திரைமொழி - 13
அத்தியாயம் 5 – Production Design
film directing
shot by shot
visualizing from concept to screen
Steven D. Katz தமிழில்: ராஜேஷ் |
சென்ற அத்தியாயத்தில் ஒரு சிறிய உதாரணத்தைக் கவனித்தோம். அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் ஒரு குறிப்பிட்ட காட்சி. போரின் முடிவில் ராபர்ட் லீ என்ற தளபதி, யுலிஸிஸ் க்ராண்ட் என்ற தளபதியிடம் சரணடைகிறார். அதனைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வருகிறது. இதுதான் காட்சி.
Shot Plan – First Draft
இயக்குநர் லொகேஷன்களுக்கு இரண்டாவது முறை பயணம் மேற்கொண்டு, ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு ஏற்றதுபோல் திட்டமிடுகிறார். சென்ற அத்தியாயத்தில் பார்த்ததுபோல் லொகேஷன் புகைப்படங்கள், இன்னபிற விஷயங்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, அவர் எங்கே வேலை செய்கிறாரோ அந்த அறையில் இவற்றை ஒட்டிவைத்துக்கொள்கிறார்.இதனைத் தொடர்ந்து, திரைக்கதையைப் படிக்கையில் அவரது மனதுக்குத் தோன்றும் எண்ணங்களையெல்லாம் தனியாக எழுதிவைத்துக்கொள்கிறார். திரைக்கதையைச் செம்மைப்படுத்த இவை அவருக்கு உதவக்கூடும். சிலசமயங்களில் அவரது மனதில் ஏதாவது சொந்த அனுபவமும் தோன்றக்கூடும். இப்படித் திரைக்கதைக்குத் தொடர்புடைய சம்பவங்களை எழுதிவைத்துக்கொண்டபின், ஒருவேளை அவருக்கு வரையும் திறன் இருந்தால் அவற்றையும் உபயோகித்துத் தனிப்பட்ட – ஒவ்வொரு ஷாட்டையும் எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்றும் வரைந்துவைத்துக்கொள்ளக்கூடும்.
Second Draft
இனிமேல் இயக்குநர் இன்னும் திட்டவட்டமாகச் செயல்பட ஆரம்பிக்கிறார். நாம் பார்த்த உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம்.
1 EXT. NORTHERN LINE AT APPOMATTOX CREEK – MIDDAY
வடபகுதியில் படைகள் போரிடும் மெல்லிய எல்லைக்கோட்டின் பின்புறம் இருக்கிறோம். அத்தனை படைவீரர்களும் ஆச்சரியமாக எதிரே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கே நான்கு குதிரைவீரர்கள், சமாதானக்கொடியுடன் ஒரு திறந்தவெளியில் இருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜெனரல் ராபர்ட். லீ. இந்தக் குதிரைவீரர்கள் ராணுவத்தினூடே செல்ல வசதியாகப் போர் வீரர்கள் நகர்ந்து வழிவிடுகிறார்கள். இவர்களைக் கடந்து லீயும் அவருடன் இருக்கும் மூன்று வீரர்களும் சென்று, பின்னால் இருக்கும் சரிவில் இறங்கி, தொலைவில் இருக்கும் மரங்களுக்குள் செல்வதை இந்த ராணுவவீரர்கள் கவனிக்கிறார்கள். அவர்களில் பலரும் அங்கிருந்து பின்னால் சென்று நின்றுகொண்டு, இந்தக் குதிரைகள் மரங்களின் வழியாகத் தெரியும் புள்ளிப்புள்ளியான சூரியவெளிச்சத்தில் சென்று மறைவதைப் பார்க்கின்றனர்.
இதுதான் காட்சி. ஜெனரல் லீ சரணடைவதின் முதல் கட்டம் இது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்று இது. காரணம், பல ஆண்டுகளாக அமெரிக்கா இரண்டாகப் பிரிந்து போரிட்டுக்கொண்டிருந்தது. அப்போது அதில் ஒரு பிரிவின் தலைவர் – அமெரிக்கச் சரித்திரத்திலேயே மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான ஜெனரல் லீ, இன்னொரு பிரிவிடம் சரணடைய வருகிறார் என்றால் அந்தத் தருணம் எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள். அங்கெ அந்தச் சமயம் இருந்த வீரர்கள், அவசியம் சரித்திரத்தின் அழியாத பக்கங்களில் ஒன்றைக் கண்ணுறுகிறோம் என்பதை மறந்திருக்கமாட்டார்கள்.
இதை எழுதிய திரைக்கதையாசிரியர், ஜெனரல் லீ சரணடைவதை அவரது சார்பாகக் காட்டாமல் அவரது எதிரிகளின் சார்பில் (பாயிண்ட் ஆஃப் வ்யூ) இருந்து காட்டுவதே நல்லது என்று நினைத்து இப்படி எழுதியிருக்கலாம். அது தவறும் இல்லை. இங்கேதான் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த முதல் கேள்வி பதிலளிக்கப்படுகிறது (யாருடைய பாயிண்ட் ஆஃப் வ்யூவில் கேமரா பார்க்கிறது?)
இதன்பின் இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்கவேண்டும். ஷாட்டின் சைஸ் என்ன? (மிட் ஷாட்டா? க்ளோஸப்பா? லாங் ஷாட்டா போன்றவை). அல்லது, காட்சி நடக்கும் இடத்தில் இருந்து நாம் எத்தனை தொலைவில் இருக்கிறோம்? இதைக் கொஞ்சம் தெளிவாகப் பார்க்கவேண்டும். ஷாட்டின் சைஸ் என்பதை, காட்சியைச் சூழ்ந்துள்ள ஃப்ரேம் என்று நினைப்பதைவிட, ’தூரம்’ என்ற அளவையால் யோசிப்பது நல்லது என்று தோன்றுகிறது. காரணம், ஃப்ரேம் என்பது ஒரு முப்பரிமாணச் சதுரம். அதன் ஒரு பக்கத்தில் கேமரா இருக்கிறது. ஃப்ரேமின் நான்கு மூலைகளையும் நாம் காணும்போது காட்சி நடக்கும் இடத்துக்கான தூரம் புரிபடுகிறது. கேமராதான் நமது பாயிண்ட் ஆஃப் வ்யூ என்பதால் ஃப்ரேமின் சைஸ்தான் நாம் காட்சிக்கு எத்தனை தொலைவில் இருக்கிறோம் என்பதைச் சொல்கிறது. திரைப்படங்களில் இத்தகைய வெளிப்படையான தூரம் (physical distance) என்பது உணர்வுகள் சார்ந்த தூரமாக (emotional distance) எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஷாட் சைஸ் என்று நாம் பேசும்போதெல்லாம் திரையில் நடக்கும் காட்சிகளுடன் நமது உணர்வுபூர்வமான உறவையே பற்றிப் பேசுகிறோம்.
இந்தக் காட்சியின் பாயிண்ட் ஆஃப் வ்யூ, அங்கிருக்கும் வீரர்களுடையது என்பதை இயக்குநர் முடிவுசெய்துவிட்டதால், ஷாட் சைஸ்/உணர்வுபூர்வமான இடைவெளி என்பது அந்த வீரர்கள் ஜெனரல் ராபர்ட் லீயிடமிருந்து உணர்வுரீதியில் எத்தனைதூரம் தள்ளியிருக்கிறார்கள்/நெருங்கியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. என்னதான் மிகப்பெரிய தளபதியாக இருந்தாலும், அவர்களின் பிரதான எதிரி அவர்தான். இதனால், ஷாட் சைஸ்/தூரம் என்பது லீ வீரர்களைத் தாண்டிச்செல்கையில் அவரது க்ளோஸப்பாகவோ முழுமையான ஷாட்டாகவோ இல்லாமல் இருக்கிறது. ஆடியன்ஸுக்கு அவர் ஒருவிதத் தெளிவற்ற, அறியமுடியாத நபராகவே இருக்கவேண்டும். அவரது முகத்தில் இருக்கும் உணர்வுகளை அறிய ஆடியன்ஸ் மிகவும் சிரமப்படவேண்டும். இதைச் சாதிக்க அவசியம் தூரம் தேவைப்படுகிறது.
அடுத்ததாக மூன்றாவது கேள்வி. நமது கேமராவின் ஆங்கிள் என்ன? பாயிண்ட் ஆஃப் வ்யூவையும் தூரத்தையும் முடிவுசெய்துகொண்டுவிட்டதால், ராணுவவீரர்களுக்குப் பக்கத்தில்தான் கேமரா இருக்கும் என்பது இயக்குநருக்குத் தெரியும். கேமரா இந்த இடத்தில் மிகவும் கீழே இருந்தால் (low angle), அது காட்சியைப் பாதிக்கும். காரணம் வீரர்கள் காட்சியை மறைப்பார்கள். அதேசமயம் ஜெனரல் லீ இவர்களுக்கிடையே வரும்போது அவரை வீரர்கள் ஒன்றுசேந்தே பார்க்கிறார்கள்/உணர்கிறார்கள் என்பதால் அவர்கள் ஒரு குழுவாகவே காட்டப்படவும் வேண்டும். இந்த இரண்டு காரணங்களை யோசித்தால், கேமரா தரையில் இருந்து 7-8 அடி உயரத்தில் இருக்கவேண்டும் என்பது விளங்கும். இதனால் ஜனரல் லீ உள்ளே வரும்போது தெளிவான பார்வை கிடைக்கிறது. அதேசமயம் ராணுவவீரர்களையும் கேமராவால் நன்றாகப் பார்க்கமுடியும்.
இறுதியாக, கேமராவை ஒரே இடத்தில் கட் செய்யப்போகிறோமா அல்லது நகர்த்தப்போகிறோமா? பல பாயிண்ட் ஆஃப் வ்யூக்கள் அதில் வரப்போகிறதா? என்ற கேள்வி. ஜெனரல் லீ மெதுவாகத் தொலைவில் இருந்து வந்து ராணுவவீரர்களுக்குள் புகுந்து அவர்களின் பின்னால் சென்று மறையும் இந்தக் காட்சி அவசரமாக எடுக்கப்படக்கூடாது. அப்படிச்செய்தால் அந்தக் காட்சியின் ஜீவன் போய்விடும். அந்தக் காட்சியில் லீ வருவதைப் பார்க்கும் வீரர்கள் ஓரிருவரின் முகபாவங்கள் (பாயிண்ட் ஆஃப் வ்யூ) இருக்கலாம்தான். அதில் தவறில்லை. எனவே, ஒரு க்ரேனை வைத்துக்கொண்டு எடுக்கப்படும் சீக்வென்ஸ் ஷாட்டாக இது அமையலாம். அதாவது, முதலில் ராணுவ வீரர்களின் முகபாவங்களை இறங்கும் கேமராவால் படம்பிடித்துக்கொண்டு, பின்னர் மேலே செல்லும் கேமராவால் ஜெனரல் லீயைப் படமாக்கும் ஷாட். இந்த இறுதிக் கேள்விக்கு விடையை யோசிப்பதன்மூலம் இயக்குநர் இந்தக் காட்சியைப் படமாக்கும் விதத்தை முடிவுசெய்தாயிற்று. இனி இந்த ஷாட் எடுக்கப்படும்.
இப்படித்தான் ஒரு படப்பிடிப்பில் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கீழ்க்கண்டபடிதான் அவை எழுதிக்கொள்ளப்படக்கூடும்.
‘ராணுவவீரர்களின் இடையே கேமரா, க்ரேனிலோ அல்லது நீளமான ஜிம்மி ஜிப்பிலோ வைக்கப்படுகிறது. கேமராவின் வ்யூ, தொலைவில் லீ வருவதைப் பார்க்கும் வீரர்களின் பார்வை எப்படி இருக்கிறதோ அப்படி அமைந்திருக்கிறது. லீ நெருங்குவதைக் காணும் வீரர்களின் இடையே கேமரா இயங்க ஆரம்பிக்கிறது. லீயுடன் வருபவர்களைக் கேமரா பின்தொடர்கிறது. லீ கேமராவைக் கடக்கும்போது 8-10 அடி மேலே செல்கிறது. அவர்கள் செல்லும்போதே அவர்களுடனேயே கேமரா செல்லலாம். இந்தக் காட்சியுடன் எடுக்கப்படவேண்டிய பிற ஷாட்கள்: லீ வருவதைக் கவனிக்கும் பல்வேறு வேலைகளில் இருக்கும் ராணுவவீரர்களின் முகபாவங்கள்’.
கீழ்க்கண்ட படம் இந்த விவரிப்புடன் சேர்க்கப்படும்.
இந்தப் படத்தைக் கவனித்தால் இது ஒரு துல்லியமான படம் இல்லை என்பது தெரியும். நாம் எடுக்கப்போகும் இப்படிப்பட்ட ஒரு க்ரேன்+டாலி ஷாட்டை இப்படிப்பட்ட படங்களாகத்தான் வரையமுடியும். கேமராவின் நகர்தலும் அதன் இடமும் நடிகர்கள் உள்ளே நுழைவதும் வெளியேறுவதும் முழுமையான குறிப்புகள் இல்லாமல் சொல்லப்படமுடியாது. இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு படத்தால், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தளவாடங்கள் ஆகியவற்றைச் சரியான இடங்களில் வைப்பதற்குப் பெரிதும் ப்ரொடக்ஷன் டிஸைனர், ஒளிப்பதிவாளர், ப்ரொடக்ஷன் மேலாளர் மற்றும் உதவி இயக்குநர்கள் ஆகியவர்களுக்கு உபயோகப்படுகின்றன. படப்பிடிப்புக்குழுவினர் சந்திக்கப்போகும் பிரச்னைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இப்படிப்பட்ட வரைபடம் அவசியம் தேவை.
இதுதான் திரைக்கதையை வைத்துக்கொண்டு நமது முதல் முன்னேற்பாடு. அடுத்த அத்தியாயத்தில் இதுபோன்று இன்னொன்றை முயற்சிக்கலாம்.
தொடரலாம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |