இதழ்: 8, நாள்: 15- ஆடி -2013 (July)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 5 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
கோபால் ராஜாராம் - த காமன் மேன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
திரைமொழி 6 - ராஜேஷ்
--------------------------------

RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - 2 - - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி

--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் பேச்சரவம் - 1 சினிமா பற்றிய புரிதல் - தினேஷ்

--------------------------------

ராமையாவின் குடிசை - எரிக்கப்படாத உண்மைகள் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

--------------------------------
பிணங்களை அறுப்பவளின் கதை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
ஒளிப்பதிவாளர் செழியனின் பேசும்படம், நூலின் திறனாய்வு - தினேஷ்
--------------------------------
கனவெனும் குதிரையில் ஏறினேன், இறங்க முடியவில்லை - பிச்சைக்காரன்
--------------------------------
பந்தயப் புரவிகள் - தவறிப் போன பந்தயக் குதிரைகள் - - வருணன்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 55ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
 
   
   


ஆவணப்பட ஆளுமைகள் - 3

நேர்காணல் - 'பீ' ஆவணப்படத்தை முன்வைத்து இயக்குனர் RP அமுதனுடன் ஒரு நேர்காணல்

பேசாமொழி 5 ஆம் இதழின் தொடர்ச்சி..

- கு. ஜெயச்சந்திர ஹஸ்மி

முந்தைய பகுதியை படிக்க:

அந்த தெருவின் ஒருபக்க சுவர் கோவிலின் சுவரா?

ஆமாம்.

கோவில் சுவர்தானென்றால், பொதுவாக மக்களிடம் கடவுள் சார்ந்து ஒரு பயமும் சுத்தமும் இருக்கும். இந்த தெருவின் இந்த நிலைக்கு என்ன காரணம்?

இரண்டு பக்கமும் சுவர்கள் கொண்ட தெரு அது. அதில் யாரும் வசிப்பதில்லை. அது ஒரு இணைப்பு சந்து என்று சொல்லலாம். ஒரு புறம் கோயில். இன்னொரு புறம் ஒரு அரிசி ஆலை. அங்கிருந்து தான் மாரியம்மாள் தனக்குத் தேவையான சாம்பலை எடுத்துக்கொள்கிறார். அவர் சாம்பல் எடுக்கும் காட்சி படத்தின் ஆரம்பத்தில் வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது ஒரு பெருமாள் கோயில். சுற்றி வசிப்பவர்கள் உசிலம்பட்டி பகுதியில் இருந்து வந்து குடியேறியிருக்கும் பிரமலைக்கள்ளர்கள். அவர்களுக்கு பெருமாள் மீது பக்தி இல்லையோ அல்லது அந்தக் கோயில் அவ்வளவு சக்தி வாய்ந்த கோயில் இல்லையோ என்ன காரணமோ பெருமாளுக்கு சுவரோரத்தில் சாத்தப்படுவதெல்லாம் பீ தான்.

இத்தனைக்கும் மூன்று கழிப்பறைகள் அங்கே இருக்கின்றது என்ற போதும் ஏன் தெருவினர் அங்கேயே மலம் கழித்தபடி இருந்தனர்? இப்படத்திற்கு பின் அரசு எடுத்த நடவடிக்கையை முன்னரே ஏன் எடுக்கவில்லை?

மலத்தெரு இருக்கும் இந்தப்பகுதியில் வசிப்பவர்கள் எல்லாம் ஏழைகள். அவர்கள் வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கான இடம் இல்லை. அதனால் அவர்கள் பொது வெளியைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். மேலும் அவர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் கழிப்பறை பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவர்கள். சுற்றி இருக்கிற ஜனத்தொகைக்குப் போதுமான அளவில் கழிப்பறைகள் இல்லை. இருக்கிற கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லை. மின்சாரம் இல்லை. அதனால் மோட்டார் ஒடாது. விளக்கு இல்லை. அதனால் இரவில் உள்ளே போக பெண்களுக்கு பயம். பாதுகாப்பு இல்லை. மேலும் இது மாதிரியான ஜனத்தொகை நிறைந்த பகுதிகளில் இருக்கும் கழிப்பறைகளில் கால் வைக்கவே இடம் இருக்காது. அவ்வளவு மலம் எல்லா இடமும் நிறைந்திருக்கும். இது ஒரு பரிதாபமான சூழ்நிலை. துப்புரவுப் பணியாளர்கள் தினசரி காலையில் வந்து சுத்தம் செய்து விட்டுப் போனபின் மறுநாள் காலையில் தான் வருவார்கள். அதுவரை யாரும் சுத்தம் செய்ய மாட்டார்கள். இப்போது தான் இந்த மாதிரியான கழிப்பறைகளை குத்தகைக்கு விட்டு காசு வசூல் செய்கின்றனர். சம்பளத்துக்கு ஆள் வைத்து ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்கின்றனர். அப்படி இருந்தும் பொதுக்கழிப்பறைகளில் கால் வைக்க முடியாது. அது வேறு விஷயம். ஆனால் அப்போது அப்படி இல்லை. கழிப்பறைகள் யாரும் அற்ற அனாதைகளாய் திறந்து கிடக்கும். யாரும் வந்து பராமரிக்க மாட்டார்கள். மாநகராட்சி அதிகாரிகள் தான் இதற்குப் பொறுப்பு. அதற்கு மேஸ்திரி என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் காலையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளை, தெருக்களை ஒதுக்குவார். அவர்கள் வேலை செய்வார்கள். எல்லோரும் வந்திருக்கின்றனரா? ஒழுங்காக வேலை செய்கின்றனரா? என்று பார்ப்பார். காலையில் 9 மணிக்கு வேலை முடிந்ததும் எல்லோரும் கிளம்பி விடுவர். மறுநாள் காலை 6 மணி வரை அந்தக்கழிப்பறைகளில் கேட்க ஆள் இருக்காது. தண்ணீர் இருக்கிறதா? மோட்டார் போட வேண்டுமா? சுத்தம் செய்ய வேண்டுமா? அடைப்பு ஏதும் இருக்கிறதா? ஆட்கள் ஒழுங்காகப் பயன்படுத்துகின்றனரா? என்று கண்காணிக்க ஆள் இருக்காது. பிற்பகல் 4 மணிக்கே கழிப்பறைகள் நிரம்பி வழியத்தொடங்கும். ஆட்கள் உள்ளே நுழைய முடியாது. பொது வெளி ஏதும் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அங்கே சிறுநீரும் மலமும் கழிக்கத் தொடங்குவர்.

இங்கே இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று, நகர்ப்புறத்து அடிப்படை வசதிகள் பற்றிய பிரச்சனை. கிராமங்களில் இருந்து பிழைக்க நகரத்துக்கு மக்கள் வரும் போது அவர்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இதை யார் செய்து தரவேண்டும்? அதை யார் பராமரிக்க வேண்டும்? அதற்கான நிதி ஆதாரம் என்ன? அப்படி உருவாக்கப்படும் வசதிகள் எல்லோரது பயன்பாட்டுக்கும் எப்படி கிடைக்கும்? நாம் எல்லோரும் சமம் என்கிற ஒரு சூழலில் நாம் வாழ்கிறோமா? நம்மிடையே எப்படிப்பட்ட ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன? அவை எப்படி கழிப்பறைப் பயன்பாட்டை, அல்லது அது மாதிரியான பொதுவசதி தொடர்பான பயன்பாட்டை பாதிக்கும் என்பதெல்லாம் கேள்விகள். ஏனெனில் நம் நாட்டில் இன்றும் ஒரு சிலர் தான் சில பகுதிகளுக்குள் போகலாம், பிறர் போகக்கூடாது என்கிற புனிதப்படிநிலைகள் இருக்கின்றன. இன்னும் தலித்துகள் செருப்புப் போடக்கூடாது, சைக்கிளில் ஏறிப்போகக்கூடாது, துண்டைத் தோளில் போடக்கூடாது, வீடுகளுக்குள் போகக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது என்று பலவிதமான தீண்டாமை வழக்கங்கள் சாதிகேற்றவாறு இருக்கின்றன. எதற்கு வம்பு? தெருவில் உட்கார்ந்து விடுவோம் என்று தெருவில் மலம் கழிப்பது இப்படிப்பட்ட காரணங்களினால் தான்.

இரண்டு, கழிப்பறை பற்றிய நமது புரிதல். கழிப்பறைகள் என்றால் இன்னமும் நாம் கேவலமான விஷயமாகவே பார்க்கிறோம். மத்தியவர்க்கத்தினரின் வீடுகளில் கழிப்பறைகளுக்கு எவ்வளவு இடம் கிடைக்கிறது? பெரிய வீடுகள் கட்டுவார்கள். ஆனால் அதில் கழிப்பறைகள் மிகவும் சிறியதாக, காற்றுக்கூடப் போகமுடியாதபடி, மூச்சு முட்டும்படி கட்டுவார்கள். பெரிய பூஜை அறைகள் இருக்கும், வரவேற்பறைகள் இருக்கும், தோட்டம் இருக்கும், ஆனால் கக்கூஸ் ஒழுங்காக இருக்காது. அது தீட்டு பற்றிய நமது மனநிலையில் இருந்து வருகிறது. அசிங்கம், அழுக்கு என்று ஒவ்வாமையில் இருந்து உருவாகும் மனநிலை. நான் பீயை எடுத்து உடம்பில் பூசிக்கொள்ள சொல்லவில்லை. ஆனால் நான் ஆண், என் பிள்ளையின் பீயை அள்ள மாட்டேன். என் மனைவியோ, தாயோ, அல்லது மாமியாரோ அல்லது வேலை செய்யும் உதவியாளரோ தான் செய்யவேண்டும் என்று நினைக்கு மனநிலையும் இது தான். அதனால் தான் பொதுக்கழிப்பறைகளை கேவலமாக வைத்திருக்கிறோம். வெளியூர் போனால் பெண்கள் கழிப்பறை கிடைக்காமல் தவிப்பதை எத்தனை ஆண்கள் அறிவர்? ஆண்கள் பேருந்து நின்றதும் எதிரே இருப்பது ஆடா, மாடா, கோயிலா, குளமா, பள்ளிக்கூடமா, மரமா என்று கூட தெரியாமல் சிறுநீர் கழிப்பர். ஆனால் பெண்கள் அந்தப் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு இருண்ட, நாற்றம் எடுக்கும், மலம் மிதக்கும், தண்ணீர் இல்லாத கழிப்பறையில் சேலையில் படாமல், சுடிதாரில் படாமல் மிகவும் சிரமப்பட்டு இயற்கைத் தேவையை நிவர்த்தி செய்யவேண்டி வரும். இப்படி கழிப்பறை அவசியம் இல்லை, அது முக்கியம் இல்லை, அதைப்பற்றி நாம் அக்கறை கொள்ளத் தேவையில்லை என்கிற மனநிலை நம்மிடையே இருக்கிறது. ஆனால் ஏர்போர்ட்டிலும், மல்டி பிள்க்ஸ் சினிமாவிலும், ஸ்டார் ஹோட்டலிலும் கக்கூஸ்கள் சுத்தமாக இருப்பதைப் பார்க்கும் போது உயர்சாதி, பணக்கார புட்டங்கள் பரிசுத்தமானவை, அவற்றைக் கவனிக்க எல்லா வசதிகளும் உருவாக்கப்படும், அவை நன்றாகப் பராமரிக்கப்படும் என்பது மட்டும் தெரிகிறது.

மாநகராட்சி தொழிலாளர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யலாம். தெருக்களில் வேண்டுமென்றே கழிக்கப்படும் மலங்களையும் அவர்களே சுத்தம் செய்ய வேண்டுமென்று ஏதேனும் நிர்பந்தம் இருக்கின்றதா?

நகரம் என்பது ஒரு விரிவாக்கப்பட்ட கிராமம் தானே? கிராமத்தில் துப்புரவுப் பணி செய்கிறவர்கள் எப்படி பொதுவெளியெல்லாம் சுத்தம் செய்யவேண்டுமோ அதே போலத் தான் நகரத்திலும் துப்புரவுப் பணியாளர்கள் ஊரையே சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். மேலும் மாரியம்மாள் விஷயத்தில் அவருக்கு சில தெருக்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை அவர் சுத்தம் செய்ய வேண்டும். நீ துப்புரவுப் பணியாளர் தானே? உனக்கு சம்பளம் கொடுக்கிறோம், நீ சுத்தம் செய் என்று அவர் நிர்பந்திக்கப்படுகிறார்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள “வேண்டுமென்றே” என்கிற விஷயத்திற்கு வருவோம். இப்படி மலம் கழிக்கிறோமே, இந்தத் தெருவே மலக்காடாகி விட்டதே, அதை ஒரு பெண் வந்து சுத்தம் செய்கிறாளே, இது அநீதி இல்லையா என்று யாரும் நினைப்பதில்லை. அதற்குக் காரணம் அவள் ஒரு சக்கிலியப்பெண். பீ பேளும் புட்டங்கள் எல்லாம் இடைச்சாதியைச் சேர்ந்தவை. சக்கிலியப்பெண் அள்ளினால் எனக்கென்ன என்கிற தீண்டாமை உள்ளிட்ட சாதிய வெறிதான் இதற்குக்காரணம். மேலும் நம்மிடையே நிலவும் நமக்கென்ன என்கிற மனநிலையும் தான் காரணம். யாருக்கும் தெரியப்போவதில்லை, நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் மனநிலை. மாரியம்மாளுக்கு யாரும் ஆதரவாக வரப்போவதில்லை. அவளுக்கென்று ஒரு நாதியில்லை, தினசரி அவள் கத்துவாள், சண்டை போடுவாள், பிறகு அள்ளிக்கொண்டு போய்விடுவாள் என்கிற மெத்தனம். நீயே உன் பீயை அள்ளு என்று சொன்னால் மாற்றம் வரலாம். யார் சொல்வது? சொன்ன காந்தியைத் தான் சுட்டு விட்டோமே!

அந்த தெரு குழந்தைகளும் அந்த மலங்கள் அருகே விளையாடிக்கொண்டிருக்கிறதே....இதைப் பற்றிய விழிப்புணர்வே அவர்களுக்கு இல்லையா?

குழந்தைகள் விளையாடவில்லை. அவர்கள் மலம் கழித்துக்கொண்டிருந்தனர். நான் தான் போய் படம் எடுக்கிறேன் என்று அவர்களை எழுப்பி விட்டேன். அதாவது என்னைப் பார்த்ததும் எழுந்துவிட்டனர். இல்லையென்றால் மாரியம்மாள் ஒரு பக்கம் சுத்தம் செய்ய இன்னொரு பக்கம் குழந்தைகள் மலம் கழிக்க ஒரு சுமூகமான உறவு பேணப்பட்டிருக்கும். என்னிடையே தான் கேமரா இருக்கிறதே! அதைப் பார்த்ததும் அவர்கள் பயந்து விட்டனர். நீங்கள் மலம் கழிக்கும் போது ஒருவன் கேமராவோடு வந்தால் நிம்மதியாக உட்கார முடியுமா? உதைக்க மாட்டீர்களா அவனை? அவர்கள் குழந்தைகள். என்ன செய்வார்கள்? மாரியம்மாள் பீ அள்ளுவதை ஒருவன் வீடியோ எடுக்கிறானே என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் குழந்தைகள் எப்போது வேண்டுமானால் வந்து மலம் கழிக்கக்கூடிய ஒரு திறந்தவெளி சுதந்தரம் தானே அது!

மாரியம்மாளுக்கு கிடைக்கின்ற சமுக பரிபாஷனைகள் என்ன? சாதி, தொழில் இரண்டும் அவரை மேலும் ஒடுக்குகின்றதா?

பரிபாஷனைகள் என்று என்ன அர்த்தத்தில் குறிப்பிடுகின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மாரியம்மாளை ஒடுக்குவது அவரது சாதி தான் முதலில். அவரது சாதி தான் அவருக்கு அந்த வேலையைக் கொடுத்திருக்கிறது. அந்த சாதி தான் அவர் இந்த வேலையை ஏற்க வேண்டிய நிர்கதியான சூழலை உருவாக்கியுள்ளது. சாதி தான் அந்தத் தெருவில் அவர் மலம் அள்ளுவதை மற்றவர்கள் கண்டும் காணாமல் இருக்க வைக்கிறது. சாதி தான் அவர் தொடர்ந்து வேலை செய்வதை அரசாங்கமும் அதிகாரிகளும் அனுமதிப்பதை, நிர்பந்திப்பதை, உறுதிப்படுத்துகிறது. ஆக மாரியம்மாளை ஒடுக்குவது சாதியும் அது உருவாக்கிய வறுமையும் தான். தொழில் நிச்சயமாக ஒடுக்குகிறது. பீ அள்ளுவது எப்படி மரியாதைக்குரிய வேலையாக இருக்க முடியும்? அது இழிவான வேலை தான். அது கொடுக்கும் விரக்தி, ஆத்திரம், கையறுநிலை, மன உளைச்சல், கழிவிரக்கம், பாதுகாப்பின்மை, பயம், மற்றும் அவமானம் கொடுமையானது. ஒரு வேலை தன்னளவில் கேவலமானது இல்லை. எல்லோரும் பீ அள்ளினால் மாரியம்மாள் பீ அள்ளுவது பிரச்சனையில்லை. ஒருவர் அவரது பிறந்த சாதியின் காரணமாக, வறுமையின் காரணமாக அடுத்தவன் பீயை அள்ள நிர்பந்திப்பது தான் பிரச்சனை. அதற்கு மரியாதையும் இல்லை. சம்பளமும் குறைவு. மனமும் உடலும் பாதிக்கப்படுகிறது. அந்தப் பீக்குவியலுக்குள் வேலை செய்வதற்கு சாராயத்தின் உதவி தேவைப்படுகிறது. அதன் வீச்சத்தையும், அது தரும் அருவருப்பையும் குமட்டலையும் சமாளிக்க எதையாவது குடித்துத்தான் தொலைக்க வேண்டியிருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த படத்தில் மிக மையமான ஆரம்பத்திலும் இறுதியிலும் பறை இசையை பயன்படுத்தியிருக்கிறீர்களே. என்ன காரணம்?

பறை இசை 90களுக்குப் பிறகு தலித் எழுச்சியின் அடையாளமாக தலித் போராளிகளால் முன்வைக்கப்படுகிறது. அதில் இருக்கும் வீரியத்தையும் கோபத்தையும் தன்னை மறந்து ஆடவைக்கும் ஒரு வெறியையும் நாம் எல்லோரும் அறிவோம். மேலும் பறை இசை என்பது காலம் காலமாக தலித் மக்களின் இசையாகவே இருந்து வருகிறது. ஆனால் அது பிறசாதியினரின் வீட்டு விசேஷங்களுக்கும் கோயில் திருவிழாக்களுக்கும் பிற தலைவர்களில் ஊர்வலங்களுக்கும் மட்டுமே வாசிக்கப்பட்டு வந்த நிலையில் தலித் அமைப்புகள் 90களுக்குப் பிறகு பறை இசையை ஒரு போராட்ட இசையாக, ஒரு எதிர்ப்பு இசையாக ஒரு விடுதலை இசையாக அறிவித்தது மிகவும் முக்கியமானது. அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நானும் மெய்மறந்து பறையிசையை ரசித்து இருக்கிறேன். கண்ணீர் விட்டிருக்கிறேன். ஆடியிருக்கிறேன். எனக்குப் பிடித்த இசை பறை இசை. அது தான் இந்தப் படத்திற்கு அது எடுத்துக்கொண்ட கருவிற்கு அதன் கதை சொல்லும் முறைக்கு பொருத்தமான இசை. மாரியம்மாளின் வீரத்திற்கு, அறிவிற்கு, சிந்தனைக்கு, தியாகத்திற்கு, உழைப்பிற்கு, வேதனைக்கு சரியான மரியாதை பறை இசை தான் கொடுக்க முடியும். அதனால் தான் இந்தப் படத்தில் ஆரம்பத்திலும் இறுதியிலும் பறை இசையைப் பயன்படுத்தினேன்.

யாருக்கானது இந்தப் படம்?

மலம் கழிக்கிற நம் எல்லோருக்குமானது இந்தப்படம். நாம் எல்லோரும் இதைப் பார்க்கவேண்டும். இதைப் பற்றி விவாதிக்க வேண்டும். நாம் எல்லோரும் ஏதோ ஒரு சாதியில் பிறந்திருக்கிறோம். நம் எல்லோரையும் சாதி ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது. குறிப்பாக தலித் அல்லாத பிறருக்கு சாதி ஏதோ ஒரு வசதி வாய்ப்பைக் கொடுக்கிறது. ஒரு அதிகாரத்தைக் கொடுக்கிறது. ஒரு பாதுகாப்பைக் கொடுக்கிறது. தலித் அல்லாத ஒருவரை மலம் அள்ளவைப்பதில் இருந்து பாதுகாக்கிறது. எனவே முதலில் தலித் அல்லாதவர் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்.

தலித் மக்கள் குறிப்பாக மலம் அள்ளும் வேலை செய்பவர்களும் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். ஏனெனில் இந்த வேலையை அவர்கள் எப்படி செய்கிறார்கள், அதில் எத்தனை சிரமங்கள் இருக்கின்றன, அதில் எத்தனை நேரம் இருக்க வேண்டியிருக்கிறது, என்ன என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை ஒரு படமாகப் பார்க்கும் போது பல துப்புரவுத் தொழிலாளர்களே கண்ணீர் விட்டனர். எப்படி எல்லாம் நாங்கள் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதை திரையில் பார்க்கும் போது உணரமுடிகிறது என்று சொன்னார்கள். நான் பீ எனும் இந்தப்படத்தை வெளியிடும் சூழலில் தான் அருந்ததிய அமைப்புகள் வீரியமாக, தனித்துவமாக, தமிழ்நாட்டில் செயல்படத்தொடங்கின. அந்த அமைப்புகளும் இந்தப்படத்தை தமது செயல்பாட்டில் இணைத்துக் கொண்டன. குறிப்பாக ஆதித்தமிழர் பேரவை கோவையில் நடத்திய “மனிதமலத்தை மனிதனே அகற்றுவதை தடைசெய்” என்கிற மாநாட்டிற்கு முன்பு மாநாடு பற்றிய பிரச்சாரக்கூட்டங்களில் தமிழ்நாடு முழுக்க அருந்ததியர் மக்கள் மத்தியில் இந்தப் படத்தைத் திரையிட்டனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

திரையிடல்கள் பற்றிக் கூறுங்கள். முக்கியமாக அந்த தெருவில் திரையிடப்பட்டதா? அதில் கிடைத்த வரவேற்பும் அனுபவங்களும்...

அந்தத்தெரு நமக்கு ஒரு பொருட்டே அல்ல. அது ஒரு தெரு. அதே போல ஆயிரக்கணக்கான இடங்களில் மனித மலத்தை மனிதனே அகற்றும் அவலம் நடந்து கொண்டு தானிருக்கிறது. நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் போதும் நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கும் போதும் யாராவது ஒருவர் ஒரு மலக்குழிக்குள் இறங்கி அடைப்பை எடுத்துக்கொண்டு தான் இருப்பார். அவர் தலையிலிருந்து கால் வரைக்கும் மலம் கொட்டியிருக்கும். அவரது மூக்கிலும் கண்களிலும் வாயிலும் மலம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். அதனால் அந்தத்தெரு நமக்கு முக்கியமில்லை. இந்தப்படம் தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு அமைப்புகளால் நூற்றுக்கணக்கான இடங்களில் திரையிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே திரைப்படவிழாக்களிலும் ஊடகப் பள்ளிகளிலும் பயிற்சி பட்டறைகளிலும் மனித உரிமை அரங்குகளிலும் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.

மனிதமாண்பு, விடுதலை, உரிமை, போராட்டம் பேசுகிற அனைத்துத்தளங்களிலும் இந்தப்படம் போய்ச்சேர்ந்திருக்கிறது. மனிதமலத்தை மனிதனே அகற்றக்கூடாது எனும் போராட்டத்தில் இந்தப்படம் ஒரு கருவியாக இன்றும் பங்கேற்றுவருகிறது.

ஒவ்வொரு திரையிடலின்போதும் பார்வையாளர்கள் பார்க்கமுடியாது அவதிப்படுவதையும், முகத்தைத் திருப்பிக்கொண்டு வெறும் சத்தத்தை மட்டும் கேட்பதையும், நடுவில் சிலர் வெளியே ஒடுவதையும், இன்னும் சிலர் வாந்தி எடுப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.

ஏன் இப்படி முகத்தில் அடிக்கிற மாதிரி படம் எடுத்து இருக்கிறாய் என்று என்னுடன் வாக்குவாதம் செய்தவர்களும் உண்டு. எவ்வளவு நேரம்தான் பீயையே பார்ப்பது? வேறு எதையாவது காட்டக்கூடாதா என்று சொன்னவர்களும் உண்டு.

எங்களைப்பற்றி நீ ஏன் படம் எடுக்கிறாய்? எங்களை ஏன் அவமானப்படுத்துகிறாய்? உன்னால் எங்களின் உணர்வைப் புரிந்து கொள்ளமுடியாது. நீ தலித் அல்லாதவன் என்று சொன்னவர்களும் உண்டு.
எங்களைப் பற்றி யாரும் இதுவரை எந்த படமும் எடுத்ததில்லை. எங்களது உள்ளக்குமுறலை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி என்று சொன்னவர்களும் உண்டு.

தலித்மக்கள் இந்தப் படத்தைப் பாராட்டுகின்றனர். ஆனால் தலித் சிந்தனையாளர்களும் களப்பணியாளர்களும் எழுத்தாளர்களும் இந்தப் படத்தை ஏற்கவில்லை. அவர்கள் இன்னும் என்னை சந்தேகிக்கின்றனர். இவன் யார்? எதற்கு இந்தப் படத்தை எடுத்தான்? இவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன்? அமைப்பில்லாமல் எப்படி இயங்கமுடியும்? இதைவைத்து பணம் சம்பாதிக்கிறானா? என்று பல கேள்விகள். பதில் நான் என்ன சொன்னாலும் சந்தேகம் தீரப்போவதில்லை.

நான் எனது விமர்சகர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். எனக்கு படம் எடுக்க உரிமை இருப்பதுபோல அவர்களுக்கு இந்தப்படத்தை நிராகரிக்க உரிமை இருக்கிறது.

என்னஇருந்தாலும் நான் தலித் ஆதரவாளன்தானே!


 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </