இதழ்: 5, நாள்: 15 - சித்திரை -2013 (April)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 3- ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி
--------------------------------
திரைமொழி 4 - ராஜேஷ்
--------------------------------
ஒரு கதை கவிதையாகும் தருணம் 4 - யாளி
--------------------------------
வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – வெங்கட் சாமிநாதன்
--------------------------------
ஐந்தாவது முத்திரை - The Fifth Seal - எஸ். ஆனந்த்
--------------------------------
வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் - வி.களத்தூர்ஷா
--------------------------------
லிட்டில் டெரரிஸ்ட் - குறும்பட திறனாய்வு - கார்த்திக் பாலசுப்ரமணியன்
--------------------------------
பிழை மறைக்கும் கலை அழகியல் - தினேஷ்
--------------------------------
   

   


ஐந்தாவது முத்திரை - The Fifth Seal

- எஸ். ஆனந்த்

இரண்டாவது உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விமானத் தாக்குதல்கள், ஊரடங்கு உத்தரவு என அந்த நகரம் இருட்டடிப்பில் மூழ்கியிருக்கிறது. மதுபானக்கூடத்தின் ஒற்றை விளக்கொளியில் அதன் உரிமையாளரும் மூன்று நண்பர்களும் அமர்ந்திருக்கின்றனர்.. மதுவுடன் உரையாடல் உற்சாகமாகத் தொடர்கிறது. நண்பர் கிராலி அந்தப் பற்றாக்குறை காலத்தில் தான் வைத்திருந்த ஒரு நல்ல ஓவியத்திற்குப் பதிலாகப் பெற்ற இறைச்சியைக் காட்டுகிறார். அதைச் சமைப்பது பற்றி ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த வழிமுறைகளைச் சொல்லிகொண்டிருக்கின்றனர். ஊனமுற்ற இளைஞன் ஒருவன் மது அருந்த வருகிறான். அவனைத் தங்களுடன் அமரச் செய்கின்றனர்.

இன்னும் ஐந்து நிமிடங்களில் இறக்கப்போகிறீர்கள்; உடனே மீண்டும் பிறக்கப் போகிறீர்கள். சொல்லப்போகும் இருவரில் ஒருவராகப் பிறக்க முடிவு செய்யும் சலுகை உங்களுக்கு அளிக்கப்படுகிறது. இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? இந்தக் கேள்வியுடன் நண்பர் ஆரிகுலர் பேசத் துவங்குகிறார். அந்த இருவரில் ஒருவன் அரசன். சித்திரவதை, மரண தண்டனை எனத் தனது குடிமக்களை வதைக்கும் கொடுங்கோலன். அரச சட்டங்கள் அவனுக்கேற்றவாறு இயற்றப்பட்டுள்ளன, சட்டப்படி தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. குற்ற உணர்வு சற்றுமின்றி கேளிக்கை, கொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். செய்வது குற்றங்கள் என அவன் உணர்வதேயில்லை.

அடுத்தவன், அவனிடம் பணிபுரியும் அடிமை. அரசன் முன் சிரித்தற்குத் தண்டனையாக அவன் நாவு துண்டிக்கப்படுகிறது. அவன் மகளை அடிமையாக எடுத்துக் கொள்ளும் அரசன், வயதான வக்கிர புத்தியுள்ள ஒரு பிரபுவிற்கு அடிமையின் இளம் மகனைப் பரிசாக அளிக்கிறான். மேலும் தண்டனையாக அவன் மனைவியின் மூக்கு வெட்டப்படுகிறது. அவன் வாழ்க்கை நரகமாகும் வகையில் அரசனின் செயல்கள் அமைகின்றன. அடுத்து அரசனின் செல்லக் குரங்கின் வாலை மிதித்துவிட்டதற்காக அடிமையின் கண்கள் தோண்டப்படுகின்றன. அனைத்தையும் சகித்துக்கொண்டு அடிமை சலனமின்றி அமைதியாக இருக்கிறான். தனது வாழ் நாளில் மனதளவில் கூட ஒருவருக்கும் துன்பமோ, துரோகமோ இழைத்ததில்லை என்பது ஒன்றே அவனுக்கு முழு மன அமைதியைக் கொடுக்கிறது.

அடிமையாகவா அல்லது அரசனாகவா? அடுத்தபிறவியில் இருவரில் யாராகப் பிறக்க முடிவு செய்கிறீர்கள் என்பதை ஐந்து நிமிடங்களில் சொல்லவேண்டும் என்கிறார் ஆரிகுலர். கேட்ட கதையால் அனைவர் மனதும் பாதிக்கப்பட்டு தீவிர சிந்தனையிலிருக்கின்றனர். பதிலளிக்கத் தயங்கி, முடிவெடுக்க ஒரு நாள் வேண்டும் என்கின்றனர். இடையே ஒரு ராணுவ அதிகரியும் உதவியாளனும் அங்கு வர, மும்முரமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் விவாதம் அப்படியே நின்றுவிடுகிறது. அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை ஒருவிதமான அச்சத்துடன் கூடிய மௌனம் நிலவுகிறது. பிறகு பேச்சு தொடர்கிறது. மறு பிறவியில் அந்த அடிமையாகப் பிறக்க விருபுவதாக ஊனமுற்ற இளைஞன் சொல்கிறான். அவன் அவசரப்பட்டு முடிவு செய்துவிட்டான் என ஏளனம் செய்யும் தொனியில் பேசுகின்றனர். அவமதிக்கப்பட்ட மன வருத்துடன் இளைஞன் அங்கிருந்து செல்கிறான்..

ஹங்கேரிய திரைப்பட மேதை ஜோல்த்தான் ஃபாப்ரியின் (Zoltan Fabri) மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான Fifth Seal (1976) ஹங்கேரியின் தலை நகரான புதாபெஸ்த் நகரில் நிகழும் கதை. 1944 இல் ஹங்கேரியை ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த காலத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட Fifth Seal நாவலை அடிப்படையாகக் கொண்டது. ஜெர்மனியின் நாஜி அதிகாரத்தின் கீழ் இயங்கும் பாசிச ஹங்கேரிய அரசால் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. கடுமையான விதிமுறைகள், தண்டனைகள், கைதுகள் அமுல் படுத்தப்பட்டுள்ளன. யூதர்கள் வேட்டையாடப்படுகின்றனர். மக்கள் நரகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எந்த நேரமும் எவரும் ராணுவக் காவலர்களால் பிடித்துச் செல்லப் படலாம். காரணம் கேட்கக் கூடாது. அனைத்திற்கும் சட்டங்கள் உண்டு.

படத்தின் துவக்கத்தில் எழுத்துக்கள் ஓடும்போது மதுக்கூடத்திலிருக்கும் தானியங்கி இசைக்கும் இயந்திரம் இசைத்துக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஒலிக்கும் அதன் இசை கதைக்கு இணைந்த வகையில் ஒருவித பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனிதரின் பேராசைகள், இச்சைகள், அலைபாயும் எண்ணங்கள் ஆகியவற்றின் குறியீடுகளாக ஹெரோனியஸ் பாஷின்(Hieronymus Bosch) புகழ்பெற்ற ‘The Garden of Earthly Delights‘ ஓவியத்தின் பகுதிகள் அருகாமைக் காட்சிகளாக அவ்வப்போது வந்து போகின்றன. 40 நிமிடங்களுக்கு மேல் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ள மதுக்கூடச் சந்திப்பில் பாத்திரங்களுடன் ஒருவராகப் பார்வையாளராகிய நாமும் விவாதங்களில் மௌனமாகப் பங்குபெறுவதாக உணருகிறோம். காமெரா நகர்வுகள், கோணங்கள், ஒளி அனைத்தும் அதற்கேற்ப அமைந்துள்ளன.

பேச்சு முடிந்து மதுக்கூடம் மூடப்படுகிறது. அவரவர் வீடுகளுக்குக் கிளம்புகின்றனர். அன்றிரவு மதுக்கூட உரிமையாளர் பெலா மனைவியிடம் வருங்காலத் திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். கிராலி நேராக ஆசைக்கிழத்தியின் வீட்டிற்குச்செல்லுகிறார். மீண்டும் மது; போதை தலைக்கு ஏறுகிறது. இறைச்சியை ஆசைக்கிழத்தி எடுத்துக் கொள்கிறாள். பெலாவும் கிராலியும் அடிமையாகப் பிறப்பதைவிடக் குற்றம் செய்கிறோம் என்ற உணர்ச்சியே இல்லாமல் உல்லாசமாக வாழும் அரசனாகப் பிறப்பது நல்லது என முடிவு செய்து இரவை மகிழ்ச்சியாகக் கழிக்க முயலுகின்றனர். மூன்றாவது நண்பர் கோவாக்ஸ் மட்டும் யாரைத் தேர்ந்தெடுப்பது எண்ணி தூங்க முடியாது, தவித்துக் கொண்டிருக்கிறார்.

ஆரிகுலர் நான்கு வருடங்களுக்கு முன் மனைவியை இழந்தவர். மகள் அவருக்கு எச்சரிகையுடன் கதவைத் திறந்து விடுகிறாள். வீட்டினுள் வருபவர் மறைவிலிருக்கும் கதவை கவனத்துடன் மெதுவாகத் திறக்கிறார். உள்ளே சிறுவர்கள் கட்டில்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். யூதச் சிறுவர்கள். பெற்றோர் ராணுவக் காவலர்களால் கொல்லப்படும் வேளையில் சுற்றியிருப்பவர்களால் காப்பாற்றப்பட்டவர்கள். வெளியுலகத்திற்குத் தெரியாது மிகுந்த அபாயத்திற்கிடையே ஆரிகுலரால் ஒளித்துவைக்கப்ட்டிருப்பவர்கள். அவர் நண்பர்களுக்குக் கூடத் தெரியாது. அன்றிரவும் ஒரு யூதச் சிறுவனை ஆர்குலரிடம் அழைத்து வருகிறார்கள். பெற்றோர் திரும்பி வரும் வரை மகிழ்ச்சியாக அங்கு தங்கலாம் என்கிறார் . பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்டதை நேரில் கண்டதைச் சொல்லும் சிறுவன், பெரியவன் ஆனதும் தன்னையும் சுட்டுவிடுவார்கள் என்கிறான்.

வழக்கம்போல மறுநாள் மாலை மதுக்கூடத்தில் நண்பர்களின் சந்திப்பு. ஆரிகுலரின் கேள்வியை உதாசீனம் செய்துவிட்டதாக பெலாவும் கிராலியும் சொல்லிகொண்டிருக்கும் போது . எதிர்பாராதது நிகழ்கிறது. நால்வரையும் ராணுவக் காவலர்கள் கைது செய்து விசாரணைக்குக் கொண்டு செல்கின்றனர். நால்வரும் மூர்க்கமாகத் தாக்கப்படு சித்திரவதைக்குள்ளாகின்றனர். மதுக்கூடத்தில் அரசை விமரிசித்து அவர்கள் பேசியதாக உடன் மது அருந்திய ஊனமுற்ற இளைஞனிடமிருந்து போலீஸ் அறிவது இந்தக் கைதுக்கு காரணம் என்பதை நாம் பின்னர் அறிகிறோம். அரசை எதிர்ப்பவர்களைக் கைது செய்து தண்டனை அளிப்பதை ராணுவம் தீவிரமாக அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் நால்வரிடமும் எதுவும் சொல்லப்படுவதில்லை. என்ன நடந்தது, ஏன் கைதாகியிருக்கிறோம், ஏன் சித்திரவதை செய்யப்படுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

விசாரணை செய்பவன் இருபத்து எட்டு வயது இளம் அதிகாரி. ஆட்சியாளரைக் கொலைகாரர்கள் என்று மதுக் கூடத்தில் பேசியதற்காக நால்வரையும் கொன்றுவிவேண்டும் என்று தனது தலைவரிடம் சொல்கிறான். தண்டனையின் அடிப்பபடையை ஒரு தத்துவத்தை விளக்குவது போல தலைவர் விளக்கிச் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை இந்த நால்வரையும் உயிரோடு விட்டுவிடுவது நல்லது. எதற்காகக் கைதானோம் என அவர்கள் அறியக் கூடாது. தங்களையே வெறுக்கும் அளவு சித்திரவதை செய்யப்பட்டபின் வெளியே அனுப்பப்பட்டால் அவர்கள் எப்போதும் பயத்துடனே வாழ்வார்கள். அவர்களால் அரசுக்குப் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பில்லை. அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அது ஒரு சிறந்த பாடமாக அமையும். அவர்களும் பயப்படுவார்கள். ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் போன்றவற்றைக் கூட மேற்கொள்ளத் தயங்குவார்கள். அதிகாரத்தை எதிர்ப்பது விவேகமற்றது என்பதை அவர்களையும் அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் உணரவைக்க வேண்டும் என்கிறார்.

நால்வருக்கும் தாங்கள் பெரும்பாலும் இறக்கப்போது உறுதி என்றாகிவிடுகிறது. அடுத்து என்ன நிகழுமோ எனப் பயத்துடன் இருக்கின்றனர். என்ன தவறு செய்திருந்தாலும் அதற்கு மன்னிப்புக் கேட்கிறோம். இனி ஒழுங்காக இருப்போம் எனச் சொல்லிப் பார்க்கலாம் என்கிறார் பெலா. சித்திரவதைக்குள்ளாகும் ஒருவரின் ஓலம் கேட்டுகொண்டே இருக்கிறது. அறைக்கதவு திறக்கிறது. பிரகாசமான விளக்கொளியில் சித்திரவதைக்குப்பின் குற்றுயிராய்க் கயிற்றில் பிணைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதி முன் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.. தலைவரும், விசாரணை அதிகாரியும் வருகின்றனர்.

நால்வரையும் சிரமப்படுத்திவிட்டதற்குத் தலைவர் மன்னிப்புக் கோறுகிறார். விசாரணை அதிகாரி அவர்களைக் கொன்றுவிடச் சொன்னபோதும் தான் அதற்கு இணங்கவில்லை என்கிறார். அவர்கள் நால்வரும் அங்கிகிருந்து வெளியே சென்றுவிடலாம். உடனே அனுமதி அளிக்கப்படும். ஆனால் ஒரு நிபந்தனை. கயிற்றில் பிணைக்கபட்டிருக்கும் கைதி இன்னும் சற்று நேரம்தான் உயிரோடிருப்பான். அவனை இருமுறை கன்னத்தில் அறைபவருக்கு விடுதலை அளிக்கப்படும். வீட்டிற்குச் செல்லலாம். தலைவர் துரிதப்படுத்துகிறார். நால்வரும் தயங்குகின்றனர்.

கோவாக்ஸ் தயக்கத்துடன் கைதியின் முன் செல்கிறார் அவரால் முடியவில்லை. மீண்டும் சிறைக்குள்ளே கொண்டு செல்லப்படுகிறார். கைதியின் அருகில் செல்ல முயலும் கிராலியை பெலா நிறுத்திவிட்டு கோபத்துடன் தலைவரைத் தாக்க முயலுகிறார். தோட்டாக்கள் சரமாரியாக பெலாவின் உடலில் பாய்கின்றன. அடுத்ததாக ஆரிகுலர் சிரமத்துடன் கைதியின் அருகில் செல்கிறார். தடுக்க முயலும் கிராலி தாக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறார். ஆரிகுலர் மிகுந்த முயற்சியுடன் கைதியின் கன்னத்தில் இரு முறைகள் அறைந்துவிடுகிறார். அவருக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. வீடு நோக்கி அவர் நடந்துகொண்டிருக்கும் போது அபாயச் சங்கு ஒலிக்கிறது. தலைக்கு மேல் போர்விமானங்கள் பறக்கும் சப்தம். சற்று முன் அவர் சிறைப்பட்டிருந்த கட்டிடம் குண்டுவீச்சால் தரை மட்டமாகிறது.

மதுக்கூடத்தில் ஆரிகுலர் முன்வைக்கும் கேள்வியைப் பொறுத்தவரையில் சமரசம் செய்துகொள்வதில் அடுத்த மூவருக்கும் பிரச்சினை இல்லை. ஒருவரைத் தவிர மற்ற இருவருக்கும் அடுத்த பிறவியில் கொடுங்கோல் அரசனாகப் பிறப்பதில் எவ்வித வருத்தமும் இல்லை. அந்த ஒருவரும் நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு அரசனாக பிறப்பதில் தவறில்லை என்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் மூவரும் உணர்ச்சிவசப்பட்டு சமரசம் செய்ய மறுத்து தங்கள் முடிவைத் தேடிக்கொள்கின்றனர். ஆரிகுலர் வாழ முடிவு செய்கிறார். குழந்தைகள் அவருக்காகக் காத்திருக்கிறார்ககள். நாஜிகளின் வேட்டைக்கு பலியாகும் பெற்றோரின் குழந்தைகளை ரகசியமாக வீட்டில் வைத்துப் பேணிக்கொண்டிருக்கும் ஆரிகுலார் வாழ்ந்தாக வேண்டும்.

காட்சியமைப்பைப் பொறுத்தவரை ஃபாப்ரி சிறப்பாகச் செயல்படுபவர். வண்ணங்களைப் பயன்படுத்துவதிலும் அவ்வாறே. Fifth Seal படம் முழுக்க ஒரே அளவில் மட்டுப்படுத்தப்பட்ட வண்ணங்களில் காட்சிகள் காட்டப்படுகின்றன. பாத்திரப் படைப்புகளும், அதற்கான நடிகர்களைத் தேர்வு செய்திருப்பதும் அற்புதம். எந்த ஒரு இடத்திலும் மிகையான அல்லது குறையான நடிப்பைக் காண முடியாது. Fifth Seal ஆழமான வாசிப்புகளுக்கு இட்டுச் செல்லும் படம். இந்தப்படத்தின் தலைப்பான ஐந்தாவது முத்திரை (Fifth Seal) பைபிளின் ’வெளிப்படுத்துதல்’ ஆகமத்தில் எழுதப்பட்டுள்ள ஏழு முத்திரைகளுள் ஒன்று. மது அருந்திவிட்டு முடிவில் மனத்தாங்கலுடன் அங்கிருந்து செல்லும் ஊனமுற்ற இளைஞன் இந்தப் பகுதி பைபிள் வசனங்களைத் தன் அறையில் சொல்லிகொண்டிருக்கிறான். உலகம் அழியப்போகும் முடிவு காலத்தில் இந்த முத்திரைகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும் என்று பைபிளில் சொல்லப்படுகிறது.. மனிதனைப் பொறுத்தவரை அவனுடைய முடிவு அவன் வாழ்ந்த உலகின் முடிவு. அவனுடைய உலகம் அத்தோடு முடிகிறது.

மனதைப் பாதிக்கும் இத்திரைப்படத்தில் பல இடங்களில் பார்வையாளரைக் கண்ணீர் சிந்தி உருக வைப்பதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், படம் முழுக்க சற்றும் மிகையின்றி நேர்த்தியாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகள் அளவோடு பயன்படுத்தப்படும்போது திரைப்படம் கலையாகிறது. சிறந்த திரைப்படங்கள், சிறந்த புத்தகங்களைப் போன்றவை; மறு வாசிப்புக்கானவை.ஒவ்வொரு முறை காணும்போதும் புதிய அனுபவங்களுக்குள் நம்மைக் கொண்டு செல்பவை. அதனால் தான் ஹங்கேரியில் இருபத்து ஏழு வருடங்களுக்கு முன் வெளிவந்த இத்திரைப்டம் இன்று வரை உலகம் முழுவதுமுள்ள திரைப்பட ஆர்வலர்களால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.

Fifth Seal முதற்கொண்டு ஃபாப்ரியின் முக்கிய படைப்புகள் அனைத்தும் அவரைச் சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள், அவர் நேரில கண்ட, அனுபவித்த வாழ்க்கை ஆகியவற்றைச் சார்ந்தவை. முக்கியமாகத் தான் நேரில் கண்டு வெறுத்த அதிகாரத்தின் வன்முறையைப் பதிவு செய்திருக்கிறார். தனது நாட்டில் பாசிச ஆட்சிக் காலத்திலும், ஜெர்மனிய ஆக்கிரமிப்பு நேரத்திலும், தொடர்ந்து ரஷ்ய அரசின் உதவியுடன் ஆண்ட கம்யூனிஸ்ட் அரசின் காலத்திலும் நிகழ்ந்த, அவரை ஆழமாகப் பாதித்த நிகழ்வுகள் அவரால் கதைகளாக செலுலாய்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரின் திரைப்படங்கள் இறுக்கமான கதைகளைக் கொண்டவையாக இருந்தபோதிலும் எள்ளலும், அங்கதமும், நகைச்சுவையும் அங்கங்கே இழையோடிக் கொண்டிருபதைக் காணலாம்.

தனது படைப்புகள் சராசரி மனிதரின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கொண்டே உருவாக்கப்படுபவை என ஃபாப்ரி நேர்காணலில் கூறுகிறார். தினசரி வாழ்வில் மனிதர் எதிர்கொள்ளும் பயங்களும், ஆசைகளும் அவர் திரைப்படங்களில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஃபாப்ரியின் படைப்புகள் மனித உணர்வுகளை மைய இழையாக கொண்டு மனித மனங்கள் வெளிப்படுத்தும் உன்னதங்களையும், வக்கிரங்களையும் விவரிப்பவை; அதிகாரம், அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் துணைபோவது என்பதை எடுத்துச் சொல்பவை.

ஃபாப்ரியின் இயக்கதில் Fifth Seal தவிர மேலும் காணவேண்டிய திரைப்படங்களாக Fabian Meets God (1980), Two Half-Times in Hell (1963), Édes Anna (1958), Merry-Go-Round(1956) , Professor Hannibal (1956) ஆகியவற்றைச் சொல்லலாம்.

http://konangalfilmsociety.blogspot.in/

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </