக்கிறது. அந்த ‘கிருஷ்ணன் – பொம்மை’ கம்சனுக்கு அதிர்ச்சி – அலைகளை அனுப்புகிறது.

கம்சன் மறுபடியும் தனது முகத்தை மூடிக்கொள்ள முயற்சிக்கிறான். விழித்துப் பார்க்கும் போது பொம்மை மறைந்து அந்த இடத்தில் உயிருள்ள கிருஷ்ணன், தலைமீது மயிற்பீலி சொருகியிருக்க, கையில் குழலுடன் நின்று கொண்டிருக்கிறான். கிருஷ்ணன் குழலைக்கம்சனை நோக்கி நீட்டி அசைக்க, கம்சன் அடித்துப்புரண்டு தனது படுக்கையில் வீழ்கிறான். அப்போது கிருஷ்ணனின் உருவம் பெரிதாகி, அவன் கையிலிருந்த குழல் மறைந்து, அங்கு ஒரு நீண்டவாள் தோன்றி கம்சனை மேலும் பயமுறுத்துகிறது.

கிருஷ்ணனின் உருவம் மேலும் பெரிதாக, அவன் கைவாள் மறைந்து அதற்குப் பதிலாக, சுதர்சனச் சக்கரம் தோன்றுகிறது. தன்னை விட்டு விடும்படியும், இரக்கம் காட்டும் படியும் கம்சன் கெஞ்சியபடியே படுக்கையில் சரிந்து விழுகிறான்.

கம்சன் தூங்கிக் கொண்டிருக்கிறான்...... முன்பு திரையின் நடுப்பகுதியிலிருந்து மறைந்த தூண் மீண்டும் மெள்ளத் தோன்றுகிறது.

அவன் தூங்கி எழுந்து நிற்பதைக் காமிரா அவனின் முன்புறத் தோற்றமாகக் காட்டுகிறது.

காட்சி ஜோடனையில் சிறு மாறுதல்களைச் செய்து, ‘முப்பரிமாண’த் தோற்றம் கெடாமலேயே , பால்கே, கம்சனுக்கு உடனடியாக ஏற்படக்கூடிய பயங்கர அனுபவத்தைக் காட்ட , ஏற்பாடு செய்கிறார்.

இம்முறை, குழலூதும் கண்ணனின் மாயத்தோற்றம், கம்சனுக்குப் பின்புறமாக மெள்ள உருவெடுக்கிறது. சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருக்கும் மற்றொரு கிருஷ்ணனின் தோற்றம் இன்னொரு பக்கத்தில் ..... எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல் கம்சன் திகைக்கிறான்.

கம்சன் தனது கைகளால் கண்களை மறைத்துக் கொள்ள முயற்சிக்கையில், மூன்றாவது கிருஷ்ணன், கையில் வாளுடன் மற்றொரு மூலையில் தோன்றுகிறான்.

திகைப்படையும் கம்சன் தனது விரலை மூன்றாவது கிருஷ்ணனை நோக்கி நீட்டுகிறான். மற்றொரு மூலையிலிருந்து நான்காவது கிருஷ்ணன் ஒரு நீண்ட கழியுடனும், ஐந்தாவது கிருஷ்ணன் கையில் குறுவாளுடன், ஆறாவது கிருஷ்ணன் கையில் கதாயுதத்துடனும், ஏழாவது கிருஷ்ணன் கையில் வில்லம்புடனும் திரைமுழுவதும் தோன்றுகிறார்கள்.

(திரையின் மத்தியில், கையில் வாளுடன் நிற்கும் கம்சனைச் சூழ்ந்து கொண்டு பல கிருஷ்ணன்கள், பல்வேறு போர்க்கருவிகளுடன் நிற்பதை, ஒரே நேரத்தில் காட்டும் முறையை அந்தக் காலகட்டத்திலேயே பிரமாதமாகக் காட்டியிருக்கிறார் பால்கே!)

ஏழு கிருஷ்ணன்களை எதிர்த்துப் போரிட முடியாத கம்சன் களைப்புற்று வீழ்கிறான். கிருஷ்ணனின் பல மாயத் தோற்றங்களும் மெள்ள மறைகின்றன.

பின்னாளில் கொடுங்கோலரசனுக்கு, நிகழ இருக்கிற வீழ்ச்சியை முன்கூட்டியே ஒரு எச்சரிக்கை அறிவிப்பாக, படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே நம்பும் படியாகக் காட்டிவிடுகிறார் பால்கே!

சொல்லப்போனால், இம்மாதிரி முன்கூட்டியே காட்டி விடுவதால், பார்வையாளர்களுக்கு பிற்காட்சிகளில் ஏற்பட்டிருக்க கூடிய திருப்பத்தை, திகைப்பை, தடுத்து விடுகிறோமே என்று பால்கே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது படைப்பாளி – என்ற வகையில் அவரது நேர்மையை உயர்வாக வெளிப்படுத்துகிறது.

கிடைக்காமல் அழிந்து போன காட்சிகள் – பின்னுரை

துரதிருஷ்டவசமாக, திரைப்படத்தின் முக்கியமான இடைப்பட்ட காட்சிகள் காணக்கிடைக்கவில்லை. அத்துடன் பால்கே அந்தக் காட்சிகளை எவ்வாறு எடுத்திருந்தார் என்று நாம் தெரிந்துகொள்ள ஏதுவாக எந்தவொரு சரியான ஆவணமும் கிடைக்கவில்லை. ஆகவே, அந்தக் காட்சிகளை விரிவாக ஆய்வு செய்ய வழியில்லை. இறுதிகட்ட காட்சிகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவை அனேகமாக ஒரு “பின்னுரை” அல்லது ”முடிவுரை”போலத் தான் அமைந்துள்ளன. அந்தப்பகுதி, நன்கு கற்பனை செய்யப்பட்ட “தேசிய ஒருமைப்பாடு” பற்றிய துண்டுப்படம் போல, தனித்து நிற்பதாகவும் அமைந்துள்ளது.

இறைவனிடம் அடைக்கலம் தேடுதல்

இந்தப் பகுதியில், எல்லா ஜாதி மக்களும், இறைவனிடம் அடிபணிந்து , அவனிடம் எல்லா மதங்களும் இணைவதை அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

முதல் தலைப்பு : ‘பிராமண பக்தன்’

ஒரு கையில் சக்கரமும் மறுகையில் கதாயுதமும் வைத்திருக்கும் விஷ்ணு ஒரு பீடத்தின் மீது நிற்க, ஒரு பிராமண பக்தர் அவரிடம் வருகிறார். அந்தத் தாடிவைத்த பிராமணர், தமது மனைவியையும், மகனையும் அழைத்து வந்திருக்கிறார். தாம் எழுதிய நூல்களை விஷ்ணுவின் காலடியில் வைத்து வணங்கி விட்டு அந்த நூல்களைத் திரும்ப எடுத்துக் கொள்கிறார். திரையின் ஒரு ஓரத்திற்குச் செல்கிறார். அங்கிருந்தவாறே விஷ்ணுவை தலை தாழ்த்தி வணங்கிவிட்டு வலது பக்கமாக வெளியேறுகிறார்.

இரண்டாவது தலைப்பு: சத்திரிய பக்தர்

விஷ்ணு முந்தைய காட்சி போலவே பீடத்தின் மீது நின்று கொண்டிருக்கிறார்; ஆனால் பார்வை இடப் பக்கம் பார்த்திருக்கிறது. பக்தர் திரையின் வலது பக்கமாக திரையில் நுழைகிறார். (முந்தைய காட்சியில் பிராமண பக்தர் இடது பக்கமாக நுழைந்திருந்தார்). சத்திரிய பக்தர் நன்கு உடையணிந்திருக்கிறார். கூடவே மனைவி, மகன், மகள் ஆகியோரையும் கூட்டி வைத்திருக்கிறார். பக்தர் தமது ஒரு கையில் ஒரு கழியை பிடித்திருக்கிறார். மறுகையால் மகனைப் பிடித்திருக்கிறார். அவனது கையில் கொஞ்சம் துணி காணப்படுகிறது. மனைவி, மகளின் கையைப் பிடித்திருக்கிறார். அவனது கையில் கொஞ்சம் துணி காணப்படுகிறது. மனைவி, மகளின் கையைப் பிடித்திருக்கிறார். எல்லோருமே நன்கு உடையணிந்திருக்கிறார்கள். பக்தர் திரும்பி நடக்கிறார். மனைவி விஷ்ணுவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு, எல்லோருமாக, திரையின் இடது பக்கமாக வெளியேறுகிறார்கள். (நுழைந்தது வலது புறமாக)

மூன்றாவது தலைப்பு: “வைஸ்ய பக்தர்”

இந்தத் தலைப்பு – அட்டை மட்டும் இந்தியில் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் இல்லை. வைசிய பக்தர், திரையின் இடது பக்கமாக விஷ்ணுவை பார்த்தவாறே நுழைகிறார். நுழைந்தவர் திரும்பி முதலில் காமிராவை (பார்வையாளர்களை)ப் பார்த்து புன்னகைக்கிறார். அவர் விஷ்ணுவின் பக்கம் திரும்பி குனிந்து வணங்கும் போது, அவருடைய குழந்தையும், மனைவியும் வருகிறார்கள். மனைவி அவளது முகத்தையும் தலையையும் புடவைத் தலைப்பால் மறைத்துக் கொண்டிருக்கிறாள். அவளும் குனிந்து விஷ்ணுவின் காலைத் தொட்டு வணங்குகிறாள். அவள் வணங்குவதை கணவனும், குழந்தையும் கவனிக்காமல், காமிராவை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். மனைவி எழுந்து வந்து அவர்களுடன் சேர்ந்துகொள்ளுகிறாள். பின் மூவரும் விஷ்ணுவை மீண்டும் வணங்கி விட்டு வெளியேறுகிறார்கள்.

நான்காவது தலைப்பு: சூத்திர பக்தர்

திரையின் வலது மூலை வழியாக, கையில் கலப்பையுடன் பக்தர் நுழைகிறார். சொல்லப்போனால், முதலில் கலப்பைதான் நுழைகிறது. தொடர்ந்து வெள்ளை உடையும் தலைப்பாகையும் அணிந்து சூத்திர பக்தர் வருகிறார். அவரது மகனும் அதே போன்ற உடையணிந்து கையில் ஒரு கம்புடன் உள்ளே நுழைகிறான். ; காமிராவைப் பார்த்துவிட்டு தந்தையருகே செல்கிறான். இருவரும் இறைவனை வணங்குகிறார்கள். சிறிது நேரம் கழிந்து, பக்தரின் மனைவி வருகிறாள். அவள் வெள்ளைப் புடவையும், கருப்பு ஜாக்கெட்டும் அணிந்திருக்கிறாள். அவள் கையில் ஒரு கூடை இருக்கிறது. அதில் பழங்கள் நிறைந்திருக்கின்றன. விஷ்ணுவின் முன்பு வந்து நின்று , பழங்களை அவரது காலடியில் கொட்டுகிறார். வெற்றுக் கூடையை எடுத்துக்கொண்டு கணவனுடனும், குழந்தையுடனும் வெளியேறுகிறாள். வெளியேறுகையில் , அவள் காமிராவைப் பார்ப்பதில்லை.

அடுத்ததாக சூத்திர பக்தர்கள் ஒரு குழுவாக வருகிறார்கள். அக்குழுவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் கரங்களில் மண்வெட்டி, கோடாலி, களைக்கொத்து, போன்ற தினசரிப் பணிகளுக்கான கருவிகள் காணப்படுகின்றன. திரையின் வலது புறமாக நுழையும் அக்குழுவினர் தாங்கள் கொண்டு வந்த கருவிகளையெல்லாம் விஷ்ணுவின் காலடியில் வைத்து அவரை வணங்குகிறார்கள். பின், அக்கருவிகளைத் திரும்பவும் எடுத்துக்கொண்டு, திரையின் இடது புறமாக வெளியேறுகிறார்கள்.

(இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பிராமண பக்தர், தாம் எழுதிய நூல்களை வைத்து வணங்குகிறார்; சூத்திர பக்தர்கள் பழங்களையும், பணிக்கருவிகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்குகிறார்கள்....!)

பிறகு பகவத்கீதையிலிருந்து கீழ்க்கண்ட சுலோகம் ஒன்று இந்திமொழியில் மெல்லத்திரையில் தோன்றுகிறது.

”எல்லாவிதமான தருமங்களையும் கைவிட்டு என்னிடம் அடைக்கலம் தேடுங்கள். வருத்தத்தை விடுங்கள். உங்களை நான் பாவங்களிலிருந்து விடுவிப்பேன்....”
சற்று நேரம் திரையில் நிலைத்திருந்த பின் இந்த சுலோகம் மெல்ல மறையத் தொடங்குகிறது. ஒரு கையில் சக்கரத்தையும் மற்றொரு கையில் கதாயுதத்தையும் தாங்கிக்கொண்டு நிற்கும் விஷ்ணுவின் உருவம் மீண்டும் தோன்றுகிறது. அவருக்கு முன்னால் எல்லா பக்த கோடிகளும் மீண்டும் கூடி நிற்கிறார்கள். விஷ்ணு அவர்களை வசதியாக அமரும்படி பணிக்கிறார். அந்தக் காட்சி நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கையில் துடைப்பத்துடன் அம்ர்ந்திருக்கிறார். ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அந்தத் துடைப்பம் கிட்டத்தட்ட இறைவனின் கால்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு ஆச்சாரமான இந்துக்குடும்பத்திலிருந்து வந்த பால்கே என்னும் படைப்பாளி வழங்கும் மிகத்துணிச்சலான காட்சியமைப்பு இது!

”......... பலருடைய தியானத்தினால் உருவாகும் அறிவு, புனித நூல்களை மேலும் புனிதமானவைகளாக மாற்றுகின்றது.....!”

இந்த சுலோக அட்டை மறைய, முன்னர் குறிப்பிட்ட சுலோக அட்டை மீண்டும் திரையில் தோன்றுகிறது. மீண்டும் விஷ்ணுவின் முன்பாக எல்லா பக்தகோடிகளும் அமர்ந்திருக்கும் காட்சி தோன்றுகிறது.

படத்தின் துவக்கத்தில் காட்டப்பட்ட, “சக்கரத்தின் உள் – வளையத்தில் காணப்படும் கிருஷ்ணனின்” அண்மைத்தோற்றம் மீண்டும் திரையில் வருகிறது.
கிருஷ்ணனின் முகம் பெரிதாக அண்மைத்தோற்றமாக உருவெடுக்க, அதன்மேல் மற்றொரு தலைப்பு – அட்டை படருகிறது. அதில் “ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து..” என்று இந்தியில் எழுதப்பட்டுள்ளது. (எல்லாம் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்)

-இத்துடன் படம் முடிந்துவிடுகிறது.

ஒருமைப்பாடு – பால்கே பாணி

கொடுங்கோலரசன் கம்சன் கொல்லப்படுவதுடன் பால்கே இப்படத்தை முடித்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல்., ஒரு புராணக்கதையை விவரிப்பதையும் தாண்டி மேலும் செல்கிறார் பால்கே. அவர் ஒரு ‘கதை – சொல்பவர்’ மட்டுமல்லர்; சமுதாய நெறிகளை மேலும் நெறிப்படுத்த உறுதிகொண்டவர். புராணக்கதையை சிறு முன்னுரைக்கும் , முடிவுரைக்கும் இடையே அவர் விவரிப்பதன் மூலமே இது புலனாகிறது! அத்துடன் அவர் கடவுளர்களை விண்ணகத்திலிருந்து மண்ணுக்கு அழைத்து வருகிறார். அவர்கள் முன் எல்லா சாதிகளையும், வருணங்களையும் சார்ந்த பக்தர்களை அமரவைக்கிறார்.

அந்தக் காட்சியை அவர் கற்பனை செய்து படமெடுத்த போது, சாதிகளால் பிரிக்கப்பட்ட சமுதாயத்தில் மனிதர்கள் யாவரும் சமமே என்பதை வலுயுறுத்திச் சொல்ல வேண்டிய தேவையை அவர் மனத்தில் முக்கிய இடம் பிடித்திருக்க வேண்டும்.

உண்மையான தேசியவாதியாக அவர் இருந்த காரணத்தினால், திரைப்படம் என்ற பொழுதுபோக்குச் சாதனத்தைக் கூட, நேரிய செயல்களைச் செய்யுமாறு மக்களைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தலாம் என்று எடுத்துக்காட்டியிருக்கிறார்.

பல்வேறு சாதிகளைச் சார்ந்த மக்களும் ஒன்றாக இறைவன் முன்பாக குனிந்து வணங்கி பணிவுடன் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் காட்சி சிலருக்கு வேண்டுமானால் மிகவும் எளிமையானதாக, பாமரத்தனமாகத் தெரியலாம்.

ஆனால், இட – வெளி, இயக்கம், அசைவுகள், பாத்திரங்களின் நுழைவு, அவர்களின் இயக்கம், பார்வைகள் மற்றும் வெளியேற்றம், அத்துடன் ஒவ்வொரு பாத்திரத்துடனும் கருவிகள் போன்றவற்றின் தொடர்பு, இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்திருப்பதை, நுணுக்கமாகப் பார்த்தால், அந்த சினிமாப்படைப்பாளியின் கொள்கை ரீதியிலான எண்ண ஓட்டத்தின் பின்னிருந்த அடிப்படைக்கோட்பாடு விளங்கும். இத்தகைய திரைப்படங்கள் காலத்தால் எவ்வளவு பிற்பட்டவையானாலும் , இன்றைய உணர்ந்தறியும் பார்வையாளர் ஒவ்வொருவரும் இதுபோன்ற படைப்பாளிக்கும், படைப்புக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டறிய முயல வேண்டும்.!

சலனம் : ஏப்ரல் – மே 1992

- தொடரும் -

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, பி.கே. நாயர் அவர்களின் கட்டுரைகளை பேசாமொழி இதழில் மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </