இதழ்: 5, நாள்: 15 - சித்திரை -2013 (April)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 3- ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி
--------------------------------
திரைமொழி 4 - ராஜேஷ்
--------------------------------
ஒரு கதை கவிதையாகும் தருணம் 4 - யாளி
--------------------------------
வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – வெங்கட் சாமிநாதன்
--------------------------------
ஐந்தாவது முத்திரை - The Fifth Seal - எஸ். ஆனந்த்
--------------------------------
வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் - வி.களத்தூர்ஷா
--------------------------------
லிட்டில் டெரரிஸ்ட் - குறும்பட திறனாய்வு - கார்த்திக் பாலசுப்ரமணியன்
--------------------------------
பிழை மறைக்கும் கலை அழகியல் - தினேஷ்
--------------------------------
   
   


திரைமொழி - 4

முதல் பாகம் – Visualization – The Process

அத்தியாயம் 2 – Production Design

film directing
shot by shot
visualizing from concept to screen

Steven D. Katz         தமிழில்: ராஜேஷ்

Production Design (தொடர்ச்சி)

சென்ற கட்டுரையில், ப்ரொடக்ஷன் டிஸைன் என்ற பிரிவில் இருக்கும் மூன்று வகைகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். அவை: Concept and final design illustrations, Plans, Elevations and Projections&Continuity sketches and Storyboards. இவைகளில் Concept and final design illustrations என்ற பகுதியை விரிவாகப் பார்க்க ஆரம்பித்திருந்தோம். இதைப் படிப்பவர்களின் வசதிக்காக, அந்தப் பகுதி முதலிலிருந்தே இங்கே கொடுக்கப்படுகிறது.

Concept and final design illustrations

பொதுவாக, ப்ரொடக்ஷன் டிஸைனில் இடம்பெறும் வரைபடங்கள் மிகத்துல்லியமாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. திரைப்பட தயாரிப்பின் துவக்கத்தில் வரையப்படும் ஸ்கெட்ச்கள், பொதுவாகவே மிக எளிய முறையிலேயே இருக்கும். காரணம், ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பொதுவான கருத்தை விளக்கும் வகையிலேயே இவை இருக்கும். திரைப்படம் எடுக்கப்படும்போதுதான் இந்த பொதுவான வடைபடங்கள், மிகவும் நுணுக்கமான படங்களாக வரையப்படும். அதேபோல், இந்த ஸ்கெட்ச்களின் நோக்கம், ஒரு செட்டின் உணர்வு மற்றும் மனப்பாங்கைப் பிரதிபலிப்பதே. கூடவே லொகேஷன், ஒப்பனை, காஸ்ட்யூம்கள் ஆகியவையும் எப்படி இருக்கவேண்டும் என்பதும் இந்த ஸ்கெட்ச்களில் விளக்கப்படுகின்றன. எனவே, அந்த ஸ்கெட்ச்கள் மிகமிகத் துல்லியமாக, கதாபாத்திரங்களை நகலெடுத்ததுபோல் இருப்பது அவசியமில்லை. மேற்சொன்ன விஷயங்கள் தெளிவாக இருந்தாலே போதும். எனவே, வழக்கமான பாணியிலேயே, இயல்பான பெயிண்ட்களைக் கொண்டே (gouache, tempera, எண்ணைகள், வாட்டர்கலர், வண்ண இங்க்கள், அக்ரிலிக்) இவை வரையப்படுகின்றன.

‘Star Wars’ படத்தை எடுத்துக்கொண்டால், ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர் என்ற, மேலே சொன்ன மூன்று பிரிவுகளில் முதல் பிரிவைச் சேர்ந்த ரால்ஃப் மெக்காரி (Ralph McQuarrie), திரைக்கதையின் எட்டு பிரதான ஸீன்களை முதலில் விபரமான ஓவியங்களாக வரைந்தார். இவையே அந்தப் படத்தின் அத்தனை காட்சிகளின் அடிப்படைத் தொனிக்கும் முன்மாதிரிகளாக இருந்தன. இந்த எட்டு ஸீன்களுக்கான மெக்காரியின் ஸ்கெட்ச்களை வைத்தே பிற காட்சிகளுக்கான ஆயிரக்கணக்கான ஸ்கெட்ச்கள் வரையப்பட்டன. அப்படி வரையப்பட்ட அத்தனை ஸ்கெட்ச்களுமே மெக்காரியின் ஓவியங்களில் இருக்கும் தொனியையே பின்பற்றின.

கான்செப்ட் இல்லஸ்ட்ரேஷன் என்ற இந்த வகைக்கு ஒரு உதாரணமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்கெட்ச்சைப் பாருங்கள். இது, ஜோ முஸ்ஸோ (Joe Musso) என்ற ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர், ஹிட்ச்காக்கின் Torn Curtain(1966) திரைப்படத்துக்காக செய்தது. Gouache என்ற வகையைச் சேர்ந்த பெயிண்டிங் இது. தண்ணீரில் கரைக்கப்படும் வண்ணங்களில் ஒளிபுகாவண்ணம் கெட்டியாக வரையப்படும் ஓவியங்கள் இவை. கிழக்கு பெர்லினைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அவரது காதலி ஆகியவர்களிடம் பேசும் காட்சி இது. இந்தப் படத்தில் இருப்பது அந்த கிழக்கு பெர்லின் பாதுகாப்பு அதிகாரியின் அலுவலகம். அலுவலகத்தின் வெளிப்புறம் இடிந்துபோன பழைய பெர்லினின் சிதைவுகளை கவனியுங்கள். இந்தச் சிதைவுகளுக்கு இடையே புதிய அலுவலகம் இருப்பது, அந்தக் கதையின் சரித்திர முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகவே. இந்த சிதைவுகள், ஆல்பர்ட் விட்லாக் (Albert Whitlock) என்பவரால் பின்னர் வரையப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டன (matte painting).
Concept illustration by Joe Musso for ‘Torn Curtain’.

Citizen Kane(1941) படத்துக்காக வரையப்பட்ட இரண்டு ஸ்கெட்ச்களை அடுத்துப் பார்க்கலாம். முதல் ஸ்கெட்ச்சில், திரைப்படத்தில் கேனின் எஸ்டேட்டான Xanaduவில் இருக்கும் பெரிய ஹாலின் உட்புறத்தைக் காணலாம். இரண்டாவது ஸ்கெட்ச்சில், வெறுமை நிரம்பிய நீச்சல்குளமும், அந்த இடத்தின் சிதைந்துபோன கூரைகளையும் காணலாம்.

Production sketches for ‘Citizen Kane’



அடுத்த உதாரணமாக, The Purple Rose of Cairo (1985) திரைப்படத்தின் இரண்டு கான்செப்ட் ஸ்கெட்ச்கள். இவற்றை உருவாக்கியவர், படத்தின் ப்ரொடக்ஷன் டிஸைனர் ஸ்டூவர்ட் வூர்ட்ஸெல் (Stuart Wurtzel). இந்த இரண்டு ஸ்கெட்ச்களுடன், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களில் இடம்பெற்றுள்ள இரண்டு காட்சிகளுமே ந்யூயார்க்கில் எடுக்கப்பட்டவை. இந்தக் காட்சிகளின் விசேடம் என்னவென்றால், இந்தத் திரைப்படம், முப்பதுகளில் எடுக்கப்படும் ஒரு திரைப்படம் பற்றிய படம் (திரைப்படத்துக்குள் திரைப்படம்). ஆகவே, முதலில் வூர்ட்ஸெல் முப்பதுகளின் லொகேஷன் செட்டை உருவாக்கிவிட்டு, அதனைச் சுற்றி எண்பதுகளின் (திரைப்படம் எடுக்கப்பட்ட காலம்) சமகால படப்பிடிப்புத் தளவாடங்களோடு கூடிய செட்டை உருவாக்கவேண்டியிருந்தது. அதனை இந்தப் புகைப்படங்களில் காணலாம்.

The Purple Rose of Cairo: Set Sketches by Production Designer Stuart Wurtzel

இந்தப் பிரிவின் கடைசி உதாரணமாக, ரிச்சர்ட் ஸில்பெர்ட் (Richard Silbert) என்ற சிறந்த ப்ரொடக்ஷன் டிஸைனரின் ஸ்கெட்ச்களைப் பார்ப்போம். இவர் The Graduate(1967), Catch 22(1970), Chinatown(1974), Shampoo(1975), Dick Tracy(1990), Carlito’s Way(1993) போன்ற அட்டகாசமான படங்களில் ப்ரொடக்ஷன் டிஸைனராக இருந்தவர். இவரது Splendor in the Grass(1961) மற்றும் Reds(1981) ஆகிய படங்களின் ஸ்கெட்ச்களைப் பார்த்துவிட்டு Concept and final design illustrationsஎன்றஇந்தப் பிரிவை முடிப்போம்.

The Purple Rose of Cairo: Set Sketches by Production Designer Stuart Wurtzel






Set Sketches by Production Designer Richard Sylbert
Reds

Splendor in the Grass

Architectural Drawings

செட்கள், காஸ்ட்யூம்கள் (உடைகள்), ப்ராப்பர்ட்டிகள் (கத்தி, கபடா இத்யாதி) போன்றவைகளுக்கான ஸ்கெட்ச்கள் இறுதிசெய்யப்பட்டபின்னர், அவைகளுக்கான தொழில்நுட்ப வரைபடங்கள் தயாராகத் துவங்குகின்றன. அதாவது, இந்த ஸ்கெட்ச்களை உண்மையில் தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை என்ற விபரங்கள் மற்றும் நிஜத்தில் இவைகள் எப்படி இருக்கும் என்பனவற்றை விளக்கும்வகையிலான வரைபடங்கள் இவை. துல்லியமான அளவைகளுடன் வரையப்படுபவை. கலை இயக்குநர் மற்றும் ப்ரொடக்ஷன் டிஸைனர் ஆகியவர்களுக்குக் கீழே வேலை செய்யும் நபர்களால் தயாரிக்கப்படும் இந்த வரைபடங்கள், பொதுவாக திரைப்பட உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவைகளை உபயோகித்தே வரையப்படுகின்றன.


ப்ரொடக்ஷன் டிஸைனில் மொத்தம் நான்கு வகையான architectural வரைபடங்கள் உபயோகிக்கப்படுகின்றன. Plan, Elevation, Section & Projection என்பவையே அந்த நான்கு. இவற்றில் முதல் மூன்று வகைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு செட்டை உருவாக்குவதன் விபரங்கள் இந்த மூன்றில் இருக்கும்.

Plans, Sections and Elevations

ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கட்டிடத்தைவிடவும் பிரம்மாண்டமான ஒரு கத்தியை வைத்து அந்தக் கட்டிடத்தை இரண்டாக வெட்டி, மேல் பகுதியை அகற்றிவிடுகிறோம் என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது என்ன இருக்கிறது? கட்டிடத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம். இதுதான் PLAN. ஒரு கட்டிடத்தின் ப்ளான் என்பது தரைத்தளத்தின் ப்ளானாகவோ (floor plan), கூரையின் ப்ளானாகவோ (roof plan), மேல்தளத்தின் ப்ளானாகவோ (ceiling plan) அல்லது அந்தக் கட்டிடம் இருக்கும் நிலத்தின் ப்ளானாகவோ (floor plan) இருக்கலாம். பொதுவாக திரைப்படத்தில் செட்கள் நிர்மாணிக்கும்போது தரைத்தளத்தின் ப்ளான் தான் அதிகம் உபயோகப்படுகிறது (ஒரு முழுக்கட்டிடத்தையும் செட்டாக நிர்மாணிப்பது அரிது என்பதால்). இந்த வரைபடங்கள் துல்லியமான அளவுகளுடன் வரையப்படுகின்றன.

ஒரு கட்டிடத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தைத் தருவதே SECTION. பல சமயங்களில் PLAN என்பது SECTION என்றும் எடுத்துக்கொள்ளப்படுவதுண்டு.

ELEVATION என்பது ஒரு கட்டிடத்தின் முன்பக்கத் தோற்றம் மற்றும் பக்கவாட்டுத் தோற்றம்.
இதோ இந்தப் படத்தில் Plan, Section மற்றும் Elevation ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.


இந்த வரைபடங்கள் (Plan, Section & Elevation), Orthographic projection என்ற முறையில் வரையப்படுகின்றன.

Projections

சென்ற பிரிவில் இடம்பெற்ற Plan மற்றும் Elevation ஆகியவைகளை உபயோகித்து, ஒரு செட் திரைப்படத்தில் குறிப்பிட்ட காட்சியில் எவ்வாறு கேமராவிலும் பலவிதமான லென்ஸ்களிலும் காட்டப்படுகிறது என்று படப்பிடிப்புக்கு முன்னரே முடிவுசெய்யலாம். இந்த முறைக்குப் பெயர்தான் Camera angle projection.

ஒரு உதாரணமாக, விமானங்களை நிறுத்தும் கிட்டங்கி ஒன்றில் ஒரு விமானம் தீப்பிடித்து வெடிப்பதுபோன்ற காட்சி ஒன்றை எடுக்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பெரிய சுவர் எழுப்பப்படுகிறது (சுவர் ஒரு செட். ஆகவே அது ஒரிஜினல் சுவர் அல்ல). இந்தச் சுவரின்மீது மோதி, விமானம் தீப்பிடிக்கிறது. படப்பிடிப்புத் தளத்தின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் வரை இந்தச் சுவர் இருக்கிறது (அதாவது, படப்பிடிப்புத் தளத்தை இரண்டாகப் பிரிக்கிறது). இந்தச் சுவர் ஒரு பெரிய இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டதால் இப்போது இயக்குநருக்கு ஒரு பெரிய பிரச்னை என்னவெனில், அந்த விமானத்தை ஒரே ஷாட்டில் முழுக்கக் காண்பிப்பது கடினம். காரணம் ஏற்கெனவே அந்தச் சுவர், தளத்தின் பெரிய இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது. Wide angle லென்ஸ் உபயோகித்தால் காட்சியின் துல்லியம் பாதிக்கப்படலாம்.

இப்போது என்ன செய்வது?

இத்தகைய சூழலில்தான் camera angle projections உதவுகின்றன. படப்பிடிப்புக்குப் போவதற்கு முன்னரே இவைகளை உபயோகித்து வரைபடங்களைத் தயாரித்திருந்தால், கேமராவின் இடப்பற்றாக்குறை எப்போதோ இயக்குநருக்குத் தெரிந்திருக்கும். அந்தத் தளத்தில் எந்தச் சமயத்திலும் கேமராவில் பாதி சுவருக்குமேல் தெரியப்போவதில்லை. ஆகவே முழுதாக ஒரு சுவரை எழுப்புவதற்குப் பதில் பாதி சுவரே போதும் என்றும் அவர் புரிந்துகொண்டிருப்பார்.
இப்படி ஒரு செட்டைப்பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு இந்த camera angle projection உதவுகிறது. கூடவே, ஸ்பெஷல் எஃபக்ட்கள் என்று சொல்லக்கூடிய காட்சிகளுக்கும் இது உதவுகிறது. குறிப்பாக matte ஷாட்கள் (மிகப்பிரம்மாண்டமான பின்னணிகளை ஒரு காட்சியுடன் இணைக்கும் வகையான ட்ரிக் ஷாட்கள்), மினியேச்சர்கள் இடம்பெறும் ஷாட்கள் மற்றும் Forced perspective ஷாட்கள் (பிஸ்ஸா டவரின் உச்சியைப் பிடிப்பது, தாஜ்மஹாலின் உச்சியைப் பிடித்துக்கொண்டு நிற்பது, நிலவை அல்லது சூரியனை விழுங்க முயல்வது போன்ற புகைப்படங்கள் நினைவிருக்கிறதா? ஏதேனும் ஒரு பொருளை அது இருக்குமிடத்தை விட்டு நமக்கு அருகிலோ அல்லது இன்னும் தூரத்திலோ பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ தோன்றவைக்கும்படியான டெக்னிக் இது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தில் காண்டால்ஃபை உயரமாகவும் ஃப்ரோடோவை சிறியவனாகவும் காட்ட இந்த எளிய முறையே உபயோகிக்கப்பட்டது) ஆகியவற்றிலும் முன்கூட்டியே திட்டமிட இந்த camera angle projection உதவும்.

நாற்பதுகளில் கிட்டத்தட்ட அத்தனை செட்களும் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர் வரைபடங்களாக உருவாக்க இந்த முறை உபயோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது மிக அரிதாகவே இது உபயோகிக்கப்படுகிறது. உண்மையில் இது, நேரத்தை மிச்சப்படுத்த உதவும் ஒரு அற்புதமான விஷயம்.

இப்போது Projection ஸ்கெட்ச்களுக்கு இரண்டு உதாரணங்கள். கீழே தரப்பட்டிருக்கும் இரண்டு படங்களையும் ஒருமுறை நன்றாகப் பார்த்துவிடுங்கள். அதன்பின் அவற்றைப் பற்றி விவாதிப்போம்.

Set Projection sketch by Camille Abbott for ‘Flashdance’(1983)


Projection Sketch by Mentor Huebner for ‘Harlem Nights’(1989)

இந்த இரண்டு படங்களில், முதல் படத்தை எடுத்துக்கொள்வோம். திரைமொழி தெரிந்தவர்களுக்கு, இந்தப் படத்தைப் பார்த்தாலே அது 1:85:1 என்ற அளவையில் அமைந்த ஷாட்டைவிடப் பெரிய அளவில் வரையப்பட்டிருப்பது தெரியும். இதைப்பற்றி சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், லென்ஸின் அளவை இது. சுருக்கமாக இதனை Aspect ratio என்று அழைப்பார்கள். திரைப்படத்தில் இந்த ஸீன் ஒரு pan ஷாட்டாக எடுக்கப்படவேண்டியிருந்தது. Pan ஷாட் என்பது ஒளிப்பதிவில் முக்கியமான ஷாட். வலமிருந்து இடம் அல்லது இடமிருந்து வலம் என்று கேமராவை நகர்த்திப் படம் பிடிப்பது. மேலே இருக்கும் Flashdance படத்தின் காட்சியில் இருக்கும் அந்த அறையின் இடமிருந்து வலமாக கேமரா மெதுவாக நகர்ந்து படம் பிடிக்கும். ஆகவே, அந்தக் காட்சியைப் படம்பிடிக்குமுன்னர் இப்படி ஒரு projection ஸ்கெட்ச் வரைந்ததால், அந்தக் காட்சியில் செட் எப்படி இருக்கும் என்று இயக்குநரால் புரிந்துகொள்ள முடிந்தது.

இரண்டாவது படம் – Harlem Nights திரைப்படம். இந்தப் படத்தை உற்றுக் கவனித்தால், இது செட்டை மட்டும் விபரமாக அளிக்காமல், குறிப்பிட்ட காட்சியில் லைட்டிங், காஸ்ட்யூம்கள் மற்றும் கதாபாத்திரம் ஆகியவற்றைப் பற்றியும் விபரமாக சொல்லும் ஸ்கெட்ச் என்பது தெரியும். இந்த ஸ்கெட்சைப் பார்த்தாலே இயக்குநருக்கு அந்தக் காட்சியைப் பற்றிய துல்லியமான எண்ணம் அவரது மனதில் ஓடும். இந்த குறிப்பிட்ட கோணத்தில் கேமராவை வைத்தால் எந்தெந்த பின்னணிகளைப் படம் பிடிக்கலாம், அவற்றில் லைட்டிங் எப்படி இருக்கவேண்டும், கதாபாத்திரம் அமர்ந்திருக்கும் விதம் போன்ற பல விஷயங்கள் அவருக்கு இந்த ஸ்கெட்சைப் பார்த்ததும் புரிந்திருக்கும். இதுதான் Projection என்ற விஷயத்தின் நன்மை.

இந்த ஸ்கெட்சை வரைந்த மெண்டார் ஹ்யூப்னர் (Mentor Huebner), தலைசிறந்த ப்ரொடக்ஷன் ஓவியர் என்ற பெயரை வாங்கியிருப்பவர். எந்த இயக்குநருக்கும் அவரைப்போன்ற ஒரு ஓவியரின் உதவி இன்றியமையாதது என்பது இந்தப் படத்தைப் பார்த்தாலேயே தெரியும். இத்தகைய முழுமையான projection ஸ்கெட்ச் என்பது, கலை இலாகாவுக்கும் ஒரு இயக்குநருக்கும் கிடைக்கக்கூடிய பொக்கிஷம் என்பதில் சந்தேகமில்லை.

Models

ஸ்கெட்ச்கள் தேவைதான். ஆனால் சில சமயங்களில் கேமரா பதிவுசெய்யும் முப்பரிமாண இடத்தை கச்சிதமாக விஷுவலைஸ் செய்ய, வேறு சில உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அவையே மாடல்கள். திரையில் காட்டப்போகும் செட்டை சிறிய அளவில் செய்துவைத்துக்கொள்வது. திரையில் எந்த அளவில் வரப்போகிறதோ அதே அளவைகளோடு (ஆனால் மிகச்சிறியதாக) உருவாக்கப்படும் இந்த மாடல்களால் பல நன்மைகள் உண்டு. ஒரு பிரம்மாண்டமான செட்டில் அதிக எண்ணிக்கையில் நடிகர்கள் நடிக்கையில் அவர்களை எப்படி அங்குமிங்கும் இடமாற்றி நடிக்கவைப்பது? ஒரு மாடலை உருவாக்குவதன்மூலம் இப்படிப்பட்ட இடப்பெயர்ச்சிகளை திட்டமிடமுடியும். கூடவே கேமரா ஆங்கிள்களை படப்பிடிப்புக்கு முன்னரே முடிவுசெய்துகொண்டுவிடவும் முடியும் (இதில் பீட்டர் ஜாக்ஸன் கில்லாடி. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் பலமுறை மினியேச்சர் செட்களை உருவாக்கி, அதில் ஒரு சிறிய கேமரா மூலம் தான் விரும்பிய ஆங்கிள்களில் படம் பிடித்து, அதனை அவரது ஸிஜி குழுவினரிடம் கொடுத்து, அதன்மூலம் தத்ரூபமாக க்ராஃபிக்ஸ்களை உருவாக்கிய ஜித்தர் அவர்).

Continuity sketches and Storyboards

’கண்டின்யூட்டி ஸ்கெட்சஸ்’ என்பதுதான் ஸ்டோரிபோர்டுகளுக்கு ஆரம்பகாலத்தில் இருந்த பெயர். ஸ்டோரிபோர்ட் என்றால் தெரியுமல்லவா? திரைக்கதையை சின்னச்சின்ன ஸ்கெட்ச்களாக வரைந்துவைத்துக்கொள்வது. உத்தேசமாக ஒவ்வொரு ஸ்கெட்ச்சும் ஒவ்வொரு கேமரா ஆங்கிளைக் காண்பிக்கும். இதன் அனுகூலம் என்னவெனில், எப்படி ஒரு திரைப்படம் என்பது திரைக்கதையில் முழுக்க எழுதப்பட்டுவிடுகிறதோ அப்படி அதே திரைப்படம், ஸ்டோரிபோர்டுகளில் கிட்டத்தட்ட எடுத்தே முடிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் ப்ரொடக்ஷன் டிஸைனருக்கும் குறிப்பிட்ட ஸீனைப் பற்றியோ அல்லது ஷாட்டைப் பற்றியோ ஏற்கெனவே ஒரு புரிதல் வந்துவிடுகிறது. இதனால் அந்த ஸீனையோ ஷாட்டையோ அருமையாக எடுக்க முடியும்.

இந்த ஸ்டோரிபோர்டுகளை வைத்துதான் பீட்டர் ஜாக்ஸன் அவரது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களை திட்டமிட்டு எடுக்க முடிந்தது. படப்பிடிப்பு துவங்குமுன்னரே துல்லியமாக அத்தனை காட்சிகளுக்கும் ஸ்டோரிபோர்ட் வரைந்து வைத்துக்கொண்டார் அவர். இதனால்தான் மினியேச்சர்களை வைத்து அவரால் சிறிய காமெரா மூலம் ஷாட்கள் வைக்க முடிந்தது. அதுதான் அற்புதமான ஸிஜிக்கும் காரணமாக இருந்தது.

இந்த ஸ்டோரிபோர்டுகள் ஹாலிவுட்டில் அறிமுகமானது, வால்ட் டிஸ்னியின் மூலமாகத்தான். ஆரம்பகால முப்பதுகளில், வெப் ஸ்மித் (Webb Smith) என்ற வால்ட் டிஸ்னி அனிமேட்டர்தான் இந்த ஸ்டோரிபோர்டுகளை முதன்முதலில் வரைந்தவர் (வால்ட் டிஸ்னியின் மேற்பார்வையில்). அப்போது இவை கண்டின்யூட்டி ஸ்கெட்சஸ் என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டன. டிஸ்னியின் கார்ட்டூனான ‘Oswald the Lucky Rabbit’ (1927) என்பதில் ஸ்டோரிபோர்டுகள் உபயோகிக்கப்பட்டது வரலாறு. இதற்கு அடுத்த ஆண்டில் ‘Steamboat Willie’ என்ற கார்ட்டூனில், ஸ்டோரிபோர்டுகளில் கேமரா கோணங்களும் எழுதப்பட்டிருந்தன. இப்படி கண்டின்யூட்டிக்காக தனித்தனியாக வரைந்துவைக்கப்பட்டிருந்த இந்த ஸ்கெட்ச்களை வெப் ஸ்மித் ஒரே சுவற்றில் வரிசையாக மாட்டிவைத்ததால், ஸ்டோரிபோர்ட்கள் என்று அவை அழைக்கப்பட்டன.

வால்ட் டிஸ்னியின் பிரம்மாண்ட வெற்றியைப் பார்த்த பிற ஸ்டுடியோக்களின் பார்வையில் ஸ்டோரிபோர்டுகள் சிக்க, அவையும் அவற்றை உபயோகிக்க ஆரம்பித்தன. விளைவு? ஸ்டோரிபோர்டுகளின் நன்மையை மிக விரைவில் அத்தனை ஸ்டுடியோக்களும் புரிந்துகொண்டன. முப்பதுகளின் பாதியிலேயே, வார்னர் ப்ரதர்ஸில் கிட்டத்தட்ட எட்டு முழுநேர ஸ்டோரிபோர்ட் ஆர்ட்டிஸ்ட்கள் வேலைசெய்துவந்தனர். இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளில் நாம் பார்த்ததுபோல, ஆர்ட் டைரக்டரும் அவரது குழுவும் செட்கள், காஸ்ட்யூம்கள், ஸ்டோரிபோர்டுகள் ஆகியவற்றில் வேலைசெய்து முடிக்கும் தருவாயில்தான் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் உள்ளே வருவார்கள். இதனால் ஒரு திரைப்படம் என்பது காகிதத்தில் ஏற்கெனவே முழுமையாக எடுத்து முடிக்கப்பட்டுவிட்ட சூழலில், இயக்குநருக்கு அதன்பின் ஸ்டோரிபோர்டுகளையும் பலவிதமான ஸ்கெட்ச்களை வைத்தும் திரைப்படத்தைப் படமாக்குவது எளிதாக இருந்தது. இதனால் இயக்குநர்களும் பிரபல நடிகர்களும் வருடத்துக்கு மூன்று படங்கள் வரை எளிதாக நடிக்க முடிந்தது (ஹாலிவுட்டில் வருடத்துக்கு மூன்று படங்கள் என்பது சாதனை).

ஸ்டோரிபோர்டுகள் மற்றும் ஸ்கெட்ச்களால், திரைப்படம் என்பது ஒரு இயக்குநரால் படப்பிடிப்புத் தளத்தில் செதுக்கப்படுகிறது என்ற கருத்து ஹாலிவுட்டிலிருந்து எப்போதோ அடிவாங்கி ஓடிவிட்டது. திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி. ப்ரொடக்ஷன் டிஸைனர், ஓவியர்கள் போன்ற பலரும் திரைப்படத்தை எப்போதோ உருவாக்கி, பேப்பரில் பதிந்துவைத்துவிடுகின்றனர் என்பதே உண்மை.

இத்துடன் இந்த அத்தியாயம் முடிகிறது. இதோ Her Alibi(1989) திரைப்படத்திலிருந்து ஒரு ஸ்டோரிபோர்ட் உதாரணம். இந்த ஸ்கெட்ச்களில் எவ்வாறு காட்சிகளின் பின்னணி, கேமரா கோணங்கள், லைட்டிங் போன்றவை விளக்கப்படுகின்றன என்று கவனியுங்கள்.

இவற்றை வரைந்தவர், நாம் மேலே பார்த்த அதே ஹ்யூப்னர்தான்.

தொடரலாம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </