CBFC என்பது தணிக்கை வாரியமல்ல, சான்றிதழ் தரும் வாரியம் மட்டுமே...
சுயாதீன திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன் ஒரு நேர்காணல்.
"சமூகத்தின் மனசாட்சியைத் தொடர்ந்து தொந்தரவு செய்வது தான் கலையின் தலையாயப் பணி என்று நான் நம்புகிறேன். திரைப்படம், கவிதை என கலையின் எல்லா வடிவங்களும் “எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருக்கிறது” என்று நமக்கு சொல்லப்படும் போலியான அமைதியை கெடுக்கிற கலைஞனின் அரசியல் நடவடிக்கைகள் தாம்" - லீனா மணிமேகலை (பேசாமொழி 15-டிசம்பர்-2012)
கவிதை, கள செயல்பாடு, திரைப்படத் துறை என பல தளங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் லீனா மணிமேகலை, தன்னுடைய செங்கடல் திரைப்படத்திற்காக இந்தியத் தணிக்கை வாரியத்துடன் போராடி வெற்றிக்கண்டவர். தணிக்கை வாரியத்தின் பணி காட்சிகளை கத்தரிப்பதல்ல.. மாறாக அந்தத் திரைப்படத்தை எந்த வயதுடையவர் பார்க்க வேண்டும் என்கிற சான்றிதழை அளிப்பது மட்டுமே அந்த வாரியத்தின் பணி என்பதை திட்டவட்டமாக கூறுகிறார். இந்தியாவில் பெண்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்படும் பாலியல் வன்முறையை முன்வைத்து, புதிதாக ஒரு ஆவணப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். போராட்டங்கள், பயணங்கள், படைப்புகள் என ஒரு நாளின் 24 மணிநேரம் சுற்றி சுழன்று வரும் லீனாவிடம் கிடைத்த சிறிது நேரத்தில் பேசாமொழியின் தணிக்கை வாரிய சிறப்பிதழுக்காக சிறிது நேரம் பேசியதிலிருந்து:
தணிக்கை வாரியம் போன்ற அமைப்புகள் இந்தியாவிற்கு தேவை என்று நினைக்கிறீர்களா?
"தணிக்கை" வாரியம், "சான்றிதழ்" தரும் வாரியமாக மட்டும் செயல்படும் வகையில் எண்பதுகளின் இறுதியிலேயே சட்டரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு விட்டன. ஆனால் நடைமுறையில் தணிக்கை வாரியமாகவே CBFC செயல்பட்டு வருகிறது. அடிப்படையில் CBFC Censor Board அல்ல, Certification Board என்பதை படைப்பாளிகளும் பார்வையாளர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த நாடு சனநாயக நாடு தான் என்பது உண்மையெனில், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் Article 19 வழிகாட்டுதலின் படி படைப்பு/கருத்து/பேச்சு சுதந்திரத்திற்கு நாம் இந்நாட்டின் குடிமகன்களாக கடப்பாடுடையவர்கள் எனில், தணிக்கை வாரியத்திற்கு என்ன தேவை இருக்கிறது? படங்களுக்கான "வயது வந்தோர் பார்க்க கூடிய படம்", "பெற்றோரின் வழிகாட்டுதலின் பேரில் குழந்தைகள் பார்க்க கூடிய படம்" போன்ற "வகை சான்றிதழ்கள்" தரக்கூடிய நிறுவனமாக மட்டும் CBFC செயல்படுவது தான் சட்டப்படி சரி, நியாயம். அதில்லாமல் CBFC ஒரு அரசியல் சர்க்கஸ் கூடாரமாக, சந்தை சக்திகள் ஊழல் செய்யும் இடமாக உளுத்துப்போய் கிடப்பதற்கு முக்கிய காரணம், படைப்பாளிகளும் பார்வையாளர்களும் தங்கள் உரிமை குறித்த அறியாமையிலும், அலட்சியத்திலும் இருப்பது தான். படைப்பாளிகள் தங்கள் படைப்பை அரசியல்- சந்தை தலையீடுகள் இல்லாமல் பார்வையாளர்களிடம் சேர்க்கும் கடமையும் பார்வையாளர்கள் அரசியல்- சந்தை தலையீடுகள் இல்லாத படங்களை பார்க்கும் உரிமையும் அடங்கிய பிரச்சினை இது.
தணிக்கை வாரியம் போன்ற அமைப்புகள் இல்லையென்றால், இத்தனை கோடி மக்களுக்கு இடையே இருக்கும் நல்லுறவில் மோசமான எதிர்விளைவை திரைப்படங்கள் ஏற்படுத்திவிடாதா? சாதி, மதவாதிகளுக்கு அது சாதகமாக அமைந்துவிடும் அல்லவா?
18 வயதாகி விட்டால் யாருக்கு வோட்டு போடலாம், தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும், யாரை திருமணம் செய்துக்கொள்ளலாம், என்ன வேலை செய்யலாம் என்ற தேர்வுகளை முடிவுகளை செய்ய முடியுமென்றால், எந்தப் படம் பார்க்கலாம் என்பதை மட்டும் ஒருவரால் முடிவு செய்ய முடியாது என்று அரசாங்கம் நினைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. தியேட்டருக்குள் நுழைந்தவுடன் மட்டும் ஒருவர் முட்டாளாகி விட முடியாதல்லவா? மற்றபடி, சாதியை மதத்தை முன்னிறுத்தி, மக்களிடையே வெறுப்பு அரசியலைத் தூண்டி அதனால் அதிகாரத்தைப் பிடிக்கும் அரசியல் கட்சிகளின் கைப்பிள்ளையாக CBFC இருப்பது தான் ஆபத்து. நேர்மையில்லாத படைப்புகளை நிராகரிக்கும் அறிவுடன் மக்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகள் நியமிக்கும் வாரிய உறுப்பினர்கள் மக்களுக்காக யோசித்து, அவர்களை அழிவு சக்திகளில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்று சற்று நினைத்துப்பாருங்கள், அது எவ்வளவு அபத்தம் என்பது உங்களுக்குப் புரியும்.
படைப்புகளை மட்டுப்படுத்தும் அல்லது படைப்பாளிகளின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அமைப்பாகத்தான் சென்சார் அமைப்பை பார்க்கிறீர்களா?
ஏன், மக்களை சிந்திக்க தெரியாத முட்டாள்களாக நினைத்துக்கொள்ளும் அமைப்பாகவும் பார்க்கலாம். அதிகாரம் தன் கோவணம் அவிழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வைத்திருக்கும் கண்காணிப்பு எந்திரமாகவும் பார்க்கலாம். மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கும் இடமாகவும் பார்க்கலாம்.
சென்சார் போன்ற அமைப்புகள்தான் படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதுகாக்கிறது என்று பரவலான ஒரு கருத்து உள்ளது. உதாரணமாக சென்சார் ஒரு படத்திற்கு சான்றிதழ் அளித்துவிட்டால், அந்தத் திரைப்படத்திற்கு இனக்குழுக்களுக்கிடையே எதிர்ப்பு வந்தாலும், அரசு உரிய பாதுகாப்பு கொடுத்து அந்த திரைப்படத்தை திரையிட ஏற்பாடு செய்யவேண்டும் என்கிற விதி இருக்கிறது. இந்த விதி படைப்பாளிகளுக்கு சாதகமானதுதானே?
CBFC சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு படத்தை மாநில அரசாங்கங்கள் தடை செய்திருக்கிறது. குஜராத், தமிழ்நாடு இன்னும் பல உதாரணங்கள் சொல்லலாம். அது யாருக்கு சாதகமானது? CBFC சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு, சில குழுக்கள் பிரச்சினை செய்கிறார்கள், மிரட்டுகிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை தூக்கியிருக்கிறார்கள். அது யாருக்கு சாதகமானது? அதிகாரம் தன் முன் படைப்பாளி எப்போதும் கைகட்டி நிற்க வேண்டும் என்று தான் நினைக்கும். அப்படி நிற்க தேவையில்லை என்று நம்பும் படைப்பாளிகள் கடும் போராட்டங்களை சந்தித்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாறு முழுவதும் சான்றுகள் நிறைந்துள்ளன.
சமீபத்தில் வெளியான ஐ திரைப்படத்தில் திருநங்கைகள் பற்றி வெளியான காட்சி, சமூகத்தில் நடந்துக்கொண்டுதானே இருக்கிறது. அதைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம் என்று படைப்பாளிகளும், திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் வைத்து பார்க்க முடியாது, அந்த ஒட்டுமொத்த படத்தையும் பார்த்து, அந்தக் குறிப்பிட்ட காட்சி தேவையில்லை என்றால் மட்டுமே நீக்க முடியும் என்று தணிக்கை வாரிய அதிகார்களும் கூறுகிறார்கள். சமூகத்தில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கும்போது இதுப் போன்ற எதிர்ப்புகள் வருவது நியாயமா?
அதே படத்தில் பெண்ணினத்தையும் மிக கேவலமாக சித்தரித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பெண்ணை இழிவுபடுத்தும் குற்றச்சாட்டில் இருந்து வெளியான, வெளியாகும் ஒரு படம் கூட தப்ப முடியாது. பாலின சமத்துவம் போன்ற விஷயங்கள், பரந்துபட்ட விவாதங்களாலும், விட்டுக்கொடுத்தல் இல்லாத விமர்சன மரபாலும், சினிமா ரசனை வளர்ப்பாலும், கல்வியாலும், விழிப்புணர்வாலும் தான் சாத்தியப்படுத்த முடியும். தடையாலும், தணிக்கையாலும் அல்ல.
உங்கள் படங்களில் குறிப்பாக செங்கடல் படத்திற்கு தணிக்கை வாரியத்துடன் நிறையவே போராடியிருக்கிறீர்கள்?
நடந்தது என்ன? இந்த பிரச்சனையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர முடியுமா?
நமது தமிழ்ச் சூழலில் மாற்றுச் சினிமாவுக்கான அத்தனை பாதைகளும் மூடப்பட்டே கிடக்கின்றன. அரசோ அல்லது வேறு நிறுவனங்களோ மாற்றுச் சினிமாக்களையும் அரசியல் சினிமாக்களையும் விலக்கியே வைத்திருக்கிறார்கள். முடிந்த போதெல்லாம் இவ்வாறான மாற்றுத் திரைப்பட முயற்சிகளை அவர்கள் பல்வேறு வழிகளிலும் முடக்கவே முயல்கிறார்கள். இந்த அவலமான சூழலுக்குள் இருந்துதான் செங்கடல் திரைப்படம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டு உருவாக்கப்பட்டது. செங்கடல் மிக நேரடியாகவே இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களைக் குறித்தும் தமிழகத்திலிருக்கும் ஈழத்து அகதிகள் குறித்தும் பேசுகிறது. இப்படத்தில் மீனவர்களும் அகதிகளுமே நடித்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பு வேலைகளிலும் அவர்கள் உணர்வுபூர்வமாக பங்கெடுத்துக் கொண்டார்கள். அந்த வகையில் செங்கடல் மக்கள் பங்கேற்புச் சினிமா. அதனாலேயே அப்படம் பேசும் மொழி நாகரீகமற்றது (unparliamentary) என்று CBFC படத்தை தடை செய்தது. மேலும் இப்படம் இந்திய இலங்கை அரசுகளை நேரடியாக விமர்சிப்பதாகவும், அதனால் இந்திய இலங்கை நல்லுறவு பாதிக்கப்படும் என்றும் காரணங்கள் சொல்லப்பட்டு மாநிலத் தணிக்கைக் குழுவால் முடக்கப்பட்டது. பிறகு revision, appellate tribunal, reexamining committee என ஓடி ஓடி ஒரு வருடம் வரை நீண்டு சென்ற சட்டப் போராட்த்திற்கு பின்பாக செங்கடலுக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
|
அரசாங்க தணிக்கையை எதிர்த்து போராட சட்டம் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இருக்கிறது. ஆனால் extra constitutional censorship என சொல்லப்படும் தணிக்கை மிக கொடூரமானது. காற்றில் திசை தெரியாமல் நாலா பக்கமும் வாள் சுழற்றுவது போன்ற சிக்கல் அது. படத்தைப் பார்க்காமேலேயே பொய் பிரச்சாரங்கள், வதந்திகள் மூலம் தடை கோரும் mob censorship மூலம் மிக மோசமாக தாக்குதலையும் படம் சந்தித்தது. படத்தை எடுத்தவர் என்ற முறையில் நானும் சந்தித்தேன். ஒருவகையில் நல்ல அனுபவம். I see all this experience as social sampling. ஐம்பது சர்வதேச திரைப்பட விழாக்கள் தாண்டி மக்கள் பங்கேற்பு விநியோக முறை மூலம் உலகமெங்கும் எடுத்து செல்லப்பட்ட செங்கடல், தணிக்கையின் எல்லா நுண் அலகுகளையும் கண்ணுக்கு கண்ணாக பார்த்த, எதிர்த்த படம் என்று சொன்னால் அது மிகையாகாது.
தணிக்கை வாரிய மத்திய அதிகாரி லீலா சம்சன் சமீபத்தில் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அரசின் தலையீடு இருப்பதால்தான் அவர் பணி விலகினார் என்று சொல்லப்படுகிறதே?
அரசியலில் ஆட்சி மாற்றம் நடக்கும்போதெல்லாம் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள்,
ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள், தலைமை பொறுப்புகளில் உள்ள முக்கிய அரசு நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள். அதில் ஒன்று தான் CBFC நிர்வாகமும்.
லீலா சாம்சன் அவர்களும், அவரின் மொத்த டீமும் பணி விலகியது, CBFC என்ற நிறுவனம் எல்லா வகையிலும் அரசியல் தலையீடும், ஊழலும் நிறைந்த நிறுவனம் என்பதற்கான மற்றுமொரு சாட்சியம்.
இப்போது நியமிக்கப்பட்டிருப்பவர் "ஹர ஹர மோடி" என்ற பிரசார வீடியோ எடுத்த பஹ்லஜ் நிஹலானி. இன்னும் ஒரு ஐந்து வருடம் "தணிக்கை வாரியம்" காவி சேனைகளின் கைவசம்.
இந்த ஊரில் தான் நாமும் படைப்பாளியாக வாழ வேண்டியிருக்கிறது என்பதை நினைத்தால் சில நேரம் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.
கும்பல் தணிக்கை (Mob Censor) குறித்து?
சமூகத்திற்கு பிடித்த நோய். வேறென்ன சொல்வது. மக்கள் முட்டாள்கள், அவர்களுக்காக நாங்கள் சிந்திக்கிறோம், முடிவெடுக்கிறோம் என அரசாங்கம் நினைத்தாலும் தவறு தான், fringe groups நினைத்தாலும் தவறு தான். அரசாங்கம் கையில் CBFC. கும்பல்களின் கையில் அடாவடி. எங்கள் உணர்வுகளை புண்படுத்திவிட்டார்கள் என்ற ஆயுதத்தை ஆளாளுக்கு கையில் எடுத்தால், படைப்பாவது, சுதந்திரமாவது. பாசிசத்திற்கு தலையை கொடுத்து விட்டு வெறும் பிண்டமாக வாழ வேண்டியது தான்.
இன்னமும் தணிக்கை வாரியம் பின்பற்றும் U U/A, A சான்றிதழ்களுக்கான விதிமுறைகள் குறித்து ஒரு படைப்பாளியாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
விதிமுறைகளாவது ஒண்ணாவது. செங்கடலுக்கு A கொடுத்தார்கள். அப்படியென்றால், தற்கொலை செய்துக்கொள் என்று சொல்லாமல் சொல்வது போல தான். A வைத்திருந்தால் தியேட்டர்களும் வாங்குவதற்கு மறுக்கும். தொலைக்காட்சி உரிமையும் விற்காது. விநியோக வாய்ப்புகளை முற்றிலுமாக ஒழிக்க A சான்றிதழ் போதும். செங்கடல் அரசியல் பேசியதால் அது A படமாம். நான் அதை மறுபடி எடுத்துக்கொண்டு ஆனந்த் பட்வர்த்தன் போல சுப்ரீம் கோர்ட் போக வேண்டும். அல்லது சில சூட்கேஸ்கள் கைமாற்ற வேண்டும். இரண்டுக்கும் எனக்கு பலமில்லை. போதும் போராட்டம், அடுத்த படத்திற்கு உயிரை சற்று தக்கவைத்து கொள்வோம் என விட்டுவிட்டேன். U U/A, A சான்றிதழ் வியாபாரம் மற்றொரு சூதாட்டம். அரசியல், சந்தை ஆகிய இரண்டு சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து இந்திய சினிமாவை பிரிக்காவிட்டால், உலக சினிமா வரலாற்றில் இடம்பெறும் வகையில், பேர் சொல்லும்படியாக ஒரு சினிமாவை கூட நாம் படைத்துவிட முடியாது. அல்லது, முற்றிலுமாக வேரோடு பிடுங்கி கொண்டு, இந்திய மற்றும் பிரதேச சந்தையை மறுதலித்து இப்பிரபஞ்சத்துக்கான சினிமாவை யோசித்து, எடுத்து, இன்டர்நெட்டில் விநியோகித்து என்று வேறொரு பாதையை தேர்தெடுக்க வேண்டும்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamoli |