இதழ்: 24     ஐப்பசி (October 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
பெர்லின் சுவர் தகர்ப்பிற்குப் பின் : போவதற்கு இடமில்லை - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா 5 - சாரு நிவேதிதா
--------------------------------
திரைமொழி - 13 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 7 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 9 - தினேஷ் குமார்
--------------------------------
”காக்கா முட்டை”, திரைப்படத்தின் இயக்குனர் மணிகண்டனுடன் நேர்காணல்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - 2 - அறந்தை மணியன்.
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 6 - பி.கே.நாயர்
--------------------------------
சொர்க்கத்தின் நாட்கள் - வருணன்
--------------------------------
 
   

   

 

 

லத்தீன் அமெரிக்க சினிமா - 5

- சாரு நிவேதிதா

சென்ற இதழில் வெளிவந்த நெல்சன் பெரைரா பேட்டியின் அடுத்த பகுதி இப்போது தொடர்கிறது. ரியோ 40 டிகிரி படத்தைப் பற்றி இங்கே பேசப்படுகிறது. பேட்டி கண்டவர் ப்ரஸீலிய சினிமா பற்றிய ஆய்வாளரான Randal Johnson.

இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் கேமராவை எப்படிக் கையாண்டீர்கள்?

கேமராவை மறைத்து வைத்துக் கொள்வோம். இதற்காகவே கேமராமேனுக்கு அருகில் ஒருவர் கையில் பைனாகுலருடன் இருப்பார். எல்லோரும் ஏன் இந்த ஆள் இவ்வளவு பெரிய பைனாகுலரை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார் என்று அதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். இதனால் கேமரா அவர்களின் பார்வையிலிருந்து தப்பி விடும்.

படத்தின் முடிவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. சிட்டி ஆஃப் காட் போலவோ அல்லது புனுவேலின் படங்களைப் போலவோ – உதாரணமாக, Los Olvidados – போலவோ அவநம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. இந்தப் படங்களுடன் உங்கள் ரியோ 40 டிகிரியை எப்படி ஒப்பிடுவீர்கள்?

உண்மையைச் சொல்லப் போனால், அந்தக் காலகட்டத்தின் இத்தாலிய சினிமாவின் தாக்கத்தை ரியோ 40 டிகிரியில் காண முடியும். அப்போதைய ப்ரஸீலிய சினிமாவில் ’எந்த ஸ்டுடியோவில் படம் எடுக்கலாம்’ என்றே கவலைப்பட்டார்கள்; ’என்ன படம் எடுக்கலாம்’ என்று கவலைப்படவில்லை. சினிமா எடுக்க பெரிய நட்சத்திரங்கள் யாரும் தேவையில்லை; நிஜமான இடங்களும் நிஜமான மக்களும் போதும் என்பதை இத்தாலிய சினிமா தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

நீங்கள் இத்தாலிய நியோ ரியலிஸ இயக்குனர்களைத் தொடர்பு கொண்டீர்களா?

ஆம். ரியோ 46 டிகிரி 1956-இல் பாரிஸில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. அங்கேதான் நான் Cesare Zavattini-ஐச் சந்தித்தேன். அது ஒரு முக்கியமான சந்திப்பு. நான் அவருக்கு செவியைக் கொடுத்தேன். அவர் எனக்குக் குரலைக் கொடுத்தார்; குரலின் பாடலைக் கொடுத்தார்.

ஃபவேலாவை முதல் முதலில் காண்பித்த இயக்குனர்களில் நீங்கள் முக்கியமானவர். அதற்கான எதிர்வினை எப்படி இருந்தது?

கொலம்பியா பிக்சர்ஸுக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. ஆனால் ப்ரஸீலில் அதைத் தடை செய்து விட்டார்கள். ப்ரஸீலில் ஜனநாயகத்தின் முடிவு அப்போதுதான் துவங்கியிருந்தது. பிறகு அந்தப் படத்தை வெளியிடுவதற்காகப் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. படத்தை போலீஸ் கமிஷனர் ஏன் தடை செய்தார் தெரியுமா? ”ரியோவின் வெப்பம் எப்போதுமே 40 டிகிரிக்குப் போனதில்லை; அதிக பட்சம் 36 டிகிரிதான் போகும்.” இது போலீஸ் கமிஷனர் சொன்ன வாக்கியம். மேலும், ”அந்தப் படம் ப்ரஸீலை மிகவும் எதிர்மறையாகக் காண்பிக்கிறது. வெறும் வறுமையையும், துயரத்தையும் மட்டுமே காண்பிக்கிறது. இதை எடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்” என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இப்படியாகத்தான் சினிமா நோவோ இயக்கம் தோன்றியது.

இந்தப் படத்துக்குப் பிறகு சினிமா நோவோ எப்படி வளர்ந்தது? உங்கள் படங்களை விட இன்னும் radical-ஆக இருந்த க்ளாபர் ரோச்சாவின் பங்களிப்பு எப்படி இருந்தது?

எனக்கு க்ளாபர் ரோச்சாவின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. அவருடைய முதல் படத்தில் (Barreventos) நானும் அவரோடு வேலை செய்தேன். நான் தான் அந்தப் படத்தை எடிட் செய்தேன். அதற்குப் பிறகும் கூட நானும் அவரும் ஒன்றாகவேதான் இருந்தோம். எங்கள் படங்கள் புரட்சிகரமாகவும், மறைவான பல அர்த்தங்களைச் சொல்பவையாகவும் இருந்தன. கிட்டத்தட்ட எங்களுக்கு ஒரு cult reception கிடைத்தது என்று சொல்லலாம். எங்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட வணிகப் படங்களெல்லாம் இன்று செத்து விட்டன. ஆனால் க்ளாபர் ரோச்சாவின் படங்கள் இன்றும் உயிரோடு இருக்கின்றன; பேசப் படுகின்றன.

Rio, 100 Degrees (Rio, 40 graus), 1955

பல ஆண்டுகளாக நீங்கள் திரைப்படத் துறையில் பேராசிரியராக இருந்து பல மாணவர்களைப் பயிற்றுவித்திருக்கிறீர்கள். ஒரு தேசத்தின் கலாச்சாரத்தை சினிமா மாற்ற முடியுமா? முடியும் என்றால் எப்படி? ப்ரஸீலில் அது நடந்ததா? அங்கே நிலைமை எப்படி இருக்கிறது?

முன்பு இருந்ததை விட சூழல் இப்போது எவ்வளவோ மாறியிருக்கிறது. எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் சினிமா இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. திரை அரங்குகளிலும் வீடுகளிலும் அது போன்ற படங்களை மக்கள் பார்க்கிறார்கள். ரியோ 40 டிகிரி வெளிவந்து இப்போது ஐம்பது ஆண்டு ஆகி விட்டது.
சென்ற ஆண்டு ப்ரஸீலில் 90 படங்கள் தயாரிக்கப்பட்டன. அதில் சில படங்கள் ஆவணப்படங்கள். ப்ரஸீலிய சினிமா இன்று பல தன்மைகளைக் கொண்டிருக்கிறது. இப்போதும் சினிமா நோவா அங்கே உயிரோடு இருப்பதை நான் உணர்கிறேன்.

***

கிரேக்கக் கவிஞர் அப்பல்லோனியஸ், ரோம் நகரத்துக் கவிகளான வர்ஜில், ஆவிட் போன்றவர்களால் பாடப்பட்டவன் ஓர்ஃபியூஸ். மாபெரும் இசைக் கலைஞன். அவன் கையிலிருக்கும் யாழை இசைத்தால் மேகம் திரண்டு வந்து மழை பொழியும். கொடிய மிருகங்களும் அவன் அடி பணியும். விருட்சங்களும் பட்சிகளும் கூட அசைவின்றி அவன் பாடலைக் கேட்கும். நதிகளும் பாதை மாறி அவன் பக்கம் ஓடி வந்ததற்கான சாட்சிகள் இருக்கின்றன. பாறைகளும் கசிந்து உருகியிருக்கின்றன. அப்பேர்ப்பட்ட இசைக் கடவுள் ஓர்ஃபியூஸ். அவன் யூரிடிஸி என்ற பெண்ணைக் காதலித்து மணக்கிறான். விதி வசத்தினால் மண நாள் அன்றே யூரிடிஸி சர்ப்பம் தீண்டி மரணம் அடைகிறாள். அந்தத் துயரத்தைத் தாங்க முடியாத ஓர்ஃபியூஸ் பாதாள உலகத்துக்குள் சென்று மரண தேவனை சந்தித்துத் தன் பாடலால் அவனை மகிழ்வித்து யூரிடிஸியின் உயிரைத் திரும்ப வாங்கி வருவேன் என முடிவெடுக்கிறான். எந்த மானிடனாலும் கற்பனையே செய்ய முடியாத பாதாள உலகத்திற்குள் பிரவேசிக்கிறான். காரிருளும் கனத்த மௌனமும் மூளையை மயங்கச் செய்கிறது. அதையெல்லாம் மீறி தனது யாழை மீட்டுகிறான். கல்லும் உருகும் இசை என்றால் மரண தேவன் மயங்காமல் இருப்பானா? யூரிடிஸியை அழைத்து ஓர்ஃபியூஸிடம் கொடுக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. நீ இவளை இந்த பாதாள உலகத்திலிருந்து உன்னுடைய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் போது ஒருக்கணம் கூட திரும்பிப் பார்க்கக் கூடாது. திரும்பிப் பார்த்தால் இவள் திரும்பவும் இங்கே வந்து விடுவாள்.

மரண தேவன் கூறியபடியே யூரிடிஸியை அழைத்துக் கொண்டு பூலோகம் வருகிறான் ஓர்ஃபியூஸ். ஆனால் அந்தப் பயணம் அவன் மனதைத் துளைத்து எடுக்கிறது. பின்னால் அவள் வரும் காலடித் தடம் கேட்கிறது. ஆனால் திரும்பிப் பார்க்க முடியாது. வருவது அவள்தானா? என் உயிரினும் இனிய யூரிடிஸி தானா? அல்லது இது ஏதோ ஒரு கண் கட்டு வித்தையா? இல்லையே, மரண தேவன் பொய் சொல்ல மாட்டானே? எத்தனை பெரிய இன்னல்களையெல்லாம் தாண்டி அவனைச் சந்தித்தோம்? ஒரே ஒரு கணம் பார்க்கலாமா? மனம் தூண்டும். ஆனால் மரண தேவனின் நிபந்தனை நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்ச தூரம்… இன்னும் கொஞ்ச தூரம்… இப்படியே பெரும் மனப் போராட்டத்தோடு பூலோகத்தில் காலடி எடுத்து வைத்த அடுத்த கணம் திரும்பிப் பார்க்கிறான்.

”ஓ… ஓர்ஃபியூஸ்… என்னை நீ நிரந்தரமாக இழந்து விட்டாய்… நீதானே பூலோகத்தில் காலடி வைத்தாய்? நான் இன்னும் வைக்கவில்லையே? எனக்கு இன்னும் ஒரு அடி இருக்கிறதே?”

கேவலுடன் சொல்லியபடி மறைந்து போகிறாள் யூரிடிஸி. இன்னும் ஒரே ஒரு அடி வைத்திருந்தால் யூரிடிஸி பூலோகத்தில் காலடி வைத்திருப்பாள். அதற்குள் முந்திக் கொண்டு பார்த்து அவளை இழந்து விடுகிறான் ஓர்ஃபியூஸ். மீண்டும் அவளைத் தேடி பாதாள உலகத்துக்குள் செல்ல முயலும் அவனை மரண தேவனின் பணியாட்கள் தடுத்து விடுகிறார்கள். ”உன் இசையால் ஒரு முறை உனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இனிமேல் நீ அந்த மரண உலகத்துக்குள் போக வேண்டுமானால் நீ மரணமடைய வேண்டும்.”

”என் யூரிடிஸியைக் காண்பதற்காக நான் சாகத் தயார்.”

”இல்லை. மரண தேவன் அழைத்தால் ஒழிய அது சாத்தியம் இல்லை.”

பூலோகம் திரும்பும் ஓர்ஃபியூஸிடம் இப்போது அவன் உயிரையும் இசையையும் தவிர வேறு எதுவுமே இல்லை. மனிதர்களோடு தன் தொடர்பை அறுத்துக் கொள்ளும் அவன் வனங்களில் திரிகிறான். அவனுடைய இசையை இப்போது விருட்சங்களும் வனவிலங்குகளும் மட்டுமே கேட்டுத் திளைக்கின்றன. இப்படியே பாடிப் பாடி ஒருநாள் மரணமடைகிறான் ஓர்ஃபியூஸ்.

பட்சிகளும் மிருகங்களும் தின்று மிஞ்சிய அவனுடைய எலும்புகளை எடுத்து ஒலிம்பஸ் மலையின் அடிவாரத்தில் வைத்து ஒரு சமாதியை எழுப்புகிறார்கள் தேவதைகள். இப்போதும் அந்த ஒலிம்பஸ் மலையின் பக்கம் சென்றால் அங்குள்ள வானம்பாடிகளின் இசை தெய்வீகமாகவும் மனதை மயக்கக் கூடியதாகவும் இருப்பதை நீங்கள் உணரலாம்.

கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்ட ஓர்ஃபியூஸின் மேற்கண்ட கதையை அடிப்படையாகக் கொண்டு Vinícius de Moraes எழுதிய இசை நாடகமான Orfeu da Conceição-வைத் தழுவி Orfeu Negro (கறுப்பு ஓர்ஃபியூ) என்ற படம் 1959-இல் ப்ரஸீலில் எடுக்கப்பட்டது. (வினிசியஸ் ப்ரஸீலின் தேசிய கவியாகக் கொண்டாடப்பட்டவர். ப்ரஸீலையும் இசையையும் பிரிக்க முடியாது என்பதால் ப்ரஸீலில் இசைக்கப்பட்ட பெரும்பாலான Bossa nova பாடல்களை இயற்றியவர் வினிசியஸாகத்தான் இருந்தார்.) நெல்சன் பரேராவின் ரியோ 40 டிகிரி வெளிவந்து நான்கு ஆண்டுகள் கழித்து வந்தது கறுப்பு ஓர்ஃபியூ. இது பற்றி நெல்சனிடம் பேட்டி எடுக்கும் ரேண்டல் ஜான்சன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “கறுப்பு ஓர்ஃபியூவில் கார்னிவல் கொண்டாட்டங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை; மக்கள் எப்போதும் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கிறார்கள். இது அந்த மக்களுக்கு நியாயம் செய்வதாக இல்லை. சிட்டி ஆஃப் காட் படத்திலும் இதே தவறுதான் நடந்தது. ரியோ என்றால் வன்முறைதான் என்று அந்தப் படத்தில் காண்பித்தார்கள். ஆனால் உங்கள் படத்தில் (ரியோ 40 டிகிரி) இளைஞர்கள் எல்லா இடத்திலிருந்தும் விரட்டி அடிக்கப்படுவதையும், அவர்கள் அந்த சமூகத்தின் விளிம்பில் இருப்பதையும் காண்பிக்கிறீர்கள். உங்கள் படம்தான் ரியோவின் பிரச்சினையை ஆழமாக ஆராய்கிறது.”

இது பற்றி நெல்சன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் ப்ரஸீலில் கறுப்பு ஓர்ஃபியூ வந்த போது அங்கே இந்தப் படத்தை பலரும் கொண்டாடவில்லை. ஆனால் உலக அளவில் பெரிய அளவில் பேசப்பட்டது. உலகெங்கும் பல இசைக் குழுக்கள் கறுப்பு ஓர்ஃபியூவின் இசையைத் தங்களது கிரியா ஊக்கியாகக் கொண்டார்கள். முக்கியமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கறுப்பு ஓர்ஃபியூவுக்கு ஒரு cult status கிடைத்தது.

ப்ரஸீலில் இந்தப் படத்துக்கு அதிக வரவேற்பு இல்லாமல் போனதற்குக் காரணம், படத்தின் இயக்குனர் ஃப்ரெஞ்சுக்காரர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம், வறுமையின் கொடுமை. ப்ரஸீலில் இருந்த கொடூரமான அடிமை முறை 1888-ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது. ஆனால் அடிமை முறை ஒழிந்தும் கறுப்பின மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. பழைய அடிமைகள் அனைவரும் நகரத்துக்கு வெளியே குடிசைகளைப் போட்டு வாழ ஆரம்பித்தனர். 1950கள், அறுபதுகளில் இது போன்ற ஃபவேலாக்கள் (சேரிகள்) ப்ரஸீலின் நகரங்கள் முழுவதும் பெருக ஆரம்பித்தன. இந்த எதார்த்தத்தை, இந்த ஃபவேலாக்களின் வறுமையை வெளிநாட்டுக்காரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் சினிமா நோவோ கலைஞர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இதைத்தான் க்ளாபர் ரோச்சா, ”லத்தீன் அமெரிக்கா தனது துயரத்துக்காக அழுது கொண்டிருக்கும் போது வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இந்தத் துயரத்தின் பால் ஒரு ரசனையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் ப்ரஸீல், ஃப்ரான்ஸ், இத்தாலி ஆகிய மூன்று நாட்டு நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பான கறுப்பு ஓர்ஃபியூவைப் பார்த்த போது உலக சினிமா வரலாற்றில் காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முக்கியமான படங்களில் ஒன்றாக வைக்கக் கூடிய மகத்தான படைப்பு என்றே எனக்குத் தோன்றியது. ஏனென்றால், கறுப்பு ஓர்ஃபியூ ரியோ நகரில் நடக்கும் உலகப் பிரசித்தி பெற்ற கார்னிவலுக்கு முந்தின தினம் துவங்கி கார்னிவல் நடக்கும் தினத்தோடு முடிந்து விடுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ரியோ நகரில் நாம் காணக் கூடிய ஒரே விஷயம், நம்மைப் பைத்தியம் பிடிக்கச் செய்யும் இசையும் நடனமும் மட்டும்தான். இதுவும் ப்ரஸீலின் எதார்த்தங்களில் ஒன்றுதான். கார்னிவலை விட்டு விட்டு ப்ரஸீல் இல்லை. குறிப்பாக ரியோ இல்லை. மார்க்சீயவாதி ஒருவர் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தேடியது போல் இருந்தது ஜான்ஸனின் விமர்சனம்.

ப்ரஸீலின் ஸாம்பா இசையையும் நடனத்தையும், ப்ரஸீலியர்களின் வாழ்வில் அந்த இரண்டும் வகிக்கும் முக்கிய பங்கையும் புரிந்து கொள்வதற்கு கறுப்பு ஓர்ஃபியூ அளவுக்கு வேறு படங்கள் நமக்கு உதவக் கூடும் என்று தோன்றவில்லை. ஏனென்றால், கார்னிவலை மட்டுமே ஆவணமாக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் மனித வாழ்வின் மிகச் சிக்கலான ஆண் பெண் உறவை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலுவான கதையையும் சொல்லியிருக்கிறார் இதன் இயக்குனர் மார்ஸல் கம்யு. ஃப்ரெஞ்சுக்காரராக இருந்தாலும் கம்யு ப்ரஸீலில் இருந்தே வேறு சில படங்களையும் இயக்கியிருக்கிறார். ஹோர்ஹோ அமாதோ (Jorge Amado) எழுதிய Bahia என்ற நாவலையும் ப்ரஸீலிலேயே எடுத்தவர் கம்யு.

மறுநாள் நடக்க இருக்கும் கார்னிவலுக்காக ப்ரஸீலின் எல்லா ஊர்களிலிருந்தும் ரியோ நகருக்குக் கூட்டம் வந்து குவிகிறது. பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்தக் கூட்டத்தோடு தன் ஒன்று விட்ட சகோதரியான செராஃபீனாவைப் பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து ரியோ வருகிறாள் யூரிடிஸி. உண்மையில் அவள் தன் வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள். ஏனென்றால், ஊரில் ஒருவன் அவளைக் கொல்வதற்காகப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான். (பின்னர்தான் தெரிகிறது, அவன் மரண தேவன் என்று.) ரியோவுக்குப் புதியவள் என்பதால் அவளுக்கு வழி காண்பிக்கிறான் ஓர்ஃபியூ. அந்தப் பெண் கிராமத்தைச் சேர்ந்தவள் என்பதால் அழகானவளாகவும் அடக்கமானவளாகவும் இருக்கிறாள். ஓர்ஃபியூவின் குடிசைக்குப் பக்கத்துக் குடிசையில் தான் செராஃபீனா வசிக்கிறாள்.

ஓர்ஃபியூ, செராஃபீனா, மீரா மூவரும் ஒரு சாம்பா பள்ளியில் நடனமும் இசையும் பயில்கிறார்கள். மீராவும் ஓர்ஃபியூவும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் போகப் போக மீராவின் சுயநலமும் முரட்டுத்தனமும் ஓர்ஃபியூவை அவளிடமிருந்து விலகச் செய்கிறது. மீராவும் ஓர்ஃப்யூவும் திருமணப் பதிவாளர் அலுவலகம் சென்று தங்கள் திருமணத் தேதியைப் பதிவு செய்து விட்டு வருகிறார்கள். அதுதான் அவனுடைய சம்பள தினமும் கூட. ”நம் திருமணத்துக்கு எனக்கு மோதிரம் வாங்கிக் கொடு” என்று கேட்கிறாள் மீரா. அவனோ, “நாளை கார்னிவல்; அடகுக் கடையில் என் கிதாரை அடகு வைத்திருக்கிறேன். அதை மீட்க வேண்டும்” என்கிறான். அவளோ மோதிரத்திலேயே குறியாக இருக்கிறாள். பிறகு, ”நான் உனக்குக் கடன் தருகிறேன்; அந்தப் பணத்தில் எனக்கு மோதிரம் வாங்கிக் கொடு; அப்புறமாகப் பணத்தைத் திருப்பிக் கொடு” என்கிறாள். பின்வரும் புகைப்படத்தில் இருப்பது மீரா.

அன்றைய தினம் மீராவிடமிருந்து தப்பி வந்து தன் குடிசையில் இருக்கிறான் ஓர்ஃபியூ. ஆடு, கோழி, புறா மற்றும் பல பட்சிகள் என ஒரு மிருகக் காட்சி சாலையைப் போல் இருக்கிறது அந்தச் சிறிய குடிசை. கப்பலில் மாலுமியாக இருக்கும் செராஃபீனாவின் காதலன் அவளைப் பார்ப்பதற்காக வந்திருப்பதால் அன்று இரவு யூரிடிஸி உறங்குவதற்குத் தன் குடிசையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறான் ஓர்ஃபியூ. அவன் வெளியே படுத்துக் கொள்கிறான். அவனுடைய பாடலில் மயங்கி அவன் மீது காதல் கொள்கிறாள் யூரிடிஸி. அவனை அழைத்துத் தன்னுடன் படுத்துக் கொள்ளச் சொல்கிறாள்.

மறுநாள் கார்னிவல் தொடங்குகிறது. ஆயிரக் கணக்கில் மக்கள் வெள்ளம். மீராவுடன் நடனமாடுவதை ஓர்ஃபியூ விரும்பவில்லை. அவளைத் தவிர்த்து விட்டு யூரிடிஸிக்கு முகத்திரை அணிவித்து கார்னிவலுக்கு அழைத்து வருகிறான். இதற்கிடையில் படம் முழுவதும் மீராவிடமிருந்து ஓர்ஃபியூவும், மரண தேவனிடமிருந்து யூரிடிஸியும் தப்பி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படித் தப்பி ஓடும் போது கார்னிவல் இரவில் மின்கம்பியில் அடிபட்டுச் சாகிறாள் யூரிடிஸி. அவள் இறந்து விட்ட செய்தியை மட்டுமே அவனால் கேள்விப்பட முடிகிறது. அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் அவள் உடல் கிடைக்கவில்லை. உடலைத் தேடிப் போகும் போது அவன் ஒரு முதியவனை சந்திக்கிறான். அவன் ஓர்ஃபியூவை ஆஃப்ரிக்கர்களின் ஆதி வழிபாடுகள் (Macumba) நடந்து கொண்டிருக்கும் ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே ஒரு முதியவளின் உடம்பில் வரும் யூரிடிஸியின் ஆவி ஓர்ஃபியூவிடம் சொல்கிறது. “நீ என்னைத் திரும்பிப் பார்க்காமல் பேசு; திரும்பிப் பார்த்தால் நான் போய் விடுவேன்.” அதே குரல். யூரிடிஸியின் குரலே தான். யூரிடிஸியை இங்கே, இப்போது, இந்தக் கணத்தில் பார்க்க முடியுமா என்ற வேகத்தில் ஓர்ஃபியூ திரும்பிப் பார்க்க அந்த முதியவளிடமிருந்து அகன்று விடுகிறது யூரிடிஸியின் ஆவி.

இறுதியில் ஓர்ஃபியூ யூரிடிஸியின் உடலை சவக் கிடங்கில் கண்டு பிடித்து எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கும் போது மீரா அவனைப் பார்த்து விட்டுத் துரத்துகிறாள். அந்தக் கணத்தில் மலை முகட்டில் நிற்கும் ஓர்ஃபியூ பின்னால் இருப்பது அதல பாதாளம் என்று தெரியாமல் யூரிடிஸியின் உடலோடு வீழ்கிறான்.
1959 கான் திரைப்பட விழாவில் Palme d’Or விருதும், சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் பரிசும் பெற்ற கறுப்பு ஓர்ஃபியூவின் பின்னணி இசை ப்ரஸீலிய இசையை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த Antônio Carlos Jobim மற்றும் Luiz Bonfa இருவருடையது. ஹோபிம் பற்றி நெல்சன் பரேரா The Music According to Antonio Carlos Jobim (2012), A Luz do Tom (2013) என்று இரண்டு ஆவணப் படங்களை எடுத்திருக்கிறார் என்பதிலிருந்தே அவரது முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம். கறுப்பு ஓர்ஃபியூ மூலமாகவே அந்த்தோனியோ கார்லோஸ் ஹோபிமும் லூயிஸ் போன்ஃபாவும் உலக அளவில் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார்கள்.

படத்தின் மிக முக்கியமான பாடல்: A Felicidade. ஹோபிம் இசை அமைத்தது.

http://www.youtube.com/watch?v=gW_oAq9U8L4&hd=1

லூயிஸ் போன்ஃபா உருவாக்கிய Manha de Carnaval பாடல்:

http://www.youtube.com/watch?v=nVkDfnGobmI&hd=1

ராக்கி வில்லியம் வாசித்த Manhã de Carnaval (Orfeu Negro): ஆக்கம் லூயிஸ் போன்ஃபா.

http://www.youtube.com/watch?v=L4_8RQZiDhU&hd=1

படம் முழுவதுமே – ஒரு நிமிட இடைவெளி கூட இல்லாமல் -ஸாம்பா இசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கார்னிவலுக்கு முந்தின இரவில் சுமார் 25 நிமிடங்கள் பாடலும் ஆடலும் நடக்கிறது. அதனூடே தான் கதையும் நடக்கிறது. இந்தப் படத்தின் இசையே Bossa nova (நியூ வேவ்) என்று அழைக்கப்பட்ட புத்தம் புதிய ஸாம்பா இசையின் துவக்கமாக இருந்தது. அந்த வகையிலும் இந்தப் படம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

பின்வரும் இணைப்பில் கார்னிவல் நடனத்தைக் காணலாம். அதில் பிரமாதமாக ஆடும் சிறுவன் ஸேகா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம். படத்தை முழுசாகப் பார்க்க முடியாவிட்டாலும் பின்வரும் நடனக் காட்சியைப் பாருங்கள். முதலில் உடல் தெரிய எல்லோருடனும் ஆடுவது மீரா. அவள் நடனமாடிக் கொண்டே ஓர்ஃபியூவைத் தன்னுடன் ஆடி, முத்தமிட அழைக்கிறாள். அப்போது ஒரு ஓரத்தில் கூச்சத்துடன் அமர்ந்திருக்கும் யூரிடிஸியின் பக்கத்தில் இருக்கும் சிறுவன் பெனடிட்டோ அவளிடம் அந்தக் காட்சியைக் காண்பிக்கிறான். யூரிடிஸி பதற்றம் கொள்கிறாள். இந்தக் காட்சி படத்தின் ஆரம்பத்தில் வருகிறது. இன்னும் ஓர்ஃபியூவும் யூரிடிஸியும் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளவில்லை. என்றாலும் ஒருவரை ஒருவர் விரும்புவதை அவர்கள் இருவரும் அறிந்திருக்கிறார்கள். சிறுவன் ஸேக்கா கையில் பறையை வைத்துக் கொண்டு அட்டகாசமாக ஆட்டம் போடுகிறான். யூரிடிஸியின் சகோதரி செராஃபீனா ஏதோ தந்திரம் செய்து மீராவை வேறு இடத்துக்கு அழைத்துக் கொண்டு போய் விடுகிறாள். இப்போது ஓர்ஃபியூ யூரிடிஸியிடம் வருகிறான். இருவரும் தங்களை மறந்து ஆடுகிறார்கள்.

http://www.youtube.com/watch?v=QZ7F0Fkydhk&hd=1

யூரிடிஸியாக நடித்திருப்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த நாட்டியக் கலைஞரான Marpessa Dawn. படம் வெளிவந்த பின்னர் மார்ஸல் கம்யு இவரை மணந்து கொண்டார்.

கறுப்பு ஓர்ஃபியூ படத்தின் சில காட்சிகளைக் கொண்ட ஒரு ஆங்கில விளம்பரப் பாடல்:

http://www.smithsonianmag.com/arts-culture/black-orpheus-
how-french-film-introduced-world-brazil-180949956/?no-ist

பின்வரும் காட்சியில் யூரிடிஸி ஓர்ஃபியூவுடன் கலவி கொண்ட பிறகு ஆழ்ந்து உறங்குகிறாள். பொழுது புலர்கிறது. அப்போது அவளைத் தன்னுடைய கிதாரை இசைத்து ஒரு மெல்லிய பாடலைப் பாடி எழுப்புகிறான் ஓர்ஃபியூ.

இதற்கு முந்தின மாலையில் சிறுவர்கள் இருவரும் ஓர்ஃபியூஸிடம் ஒரு பிரச்சினைக்கான விடை தேடி வருகிறார்கள். பெனடிட்டோ சொல்கிறான், ஓர்ஃபியூ கிதார் இசைத்துப் பாடினால் சூரியன் உதயமாகும் என்று. (ப்ரஸீலில் ஓர்ஃபியூ ஓரளவுக்குப் பிரபலமான பாடகனாக இருக்கிறான். எப்படி என்றால், யூரிடிஸின் மரணச் செய்தி கேட்டு ஓர்ஃபியூ பதறியபடி ஓடி வரும் போது கார்னிவல் இரவில் கலாட்டா செய்பவர்களை போலீஸ் அள்ளிக் கொண்டு போகும் காட்சியில் ஒரு போலீஸ்காரன் ஓர்ஃபியூவை அடையாளம் கண்டு கொண்டு, ”உன்னுடைய அந்தப் பிரபலமான ஸாம்பா நடனத்தின் கால் அசைவுகளை ஆடிக் காண்பி” என்று கெஞ்சுகிறான்.) பெனடிட்டோ சொல்வதில் ஸேக்கோவுக்கு சந்தேகம். ”இதை ஓர்ஃபியூவிடமே கேட்டு விடுவோம்” என்று இருவரும் அவனிடம் வருகிறார்கள். ஓர்ஃபியூ சிரித்துக் கொண்டே ஆமாம் என்கிறான்.

”அப்படியானால் உன்னால் நாளை காலை சூரியனை எழுப்ப முடியுமா?”

“மற்ற நாட்களை விட நாளை காலையில் சுலபமாக எழுப்பி விடுவேன். ஏனென்றால் நாளை கார்னிவல்!” என்கிறான் ஓர்ஃபியூ.

மறுநாள் காலைதான் மேலே பார்க்கும் காட்சி. ஓர்ஃபியூ யூரிடிஸியை எழுப்புவதற்காகக் கிதார் இசைத்துப் பாடுகிறான். சிறுவர்கள் இருவரும் குடிசையின் வாசலில் சூரிய உதயத்துக்காகக் காத்திருக்கிறார்கள். ஓர்ஃபியூ பாடப் பாட சூரியன் மெல்ல எழுகிறது.

Phillip Glass ஓர்ஃபியூஸ் மீது ஒரு ஆபரா இயற்றியிருக்கிறார். அதில் ஒரு பகுதி:

http://www.youtube.com/watch?v=MmBkdvi0qfU&hd=1

இந்த ஆபராவை முழுமையாகக் கேட்க வேண்டுமானால் இந்தத் தொகுப்பு:

https://www.youtube.com/watch?v=viUnTLgaKgo&list=
PLwFPL38ZRljjOvX5_DUXL2AZseqGm_PX0&index=6

கறுப்பு ஆர்ஃப்யூ படத்தை ஆங்கில சப்டைட்டிலுடன் பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்.

http://www.youtube.com/watch?v=uwn4vYR_3Y4&hd=1

படத்தின் ஒருசில காட்சிகளை மட்டும் பார்க்க வேண்டுமானால் இந்த இணைப்பு, ஆங்கில சப்டைட்டிலுடன்:

https://www.youtube.com/watch?v=SVQ_9CuaDTc&hd=1

கறுப்பு ஓர்ஃபியூ வந்து நாற்பது ஆண்டுகள் கடந்து அந்தப் படத்தைத் தழுவி ப்ரஸீலிய இயக்குனர் Carlos Diegues, Orfeu (1999) என்ற படத்தை இயக்கியிருக்கிறார். எனக்கு இன்னும் அந்தப் படம் சப்டைட்டிலோடு பார்க்கக் கிடைக்கவில்லை.

***
ஒரு நாட்டை இன்னொரு நாடு தன் படை பலத்தால் வெற்றி கொள்ளும் போது வெறுமனே அங்கே தன்னுடைய நாட்டின் கொடியை நாட்டி விட்டு, தங்களின் பலத்தையும் அதிகாரத்தையும் ஸ்தாபித்து விட்டு வருவது ஒரு வகை. இன்னொரு வகை, அப்படி வெற்றி கண்ட நாட்டில் தங்களின் மதத்தையும், மொழியையும், கலாச்சாரத்தையும் அந்த மண்ணோடும் மக்களோடும் கலந்து விடச் செய்வது இன்னொரு வகை. முதல் வகைக்கு உதாரணம் சோழர்கள். இரண்டாம் வகைக்கு உதாரணம், ஐரோப்பியர்கள். தென்னமெரிக்கக் கண்டம் முழுவதும் இருந்த தொல்குடிகளின் மொழி, மதம், கலாச்சாரம் மூன்றும் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு ஸ்பானிஷும், போர்த்துகீஸும் அந்த மக்களின் மொழியாக மாறியது. தொல்குடிச் சமூகங்களின் பல்வேறுபட்ட மதங்களும் நம்பிக்கைகளும் அழிக்கப்பட்டு எல்லோரும் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். இதே மாற்றம் தான் கலாச்சாரத்திலும் நடந்தது.

இந்த வகையில் இந்தியாவுக்கும் ப்ரஸீலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. தன்னுடைய பாரம்பரியம் பற்றிய தாழ்வு மனப்பான்மையை ஒவ்வொரு இந்தியனிடமும் உருவாக்கிய வகையில் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டுப் போய் விட்டாலும் இன்னமும் தங்களுடைய காலனி ஆதிக்கத்தில் வெற்றி கண்டவர்களாகவும் அந்த வெற்றியின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். விளையாட்டில் கூட ஒரு இந்தியன் ஆங்கிலேயனின் விளையாட்டைத்தான் ஆடிக் கொண்டிருக்கிறான். அதுதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்பதாகவும் ஆகியிருக்கிறது. ஒவ்வொரு இந்தியனுக்கும் தான் ஒரு ஆங்கிலேயன் ஆகி விட வேண்டும் என்ற கனவு ஆங்கிலேய ஆதிக்கவாதியால் விதைக்கப்பட்டு விட்டது. ஒரு இந்தியன் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் தன்னுடைய மூதாதையரின் பாரம்பரியம் பற்றிய பெரும் தாழ்வு மனப்பான்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இந்தியர்களின் indigenous கலாச்சாரத்தை வலியுறுத்திய தலைவரை சுட்டுக் கொன்று விட்டு மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றிய தலைவரிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தான் இந்தியன். இந்த வகையில் ஆங்கிலேயனை இந்தியன் தன் நாட்டை விட்டு விரட்டவில்லை. பௌதிகரீதியாக மட்டுமே விரட்டி விட்டு, ஆங்கிலேயனின் வாழ்வைத் தன்னுடைய வாழ்வாக வரித்துக் கொண்டு விட்டான்.

இதேதான் ப்ரஸீலிலும் நடந்தது.

ஆனால் இந்த வகையான காலனி ஆதிக்கம் நவீன கால கட்டத்தில் அல்ஜீரியாவிலும் திபெத்திலும் நடக்கவில்லை. அல்ஜீரியர்கள் ஃப்ரெஞ்சுக்காரர்களைத் தங்கள் நாட்டிலிருந்து முழுவதுமாக விரட்டி அடித்தார்கள். திபெத்திலும் அப்படியே நடந்தது. திபெத் என்ற பரந்து பட்ட தேசத்தையே பிடித்துத் தங்கள் நாட்டோடு இணைத்துக் கொண்டாலும் சீனர்களால் கலாச்சார ரீதியாக திபெத்திய சமூகத்தில் ஒரு சிறிய சலனத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. திபெத்திய மதம், அது சார்ந்த நம்பிக்கைகள், மொழி, கலாச்சாரம் போன்ற எந்த விஷயத்திலும் சீனர்களால் உள்ளே நுழையவே முடியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் ப்ரஸீலில் உருவான Tupi or Not Tupi என்ற கலாச்சாரக் கோட்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு துப்பி என்ற பூர்வகுடி இனம் அமேஸான் மழைக்காடுகளில் வசிக்க ஆரம்பித்தது. 1500-ஆம் ஆண்டு போர்த்துகீஸியர்கள் ப்ரஸீலில் கால் வைத்த போது துப்பி இனத்தவரின் எண்ணிக்கை ப்ரஸீலில் பத்து லட்சமாக இருந்தது. அதே சமயம், போர்த்துகலின் மக்கள் தொகையும் பத்து லட்சம்தான். இதைத் தெரிந்து கொண்டால் நாம் காலனி ஆதிக்கத்தின் குணாம்சத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆயுத பலம், தந்திரம், குயுக்தி போன்றவைதான் காலனி ஆதிக்கத்தின் மூலதனம். போர்த்துக்கீசியர்கள் தங்கள் ஆதிக்கத்தை ப்ரஸீலில் நிலைநாட்டிய உடன் அந்த நாட்டின் ஆதிகுடிகளாக துப்பி இனத்தினரை மூன்று விதமாக அழித்தொழித்தனர். ஒன்று, அவர்களை மத மாற்றம் செய்து தங்களைப் போலவே போர்த்துக்கீசியர்களாக்கினர். எப்படியென்றால், அங்குள்ள பூர்வகுடிகளில் ஒருவரே பலரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வழக்கம் இருந்ததால் ஒரு போர்த்துக்கீசியர் இருபது துப்பி பெண்களை மணந்து இனக்கலப்பு செய்தனர்.

அது முடியாவிட்டால், ஆயுத பலத்தினால் அவர்களை அடிமைகளாக்கினர்; மூன்றாவது வழி, கொலை. இதன் காரணமாக துப்பி இனத்தவருக்கு போர்த்துக்கீசியர் என்றால் தங்கள் இனத்தை அழிப்பவர்கள் என்று அர்த்தமாகியது. இதற்கிடையில் துப்பி இனத்தில் பல நூறு ஆண்டுகளாகவே பல நூறு பிரிவுகள் இருந்தன. இந்தப் பிரிவினர் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு, தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்ற பிரிவினர் சடங்குகள் செய்து ஒவ்வொரு உறுப்பாக வெட்டித் தின்றனர். ஆக, துப்பி இனத்தவர் நர மாமிசம் தின்னும் இனத்தினராக அறியப்பட்டனர்.

துப்பி தான் ப்ரஸீலின் அடையாளம். துப்பியின் மொழி அழிந்து விட்டது. துப்பி இனம் அழிந்து விட்டது. நாம் எல்லோரும் போர்த்துக்கீசியர்களுக்கு முறையற்றுப் பிறந்த குழந்தைகளாகி விட்டோம். இப்போது நாம் மீண்டும் துப்பிகளாவோம். இப்போது நமக்கு முன்னே நிற்பது ஒன்றே ஒன்றுதான். Tupi or not tupi: That’s the question.

இதை Cannibal Manifesto என்று அழைத்தனர். இந்த நரமாமிச அறிக்கை எப்படி ஒரு உலகத் தரமான சினிமாவாக மாறியது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </