சினிமா மீதான கட்டுப்பாடுகள்
- பி.டி.கர்கா | தமிழில் - யுகேந்தர் :: செமினார் இதழ் 47 - ஜூலை 1963 |
'தி மூவிஸ் ஆன் டிரயல்' [The Movies on Trial] என்ற தனது புத்தக்கத்தில் வில்லியம் ஆலன் வைய்ட், திரைப்படங்களை 'அதுக்கும் சவ்'விற்கு [Chewing Gum] ஒப்பிடு செய்து, பெரிய முட்டாள் ஒருவருக்கு மின்னுக்கின்ற பொம்மையை விட சிறியளவு சிறந்ததை சினிமா துறை கொடுக்கிறது என்றும் கூறுகிறார். ஒருவேளை வைய்ட் மிகைப்படுத்தி கூறியிருக்கலாம். இருந்தும் அவரது கருத்தின் அடிப்படை உண்மையை மறுப்பது கடினம். பெரும்பாலான திரைப்படங்கள், பளபளப்பான வெளிப்புறம் மற்றும் அதன் பொழுதுபோக்கு மதிப்பு நிலையிலும், உண்மையற்ற, ஒன்றுமில்லாத மற்றும் தீங்கில்லாததாகவே இருக்கிறது. எது உண்மையாகவே அவற்றை அப்படி ஆக்குகிறது?
ஒன்று: பெருந்திரளான மக்களின் பொருளாதார தேவை (தயாரிப்பு செலவு, திரையரங்க முதலீடு முதலியன உயர்வினால் ஏற்பட்டது) தயாரிப்பாளரை குறைந்த எதிர்ப்பு கொண்ட பக்கம் செல்லத் தூண்டுகிறது.
இரண்டு: அரசாங்க கட்டுபாடு மற்றும் அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்பு குழுக்கள் (சமய, சமூக, பொருளாதார அல்லது அரசியல் குழுவாக இருக்கலாம்), முரண்பட்ட கருத்துக்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருப்பொருள்களை ஒடுக்குகின்றன. 'தணிக்கை அதிகாரிகள் என்ன செய்வார்களோ என்ற நமது அச்சமே அசலான வாழ்க்கையை சித்திரிக்க மறுக்கிறது. எவற்றுடனும் எந்த உறவுமற்ற பல வெற்று தேவதை கதைகள் பலவற்றை எடுக்கிறோம்.' என ஹாலிவுட் தயாரிப்பாளர் சேம்யேல் கோல்ட்வின் ஒப்புக்கொண்டார்.
சினிமாவின் சமூக சக்தி உணரப்பட்ட பின், அதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் எழுந்தது. திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கானவை மட்டுமல்ல என்ற பயம், அவை சிறிய தீமைகளை ஒழிக்க மற்றும் நீதியின் பெயரில் நடத்தப்படும் போலியான செயல்களை உணர்த்த முடியும் என்று தெரிய வந்தது. இந்த புதிய விழிப்புணர்வே தணிக்கை அதிகாரிகள் தடை உத்தரவு கொடுக்கவும் திரைப்பட காட்சிகளை வெட்டுவதற்கும் வழிவகுத்தது; அழுத்தம் கொடுக்கும் குழுக்கள் கண்டனங்களை தெரிவித்து புறகணிப்பதாக அச்சுறத்தவும் செய்தனர். 'திரைப்படங்கள் நிலைத்திருக்கிறது, அவ்வப்போது கருத்து சுதந்திர உரிமையை உபயோக்கிறது' என்பது 'ஆச்சரியான விஷயம்' என கில்பெர்ட் செல்ட்ஸ் தெரிவிக்கிறார்.
"ஊடகம் திரைப்படம் மற்றும் வானொலி சட்டம்" குறித்து 1951'இல் நடந்த யுனெஸ்கோ ஆய்வின் படி 'திரைப்பட தணிக்கை முறை எல்லா இடங்களிலும் குறிப்பிட்டளவுக்கு புத்துயிர்ப்புடனே இருக்கிறது'. 'தாராளவாத ஆட்சிகள் பொதுவாகவும் பகிரங்கமாகவும் தணிக்கை முறையை பின்பற்றுகிறார்கள்' என்ற கருத்தும் அதில் குறிப்பிடபட்டிருந்தது. பெரும்பாலான தாராளவாத ஆட்சிகள், வன்முறையையே தாங்கள் வெறுப்பதாக கூறுவார்கள், ஆனால் பாலியலே அவர்களுக்கு முக்கியத்துவமானது.
பெண்களுக்கான அமைப்புகள் மற்றும் மத குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் பெற்ற ஆரம்பகால படங்களில் ஒன்று 'தி விடோ ஜோன்ஸ்' (1896), அதில் நடுத்தர வயது தம்பதியினர் நீண்ட முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. பாலியல் குறித்த நேர்மை, அது சார்ந்த பழக்கமான பழைய தேவதை கதைகளை விட மிகவும் ஆபத்தானது என அதன் பின் தணிக்கை அதிகாரிகள் நம்பத்துவங்கினர். அதிக நீல படங்கள் இருந்த காரணத்தினால், காவல் துறை பிரச்சனையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள விரும்பியதால், பிரிட்டிஷ் திரைப்பட தணிக்கை வாரியம் 1912'இல் சினிமா துறையின் தூண்டுதலால் ஆரம்பிக்கப்பட்டது.
|
'தி விடோ ஜோன்ஸ்' (1896) படத்தில் வரும் அந்த நீண்ட முத்தக் காட்சி |
துவக்கம்:
அந்த நேரத்தில் நீலம் அல்ல, எந்த படங்களையும் இந்தியா தயாரிக்கவில்லை. உண்மையில் முதலாம் உலக போரின் முடிவின் நெருக்கத்திலேயே இந்தியாவில் திரைப்பட உருவாக்கம் ஆரம்பித்தது. தற்போதைய தணிக்கை முறை 1918'இன் இந்திய சினிமாட்டோக்ராப் சட்டத்தின் கீழே உருவானது. இதற்கு முன்பு தன்னார்வ வாரியங்கள் சில வடிவத்தில் இருந்தன, அவற்றை குறித்து குறைந்த தகவலே உள்ளது. பின்னர் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட இந்த சட்டத்தின் கீழ், பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் ரங்கூன் ஆகிய ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கும் வாரியத்தில் சான்றிதழ் பெறாமல் எந்த திரைப்படமும் திரையிடக்கூடாது.
ஒரு வாரியம் சான்றிதழ் அளித்த திரைப்படத்தை இன்னொரு வாரியம் தடை செய்யும் நிகழ்வு அடிக்கடி நடக்கும். உதாரணமாக, பிரிட்டிஷ் திரைப்படமான 'தி டிரம்ப் ஆஃப் தி ராட் (the triumph of the rat)' பாம்பேயில் சான்றிதழ் அளிக்கப்பட்டது, கல்கத்தாவில் தடை செய்யப்பட்டது, 'அலியாஸ் தி டெகான்' கல்கத்தாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது பாம்பேயில் மறுக்கப்பட்டது. இந்தியாவிற்கு 1921'இல் வருகை தந்திருந்த பிரிட்டிஷ் நிபுணர் டபுள்யு.எவான்ஸ், தணிக்கை வாரியம் 'பலவீனமானதாகவும் அனுபவமற்றதாகவும்' இருப்பதைக் கண்டார். இந்திய அரசு பெயரளவில் மட்டுமே இருக்கும் தற்போதைய தணிக்கை முறையை நெறிப்படுத்தி, நியாயமான திறனுக்கு உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்தார். மலிவான அமெரிக்க படங்கள் மூலம் பெரிய தீங்கு இந்தியாவில் நடக்கிறது என கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் பிரிட்டிஷ் ஊடங்களில் வெளியாயின. பரபரப்பான, கொலைகள், குற்றங்கள் மற்றும் விவாகரத்துகள், மொத்தத்தில் இந்தியரின் பார்வையில் வெள்ளை பெண்ணின் பிம்பம் தரமிழக்கிறது. அதிகாரியின் மனைவியை உள்ளூர்கார்கள் கடத்தியதற்கு திரைப்படத்தில் வந்த வன்முறை காட்சியே காரணம், தன்னிடம் அதற்கான திட்டவட்டமான ஆதாரம் உண்டு என 'தி லண்டன் டைம்ஸ்' தெரிவித்தது.
|
'தி டிரம்ப் ஆஃப் தி ராட் படத்தில் வரும் ஒரு காட்சி' |
பெரும்பாலான இந்த புகார்கள் வர்த்தக போட்டியினாலே தூண்டப்பட்டது, இதில் உண்மையான தார்மீக அல்லது சமூக அக்கறை இல்லை என்பதை "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிகை தலையங்கம் எழுதி வெளிப்படுத்தியது. அதில் 'அமெரிக்க திரைப்படங்களிடம் வர்த்தகரீதியாக நிச்சயம் போட்டிப் போட வேண்டும், ஆனால் அவற்றை பொய்யான வாதங்களால் பிரிட்டிஷ் நலனுக்காக ஒடுக்க நினைப்பது அபத்தமானது'. கடத்தல் குற்றாச்சாட்டை விசாரிக்க, இந்திய அரசு 1927இல் திரைப்பட விசாரணை குழுவை நிறுவியது. இது குறித்த எந்த ஆதாரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை, வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பொறுப்பிலிருந்த காவல் துறை அதிகாரிகள் இந்த கதையை கேட்டு சிரித்தனர்.
விசாரனை குழு (எஸ்.கே.படேல் தலைமையில் 1951இல் அமைத்ததுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்), அசாதாரணமான சமூக மற்றும் உளவியல் பார்வையை வெளிப்படுத்தியது. அவர்கள் பரிந்துரைத்தது, "போக்கிரிகளின் துணிகர செயல்களின் கதை அங்கீகரிக்கப்பட்ட கலை வடிவம், உயர் மற்றும் வலிமை மிகுந்தவர்களைக் காட்டிலும் கீழ் மட்டத்தவரின் வாழ்க்கை உயர்ந்த அறநெறிகளை கற்றுக்கொடுக்கலாம்... இதே போல தணிக்கை மற்றும் அலுவலக அதிகாரிகள் தனிப்பட்ட விதத்தில் திரைப்படக் கரு அல்லது நிகழ்வுகளை ஆட்சேபிக்கக் கூடும், ஆனால் தனி நபரிடம் அதிக பரிவு கொள்ளவும் ஊக்குவிக்கவும் கூடாது. அனைத்துக்கும் மேலே, வெளியீட்டாளர், தயாரிப்பளர் மற்றும் இறக்குமதியாளரே இந்தப் படம் பொது மக்களையோ அல்லது ஏதேனும் ஒரு பகுதியை புண்படுத்த வேண்டும் என ஆசைப்படும் கடைசி நபர்கள். திரைப்படத்தையோ அல்லது திரைப்பட வகையையோ ஒருவருக்கு பிடிக்கவில்லையென்றால், அவரது தீர்வு எளிதானது. அதற்கு ஆதரவு கொடுக்க கூடாது...'
அரசியல் தணிக்கை முறை:
பிரிட்டிஷ் ஆட்சியில் தெளிவாக, பெரும்பாலான பகுதியில் தணிக்கை முறை சமூகம் சார்ந்தல்லாமல் அரசியல் சார்ந்தே இருந்தது. அரசியல் களம் குறித்த எந்தக் காட்சி அல்லது வசனமென்றாலும் கண்மூடித்தனமாக நீக்கப்பட்டது. தேசிய தலைவர்களின் புகைப்படங்கள் கூட மறைக்கப்பட்டது. அரசியல் சித்தாந்தங்கள் தொடர்புடைய திரைப்பட தலைப்புகளும் ஆட்சேபிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தது. இவ்வாறே பிரபாத்தின் 'மகாத்மா' 'தர்மாத்மா'வாக மாறியது மற்றும் வெளிவருவதற்கு முன்பே இம்பீரியலின் 'தி பாம்' 'தி க்ளோரி ஆஃப் காட்' என மாறியது. முதலாளி-தொழிலாளி உறவு குறித்தான 'தி மில்' திரைப்படம் பொதுத் திரையிடல் சான்றிதழ் அளிக்கப்படும் முன்பு முழுவதுமாக அலசப்பட்டது. மற்ற பல படங்கள் இதே போன்று அரசியல் காரணங்களுக்காக தடைச்செய்யப்பட்டது அல்லது சிதைக்கப்பட்டது.
சமூகக் கட்டுப்பாடு:
இறுதி போருக்கு பின், மிகவும் சரியாக சுதந்திரத்திற்கு பின், தணிக்கை முறை சமூக நிலைப்பாட்டு நிலையிலிருந்து மிகவும் கடுமையானதாகவும் வறட்டுத்தனமானதாகவும் மாறியது. இயற்கையாகவே இது நாட்டில் அழுத்தம் கொடுக்கும் குழுக்களை ஊக்குவித்தது. 1954'இல் 13000 இல்லத்தரசிகள் ஒரு மனுவில் கையெழுத்திட்டு, அதில் சினிமாவின் தீய செல்வாக்கை குற்றம் கூறியும் அதை கடுமையான கட்டுப்பாட்டிற்கு வலியுறுத்தியும் பிரதமரிடம் வழங்கினர். அதை ஒட்டிய நேரத்திலேயே மக்களவையின் சில உறுப்பினர்கள், 'விரும்பத்தகாத' படங்களை திரையிட அரசு தடை விதிக்க பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தாக்கல் செய்தனர். சுதந்திரா கட்சித் தலைவர் கே.எம்.முன்ஷி அவரது மனைவியுடன் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊடகத்தில் சினிமா எதிர்ப்பு போரை துவக்கினார். நாட்டில் குற்றமும் வன்முறையும் பரவுவதற்கு சினிமாவே காரணம் என்பது அவர்களின் வாதம். (கே.எம்.முன்ஷி நீண்ட லாபகரமான ஒரு உறவை சினிமா துறையுடன் வைத்துக்கொண்டிருந்தவர்)
இதன் விளைவாக, தணிக்கை அதிகாரிகள் தங்கள் கட்டுபாட்டை இறுக்கிக் கொண்டனர், பெரும்பாலானத் திரைப்படங்களுக்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில், கிட்டத்தட்ட எல்லா படத்திலும் தணிக்கை வாரிய வெட்டின் வடு இருந்தது. சினிமாத் துறையின் முக்கியமானவர்களான தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளார்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய மூவரும் பதற்றமடைந்தார்கள்.
வெட்டுக்களின் ஒரு சில மாதிரி இங்கேக் கொடுக்கப்பட்டுள்ளது:
(அ) ஒழுக்கக் குறைவான அசைவுகள் மற்றும் நடன கலைஞர்களின் மார்பளவு அருகாமை காட்சி, அவள் படுத்துகிடக்கும் காட்சி உட்பட ;
(ஆ) முழங்கால் மேலே பாவடை பறக்கும் காட்சிகள் ;
(இ) சூதாட்டக்காரன் பகடை உருட்டும் முன் தெய்வத்தின் ஆசிர்வாதம் பெறுவது.
(ரிக்ஷாவாலா திரைப்படத்திலிருந்து)
(அ) மோகினி மற்றும் யுவராஜுக்கு இடையில் நெருக்கமான உடல் தொடர்புக் காட்சி ;
(ஆ) முத்தம் கொடுக்க ஆயத்தமாகுதல் ;
(இ) மோகினியும் யுவராஜும் கட்டிப்பிடிக்க ஆயத்தமாகுதல்.
(அப்ஸ்ரா)
(அ) ரீடா குளிக்கும் போது மார்பின் மேல் பகுதி வெளிப்படும் காட்சி ;
(ஆ) ஜீன் மற்றும் இறுக்கமான ஜெர்சி அணிந்த பெண்ணின் அருகாமை காட்சி.
(மெம் திதி)
|
'மெம் திதி படத்தில் வரும் ஒரு காட்சி' |
(அ) டாக்டர்.கபீரின் வார்த்தைகள், 'இந்தியா அமைப்பை எதிர்க்கிறது' ;
(ஆ) 'செக்ஸ்லெஸ்' என்று எபிஃபானியா குறித்து டாக்டர்.கபீர் குறிப்பிடும் வார்த்தை மற்றும் அதை அவர் மீண்டும் சொல்வது ;
(இ) பேராசிரியர் மற்றும் டாக்டர்.கபீர் குடிக்கும் காட்சி மற்றும் பிராந்தியை புகழ்ந்து பேராசிரியர் கூறும் கருத்து.
(தி மில்லியனைர்ஸ்)
(அ) ஒருவர் பின் ஒருவராக சாகர் மற்றும் சரிதா எலிபண்டா குகைகளின் சிற்பங்களை பார்க்கும் காட்சி.
(ஆ) மார்பகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் படங்களின் காட்சிகள்
(கர் டிவாடி)
(அ) திருடர்கள் காவல் நிலையத்தை தாக்கும் காட்சி, சிறை கதவை உடைத்து குங்கா வெளியேறுவது, திருடர்களுக்கும் காவல்துறைக்கும் இடையான துப்பாக்கி சண்டை, முக்கியமாக, திருடர்களின் வீர உணர்வை குறைத்துக் காட்டுவது, மற்றும் இந்தத் தாக்குதலினால் பல திருடர்கள் இறந்தனர் என்பதை தெளிவாக நிறுவுவது.
(குங்கா ஜும்னா)
(அ) புல் முனையினால் ஜீவன் ரேகாவின் கன்னங்களை தொடும் காட்சி.
(மார்டன் கேர்ல்)
(அ) பாடலின் துவக்கத்தில் முன்னியின் கவர்ச்சிகரமான பார்வை மற்றும் அசைவுகள் ;
(ஆ) கிளர்ச்சியூட்டும் இடுப்பின் அசைவுகள்
(இ) மார்பகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த கம்போசிட் காட்சி.
(சலாம் மேம் சாஹிப்)
(அ) புதிதாக திருமணமான கணவன் மனைவி காட்சி, முத்தம் கொடுக்க ஆயத்தமாகும் காட்சியை நீக்கவும்.
(ஆ) மழையில் லக்ஷ்மி மற்றும் அவளது கணுவனுடனான உடல் நெருக்க முக்கிய காட்சி.
(சார் திவாரி)
அனைத்திலும் உள்ள அபத்தம் வெளிப்படையானவையே. இந்த வெட்டுகள் இல்லாமல் இருந்தால் இந்த திரைப்படங்கள் கலைநயத்தோடு அழகியலுடன் இருந்திருக்கும் என்று சொல்வதும் அபத்தமே. வெளியில் தெரிவதை விட அதிலுள்ள குறை ஆழமானது. இந்தப் படங்களில் வரும் பாலியல் சார்ந்த பகுதி ஆண் பெண்ணுக்கு இடையான நேரடி உணர்வு என்பதல்லாமல் 'வலிந்தழைத்தவை'. சராசரியான இந்தியத் திரைப்படங்கள் உணர்வுபூர்வமான மற்றும் கலைநயத்துடன் மோசடியானவை. உண்மையில் பெரும்பாலான வெகுஜனப் படங்கள் அப்படியே.
இதில் தணிக்கை அதிகாரியின் உதவி ஒரு பொருட்டாக இருக்காது. அவர்கள் கலைநய அழகியல் தரமல்லாமல் ஒழுக்க நெறி சார்ந்தே முடிவெடுக்கின்றனர். முக்கியத்துவம் கொடுத்து காட்டும் மார்பு காட்சியை உடனே நீக்க முன்வருவது, திரைப்படத்தின் அனைத்து கலைநய அழகியலையும் அவர்கள் நீக்கிவிடுகின்றனர். சார்லி சாப்ளின் ஒரு முறை குறிப்பிட்டார், '... தற்போது தணிக்கையை கடந்து செல்லும் பல திரைப்படங்களை அதன் அழகியல் தரத்தை வைத்து தீர்மானித்தால் நல் இரசனை இல்லாதது, போலி வாழ்க்கை முறைகள் மற்றும் இழிவான அணுகுமுறை ஆகிய காரணத்தால் ஒட்டுமொத்தமாக அது தடை செய்யப்பட்டிருக்கும். மறுபுறம், தடைசெய்யப்பட்ட பல பகுதிகள், அதன் அழகியல் தரத்தை வைத்து தீர்மானித்தால் மிகவும் பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும்...'
அனைத்து தரப்பினரிடையேயும் திருப்தி ஏற்படுத்துவது எப்போதும் இயலாது, தணிக்கை முறை பிரச்சனை என்பது கடினமான ஒன்று என்று ஒப்புக்கொள்ளும் அதே வேலையில், தணிக்கை அதிகாரி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என நியாயமாக கேட்கலாம். உயர் எண்ணம் கொண்ட மக்களவை மதிப்பீடு வாரியப்படி, "... அவர் நீதித்துறையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும், பொது மக்கள் மத்தியில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கலாச்சாரப் பின்னணி குறித்த ஆழமான புரிதல் இருக்க வேண்டும்". இலக்கிற்கு நெருக்கமாக, அநேகமாக ஏ.டி.எல்.வாட்கின்ஸ், பிரிட்டிஷ் திரைப்பட தணிக்கை வாரியத்தின் செயலாளராக உள்ளார். அவரை பொறுத்தவரை, ஒரு நல்ல தணிக்கை அதிகாரி என்பவர் "திரைப்படங்களை விரும்புபவராக மற்றும் தணிக்கையை விரும்பாதவராக' இருக்க வேண்டும்.
1963 இல் செமினார் இதழ் இந்தியத் தணிக்கை வாரிய சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டுவந்தது. அதில் இருந்து மிக முக்கியமான இந்தக் கட்டுரையை தமிழில் பேசாமொழி வாசகர்களுக்காக மொழியாக்கம் செய்துக் கொடுத்துள்ளோம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamoli |