உயிர் கொடுக்கும் கலை 4 - டிராட்ஸ்கி மருது
- ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர் |
மணிவண்ணன்...
சுந்தர பாண்டியனும் (நடிகர் சந்திரசேகரின் அண்ணன்) நானும் ஓவியக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் இருவர் மூலமாக எனக்கு மணிவண்ணனுடனான பழக்கம் ஏற்ப்பட்டது. கல்லூரி படிப்பிற்கு பிறகு நாங்கள் தங்கியிருந்த அறையில் சந்திரசேகரும் வந்து சேர்ந்துக்கொண்டான். நாடக அனுபவங்களுக்கு பிறகு சினிமா முயற்சியில் அவன் ஈடுபட்டிருந்தான். நாங்கள் மூவரும் சுற்றிக்கொண்டிருந்த காலகட்டம். சினிமாவுக்கான முயற்சி, weavers service centre'இல் நான் சேர்ந்தது, ராபர்ட் ராஜசேகரின் படங்கள், அறை வாழ்க்கை என எங்கள் உறவு வளர்ந்தது.பாரதிராஜாவின் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கும் முயற்சியில் தொடர்ந்து சந்திர சேகர் இருந்த நேரம், அங்கு பாரதிராஜா மூலம் மணிவண்ணனின் அறிமுகம் அவனுக்கு கிடைத்தது.
|
மணிவண்ணன் குறித்து இவர்கள் இருவரும் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் விஜயவாடா சென்றுவிட்டேன். ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போது நணபர்கள் கூறும் அறிமுகத்தினாலும், என்னை பற்றிய அறிமுகம் மணிவண்ணனிடத்தில் நண்பர்கள் கூறியதினாலும் மணிவண்ணனுக்கு என் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. கருத்து ரீதியான, மார்க்ச்சிய, பெரியாரிய சார்ப்பு யோசனை இருந்ததாலும், எனக்கு அவரை பிடித்ததும் அவருக்கும் என் மேல் இருந்த அபிப்ராயத்தினாலும், எங்கள் இருவருக்குள்ளும் சந்திக்காமலே நண்பர்கள் மூலம் ஒரு உறவு உண்டானது. திரைப்பட முயற்சி என நான் இருந்த காலகட்டத்தில், கட்டாயத்தின் பேரில் நான் weavers service centre'இல் சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் என்னால் அங்கு இருக்க முடியாமல், வேலையை விட்டுவிட்டு மீண்டும் சினிமா முயற்சிக்காக சென்னை வந்துவிட்டேன். Saffire Blue Diamond theatre'இல் continuous show பார்க்கும் இடத்தில் முதல் முறையாக மணிவண்ணனை சந்தித்தேன். என்னை பார்த்த உடனே, "நான் பிசிராந்தையார் மாதிரி தான். உங்களை இங்க நான் நினச்சிட்டே இருக்கேன், உங்களுக்காக எழுதி அனுப்பாமல் கடிதங்கள் இருக்கிறது" என்றான்.
நிழல்கள் கிட்டத்தட்ட எங்களுடைய அறை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. ஆனால் அந்த படத்தில், கலைஞர்கள் தங்கள் தினப்படி வாழ்க்கையில் ஒரு பெரும் கற்பனாவாதியாகவே இருந்து, அதிதமான கற்பனை நிலையில் வாழ்க்கையை அல்லது கலையையும் நினைக்கும் நிலைக்குள்ளான ஒரு பகுதியில் uncommunicative'ஆக travel பண்ணிட்டு இருக்கும் ஒரு கலைஞனை சொல்வது போல அந்த கதாநாயகனை காட்டியிருப்பார்கள். இந்த படம் இங்கு வெளியாகியது. நான் விஜயவாடாவில் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் தில்லி திரைப்பட விழாவிற்கு படங்களை பார்க்க தொடர்ந்து செல்வதுண்டு. அப்படி நான் சென்றிருந்த போது, நிழல்கள் இந்த முறை வந்திருப்பதாகவும், சந்திரசேகர் நடித்திருப்பதாலும், மணிவண்ணன் எழுதியிருப்பதாலும், பாரதிராஜா இயக்கியிருப்பதாலும், அந்த படத்தை மட்டும் Indian Panorama'விற்கு சென்று பார்த்தேன். கதாநாயகன் ஓவியம் வரைபவனாகவும் அவனுடைய அறையில் என்னுடைய ஓவியங்கள் உபயோகபடுத்தபட்டிருந்தது. அதை பார்த்தவுடன் மகிழ்ச்சி என்பதை விட, அதிர்ச்சி என்பதை விட இந்த ஓவியங்களையெல்லாம் சினிமா செட்டுக்கு கொண்டு சென்று சிதைத்திருப்பார்களோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் அதை ஒரு பெரிய ஈடுபாட்டோடு, என் படங்களை கொண்டு சென்று authenticஆக இணைத்து மணிவண்ணன் அதை செய்தான். நான் சென்னையிலேயே விட்டு சென்றிருந்த படங்கள் அவை, நான் திருமணமாகி விஜயவாடா சென்றிருந்தேன். விஜயவாடாவிலிருந்து தில்லிக்கு சென்றிருந்தேன். எனக்கு இது தெரியாது, எனக்கு தெரியாமல் நடந்ததாலே அதிர்ச்சியும் பயமும் இருந்தது. என்னுடைய ஓவியங்கள் மீது நான் அதிக பிரியம் கொண்டவன் என்பதால், இருவரும் அந்த ஓவியங்களை எல்லாம் பத்திரமாக மீண்டும் வீட்டுக்கு கொண்டுவந்து வைத்துவிட்டனர்.
|
அந்த படத்தில் வரும் ஓவியர் மற்றும் மற்ற கலைஞர்கள், வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் தேடிய பகுதியை விட்டு போவது போல, இதல்ல வாழ்க்கை, வாழ்க்கை என்பது வேற என சொல்வது போல படம் முடிந்திருக்கும். அறை வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை எடுத்து படத்தை உருவாக்கியிருந்தாலும், அந்த கதாநாயகனின் பெரும் பகுதி என் சார்பான ஒரு பகுதி என நானும் அவனும் என்றும் பேசிக்கொண்டது கிடையாது. ஆனால் அந்த கலாப்பூர்வமான பாதையில் அவனை குறித்து ஒரு பார்வை எனக்கு தெரிந்தது. ஆனால் அது அப்படியல்ல என பல காலம் நானும் நண்பர்களும் பேசுவோம். இந்த கதையில் கலைஞர்கள் குறித்தான அவனின் பார்வை தவறு என இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது. காலபோக்கில், மணிவண்ணன் அவன் நினைத்த மாதிரியான கலைஞன் நானில்லை என்பதை புரிந்துக்கொண்டான். நான் தீர்க்கமாக சமரசமின்றி விலகியிருந்து ஒரு பகுதியை செய்துக் கொண்டே மக்கள் மத்தியில் செல்வது என என்னுடைய பாதை சரி என கிட்டத்தட்ட அங்கிகரித்தது போன்று நட்பு ரீதியான சமிக்ஞை மூலம் ஏற்றுக் கொண்டும் விட்டான்.
நிழல்கள் வசூலில் பெரிய வெற்றி பெறவில்லை. அனுமானித்து எழுதிய கதை ஒன்று, கொலைகள் மிகுந்த திரைப்படமான கதை ஒன்று. மணிவண்ணன் தொய்வாகவும் சோர்வாகவும் இருந்த காலகட்டம். அதன் பிறகு வந்த அலைகள் ஓய்வதில்லை மிக பெரிய வெற்றி பெற்றது. நான் சென்னை வந்துவிட்டேன். நான் இயக்குவதாகவும், மணிவண்ணன் கதை-வசனம் எழுதுவதாகவும் 'செக் போஸ்ட்' என்ற படம் ஆரம்பிக்க பட்டது. மணிவண்ணன் தமிழ் சினிமாவின் மிக முக்கிய எழுத்தாளராக மாறிவிட்டான். அவனை தொடர்ந்து தேடுவதும், அவனுடைய எண்ணத்தை திசை திருப்புவதுமாக கூட்டங்களும் சேர்ந்தது. நாங்கள் எடுக்க இருந்த படம் எடுக்க முடியாமல் நின்றுவிட்டது. பிறகு அவன் ஜோதி என்று ஒரு படம் ஆரம்பித்தான். செக் போஸ்ட்டின் கதாநாயகியின் பெயர்தான் ஜோதி. செக் போஸ்ட் படத்தின் ஒரு பகுதி ஜோதி படத்திற்கும் சென்றது. ஆனால் அதற்கு இடையில் மற்றவர்கள் சொன்ன அபிப்ராயங்களினால் 'கோபுரங்கள் சாய்வதில்லை' ஆரம்பித்து, அது முதல் படமாக வெளியானது. பிறகு அவனுடைய மகளுக்கும் ஜோதி என்று பெயர் வைத்து மகிழ்ந்தான்.
அந்த காலகட்டத்திலேயே அவனுக்கு நையாண்டி, கிண்டல், எள்ளல், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த நையாண்டி கருத்துக்கள் என நண்பர்களுடன் பேசும் போது சிறப்பாக வெளிபடுத்துவான். நீ ஒரு கதாசிரியர் என்று சொல்வதை விட ஒரு மிகப்பெரிய வசனக்கர்த்தா என நான் அந்த காலத்திலே அவனிடம் சொல்வதுண்டு. தமிழ்நாட்டில் உன் இடத்தை எனக்கு தெரிந்து ஒரு 35-40 வருஷத்துக்கு நிரப்ப யாரும் கிடையாது என நான் சொல்லுவேன். பின் நாட்களில் நடிகனாகி, தான் எழுதிய வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் இயல்பாக பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அவன் மிக முக்கியமான நடிகனாக திகழ்ந்தான்.
ஆரம்ப காலத்தில் கோவையில் அவனுக்கு ஏற்ப்பட்ட மார்க்சிய மற்றும் பெரியாரிய தாக்கம் இறுதி வரைக்கும் இருந்தது. சென்னையில், எங்களுடைய நண்பர் வட்டத்தில் மாறாமல் இருப்பது நாங்கள் இருவர் தான் என எப்போதும் சொல்வார்கள். எங்கள் இருவருக்குள்ளும் இந்த பகுதி சார்ந்த உரையாடல் எப்போதும் இருந்துக் கொண்டே இருந்தது.சினிமாவுக்குள் அவனோடு தொடர்ந்து என்னால் வேலை செய்ய முடியவில்லை. என்னுடைய கல்லூரி தோழன் V.கலை மணிவண்ணனின் அனைத்து படத்திற்கும் கலை இயக்குனராக பணியாற்றினான். மனோபாலாவும் என்னோடு இருந்தவன் தான்.பாரதிராஜா படங்களில் வேலை செய்ய மனோபாலாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பின்பு சுந்தரபாண்டியன் தான் மணிவண்ணனின் பல படங்களுக்கு போஸ்டர் டிஸைனராக இயங்கினான். எங்களுக்குள் 35 ஆண்டு கால நீண்ட தொடர்பு உண்டு.
ஈழப் போராட்டம் பொருத்தவரை என்னுடைய நிலைப்பாடு போலவே அவனுடைய நிலைப்பாடும் இருந்தது. ஈழப் போராட்ட விஷயத்தில் ஆரம்ப காலத்தில் பல பிரிவுகள் இருந்தது, பிறகு எல்லாம் சென்று புலிகளுடைய நிலை உயரத்துக்கு வந்து தமிழ் மக்களுக்கான போராட்டம் புலிகள் எடுக்க வேண்டிய நிலை வரும் வரைக்கும், பிறகு அதை தொடர்ந்தும் அன்றிலிருந்து அவனுடைய வாழ்வின் கடைசி வரைக்கும், அதன் மேல் இருந்த அபிப்ராயங்களும் அதற்காக அவன் செய்த காரியங்களும் பல. சொல்ல முடியாத பல காரியங்கள் அவன் செய்திருக்கிறான். உலக தமிழர்களினுடைய செயல்பாடுகளின் முன்னெடுப்பகளிலும் அவன் பின்பு இருந்து செய்திருக்கிறான். பணத்தில் அவன் கெட்டியான ஆளாக இருந்தாலும், வெளியே சொல்லாமல் பல உதவிகளையும் செய்துள்ளான்.
அவனுடைய படங்களில் சில படங்களை நான் விமர்சனம் செய்தது உண்டு. படத்தின் வடிவம் சார்ந்த விஷயங்கள் குறித்தும் பல முறை வாதிட்டிருக்கிறோம். குறிப்பாக 'இனி ஒரு சுதந்திரம்' படத்தை குறித்து, இனி ஒரு சுதந்திரம் என பெயர் வைத்துவிட்டு, ஆரம்பத்தில் சுதந்திரத்திற்கு போராடியவர்களின் தொடர் புகைப்படங்களை காண்பித்துவிட்டு, சுதந்திரத்திற்கு போராடிய பிய்ந்த செருப்பை கையில் எடுக்கும் சிவகுமாரை அறிமுகம் செய்யும் பட்சத்தில் அந்த படம் டைட்டில் போட்டு முடிந்தவுடனே முடிந்துவிட்டது, நான் இரண்டரை மணி நேரம் பார்ப்பது தேவையற்றது என குறிப்பிட்டேன். சாதாரண மனிதனுக்கே இந்த கஷ்டம் வரக்கூடாது என காண்பித்துவிட்டு,சுதந்திரப் போராட்ட தியாகியின் வாழ்வின் ஒரு பகுதியை பார்வையாளன் அனுபவித்த பிறகு, அய்யோ இவ்வளவு கஷ்டபடுறாரே, இறுதி அரைமணி நேரம் பார்த்து இந்த நாட்டுக்கு சுதந்திர வாங்க தன் வாழ்வையே அற்பணித்தவர் இப்படி கஷ்டபடலாமா என பின்பு தானே சொல்லனும். ஆரம்பத்திலேயே அப்படி சொல்வது வடிவத்தில் சரியில்லை என்று நான் சொன்னேன். அவருக்கு அது கோபத்தை உண்டாக்கியது. எனக்கு வேண்டிய நண்பர்கள், குறிப்பாக பாண்டியனிடம் என்ன மருது 'இப்படி என் படத்தை சொல்லிடாரு' என வருத்தப்பட்டான். பிறகு நானே அவனிடம் சென்று, நான் நல்ல நண்பனாக இருப்பதாலே உன் முகத்துக்கு முன்னாடி சொன்னேன், இல்லைனா நீ நல்லாதான் பண்ணியிருக்கனு பொய் சொல்லியிருப்பேன். நான் சொன்ன கருத்திலிருந்து நீ ஆக்கபூர்வமானதை எடுத்தால் தான் உனக்கும் வளர்ச்சி என்பதை உறுதியுடன் ஏற்றுக்கொண்டான்.
அவனுடன் முக்கியமான விஷயங்கள் பலவற்றை பேசுவேன். நான் படித்த சம்பவம், ஒரு ஹாலிவுட் இயக்குனரின் வாழ்வில் நடந்ததை அவனிடம் சொல்லியிருந்தேன். அதை அவனுடைய திரைப்படத்தில் ஒரு காட்சியாய் வைத்திருந்தான். ரொம்ப பிராமதமா இருக்கு என்று உணர்ச்சிவசப்பட்டு அந்த காட்சியை இணைத்தான். அவனை சந்திககும் போதெல்லாம் எப்போதும் ஒரு புத்தகத்தோடு தான் இருப்பான். நான் சில புத்தகங்களை பரிந்துரைப்பேன், அவனும் சில புத்தகங்களை எனக்கு பரிந்துரைப்பான். ஒத்த கருத்துடைய நண்பர்களை மனம் நிறைந்து சந்தித்து பேசுவது அவனது வழக்கம். தமிழ் மேல் அவனுக்கு அதிக ஆர்வம். எட்டு மாதங்களுக்கு முன்பு என் புத்தகங்களையெல்லாம் பார்த்துவிட்டு, நானும் நீங்களும் சேர்ந்து தமிழ், தமிழகம் சார்ந்து ஒரு புத்தகம் பண்ணனும் என்றார். இது தான் அவர் கடைசியாக என்னிடம் சொன்ன விருப்பம். அது நிறைவேறாமல் போய்விட்டது.
நாங்கள் செய்ய இருந்த செக் போஸ்ட் படம் நின்று விட்டது என்பதால் அந்த காலகட்டத்தில் எனக்கு ஒரு சின்ன மன வருத்தம் இருந்தது என அவனுக்கும் தெரியும்.அப்படி செய்திருக்க கூடாது என நினைத்தான். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு, அது ஒரு தடையாக இல்லாமல் எங்கள் நட்பு தொடர்ந்தது.அவனுடைய திருமண அழைப்பிதழை வடிவமைத்ததும் நான் தான்.
மூத்த கலைஞர்களை பற்றி பேசும்போது, உணர்ச்சிபூர்வமாக பேசுவான். சமகாலத்தில் என் வயதை ஒத்தவர்களில் சினிமாவுக்குள் அரசியல் ரீதியாக தெளிவுடன் முக்கியமான ஒரு நண்பனாக இருந்தவன். அந்த வகையில் நானும் அவனும் பேசும்போது மிகுந்த மகிழ்ச்சியான ஒரு நிலையில் இருந்தோம். தமிழ், தமிழ் நாடு, தமிழ் மக்கள், பெரியாரை முன்னிறுத்தி ஒரு வழி, மார்க்சிய பார்வை என எங்கள் உரையாடல் அமையும்.
அவர்கள் தேடிய வாழ்க்கை வேண்டியதில்லை, லெளகிக வாழ்க்கை வேண்டும் என்கிற மாதிரியான கருத்தை முன்னிறுத்தி தான் நிழல்கள் வந்ததோ என அவனுக்கு ஒரு சின்ன குற்ற உணர்வு இருந்ததாலே, என்னை சமாதானம் செய்வதற்காக பெருமளவில் சாதுர்யுமாக பேசி அவனை நியாயப்படுத்தும் வண்ணம் பேசுவான். அப்படியெல்லாம் நீ நியாயப்படுத்தி பேச தேவையில்லை, யாரும் யாரையும் வருத்திக்கொண்டு வேலைகள் செய்ய வேண்டியதில்லை என நான் கூறுவேன். நாம் தடம் மாறி சென்றுவிட்டோமோ, நாம் பேசின வாழ்க்கை வேறு, நாம் வாழ்ந்த வாழ்க்கை வேறு என ஒரு கட்டத்தில் நினைத்தான். அதெல்லாம் இல்லையென நானும் அவனுடன் விவாதித்தேன். அதெல்லாம் இல்லையென பின்பு உணர்ந்து விட்டான். அதற்கு பின்பு தான், பெரும் வீச்சாக political sattire அவனிடமிருந்து வந்தது.
கொண்ட கொள்கை, பேச்சும் வாழ்வும் எல்லாமும் ஒரே நேர் கோட்டில் பலரிடம் இருப்பதில்லை. புகழ், செல்வம் வந்த போதும் அதே தீர்க்கமான பார்வையோடே வாழ்ந்து மறைந்துவிட்டான் எங்கள் நண்பர்களில் ஒருவன். ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களில் , M.R.ராதா பேசி நடிக்கும் போது அவருக்கு வசனம் எழுதிய என்னுடைய தாத்தாவும் நையாண்டியும் கிண்டலும் பேசுகிறவர் என்பதால், வசனம் ராதாவுக்கு எழுதியதாலும், ராதா நடிக்கும் படங்களை பார்க்கும் போது எல்லாம் தாத்தா M.S.சோலை மலை உருவமும் என் நினைவுக்கு வந்து செல்வது மறக்க முடியாது. மணிவண்ணன் தானே எழுதி, தானே தோன்றி பேசி படிமங்களில் உறைந்து இருக்கும் படி செய்து விட்டு சென்று விட்டான்.
(மணிவண்ணனின் நினைவேந்தலில் பேசியவற்றிலிருந்து . . .)
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |