பெர்லின் சுவர் தகர்ப்பிற்குப் பின் :
போவதற்கு இடமில்லை
No Place to Go : Oskar Roehler
போவதற்கு இடமில்லை** என்கிற ஜெரமானியத் திரைப்படத்தைப் பற்றி எழுத முனைகையில் தவிர்க்கவியலாமல் கோபத்துடன்தான் துவங்கவேண்டியிருக்கிறது.
|
முன்னை நாட்களில் கம்யூனிஸ எதிர்ப்பு கொண்ட அபத்தமான திரைப்படங்களும் இலக்கியங்களும் நிறைய மேற்கில் வந்திருக்கின்றன. திரில்லர்கள் அறவியல் விசாரணைகன் என அவைகள் தமக்குத் தாமேபெயர் சூட்டிக் கொண்டுமிருக்கின்றன. முதல் வகைக்கு இங்கிலாந்து அரசியின் சேவக ஒற்றன் ஜேம்ஸ்பான்டின் படங்கள் என்றால் இரண்டாம் வகைக்கு ரஷ்யப் பெருந்தேசியவாதி ஷோல்சனித்சனின் நாவல்கள். தமிழில் சோவியத் யதார்த்தங்கள் குறித்த அசட்டுத்தனமான விமர்சனங்கள் கொண்ட படைப்புக்களிலொன்றைச் சொல்ல வேண்டுமானால் ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் நாவலை சொல்லாம். பிராமண சிந்தையை அதிகார மையமாகக் கொண்ட பாத்திரத்தை அவனது அதிகாரத்தை கொலைச் சதிகளை நிலவிய சூழலின் துயரமாக அந்தச் சூழலில் அகப்பட்ட தனிமனித ஜீவியின் அவலமாக விஷ்ணுபரத்தில் சித்தரிக்கத் தெரிந்த ஜெயமோகனுக்கு சோவியத் கம்யூனிஸ்ட்டுகளை சூழலின் கைதிகளாக லட்சியவாதத்தின் கைதிகளாக கருத்தியலின் கைதிகளாகப் புரிந்து கொள்ள மனம் ஒப்பவில்லை. இட்லரை ஸ்டாலினோடு ஒப்பிடுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதற்கான காரணங்களையும் முற்ற முழுதாக நாம் நிராகரித்துவிட முடியாது. ஆயினும் மேற்கில் சில பாசிஸ்ட்டுகள் ஸ்டாலினை முதல் எதிரியாக நிறுத்துவதற்குப் பிண்ணனியில் அவர்களுக்குள் மறைந்துகிடக்கும் உளவியல் சாமர்த்திய மிகு காரணங்கள் நிறைய உண்டு. இந்துத்துவக் குரலைக் கலாச்சார தளத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிற ஒருவரிடமிருந்து இவ்வாறான ஸ்டாலினிஸ எதிர்ப்பு முகாந்திரத்தோடு கூடிய பச்சையான கம்யூனிஸ எதிர்ப்பு நாவல் வருவதில் ஆச்சர்யமில்லை.
கிழக்கு ஐரோப்பிய இலக்கியவாதிகளும் முன்னை நாள் சுதந்திரம் பேசிய எழுத்தாளர்களும் தற்போது ஒரு பிரதான நெருக்கடிக்கு ஆளாகிவருகிறார்கள். சதா அவர்கள் விமர்சித்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகள் இப்போது அதிகாரத்தில் இல்லை. அவர்கள் சதா பேசி வந்த பிரச்சினைகள் இல்லை. சதா அவர்கள் குற்றம் சாட்டி வந்தவர்களும் இன்று இல்லை. அவர்களது சமூகம் முன்னெப்போதுமில்லாத அளவில் கலாச்சார தளத்தில் நாறிக் கொண்டிருக்கும்போது தார்மீக ரீதியில் எதிர்க்க எதிரிகளைக் கண்டடைய முடியாமல் அவர்கள் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் முன்னை நாள் சுதந்திரம் பேசியவர்களில் சில அறவியல் பார்வை கொண்ட தார்மீகத் தன்மை கொண்ட எழுத்தாளர்கள் தவிர மற்றவர்கள் புதிய வியாபாரிகளாக ஒடுக்குமுறையின் ஆதரவாளர்களாக மாறிவிட்டார்கள். இரண்டு பிரபலமான எழுத்தாளர்களை இதற்கு வித்தியாசமான உதாரணமாகக் குறிப்பிடலாம். போலந்து நோபல் பரிசுக் கவி விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்கா மற்றும் செக்கோஸ்லவாக்கிய எழுத்தாளர் சுதந்திரத்தை விளைத்த நாடகாசிரியர் இவர் பின் சோவியத் காலத்தில் ஈராக் மீதான அமெரிக்க மேற்கத்திய தாக்குதலை ஆதரித்து ஜியார்ஜ் புஸ்சுடன் மேடையயேறி வெளிப்படையாக குண்டு வீச்சுக்களை ராணுவ அத்துமீறலை நியாயப்படுத்தியவராக இருந்தார். விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்கா போலந்து கம்யூனிஸ் அரசின் எதேச்சாதிகாரத்தை விமர்சித்தவர். அன்றும் அவர் வியட்நாமில் அமெரிக்க ராணுவ ஆதிக்கத்தை விமர்சித்தவர். பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தவர். இன்றும் சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக நிற்கிறவர். இதே மாதிரியான சகலவித ஒடுக்குமுறைகளையும் விமர்சித்து நிற்கிற இரண்டுமேற்கத்திய படைப்பாளிகளைச் சொல்ல வேண்டுமானால் இங்கிலாந்து நாடகாசிரியர் ஹெரால்ட் பின்டரையும் ஜெர்மன் நாவலாசிரியர் குந்தர் கிராஸையும் குறிப்பிடலாம். இருவருமே அமெரிக்காவினதும் மேற்கத்திய சமூகத்தினதும் கடுமையான விமர்சகர்கள். விடுதலை அரசியலை ஆதரித்து நிற்பவர்கள்.
கம்யூனிஸ எதிர்ப்புக்கோ சோவியத் எதிர்ப்புக்கோ இவர்கள் வந்து சேரவில்லை. பின்சோவியத் அனுபவங்களிலிருந்து இவர்கள் ஒரு சமத்தன்மை கொண்ட அரசியல் நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். தமது படைப்புக்களிலும் அதையே வெளியிடுகிறார்கள். தனது படைப்புக்களின் அடிப்படைப் படைப்புந்துதல் உலகில் நிலவும் சகலவிதமான வன்முறைகளுக்கும் எதிரானதுதான் என்கிறார் பின்ட்டர். தனது தேசம் பற்றிய தனது தேசம் வரலாற்றுக்கு இழைத்த துரோகம் பற்றிய பரிசீலனைதான் தனது எழுத்து என்கிறார் கிராஸ். இவ்வாறான எழுத்தாளர்கள் இன்று ஐரோப்பாவில் மேற்கிலும் கிழக்கிலும் நிறைய உருவாகி வருகிறார்கள். இந்தச் சூழலோடு ஜெயமோகனின் இலுப்பைப் பூச்சக்கரையை ஒருவர் பொறுத்திப் பார்த்தால் போதும் அவரது சித்தாந்த அபத்தம் புரிந்து போகும். இந்து மதம் எமது தேசத்தின் மக்களுக்கும் மனிதர்களுக்கும் இழைத்த கொடுமையைத்தான் ஒரு மனசாட்சியுள்ள எழுத்தாளன் பேரழிவு எனும் வகையில் இன்று சித்தரித்திருக்க வேண்டும். அதை விடுத்து கற்பனை நகரத்தையும் பொற்காலப் புனைவையும் முன்னிறுத்தி ஒரு பேரழிவுக்கான இரங்கலாக விஷ்ணுபுரத்தை உருவாக்கியிருக்கிற இவரது கம்யூனிஸ எதிர்ப்பு நாவல் - பின் தொடரும் நிழலின் குரல் வரலாற்று விஷம் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப்பின்னான ஐரோப்பாவில் முன்னனைய மேற்கு ஜெர்மனியின் மூனிச் நகரில் வாழ்ந்த ஒரு மார்க்ஸிஸ்ட் பெண் எழுத்தாளரின் வாழ்வையும் தற்கொலையையும் திரைப்படம் போவதற்கு இடமில்லை. கம்யூனிஸ எதிர்ப்பு ஆதரவு எழுத்துக்கள் பற்றிய முகாந்தரத்துடன் இவ்வறிமுகத்தைத் தொடங்க வேண்டியிருக்கிறது. ஒஸ்கார் ரோலர் இயக்கியிருக்கும் இப்படம் இரண்டாயிரமாண்டின் மிகச்சிறந்த ஜெர்மானியப்படமாக விருது பெற்றிருக்கிறது. இரண்டாயிரமாண்டு ஜுன் மாதம் இலண்டன் இன்ஸ்டிட்யூட் ஆப் கன்டம்பரரி ஆர்ட்ஸ் அரங்கில் நடந்த பெர்லின் திரைப்படவிழாவில் இப்படம் தொடர்ந்து பதினைந்து நாட்கள் திரையிடப்பட்டது. படம் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மார்க்ஸிஸ்ட் பெண் எழுத்தாளரின் வாழ்வைச் சொல்கிறது. அவர் மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்தாலும் கிழக்கு ஜெர்மனி சமூக அமைப்பின் மீது ஆர்வம் கொணடவர். சோவியத் வாழ்க்கை மீதும் அவர்களது இலக்கியத்தின் மீதும் எழுத்தாளர்களின் மீதும் காதல் கொண்டவர். மூனிச் நகரில் வாழ்ந்து வருகிற அவர் அடிக்கடி கிழக்கு ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் ரஷ்யாவுக்கும் செல்வது உண்டு. அவரது கம்யூனிஸ நம்பிக்கைகளால் அவர் முதலாளித்துவ நாடுகளில் கண்கானிக்கப்படும் எழுத்தாளராக இருக்கிறார். அமெரிக்க மெக்கார்த்தியிச நாட்களின் கம்யூனிஸ ஆதரவு எழுத்தாளர்களுக்கு எதிரான வேட்டையை ஒருவர் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அந்த நாட்களில் அமெரிக்க அரசின் கெடுபிடிகளுக்கு உள்ளான கலைஞர்களில் சார்லி சாப்ளின் நாடகாசிரியர்கள் பிரெக்ட் எவ்ஜனி ஓ நீல் போன்ற மேதைகளும் அடங்குவர்.
பொதுவாக கம்யூனிஸ்டு மனிதர்களின் வாழ்வை இலக்கியத்திலும் கலை ஊடகங்களிலும் சித்தரிப்பது தொடர்பான விவாதங்கள் இரு வகைகளில் நடைபெறுகிறது. மார்க்சியத்தின் பால் அக்கறை கொண்ட எழுத்தாளர்கள் கம்யூனிஸ்ட் மனிதர்களின் அகவாழ்வைத் தவிர்க்கும் சில வரட்டு மார்க்சியர்களின் எழுத்து முறைமையை நியாயமான காரணங்களுக்காக விமர்சிக்கிறார்கள். உதாரணமாக தமிழில் ஞானியின் விமர்சன எழுத்துக்கள். கம்யூனிஸ்ட்டு மனிதர்களின் பாலுறவு சார்ந்த குடும்பம் சார்ந்த வாழ்வைச் சித்தரிக்காதவர்களை நோக்கி இந்த விமர்சனங்கள் வைக்கப்படுவது நியாயமே. இன்னொரு தரப்பினர் கம்யூனிஸ்ட் மனிதர்களை அரசியலிலிருந்தும் லட்சியத்திலிருந்தும் விலக்கி வெறும் உயிரிகளாகச் சித்தரிக்க நினைக்கிறார்கள். இரண்டாவது வகையினர்க்கு கம்யூனிஸ மனிதர்களின் அகமும் புறமுமான உளவியல் பற்றிய வாழ்ந்துபட்ட அறிவு பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் இலக்கியம் குறித்த தமது பார்வைகளையே கம்யூனிஸ மனிதர்களின் பாத்திரச்சித்தரிப்பிலும் இருக்க வேண்டுமென வலியுறுத்தகிறார்கள். தமிழ்ச் சூழலில் இத்தகைய அபத்தத்திற்கு மறுபடியும் ஜெயமோகனைத்தான் சுட்ட வேண்டியிருக்கிறது. சிவானந்தனின் நிணைவுகள் மரணிக்கும் போது மற்றும் பொன்னீலனின் புதிய தரிசனங்கள் நாவல்கள் தொடர்பான அவரது அபிப்பிராயங்கள் அத்தகையவைதான். அரசியல் சூத்திரங்களின் ஊடகவே சிந்திக்கிறார்கள் என சோர்வுடன் சலித்துக் கொள்கிறார் ஜெயமோகன். இலங்கை மூன்றாவது மனிதன் இதழ் கடிதம்: ஜுன் 2001 - அவரது அறியாமையில் விளைந்த பார்வையை பிறர் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என நினைக்கிற அவரது வன்மமான மனம் குறித்து எமக்கும் சலிப்பாக இருக்கிறது. உலகில் வேறு வேறு வாழ்வில் வேறு வேறு முன்னுரிமைகளும் உளவியல் நோக்குகளும் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள முயல்வது நல்லது. கடுமையாகச் சொல்வதானால் அவருக்கு புரியவராத பிறர் வாழ்வு குறித்து அவர் வொல்லத்தரவேண்டாம் என்பதுதான் சாராம்சம். மேற்கத்திய சிந்தனையில் ஒடுக்குமறையின் ஒரு அம்சமான சிந்தனை முறை இது. இதை பாட்ரனைசிங் என்பார்கள். ஜெயமோகன் இடதுசாரிகள் குறித்தச் செய்து கொண்டிருப்பதும் அதுதான். சிவானந்தனை மனித ஜீவியாக அறிந்திருப்பதால்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அனைத்துக்கும் அப்பால் இன்றைய ஈழத்து வாழ்வை அரசியல் ரீதியில் சிந்திக்காமல் சொல்லமுடியாது என்பதையும் அவர் தெரிந்து கொள்வது நல்லது.
போவதற்கு இடமில்லை எனும் இந்த ஜெர்மானியத் திரைப்படம் இந்த விவாதங்கள் அனைத்துக்குமான ஒரு நடைமுறை பதிலே போல தற்கொலை செய்து கொண்ட ஒரு மார்க்சிஸ்ட் எழுத்தாளரின் அகமும் புறமும் ஆன கதையைச் சொல்கிறது.
கதை ஒரு வட்டச்சுருள் போலும் தொடங்கிய இடத்திலிருந்து மேலெழும்பி எங்கெங்கோ அலைந்து மறுபடி தொடங்கிய இடத்தில் வந்து சோர்ந்து நிற்கிறது. தொடங்கிய இடம் இப்போது இறுதிப் புள்ளியாகவும் ஆகிவிடுகிறது. ஹனா மேற்க ஜெர்மனியின் பெரிலின் நகரில் வாழ்கிற ஒரு மத்தியதர வயது எழுத்தாளர். பேர்லினைப் பிரித்த சுவர் உடைந்து வீழ்ந்த பிறகு தான் இருக்கும் மூனிச் நகரிலிருந்து பெர்லின் நகரில் சென்று வாழ்வது அவளது திட்டம். காரணம் பெர்லின் நகர் இரண்டு ஜெர்மனியையையும் அதன் வழி அதனது மனிதர்களையும் அவரது கலாச்சாரங்களையும் அவர்தம் பிரச்சினைகளையும் இணைக்ககூடிய நகராக இருக்கும் என அவள் நம்புகிறாள். மேற்கு ஜெர்மனியளாக இருந்தாலும் கிழக்கு ஜெர்மன் சமூக அமைப்பைத் தனது ஆதர்ஷ பூமியாகக் கொண்டிருந்ததால் புதிய ஒன்றுபட்ட பெர்லின் தான் வாழ ஏதுவான இடமாக இருக்கும் எனக் கருதுகிறாள் அவள். அவள் பெர்லின் செல்ல இன்னொரு காரணமும் உண்டு. தனது படுக்கையைப் பகிர்ந்து கொள்கிற பதிப்பாளனும் பெர்லினினில் இருக்கிறான் என்பதால் அவனோடு தங்கலாம் என்கிற எண்ணத்தோடு மூனிச்சில் தனது வீட்டைக் காலி செய்துவிட்டு பெர்லின் வருகிறாள். அவளது பதிப்பாளர்களும் சரி அவளது பழைய நண்பர்களும் சரி சக எழுத்தாளர்களும் சரி முன்னைப் போல இல்லை என்பது அவளுக்கு உடனே புரிகிறது. அவள் தனது இன்றைய காதலன் மீது கொண்ட நம்பிக்கையில் மூனிச் வீட்டைக்காலி செய்துவிட்டு தனது உடமைகளோடு பெர்லின் வந்தவள் இப்போது இரவு தங்குவதற்கு இடமில்லாமல் நிற்கிறாள். புக்கத்திலிருந்து ஹோட்டல் ஒன்றுக்குப் போகிறாள். புதிய ஜெர்மனியில் காசுக்காக உடலுறவு கொள்ளும் ஒரு துருக்கிய விலைமகனோடு அன்றைய இரவைக் கழிக்கிறாள். அவள் அனைவராலும் கைவிட்டப்பட்டபோதும் அவளது வாசகியும் அவளது புத்தகங்களைப் பதிப்பித்த பதிப்பகமொன்றில் வேலை செய்தவளுமான ஒரு பெண் அவளை அடையாளம் கண்டு சில நாட்களுக்கு எழுத்தாளர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஜேர்மனியின் புறநகரக் கட்டிடமொன்றில் தங்கலாம் என அழைத்துச் செல்கிறாள். குடியும் தொடர்ந்த புகைபிடித்தலும் தான் அவளது தனிமைக்காக புகலிடமாக இருந்திருக்கிறது. இது அவளது வாழ்வுத் தனிமை சார்ந்தது. இப்போது சமூகத்திலும் அவளது தனிமையானது அவளுக்கு பதட்டத்தையும் சதா மாத்திரைகளையும் அதிகமான குடியையும் சிகரெட்டையும் சரணடைய அவளைத் தூண்டுகிறது.
அவளது வாசகி அவளை அந்தக்கட்டிடமொன்றின் அறையில் விட்டு அடுத்த நாள் சந்திக்கிறேன் என்கிறாள். அந்தக் கட்டிடம் அனேகமாகக் கைவிடப்பட்ட கட்டிடம் போல் இருக்கிறது. பர்னிச்சர்கள் இல்லை. படுக்கை இல்லை. குளிருக்காக வெப்ப வசதிகள் ஏதும் இல்லை. தான் கொண்டு வந்த பெரிய தோள்பையைத் தலைக்கு வைத்து தனது மேல்கோட்டைப்போர்த்துக் கொண்டு மாத்திரைகளையும் தண்ணீரில்லாமல் விழுங்கி விட்டு சுரண்டு படுக்கிறாள். உறக்கமற்று சுவர் இடிந்த வெளியைத் தாண்டி கிழக்கு ஜெர்மனியில் தனது ரஷ்ய எழுத்தாள நணபர்களையும் கிழக்கு ஜேர்மனி எழுத்தாளர்களையும் சந்தித்த ஒரு பொதுமருத்துவ விடுதிக்குப் போகிறாள். அவளை ஒரு பேராசிரியரும் குடிபோதையில் இருப்பவருமான ஒருவர் அடையாளம் காண்கிறார். அவளது நாவல்கள் தனக்குப் பிடிக்கும் எனும் அவர் அவளது பாத்திரப் படைப்புகள் பற்றியும் அவளோடு விவாதிக்கிறார் குடிபோதையில் அவளை பலவந்தமாக அனைத்துக் கொண்டு நடமாட அழைக்கிறார். அவனது அனைப்பிலிருந்து விலகப் பிரயத்தனப்படும் அனாவை அவளது முளைகளை பலவந்தமாக பிசைகிறவன். உனது முலைகள் பெரியது. நான் இப்படிச் செய்வது உனக்கு விருப்பம் என்கிறான். அவள் அவனிடமிருந்து விடுபட அவனை உதறமுயற்கிறாள். நீயென்ன எழுத்தாளர்- நீயொரு பரத்தை என அவளை வசை பொழிகிறான் பேராசிரியன். விடுதியில் இருக்கிறவர்கள் மிகுந்த போராட்டத்தின் பின் அவளை அவனது பிடியினின்று விடுவிக்கிறார்கள். அடுத்த நாள் அவளைச்சந்திக்கம் சிநேகிதி அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அவளது வீட்டில் புதிய இணைந்த ஜெர்மனி தொடர்பான கொண்டாட்டத்தில் அப் பெண்ணின் கணவரும் அவனது நண்பர்களும் குடிக்கக்கூடுகிறார்கள். வாசகி தனது கணவனுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறாள். அவர்களோடு சந்தோஷமாக மதுவருந்தும் அவள் தனது கடந்த காலம் பற்றிச் சொல்கையில் கம்யூனிஸம் மிருக நரகம் எனும் அவர்கள் அவளிடம் அன்பு பாராட்டுகிறார்கள்.
வாசகியிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் அவள் தனது பெற்றோரைச் சந்திக்கிறாள். அவள் பெர்லினில் இருக்கமுடியாது என்கிற காரணத்தினால் திரும்பவும் மியூனிச்சிற்குத் திரும்பவிரும்புவதாகவும் அவள் விட்டுவந்த வீட்டைத் திரும்பப்பெற கொஞ்சம் பணம்தேவை என்றும் பெற்றோரிடம் கேட்கிறாள். இவ்வளவு காசு தரமுடியாது என அம்மா சொல்ல அப்பா கொஞ்சமாகக் காசு தருகிறார். தனது பெற்றோரிடம் விடைபெற்று இரயில் நிலையத்திற்கு வரும் வழியில் தனது பழைய கணவனைச் சந்திக்கிறாள். பழைய நட்பில் இருவரும் அருகேயிருக்கும் மதுவிடுதியில் மதுவருந்துகிறார்கள். எங்கே செல்கிறாய் எனறு கேட்கிறான் முன்னாள் கணவன். போவதற்கு இடமில்லை என்கிறாள் இவள். தன்னோடேயே வந்து இருந்துவிடலாம் என்கிறான் பழைய கணவன். அவனது வீட்டுக்குப் போகிறார்கள் சில தருணங்களேனும் கழிந்த கடந்த காலத்தின் இனிய ஞாபகங்களில் சேர்ந்து குடிக்கிறார்கள். உடலுறவு கொள்ள விரும்புகிறோன் என்கிறான் கணவன். உடலுறவின் பாதியிலும் போதையிலும் தன்னை இழந்தவனாக வன்முறையாளனாக நரம்புத் தளர்ச்சிக்காரனாக ஒரு கனம் அழுகையிலும் மறுகணம் வன்முறையிலும் என முன்னுரைமுடியாதவனாக ஆகிறான் கணவன். தான் சந்தோஷமாயிருந்த பழைய காதலியரை நினைத்து அழுகிறான். தன்னை இவள் எப்போதுமே புரிந்து கொள்ள வில்லை என்கிறான். ஒட்டாத உறவு. புரிந்து கொள்ளஇயலாமல் பிரிந்த தாம்பத்யம் அல்லது சேர்ந்து வாழ சாத்தியமில்லாத மனவியல் அமைப்பு. போவதற்கு இடமில்லாமல் தான் உன்னிடம் வந்தேன் தற்போது உன்னோடு தங்கமுடியாத இந்த நள்ளிரவில் இவ்வளவு வன்முறையாளனாக நடந்து கொள்கிறாய் என வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் அவள்.
|
ஒரு தனிமனுஷி எனும் அளவில் ஏற்கனவே அவளுக்குப் போவதற்கு இடமில்லை. பெற்றோரிடம் தனது காதலனிடம் அல்லது தனது கணவனிடம் - இன்னும் தனது மகனிடம்கூட அவளுக்குப் போவதற்கு இடமில்லை. பெரிலினிக்கு வந்த புதிதில் அவள் தனது மகனைச் சென்று பார்க்கிறாள். அவனோடு ஒரு சில நாட்கள தங்க முடியுமா எனத் தெரிந்து கொள்வது உத்தேசம். அவனும் அவனது மகனும் இணைந்த ஜெர்மனியின் புதிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகி விட்டார்கள். சமீபத்தில்தான் சிகரெட் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள். சதா சிகரெட் குடிக்கும் தாயை தனது மனைவிக்கு பிடிக்காது என்பதால் அம்மாவை எரிச்சலோடு பார்க்கிறான் மகன். வேலையிலிருந்து வரும் மருமகள் தாங்கள் ஒரு விருந்துக்குப் போகவேண்டும் என்றும் தனது மாமியாருக்கு விரும்பினால் அவள் விரும்பிய இடத்தில் அவளை காரில் போகும் வழியில் இறக்கிவிட்டுப் போகிறேன் என்கிறாள். அனேகமாக தனது கணவனுடனான அனுபவத்துடன் அவளது பெர்லினில் தங்கியிருக்கும் கனவு முடிகிறது.
மறுபடியும் மூனிச் வருகிறாள். அவளிடம் அன்றாட செலவுகளுக்குப் பணமில்லை. வைத்திய மாத்திரைக்குப் பணமில்லை. சிகரெட் குடிக்கப் பணமில்லை. தனது அன்றாட வாழ்க்கைக்கும் பணமில்லை. முன்பொருநாள் தான் மூனிச் கடையொன்றில் வாங்கிய தனது மேலங்கியொன்றை பாதி விலைக்கு எடுத்துக் கொள்வீர்களா என்று அந்தக் கடையில் சென்று கேட்கிறாள். அந்தக் கடையில் அப்படியான வழக்கமில்லையென விற்பனைப் பெய் சொல்கிறாள். வரும் வழியில் ரோட்டைக் கடக்கையில் நடுத் தெருவில் கால் தடுமாறி மயங்கி விழுகிறாள். மருத்துவமனை படுக்கையில் கிடக்கிறாள். அவளுக்கு வாதம் இருக்கிறதென்றும் இனி சிகரெட்டை நிறுத்தாவிட்டால் அவள் நடக்கமுடியாது- கால்களை இழக்க வேண்டிய நிலை வரும் என டாக்டர் சொல்கிறார். சொந்த வாழ்வின் உறவு நொறுங்கல்களாலும் உடல்சார்ந்த அவலத்தினாலும் அரசியல் நம்பிக்கைகளின் வீழ்ச்சியினாலும் அவளுக்கு இப்போது அடைக்கலத்திற்கான இடம் என்பது சாத்தியமற்றுப் போகிறது. அவளது மனம் சார்ந்த அடைக்கல இடமாக இருந்த சிகரெட் புகையும் மதுவும் இனிக் கூடாது என்கிறார் மருத்துவர். அவளது இலக்கிய அரசியல் நண்பன் வருகிறான். அவனும் இவள் போலவே நம்பிக்கை கொண்டவன்தான். இவளை ஆறத்தழுவி ஆறுதல் சொல்கிறான். தான் சில நாட்களுக்கு வியன்னா செல்வதாகவும் அங்கு தனது நாடகம் மேடையேற்றப்படப்போகிறது என்றும் சொல்கிறான். சில நாட்களில் திரும்பிவந்து பார்ப்பதாகச் சொல்கிறான்.
அவள் மருத்துவமனையில் வேலை செய்கிற சிப்பந்திகளிடம் கெஞ்சி திருட்டுத்தனமாக சிகரெட் பெறக் கூடியதாக இருக்கிறது. மாடியின் சுருள் வடிவத்தைக் கீழ்நோக்கியபடி அவள் படிகளேறி உயரே உயரே செல்கிறாள். மேலிருந்து கீழே பார்கிறாள். படிகளின் வட்டவடிவச் சுருள் தலைசுற்ற கீழே தெரிகிறது அதள பாதாளம். மறுபடியும் பார்த்தபடி மேலே ஏறுகிறாள். உச்சி மாடியில் கழிவறையொன்றின் உள்ளே சென்று தாழிட்டுக் கொள்ளும் அவள் தனக்குவிருப்பமான சிகரெட் ஒன்றை எடுத்து அனுபவித்துப் புகைவிடுகிறாள். முடிந்ததும் மெல்ல வெளியேறி நிதானமாக ஜன்னலுக்கு அருகில் செல்கிறாள். ஜன்னல் கதவைத் திறக்கும்போது வெய்யிலும் பிரகாசமான ஆகாயமும் அறைக்குள் விழுகிறது. ஜன்னல் விளிம்பின் மீதேறி கால்களை அந்தரவெளில்விட்டு மெதுவாக முழு உடலும் சரிய அந்த மரூததுவமனையின் உச்சி மாடியிலிரூநது கீழே சரிகிறாள். படம் முடிகிறது. புடம் தொடங்கும்போது முதல்காட்சியில் மதுக் கிண்ணத்தை ஒரு கையிலும் மறு கையில் சிறிதான விஷப் பாட்டிலும் வைத்துக் கொண்டு கண்ணத்தில் கண்ணீர்த்தாரையுடன் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தொலைபேசியில் தனது சிநேகிதனிடம் சொல்கிறாள். சிநேகிதன் ஆறுதல் சொல்லி அவளை தற்கொலையினின்று தடுக்கிறான். இப்போது இந்த உச்சி மாடியில் அவளைத் தடுக்க அவளது சிநேகிதன் இல்லை. அவன் வியன்னாவில் நாடகம் நடத்தப் போய்விட்டான்.
பேர்லின் சுவர் வீழ்ந்தபின்னால் சில மார்க்சிய எதிர்ப்பு மேற்கத்திய அறிவுஜீவிகளும் மார்க்சியப் படிப்பற்ற கம்யூனிஸ்ட்டுகளின் வாழ்நிலை அனுபவம் பற்றிய புரிதலற்ற சில தமிழ் முதிர்குழந்தைகளும் கம்யூனிஸ எதிர்ப்பு நாவல் எழுதுகிறார்கள். மார்க்சீய எதிர்ப்பும் கூட அறிவார்ந்த நிலைபாடுகளை எடுக்க முடியும் உதாரணமாக வரலாற்றின் இறுதியையும் தாராளவத முதலாளித்துவ சமூகமே வரலாற்றின் இறுதிக்கட்டம் என்றும் எழுதுகிற பூக்குயேமா. துரதிருஷ்டவசமாக தமிழில் மார்க்சிஸ்ட்டுகளை எரிச்சலூட்டும் பொருட்டு மனம்நிறைய வன்மத்தோடு கருத்துரிர்க்கிற ஜெயமோகன்தான் இருக்கிறார். தமிழிலக்கிய வெளியில் இலக்கிய விமர்சனம் அழகியல் பற்றிய விவாதங்களில் அரசியல் மிக நுட்பமாகச் செயல்படுகிறது. இதை மிக நுட்பமாகச் செய்பவர் ஜெயமோகன். நம்முடைய சமூகங்களில் பல தளங்களில் அறியாமை நிலவுகிறது.
இலக்கிய பற்றி விரிந்த படிப்புள்ளவனும் சதா இலக்கியம் என்று பேசிக்கொண்டே இருப்பவனும் சுத்தச் சுயம்புவான அரசியலற்ற பிரகிருதி என நினைக்கிறோம். அனேகமாக இந்த முகமூடியைக் கழற்றிவிட ஒரே ஒரு எழுத்தாளன் ஜெயகாந்தன்தான். அதனால்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய இராணுவத்திற்கு ஆதரவான அவரது அபத்த நிலைபாட்டையும் இப்போது அதை மறுபரிசீலனை செய்தபடியிலான அவரது இணக்கமான பார்வையையும் காண்பது அவர் வழியிலேயே சாத்தியமானது. படைப்பாளி அரசியல் பொறுப்பைச் சரியாக உணர்ந்தவர் அவர். மற்றவர்கள் இன்னும் வெகு சௌகரியமாக அந்த முகமூடியை அணிந்திருக்கிறார்கள். தமது அரசியலை அழகியல் விவாதங்கள் எனும் பெயரில் சாகித்ய அகாதமி எனும் பெயரில் இலக்கியவிசாரங்கள் எனும் பெயரில் முன்வைக்கிறார்கள்.
பின் சோவியத் உலகம் இந்த முதிர்குழந்தைகள் நினைக்கிறபடி அவ்வளவு சுலபமாகப் புரிந்த கொள்ளக் கூடியதல்ல. குர்திஸ் விடுதலை இயக்கத்தலைவர் அப்துல்லா ஓசசலானை ஆதரிக்கிற நோபல் பரிசு இலக்கியவாதி ஸரமாகோ ஏன் ஜபடிஸ்ட்டா கிளர்ச்சியையும் ஆதரிக்கிறார் என்பது மிக முக்கியமான பதில் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. அவரோடு சேர்ந்து நாடகாசரியர் ஹெரால்ட் பின்னட்டரும் விவரணப்பட இயக்குனர் ஜான் பில்ஜரும் செக்கோஸ்லாவாகிய முன்னாள் அதிபர் மிலஸோவிச்சை விடுதலை செய்ய வேண்டும் என ஏன் கோருகிறார்கள் என்பது முக்கியமான பிரச்சினை. இவர்கள் பல்லாயிரக்கணக்கில் ஈராக் குழந்தைகளை குண்டு வீசிக் கொன்ற பொஸ்னியாவில் அப்பாவிகள் மீது குண்டு வீசிக் கொன்ற தொலைக்காட்சி நிலையத்தைத் தகர்த்த பில் கிளிண்டனை யுத்தக் குற்றவாளி என்கின்றனர். சில தமிழ் முதிர்குழந்தைகள் கற்பிதம் செய்துகொள்கிற மாதிரி உலகெங்கும் மார்க்சிய எதிர்ப்பு ஆலை அடிக்கவில்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்னும் மதிக்கப் பெரூம சிந்தனையாளராக இந்த இரண்டாம் மிலினியத்தின் சிந்தனையாளனாக மாரக்ஸ்தான் இருக்கிறார். மூன்றாம் உலக நாடுகளில் இன்றும் பலம் வாய்ந்த மாற்றுச் சிந்தனையாக அரசியலாக அதுதான் இருக்கிறது. அவ்வியக்கங்களில் நிறைய ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நடந்து வருகிறது சில இயக்கங்கள் கற்றுக் கொள்ள மறுக்கின்றன. தமிழ் முதிர்குழந்தைகளின் ஆட்சேபம்தான் என்ன? மதவாத பாசிசம் பற்றி வாய் திறக்காத இவர்கள் என் மார்க்சிஸ்டகளுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்? இவர்களது இலக்கியவிசாரத்தின் அடியில் உறைந்திருப்பது இவர்களின் வாழ்நிலைகளைப்பாதுகாக்கும் இவர்களது அரசியல். வெளிப்படையாக இதை முன்வைக்கத் திராணியில்லாத அறிவுலக நபும்சகர்கள் இவர்கள்.
ஹனாவுக்கு மட்டுமல்ல இன்று சிந்தாந்த அளவில் உலகில் நிறையக் கலைஞர்கள் சிந்தனையாளர்கள் மாற்று வாழ்க்கை முறையைத் தேர்வதில் சிந்திக்கிறவர்கள் போவதற்கு இடமில்லாத ஒரு மனநிலையில்தான் இருக்கிறார்கள். போப்புக்கு மூன்றாம் பாதையாக அது இருக்கிறது. ஐரோப்பிய மார்க்சியர்களுக்கு ஸ்டாலினியம் நீக்கிய ஜனநயாகத்தை அணைத்துக் கொண்ட சோசலிசமாக அது இருக்கிறது. தாம் வாழும் நாட்டை எதிர்க்கிற எழுத்தாளர்களை அது உருவாக்குகிறது. மேற்கு ஐரோப்பிய எழுத்தாளர்கள் பெரூமபாலுமானவர் அரசு எதிர்ப்பு எழுத்தாளர்கள். இந்தியாவில் தமிழகத்தில் என்ன நடக்கிறது? அரசு எதிர்ப்பு எழுத்தாளர்கள் எத்தனைபேர்? எத்தனை எழுத்தாளர்கள் வெளிப்படையாக இந்து பாசிசத்தை அதனது கொலைகாரத்திட்டங்களை எதிர்க்கிறார்கள்? மார்க்சிய எதிர்ப்பில் வேகங்காட்டுகிற எத்தனை சிற்றிலக்கிய ஏடுகள் இந்து பாசிசத்தைப் பற்றிப் பேசுகிறது? காந்தியம் ஒரு வாழ்க்கைமுறையாக தம்மை அர்ப்பணித்தவர்கள் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். மாக்சியத்தை அதனது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான அதனது ஆன்மாவை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர்கள் தெலுங்கானா போராட்டம் தொடங்கி புன்னபுரவயலார் ஈராக சின்னியம்பாளயம் தியாகிகள் வரை இருக்கிறார்கள். இவர்களும் இவர்களது தியாகமும் - இன்று தேசிய விடுதலைக்குப் போராடுகிற தற்கொலைப் போராளிகளது தியாகமும் கூட தத்துவ அறவியல் தேடலுக்கு படைப்பாதரத்துககு உதவுபவைதான். இவர்களது வாழ்வும் இந்திய சைவ-சைதன்ய தத்தவ குருக்களைப் போல உன்னதமானதுதான்.
|
உண்மையில் மார்க்சியத்திற்கும் அதனது வாழ்க்கை முறைக்கும் தம்மை ஒப்புக் கொடுத்த மாபெரும் மனிதர்கள் இநதியாவில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்திய அளவில் எம்.என்ராய் என்று ஒற்றை உதாரணத்தைச் சொல்லாம் எனில் தமிழக அளவில் போலீசினால் கைது செய்யப்பட்டு காணாமல் போன எல்.அப்பு என்கிற நக்ஸலைட் போராளியைச் சொல்லாம். மார்க்சிஸ்ட்டுகள் பற்றிய படைப்புக்கள் என்பது இருவகையில்அமையும். ஒன்று தனி மனிதர்களாக அவர்களது அக வார்வும் அரசியல் வாழ்வும் தொடர்பானதாக விரியும். பிறிதொன்றாக வரலாற்ஞ்ச் சம்பவங்களும் தத்துவார்த்த விவாதங்களும் அவர்தம் அக வார்வு சார்ந்ததாகவும் அமையும். மார்க்சிஸ்ட்டுகளைக் கொச்சைப்படுத்துகிற புனைவுகளில் வரலாறு இடம் பெறாது. சித்தாந்த மோதல்கள் இடம்பெறாது. கம்யூனிஸ்ட்டு இன்டர்நேனல் இடம்பெறாது. உலக அளவில் இந்திய தமிழக அளவில் உட்கட்சிக்குள் நடைபெற்ற விவாதங்கள் இடபெறாது. அரசியலையும் தனிமனித வாழ்ககை¬யுயம் பிரிக்கவொணததாக அவர்தம் வார்வூ இந்தப் புனைவகளில்இம்பெறாது. ஒரு போர்னோகிராபி உருவாக்குகிற பரபரப்பு போல இந்த நாவல் சர்ச்சைகளை உருவாக்கும். அதுதான் தமிழில் பின்தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு நேர்ந்திருக்கிறது. அது சொல்லப்படுவது போல் குருர நாவலல்ல. மாறாக சர்ச்சைகளைப் பயன்படுத்தி விகாரமாகத்தன்னை நிறுவிக்கொள்ளும் ஒரு போர்னோகிராபி நாவல். ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ஷின்ட்லர்ஸ்லிஸ்ட் படத்தை சில இடதுசாரி விமர்சகர்கள் போர்னோகிராபி என்றபோது பல்வேறு சினிமா விரும்பிகளுக்கு ஆச்சரியமாகவிருந்தது. அது உண்மையில் போர்னோகிராபிதான். ஒரு காலத்தில் யூதர்கள் சித்திரவதைப்படுத்தப்பட்டது உண்மைதான். இன்று நிலை என்ன? பாலஸ்தீனர்களின் சித்திரவதைகளுக்கு யார் பெறுப்பு? கறுப்பு வெள்ளையிலிருந்து இறுதிக்காட்சியில் நிகழ்காலத்திற்கு வண்ணமாக மாறும் படத்தில் நிகழ்காலத்தில் இஸ்ரேலியர்கள் இரங்கத்தக்கவர்களாகவா இருக்கிறார்கள்? உண்மைதான். பேரழிவைப்பற்றிய முக்கியமான படம். இன்று சாவையும் சித்திரவதைகளையும் திரும்பத்திரும்ப மெலோடிராமாவாக காண்பிக்கும்போது பார்வையாளனின் இரங்கும் மனம் நைச்சியமாக வசியப்படுத்தப்படுகிற போது நிகழ்காலம் மறைக்கப்பகிறதே இதை யாரிடம் போய்ச்சொல்ல? பாலஸ்தீனர்களின் துயரம் பல பத்தாண்டுகளாகத் தொடர்கிறதே இது ஏன் யூதரான ஸ்பீல்பர்க்குக்கு பிரச்சினையாக இல்லை? இதைப் போலத்தான் இந்தியாவின் பேரழிவு விண்ணுபுரத்தில் நேரவில்லை. நிஜத்தில் வெண்மணியிலும் தாமிரபரணி நதிக்கரையிலும் தான் நேர்ந்தது. இதை விட்டுவிட்டு புகாரினைத் தேடிப்போனது அப்பட்டமான அரசியல்இல்லாமல் வேறென்ன?
இந்தியாவிலும் கூட இடதுசாரிகளின் அரசியல் பற்றிய மறுபரிசீலனையுடன் படைப்புகள் தோன்றியிருக்கின்றன. மஹா ஸ்வேதா தேவி சௌராஸ்க்கி மா எனும் நக்ஸலைட் இயக்கத்தின் அரசியல் அதில் ஈடுபட்ட மனிதர்களின் ஆத்ம உத்வேகம் தோல்விமரணம் போன்றவை குறித்த வங்க நாவல். இதே மாதிரியில் ஒரு மார்க்ஸிஸ்ட் அறிவுஜீவியின் மனோரீதியான சுயவிசாரணைகளை முனவைக்கும் ஜ.பி.தேஷ்பாண்டேவின் உத்துவஸ்த்த தர்மசாலா எனும் மராத்திய நாடகம் (இரண்டு நூல்களுமே ஆங்கிலத்தில் முறையே மதர் ஆப் 1084 எனும் பெயரிலும் ஏ மேன் இன் டார்க் டைம்ஸ் எனும் பெயரிலும் கல்கத்தா ஸீ கல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மதர் ஆப் 1084 அதே பெயரில் நிஹ்லானியினால் திரைப்படமாகியிரூககிறது. எ மேன் இன் டார்க் டைம்ஸ் நாடகத் தலைப்பு மிக முக்கியமான கோட்பாட்டாளரான அனா அரந்தத்தின் த மென் இன் டார்க் டைம்ஸ் புத்தகத்திலிருந்து பெறப்பட்டிருக்கிறது. அனாவின் இன்னொரு முக்கியமான நூல் வன்முறை குறித்த அவரது தத்துவ ஆய்வு நூலாகும்.
மார்க்ஸிஸ்டுகள் பேரழிவு பற்றிய இரங்கலில் ஈடுபடுவதில்லை. சதா மறுபரிசீலனை செய்கிறவர்களும் கற்றுக் கொள்கிறவர்களும் அவர்கள் தான். அவர்களிடம் நீண்ட விமர்சன மரபு உண்டு. இதன்பொருட்டுதான் இன்னும் மார்க்சியத்தின் உள்ளறை ஆற்றலான மானுட விடுதலையின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். மார்க்சியம் இன்னும் பலம் வாய்ந்த ஒரு சித்தாந்தமாக நிலவுவதற்கான வரலாற்று அடிப்படை இதுதான். அது ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட் மக்களின் பக்கம் நிற்கிறது. ஒடுக்குமுறை இந்த உலகத்தில் இன்னும் நீங்கிவிடவில்லை. ஒடுக்குமுறைச் சக்திகள் மறுபடி தம்மை திரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த ஒடுக்குமுறை சக்திகளுக்கு எதிராகத்தான் ஜெனிவாவில் முதலாளித்துவ- எதிர்ப்பு ஆனட்டடி காபிடலிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் திடட்மிட்டு சட்டபூர்வமற்ற முறையில் அடக்குமுறையை ஏவி ஓடுக்க நினைத்தது மேற்கத்திய அரசுகள். ஆர்ப்பாட்டக்காரரும், கொல்லப்பட்டார். போவதற்கு இடமில்லாத கலைஞர்கள் நாடு இனம் மொழி தாண்டி அங்கு சென்று குவிந்தார்கள்.
பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ், பார்ன் போன்ற திரைப்படங்களைத்தந்த அமர கலைஞன் ஜில்லோ பொன்டகார்வோ தலைமையில் இத்தாலியின் மாபெரூம சினிமா இயக்குனர்கள் உலகெங்குமிருந்து சென்ற திரைப்பட இயக்குனர்கள் உள்பட மேற்கத்திய அரசுகளின் வன்முறையைத் விவரணத்திரைப்படமாக்கியிருக்கிறார்கள். போலீஸ் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டியது என்பதை போராட்ட இயக்கத்தின் தலைமயகத்தை அதிகாலை இரண்டு மணிக்குத் திட்டமிட்டுத் தாக்கியிருக்கிறார்கள். திட்டமிட்டு ஒரு போலீஸ் அதிகாரி ஒரு இளைஞரை சுட்டக் கொன்றான் என்பதை இந்தக் கலைஞர்கள் குழு குழுவாகப் பிரித்து படமாக்கியிருக்கிறார்கள். இன்று இவர்களுக்குப் போவதற்கு இடமில்லைதான். தேசாந்திரிகளாகத் திரிய இவர்களுக்கு மனதிருக்கிறது. தேசதேசங்களிலும் தமது உணவுக்குப் உடைக்கும் இருப்பிடத்தக்கும் கௌரவமான வாழ்க்கைக்கும் போராடிக் கொண்டிருக்கிற மக்கள் இன்னும் இருக்கிறார்கள். பிலிப்பைன்சில் வியர்வைத் தொழிலாளிகள் மீதான மேற்கத்திய சுரண்டல் இருக்கிறது. மேற்கத்திய சமூகங்களில் மனித உரிமை மீறல்கள் இருக்கிறது. இந்தியாவில் தலித் மக்களின் மீதான திட்டமிட்ட கொலை வெறித் தாக்குதல் இருக்கிறது. இவ்வகையில் போவதற்கு இடமில்லாத மனிதர்களை போலீசும் நரிகளும் நாய்களும் பின் தொடர்ந்து சென்று கண்கானிக்கத்தான் செய்கின்றன. அவர்களைப் பின்தொடர்பவர்கள் சித்திரவதைகளையும் மேற்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
வரலாறு இனி போவதற்கு இடமில்லாத மனிதர்களால்தான் பதிவு செய்யப்படும். ஜிப்ஸிகள் போல் மனசாட்சியுள்ள கலைஞர்கள் இன்றைய உலகில் போவதற்கு இடமில்லாதவர்கள்தான்.
-------------------------------------------------------------
**No Place to Go : Oskar Roehler : 2000
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: esaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/esaamozhi |