பந்தயப் புரவிகள் - தவறிப் போன பந்தயக் குதிரைகள்...
மனித மனம் நுட்மானது. பிடிக்குள் அடங்காதது. பல தருணங்களில் அதனை ஒரு காட்டு விலங்கை பழக்குவது போல பழக்க வேண்டிய நிர்பந்தம் மனிதனுக்கு உள்ளது. மனித மனத்தில் எழும் அக சிக்கல்கள் பெரும்பாலும் செயற்கையானதே. இல்லாதவற்றை இருப்பதாய் எண்ணிக் கொள்ளும் பாவனைகளில் இருந்தே பெரும்பாலான செயற்கைத்தனங்கள் தொடங்குகின்றன. தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனம் அதிலிருந்து தப்பிக் கொள்ள தன்னை மையப்படுத்திய ஒரு மாய உலகை புனைந்து கொள்கிறது. கசக்கும் உண்மையை விட இக்கனவுகளால் கட்டமைக்கப்பட்ட மாய வெளியே சிறந்ததென முடிவுக்கு வருகிறது.
சினிமா கலை தோன்றியது முதலே கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறது. வெறும் அசையும் பிம்பங்களை காட்சிபடுத்துவதில் துவங்கி பின்னர் கதைகள் சொல்லும் அதன் பயணம், தொழில்நுட்ப ரீதியிலும் கதை சொல்லும் முறைமைகளிலும் தொடர்ந்து பரிணமித்துக் கொண்டேதான் இருக்கிறது. சினிமா எனும் மாபெரும் கனவு தேசம் எண்ணற்ற ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. அது ஒரு பிரம்மாண்ட களம். ஆனால் துளியும் இரக்கமற்றது. நமது பார்வைக்கு இக்களத்தின் உச்சத்தில் இருப்பவரைப் பற்றிய செய்திகள் மட்டுமே வருகிறது. அதாவது இப்பந்தய
களத்தில் அப்போதைக்கு முன்னால் ஓடும் குதிரைகளின் மீது மட்டுமே எல்லோர் கவனமும். ஓடும் வரை மட்டுமே குதிரைகளைக் கொண்டாடிடும் உலகம்.
பந்தயத்தில் பின் தங்கும் குதிரைகள் யோசனைகளின்றி மறுதலிக்கப்படும். சினிமாவினால் வாழ்க்கை ஏணியின் உச்சத்தைத் தொட்டவர்களின் சரித்திரங்களை மட்டுமே நாம் அறிவோம். அல்லது அதனை மட்டுமே தெரிந்து கொள்ள நாம் பிரியப்படுகிறோம். கணக்கின்றி தோற்றவர் மத்தியில் வெல்பவரின் எண்ணிக்கை
வெகு சொற்பமே திரையுலகில். வென்றவரின் வரலாறு மட்டுமே எழுதப்படுகின்றது என்ற போதிலும், கால வெள்ளத்தில், உச்சத்தில் இருக்கும் ஆளுமைகள் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கினால் அவர்களைப் பற்றி சிந்திக்க யாருக்கும் நேரமில்லை. மறுயோசனைகள் இன்றி அவர்கள் அங்கேயே கைவிடப்படுவர்.
அவர்களின் வளர்பிறை வாழ்க்கையின் அந்திமம் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்பிறையாகும் யார் பார்வைக்கும் வரமாலேயே.
ஒரு காலத்தில் உச்சத்திலிருக்கையில் செல்லுமிடமெல்லாம் கொண்டாடப்படும் ஆளுமையாய் வலம் வந்த திரை நட்சத்திரங்கள் தங்களது அந்திம காலத்தில் கடும் அக நெருக்கடிக்கும், மனச்சிதைவுக்கும் ஆட்படுகின்றனர். சினிமா மௌனப்பட யுகத்தில் இருந்து பேசும் பட யுகத்திற்கு நகர்ந்த போது அது மாபெரும்
பாய்ச்சலாக இருந்தது. மௌனப்படங்களின் பெரு நட்சட்த்திரங்கள் பலர் இந்த மாற்றத்தால் ஏககாலத்தில் முகவரி இழந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர் பேசும் படங்களுக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ள இயலாதவர்களாய் இருந்தனர். பேசும் பட யுகம் ஏறக்குறைய மௌன யுகத்தின் நடிகர்களை முற்றாக
ஓரங்கட்டிவிட்டு புதிய பல நட்சத்திரங்களை தந்தது. பெரு வேட்கையோடு கேளிக்கை மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு புதிய ஆளுமைகளை கண்டுபிடிப்பதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டது சினிமா உலகம்.
|
மௌன யுகத்தின் ஒரு மகத்தான ஆளுமையாய் இருந்த ‘நோர்மா டெஸ்மோண்ட்’ எனும் நடிகையின் அந்திம காலத்தை பற்றியும், அவளது வாழ்க்கையில் தற்செயாலாய் குறுக்கிடும் ஹாலிவுட் கனவுலகில் திரைக் காதாசிரியனாகிட கனாக் காணும் ‘ஜோ கில்லிஸ்’ எனும் இளைஞனுடைய வாழ்க்கையைப் பற்றியும் சொல்கிறது Sunset BLVD (1950) எனும் திரைப்படம். இத்திரைப்படத்தை பில்லி வைல்டர் ( Billy Wilder) இயக்கியிருந்தார்.
சன்செட் பொலிவார்ட் (Sunset Blvd) என்பது அமெரிக்காவின் கலிஃபொர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தெருவின் பெயர். (Boulevard எனும் சொல்லுக்கு அர்த்தம் ஒரு அகலமான தெரு என்பதாகும்.) ஹாலிவுட் திரைநட்சத்திரங்களின் வீடுகள் அங்கே அமைந்துள்ளதால் அது மிகப் பிரபலமான பகுதியாகவும், ஹாலிவுட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும் விளங்கியது. இத்திரைப்படத்திலும் இன்னும் சில படங்களிலும் இவ்விடம் அப்படியே உள்ளபடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
கதை ஒரு கொலையில் இருந்து துவங்குகிறது. ஒரு சாதாரண நாளின் காலையை அசாதாரண பரபரப்புக்குள்ளாக்கிறது சன்செட் பகுதியில் பழம்பெரும் நடிகை நோர்மா டெஸ்மோண்டின் (Gloria Swanson) மாளிகையின் நீச்சல் குளத்தில் மிதக்கும் ஒரு பிணம். தண்ணீரில் மிதப்பது ஒரு இளைஞன். அவனது பெயர் ஜோ கில்லிஸ் (William Holden). ஆம், கதையின் மற்றுமொரு மையப் பாத்திரமான அதே ஜோ கில்லிஸ். அவனே தனது கதையையும் நோர்மவின் கதையையும் சொல்வதாக ஆரம்பிக்கிறது கதை.
கில்லிஸ் திரைக் கதாசிரியனாகும் கனவுகளோடு ஹாலிவுட்டின் பிரம்மாண்டக் கதவினை சலிக்காமல் தட்டிக் கொண்டிருக்கிற எண்ணற்ற இளைஞர்களுள் ஒருவன். நீண்ட உழைப்போடும் பெரும் சிரத்தையோடும்
அவன் எழுதுகிற திரைக்கதைகளால் ஏனோ திரை முதலீட்டாளர்க்களை கவர முடிவதில்லை.அவனது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. தனது காருக்காக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிர்பந்தம். அப்போதைக்கு இக்கட்டிலிருந்து தப்பிக்க அவனுக்கு முன்னூறு டாலர் அத்தியாவசியமாகிறது. ஏனேனில் வாய்ப்புத் தேட அவன் அவ்வாகனத்தைத் தான் நம்பியிருக்க வேண்டும். தனது நண்பர்களின் உதவியை நாடுகிறான். பலனில்லை. தனது திரைக்கதைகளில் ஒன்றை அவன் மீது பிரியமுள்ள பாராமௌண்ட் திரை நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளரிடம் விற்க முற்பட அதிலும்
பலனில்லை. அங்கு கதை இலாக்காவில் பணிபுரியும் பெட்டி ஸ்ரீஃபர் (Nancy Olson) எனும் பெண் அக்கதையை நிராகரித்து விடுகிறாள். வரும் வழியில் வங்கி அதிகாரிகளின் பார்வையில் பட்டு அவர்களிடமிருந்து தப்பிக்க விரைகிற போது வழியில் சன்செட் பொலிவார்டின் அருகில் அவனது கார் டயர் வெடித்துவிட ஒளிந்து கொள்வதற்கு ஒரு மாளிகையில் காரை நிறுத்துகிறான். பார்வைக்கு அது ஆளில்லா மாளிகை போல தோற்றமுடையதாய் இருக்கிறது. ஆனால் அங்கு ஒரு பெண் இவனை உள்ளே வருமாறு சைகை செய்கிறாள். சற்றே குழப்பத்துடன் அவன் செல்கிறான். சிறிது நேரத்திலேயே அவள் மௌனப் படங்களில் நடித்த பிரபல நடிகை நோர்மா டெஸ்மோண்ட் எனவும் அவள் தன்னை அவள் எதிர்பார்த்த வேறொரு நபராக தவறாகப் புரிந்து கொண்டாள் எனவும் உணர்கிறான். அவள் தன்னை ரசிகர்கள் இன்னமும் விரும்புவதாகவும், தான் மீண்டும் நடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புவதாகவும் கூறுகிறாள். அதற்காக பல நாள் உழைப்பில் தானே ஒரு கதை எழுதியுள்ளதாகவும் அதனை திரைப்படமாய் ஆக்க விரும்புவதாகவும் கூறுகிறாள். கில்லிஸ் ஒரு திரைக்கதை ஆசிரியனாய் இருப்பதால் அவன் தனது ஆக்கத்தை செப்பனிட வேண்டுமென்றும் அதற்கு சம்பளமாக பெருந்தொகை தருவதாகவும் வாக்களிக்கிறாள். அவனுடைய அப்போதைய நிலைமைக்கு கட்டாய பணத் தேவைக்காக அவன் வேண்டுகோளை ஏற்கிறான்.
|
நோர்மாவோடு மாளிகையில் வசிப்பது மேக்ஸ் (Erich von Stroheim) எனும் ஒரு உதவியாளன் மட்டுமே. அவன் கில்லிஸ் தங்குவதற்காய் மாளிகையின் அருகேயுள்ள விருந்தினர் இல்லத்தை தயார் செய்கிறான். நாட்கள் செல்கின்றன. கில்லிஸ் நோர்மவின் மகா மோசமான திரைக்கதையை அவளது தேவையில்லாத தலையீடுகளுக்கு மத்தியில் செப்பனிடுகிறான், அது ஒன்றுக்கும் ஆகாதது எனத் தெரிந்தும். காசு கிடைக்கிறதே. சில நாட்களிலேயே நோர்மா அவனிடம் வேறெதையோ எதிர்பார்க்கிறாள் என உணர்கிறான் கில்லிஸ். அவனது விருப்பத்திற்கு மாறாக அவளே அனைத்து முடிவுகளையும் எடுத்துக் கொள்வது இவனுக்கு வெறுப்பாக இருந்தாலும் அவள் அளிக்கும் அபரிவிதமான பணமும் அங்கு தங்குவதால் தனக்கு கிடைக்கும் பகட்டு வாழ்க்கையும் அவனது கண்ணை மறைக்கிறது. யாவற்றையும் அதற்காக சகித்துக்
கொள்கிறான்.
நோர்மாவிற்கு இன்னமும் ரசிகர்களிடமிருந்து கடிதங்கள் வருவது அவனுக்கு ஆச்சரியமூட்டுகிறது. மேலும் அம்மாளிகையில் கதவுகளுக்கு தாழ்களே இல்லாததும் விசித்திரமாய் இருப்பதாய் மேக்ஸிடம் கேட்கிறான். அவனோ ரசிகர் கடிதங்கள் வரும் முகவரியை பார்க்குமாறு சொல்ல, அக்கடிதங்கள் உண்மையிலேயே
ரசிகர்களிடமிருந்து வருவதில்லை என்பதை கில்லிஸ் அறிகிறான். மேலும் நோர்மா பல தருணங்களில் தற்கொலைக்கு முயன்றதாகவும் அதனால் அவளது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அம்மாளிகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாய் விளக்குகிறான். எந்த அறைக்கும் தாழ்கள் இருக்காது. மேலும் சவரக்
கத்திகளோ, தூக்க மாத்திரைகளோ இருக்காது என்கிறான்.
|
ஒவ்வொரு வாரமும் தனது மாளிகையின் கூடத்தில் பழைய திரைப்படங்களை திரையிட்டுப் பார்ப்பதை வழக்கமாய் கொண்டவள் நோர்மா. எப்போதும் அவள் பார்ப்பது தான் நடித்த மௌனப் படங்களை மட்டுமே. மௌனப்படங்கள் தான் அசலான கலை என்பது அவளது கருத்து. உணர்சிகள் ததும்பும் முகபாவங்கள் மௌனப்
படங்களில் பிரதானப் படுத்தப்பட்டன. ஆனால் பேசும் படங்களிலோ அற்புதமான முகபாவங்களை வசனங்கள் வழி வார்த்தைகள் திருடிக் கொண்டதாக ஆத்திரப்படுகிறாள். அதன் வழியாக நோர்மா தனது கடந்த கால நினைவுகளிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை அறிந்து கொள்கிறான் கில்லிஸ்.
நோர்மா தனது திரைப்பயணக் காலம் முடிவுற்றது எனும் யதார்த்தத்தை ஏற்க மறுக்கிறாள். தான் புனைந்து கொண்டிருக்கும் கனவுக் கோட்டையின் நிரந்தர மகாராணியாக தன்னையே நினைத்துக் கொள்கிறாள். தன்னை இன்னும் திரைஉலகம் விரும்புவதாகவும், ரசிகர்கள் தனக்காக காத்திருப்பதாகவும் கற்பனை செய்து
கொள்கிறாள். தன்னை கடந்து சினிமா சென்றுவிட்டது எனும் நிதர்சனத்தை ஏற்க மறுக்கிறது அவளது மனம். வாழ்ந்து வீழ்ந்த ஆளுமைகளின் மன சஞ்சலங்கள் நோர்மா எனும் கதாபாத்திரத்தின் வழியே இப்படைப்பில் அலசப்படுகிறது. தங்களைச் சுற்றி புடைசூழும் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கும் பொதுமக்களின் அதீத கவனக் குவிமையமாய் தாங்கள் இருக்கும் பெருமிதமும் அவர்களை புகழ் போதையில் ஆழ்த்திடும். பரபரப்பான அவர்களது வாழ்க்கையில் கடவுளைப் போல தங்களை பாவித்துக் கொண்டு கர்வத்துடன் அவர்கள் வலம் வரும் காலத்தில், திடீரென ஒரு நாள் தங்கள் மீதிருந்த மோகம் மக்களுக்கு குறைவதை உணரத்
துவங்குவர். ஆனால் அந்த உண்மையை அவர்களின் மனம் ஏற்பதில்லை. அவர்கள் மனதளவில் தமது ஏகபோகத்தை, புகழின் அரியணையை வேறொருவருக்கு தாரை வார்த்திட ஒரு போதும் தயாராய் இருப்பதில்லை.
புத்தாண்டு தின சிறப்பாக ஒரு கேளிக்கை விருந்தினை தனது மாளிகையில் நோர்மா ஏற்பாடு செய்கிறாள். விருந்தினரை எதிர்பார்த்திருக்கும் கில்லிஸுக்கு அவ்விருந்து தனக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது என சீக்கிரமே விளங்குகிறது.
தன் மீது நோர்மா காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பது அவனுக்கு தெரிய வர அது சரிவராது என தெளிபடுத்துகிறான். அதனை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவேயில்லை. அங்கிருந்து விலகி தனது நண்பனான ஆர்டி கிரீனின் (Jake Webb) இல்லத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள
கிளம்புகிறான். அங்கு தன் கதையைப் புறக்கணித்த பெட்டி ஆர்டியின் காதலியென அறிய வருகிறான் கில்லிஸ். பழையவற்றை மறந்து அவர்கள் நண்பர்களாகின்றனர். அவள் அவனது மற்றொரு திரைக்கதையை படித்துப் பார்த்ததாகவும் அதில் சில மாற்றங்களை இருவரும் சேர்ந்தே மேம்படுத்தலாம் என கூறுகிறாள். அவனும் உடன்படுகிறான்.
|
சிறிது நேரத்திற்கெல்லாம் நோர்மாவின் இல்லத்திலிருந்து அவள் தற்கொலைக்கு முயன்றாள் என மேக்சிடம் இருந்து தகவல் வர பதறி விரைகிறான். தனது சவரக் கத்தியால் அவள் கைகளை அறுத்துக் கொண்டிருக்கிறாள். அவல் தன்னை விட்டுப் போக வேண்டாமென்று இறைஞ்சுகிறாள் நோர்மா. அவள் மீது காதல் இல்லையெனினும் பரிதாபம் கொள்கிறான் கில்லிஸ். அவளோடு இருக்க சம்மதிக்கிறான். அவனது
இருப்பு அவளுக்கு புதுத் தெம்பளிக்கிறது. தனது திரைஉலக மறுபிரவேசத்திற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகிறாள். பாராமௌண்ட் ஸ்டுடியோவிற்கு சென்று தான் பலமுறை இணைந்து பணியாற்றிய இயக்குனர் சிசில் பி. டிமிலியை, அவள் தான் அனுப்பிய திரைக்கதையை குறித்து அவர் பல நாட்களாய் ஏதும் பேசாததால், நேரிலேயே சந்திக்க வருகிறாள். பழைய நட்பினை மதித்து அவர் அவளை வரவேற்கிறார். டிமிலியின் உதவியாளர் பலமுறை அவளோடு தொடர்பு கொண்டதாகவும் ஆனால் தான் அவரோடு பேச விரும்பவில்லை எனவும் அவள் சொல்ல அவரோ அவளை படப்பிடிப்பு அரங்கத்திலேயே அமர செய்கிறார். உண்மையில் அவரது உதவியாளர் ஒரு படப்பிடிப்பிற்காக நோர்மாவின் காரை வாடகைக்குக் கேட்பதற்காகவே அவளைத் தொடர்பு கொண்டதை அறிகிறார். இவ்விடயத்தை கில்லிஸ் வாயிலில் வேறொருவர் சொன்னதாய் மேக்ஸ் சொல்ல அறிகிறான்.
|
அங்கு அரங்கில் நோர்மாவோடு வேலை செய்த ஒரு லைட் பாய் அமர்ந்திருப்பது அவள் தான் என அடையாளம் கண்டு அவளை நோக்கி விளக்கினைத் திருப்ப தளத்தில் இருக்கும் அனைவரும் அவளை அடையாளம் கண்டு மொய்க்கின்றனர். நோர்மா தான் இன்னும் ரசிகர்களால் விரும்பப்படுவதாய் கட்டமைத்த கனவுக் கோட்டை இன்னும் பலமாகிறது. ஆனால் அவர்கள் உண்மையில் இவளை கடந்த காலத்தின் ஒரு திரை ஆளுமை
என ஒரு வெகுசன ஆர்வத்தில் மாத்திரமே பார்க்கின்றனர்.
மகா மோசமான திரைக்கதையை படமெடுக்க யார் தான் முன்வருவார். டிமிலி நோர்மாவிடம் நாசுக்காக சினிமா மாறிவிட்டதெனும் உண்மையை, சொல்கிறார். ஆனால் அவளோ அதனைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. உடனே அவர் அத்திரைக்கதையை இயக்க அதில் தான் நாயகியாக திரையுலகில் மறுபிரவேசம் செய்வதாய் குதூகலிக்கிறாள். அவளைப் புண்படுத்தாமல் பார்க்கலாம் என் சொல்லி அனுப்புகிறாள். தான் மீண்டும் நடிக்கப் போவதாய் மிக உறுதியாய் நம்பும் நோர்மா அதற்காக அழகை மேம்படுத்திட தன் உடலை வருத்தி பல சிக்கிச்சைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறாள்.
இதே வேளையில் இரவுகளில் அவள் அறியாமல் கில்லிஸ் பெட்டியின் துணையோடு திரைக்கதை எழுதுவதில் தீவிராமாகிறான். இதனை நோர்மா விரைவிலேயே அறிய வருகிறாள். சிறிது சிறிதாக பெட்டி தன்னையும் அறியாமல் கில்லிஸின் மீது காதல்வயப்படுகிறாள். அவனுக்கும் அவளைப் பிடிக்கும் தான்.
நோர்மா என்னதான் நடிகையாக இருப்பினும் முதலில் அவள் பெண். ஒரு சராசரிப் பெண்ணுக்கேயான அத்துணை ஆசாபாசங்களும் குணாதிசியங்களும் அவளுக்கும் உண்டு. கில்லிஸ் தன் காதலை ஏற்றுக் கொண்டதாகவே அவள் கருதிக் கொள்கிறாள். அவன் சந்தர்ப்பவசத்தால் அவளோடு இருப்பதை அவள் யோசிக்க மறுக்கிறாள். எங்கே கில்லிஸை பெட்டி தன்னிடமிருந்து பறித்து விடுவாளோ எனும் அச்சம் அவளை
ஆட்கொள்கிறது. ஒரு சாராசரி பெண்ணுக்குரிய பொறாமை அவளை அலைக்களிக்கிறது.
மேக்ஸின் வழியாகவே அவன் நோர்மா மூன்று முறை திருமணம் செய்து கொண்டதில், முதல் கணவனே மேக்ஸ் தான் எனும் ரகசியத்தை தெரிந்து கொள்கிறான். அது தெரிந்ததும் தான் அவளை விட்டு விலகி மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை துவங்கும் முனைப்புடன் அவளின் அறைக்கு செல்கிறான். இந்த தருணத்தில்
பெட்டிக்கே தொலைபேசியில் நோர்மா தொடர்பு கொண்டு கில்லிஸ் நடிகை நோர்மாவின் மாளிகையில் தங்கியிருப்பதாக அவளே சொல்கிறாள்.
அத்தனையையும் கில்லிஸ் அவளுக்குப் பின்னால் இருந்தபடி கேட்டுவிட்டு அவளிடம் இருந்து தொலைபேசியை பிடுங்கி பெட்டியை நேராக நோர்மாவின் மாளிகைக்கே வருமாறு கூறி இணைப்பைத் துண்டிக்கிறான்.
கையும் களவுமாய் பிடிபட்ட நோர்மா திகைக்கிறாள். எங்கே கில்லிஸ் தன்னை விட்டு சென்று விடுவானோ என்ற அச்சத்திலேயே அவள் அப்படி செய்ததாகவும், அதற்காக தன்னை வெறுத்து ஒதுக்கிவிடாமல் இருக்குமாறு மீண்டும் மீண்டும் கண்ணீருடன் மன்றாடுகிறாள். அதற்குள் பெட்டி மாளிகைக்கு வர கில்லிஸ் அவளை சந்திக்க வாயிலுக்குச் செல்கின்றான். அங்கெ அவன் கேள்விகளோடு காத்திருக்கும் பெட்டியை சந்திக்கிறான். அவள் தன்னொடு வந்துவிடும்படி அவளை வேண்டுகிறாள்.
கில்லிஸ் எனும் பாத்திரப் படைப்பு வாழ்க்கையில் போராடி சலித்த ஒரு இளைஞனையே முன்னிறுத்துகிறது. பல வழிகளில் அவன் போராடிவது ஒரு நல்ல வாழ்க்கைக்காகத்தான். அது அவனுக்கு தானாகவே நோர்மாவின் வழியாக கிடைக்கிற போது அதை அவன் மறுக்கும் மனநிலையில் இல்லை. அதுவே பெட்டியிடம் அவன் காதல்
கொண்டிருந்தாலும் வெகு சாதாரணமாக அவளுக்கே, இப்பகட்டு வாழ்க்கையை தன்னால் காதலின் பொருட்டு விட்டுத் தர முடியாது எனவும் அதனால் அவள் ஆர்டியையே மணந்து கொள்வதே சரியானதெனவும் புத்திமதி கூறும் தொனியில் அவனை சொல்ல வைக்கிறது. அவளை அனுப்பி விட்டாலும் அவனது மனம் ஒரு ஊசலாட்டத்திலேயே இருக்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மிகப் பெரிதாக விரும்புவது தனது
சுதந்திரத்தையன்றி வேறல்ல. ஆனால் தனது சுதந்திரத்திற்கு விலையாக தான் கனவிலும் நினையாத பகட்டும் பணமும் அதற்கு விலையாக முன் வைக்கைப்படும் போது அவன் மனம் சஞ்சலப்படுகிறது.
இறுதியில் அவன் நோர்மாவின் பொருட்களையெல்லாம் அங்கேயே விடுத்து தன் பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான். நோர்மாவால் இவன் தன்னை விட்டு போவதை சீரணிக்க முடியவில்லை. பலவாறாக அவனை சமாதானம் செய்கிறாள். அவனோ அவள் வாழும் இந்த வாழ்க்கை அவளாகவே உருவகித்துக் கொண்ட ஒரு கனவுக் குமிழுக்குள் இருப்பதைச் சொல்கிறான். அத்தருணத்தில் நோர்மாவின் மனநிலையும் ஒரு தனிமையின் துயரில் வாடி அன்பிற்கு ஏங்கும் ஒரு சராசரி பெண்ணுக்கும், தன்னை யாவரும் கொண்டாடுவதாய் இன்னும் தனக்குத் தானே கற்பனை செய்து கொள்ளும் ஒரு நடிகையின் கர்வத்திற்கும் இடையே அலை பாய்ந்தபடியே இருக்கிறது.
அவள் அவனிடம் வாதம் செய்ய பாசாங்கின்றி அத்தனை உண்மைகளையும் போட்டு உடைக்கிறான். அவளோ அவன் தன்னை பிரிந்தால் தான் தற்கொலை செய்யப் போவதாக கையில் ஒரு துப்பாக்கியுடன் மிரட்டுகிறாள். அதற்கு பணியாமல் அவன் புறப்படுகிறான். அவளது புனைவுலகில் அவளே மகாராணி. அவள் தான் ஒரு மாமெரும் நட்சத்திரம் எனவும் ஒரு நட்சத்திரத்தை யாருமே விட்டுப் பிரிய மாட்டார்கள் என தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். அவனைப் பின் தொடரும் அவள் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவனை சுட்டுக் கொல்கிறாள். இவை யாவும் கில்லிஸின் மனக் குரலின் வாயிலாக நமக்கு சொல்லப்படுகிறது.
|
இறுதிக் காட்சியில் நோர்மாவை கைது செய்ய வரும் காவலர்கள், செய்தி சேகரிக்க வரும் பத்திரிக்கையாலர்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் என அவளது மாளிகை மிகுந்த பரபரப்பிற்கு உள்ளாகிறது. மேலே நின்றபடி காவலர்களோடு இறங்கி வரும் நோர்மா கீழே வெளிச்சம் மின்ன தன்னை புகைப்படம் எடுக்கும் நிருபர்களையும், தொலைக்காட்சி காமிராக்களில் படம் பிடிப்பவர்களையும், ஏறக்குறைய ஒரு புத்தி பேதலித்த நிலையில் தனது புனைவுலகின் அங்கத்தினர்களாகவே அவள் பாவிக்கிறாள். ஏதோ அவளை மீண்டும் காமிரவின் ஒளி வெள்ளம் நனைப்பதைப் போலவும் தான் மறுபடியும் நடிக்கத் துவங்குவது போலவும்
அவள் நினைத்துக் கொள்கிறாள். தனது மிதமிஞ்சிய கற்பனையால் அதற்குள்ளேயே அவள் தன் சுயத்தைத் தொலைக்கிறாள்.
நிராதரவாய் நிற்பது தனித்து விடப்படும் சாதாரண மனிதர்களுக்கு புதிதல்ல. அது ஒரு வகையில் அவர்கள் எதிர்பார்த்தாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் யதார்த்தத்தில் வாழ்பவர்கள். ஆனால் திரைக் கலைஞர்களின் வாழ்க்கை முறை ஒரு வகையில் விசித்திரமானது. நாள்தோறும் அவர்கள் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் மனநிலையை தங்களின் மனநிலையாய் தற்காலிகமாக மாற்றிக் கொள்ள வேண்டிய
நிர்பந்தம் அவரளுக்கு அன்றாடம் உண்டு. உளவியல் ரீதியாக இது அத்தனை எளிதான காரியமல்ல. மிகுந்த சவாலுக்குரியது. தொடர்ந்து ஏற்கும் புனைவு வெளியின் கதை மாந்தரின் மனநிலையின் சாயல்கள் தங்களின் சுய சாயலை பாதிக்காத வண்ணம் மிகக் கவனமாய் இருப்பது முக்கியம்.
புனைவுக்கும் யதார்த்தத்திற்குமான அலைக்களிப்பே அவர்களின் வாழ்க்கை முறையாகிறது. மிதமிஞ்சிய புகழும் பொருளும் பெரும்பாலானவர்களை மாற்றவே செய்கிறது. காதாசிரியரின் கற்பனையில் உருவான கதாபாத்திரங்களின் அக அடையாளங்களுக்கு தங்களின் நடிப்பாற்றலால் உயிர் கொடுக்கும் நடிகர்
நடிகைகள் பல நேரங்களில் தங்களின் அக அடையாளங்களைத் தொலைக்கிறார்கள். ஆயினும் பொது வெளியில் அவர்களது அந்தரங்கங்கள் விற்பனைப் பொருளாகின்றன. பலராலும் விரும்பப்படும் நுகர்வுச் சரக்காகவும் இது மாறிப் போய்விட்டது.
ஒரு திரைப் பிரதியின் நம்பகத்தன்மையை யதார்தத்தை புனைவின் வழியே தொட்டுப் பார்க்கும் அதன் மெனக்கெடல்களின் மூலமாக கொண்டு வர இயலும். இதனை இப்படைப்பின் இயக்குனர் பில்லி ஒயில்டர் திறம்பட செய்திருந்தார்.
படத்தின் மையமான நோர்மா பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை குளோரியா ஸ்வான்சன் நிஜத்தில் ஒரு பிரபல மௌனப் பட நடிகையே. 1920களில் துவங்கிய அவரது திரைப்பயணம் பேசும் பட யுகம் சந்தையை வியாபித்த 1930 வரை தொடர்ந்தது. அக்கால கட்டத்தில் நிஜ வாழ்வில் அவர் சன்செட் பொலிவார்ட் பகுதியிலெயே ஒரு பெரிய மாளிகையில் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேசும் படங்களுக்கு ஏற்ப தான் மாற முடியா இயலாமையை ஏற்றுக் கொண்டு நியூயார்க் நகருக்கு குடி பெயர்ந்து முதலில் வானொலியிலும் பின்னர்
தொலைகாட்சியிலும் பணிபுரிந்து கொண்டிருந்தார். உண்மையிலேயே இப்படம் அவரது மறுபிரவேசமே. இப்படி உண்மைக்கும் திரைப் புனைவு வெளிக்கும் இருந்த இந்த அபூர்வமான ஒற்றுமை ஒரு தனித்துவத்தை படைப்பிற்குத் தந்தது என்றே சொல்லலாம்.
படத்தின் ஒரு காட்சியில் நோர்மா தன் கடந்த கால திரை நண்பர்களோடு சீட்டு விளையாடுவதாக வரும் காட்சியில் உண்மையான மௌனப் பட கலைஞர்களே கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர். அதில் சாப்ளினுக்கு சமகாலத்தவரான நடிகர் பஸ்டட் கீட்டனும் ஒருவர். மிக முக்கியமான நகைச்சுவை நடிகரான அவர் அதிகம் கண்டு கொள்ளப்படாமலேயே போனது துரதிஷ்டவசமானதே.
மேலும் நோர்மா சந்திக்கும் இயக்குனர் சிசில் பி.டிமிலி(Cecil B. De Mille),உண்மையில் ஒரு பிரபலமான இயக்குனரே. பல வணிக ரீதியிலான படங்களை அவர் இயக்கியுள்ளார். அவர் இயக்குனராக 80 படங்கள் இயக்கியிருப்பினும் அவரது இயக்கத்தில் 1956ல் வெளிவந்த ‘The Ten Commandments’ திரைப்படமெ அவரை உலகெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்களிடம் அவரைக் கொண்டு போய் சேர்த்தது . அவர் ஒரு இயக்குனராக மட்டுமல்லாது ஒரு தயாரிப்பாளராகவும் (88 படங்கள்) வலம் வந்தவர். ஹாலிவிட்டில் ஸ்டுடியோ நடைமுறையை சாத்தியப்படுத்திய ஆளுமைகளுள் இவரின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் இந்த ஸ்டுடியோ முறையே ஹாலிவுட்டின் வணிகரீதியிலான பெரு வீச்சுக்கு அடிகோலியது.
இயக்குனர் பில்லியின் கலா நேர்த்தி இத்திரைப்பிரதியின் பல இடங்களில் தெரியும். டிமிலியை சந்திக்க படப்பிடிப்புத் தளத்தில் காத்திருக்கும் நோர்மாவின் பின்னால் ஒரு மைக் அது போகிற போக்கில் அவளது தொப்பியில் உள்ள இறகை இடறும். அதனை மிகுந்த அலட்சியத்தோடு நோர்மா தட்டி விடுவாள். அந்த
சிறிய காட்சி அக்கதாபாத்திரத்தின் மொத்த மனப் போக்கினையும் அழுத்தமாக பதிவு செய்யும். அந்த இடத்தில் நகரும் மைக் பேசும் படங்களின் ஒட்டு மொத்த குறியீடாகவும், நோர்மாவின் முற்றான புறக்கணிப்பு மௌனப்பட உலகின் கலைஞர்களுக்கு பேசும் படங்களின் இருந்த புதுமைக்கேற்ப தங்களை மீட்டுருவாக்க முடியா இயலாமையின் வெளிபாடாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.
இத்திரைப்படம் திரைக்கதை ஆள்கையிலும், உளவியல் பார்வையிலும் மிக முக்கியமான ஃபிலிம் நோயர் (Film Noir) பிரதியாகவும் கொண்டாடப்படுகிறது. இப்பிரதி கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியாகவும், அழகியல் ரீதியிலும் மிக முக்கியமான படைப்பாக கருதப்பட்டதால் அமெரிக்க தேசிய திரை ஆவணக்
காப்பகத்தில் (National Film Registry) 1989ல் பாதுகாக்க தேர்வு செய்த முதல் பட்டியலில் இப்படம் இடம் பெற்றது. இப்படம் பதினோரு ஆஸ்கர் அகதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, மூன்று அகதமி விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |