என்றும் அழியா உண்மை
- ஆனந்த் பட்வர்தன் :: தமிழில்: யுகேந்தர் |
"பிரதமர் மோடி ஆட்சியில் தடை செய்யப்பட்ட முதல் ஆவணப்படம் என சுப்ரதீப் சக்ரவர்த்தி மற்றும் மீரா செளத்ரியின் "இந் தினோ முசாபர்நகர்" வரலாற்றில் பதிவு செய்யப்பட போகிறது. தடை உத்தரவு ஜுன் 30 அன்று வந்தது. எங்கள் அதிருப்தியை நிவர்த்தி செய்ய இன்று திரைப்படத் தணிக்கை முதன்மை தீர்ப்பாயத்தில் (FCAT) விண்ணப்பித்துள்ளோம். நாங்கள் போராடாமல் ஓயமாட்டோம்."
|
சுப்ரதீப் சக்கரவர்த்தி, அவரது மனைவி மீரா சௌத்ரி |
இதுவே சுப்ரதீப் ஃபேஸ்புக்கில் இறுதியாக பதிவிட்டிருந்த வார்த்தைகள். இந்தியாவின் துணிச்சாலான ஆவணப்பட படைப்பாளிகளில் ஒருவர். உணர்ச்சியற்ற தணிக்கை வாரியத்தின் அதிகாரதுவத்தை சகித்துக்கொண்டும், இழிந்த நிராகரிப்பு வலியினாலும், மூளை இரத்தக்கசிவு காரணமாக ஆகஸ்ட் 25 அன்று காலமானார். இந்தியாவின் அழுகிய தணிக்கை ஆட்சியின் காரணமாய் உயிரிழந்த முதல் மனிதராக சுப்ரதீப் அநேகமாக இருக்கலாம்.
"கோத்ரா தக்" என்கிற தன்னுடைய முதல் ஆவணப்படத்தை எடுத்த பின்னர் சுப்ரதீப்பை நான் 2002'இல் முதலில் சந்தித்தேன். அவர் பத்திரிக்கையாளராக இருந்தார், ஆனால் குஜராத் பயங்கரம் அவரை திரைப்படைப்பாளியாக மாற்றியது. 59 இந்து பயணிகளின் இறப்பிற்கு வழிவகுத்த தொடர் வண்டி எரிப்பு சம்பவத்தில் தனது கவனத்தை செலுத்தினார். கருகிய உடலை பொதுக் காட்சிக்கு அனுமதித்த குஜராத் அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்ட படுகொலைகள் தொடங்கிய போது வேறு திசை பார்த்துக்கொண்டிருந்தது. இஸ்லாமியர்கள் தொடர் வண்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்கள் என்ற வதந்தி பரவ ஆரம்பித்தது. இந்த கருத்தை கேள்வி கேட்கும் தடயவியல் ஆதாரங்கள் குறித்தும் திட்டமிட்டு இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரித்ததைக் குறித்தும் "கோத்ரா தக்" ஆவணப்படம் பேசுகிறது. குஜராத்திலும் மத்தியிலும் இருந்த பா.ஜ.க தலைமை அரசு "இஸ்லாமிய பயங்கரவாதம்" குஜராத்தில் வளர்கிறது என பிரகடனப் படுத்திய நிலையில், பல விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்தது. அந்த ஆண்டு "இஸ்லாமிய பயங்கரவாதிகள்" அக்ஷ்ர்தாம் கோவிலை துப்பாக்கியால் தாக்கினார்கள், அதில் பொது மக்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களுள் மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மே 2014'இல் இந்திய உச்ச நீதிமன்றம் ஆறு பேரையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்து, குஜராத் காவல்துறையின் போலியான விசாரனையை கண்டித்தது.
தொடர் மோதல் கொலைகள் (Encounter) குஜராத்தில் நடந்தது. சுப்ரதீப்பின் அடுத்த படமான "என்கவுன்டர்டு ஆன் ஏ சாஃபரன் அஜென்டா" [Encountered on a Saffron Agenda] தனித்தனியாக நடந்த நான்கு மோதல் கொலைகள் குறித்தது. மிகவும் மோசமானதான 2004'இல் நிகழ்ந்த இஷ்ரத் ஜெஹான் மற்றும் பிறரின் கொலை, 2005'இல் நிகழ்ந்த சோஹரபுதின் மற்றும் பிறரின் கொலை அதில் அடக்கம். ஒவ்வொரு வழக்கிலும், இறந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் நரேந்திர மோடியை கொல்லும் திட்டத்தில் இருந்தனர் என அதிகாரிகள் கூறினர். சுப்ரதீப்பின் மிகச்சிறந்த விசாரனை, ஒவ்வொரு மோதல் கொலையும் ஒரு இரக்கமற்ற படுகொலை என மிக விரிவான விவரத்துடன் அம்பலப்படுத்தியது. இன்று நீதிமனறங்கள் பெரும்பாலான இந்த மோதல் கொலைகள் குறித்து பெரிய கேள்வி எழுப்பியுள்ளது மற்றும் குற்றம் புரிந்த பலர் பல்வேறு காலத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், உயர் காவல் துறை அதிகாரி டி.ஜி.வன்சாரா மற்றும் மோடியின் வலது கையான அமித் ஷாவும் இதில் அடக்கம். மத்தியில் மோடி தலைமையேற்றுள்ள இந்த நிலையில், மோதல் கொலை குற்றவாளிகள் விடுதலையாகி கொண்டிருக்கும் வேளையில் போலி மோதல் கொலைகள் நடந்தது என சிலர் சந்தேகிக்கிறார்கள்.
ஜெய்ப்பூர் மற்றும் போபாலில் நடந்த திரையிடலுக்கு பின்பு, சுப்ரதீப் தாக்கப்பட்டார், தீவிர காயமின்றி மயிரிழையில் தப்பித்தார். திரையிடலை ஒருங்கினைத்தவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. ஆனால் சுப்ரதீப்பின் துணிச்சலும் உறுதியும் ஒரு போதும் குறையவில்லை. 2012'இல் இரண்டு முக்கியமான திரைப்படங்களை அவர் எடுத்தார். "அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட்" [Out of Court Settlement], உயிர்தியாகம் செய்த வழக்கறிஞர் ஷாஹித் அஸ்மி போன்ற மனித உரிமை பாதுகாவலர்களின் சோதனை நிறைந்த அனுபவங்கள் குறித்தது. "ஆஃப்டர் தி ஸ்டார்ம்" [ After the Storm], பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட, ஆனால் மன வேதனை மற்றும் களங்கத்தை எதிர்க்கொண்ட இளைஞர்கள் குறித்தது.
|
மும்பை விகால்ப், ப்ரித்வி திரையரங்கில் முசாபர்நகர் படம் திரையிடப்பட்டபோது, ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்ட இயக்குனர்களோடு... |
ஏப்ரல் 2014'இல், சுப்ரதீப் எடுத்துக்கொண்டிருந்த "இந் தினோ முசாபர்நகர்" படத்தை திரையிட விகல்ப்@பிரித்வி நிகழ்ச்சிக்கு நாங்கள் அவரை மும்பைக்கு அழைத்தோம். புதிதாக திருமணமானவர், அவரது மனைவி மற்றும் இணை இயக்குனரான மீரா செளத்ரி அவருடன் இருந்தார். இளவயதினர் காதலில் இருப்பது போல் அவர்கள் இருந்தனர் அந்த அன்பு எங்களை தொற்றிக்கொள்வது போல் இருந்தது. திரையிடலுக்கு பின் நடந்த கேள்வி பதில் நிகழ்வில், சரியான நேரத்தில் சரியான இடத்தில் கேமரா இருந்த அனைத்து தருணத்திற்கும் மீராவே காரணம் என்றார் சுப்ரதீப். "அவள் எப்போதெல்லாம் இருக்கிறாளோ, ஏதோவொன்று நடக்கிறது. அவள் என் அதிர்ஷ்ட அழகு." என்று புன்னகைத்தார்.
அவரது முந்தைய படைப்பிலிருந்து இந்த படம் அடுத்த முயற்சியாகும். உள்ளடக்கத்தில் எப்போதும் கவனமீர்க்கும் விதமாகவும், வடிவத்தில் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் கவர்ச்சியூட்டுவதாக இருக்காது, அதுவே என்னை ஈர்த்தது, "கலை"யை தேடுபவர்களுக்கு ஒருவேளை விருப்பமில்லாமல் போகலாம். இந்த திரைப்படத்தில், கேமரா மற்றும் ஒலியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த படம் சிக்கலானது, அட்டூழியங்கள் செய்த குற்றவாளிகளை மட்டும் காட்டவில்லை, போட்டி பூசல்களிடுகிற சமூகங்களிலிருக்கும் வகுப்புவாத வெறியை எதிர்த்த சாதாரண நபர்களையும் காட்டுகிறது. ஜாட் மற்றும் இஸ்லாமிய விவசாயிகள் தொழிற்சங்கங்களில் ஒன்றாக பணி புரிந்த வரலாறும் உண்டு. தவிர இந்த பகுதி தேசிய கலவர காலத்திலும் மத நல்லிணக்கத்தோடே இருந்தது. சுப்ரதீப்பின் மனைவி மீரா முசாபர்நகரை சேர்ந்த ஜாட், அது அவருக்கு அதிக வாய்ப்பையும் புரிதலையும் கொடுத்தது. அனைத்துக்கும் மேலாக, ஒரு கலவரத்தை ஆரம்பத்திலிருந்து எப்படி உருவாக்கலாம் என்ற கதையையும், மாக்கியவெல்லிய படை தனது வேலையை ஆரம்பித்த பின்பு அமைதியான அண்டையர் எப்படி பெரும் விரோதிகளாக மாறலாம் என்றும் இந்த படம் தெளிவாக பகுத்து காட்டுகிறது,
ஏப்ரல் 2014'இன் இறுதியில் நாங்கள் இந்த படத்தை பார்த்த போது, இதை மக்களிடத்தில் கொண்டு செல்வது மிகவும் கடினம் என எங்களுக்கு தெரியும். தேர்தல் நடைப்பெறவுள்ளது, வரக்கூடாதவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. "மதச்சார்ப்பின்மை" என்ற வார்த்தை கடும் தாக்குதலுக்கு அச்சு மற்றும் மின் ஊடகத்தில் ஏற்கனவே ஆட்பட்டு இருந்தது.
இந்தியாவை யார் ஆட்சி செய்தாலும், தணிக்கை முறை எப்போதும் கடினமாகவே இருக்கும். சில நேரங்களில் மிகவும் கடினமாக இருக்கும். 2002'இல் தே.ஜ.கூட்டனி ஆட்சியின் கீழ், நமது அணுசக்தி எதிர்ப்பு திரைப்படமான "வார் அன்ட் பீஸ்"க்கு [War and Peace] தணிக்கை வாரிய சான்றிதழ், நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு பிறகு வெற்றி பெரும் வரை மறுக்கப்பட்டது. "நாதுராம் கோட்சே காந்தியை சுடும் காட்சியை நீக்கு" என்பதே திரைப்படத்தின் முதல் வெட்டு கோரிக்கை. மோசாமானதை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு இது அதிர்ச்சியாக வந்தது. காந்தியை கொன்றது ஒரு பைத்தியக்காரன் என்று அந்த காலக்கட்டத்தில் வரலாற்று புத்தகங்கள் மீண்டும் எழுதப்பட்டது. வெட்டினை நியாப்படுத்தும் தணிக்கை வழிகாட்டுதல் 2(xii) "இன, மத அல்லது மற்ற குழுக்களை இகழ்வாக சித்தரிக்கும் காட்சிகள் அல்லது வார்த்தைகள் அனுமதிக்கக்கூடாது" என்பதாகும்.
"இந் தினோ முசாபர்நகர்" படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த தணிக்கை வாரிய உத்தரவை நாம் கவனமாக பார்த்தோமெனில், இந்த படத்தை விலக்கவும் இதே பிரிவை பயன்படுத்துகிறது. திரைப்படத் தணிக்கை முதன்மை தீர்ப்பாயத்தில் செய்த மேல் முறையீடு எந்த விசாரனையுமின்றி நிராகரிக்கப்பட்டது. "இந்த படம் ஒரு அரசியல் கட்சி (பாஜக) மற்றும் பெயர் குறிப்பிட்டு அதன் உயர்மட்ட தலைவர்களை குறித்த தீவிரமான விமர்சனத்தை கொண்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களுக்கு குறிப்பிட்ட கட்சியின் ஈடுபாடு இருப்பதான தோற்றத்தை கொடுக்க முனைகிறது." என்று அந்த உத்தரவு தெரிவிக்கிறது.
ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு நற்சான்றிதழ் வழங்காத அனைத்து புலானாய்வு இதழியலுக்கும் உடனே அவர்கள் தடை விதிக்கலாம்.
இவை இருண்ட நாட்கள் சுப்ரதீப், ஆனால் காலம் மாறும். ஒரு நாள் இந்த நாடு அதன் உண்மையான நாயகர்களை நினைவில் வைக்கும். அவர்களது குறுகிய சாதி அல்லது சமயத்திற்காக போராடாமல், உண்மைக்கும் மனிதத்திற்க்காக போராடியவர்கள் என்றும் இறக்கமாட்டார்கள்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamoli |