இதழ்: 8, நாள்: 15- ஆடி -2013 (July)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 5 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
கோபால் ராஜாராம் - த காமன் மேன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
திரைமொழி 6 - ராஜேஷ்
--------------------------------

RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - 2 - - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி

--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் பேச்சரவம் - 1 சினிமா பற்றிய புரிதல் - தினேஷ்

--------------------------------

ராமையாவின் குடிசை - எரிக்கப்படாத உண்மைகள் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

--------------------------------
பிணங்களை அறுப்பவளின் கதை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
ஒளிப்பதிவாளர் செழியனின் பேசும்படம், நூலின் திறனாய்வு - தினேஷ்
--------------------------------
கனவெனும் குதிரையில் ஏறினேன், இறங்க முடியவில்லை - பிச்சைக்காரன்
--------------------------------
பந்தயப் புரவிகள் - தவறிப் போன பந்தயக் குதிரைகள் - - வருணன்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 55ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
 
   
   


தமிழ் ஸ்டுடியோவின் பேச்சரவம் - 1

சினிமா பற்றிய புரிதல் என்ன? - தியடோர் பாஸ்கரன்

- தினேஷ்


தமிழ் ஸ்டூடியோவினது தொடர் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக ”பேச்சரவம்”, நிகழ்ச்சி இடம்பெற்றிருக்கின்றது. இது மற்ற கூட்டத்தை விட சற்றே வித்தியாசமானது. இந்த பேச்சரவத்தில் சிறப்புரையாற்றும் நபர் நேரடியாக நிகழ்வில் பங்கெடுத்துக்கொள்வதில்லை. மாற்றாக விருந்தினர் அவர் வீட்டிலேயே அல்லது மிகப்பிரியப்பட்ட இடத்திலேயே சகல வசதிகளுடனுடனும், பேச்சைக்கேட்க வந்திருக்கும் நண்பர்களைப் பார்க்காமலேயே நல்ல சினிமாவிற்கான உரையாற்ற இயலும். அதிலும் இதில் பார்வையாளர்களே இல்லை, எல்லாருமே கேட்பாளர்கள்தான். பேச்சாளரின் உரை மட்டுமே அலைபேசியின் வாயிலாக நம் செவிகளை வந்தடையும்,. உலகின் பல மூலைகளிலும் இருக்கும் ஆளுமைகளிடத்தில் பேசி அலவலாவ அவர்கள் நம்மை நோக்கி வரும்வரை நாமும் காத்திருக்க அவசியமில்லை. கைபேசியையே மேடையாக வைத்துக்கொண்டு நிகழ்ச்சி முழுவதும் அரங்கேறிவிடும் சாத்தியம் இதிலுண்டு.

இத்தகைய புதியதொரு சிறப்புவாய்ந்த நிகழ்வினை திரைப்பட வரலாற்றாளர், எழுத்தாளர், அரசுப்பணியாளர், சிறந்த புத்தகத்திற்கான தங்கத்தாமரை விருது பெற்ற ”தி ஐ ஆஃப் செர்பண்ட்”, புத்தகம் எழுதியவர் என்று பன்முகத்தையும் வைத்திருக்கும் தியோடர் பாஸ்கரன் துவங்கி வைத்தார்.

இனி யதார்த்த சினிமாவிற்கான அவரது உரையும், அதனைத்தொடர்ந்து கேட்பாளர்களின் கேள்விகளுக்கான பதில்களும் பின்வருமாறு,

வணக்கம் நண்பர்களே!

நாம் ஒரு படத்தைப் பார்த்து முடித்த அடுத்த கணம் எந்த மாதிரியான நகர்விற்கு தள்ளப்படுகின்றோமேயானால், இது பிடிச்சிருக்கா, இல்லையா?

நமக்கு பிடித்தமாதிரியான படமாக இருக்கின்ற காரணத்திற்காக ஒரு சினிமாவை நல்ல சினிமா என்றோ, சினிமாவை அல்லது இசையை அனுபவிக்கிற பரிச்சயம் நமக்கு இருக்கின்ற காரணத்திற்காக உணர்வுப்பூர்வமாக படத்தை அணுகி புடிச்சிருக்கு அதனால நல்லபடம் என்றோ அப்படத்தை கொண்டாட முடியாது. பிடித்திருக்கின்றது என்பதும், நல்ல படம் என்பதும் இரு வெவ்வேறு எல்லைக்கோடுகள்.
ஒரு படம் நம் மனதுக்கு மிக நெருக்கமாக மாறுவதற்கு பலப்பல காரணங்கள் இருக்கின்றன. நமது அரசியல் அமைப்பைச் சார்ந்த படம், என்பதால் அதனை ஆதரிக்கலாம், அல்லது அப்படத்தின் கதாநாயகியின் மேல் நாம் வைத்திருக்கின்ற ஒருவித மோகமாக இருக்கலாம். இல்லையெனில் அப்படத்தின் பாடல்கள் நமக்கு பிடிச்சிருக்கலாம். இதுபோன்ற ஏராளமான காரணங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. ஆனால் மீண்டும் சொல்கின்றேன் நமக்கு படம்பிடிச்சிருக்கு என்பதும் நல்ல சினிமா என்பதும் வேறு.

அப்படியெனில் எப்படி நாம் ஒரு படம் நல்ல படம், நல்ல சினிமாவிற்குண்டான இயல்புகள் இப்படத்தில் ஒருங்கே அமையப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்வது. இதனை புரிந்துகொள்ள சினிமாவைப்பற்றிய புரிதலும், நல்ல அனுபவமும் நம்மிடையே நிலவவேண்டும். ஏனெனில் சினிமாவின் இயல்புகளையும், உட்கூறுகளையும் தாங்கிக்கொண்டு ஒரு நல்ல சினிமா வெளிவருகின்றது எனில் அதனை நம்மால் இனங்கண்டுகொள்ள கூட முடிவதில்லை.
இதற்கான ஒரு உதாரணம், 1996ல் சேதுமாதவன் இயக்கிய ”மறுபக்கம்”, என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத்தலைவரிடமிருந்து “தங்கத்தாமரை”, விருதை வென்றது. ஆனால், நாம் அதனை ஒரு படமாகக் கூட கண்டுகொள்ளவேயில்லை. எங்கேயும் அப்படத்திற்கான தகுந்த அங்கீகாரம் மக்களிடையே கிடைக்கவில்லை. பத்திரிக்கைகளிலும் போதிய வரவேற்பில்லை. ஏனெனில் எது நல்ல படம் என்ற தெளிவு நம்மிடம் இல்லை.

சினிமாவைப்பொறுத்த வரை அத்தகைய திறன் தேவையில்லை என்று நாம் நினைக்கின்றோம். இசை, நடனம்பற்றி எழுத, பேச , புரிந்துகொள்ள அக்கலையைப்பற்றிய அழகியலை தெரிந்திருக்க வேண்டும் என்பதனை எவரும் மறுப்பதில்லை ஆனால், இசையையும் நடனத்தையும் தெரிந்துகொள்ள பாடங்கள் படிக்கின்ற நாமேதான் இதுபோன்ற புரிதல்கள் சினிமாவிற்கு அவசியமில்லை என்று நினைக்கின்றோம். மற்ற நாடுகளிலிருந்து வரும் படைப்புகளையும் நம்மால் சிலாகித்து ரசிக்க முடிவதில்லை. இதன் விளைவுதான் நல்ல திரைப்படம் அத்திப்பூத்தாற்போல் வந்தாலும் அதனை இனங்கண்டுகொள்ள நம்மிடையே தடுமாற்றம் நிலவுகின்றது.

பொதுவாக நல்ல படங்களைப்பற்றி சாமான்ய மனிதன் முதற்கொண்டு முன்வைக்கும் விமர்சனம் அப்படங்களின் வேகம் மிக குறைவு. அதனால் தமிழ்ப் படங்களோ, வேறு மொழி படங்களோ திரையிடப்பட்டால், அது தாமரையிலை மேல் தண்ணீர் போல எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமலும் வந்த சுவடு தெரியாமலும் மறைந்துவிடுகின்றது. அப்படி கண்டுகொள்ளப்படாமல் போன பல திரைப்படங்கள் இப்பொழுது மீண்டும் கண்டுபிடித்து திரையிட்டு தெரிந்துகொள்கின்றோம். இதற்கு உதாரணங்களாக பல திரைப்படங்களை நாம் சொல்லலாம். அதில் ஒன்றுதான் ஜெயகாந்தன் 1965ல் எடுத்த “யாருக்காக”, என்ற திரைப்படம்.

இதற்காகவெல்லாம்தான் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு பயிற்சி வேண்டும் என்னும் நுண்மையை நாம் இன்னும் உணரவில்லை. இந்தத் தவறை ஆரம்பத்திலிருந்தே நம்மில் பலரும் செய்திருக்கின்றோம் என்றே நினைக்கின்றேன். அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே பள்ளிக்கூடங்களிலும், உயர்கல்வியிலும் , பல்கலைக் கழகங்களிலும் இசைக்கென்று தனியான துறையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள், ஆனால் சினிமாவிற்கென்று துறையில்லை. கல்விக்கூடங்களில் வைக்கப்படுகின்ற நூல்களைப் பார்த்தீர்களேயானால் சினிமாவிற்கான நூல்களை வைத்திருக்கமாட்டார்கள்.

எம்.சிவக்குமார்., சினிமா பற்றி எழுதிய (சினிமாக்கோட்பாடு) நூலில் என் மனதுக்கு மிக நெருக்கமான வாக்கியத்தை குறிப்பிடுகின்றார். அதாவது, ”சினிமா பார்க்க திறந்த கண்கள் மட்டும் போதாது”, என்கிறார், வேறென்ன வேண்டும்? ”சினிமாவின் தனி இயல்புகள், பண்புகள், சாத்தியக்கூறுகள்”, இவற்றை அடையாளம் கண்டுகொள்ளும் பக்குவம் நம்மிடையே பரவலாக வேண்டும். காட்சிப்படிமங்களையும், பிம்பங்களையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும் தன்முனைப்பு வேண்டும். ஆனால் இது நமது மக்களிடையே வளரவில்லை. இதனை எவரும் சிறுசிறு முயற்சிகளும், பயிற்சிகளின் துணையுடன் எளிதாக வளர்த்துக்கொள்ள இயலும்.

நல்ல சினிமாவின் மேலுள்ள அக்கறையின் பேரில் பரவலான விழிப்புணர்வுகள் இதுபற்றி ஏற்படுத்தப்பட்டாலும் பத்திரைக்கைகளிலும், ஊடகங்களிலும் இதனைப்பற்றிய மூச்சுகள் இல்லை.
ஒரு படம் பார்க்கும்பொழுது நுண்ணிய விஷயங்களையும் கவனித்து அணுக படத்தின் வடிவமைப்பையும் (farm) உள்ளடக்கத்தையும் (content), ஆராய வேண்டும். இதனைப்பற்றி மேலும் விரிவாக அனைவருக்கும் புரியும்படியாக கூறவேண்டுமானால் ஒரு பாட்டிலில் பழச்சாறு வைக்கப்பட்டிருக்கின்றது எனில், பழச்சாறுதான் உள்ளடக்கம், பாட்டில்தான் வடிவமைப்பு. ஆக இந்த வடிவமைப்பிலேயும், உள்ளடகத்திலேயும் சிறந்த சமூகப்படங்களுக்கு நம்ம நாட்ல பாரம்பரிய சினிமாத்தொழில் ஒரு பெயர் வச்சிருக்காங்க, அது என்னான்னா? தனிப்படம்.

சினிமாவைப்பத்தி நாம வியப்பா பேச ஆரம்பிச்சா உடனே வணிக சினிமா ஆதரவாளர்கள் ஒரு கேள்வி கேட்பார்கள், ”அது ஆர்ட் பிலிம் பத்தி பேசறீங்க”, ”மாற்று சினிமானு சொல்றீங்க”, அப்படீன்னு தனி கோடுபோட்டு அதுவொரு தனிரகமான சினிமா என்கின்ற அர்த்தத்தில் இந்த சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள். ”அந்தப்படங்களை, இந்தப்படங்களோடு ஒப்பிடாதீர்கள், அந்தப்படங்கள் எடுக்கப்படும் நோக்கமே வேறு. எங்கள் களமும், தளமும் வேறு”, ”நாங்கள் எடுக்கும் படத்திற்கு ஒரு தனி அளவுகோல் இருக்கு அது பன்னாட்டு அளவில் போற்றப்படும் அளவுகோலிலிருந்து வேறுபட்டது.” இந்த மாதிரியான நிலைப்பாடுகளில் தான் இன்னும் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.

இந்த மாதிரியான மாற்று சினிமா, வணிக சினிமா என்ற வேற்றுமை , இருண்மையை பத்திரிக்கைகளும் ஏற்றுக்கொண்டு கலைப்படம், வணிகப்படம் என்று கையாள ஆரம்பித்துவிட்டது.
சினிமா ரசனை நம்மிடம் வளராமல் இருப்பதற்கும், சீரிய திரைப்படங்கள் நம்மிடம் வரவேற்பைப் பெறாமல் இருப்பதற்கும் , அந்த இருண்மையை நாமும் ஏற்றுக்கொண்டதே ஒரு முக்கியக் காரணம் என்று நினைக்கின்றேன்.

சினிமாவிற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பதனை நாம் தெரிந்துகொண்டேமாயானால் நாம் வெகுவாக போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்சினிமாவில் நல்ல படங்களை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் யார்? என்பதனை பிரித்து தெரிந்துகொள்ள இயலும் . அதுவொன்றூம் அவ்வளவு கடினமான காரியமில்லை என்பதே என் எண்ணம்.

பொதுவா ஒரு படத்தைப் பார்த்தோமேயானால் இரண்டு கேள்விகள் கேட்கப்படவேண்டும். அதாவது
1. படத்தில் என்ன சொல்றாங்க?
2. அதனை எப்படி சொல்றாங்க?

இதில் முதல் பிரிவு என்ன சொல்ல வர்றாங்க? அப்படீங்கிறதுதான், படத்தோட உள்ளடக்கம். இரண்டாவது எப்படி சொல்றாங்க? எந்த முறையில சொல்றாங்க? என்பதே அதனது வடிவம்.
முதலாவதாக என்ன சொல்ல வர்றாங்க? என்பதிலேயே அவர்களுடைய சித்தாந்தம் என்ன என்பது தெளிவாக தெரிந்துவிடும். இதில் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியது, முற்றிலுமே பொழுதுபோக்காக எடுக்கப்படக்கூடிய சினிமா கூட சீரியஸான பாணியில் தான் இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஆனால் அந்தப் படங்களும் அவற்றிக்கேற்ற நீதிகளைச் சார்ந்து இருக்க வேண்டும்.

நடனம் என்றால் அதற்குச் சில நீதிகள் உள்ளன. அது இல்லையென்றால் அது நடனமல்ல. ஒருவர் மேடைமீது ஏறி உடலை அசையாமலிருந்தால் அது நடனமல்ல.

இதிலும் கருத்தாளமிக்க, அரசியல் பொறுப்புணர்வுமிக்க, சமூக ரீதியான கருத்துக்களை கண்டிப்பாக வைத்திருந்தால்தான் நல்ல படம் என்று தவறான கற்பிதம் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால் அவையும் சினிமா என்பதற்கான அடிப்படைக்கூறுகளை உள்வாங்கி எடுக்கப்பட்ட திரைப்படமாக இருக்க வேண்டும். தமிழிலும் அந்த மாதிரியான சில படங்களை எடுத்திருக்கின்றார்கள், எடுத்துக்கொண்டும் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் அங்கீகரிக்கப்படாமல் போயிருக்கலாம்.

”உன்னைபோல் ஒருவன்”., படத்தை ஜெயகாந்தன் எடுத்த பொழுது சொன்னார், ”நீங்கள் பொழுது போக்க வந்தவர்கள் அல்ல. புதிய தரிசனத்தின் பிரதிநிதிகள்”, . ஆனால் அம்மாதிரியான படங்களை ரசிக்கவோ, அனுபவிக்கவோ நாம் எம்மாதிரியான முயற்சிகளையும் எடுத்துக்கொள்வதில்லை. இசையை கற்றுக்கொள்ள எவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்கின்றார்கள் என்பதனைப் பாருங்கள். ஆனால் சினிமாவிற்கு மட்டும் உணர்வுப்பூர்வமான அணுகல் முறை தேவையில்லை.
” இதுவரை வந்துள்ள ஊடகங்களிலேயே மனித மனத்தையும், மனித உணர்வுகளையும், சித்தாங்களையும் பிரதிபலிக்கும் சக்திவாய்ந்த ஊடகமாக சினிமா நிலைபெற்றிருக்கின்றது”, என்று பல அறிஞர்கள் சொல்லி வருகின்றார்கள். இதனை நாமும் புரிந்துகொண்டோமேயானால் நம் தமிழ் சினிமாவிலும் நல்ல வியக்கத்தக்க மாற்றங்கள் வரும் என நம்புகின்றேன்.

இதன் பின்னர் தியோடர் பாஸ்கரனுடனான கேள்வி- பதில்கள்

சினிமாவைப் பொறுத்தவரை அதனை ஒரு விஷீவல் மீடியமாகத்தான் கருதுகின்றோம். ஒவ்வொரு காட்சிகளையும் விஷீவலாகத்தான் கடத்தவேண்டும் என்கிறபொழுது, சினிமாவில் கவிதைகளுக்கும், வசனங்களுக்கும் இருக்கின்ற பங்கு என்ன.?

நீங்கள் சொல்வது மிகச்சரியானதுதான், காட்சிப்பிம்பங்கள்தான் சினிமாவின் அடிப்படை. ஆனால் காட்சிப்பிம்பங்களுக்கு பேசுகின்ற பேச்சு, வார்த்தைகள், காட்சிக்கு துணை போகின்றது. பின்பு விஷீவல்களில் அதன் தாக்கத்தை அதிகரிக்க வசனங்கள் உதவ வேண்டும். அடிப்படையாக சொல்லவேண்டுமானால் காட்சிப்பிம்பங்களைத் தாண்டி பேச்சுகள்வெளியே போகக்கூடாது.
அதாவது நீங்கள் தமிழ்சினிமாவை எடுத்துக்கொண்டீர்களேயானால், பெரும்பான்மையான சினிமாக்களின் பாத்திரங்கள் பேசிக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் இதுதான் சினிமாவின் உத்திகளுக்கு தலைகீழாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன். காட்சிகளுக்கு ஆதரவாக பேச்சு வார்த்தைகள் வரலாம். பேச்சுகளுக்கு சினிமாவில் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் அதுவே ரேடியோ நாடகம் போல மாறிவிடும்.

பாஸிட்டிவான விஷயத்தை முன்வைக்காமல், நெகட்டிவான விஷயங்களை முன்வைக்க கூடிய சினிமாக்களைப் பற்றிய உங்கள் கருத்து?

அது மாதிரியான சினிமா வந்தால் அதனை எப்படி எடுத்திருக்கின்றார்கள்?, அந்த படத்தினுடைய பலம் என்ன?, அதன் வடிவமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்களா? , அந்த வடிவமைப்பே உள்ளடக்கமாக இருக்கின்ற பட்சத்தில் நெகட்டிவா இருந்தாலும் வடிவமைப்பின் வாயிலாக படம் அழகாகயிருந்திருக்கலாம். உதாரணமாக உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புனு (form & content) சொன்னேன், அதுல சில படங்களில் அந்த ஃபார்மே, கண்டெண்ட் ஆகிவிடுகின்றது, எப்படியெனில் ஹிட்ச்சாக்கினுடைய படங்களில் பார்த்தீர்களேயானால் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவார், யாரு? யாரை கொல பண்ணினான்?, ஆனால் அதன் பின்னர் கதையை எப்படி நகர்த்துகின்றார்?, என்பதுதான் அவரதுபடங்களின் பலமாகவேயிருக்கும். நீங்கள் சொல்கின்றமாதிரியாக படம் நெகட்டிவான விஷயத்தையே சொல்வதானாலும், அதனை எப்படி சொல்லியிருக்கின்றார்கள்,? என்பதனை அடிப்படையாகக்கொண்டு அதன் வெற்றியும், தோல்வியும் அமையும். படம் அடைகின்ற கமர்ஷியல் வெற்றியையோ, தோல்வியையோ நான் இங்கு குறிப்பிடவில்லை, நான் சொல்வதெல்லாம் அழகியல் பூர்வமான வெற்றி தோல்வி.

இசைக்கும் நாடகத்திற்கும் பயிற்சிகள் எடுக்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் சொல்வது போல, இசை, நாடகம் போன்ற கலைகளுக்கு எத்தகைய பயிற்சிகள் வழங்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

சங்கீதம் கற்றுக்கொள்ளும் ஆர்வலர்களுக்கு மத்தியில் சினிமா பற்றிய பேச்சே கிடையாது.
உதாரணமாக பள்ளிக்கூடங்களிலெல்லாம் உங்களுக்கு சங்கீதம் சொல்லித்தருகின்றார்கள். அது பயிற்சி இல்லையா?, அதுவும் பயிற்சிதானே. நிறைய வீடுகளில் நம் பிள்ளைகளுக்கு சங்கீதம் சொல்லித்தர அதற்குரிய ஆசிரியர் வருகின்றார். அப்படியில்லையென்றால்கூட நமக்கே சங்கீதம் மீதான ஆர்வம் காரணமாக என்ன செய்கின்றோம்?, இசையைப் பற்றி ஆழமாகப்படித்து தெரிந்துகொள்கின்றோம். சங்கீத ஆர்வலர்களை எடுத்துக்கொண்டீர்களேயானால் அதனைப்பற்றி அலசுவார்கள். அத்தோடு நில்லாமல் சங்கீதத்தைப்பற்றியதான இயல்பைப் பற்றிய பேச்சுகள் தொடரும். ஆனால் அது சினிமாவிற்கு இல்லை, நாம் எல்லோருமே இந்த தவறுகளை செய்துகொண்டிருக்கின்றோம். அது ஏனென்றால், இந்த சினிமாவென்பது உயர்ந்த கலையல்ல, அதற்கு அத்தகைய மரியாதை கொடுக்கவேண்டியதில்லை, இப்படியான பல காரணங்களால் நமது சினிமாவை உதாசீனப்படுத்தியிருக்கின்றோம்.

நம் நாட்டில் சினிமா ஆரம்பித்த முதல் 17 வருடங்களில், பிரிட்டிஷ் அரசும் அதனை அமுக்குவதற்கே பார்த்தார்கள். இதுமாதிரியான பல வரலாற்று காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னும் இதே பாதையில் நாம் போய்க்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

இப்பொழுது சினிமாவிற்கும் சினிமா ரசனை பயிற்சிகள், மிகுதியான எண்ணிக்கையில் வரவேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சினிமாவிற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தியதோடு, நல்ல திரைப்படங்களையும் திரையிட வேண்டும்.

நம்மிடம் திரைப்பட ரசனை குறைவு என்று கூறியுள்ளீர்கள், அப்படியெனில் நம் ரசனையை மேம்படுத்த என்னென்ன வகையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.?

முதலில் ரசனையை வளர்த்துக்கொள்ள நல்ல தரமான சினிமாக்களைப் பார்க்கவேண்டும். ஒரு சினிமாவைக்காண்பித்து இது நல்ல சினிமாவா, இல்லையா என்கிற விவாதத்திற்கு நான் வரவிரும்பவில்லை. ஆனாலும் நல்ல சினிமாவைப்பற்றி எப்படி கூறுவதென்றால், உன்னத இலக்கியங்களை நாம் படிக்கின்றோமல்லவா, அதேபோல் உலக விமர்சகர்களால் சீரிய சினிமா என்று உலகத்தாராலும், நம் நாட்டினவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட படங்களைப் பார்க்க வேண்டும். படத்தைப் பார்க்கும் பொழுதுகூட மேலோட்டமாகப் பார்க்காமல், மிகவும் கவனம் செலுத்தி உன்னிப்பாக ஆழ்ந்து நோக்க வேண்டும்.

சினிமாவைப்பார்க்கும் சமயங்களில் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியவாறு பார்ப்பதற்குப் பதிலாக நீங்கள் படம் பார்க்காமலேயே இருந்துவிடலாம். படத்தின் இயக்குனர் உங்களுக்காக ஒரு உலகத்தைத் திரையில் படைக்கின்றார். அந்த உலகத்தில் நீங்கள் இரண்டறக்கலந்து சஞ்சரிக்க வேண்டும். அப்பொழுது இலக்கியம் மாதிரியாக, சினிமாவின் பாதிப்பும் உங்களுக்கு ஆழமாகச் சென்று சேரும். சினிமா பற்றிய கட்டுரைகளையும், பத்திரிக்கைகளையும், புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க வேண்டும். ஆரம்பத்தில் உங்களுக்கு புரிந்துக்கொள்ள கடினமாக இருந்தாலும் தொடர்ந்து படித்து வந்தீர்களேயானால் புதிய உலகம் உங்கள் முன்னால் விரியும். உங்களது அனுபவமும் மிகவும் ஆழமாக இருக்கும்.

சினிமாவில் கதையை முதலில் முடிவு செய்ய வேண்டுமா,? அல்லது கதாபாத்திரத்தை வடிவமைத்துக்கொண்டு அதனைச்சுற்றியதான கதையினை தேர்ந்தெடுக்க வேண்டுமா? எது மிகவும் இயல்பானதாக அமையும்?

இந்தக்கேள்வியை நீங்கள் ஒரு படைப்பாளியின் பார்வையிலிருந்து கேட்கின்றீர்கள். இதனை நீங்கள் சொன்ன இரண்டு வகையிலுமே செய்யலாம். இப்பொழுது படைப்பாளி ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை தன் நிஜ வாழ்க்கையில் சந்திக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம்.அவர்களைச் சுற்றி ஒரு கதை உருவாக்குகின்றார். இதிலேயே இன்னொரு வகை, நாவலில் படித்த கதாபாத்திரங்களின் மேல் ஈர்ப்புகொண்டு அதனைச்சுற்றியதான கதையமைப்பது. எப்படி மோகமுள்ளை ஞானராஜசேகரன் படம் ஆக்கினாரோ, அதேமாதிரி., இதில் கதாபாத்திரங்கள் எல்லாம் அதற்கு முன்னாடியே நிறுவப்பட்டுவிட்டன. மேலும் ”உதிரிப்பூக்கள்”, சொல்லவேண்டிய படம். இது மாதிரியான உருவாக்கங்கள் படைப்பாளியின் சுதந்திரத்தை பொறுத்து அமையும்.

ஒரு புத்தகத்தை படிக்கும்பொழுது வாசகர் அதனை உள்வாங்கி படித்து, படித்தவற்றை காட்சிகளாக விரிவாக்கி அதனோடு ஒன்றிணைகின்றான். ஆனால் சினிமாவென்பது, படைப்பாளியானவன் என்ன கொடுக்கின்றானோ அதனை மட்டுமே பார்க்கும் ரசிகனாக இருக்கின்றானா? அல்லது பல சிந்தனைகளை உருவாக்கிக்கொடுக்கும் படைப்புகளும் இருக்கின்றனவா?

இரண்டு வெவ்வேறான அனுபவங்களைப்பற்றி கேட்டோம். ஒரு அனுபவம் படிப்பது, மற்றொரு அனுபவம் பார்ப்பது. ஒரு நாவலை எடுத்துக்கொள்வோம். அந்நாவலை படிக்கும்பொழுது நீங்களே பாத்திரங்களின் பிம்பங்களை உருவாக்கிக்கொள்கின்றீர்கள். அதுமட்டுமல்லாமல் படிக்கும்பொழுது புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அந்தக் கதாபாத்திரம், அந்த உலகம் அனைத்தையுமே நாவலாசிரியரின் உதவியைக்கொண்டு, நீங்களாகவே உருவாக்கிக்கொள்கின்றீர்கள்.

ஆனால் சினிமாவில் இதற்கு எதிர்மறையாக அந்த உலகத்தை படைப்பாளியானவன் உருவாக்குவான். அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமானது நாவலை மூடிவைத்துவிட்டு யோசிப்பதுமாதிரியாக சினிமாவில் செய்யமுடியாது. சினிமா தானாக பலருக்கும் சேர்த்து ஓடிக்கொண்டிருப்பதால் சினிமாவின் பாரம்பரியம் அதனை அனுமதிக்காது. இவ்விரண்டுக்குமே இரண்டு வித்தியாசமான அனுபங்கள்.
ஆனால் அந்தச் சினிமாவையும் நீங்கள் எப்படி எதிர்கொள்கின்றீர்களெனில் அது உங்களது சொந்த வாழ்க்கை அனுபங்களைச் சார்ந்தே.

நம்மால் நல்லசினிமா, யதார்த்த சினிமா நல்ல கருத்துக்கள் கொண்ட சினிமா என்றெல்லாம் போற்றப்படுகின்ற படங்களானது மக்களால் மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன?

நல்ல படங்கள் மட்டுமல்ல, சில நல்ல புத்தகங்களும் மறுக்கப்படலாம். இப்பொழுது மறுக்கப்படுகின்ற படங்கள் சொற்ப காலத்திற்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படலாம். நல்ல கருத்துக்கள் மட்டுமல்ல, அந்த கருத்துக்களை அவர்கள் எப்படி சொல்லியிருக்கின்றார்கள் என்பதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நல்ல படைப்பாளியானவன், சிறந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொல்ல முடியும். இதுதான் சினிமாவின் தளம். எனவே மக்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் அது நல்லசினிமாவல்ல என்று நாம் சொல்ல முடியாது. கொஞ்ச நாள் கழித்து ஏற்றுக்கொள்ளலாம், அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.

அண்மைக்காலமாக பார்த்தீர்களேயானால் தமிழ் சினிமாவில் காமெடி நெடி அதிகமுள்ள சினிமாக்கள் வரத்துவங்கியுள்ளன. சில படங்கள் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வெளிவந்துள்ளன. இதனை உங்கள் பார்வையில் எப்படி பார்க்கின்றீர்கள்.? இந்தப் போக்கு நம் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கத்தக்க விதமாக அமையுமா?

தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே காமெடியானது கதையில் இணையாகக் கலந்துதான் சொல்லப்பட்டிருக்கின்றது. இப்போக்கு இன்று நேற்றல்ல, 40களிலேயே ஆரம்பித்துள்ளது. என்.எஸ்.கிருஷ்ணனின் படங்கள், அதன்பின்பு ”சபாபதி”, போன்ற சினிமாக்கள் முழுக்க காமெடியாக சொல்லப்பட்டவைகள்தான்.

அதேபோல பாலுமகேந்திராவின் ‘சதிலீலாவதி’ காமெடிப் படம்தான். இது மாதிரியான சினிமாக்கள் அதிக எண்ணிக்கையில் வருவதும், அதனை பெரும்பாலான மக்கள் ரசிப்பதையும் நான் தவறு என குறிப்பிடவில்லை. ஆனால் அந்த காமெடிக்குள் என்னென்ன மாதிரியான விஷயங்கள் உள்ளடக்கமாகயிருக்கின்றன?. அதில் சொல்லப்படும் விஷயங்கள் பெண்களை இழிவுபடுத்துகின்றனவா.? அல்லது சில சித்தாங்களை இழிவுபடுத்துகின்றதா.? என்பதையெல்லாம் நீங்கள் கொஞ்சம் கவனித்து பார்க்கத் தவறக்கூடாது. காமெடி படங்களை வெறும் பொழுதுபோக்குப் படங்களாகவே எடுத்துக்கொள்ளலாமே. நீங்கள் ஏன் அதனை ஒரு நல்ல சினிமாவாக எதிர்பார்க்கணும்.

இந்த மாதிரியான காமெடி படங்களெல்லாமே சினிமா வரலாற்றில் இடம்பிடிக்காது. அம்மாதிரியான படங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களும், நாமும் அதனை கொஞ்ச காலத்தில் மறந்து விடுவோம்.

சினிமாவைப்பொறுத்தவரை கொரியன் சினிமா, இத்தாலியன் சினிமா போன்றவைகளே போற்றப்பட்டு வருகின்றன. நம்மூர் இயக்குனர்களால் அவ்வாறு யோசிக்க முடியவில்லையா?, அல்லது மற்றவர்கள் எற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணமா? எப்படி நாம் தமிழ்சினிமாவை உலகசினிமா என்று போற்றப்படும் அளவிற்கு மாற்றுவது. ?

இதில் முக்கியமனது ”நல்ல ரசிகர்கள் வராமலிருக்கும் வரை நல்ல சினிமாவும் வராது”, இதில் நல்ல ரசிகர்கள்னா என்ன? சினிமாவிற்கான நெளிவு, சுழிவுகளை தெரிந்து படம் பார்ப்பவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் இருந்தால்தான் நல்லசினிமா வரும். அதற்கான ஒரு வழியையும் நாம் பண்ணவில்லை. போதிய பயிற்சிகளும் இல்லை. அதைத்தான் ”சினிமாக்கோட்பாடு”, எனும் புத்தகத்தை எழுதிய சிவக்குமார் சொன்னார், ”சினிமா பார்ப்பதற்கு இரண்டு திறந்த கண்கள் மட்டும் போதாது” என்று.
சினிமாவைப் பற்றிக் கணிப்பதற்கு நாம் முதலில் பழகிக்கொள்ள வேண்டும். நம்மிடம் நல்ல விமர்சகரே கிடையாது என்பதால் நல்ல சினிமா விமர்சனங்களும் இல்லை. சினிமா விமர்சனம் என்கிற பெயரில் கதை எழுதிவைக்கின்றார்கள். கதையைக் கூட அவர்கள் எப்படி எழுதுவார்கள் என்றால், கதாபாத்திரத்தைச் சொல்லாமல் நடிகரின் பெயரை வைத்தே சொல்கின்றனர். அதாவது, “கமல் ஒரு ஆட்டோ மெக்கானிக், பக்கத்து வீட்டிலிருக்கும் ஸ்ரீதேவியை காதலிக்கின்றார்”, இப்படி எழுதி வைக்கின்றார்கள். இது விமர்சனத்திற்கான கோட்பாட்டுக்குள்ளேயே வராது. நம்மகிட்ட ரசிப்புத்தன்மை, விமர்சனம் எல்லாம் ஒன்று சேர வேண்டும்.

நாட்டளவில் இருக்கின்ற தலைவர்களும் சினிமாவிற்கு சரியான கவனம் செலுத்துவதில்லை. அதனாலேயே சினிமா இன்று வளர்ச்சி குன்றிய பிற்படுத்தப்பட்ட ஊடகமாகவே உள்ளது. இதற்கு மத்தியில் ஒரு சில நல்ல படங்களும் மலையாளங்களிலும், வங்க மொழியிலும் வருகின்றன.
நல்ல சினிமா வர முக்கியமாக பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் சினிமாவும் ஒரு முக்கிய பிரிவாக இடம்பெற வேண்டும். இலக்கியம் எவ்வாறு கல்வியில் இன்றியமையாமல் இடம்பெறுகின்றதோ, அதேபோல சினிமாவும் இடம்பெற வேண்டும்.

நல்ல சினிமா வர ரசிகர்களின் ரசிப்புத்தன்மை உயரவேண்டும் என்று கூறியுள்ளீர்கள், அப்படியெனில் மற்ற நாடுகளில் நல்ல சினிமா வந்திருக்கின்றதே, அங்கு ரசிகர்களின் ரசிப்புத்தன்மை உயர்வாக உள்ளதா. ? அப்படி இருக்கிறதென்றால் அங்கு மட்டும் ஏன் அந்த நிலை, நம்மிடம் ஏன் அவ்வித ரசிப்புத்தன்மை இல்லை.?

நிச்சயமாக அவர்களின் ரசிப்புத்தன்மை, நம்மைக்காட்டிலும் பலமடங்கு உயர்வானதாக உள்ளது. நான் என்னுடைய அனுபவத்திலேயே சொல்கின்றேன்., மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவிலிருக்கின்ற பல்கலைக் கழகத்தில் பொதுசினிமாவைப்பற்றி இரண்டு மாத காலம் போதித்தேன். அவர்களுடைய நூலகங்களுக்குச் சென்றீர்களேயானால் அங்கு அனைத்து, உலக உன்னதப்படங்களின் குறுந்தகடுகளையும் வைத்திருக்கின்றார்கள். நாம் புத்தகம் எடுப்பது போல, அவர்கள் அந்த சி.டி.யை வாங்கிப் படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். கொரியா, ப்ரெஞ்சு, இத்தாலி இப்படி பல தரப்பட்ட படங்கள் இங்கு கிடைக்கின்றன. சினிமாவிற்கென்று ஒரு தனியான பிரிவு அவர்களிடம் உள்ளது. நம்மிடம் அது கிடையாது.

இரண்டாவது அமெரிக்காவிலும், இத்தாலியிலும், ஜெர்மனியிலும் , பிரான்சிலும் சினிமாவின் தொடக்க காலகட்டத்தில் அங்குள்ள கல்வியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், பணம் படைத்தவர்கள், என அனைவருமே அதற்கு ஆதரவு அளித்து அதனை வளர்த்துவிட்டு கொண்டாடினார்கல். ஆனால், நாம் அண்ணா சினிமாவை வளர்த்தார், எம்.ஜி.ஆர் சினிமாவை வளர்த்தார், கலைஞர் சினிமாவை வளர்த்தார் என்று பேசிக்கொண்டிருக்கின்றோம். நாம் யாரையும் குறை சொல்ல முடியாது.

இப்பொழுது வருகின்ற சிறு பத்திரிக்கைகள் நல்ல சினிமாவிற்கு ஆதரவாக உள்ளன. ஊடகங்களைப்பொறுத்தவரையில் நல்ல சினிமா விமர்சனம் வருவதில்லை. முன் குறிப்பிட்டது போலவே அவர்கள் கதையை அப்படியே சொல்லிவிடுகின்றார்கள். மேலும் சினிமா என்றால் அவர்களைப்பொறுத்தவரை நடிகர்கள்தான் தெரிகின்றார்கள்.

இந்த மாற்றத்தை யார் கொண்டு வரமுடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். ?
அரசாங்கமே கொண்டுவரவேண்டுமா?, அல்லது மக்களிடம் அந்த விழிப்புணர்வு வேண்டுமா?

பதில்: முக்கியமாக இதனை அரசுதான் செய்ய வேண்டும். ஆனால் சினிமாவில் நல்ல மாற்றங்கள் நிறையப்பெற்று ஆரோக்கியமாக உயரவேண்டுமென ஆர்வம் காட்டிய தலைவர் நம்மிடையே யார்? என்றால் அது நேரு தான். நேருவின் காலத்தில் ஆரம்பித்தவைதான், பூனே பிலிம் இன்ஸ்டியூட், சினிமா காப்பகம், லலித் கலா அகாதமி, சாகித்ய அகாதமி. ஆனால், அதற்குப் பின்பாக இப்படியான மாற்றம் சினிமாவில் வரவேயில்லை. மேலும் சினிமாவிற்காக வழங்கப்படும் ”தேசிய விருதுகள்”, நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவரின் கரங்களால் தரப்பட்டு கெளரவிக்கப்படுகின்றதென்பது மிகவும் வரவேற்க்கத்தக்கது. ஆனால், அதேசமயம் எந்தவொரு பல்கலைக்கழகங்களிலும் சினிமாவுக்கான தனியான துறை ஏற்படுத்தப்படவில்லை. எனக்குத்தெரிந்து ஜகத்பூரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் சினிமாக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருக்கும் துறை மிகமுக்கியமான ஆய்வுகள் நடத்த உதவி புரிகின்றது. நானும் கூட ஒருமுறை அங்கு போயிருக்கின்றேன். அதன்பின்பு ஹைதராபாத்தில்தான் இருக்கின்றதே தவிர மற்றபடி எங்கேயுமே கிடையாது.

நான் ஒரு கல்லூரி முதல்வரிடம் கேட்டேன்.

“ஏன், சார், உங்க கல்லூரியில நல்ல சினிமாவிற்கான டி.வி.டி வைக்கிறீங்களா? ”, அதற்கு அவர் ஆச்சர்யத்துடன் அதான் அவங்க தியேட்டர்ல போயி பார்த்துக்குவாங்களே” அப்படீனு சொல்றாரு. இப்படியான ஒரு அதள பாதாள நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

தமிழ்ல நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் வருகின்றன. ஆனால் பெரிய பட்ஜெட் படங்களில் இருக்கின்ற அதே சமாச்சாரங்கள்தான் இதிலும் இருக்கின்றன. அதேசமயம் பெரிய பட்ஜெட் படங்களைக் காட்டிலும் இவை வெற்றி பெற்று விடுகின்றன. இதனை புதிய அலைகள் என்றும் ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர். இதனை நீங்கள் எவ்விதமாக பார்க்கின்றீர்கள்.?

பதில்: சின்ன பட்ஜெட்டில் படம் வருவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. சினிமா டிஜிட்டலில் வந்த பிறகு அதிக செலவில்லாமல் படங்கள் எடுக்க முடியும். மிகுந்த திறமையான படைப்பாளி சிறிய மூலதனத்துடன் தான் எடுக்க விரும்பிய சினிமாவை எடுத்துவிட முடியும். ஆனால் அந்த சுதந்திரத்தை அந்தப் படைப்பாளியானவன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இவர்களும் படங்களில் இடையிடையே பாட்டுக்களை ஒளிபரப்பி விடுகின்றார்கள். இது கதையை ஒருங்கிணைய விடாமல் தடுத்து விடுகின்றது. பாட்டு இல்லாமல் படம் ஓடாது என்று இயக்குனர்கள் பயப்படுகின்றனர். சின்ன பட்ஜெட் படங்களில் சுதந்திரம் அதிகம். உலகப்படங்கள் என போற்றப்படும் பெரும்பாலான படங்கள் இந்த மாதிரியாக குறைந்த பட்ஜெட் படங்களாகவே வெளிவந்திருக்கின்றன என்பதனையும் நினைவில் வைத்துக்கொண்டு இயக்குனர்கள் உழைக்க வேண்டும்.

யதார்த்தமாக எடுக்கப்பட்ட படங்கள்தான் நல்ல படங்களா, ஃபேண்டஸி அடிப்படையில் எடுக்கப்படும் படங்களின் தரம் என்ன?

நீங்கள் அறிவியல் பூர்வமாக படம் எடுக்கலாம், அல்லது நீங்கள் சொன்னது போல ஃபேண்டஸி அடைப்படையிலான படமாகக் கூட நீங்கள் எடுக்கலாம். ஆனால், யதார்த்தத்தின் அடிப்படையில் நீங்கள் படம் எடுக்கின்ற சமயத்தில் படங்களின் தாக்கம் அதிகமாகயிருக்கும். ஏனெனில் இவை நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுபவையாக இருக்கின்றன. எனவே படைப்பாளியின் மேலும், படைப்பின் மேலும் நல்ல தாக்கம் ஏற்படுகின்றது. யதார்த்த பாணி படங்களின் மூலமாக சமுதாய மாற்றத்தை கொடுக்கமுடியும். சத்யஜுத்ரேயின் படங்களை கூர்ந்து கவனித்தால் இந்த யதார்த்தம் தெரியும். வரலாற்று சம்பந்தமான படங்கள் யதார்த்தமாக நம்மிடம் இல்லை. மேலும் இதனை யாரும் எடுக்க முன்வருவதும் இல்லை காரணம் மெனக்கெடல்களும், பயிற்சிகளும் இதில் அதிகம். அப்படியே எடுத்தாலும் அதிக பட்ஜெட் படங்களாக எடுக்கின்றனர், இராஜராஜ சோழன், கட்டப்பொம்மன் என்று. கட்டபொம்மனெல்லாம் வரலாற்று படம் மாதிரியே இல்லை. . எவ்வளவு பெரிய வரலாறு நம்முடையது என்பது தெரியவில்லை.

இந்த நிகழ்வின் ஒலி வடிவம்: http://koodu.thamizhstudio.com/pecharavam_1.php

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </