நூல் அறிமுகம் - சினிமாவும் தணிக்கையும் : இந்திய அரசியல் கட்டுப்பாடுகள்
- நமீதா மல்ஹோத்ரா :: தமிழில்: தீக்ஷன்யா ரெங்கநாதன், மேற்பார்வை: செகோ முகுந்தன் |
இந்திய தேசியத் திரைப்படங்கள் மீது சிக்கலுக்குரிய விவாதங்கள் பரவலாக உள்ளன. இவற்றை விடுத்து, இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறை வரலாறு குறித்து இப்புத்தகம் பேசுகிறது. தணிக்கைத் துறையின் சிதைந்துபோன கருத்தாக்கங்கள் பலவற்றையும் ஒருங்கிணைத்து, அவற்றை நேரியல் (அல்லது முறைப்படுத்திய) வரலாறாகக் கூற முற்படுகிறார் இந்நூலின் ஆசிரியர் பௌமிக்.
தணிக்கைத் துறை மீதான விமர்சனங்கள், சமூகவியல் ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், அவை சராசரி வாசகனுக்குப் பெரிதாக உதவுவதில்லை. சினிமா மொழிதலில் உள்ள தணிக்கைத் துறையின் அரசியல் குறித்த மற்றொரு பரிமாணத்தை அவனுக்குக் காட்ட முயல்கிறது இப்புத்தகம்.
இது பொருத்தமான பதில் இல்லையென்றாலும், அநெட் குகன் கூறுவதிலிருந்து தணிக்கைத் துறையின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். “தனிமனித மற்றும் சமூக ஒழுக்கங்கள் பற்றிய கருத்துக்கள் பெண்களை இழிவு செய்வதாய் இருக்கக்கூடாது. நமது கலாச்சாரங்களை வெளிக்கொண்டு வரும் சிந்தனைகளாக அவை இருக்க வேண்டும்” என்று அநெட் குகன் கூறுகிறார். மேலும் அவர், “தணிக்கைத் துறையில் தனக்கென ஓர் இடம் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற தனிநபரையோ, நிறுவனத்தையோ சாராது இருப்பது மிகவும் அவசியம்” என்றும் கூறுகிறார்.
அமெரிக்க, இங்கிலாந்து திரைப்படங்களில் வரும் வெள்ளைக்காரர்களை, மாநிறம் கொண்ட ஆசிய மக்கள் தங்களோடு ஒன்றாதவர்களாகவும், விரும்பத்தகாதவர்களாகவும் பார்த்தனர். இதுவே, அன்றைய காலனித்துவ தணிக்கைத் துறை அதிகாரிகளுக்குப் பெரும் கவலையாக இருந்தது. எனவே, இதற்கென ஒரு கட்டமைப்பை, தனி விதிமுறைகளை உருவாக்கினார்கள். ஆனால், முந்தைய காலனித்துவ தணிக்கைத் துறையின் மரபுகள் இன்றும் பெரும்பாலும் மாறாமலேயே உள்ளது. இன்றைய நவீன காலனிய இந்தியாவிலும், முன்பிருந்த பழைய காலனி ஆதிக்கக் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தணிக்கைத் துறை, ஏற்கெனவே உள்ள விதிகளோடு மேலும் சில சட்டதிட்டங்களைப் போட்டு இறுக்குகிறது என்று வாதிடுகிறார் பௌமிக்.
1927 இல் இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்கள் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், வளர்ந்து வந்த காலனித்துவ ஆட்சியாளர்களின் அதிருப்தியை குறிப்பிட்டிருந்தது. அப்போது தணிக்கைத் துறையினர், இந்தியா தனக்கான சினிமாவை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்கள். இவ்வாறு உலகின் ஒரு முக்கிய நிகழ்வான இந்திய சினிமா உருவாகக் காலனிய தணிக்கை முறையின் செயல்கள் காரணமாக அமைந்தன.
நேருவின் நவீனத்துவத்தின் வாகனமாக திரைப்படத்துறையின் பங்கு உள்ளது என்ற கூற்றிற்கும், காந்தியின் வெட்கங்கெட்ட திரைப்படத்துறையின் முக்கியத்துவம் குறித்த மறுதலிப்புக்கும் இடையிலுள்ள முரண்பாடுகளைக் கொண்டு சுதந்திர இந்தியாவின் திரைப்படங்களை அலசுகிறார் பௌமிக். மேலும், இம்மோசமான போக்கின் விஷத்தன்மையை குறைப்பதற்காக திரைப்படத்துறை எடுத்த பங்களிப்பையும் அவர் கைக் கொள்கிறார்.
இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாக விளங்குகிறது. பரந்து பட்ட முறையில் அரசியல் நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே திரைப்படத்துறையின் நீதி எனும் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. இது, ஜனநாயக, தேசியவாத, மற்றும் குடியுரிமைகளின் மேம்போக்கான நோக்கங்களாகவே சுதந்திர இந்தியாவில் பார்க்கப்பட்டது.
உதாரணமாக, பஞ்சாபிலுள்ள தீபக் திரையரங்கு நீதிமன்ற தீர்ப்பைச் (1991) சொல்லலாம். அத்தீர்ப்பின்படி, ஒரு சமுதாயம் திறம்பட பாதுகாக்கப்படுவதற்கு, மக்கள் நலம் பேணுவதற்கு சினிமா மாற வேண்டியதை அவசியமாக்கியது. அம்மாநில அரசின் கொள்கையாகவே இது நிறைவேற்றப்பட்டது.
இந்தப் புத்தகத்தைத் தான் வெளியிட வேண்டிய அவசியத்தை, திரைப்படங்களின் முழுமையாய் ஒழுங்கமைக்கப்பட்ட பரிசோதனைகளே முடிவு செய்தது என்கிறார் பௌமிக். இப்புத்தகத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் ஆவணப் படங்கள், மக்களின் கருத்து போன்றவற்றால் வாசிப்பு அனுபவத்தைச் சுவாரஸ்யமாக்குகிறார் பௌமிக்.
நட்சத்திரங்கள் (மம்தா குல்கர்னி, அக்ஷய் குமார்), ஊடகத்திற்கு எதிரானவர்கள் (பிரதிபா நைத்தனி) மீது வழக்குத் தொடுக்க பொதுமக்களுக்குத் தேவையிருந்தும், மக்களின் குரல் என்கிற பிரிவின்படி காலனித்துவ தணிக்கைத் துறை அம்மக்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவிலை. எனினும் திரையரங்க ஒழுங்கு முறைமைகளை, இணக்கமான பண்புகளை வெறும் கற்பனையாக மட்டுமே புரிந்து கொள்ள முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
உடன் பிறவாச் சகோதரனாய் இருக்கும் சினிமாவின் கவர்ச்சியையும் அவர் ஆராயத் தவறவில்லை. மாநில அரசின் உள்நோக்கங்கள் ஆவணப் படங்களில் கண்ணாடி போல தெளிவாகக் காட்டப்பட்டுள்ளதையும் அவர் கூறுகிறார். (அப்பாஸின் நான்கு நகரங்களின் கதை மற்றும் பட்வர்த்தனின் போரும் அமைதியும்)
மேலும், மும்பையின் சர்வதேச திரைப்பட விழாவையும், அதன் தணிக்கை பெறுவதற்கான நிதி வசதி பற்றிய நடைமுறைப் போராட்டங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறார். இந்த முயற்சி பெரும் ஆரவாரத்தை எழுப்பி மாற்றுக் குழுக்கள் உருவாகக் காரணமாய் இருந்தது. ஷர்மாவின் இறுதி முடிவுகள் அநுபம் கெர் அவர்களைத் தணிக்கைக் குழுவின் தலைவராக்கியது.
தணிக்கைத் துறையின் பார்வையில் சினிமா பற்றிய இந்த விளக்கமான வரலாற்றில் ஏனைய சட்ட திட்டங்களில் தலையிடுவதில்லை எனத் தோன்றுகிறது. உதாரணமாக, பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும், குறுந்தகடுகள், ஒளிப்படங்கள், கண்காட்சியில் திரையிடப்படும் 35 mm படங்கள் ஆகியவற்றைக் கூறலாம். மேலும் நிழல் வீடியோ நிலையங்கள், டூரிங் டாக்கீஸ் படங்கள், பன்முகத் திரையரங்குகள் ஆகியனவும் அடங்கும். இவைகள் அனைத்தும், ஆபாசம், தேசத்துரோகம், இனவாத எதிர்ப்பு போன்றவற்றின் சட்டங்களை உள்ளடக்கியே காட்டப்படுகிறது.
திரைப்படத்தின் பல்வேறு சட்டதிட்டங்களைப் பார்க்கும்போது அன்னே பாரன், “சமூகக் கோட்பாடுகளுக்குள் கலாச்சாரமும் பொருளாதாரமும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்துள்ளன” என்று கூறுகிறார்.
தணிக்கையின் பின்னால் அதன் சட்ட விவரங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள் எவ்வாறு கிண்டலாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை, காலனித்துவ தணிக்கை ஆட்சியின் கீழ் வராத புராண படங்கள், மற்றும் சுதந்திர இந்தியாவின் போலி நவீனத்துவ நாடகீயமான அமைப்பு போன்றவை வெளிப்படுத்துகின்றன.
இறுதியாக இப்புத்தகம், தணிக்கைத் துறை, அதிகாரம் என்ற பெயரில் சீரற்ற சினிமாக்கள், தன்னிச்சையான தீர்ப்பு விளக்கங்கள், புரியாத வழிகாட்டுதல்கள் என மக்கள் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக வலுவான வாதத்தை முன் வைக்கிறது. இது இந்தியாவின் கட்டுப்பாடுகள் குறித்தான புதிர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக பெண்களுடனான நட்பு, பெண்களுக்குள் உள்ள பாலியல் போன்றவற்றை மையப்படுத்திய படங்கள் எப்படி தணிக்கைத் துறையின் வெட்டு இல்லாமல் கடப்பது என்பதற்கான வரைவுகள் அவற்றில் இல்லை. மேலும், குலாபி ஆய்னா (ஒரு திருநங்கையின் சோக வாழ்வு), பிஷாகா தத்தாவின் பாலியல் தொழிலாளிகள் பற்றிய ஆவணப்படம் போன்றவை, அரசியல் படங்கள் முதலானவையும் தணிக்கைத் துறையின் வெட்டுகளிலிருந்து தப்ப முடிவதில்லை என்றும் இப்புத்தகம் கூறுகிறது.
இதற்கான மண்டல அலுவலகங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டவையாக இருப்பினும், கண்களுக்குப் புலப்படாத வகையில் ஆளும் கட்சியின் செல்வாக்குடனே உள்ளன என பௌமிக் தெளிவாகக் குறிப்பிடுகிறார். (உதாரணம், தணிக்கைத் தலைமையிலிருந்து அனுபம் கேர் நீக்கப்பட்டது)
மிகச் சிறிய அளவிலேயே தணிக்கைக் குழுவின் குறைகளைப் பற்றிப் பௌமிக் குறிப்பிட்டுள்ளார். உலகமயமாக்கலுக்கு உள்ளான இந்தியாவின் மீதுள்ள பற்றை வலியுறுத்தவே, இத்தவறுகளைத் தான் சுட்டிக்காட்டியதற்குக் காரணமாகச் சொல்கிறார் பௌமிக். மேலும், உலகமயமாக்கலின் நன்மைகளை அனுபவிக்கும் குடும்பங்களைப் பற்றிப் பேசுகையில், ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயை செலவழித்தால்தான் ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்றும், இதுவே இரண்டு தலைமுறைகளுக்கு முன் மிக மலிவாக இருந்தது என்றும் கூறுகிறார். சமூக வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் திரைப்படத் துறையில் இருந்து நடுத்தர வர்க்க குடும்பங்கள் விலகிப் போக இதுவே காரணமாக இருக்கிறது என்றும் கூறி முடிக்கிறார் ஆசிரியர் பௌமிக்.
அடிக்குறிப்புகள் :
1. Annette Kuhn, Censorship and Routledge, London, 1988
2. Anne Barron, The Legal Properties of Film, Modern Law Review, 67(2), 2004, 177-208
----------------------------------------------------------------------------------------
சினிமாவும் தணிக்கையும் : இந்திய அரசியல் கட்டுப்பாடுகள்
ஆசிரியர் : சோமேஷ்வர் பௌமிக்,
ஓரியண்ட் ப்ளாக் ஸ்வான்,
ஹைதராபாத், 2009
----------------------------------------------------------------------------------------
The Politics of Control in India by Someswar Bhowmik. Orient BlackSwan, Hyderabad, 2009.
----------------------------------------------------------------------------------------
இந்தியா- செமினார் இதழில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்.
நன்றி: http://www.india-seminar.com/2009/598/598_books.htm
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamoli |