இதழ்: 24     ஐப்பசி (October 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
பெர்லின் சுவர் தகர்ப்பிற்குப் பின் : போவதற்கு இடமில்லை - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா 5 - சாரு நிவேதிதா
--------------------------------
திரைமொழி - 13 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 7 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 9 - தினேஷ் குமார்
--------------------------------
”காக்கா முட்டை”, திரைப்படத்தின் இயக்குனர் மணிகண்டனுடன் நேர்காணல்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - 2 - அறந்தை மணியன்.
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 6 - பி.கே.நாயர்
--------------------------------
சொர்க்கத்தின் நாட்கள் - வருணன்
--------------------------------
 
   
   

 

 

இந்திய சினிமா வரலாறு – 7

- பி.கே.நாயர் :: தமிழில் : அறந்தை மணியன் : தட்டச்சு உதவி: தினேஷ் குமார்

இந்திய சினிமா – ஒரு உற்று நோக்கல் - பால்கேயின் வழித்தடம்

ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக மாற வேண்டும் என்ற தமது இலட்சியத்தை நிறைவு செய்து கொள்வதற்காக தாதா சாகேப் பால்கே தமது ஆரம்ப நாட்களில் தொடங்கிய நிறுவனம் “பால்கே பிலிம்ஸ்...”!

அது பெரும்பாலும் குடிசைத்தொழில் போலத்தான் இயங்கிவந்தது. கடன் வாங்கியும், சொந்தப் பொருட்களை அடகு வைத்தும்தான் பால்கே அந்நிறுவனத்தை நடத்தினார். அவருக்கு பல குடும்ப – நண்பர்களும், அவரது நலன் – நாடியோரும் உதவி செய்தனர். அவர்களில் ஒருவர்தான், ‘திரயம்பக் தேலாங்’ என்பவர். பால்கேயிடம் ‘வில்லியம் சன் காமிராவை’ இயக்குவதில் பயிற்சி பெற்றார் தேலாங்.

பால்கேயின் முதல் ஐந்து படங்களான – “ராஜா அரிச்சந்திரா” (1913) “பஸ்மாசூர மோகினி” (1914), “சத்யவான் சாவித்திரி” (1914), “சத்யவதி ராஜா அரிச்சந்திரா” (1917) (1913ல் வெளியான முதல் படமான “ராஜா அரிச்சந்திரா”வின் மறுபதிப்பு) ஆகியவற்றை அவர் “பால்கே பிலிம்ஸ்”சார்பில்தான் தயாரித்தார்.

ஆயினும், நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்கவும், பட விநியோகத்தினால் கிடைத்த வருமானத்தைக் கண்காணிக்கவும், புதிய முதலீடுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், மேலும் பெரிய அளவுத் தயாரிப்புகளில் இறங்கவும், தமது ‘வீட்டுத் தொழிற்சாலை’யான “பால்கே பிலிம்ஸ்” நிறுவனம் மிகவும் சிறியது என்பதை அவர் உணர்ந்தார்.

அக்கால நிலவரப்படி, மேலும் ஐந்து கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு 1918 ஆம் ஆண்டு ஒரு ‘கூட்டுத் தயாரிப்பு நிறுவனத்தை’ பால்கே தொடங்க வேண்டி வந்தது. “இந்துஸ்தான் பிலிம் கம்பெனி” என்ற அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக ‘வாமன் ஸ்ரீஉதர் ஆப்தே’ ‘லக்‌ஷ்மண் பல்வந்த பாதக்’ ‘மாயாசங்கர் பட்’ ‘கோகுல்தாஸ் தாமோதர்’ மற்றும் ‘மாதவ்ஜி ஜெசிங்’ ஆகியோர் இணைந்தார்கள்.

அந்த நிறுவனத்திலிருந்து பால்கே ஓராண்டுக்குள்ளாகவே விலக நேர்ந்தது. ஆயினும் 1923ல் அதன் ‘தலைமைத் தயாரிப்பாளராகவும், தொழில் - நுட்ப ஆலோசகராகவும், மற்றும் கலையம்ச படைப்பாளியாகவும் மீண்டும் இணைந்தார்.

’இந்துஸ்தான் பிலிம் கம்பெனி’ தயாரித்த தொண்ணூற்றி மூன்று படங்களில் நாற்பதுக்கும் மேலானவற்றில் பால்கேயின் பங்களிப்பு இருந்தது. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை; “ஸ்ரீ கிருஷ்ண ஜன்மா” (1918) “காலிய மர்தன்” (1919) ”சாந்த துக்காராம்” (1921) ”சாந்த நாம் தேவ்” (1922) “சாந்த ஏகநாத்” (1926) – இவை எல்லாமே மவுனப் படங்கள், பால்கேயின் ‘பக்த பிரகலாதா’ படத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே தேசியத்திரைப்பட ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது. அது எப்போதுமே எனது ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. ஆகவே அதைப் பற்றி இங்கு விரிவாகவே பார்க்கலாம்.

என்றும் நிலைத்திருக்கும் புராணக்கதையான “பிரகலாதனை”ப் பற்றிய முதல் திரைப்படம் அனேகமாக இதுதான். இதையொட்டிதான் பின்னாட்களில் பல மவுனப் படங்களும் பேசும்படங்களும் அதே ஆண்டில் (1926) பாபுராவ் பெயிண்டரின் “மகாராஷ்டிரா பீம் கம்பெனி” மற்றொரு “பக்த பிரகலாதா” படத்தை வெளியிட்டது. அதில் பாலாசரகேப் யாதவ் என்பவர் இரண்யன் வேடத்தில் நடித்திருந்தார். தெலுங்கு மொழியின் முதல் பேசும் படம் இதே கதையை அடிப்படையாகக் கொண்டதுதான். மலையாளத்தில் இரண்டாவது பேசும் படமாகவும், மற்ற மொழிகளில் பல முறையும் இதே கதை படமாக்கப்பட்டது. ஆகவே, நமது ஆவணக்காப்பகத்தில் கிடைக்கும் இப்படத்தின் துண்டுப்பகுதியை ஆய்வது கூட பயனுள்ள முயற்சியே!

தணிக்கைச் சான்றிதழின் படி, இப்படம் சுமார் எட்டு ரீல்கள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் கிடைத்திருப்பதோ ஒரு ரீலுக்கும் குறைவு (519 அடி மட்டுமே).

பிரகலாதனின் கதை எல்லோருக்கும் தெரிந்ததே. இக்கதையின் மையக்கருத்து, பிற புராணக்கதைகள் போலவே – என்றும் தொடரும் “நல்லதுக்கும் தீயதுக்கும் இடையிலான போராட்டமும்” நல்லது என்றும் வெல்லும்”.... என்பதுவுமே!

இக்கதையில் இருக்கும் சிறப்பம்சம் என்னவெனில், இங்கு நல்லதும் , தீயதும் ஒரே குடும்பத்திற்குள்ளேயே – தந்தையும் மகனுமாக இருக்கின்றன என்பதுதான்!

தந்தை ‘தீயதின்’ அடையாளச் சின்னமாகவும், மகன் ‘நல்லதின்’ குறியீடாகவும் திகழுகிறார்கள்.

இருவருக்குமிடையே துரதிருஷ்டவசமாக மாட்டிக்கொண்டு தவிப்பவள் பிரகலாதனின் தாய்!

வியப்புக்குரிய வகையில், எல்லாப் புராணக்கதைகள் போலவே, இதிலும் ‘தீமை’யின் அவதாரமான ‘இரண்யன்’ பிறக்கும் போது நல்லவனாகத்தானிருக்கிறான். பக்தி, இடைவிடாமுயற்சி, தவம் ஆகியவற்றின் பயனாக இரண்யன் மெதுமெதுவாக ஓர் உயர் நிலையையும், இறைவனால் வரமளிக்கப்பெற்ற மகிழ்ச்சியான வாய்ப்பையும் பெறுகிறான். அவனது தவத்திற்குப் பதிலாக சில குறிப்பிட்ட, மனித சக்தியை மிஞ்சும் உயர்சக்திகளை வரமாகப் பெறுகிறான். பின்னர் அந்த சக்திகளை தவறான முறையில் பயன்படுத்துகிறான்.

ஒரு சாதாரண கட்சித்தொண்டன் மெல்ல மெல்ல அரசியல் - ஏணியில் ஏறி பெரும் தலைவனாக மாறுவதும், உச்சிக்குப் போனவுடனேயே தனது ஆரம்ப நிலைகளை மறந்து அதற்கு நேரெதிராகத் திரும்பிவிடுவதும், நமது நினைவிற்கு வரும்.

இது போன்ற பல புராணக்கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு இணையான நபர்களை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இன்றும் சந்திக்க முடிகிறது! பால்கே போன்ற ஆரம்பகாலத் திரையுலகமேதைகள் இந்தத் தொடர்பைப் புரிந்து கொண்டு அன்றே தங்களது பொழுதுபோக்குப் படங்களில் கொண்டு வருமளவிற்கு தெளிவு பெற்றிருந்தார்கள்.

’பக்த பிரகலாதனின்’ தந்தையான அசுரவேந்தன் இரண்யன், இறைவனிடமிருந்து பெற்ற வரத்தின் பயனாக மூன்று விசேஷ சக்திகளைப் பெற்றான். அவை 1.) எந்தவொரு மனிதனோ அல்லது மிருகமோ அவனைக் கொல்ல முடியாது.; 2.) பகலிலோ இரவிலோ அவனைக் கொல்ல முடியாது; 3.) மண்ணிலோ, விண்ணிலோ, கடலிலோ அவனை யாரும் கொல்ல முடியாது., என்றும் சொல்லப்படுகிறது.)

இதனால்தான் இறைவன் அவனைக் கொல்ல ஒரு வினோதமான உருவத்தையும் (முழுக்க முழுக்க மனிதனாகவோ , சிங்கமாகவோ இல்லாமல்) பகலும் இல்லாமல் இரவும் இல்லாமல் இருக்கும் வேளையையும், வாயிற்படியையும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது என்பதில் ஆச்சரியமில்லை.

ஆவணக்காப்பகத்தில் இருக்கும் துண்டுப்பகுதி அப்படத்தின் கடைசி ரீல் மட்டுமே என்றாலும் கூட பால்கேயின் கற்பனைத் திறனுக்கும், பாத்திரப் படைப்பிற்கும் எடுத்துக்காட்டாக, அப்பகுதி அமைந்துள்ளது. சான்றாக, இரண்யனாக நடிக்கும் ‘பாச்சு’ என்ற நடிகர் அந்த ‘தீய’ பாத்திரத்திற்கு உயரிலக்கிய பரிமாணத்தை அளித்திருக்கிறார். அந்தக் கடைசி ரீலில் குறைவான நேரம் மட்டுமே இரண்யன் தோன்றும் காட்சிகள் இருக்கின்றன. ஆயினும் அதிலேயே பின்னாளில் தோன்றிய திரையுலக ‘வில்லன்கள்’ எல்லோருக்கும் மேலான ஒரு இடத்தை ‘பாச்சு’ அடைந்திருக்கிறார் என்பதை நாம் உணர முடிகிறது.

அவரது குட்டையான, பளுதூக்கும் பயில்வான் போன்ற கட்டையான தோற்றமும், குத்தீட்டிகள் போன்ற கண்களும் அவற்றின் கோபப் பார்வையும், அவரருகில் நிற்கும் எவரையுமே நடுங்கவைக்கும்! தன் மீதும், உலகின் மற்றவர்கள் மீதும் மாளாத கோபம் கொண்டவர் என்ற உணர்வை அவரது கடுமையான பார்வையே ஏற்படுத்தி விடுகிறது.

அவருக்கு எல்லாமே எதிராகப் போகின்றன. அவரது பெருமையைக் குலைக்கும் வகையில் அவமானங்கள் அடுக்கடுக்காக ஏற்படுகின்றன. இரண்யன் தாம் பெற்றிருந்த எல்லாவிதமான அமானுஷ்ய சக்திகளிடையேயும், ஒரு இரக்கத்துக்குரிய பாத்திரமாக உருவெடுக்கிறார்.

கிடைத்திருக்கும் அந்தத் துண்டுப்பகுதி, மூன்று வெவ்வேறு ‘இட – வெளி’ களில் கதை செயல்படுவதைக் காட்டுகிறது.

முதல் இரண்டும் வெளிப்புறக் காட்சிகள், மூன்றாவது இறுதிப்பகுதி உட்புறப்பகுதியில், ஒரு நாடக மேடை போன்ற தளத்தில் நடக்கிறது. முதல் பகுதிகாட்சிகள் அரண்மனை – நந்தவனத்தில் நடக்கிறது. இரண்டாவது கட்ட காட்சிகள் சர்க்கஸ் கூடாரத்தின் நடுவே இருக்கும், கலைஞர்கள் வித்தை காட்டும் வட்டப்பகுதி போன்ற, இடத்தில் நடக்கின்றன. முதல் இரண்டு ‘தளங்களிலும்’ காட்சிகள் மாறி மாறி, “நடிப்பு எதிர்வினை நடிப்பு” என்ற வகையில் காட்டப்படுகின்றன. மூன்றாவதாக இறுதிக்கட்ட காட்சி, உட்புறத்தில் நாடகமேடை போன்ற தளத்தில், நாடகங்களில் ரசிகர்களை நோக்கி நின்றவாறே நடிகர்கள் நடிக்கும் பாணியில், நடிக்கப்படுகிறது.

முதல் கட்ட காட்சியில் அரண்மனை நந்தவனத்தில் மன்னன் இரண்யன் மதுவருந்திக் கொண்டிருப்பது போன்ற செயல்பாடு காட்டப்படுகிறது. (அது ஒரு நிஜமான பூங்காவில் படமாக்கப்பட்டிருக்கவேண்டும்; கற்களால் ஆன இருக்கைகளும், அவற்றின் பின்னணியில் இயற்கையான செடி கொடிகள் தொங்கிக் கொண்டிருப்பதும் நன்கு தெரிகிறது)

திரையின் இடது பக்கத்தில் ஒரு கல், இருக்கையில் அமர்ந்து இரண்யன் ஒரு ஜாடியிலிருந்து மதுவைக் குவளையில் ஊற்றுகிறான். அவனது மெய்க்காப்பாளனொருவன் பின்னால் நின்று கொண்டு அதைப் பார்க்கிறான். இரண்யன் எழுந்து முன்னால் நகர்ந்து திரும்பிப் பார்க்கிறான். அப்போது இரு சேவகர்கள் பிரகலாதனை இரண்யனின் பின்புறத்திலிருந்து இரண்யன் முன் கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவனது கையில் கோடாலி ஒன்று காணப்படுகிறது. பிரகலாதனின் வாயசைவிலிருந்து அவன் “ஹரி... ஹரி...” என்று முணுமுணுப்பதைப் புரிந்து கொள்ளுகிறோம்.

இரண்யன் தன் முன்பு நிற்கும் பிரகலாதனைத் தனது முன் கையால் கீழே தள்ளிவிட்டு, “இவனை மதம் கொண்ட யானையின் கீழ் போட்டு துண்டம் துண்டமாக நசுக்குங்கள்” என்று ஆணையிடுகிறான். (இது துணைத்தலைப்பு அட்டையாகக் காட்டப்படுகிறது)

(தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இந்த இடத்தில் தலைப்பு அட்டைகளில் காட்டப்படுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துணைத்தலைப்பு அட்டைகளில் உரையாடல்களும், காட்சி விளக்கங்களும், பிற பால்கே படங்களைப் போலவே, மேற்புறத்தில் இந்தியிலும், அடிப்புறத்தில் ஆங்கிலத்திலுமாக எழுதப்பட்டிருக்கின்றன).
இரண்யன் மதுக்கோப்பையை தரையை நோக்கி ஓங்கி வீசிவிட்டு, பிரகலாதானை இழுத்துச் செல்லும் படி ஆணையிடுகிறான். இரண்டு சேவகர்களும் பிரகலாதனை இழுத்துக்கொண்டு, தாங்கள் வந்த வழியாகவே திரும்பிப் போகிறார்கள். ஒரு வயதான சேவகன், பிரகலாதனுக்குக் கருணை காட்டும்படி கைகளைக் குவித்து நடுக்கத்துடன் வேண்டுகிறான். மன்னன் இரண்யனோ அக்காவலனை ‘உதைப்பேன்’ என்பது போல மிரட்டிவிட்டு மற்றொரு கோப்பையை எடுத்து அதில் மதுவை ஊற்றி சுவைக்கிறான்.

இப்போது காட்சி களம் மாறுகிறது.

இரண்யனின் ஆணை செயல்படுத்தப்படும், சித்திரவதைக் கூடம், பின்னணியில் வண்ணம் தீட்டப்பட்ட சுவர்களைக் காட்டும் படங்கள். இதனால் அக்காட்சிக் களத்திற்கு ஒரு ‘தனிப்பட்ட கூடம்’ என்பதைப் போன்ற தோற்றம் கிடைக்கிறது. ( முன்காட்சிக் களம் இவ்வகையில் வேறுபடுத்தப்படுகிறது)

திரையின் இடது பக்கத்திலிருந்து இரண்டு காவலர்கள் பிரகலாதனுடன் அக்கூட்டத்தினுள் நுழைகின்றனர். இதைத் தொடர்ந்து மாவுத்தனுடன் (பாகனுடன்) நிற்கும் அலங்கரிக்கப்பட்ட யானையின் ‘ஷாட்’ ஒன்று தனியாகக் காட்டப்படுகிறது. மாவுத்தன் (பாகன்) யானையை அழைத்துக்கொண்டு (திரையை விட்டு இருவரும் ‘வெளியேருவது’ காட்டப்படுகிறது) பிரகலாதன் நிற்குமிடத்திற்கு வருகிறான். யானையைப் பார்த்த காவலர்கள் இருவரும் உயிருக்குப் பயந்து ஓட, பிரகலாதன் தனித்து நிற்கிறான். எதிரே யானையும் மாவுத்தனும். (இதிலிருந்து அது மதம் பிடித்த யானை அல்ல என்பது தெளிவாகிறது. அது சர்க்கஸிலிருந்தோ கோயில் – திருவிழாவிலிருந்தோ கொண்டு வரப்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானையாக இருந்திருக்க வேண்டும்).

”ஹரி... ஹரி...” என்று ஜபித்துக்கொண்டிருக்கும் பிரகலாதனின் முன் வரும் யானை தனது முன்னங்கால்களை மடக்கி அமருகிறது. அது தனது முன்னங்கால்களில் ஒன்றை வசதியாக உயர்த்தும்படி பாகன் ஆணையிடுகிறான். பிரகலாதன் அக்காலில் ஏறி யானையின் கழுத்து, நெற்றி ஆகியவற்றைத் தடவிக் கொடுத்து விட்டுக் கீழே குதிக்கிறான். யானை எழுந்து நிற்க, பாகன் அதை வந்த வழியாகவே கூட்டிச் செல்கிறான்.

தமிழில் அறந்தை மணியன். அக்டோபர் - நவம்பர் 1992
அடுத்த இதழிலில் தொடரும்.

- தொடரும் -

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, பி.கே. நாயர் அவர்களின் கட்டுரைகளை பேசாமொழி இதழில் மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </