இதழ்: 5, நாள்: 15 - சித்திரை -2013 (April)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 3- ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி
--------------------------------
திரைமொழி 4 - ராஜேஷ்
--------------------------------
ஒரு கதை கவிதையாகும் தருணம் 4 - யாளி
--------------------------------
வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – வெங்கட் சாமிநாதன்
--------------------------------
ஐந்தாவது முத்திரை - The Fifth Seal - எஸ். ஆனந்த்
--------------------------------
வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் - வி.களத்தூர்ஷா
--------------------------------
லிட்டில் டெரரிஸ்ட் - குறும்பட திறனாய்வு - கார்த்திக் பாலசுப்ரமணியன்
--------------------------------
பிழை மறைக்கும் கலை அழகியல் - தினேஷ்
--------------------------------
   
   


லிட்டில் டெரரிஸ்ட் - குறும்பட திறனாய்வு

- கார்த்திக் பாலசுப்ரமணியன்

'பாக்கோஃபோபியா' என்ற பததத்தை இதற்கு முன் கேள்வி பட்டிருக்கிறீர்களா? இது ஏதேனும் காரணம் கருதியோ காரணமின்றியோ பாகிஸ்தான் மீதும், அம்மக்கள் மீதும் காட்டப்படும் வெறுப்புணர்வைக் குறிக்கிறது. 1930-களில் முகம்மது இக்பால், முகம்மது அலி ஜின்னா போன்றோர்களால் பாகிஸ்தான் (புனித மண்) என்ற தனிநாடு கோரிக்கை எழுந்தபோதில் இருந்து, ஜூனாகத், காஷ்மீர், வங்கம், கார்கில், மும்பை என்று ஏதோ ஒன்றிற்காக எப்போதும் இந்தியாவும், பாகிஸ்தானும் பகை பாராட்டியே வந்துள்ளன. நட்பு நாடி நாம் பஸ் விட்டால், பகை ஃப்ளைட்டில் வருகிறது. என்ன செய்ய? இருக்கட்டும்.

அவனது பெயர் முனிர். வயது 13. நாடு பாகிஸ்தான். அம்மா சொன்னபடி, தனது மாமாவிடம் 500 ரூபாய் கடன் வாங்கிவரச் சென்றான். பாவம், வழி தவறி இந்தியாவின் ராஜஸ்தான் எல்லையில் வந்து மாட்டிக் கொண்டான். இது நடந்தது 2003 ஆம் ஆண்டு. அப்போது திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தார். பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தும் பொருட்டு லாகூருக்கு பஸ் விட்டுக் கொண்டிருந்த நேரம். அதே நல்லெண்ணத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர் வழிதவறி வந்த அந்தப் பையனை அவனின் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம்தான் "லிட்டில் டெரரிஸ்ட்".

கோலிவுட்டிலிருந்து, பாலிவுட் வரை நம் இந்திய திரைத்துறையினருக்கு எப்போதும் அந்த "தங்கப் பெண்" (ஆஸ்கார்) மீது அப்படியொரு காதல். பக்கம் சென்று பார்த்து மட்டும் திரும்பியவர்கள், ஒன்றிற்கு இரண்டாய் அள்ளி வந்தவர்கள் என எல்லாதரப்பினரும் உண்டு இவ்விடம். இதில் முதல் ரகத்தைச் சேர்ந்தவர்தான் அஸ்வின். ஆம், இவரது இரண்டாவது குறும்படமான இந்த " லிட்டில் டெரரிஸ்ட் " ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. குறும்படங்களின் மீது பற்று கொண்டவர்களுக்கு "ரோட் டு லடாக்" போன்ற இவரது மற்ற குறும்படங்களையும் பரிந்துரைக்கிறேன். அவசியம் பாருங்கள்.

ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை, நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடல் என எல்லாவற்றையும் மீறி இந்திய குறும்படங்களின் வரலாற்றில் மிக முக்கியமான படம் இந்த லிட்டில் டெரரிஸ்ட். இதுதான் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட முதல் குறும்படம். இன்றைக்கு பல குறும்படங்கள் ஆங்காங்கே திரையிடப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் முன்னோடி இந்த லிட்டில் டெரரிஸ்ட். நல்ல படைப்புகளை எந்த வடிவில் கொடுத்தாலும் மக்கள் எப்போதும் அதை அங்கீகரிக்கத் தவறுவதே இல்லை என்பதை நிரூபித்த முதல் குறும்படம்.

கொள்கையளவில் எவ்வளவுதான் மாறுபட்டிருந்தாலும், இந்தியாவும், பாகிஸ்தானும் இணையும் ஒரு புள்ளி உண்டென்றால் அது கிரிக்கெட் மட்டுமே. இவ்விரு நாடுகளுக்கும் ஹாக்கி என்பது பெயரளவில் மட்டுமே தேசிய விளையாட்டு. உண்மையில் அவ்விடத்தில் இடம் பெற வேண்டியது கிரிக்கெட் தான். இப்படத்தில் பாகிஸ்தான் சிறுவர்கள் சிலர் இந்திய பாகிஸ்தான் எல்லையில் கிரிக்கெட் ஆடுகிறார்கள். பந்து தவறி இந்திய எல்லைக்குள் விழுந்து விடுகிறது. அதை எடுக்க எல்லை தாண்டும் அந்தச் சிறுவனை தீவிரவாதி என்று நினைத்து சுடத் தொடங்குகிறார்கள் இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள். அவனைத் துரத்தித் தேடுகிறார்கள்.

தப்பித்து ஓடும் சிறுவனை அவ்வழியே செல்லும் பள்ளிக்கூட பிராமண வாத்தியார் ஒருவர் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுகிறார். சிறுவனோ அவர் பின்னாலேயே சென்று அவரிடம் தஞ்சம் கோருகிறான். தயக்கத்திற்குப் பின்பு அவனை வீட்டுக்குள் அழைத்துக் கொள்கிறார் வாத்தியார். அதற்குள் எல்லை பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தின் வீடுகளில் சோதனையிட வருகிறார்கள். அவர்களிடமிருந்து அச்சிறுவனை எப்படி பத்திரமாக பாதுகாத்து அவன் வீட்டில் ஒப்படைக்கிறார் என்பதே மீதிக் கதை.

இப்படி உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குறும்படமோ/திரைப்படமோ எடுக்கும் பொழுது முன் நிற்கும் மிகப்பெரிய சவால் எடுத்துக்கொண்ட கருவை/சம்பவத்தைப் பின்னி அதே நேரத்தில் கருவும் சிதையாமல் திரைக்கதை அமைப்பதுதான். அந்தச் சவாலை அநாயசமாக எதிர் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் இதன் இயக்குனர் அஸ்வின். நீங்களும், நானும் செய்தித்தாள் வாசிப்போடு கடந்துபோய்விடக் கூடிய ஒரு சம்பவம், அஸ்வினிடம் குறும்படமாக வெளி வந்திருக்கிறது. விதை ஒன்றே என்றாலும் அது விழுகிற இடத்தைப் பொருத்துத்தான் அது வளர்ந்து மரமாவதும், மக்கி மண்ணாவதும்.

எளிய மனிதர்களை அவர்களின் நிறை குறைகளோடு பதிவு செய்யுமிடத்தில் இந்தக் குறும்படம் பெரும் வெற்றி பெறுகிறது. அந்தப் பையனைக் காப்பாற்றும் வரை இருக்கும் அந்த கிராமத்து வாத்தியாரின் மனிதாபிமானம் அவன் கையால் தொடப்பட்ட உணவைத் தவிர்க்கும் இடத்தில் குறைந்து, அவன் தொட்ட சட்டியை உடைக்கும் இடத்தில் அது சுத்தமாக இற்றுப் போகிறது. ஆனாலும் அவரை உங்களால் வெறுக்க முடியாது. அதுதான் அந்தப் பாத்திரப்படைப்பின் வெற்றி. அது அவர்களது இயல்பு. அதுதான் அவர்கள் வளர்ந்த விதம். அதிலிருந்து அன்றொரு நாள் அவர் மாறியிருந்தால்தான் செயற்கையாக ஒட்டாமல் இருந்திருக்கும்.

அதே போல அந்தப் பையனின் பெயரைக் கேட்கும் முன் வீட்டினுள் செல்ல அனுமதிக்கும் வாத்தியாரின் பெண், அவன் பெயரைத் தெரிந்து கொண்டதும் காட்டும் தயக்கம் எளிய மக்களிடத்திலும் ஊறிப் போயிருக்கும் மத, இன பாகுபாட்டை தோலுரித்துக் காட்டுகிறது. எடுத்துக் கொண்ட 15 நிமிடங்களில் இத்தனை எளிமையாக மனிதர்களைக் காட்சிப் படுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல.

ஜமாலாக வரும் அந்தச் சிறுவன், கிராம உபாத்தியார், அவரது பெண், விறைப்பும் முறைப்புமாக வரும் எல்லை பாதுகாப்பு வீரர்கள் என்று கதாப்பாத்திர தேர்வுகள் ஒவ்வொன்றும் கச்சிதம். தான் தொட்ட மண் சட்டி, தான் தொட்ட அந்த ஒரே காரணத்திற்காக உடைக்கப்படுவதைக் காணும் அந்த இடத்தில் அந்த சிறுவன் காட்டும் முகபாவம் நம்முள் கடத்தும் உணர்ச்சிகள் ஏராளம். இந்தக் குறும்படத்தில் ஜமாலாக வரும் இந்தச் சிறுவனின் நிஜப்பெயர் சலீம். இவனது உண்மைக் கதையை எடுத்திருந்தால் இதை விட சிறந்த குறும்படமாக இருந்திருக்கக் கூடும். ஆம் இவன் தனது 7 வது வயதில் ஒரு பொருட்காட்சியில் தொலைந்து, வீட்டைப் பிரிந்து, புதுதில்லியில் உணவு உறக்கம் இன்றி பல இரவுகள் சுற்றி அலைந்திருக்கிறான். பின்னர் மீரா நாயரின் " சலாம் பாலக் டிரஸ்ட்"- இன் மூலமாக தத்தெடுக்கப் பட்டிருக்கிறான். அதன் பின்பு மூன்று வருட முயற்சிக்குப் பின் பெற்றோர்களிடம் சேர்ப்பிக்கப் பட்டிருக்கிறான். அதிர்ஷ்டசாலி !

"ஒளிக்கும் உணர்வுகளுக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது" என்று ஒளிபதிவாளர் செழியன் ஒருமுறை ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அவ்வகையில் இப்படத்தின் ஒளிபதிவு குறிப்பிடத் தகுந்த ஒன்று. குறும்படத்தின் முன்பாதியில் பகை, பதற்றம், பாகுபாடு என பாலைவனமாய் தகிக்கும் கேமரா, பின்பு சிறுவனை உரியவர்களிடத்தில் சேர்த்துவிட்டு அன்பில் கரையும் இடத்தில் தணிந்து குளிர்கிறது.

சிறுவன் கிரிக்கெட் ஆடிய அந்த மரம் பற்றி சிறுவனிடத்தில் பேசும்போது அந்த வாத்தியார் தனது பால்யகாலத்திற்கே ஒருமுறை சென்று வருவார். அந்த மரம் முள்கம்பி வேலியால் பிரிக்கப்பட்ட இரு நாடுகளை (உண்மையில் அது இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஒரே கிராமம்) ஒன்றிணைக்கும் ஒரு புள்ளியாக நிற்கிறது. பகை எப்போதும் நாடுகளுக்கிடையேதான். மக்களுக்கிடையே கிடையாது. ஆபத்திலிருந்து காப்பாற்ற வாய் பொத்திய சிறுவனின் தீட்டை கையால் துடைத்துக் கொண்டாலும், சிறுவனை அவனது பெற்றவளிடத்தே சேர்ப்பிக்க வந்த இடத்தில் அவன் அணைத்து விடை கொடுக்கும் அந்தப் பொழுதில் அத்தனை வேறுபாடுகளையும் மறந்து அவனை அவள்(வாத்தியார் வீட்டுப் பெண்) அணைத்துக் கொள்ளும் இடம் ஒரு அழகான ஹைக்கூ. எந்த மொழி, இன, மத பேதத்தாலும் மறுக்கவியலாத ஒன்று உலகில் உண்டென்றால் அது அன்பு, அன்பு, அன்பு மட்டுமே.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </