லத்தீன் அமெரிக்க சினிமா - 4
சினிமா நோவோ இயக்கத்தின் தந்தை எனக் கருதப்படும் Nelson Periera dos Santos 1928-இல் பிறந்தவர். இதுவரை மொத்தம் 25 படங்களை எடுத்திருக்கிறார். சென்ற ஆண்டு கூட நெல்சன் எடுத்த ஒரு ஆவணப்படம் வெளிவந்தது. படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்களுக்கும் திரைப்படக் கல்லூரிகளுக்கும் சென்று சினிமா பற்றி பாடம் எடுக்கிறார். அவர் எடுத்த 25 படங்களில் 15 படங்கள் ப்ரஸீலிய நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டவை என்ற விஷயத்தைத் தமிழ்ச் சூழலில் வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தையல்காரரின் மகனாகப் பிறந்த நெல்சன் சட்டம் பயின்று, பின்னர் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். இந்த வேலை அவருக்கு ப்ரஸீல் முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பை அளித்ததால் பல்வேறுபட்ட மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மிக நெருக்கமாக அறிந்து கொண்டார். பிறகு, பாரிஸ் சென்று அங்குள்ள திரைப்படக் கல்லூரியில் படித்தார். ப்ரஸீல் திரும்பி வந்து சில பிரபலமான வணிகப் படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றி விட்டு இரண்டு ஆவணப்படங்களின் மூலம் சீரியஸ் சினிமாவில் நுழைந்தார்.
|
Nelson Pereira dos Santos |
1955-இல் ரியோ தி ஹனைரோ நகரத்தைப் பற்றி எடுத்த Rio 40 Degrees என்ற படம்தான் அவரது முதல் படம். இதுதான் சினிமா நோவோ இயக்கம் உருவாவதற்கு உந்துதலாக அமைந்த படமும் கூட. இந்தப் படத்தில்தான் ப்ரஸீலின் குரூர எதார்த்தமாக இருந்து வரும் favela முதல் முதலாக சினிமாவில் காண்பிக்கப்பட்டது. ஃபவேலா என்றால் சேரி என்று பொருள். இந்தப் படம் முழுவதும் கை கேமராவினால் தெருக்களிலேயே எடுக்கப்பட்டது. இது பற்றி நெல்சன் சொல்கிறார்: ”ஃபில்டர் இல்லாமல் naked லென்ஸுடன், வெளிச்சம் நடிகர்களின் முகங்களில் நேரடியாக விழுவதைப் படம் எடுப்பது ஒரு ஆச்சரியமான, அதிர்ச்சியான அனுபவமாக இருந்தது. சினிமா எடுப்பதில் இது ஒரு புரட்சிகரமான செயல்பாடும் கூட.” ரியோ, 40 டிகிரி என்ற இந்தப் படம் மிகக் குறைந்த செலவில், இதில் நடித்தவர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் கொடுத்த பணத்தில்தான் எடுக்கப்பட்டது.
ஐரோப்பிய சினிமா, ஹாலிவுட் சினிமா ஆகியவற்றுக்கும் லத்தீன் அமெரிக்க சினிமாவுக்கும் உள்ள மிக முக்கியமான, அடிப்படையான வித்தியாசம் என்னவென்றால், முதல் இரண்டு சினிமாவும் கதாபாத்திரங்களைக் காண்பித்தது. லத்தீன் அமெரிக்க சினிமா தான் சினிமாவின் வரலாற்றிலேயே முதல் முதலாக மக்களைக் காண்பித்தது. அது ப்ரஸீலிய சினிமாவில் Rio, 40 Degrees மற்றும் Rio, Zona Norte ஆகிய இரண்டு படங்களின் மூலம் ஆரம்பித்தது என்கிறார் க்ளாபர் ரோச்சா. (இரண்டாவது படமும் நெல்சன் இயக்கியதுதான். அது பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.)
சினிமா பயிலும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல், Cinema 2: The Time-Image என்பதாகும். மிஷல் ஃபூக்கோவுக்குப் பிறகான ஃப்ரெஞ்ச் தத்துவவாதியான Gilles Deleuze எழுதியது. இந்த நூலில் அவர் சினிமா நோவோ பற்றிக் குறிப்பிடும் போது, “முதல் முதலாக இந்த இயக்கம் மக்களைக் காண்பித்தது” என்கிறார்.
ரியோ, 40 டிகிரி (செல்ஷியஸ்) என்ற படத்தைப் பற்றி எழுதுவதை விட அதை நீங்களே பார்ப்பதுதான் உசிதம் என்று கருதுகிறேன். படம் முழுவதும் ரியோ நகரில் ஒரே நாளில் நடக்கும் பல்வேறு பட்ட சம்பவங்களை வெட்டி வெட்டி ஒட்டுகிறார் நெல்சன்.
ஒரு காதல் ஜோடி கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சிறுவன் அந்த இளைஞனிடம் சென்று, “நீ என் தண்ணீர் கேனைக் கொட்டி விட்டாய், அதற்குக் காசு கொடு” என்று கேட்கிறான். இளைஞன் மறுக்கிறான். அப்போது அங்கே தன் நாயுடன் வாக்கிங் வரும் ஒரு கனவான் அந்த இளைஞனுக்காகப் பரிந்து பேசி, சிறுவனிடம், ”ஏய் ஓடி விடு, இல்லாவிட்டால் உன்னைப் போலீஸிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்” என்று மிரட்டுகிறார். பிறகு இளைஞனிடம், ”இங்குள்ள சேரி மக்கள் இவர்களைப் பன்றிகளைப் போல் பெற்றுப் போட்டு விடுகின்றனர். யாரும் இல்லாமல் தெருவில் அலையும் இந்தச் சிறுவர்களால் நமக்குத்தான் பிரச்சினையாக இருக்கிறது” என்கிறார்.
அடுத்த காட்சியில் ரியோவின் சேரி. அதில் ஒரு குடிசையில் மிக நோய்மையுடன் படுத்துக் கிடக்கிறாள் ஒரு பெண். ”மருந்து சாப்பிடாதே, அந்தக் குப்பிகளில் என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? விரிதியானாவிடம் போய் மந்திரித்துக் கொள், இல்லாவிட்டால் மூலிகைகளைச் சாப்பிடு” என்கிறாள் முதியவள். இருவரது வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
”என் பிள்ளைகள் என்னைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை.”
“பிள்ளைகளை நம்புவது லாட்டரிச் சீட்டு வாங்கி விட்டு லாட்டரி விழும் என்று நம்புவதைப் போன்றது. உன் மகன் மீரோ எங்கே இருக்கிறான்?”
”மூன்று போலீஸ்காரர்களை அடித்து விட்டு ஜெயிலில் இருக்கிறான்.”
|
அதே வீட்டில் அடுத்த காட்சி: கோழியை விற்றுக் காசாக்கலாம் என்று தன் வீட்டுக் கோழியைப் பிடிக்கிறான் கிழவன். ”அந்தக் கோழியை நான் தான் வளர்த்தேன், உன்னிடம் கொடுக்க மாட்டேன்” என்று சொல்லி கிழவனைத் தடுக்கிறாள் கிழவி. இந்தச் சண்டையில் கோழி கிழவன் கைகளிலிருந்து தப்பி ஓடி விடுகிறது. அடுத்த காட்சியில், தலைப்புச் செய்திகளைக் கூவி பேப்பர் விற்கிறான் ஒரு சிறுவன். ஒரு இடத்தில் கூட்டமாக அமர்ந்து சீட்டு ஆடுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான கால்பந்தாட்ட மைதானம். விளையாட்டைப் பார்க்கக் கூடும் லட்சக் கணக்கான மக்கள். அடித்துப் பிடித்துக் கொண்டு இடம் பிடிக்க ஓடுகிறது கூட்டம். “ஏய், கண் தெரியாத குருடனா நீ… பார்த்துப் போகக் கூடாது?”
இரண்டு அணியில் எந்த அணி வெல்லும் என்பது பற்றிய கோடீஸ்வரர்களின் சூதாட்டக் கூட்டம் விளையாட்டு மைதானத்தில் உள்ள ஒரு அறையில் நடக்கிறது. இதில் பல கிளப்புகள் ஈடுபடுகின்றன. ப்ரஸீலுக்காக பத்து ஆண்டுகள் ஆடி பல பரிசுகளை வாங்கிக் கொடுத்திருக்கும் டானியலை நீக்கி விட்டு இன்னொரு இளைய ஆட்டக்காரனை ஆட வைக்க சதி நடக்கிறது. இதற்கு இடையில், இரண்டு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே பார்வையாளர் பகுதியில் ஏற்படும் சண்டை, அதனால் ஏற்படும் கலாட்டா எல்லாம் காண்பிக்கப்படுகிறது.
அடுத்த காட்சி. ரியோ நகரில் உள்ள Cobacabana கடற்கரையில் வேர்க்கடலை விற்கிறான் ஒரு சிறுவன். (உலகப் புகழ்பெற்ற கொபாக்காபானா கடற்கரை இப்போது எப்படி இருக்கிறது என்பதை இந்தப் புகைப்படத்தில் காணலாம்.)
https://www.google.co.in/search?q=copacabana&client=opera&biw=
1440&bih=792&tbm=isch&imgil=u_bckq_YcSm4lM%253A%253Bf4rEfON8J5d-
HM%253Bhttp%25253A%25252F%25252Fen.wikipedia.org%25252Fwiki%25252F
Copacabana_(Rio_de_Janeiro)&source=iu&pf=m&fir=u_bckq_YcSm4l
M%253A%252Cf4rEfON8J5d-HM%252C_&usg=__CoBYBvLThG5tzQstODDvn7sWR
i4%3D&ved=0CD0Qyjc&ei=cjoqVKa_JMOIuAT5x4KQDw#tbm=isch&q=copacabana
+beach+photos&facrc=_&imgdii=_&imgrc=Nz9h3o9gTPuUeM%253A%3BHI9szS
hkVLINlM%3Bhttp%253A%252F%252Fwww.bestourism.com%252Fimg%252Fitems
%252Fbig%252F105%252FBrazil_Copacabana-Beach_357.jpg%3Bhttp%253A%
252F%252Fwww.bestourism.com%252Fmedias%252Fdfp%252F357%3B640%3B430
இதே கடற்கரை அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை ரியோ, 40 டிகிரியில் நாம் பார்க்கிறோம். வேர்க்கடலை விற்கும் சிறுவனிடம் வந்து ஒரு ஆள், ”நீ நெக்கோவுக்காகத்தானே வேலை செய்கிறாய்? இனிமேல் எனக்காக வேலை செய்” என்று மிரட்டுகிறான்.
”இல்லை, நான் யாருக்காகவும் வேலை செய்யவில்லை. உனக்காகவும் நான் வேலை செய்ய முடியாது.”
”இல்லை; நீ நெக்கோவுக்காகத்தான் வேலை செய்கிறாய். நான் இப்போதே போய் நெக்கோவையும் அவன் கோஷ்டியையும் கொல்லப் போகிறேன்…”
”அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் யாருக்காகவும் வேலை செய்யவில்லை.”
”அப்படியானால் உனக்கு விற்பனையாகும் பணத்தில் பாதியை நீ எனக்குக் கொடுக்க வேண்டும்.”
சொல்லி விட்டு சிறுவனிடமிருந்து பணத்தைப் பிடுங்கப் பார்க்கிறான். சிறுவன் ஓடிப் போய் தனக்குத் தெரிந்த ஒரு கூட்டத்திடம் ஒளிகிறான். அவர்கள் அந்த ரௌடியை விரட்டி அடிக்கிறார்கள். அப்போது ஒரு பெண் அந்தச் சிறுவனிடம், “நீ ஏன் போலீஸிடம் சொல்லக் கூடாது?” என்று கேட்கிறாள். ”எப்படிச் சொல்ல முடியும்? இது போன்ற விற்பனைகளெல்லாம் தடை செய்யப்பட்ட காரியமாயிற்றே” என்கிறார் ஒருவர். அடுத்த காட்சியில் தொங்கும் ரயிலில் வேர்க்கடலை விற்கிறான் சிறுவன். அங்கே ஒரு சீமாட்டி அவனிடம் கேட்கிறாள்:
”நீ எங்கே வசிக்கிறாய் தம்பி?”
”சேரியில்.” (சேரியின் பெயரைச் சொல்கிறான்)
”ஏன் நீ படிக்கவில்லை. உன் அம்மா என்ன செய்கிறாள்?”
”அம்மா செத்து விட்டாள்.”
”அப்பா?”
”எனக்கு அப்பா இல்லை.”
(அந்த சீமாட்டியைப் பார்த்த போது எனக்கு ஹிண்டு பேப்பருக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் மைலாப்பூர் கனவான்கள் ஞாபகம் வந்தனர்.)
அடுத்த காட்சியில் ரவுடி மீண்டும் சிறுவனைத் துரத்துகிறான். நீண்ட ஓட்டத்துக்குப் பிறகு ஒரு தொங்கும் ட்ராமின் மேல் கூரையில் குதித்து விடுகிறான் சிறுவன். கட். ஒரு அரசியல்வாதி விமானத்திலிருந்து இறங்குகிறார். குள்ளமாகவும் பெரும் தொப்பையுடனும் இருக்கிறார். புதிதாக மந்திரியாகி இருக்கும் அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பத்திரிகையாளர்களும் நண்பர்களும் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.
”இந்தப் புதிய மந்திரிசபைக்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்களா?”
”நிச்சயமாக. இந்த மந்திரிசபையால் ப்ரஸீலில் நிச்சயம் சீர்திருத்தங்கள் நடந்தேறும், ப்ரஸீல் முன்னேற்றமடையும் என்று நம்புகிறேன்.”
”ரியோ நகருக்கு நான் முதல் முதலாக வருகிறேன். அதனால் நான் முதலில் இயேசு கிறிஸ்துவின் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு விட்டு என் மந்திரி வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.”
”அதற்காகத்தானே His Excellency இங்கே கார் காத்துக் கொண்டிருக்கிறது” என்று ஒருவர் சொல்ல பத்துப் பதினைந்து பேர் அந்தக் கார் கதவைத் திறக்க அடித்துப் பிடித்துப் பாய்கிறார்கள்.
கொபாக்காபானா கடற்கரையில் இரண்டு அமெரிக்க சீமாட்டிகள் அமர்ந்து ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். What a wonderful country என்கிறாள் ஒருத்தி. அப்போது கிழிந்த சட்டையோடு ஒரு இளைஞன் வந்து ”ஏதாவது பணம் இருந்தால் கொடுங்கள்” என்று கேட்க, ”என்னிடம் டாலர் தானே இருக்கிறது?” என்கிறாள் அவள். அந்த இளைஞன் இன்னொரு ஆளிடம் போய்க் கேட்கிறான். அவன் இவனை ஒரு வேலைக்குப் போகச் சொல்கிறான். இப்படியே பலரிடம் கேட்டும் கிடைக்காமல் போகிறது. அப்போது எட்டு வயதுள்ள ஒரு சிறுவன் சிகரெட் புகைத்துக் கொண்டே இவனைப் பார்த்துச் சிரிக்கிறான். உனக்குப் பிச்சையே எடுக்கத் தெரியவில்லை என்கிறான். ”இல்லை; நான் பிச்சை எடுக்கவில்லை. ஊருக்குத் திரும்ப வேண்டும்; கையில் பணம் இல்லை. அதனால் கேட்கிறேன்” என்கிறான் இளைஞன்.
”இதோ பார், நான் உனக்கு சொல்லித் தருகிறேன்” என்று சொல்லி விட்டு, ஒரு கனவானிடம் போய், ”என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை; கொஞ்சம் காசு தாருங்கள்” என்றதும் அந்த ஆள் ஒரு நாணயத்தை அவனிடம் கொடுக்கிறான். உடனே இளைஞனிடம் வரும் சிறுவன் அவனுக்கு ஆலோசனை தருகிறான். ”உனக்காகக் கேட்டால் தர மாட்டார்கள். உன் அம்மாவுக்காகக் கேள், தருவார்கள்.”
இப்படி பல சம்பவங்கள் துண்டு துண்டாக வந்து கொண்டே இருக்கிறது. திடீரென்று சிறுவனும் மந்திரியும் சாலையின் நடைபாதையில் சந்தித்துக் கொள்கிறார்கள். சிறுவனுக்கு அந்தக் குள்ள மனிதர் மந்திரி என்று தெரியாது. யாராக இருந்தால் என்ன, அவனுக்கு வேர்க்கடலை விற்க வேண்டும். அவரிடம் போய், ”வேர்க்கடலை வேண்டுமா?” என்று கேட்கிறான். ”தூரப் போ, நான் ஒன்றும் வேர்க்கடலை தின்னும் ஆள் அல்ல” என்று சொல்லி அவனை விரட்டி விடுகிறார் மந்திரி. மந்திரிக்கு ஒரு அதிகாரி தன் மகளையே கூட்டிக் கொடுக்கிறார். அந்தப் பெண்ணுடன் கைகளை பின்னால் கட்டியபடி நடந்து செல்லும் மந்திரி அவ்வப்போது தலையைத் திருப்பி அவளுடைய பிருஷ்டத்தைப் பார்க்கிறார். அவள் அவரை சார் என்று அழைக்கும் போது எனக்கு சார் என்ற மரியாதையெல்லாம் பிடிக்காது, சும்மா பெயர் சொல்லியே கூப்பிடு என்கிறார்.
பிறகு அந்தப் பெண்ணிடம், ”உன் தந்தைக்கு என்னிடம் என்ன வேண்டும்?” என்று நேரடியாகக் கேட்கிறார் மந்திரி. ”தந்தை ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்; அதற்கு உங்கள் உதவி தேவை” என்கிறாள் பெண். உடனே காட்சி மாறுகிறது.
படம் முழுவதும் வேர்க்கடலை, வேர்க்கடலை, வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுங்கள் என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. படம் முழுவதும் சிறுவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டே திரிகிறார்கள். அவ்வப்போது கால்பந்தாட்ட வானொலி வர்ணனையும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. படத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு கால்பந்தாட்டப் போட்டியும் நீண்ட நேரம் காண்பிக்கப்படுகிறது.
இந்தப் படம் எனக்கு ஸ்கார்மேத்தா எழுதிய I Dreamt The Snow Was Burning என்ற நாவலை நினைவுபடுத்தியது. அந்த நாவலும் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தியே செல்லும். நாவல் முழுவதுமே ஒரு கால்பந்தாட்டத்தின் வானொலி வர்ணனையைக் கேட்பது போல் இருக்கும். கொடூரமான வறுமையும் ஏற்றத்தாழ்வும் உள்ள ஒரு நாட்டில் மக்கள் அத்தனை பேரும் வர்க்க பேதம் இல்லாமல் கால்பந்தாட்ட அடிமைகளாக இருப்பதும் இந்தப் படத்தின் பல கதைகளில் ஒரு கதையாகச் சொல்லப்படுகிறது.
ரியோ, 40 டிகிரி என்ற இந்தப் படம் வெளிவந்த 1955-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த முக்கியமான படங்கள்: அனார்கலி (நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி), கோமதியின் காதலன் (டி.ஆர். ராமச்சந்திரன், சாவித்திரி), குலேபகாவலி (எம்.ஜி.ஆர்., டி.ஆர். ராஜகுமாரி), கள்வனின் காதலி (சிவாஜி கணேசன், பானுமதி), கணவனே கண் கண்ட தெய்வம் (ஜெமினி, அஞ்சலி), மிஸ்ஸியம்மா (ஜெமினி, சாவித்திரி). எல்லா விதத்திலும் ப்ரஸீலை ஞாபகப்படுத்தும் தமிழ்நாட்டில் ஆரம்ப கட்டத்திலிருந்தே சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருந்திருக்கிறது என்பதை மேற்கண்ட தமிழ் சினிமா பட்டியலிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, ஏற்றத்தாழ்வு, கல்வியறிவு இன்மை, நோய் என்று எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கலாச்சாரம் எந்த அளவுக்கு வலுவாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்திருக்கிறது என்பதற்கு இந்தத் தொடரில் நாம் பார்க்கும் படங்கள் அனைத்தும் சாட்சி.
அடுத்த காட்சியில் கிழட்டு மந்திரியும் குமரியும் பேசிக் கொள்கிறார்கள்:
”நான் உங்களை வயதானவர் என்று நினைத்தேன்.”
”ஓ, நீ நினைத்தது தவறு. நான் இங்கே உள்ள எல்லா பையன்களையும் விட இளைஞன்.”
”ஆமாம், நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?”
”இந்தக் குதிரைக்குக் கடிவாளம் பிடிக்காது.”
அடுத்து அந்தப் பெண்ணிடம் ஒரு உதவி கேட்கிறார் மந்திரி. ”எனக்கு ஒரு நல்ல, அழகான, புத்திசாலியான, கடும் உழைப்பாளியான பெண் செக்ரட்டரி வேண்டும். அது ஏன் நீயாக இருக்கக் கூடாது? வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்தால் போதும்.”
கட்.
வேர்க்கடலை விற்கும் பையனைத் துரத்திக் கொண்டு சில சிறுவர்கள் ஓடி வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி ஓடும் போது எதிரே வரும் ஒரு லாரியில் மாட்டி செத்து விடுகிறான் வேர்க்கடலைச் சிறுவன். துரத்தியவர்களில் ஒரு சிறுவனைப் பிடித்து விடும் போலீஸ்காரன் அவனை இழுத்துக் கொண்டு ஃபவேலாவுக்கு வருகிறான்.
”இவனுடைய பெற்றோர் யார்?”
படத்தின் ஆரம்பத்தில் நாம் பார்த்த கிழவி, “இந்தச் சிறுவனுக்கு யாரும் இல்லை; என் வீட்டில்தான் வளர்கிறான்” என்கிறாள். இதைக் கேட்டதும் போலீஸ் அவனை அங்கேயே விட்டு விட்டுப் போய் விடுகிறான். போகும் போது, “கொஞ்ச நாளைக்கு வெளியே தலை காட்டாதே” என்று சொல்லி விட்டுப் போகிறான்.
கடைசியில் வரும் 13 நிமிட ஸாம்பா நடனமும் பாடலும்தான் இந்தப் படத்தின் மிக முக்கியமான செய்தியைத் தரும் காட்சி. இசை, பாடல், கொண்டாட்டத்தின் மூலம்தான் இந்தச் சேரி மக்கள் தங்கள் துயரங்களைக் கடந்து செல்கிறார்கள் என்பதே அந்தச் செய்தி.
***
நெல்சன் பரேராவின் இயக்கத்தில் 1963-இல் வெளிவந்த Vidas Secas (Barren Lives - தரிசு வாழ்க்கை) என்ற படம்தான் சினிமா நோவோ இயக்கத்தின் முதல் படம். Vidas Secas என்ற தலைப்பில் Graciliano Ramos எழுதி 1938-இல் வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது தரிசு வாழ்க்கை.
Barren lives புகைப்படத்துக்கு:
http://board.dailyflix.net/index.php?/topic/8643-barren-lives-1963/
தரிசு வாழ்க்கை படத்தின் கதை 1940களில் ப்ரஸீலின் வடகிழக்கு மாகாணத்தின் வறண்ட பகுதியில் நடக்கிறது. ஃபாபியானோ, அவன் மனைவி வித்தோரியா, அவர்களின் இரண்டு பிள்ளைகள், பலேயா என்ற நாய், ஒரு கிளி. இங்கிருந்துதான் படம் துவங்குகிறது. ஃபாபியானோ மாடுகளைப் பராமரிப்பதில் வல்லவன். ஆனால் அந்தப் பஞ்சப் பிரதேசத்தில் அவனுக்கு வேலை கிடைப்பதில்லை. மனிதர்களை விட மிருகங்களோடு தன்னால் நல்ல முறையில் பழகிப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைப்பவன் ஃபாபியானோ. வித்தோரியா மிகவும் எளிமையானவள். வாழ்க்கையில் அவளுடைய ஒரே கனவு, தரையில் படுக்காமல் ஒரு மெத்தையில் படுக்க வேண்டும் என்பதுதான்.
பிள்ளைகளில் மூத்தவனுக்கு ஐந்து வயது. இளையவனுக்கு மூன்று வயது. நாய்க்கு பலேயா என்ற பெயர் இருந்தாலும் பிள்ளைகள் இருவருக்கும் பெயர் இல்லை. நாவலிலும் அப்படியே. அவர்கள் வாழ்ந்த இடம் வறண்டு போய் பஞ்சம் வந்து விட்டதால் பிழைப்புத் தேடி வேறு இடம் நோக்கிப் போகிறார்கள். வறண்ட பிரதேசங்களில் அவர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள். சுமார் மூன்று நிமிடங்களுக்கு இந்தக் காட்சி வருகிறது. அப்போது ஒரு கர்ண கடூரமான ஓசை நம் செவிப்புலனைத் தாக்குகிறது. படத்தின் அவலச் சுவையை முன்னறிவிப்பது போல் இருக்கிறது அந்த அருவருப்பான ஓசை. இந்த ஓசையும் மூன்று நிமிடங்கள் தொடர்கிறது. பச்சை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வெறும் கட்டாந்தரையாகக் கிடக்கிறது நிலம். இருக்கும் ஒரே ஒரு மரமும் ஒரு இலை கூட இல்லாமல் எலும்புக் கூடாய் நிற்கிறது. பறவைகளும் மிகச் சோர்வாக பறக்கின்றன.
|
ஃபாபியானோவைத் தவிர வேறு யார் காலிலும் செருப்பு இல்லை. நால்வருமே வெறும் கந்தல் ஆடையுடன் இருக்கிறார்கள். மூத்த பையன் சுரைக் குடுவையையும் ஒரு பையையும் வைத்திருக்கிறான். சிறியவனை வித்தோரியா இடுப்பில் தூக்கி வைத்திருக்கிறாள். அவள் தலையில் ஒரு சிறிய மூட்டை. இவ்வளவுதான் அவர்களின் உடமைகள். இளைப்பாறுவதற்காக ஒரு இடத்தில் அமர்கிறார்கள். உண்ண எதுவுமில்லை. ஃபாபியானோ ஏதோ ஒரு வேரை எடுத்துக் கடித்துப் பார்த்து விட்டு தூக்கி எறிகிறான். பலேயா அதை எடுக்கப் பாய்ந்து ஓடுகிறது. அவ்வளவு பசி. கிளி வேறு பசியில் க்றா க்றா என்று கர்ண கொடூரமாகக் கத்திக் கொண்டிருக்கிறது. திடீரென்று வித்தோரியா அந்தக் கிளியை எடுத்து அதன் தலையைப் பிய்த்தெடுக்கிறாள். அடுத்த காட்சியில் எரியும் சுள்ளிகளுக்கு இடையே கிளி சுடப்படுகிறது. நால்வரும் மீண்டும் நடக்கிறார்கள். பலேயா வெகு சுறுசுறுப்பாக அவர்களைத் தொடர்கிறது. மூத்த பையன் வெயிலிலும் பசியிலும் அடிக்கடி சோர்ந்து துவண்டு விழுந்து விடுகிறான். அப்போதெல்லாம் பலேயா பலமாகக் குரைத்து ஃபாபியானோவை அழைக்கிறது. கடைசியில் ஃபாபியானோ மூத்த பையனைத் தனது முதுகில் போட்டுக் கொண்டு நடக்கிறான்.
படத்தில் இயற்கையான சப்தங்களைத் தவிர வேறு பின்னணி இசை எதுவும் இல்லை. படம் முழுவதுமே ஆவணப் படத்தைப் போலவே நகர்கிறது. நீண்ட தூரம் நடந்த பிறகு அவர்கள் ஒரு மாட்டுப் பண்ணைக்கு வந்து சேர்கிறார்கள். முதலாளி ஃபாபியானோவுக்கு வேலை கொடுக்கிறான். ஒரு ஆண்டு கழிகிறது. சொற்ப ஊதியம். அதிலும் அவர்கள் நால்வருக்கும் காலணி வாங்கிக் கொள்கிறார்கள். பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு விழாவுக்குச் செல்கிறார்கள். அங்கே ஃபாபியானோவை ஒரு போலீஸ் அதிகாரி சீட்டாட்டத்துக்கு அழைக்கிறான். பலரும் ஆடிக் கொண்டிருக்கும் அந்த இடத்தில் போலீஸும் ஃபாபியானோவும் தோற்று பணத்தை இழக்கிறார்கள். போலீஸ் ஃபாபியானோவைத் திட்ட ஃபாபியானோ அவனை வேசி மகனே என்கிறான். ஃபாபியானோவைக் கைது செய்து முதுகிலேயே கட்டையால் அடிக்கிறான் போலீஸ். மறுநாள் விடுதலை செய்யப்படும் ஃபாபியானோ வித்தோரியாவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பண்ணைக்கு நடக்கிறான். இதற்கு இடையில் பலேயா காணாமல் போய் விடுகிறது. அதற்காக அழுது கொண்டிருக்கிறான் மூத்த பையன். வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஓர் இடத்தில் இவர்களுக்காகக் காத்திருக்கும் பலேயாவைக் கண்டு குதூகலிக்கிறான் சிறுவன்.
மீண்டும் பஞ்சம் வருகிறது. வேலை இல்லாததால் மீண்டும் பட்டினி கிடக்க நேர்கிறது. முதலாளி இதயமே இல்லாதவனாக இருக்கிறான். பல நாள் பட்டினிக்குப் பிறகு பலேயாவை சுட்டுக் கொல்கிறான் ஃபாபியானோ.
என்னுடைய சினிமா அனுபவத்தில் இவ்வளவு குரூரமான ஒரு படத்தை நான் பார்த்ததில்லை. திரையில் தெரிவது நடிப்பு தான் என்று தெரிந்தாலும் அதைப் பார்ப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. மிகுந்த சிரமத்துடன் தான் பார்த்தேன். ஏனென்றால், இதுதான் ப்ரஸீலின் குரூரமான எதார்த்தம். அன்புக்கோ, கருணைக்கோ இடமே இல்லாமல் வாழ்க்கை அந்த மக்களை நசுக்கி எடுக்கிறது. சமூகத்தின் ஏற்றத் தாழ்வும் சுரண்டலும்தான் இதற்குக் காரணம். போலீஸ், பண்ணை முதலாளிகள், மத குருமார்கள் ஆகிய மூன்று பிரிவினருமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதை மிக ஆக்ரோஷமாகப் பதிவு செய்கிறார் நெல்ஸன். இந்த இடத்தில் நான் தமிழகத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட அங்காடித் தெரு, பரதேசி என்ற இரண்டு படங்களையும் எண்ணிப் பார்த்தேன். பணக்காரன் கெட்டவன், போலீஸ் கெட்டவன், சமூகம் முழுவதும் சுரண்டல் ஆகிய கருதுகோளை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் அவை. ஆனால் அதே கருதுகோளை வைத்து எடுக்கப்பட்ட தரிசு வாழ்க்கை ஏன் ஒரு க்ளாஸிக்காக மாறுகிறது? இது பற்றி நாம் விவாதிக்க வேண்டும். தமிழ் சினிமாவுக்கு உரிய எந்தப் பாசாங்கும் தரிசு வாழ்க்கையில் இல்லை. இந்தப் படத்தைப் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்ளலாம்.
படத்தில் கருணை ததும்பும் ஒரே இடம், ஒரு காட்டில் ஃபாபியானோவை சித்ரவதை செய்த போலீஸ் அவனிடம் மாட்டிக் கொள்கிறான். ஃபாபியானோவின் கையில் கத்தி இருக்கிறது. கொல்வதற்கு ஓங்கி விட்டு பிறகு கத்தியை உறையில் போட்டுக் கொண்டு திரும்பி விடுவான்.
பலேயாவை ஃபாபியானோ சுட்டுக் கொல்லும் போது மூத்த பையன் கதறி அழுகிறான். படம் முழுவதும் ஜெபித்துக் கொண்டே இருக்கும் வித்தோரியா அந்தத் தருணத்திலும் சிலுவைக் குறி போடுகிறாள்.
”சினிமா என்பது ஒரு கலாச்சார வெளிப்பாடு. எனவே வேறு எந்தக் கலைப் படைப்புக்கும் நிகரானது. சினிமா அது பிறந்த சமூகத்தின் வாழ்க்கையை வெளிப்படுத்தியபடி அதனுடைய context-உக்குள் இயங்குகிறது. கலைகளிலேயே மிகவும் நவீனமான சினிமா நம் கலாச்சாரத்தின் முதுகெலும்பாக இயங்குகிறது” என்று சொல்லும் நெல்ஸன் சினிமா நோவோவின் அடிப்படை குறைந்த செலவில் படம் எடுப்பதுதான் என்கிறார். சொல்லப் போனால் பணமே தேவையில்லை. நெல்சன் பாரிஸில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற போது இத்தாலியின் நியோ ரியலிஸம் அவருக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது, சினிமாவின் கரு அல்லது அதன் உள்ளார்ந்த தன்மைகள் போன்றவைகளால் அல்ல. சினிமா தயாரிப்பு என்ற முறையில். அவரே இது பற்றிச் சொல்கிறார்: ”இத்தாலியின் நியோலிசம் தெருக்களுக்குச் சென்று படம் எடுப்பதற்கான துணிச்சலை எனக்குக் கொடுத்தது. நீங்கள் ஒரு பயிற்சி பெற்ற நடிகராக இருக்கத் தேவையில்லை. நீங்கள் ஒரு பிரபலமான ஸ்டாராக இருக்கத் தேவையில்லை. ஒரு ஸ்டுடியோ தேவையில்லை. பெரிய விலையுள்ள உபகரணங்கள் தேவையில்லை. கோடிக்கணக்கான பணம் தேவையில்லை.” பிறகு எதுதான் தேவை? க்ளாபர் ரோச்சா சொல்கிறார்: ”படம் எடுப்பதற்குக் கையில் கேமராவும் தலையில் மூளையும் போதும்.”
|
நெல்ஸனின் தற்போதைய புகைப்படம்:
http://www.kinocaviar.com/nelson-pereira-dos-santos.php
இந்த இணைப்பிலேயே ரியோ 40 டிகிரிக்கான ஸ்டில்லும் உள்ளது. இரண்டு சிறுவர்கள்.
பின்வருவது நெல்ஸன் பெரேராவும் ப்ரஸீலிய சினிமா பற்றிய ஆய்வாளரும் வரலாற்றாசிரியருமான Randal Johnson-உம் நிகழ்த்திய உரையாடல். இந்த உரையாடல் ரியோ 40 டிகிரி (1955) மற்றும் Music According to Tom Jobim (2012) ஆகிய இரண்டு படங்களின் திரையிடல்களுக்குப் பிறகு நடந்தது. இந்த உரையாடலில் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
ரியோ 40 டிகிரி ரியோ நகரின் பல வித்தியாசமான இடங்களையும் குணாம்சங்களையும் பதிவு செய்து ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காண்பித்த படம். இதை எடுக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஜேம்ஸ் ஜாய்ஸைப் படித்த போதுதான் எனக்கு இந்த யோசனை வந்தது. அந்தச் சமயத்தில்தான் நான் அவரை ஸ்பானிஷ் மொழியில் படித்து முடித்திருந்தேன். அப்போது போர்த்துகீஸில் ஜேம்ஸ் ஜாய்ஸ் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவில்லை. ரியோ நகரம் பன்முகத்தன்மை கொண்டது. எனவே ஒரே நாளில் அதன் பல்வேறு இடங்களில் நடக்கும் பல சம்பவங்களைத் தொகுத்து ஒரு படத்தை உருவாக்கலாம் என்று நினைத்தேன். ஜாய்ஸின் உள்ளடக்கத்திலிருந்து என் படத்தின் கரு மிகவும் வேறுபட்டது என்றாலும் கூட படத்தின் கட்டமைப்பைப் பொறுத்த வரை ஜாய்ஸ் தான் முதல் படி.
வேர்க்கடலை விற்கும் சிறுவர்களை எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்? படத்தின் இசையை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
ஃபவேலாவில் உள்ள மனிதர்களோடு எனக்குத் தொடர்பு இருந்தது. Ze Keti-க்கு அந்த மக்கள் மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் கேத்தி ஒரு கம்போஸராக தனது துவக்க காலத்தில் இருந்தார். அவருடைய ஓ சோ ஸாம்பா என்ற பாடல் அப்போது மிகப் பிரபலமாக ஆகியிருந்தது. எனவே அவருடைய ஸாம்பா பள்ளியில் அறிவிப்பு செய்து படத்தில் வரும் ஐந்து சிறுவர்களையும் தேர்ந்தெடுத்தார். ஒருவன் ரவுடியிடமிருந்து தப்பி கேபிள் காரின் மேல் கூரையில் உட்கார்ந்து தப்புகிறான். அதற்கடுத்து அவன் பல படங்களில் நடித்தான். ஓ சோ ஸாம்பா பாடலை மிக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டோம். படத்தில் நடித்த பல நடிகர்களுக்கு அதுவே முதல் படம்.
கொபாக்காபானா கடற்கரையில் படம் பிடித்த போது என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொண்டீர்கள்? ரியோ பூராவும் படம் பிடிப்பதற்கு சரியான திட்டம் வைத்திருந்தீர்களா?
முதல் விஷயம், என்னுடைய குழு மிகவும் சிறியது. ஒருவர் கை கேமராவை வைத்திருந்தார். ட்ரைபாட் எதுவும் எங்களிடம் இல்லை. எனக்கு ஒரே ஒரு உதவியாளர் இருந்தார். இன்னும் ஒருவர் மக்களிடம் சென்று கேமராவைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார். அவ்வளவுதான் எங்கள் குழு. எனவே எங்கள் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு கள்ளக் கடத்தல் வேலை மாதிரி தான் ரகசியமாக நடந்தது.
கால்பந்தாட்ட மைதானத்திலும் இப்படித்தான் செய்தோம். ஒருவர் கூட உட்காருவதற்கு இடமில்லாமல் இருந்த ஸ்டேடியத்தில் ஒரு சிறிய இடத்தைப் பிடித்துக் கொண்டு படம் எடுத்தோம்.
படத்துக்கு இசையமைத்த Radamés Gnatalli. அவரது இசை மிகவும் erudite ஆக இருந்தது. இசையிலும் படிப்பிலும் மிகப் பெரிய அறிஞர் அவர். ஆனால் பல ஆண்டுகள் தன் பிழைப்புக்காக வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வேலை செய்தார்.
ரியோ 40 டிகிரியில் ஃபவேலாவைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை உங்களுக்கு எப்படி வந்தது? City of God படத்தில் வரும் ரியோ சேரியையும் உங்கள் சேரியையும் ஒப்பிட முடியுமா?
1950 களில் அங்கே வன்முறை அவ்வளவு அதிகமாக இல்லை. அப்போது ரியோவின் ஜனத்தொகை இருபது லட்சம். ஃபவேலாவின் ஜனத்தொகை இரண்டு லட்சம். எனவே அப்போது இருந்த வன்முறை பொதுவாக குடும்பம், காதல் பிரச்சினகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது…
கேள்வி: படத்தைத் துவக்கும் முன்பு ஃபவேலாவுக்குச் சென்றீர்களா?
பல முறை போனேன். பொதுவாக மத்தியதர வர்க்கத்தினருக்கு ஃபவேலாவில் வசிப்பவர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணமே இருக்கிறது. அங்கே வசிப்பவர்கள் அங்கே வசிப்பதற்குக் காரணம், கொபாக்காபானாவில் வசிக்க அவர்களிடம் பணம் இல்லை என்பதுதான். போதை வருவதற்காக அவர்கள் ஒன்றும் மரிஜுவானா புகைக்கவில்லை. அது அந்த ஃபவேலா வாழ்க்கையின் ஓர் அங்கம். அவ்வளவுதான்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |