பலியாகும் தணிக்கை வாரியம்.. பலி கேட்கும் அரசு எந்திரங்கள்..
திரைப்படத் தணிக்கை வாரிய முன்னாள் தலைவர் லீலா சாம்சன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
- தமிழில்: யுகேந்தர் | நன்றி: லீனா மணிமேகலை |
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் பதவியிலிருந்து விலகியதற்கான சரியான காரணம் என்ன?
பல காரணங்கள் உள்ளன. ஆனால் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கு [CBFC] மதிப்பளிக்காமையும், அதில் அடுத்தடுத்த அரசாங்கங்களின் செயல்பாடுகளும் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடுகளுமே மிக அடிப்படையான காரணம்.
தணிக்கை வாரியம் எப்போதும் ஆளும் கட்சியின் அழுத்தத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகவே இருந்து வந்துள்ளது. பா.ஜ.க'வின் தலையீடு புதிய நிகழ்வா?
இல்லை. 'தன்னாட்சி' என்று அழைக்கும் நிறுவனங்களை நல்ல காரணங்களுக்காக அரசு அமைக்கிறது. ஆனால் அவர்கள் அந்த அமைப்பை மேம்படுத்த, வசதிகளை மேம்படுத்த, பணி ஆட்கள் சேர்க்க தேவையான நிதியை வழங்காமல் அதை நசுக்கவும் முடியும். 'நாட்டின் நலனுக்காக' என்று மேற்கோள் காட்டி எங்கள் குறுக்கீடு முக்கியம் என மேலும் அவர்கள் விருப்பத்திற்க்கேற்ப தலையிடவும் முடியும், முன்னர் புகைப்பிடிப்பது குறித்து குறுக்கீடு செய்தார்கள், தற்போது ஆபாச வார்த்தைகள் குறித்து குறுக்கீடு செய்கிறார்கள்.
ஜனநாயக நாட்டில் தணிக்கை வாரியத்திற்கு உண்மையில் என்ன அர்த்தம்?
திரைப்பட படைப்பாளிகளே இதன் பங்குதாரர்கள். இந்த கேள்விக்கு பதில் காண முன்பு அமைக்கப்பட்ட செயற்குழுக்கள், இந்த அமைப்பை கலைத்து விடுவதே எங்கள் விருப்பம் என தெளிவாக கூறியுள்ளனர். ஆனால் 'வணிக' திரைப்பட படைப்பாளிகள், சான்றிதழ் மட்டுமே சட்டபூர்வமான தன்மைக்கொண்ட உண்மையான முத்திரை என்பதை காரணமாக கூறியதே இந்த குழு தொடர்ந்து இயங்குவதற்கான ஒரே காரணம். திரைப்பட படைப்பாளிகளின் மனப்பாங்கில் பிளவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்றினைந்து, இதிலிருந்து விடுதலை வேண்டும் என போராடினால், நிச்சயம் அது நடக்கும்.
குழு உறுப்பினர்களை தேர்வு செய்பவர் யார்? எப்படி இது செயல்படுகிறது?
குழு உறுப்பினர்களுக்கு திரைபப்டம் திரையிட்டு காட்டப்படும், இவர்களே அனைத்து மொழி திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிப்பவர்கள். தணிக்கை வாரிய தலைவரோ அல்லது வாரியமோ இவர்களை தேர்வு செய்வதில்லை. அவர்கள் பெரும்பாலும் கட்சியை சார்ந்தவர்கள், அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் நலன்களை காக்கவே உள்ளனர்.
'பிகே' திரைப்படம் எந்த வெட்டுமில்லாமல் வெளிவரும் போது, 'மெஸென்ஜர் ஆஃப் காட்' ஏன் கூடாது?
நான் ராஜிநாமா செய்தபோது, இரண்டு படங்களையும் நான் தணிக்கை செய்து அவற்றின் சான்றிதழை வழங்கியிருக்கவில்லை. அந்த இரண்டுத் திரைப்படங்களையும் நான் பார்த்திருக்கக்கூட இல்லை. அப்படங்களைப் பார்த்துத் தணிக்கை செய்தவர்கள் அரசினால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள். இவர்கள் சினிமாத்துறையாலும், ஆட்சியில் இருக்கும் கட்சியாலும் எளிதில் மனம் மாற்றப்படக்கூடியவர்களே. இவர்களில் பலரும் அமைச்சரவையுடன் தங்களது பல்வேறு தொடர்புகள் மூலம் இன்னும் தொடர்பில் இருப்பவர்களே. அதேபோல் தயாரிப்பாளர்களின் முகவர்கள் மூலம் பலரும் லஞ்சம் வாங்கியிருப்பவர்களே என்று தெரிகிறது.
என்னை பொறுத்தவரை, 'மெஸென்ஜர் ஆஃப் காட்' எந்தளவிற்கு வரவேற்கிறேனோ அதே அளவுக்கு பிகே'வையும் வரவேற்கிறேன். இரண்டையும் பார்க்க வேண்டும். வாரியத்தின் எந்த உறுப்பினரும் திரைப்படம் குறித்த மதிப்பு அல்லது தீர்ப்பு கொடுக்கும் நிலையில் இல்லை, தலைவராக எனது வேலையும் அது இல்லை. வாரியத்தில் இருக்கிற நாங்கள் அல்லது திரைப்படம் பார்க்கும் குழு உறுப்பினர்கள், சான்றிதழ் அளிக்கவுள்ள திரைப்படம் எங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அது ஒரு பொருட்டே இல்லை. எங்களிடம் சான்றிதழ் பெற மட்டுமே அப்படம் வருகிறது.
|
முரண்பாடான விஷயம் என்னவென்றால், குழு உறுப்பினர்கள் இந்த படங்களை பார்த்தனர், சான்றிதழ் குறித்தான தங்கள் தீர்ப்பினை கொடுத்தனர்; உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும் பயிற்சி கொடுக்கவும் வாய்ப்பு கொடுக்காமல் அல்லது அந்த திரைப்பட சான்றிதழ் சார்ந்து தலையீடு எதையுமே செய்யாமல், தலைவர் மற்றும் வாரியம் அந்த குழு உறுப்பினர்களின் தீர்ப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அமைச்சகத்திற்க்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் திரைப்படத்துறை மற்றும் திரைப் படைப்பாளிகளுக்காகவும் குத்துகளை வாங்கும் குத்துப் பையாகவே நாங்கள் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். வேறு யாரை அவர்கள் குற்றம் சொல்ல முடியும்?. மோசமான திரைப்படங்களை எடுத்த தயாரிப்பாளர்களை எப்போதும் குற்றம் சொல்லமாட்டார்கள். மேலும் தொடர்ந்து தலையிட்டு குறுக்கீடு செய்யும் அதிகாரிகள், தணிக்கை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் அமைச்சகத்தை குற்றம் சொல்லமாட்டார்கள்.
கொள்கை மற்றும் இது போன்ற பிற விஷயங்களை மட்டுமே வாரியம் பார்த்துக்கொள்கிறது. வாரியத்திற்கு எந்த பாத்திரமும் கிடையாது. அதை முற்றிலும் அகற்றிவிடலாம். அடிப்படையில் அமைச்சகமே அதிகாரிகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் பணி செய்யும் குழு உறுப்பினர்களை நியமிக்கிறது. அமைச்சகமே பொறுப்பேற்க வேண்டும்.
தணிக்கை வாரியம் போன்ற சர்ச்சைக்குரிய நிறுவனத்தில் தலைவராக இருந்ததின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ள முடியுமா?
முக்கியமான படிப்பினை காலம்.
தணிக்கை வாரியம் அலுவல் நடைமுறை கடுமை கொண்டதென்றும் உறவினர்களுக்கு தனி சலுகை காட்டும் கூடாரம் என்றும் விமர்சிக்கப்படுகிறது? இதற்கு உங்கள் பதில் என்ன?
அப்படியான ஒரு அமைப்பாக மாறவே ஒருவேளை உருவாக்கப்பட்டிருக்கலாம். இது போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன. சிலவற்றை நிறுத்த நாம் போராட வேண்டும். திரைப்படத்துறை வெளிப்படைத்தன்மையை கோருவதற்கு பதில் அவர்களின் சொந்த நன்மைக்காக அதை பொருட்படுத்தவில்லை. நானும் வாரியமும் வெளிப்படைத்தன்மைக்காகவே போராடிக்கொண்டிருந்தோம்.
"நடன கலைஞராக இருக்கும் தகுதியினால், தத்துவத்தால் நான் ஒரு இந்து". யூத தந்தைக்கும் கத்தோலிக்க கிறித்துவ தாய்க்கும் பிறந்த உங்களின் கருத்து இது. இந்துவாக இருந்துக்கொண்டு எப்படி நீங்கள் மதச்சார்பற்றவராக முடியும்?. இந்துவாக இருப்பதால் சாதிய கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
மதவெறியின் வழியாக மதத்தை புரிந்து கொள்ள முயல்பவர்கள் எப்போதும் அப்படியே செய்வார்கள். நான் இந்து வாழ்க்கை முறையை, அதன் தத்துவத்தை நம்புகிறேன். அதன் மதவெறியையோ அல்ல சாதி முறையையோ அல்ல. தத்துவத்தில், பல்வேறு தத்துவங்களை நம்ப எனக்கு சுதந்திரம் உண்டு. சாதியை விட இந்து மதம் மிக பெரியது. மனிதனால் கட்டமைக்கப்பட்டது சாதி, பிறப்பு தகுதியினால் தாங்கள் சில வழியில் உயர்ந்த மனிதர்கள் என நம்புபவர்களுக்கு அது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு கிடையாது.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamoli |