சென்னைத் திரைப்பட விழா
வூட்லேண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கட்டுடன் நேர்காணல்
- தினேஷ், அருண் (தமிழ் ஸ்டுடியோ) |
இருட்டறையில் திரைப்படத்தை பார்ப்பதைப் பின்னர் வெளிச்சத்தில் அதைப் பற்றிய விவாதிக்கும்போதுதான் நிறைய கலாச்சார, அரசியல் மாற்றங்கள் நிகழும். அதைத்தான் உலகம் முழுக்க திரைப்பட விழாக்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளில் இப்படியான விவாதங்கள் நிகழ ஒருவித கட்டமைப்பு தேவைப்படுகிறது. திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் மிகுந்த ஏழ்மையில் இருப்பவர்களும், திரைப்படங்களை மிக அதிகமாக நேசிக்கும் வர்க்க வேருபாடட்ட நபர்களும் ஓரிடத்தில் சந்திக்க வேண்டும். அந்த இடம் விவாதக் களமாக மாற வேண்டும். அப்படி ஒரு வெளியாக சென்னை வூட்லேண்ட்ஸ் திரையரங்கம் இருந்து வருகிறது. சென்னைத் திரைப்பட விழா நடக்கும் காலங்களில் வூட்லேண்ட்ஸ் திரையரங்கமே விழாக்குழுவினரின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக இந்த திரையரங்கை சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு கொடுத்து வருகிறார் அதன் உரிமையாளர் வெங்கட். பேசாமொழி இணைய இதழுக்காக அவருடன் உரையாடியதில் இருந்து.
வூட்லேண்ட்ஸ் திரையரங்கம் பற்றி?
1945லேயே எங்களுக்கான ஒரு தியேட்டர் உட்லேண்ட்ஸ் என்ற பெயரிலேயே மைசூரில் இருந்தது. 1945லிருந்தே சினிமா சம்பந்தமான தொழிலிலேயே இருக்கிறோம். சென்னையில் 1986லிருந்து திரையரங்க வியாபாரத்தை ஆரம்பித்தோம். சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை 2003ஆம் ஆண்டு பைலட் தியேட்டரில் திரையிட ஆரம்பித்தார்கள். பின்னர் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டில் ஆனந்த் தியேட்டரில் திரையிட்டார்கள். ஆனந்த் தியேட்டர் மூடப்பட்டவுடன் உட்லேண்ட்ஸ் திரையரங்கத்தில் திரையிடுகிறார்கள். அந்த வருடத்திலிருந்து தொடர்ந்து நாங்கள் ஒன்பது வருடங்களாக திரைப்பட விழாவிற்காக உட்லேண்ட்ஸ் திரையரங்கத்தை கொடுத்து வருகிறோம். திரைப்பட விழாவிற்கான சூழலைக் கொடுப்பதற்காக இரண்டு தியேட்டர்களையுமே (உட்லேண்ட்ஸ் மற்றும் சிம்பொனி) கொடுத்துவிடுகிறோம். இதனால் பொதுமக்கள் உள்ளே இருக்கமாட்டார்கள். உலக சினிமா பார்ப்பவர்கள் மட்டுமே இருப்பார்கள். சினிமா பற்றி மட்டுமே பேசுவார்கள். இது அவர்களுக்கு உன்னதமான மனநிலையைத் தரும்.
|
கோவாவில் நடைபெறுகின்ற திரைப்பட விழா முடிந்தவுடன் உடனடியாக சென்னைக்கு படங்கள் வருகிறது. இதனை பிற மாநிலங்கள் நடத்துகிற பெஸ்டிவல்களோடு ஒப்பிடுகிற பொழுது பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்கின்ற நோக்கில் தான் இங்கு I.C.F திரையிடல் நடத்துகின்றது. கர்நாடக அரசாங்கம் சார்பாக பெங்களூருவில் மூன்று கோடி வழங்கப்படுகிறது. மும்பைக்கு எட்டு கோடிகள், கல்கத்தாவில் ஐந்து கோடி கொடுக்கப்படுகிறது. கோவா அரசாங்கம் பதினைந்து கோடி கொடுக்கிறது. இதனுடன் ஒப்பிடுகின்ற பொழுது தமிழ்நாடு அரசாங்கம் ஐம்பது லட்சங்கள் தருகிறது.
தொடர்ந்து ஒன்பது வருடங்களாக திரைப்பட விழாவிற்கு உங்கள் திரையரங்கை கொடுப்பதற்கான நோக்கம்? அவற்றிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது?
உலகின் பல மூலைகளிலும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. நம் திரையரங்கில் அதற்கான வசதிகள் இன்னும் வரவில்லை. ஆனால், இத்தகைய திரைப்பட விழாக்களில் அப்படியான படங்கள் திரையிடுகிற பொழுது , அந்த தொழில்நுட்பங்களையும் இங்கு கொண்டுவர வேண்டி இருக்கிறது. அதி நவீன வசதிகள் இங்கு உடனடியாக கொண்டுவரப்படுகிறது. சில படங்கள் டி.வி.டிக்கள் வடிவிலேயே இங்கு ஒளிபரப்பப்படுகிறது. பிற நாட்டினரின் கலாச்சாரங்கள் மட்டுமல்ல, அவர்களின் தொழில்நுட்பங்களையும் நாம் அறிந்துகொள்ள இதுதான் வாயில்.
பாலச்சந்தர் இதுவரை 101 படங்கள் எடுத்திருக்கிறார் என்றால் அவரது 25க்கும் மேற்பட்ட படங்களின் ரீல்கள் இப்போது இல்லை. அது ஆனால், டி.வி.டிக்களின் வடிவில் இருக்கிறது. நாம் அவரது படங்களை திரையிட வேண்டுமானால் டி.வி.டிக்களை ப்ளூ ரே(Blu-ray)க்களாக மாற்றி திரையிடலாம். இந்த மாதிரியான வழிமுறையும் உலக நாடுகளில் நடந்து வருகின்றது என்பதற்கான ஆதாரங்களை இந்த திரைப்பட விழாக்கள் எங்களுக்கு மெய்ப்பிக்கின்றன. பின்னொரு நாளில் நாங்கள் பாலச்சந்தரின் படங்கள் திரையிடுவதென்றால் இதே வழிமுறைகளை பின்பற்றி துல்லியமான ப்ரொஜக்ஷன் கொண்டுவர இயலும். அறிவை வாங்கிக்கொள்ளவும் , பிறருக்கு கொடுக்கவும் இந்த விழா வாய்ப்பாக அமைகின்றது.
இந்த முறை ஒரு படத்தில் (The Circle (Switzerland)) தொடர்ந்து ஒலி வந்துகொண்டே இருந்தது. படத்தின் பிரச்சனையால் படம் பார்ப்பதற்கு குறுக்கீடாக இருந்தது. நீங்கள் முன்பு குறிப்பிட்ட படத்தில் ஒலியளவு குறிக்கீடாக இருந்ததாகவும், அதனால் பார்வையாளர்கள் இதன் காரணம் கேட்டும், சரிசெய்யச்சொல்லியும் திரையரங்க நிர்வாகத்தினரிடம் தகாத முறையில் சண்டையிட்ட காரணத்தினால்தான் , அந்தப் படத்தை மாற்றாமலும், ஒலி சரிசெய்யப்படாமலேயே திரையிடப்பட்டதாக வருகிற புகார் குறித்து?
அதற்கு அடுத்த படம் திரையிட்டோம் (Nymphomaniac) அதில் எந்த குறைபாடும் வரவில்லை. நீங்கள் சொல்கிற படமே ( The circle) ஒலிக்குறுக்கீடோடுதான் வந்தது. அந்தப்படங்கள் எல்லாமே One time screening அடிப்படையில் தான் இங்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறை திரையிடவும் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பின்னர் தான் அவர்கள் பாஸ்வேர்டு தருகிறார்கள். ஆக, நீங்கள் படத்தை மாற்றி இரண்டாவது முறை திரையிடுகிற பொழுது அதே பாஸ்வார்டில் அப்படம் இருக்காது. இரண்டாம் முறை திரையிடலுக்கு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, பின்னர் அவர்களுக்கு பணம் கொடுத்த பின்புதான் பாஸ்வேர்டு அனுப்புவார்கள். ஆக, ஒரு படம் நம் கைக்கு வந்திருக்கிறது, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது போல நடக்காது.
அப்படியெனில் ஒவ்வொரு படத்தையும் திரையிடலுக்கு முன்பே சோதித்துப் பார்க்க முடியாதா?
முழுப்படத்தையும் பார்க்க முடியாது. தொழில்நுட்ப விஷயங்கள் சரியாக இருக்கிறதா, அல்லது ஒலி சரியான முறையில் வெளிப்படுகிறதா, துணை உரைகள் சரியாக பொருந்தி வருகின்றதா என்பதைப் பார்க்கலாம். சில சமயங்களில் சோதித்துப் பார்க்கையில் சரியாக இருக்கும், அதனையே திரையரங்கில் கொடுக்கிற பொழுது சில பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இப்படி சில பிரச்சனைகள் இருக்கிறது.
சில படங்கள் வெவ்வேறு திரைப்பட விழாக்களுக்குச் சென்றுவரும். கோவாவிற்குச் செல்லும், கோவாவிலிருந்து கேரளாவிற்கும் பின்னர் அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்படி மாறி மாறி படங்கள் திரையிடப்படும். அவர்கள் கொடுக்கிற படங்கள் சிலசமயங்களில் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு உள்ளாகும். நீங்கள் சொல்கிற படம் மட்டும் இப்படிச் சிக்கலுக்கு உள்ளானது. பின்னர் அதனையும் நாங்கள் முறைப்படி அறிவித்துவிட்டுத்தான் படத்தை தொடங்குவோம். மாற்றமுடியாத, அல்லது தீர்க்க முடியாத சிக்கல் வருகின்றபொழுது மட்டும் அப்படத்தை அப்படியே திரையிட வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. எத்தனை முறை முயன்றாலும், இதுபோல் ஒன்றிரண்டு படங்கள் சோதனையாக வந்துவிடுகின்றன.
திரைப்பட விழாக்களில் பல்வேறு சூழ்நிலைகளை நீங்கள் சந்தித்திருக்க கூடும், அப்படி நீங்கள் இன்னமும் மனதில் வைத்திருக்கும் ஒரு நிகழ்வு?
ஒரு முறை அமிதாப் பச்சன் இங்கு வந்திருந்தார். I.C.Fக்காக பதினொரு லட்சங்கள் கொடுத்தார். அந்தப்பணத்தை அவர்கள் Fixed Depositல் வைத்து, அதில் வருகிற வட்டிப்பணத்தைக் கொண்டு Best Youth Icon விருது என்ற ஒன்றை உருவாக்கி அதனை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கு வழங்கி வருகிறார்கள். சென்ற முறை அனிருத் இதனைப் பெற்றிருந்தார். இந்த வருடம் கார்த்திக் சுப்புராஜீக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த முறை ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார், மற்றும் வருண் ஆகியோர் பணம் கொடுத்து உதவினார்கள். சினிமாவில் இருப்பவர்களே கூட மக்கள் அனைவரும் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பண உதவி செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய விஷயம். பெருமைபடக்கூடியது.
நீங்கள் மற்ற திரைப்பட விழாக்களுக்குச் செல்கிற பழக்கம் உள்ளதா?
கோவாவிற்குச் செல்கிறேன். Film Federation of Indiaவில் நானும் உறுப்பினர் என்பதால்தான் அவ்விழாவிற்குச் செல்வது வழக்கம். இங்கேயே எல்லா படங்களும் வந்துவிடுகின்ற காரணத்தினால் சென்னையிலேயே முடிந்தவரை எல்லா படங்களையும் பார்த்துக்கொள்கிறேன். ஒரு படம் பார்க்கிற செலவை இங்கு கணக்கிட்டுப் பார்த்தால் சென்னைதான் சிறந்த முறையில் செயல்படுகிறது. முந்நூறு ரூபாய் பணம் கொடுத்துவிட்டு முப்பது படங்கள் என்றால் ஒரு படத்திற்கு ஆகிற செலவு பத்து ரூபாய் மட்டுமே. பார்வையாளர்களுக்கு சென்னை திரைப்பட விழாதான் சிறந்தது.
கோவாவில் நடக்கிற ஃப்லிம் பெஸ்டிவலுக்கும், சென்னையில் நடக்கிற ஃபிலிம் பெஸ்டிவலுக்கும் இடையேயான வித்தியாசங்களாக நீங்கள் கருதுவது?
கோவாவில் கட்டுப்பாடான கூட்டம் தான் படம் பார்க்கிறது. ஒரு படம் பார்ப்பதற்கு முன்பே அதற்கான நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் என்னதான் பிரத்யேக பாஸ் வைத்திருந்தாலும் அடுத்த நாள் படம் பார்ப்பதற்கு உங்களுக்கு அனுமதி வேண்டும். அங்கு 14000 பேர் அந்த பாஸ் வைத்திருப்பார்கள். ஆனால், படம் பார்ப்பதற்கு மொத்த திரையரங்கையும் எடுத்துக்கொண்டால் கூட 2000 பேர் பார்க்க முடியும். ஒரு படம் பார்க்க காலையிலிருந்தே வரிசையில் நின்று பார்ப்பவர்களும் உண்டு. சென்னையில் அப்படி கிடையாது. கோவாவில் ஒரு தியேட்டரில் 130 இருக்கைகள் என்றால்கூட என்னதான் நல்ல படங்கள் என்றாலும், அந்தக்குறிப்பிட்ட இருக்கைகளுக்கான பார்வையாளர்கள் வந்தவுடன் அடுத்தவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். இங்கு அந்த மாதிரியான கட்டுப்பாடுகள் இல்லை.
அங்கு படம் துவங்கிய பதினைந்து நிமிடத்திற்குப் பின்பாக பார்வையாளர்கள் வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதியில்லை. ஆனால், இங்கு படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே கதவைத் திறப்பதும், உள்ளே வருவதும், செல்வதுமாக இருக்கிறார்கள். இது படம் பார்க்கிறவர்களுக்கு இடையூறுகளாக இருக்கும். இதனை பார்வையாளர்கள் தான் உணர வேண்டும்.
கோவாவில் என்ன மாதிரியான நடைமுறைகள் பாராட்டுதலுக்கு உரியவைகளாக இருக்கிறது?
கோவாவை, சென்னையுடன் ஒப்பிட்டால் கோவாவில் தான் குறைகள் அதிகமாக இருக்கிறது. படம் திரையிடுகிற இடத்திலிருந்து இரண்டு கி.மீ தள்ளிதான் வாகனத்தை நிறுத்துவதற்கான இடமே இருக்கிறது. அங்கிருந்து படம் பார்க்க நடந்து வரவேண்டும். பின்னர் குறைவான இருக்கை எண்ணிக்கை உள்ள திரையரங்கங்கள் தான் கோவாவில் உள்ளன. சென்னையில் அப்படி கிடையாது. பின்னர் முக்கியமாக கோவாவில் நல்ல படங்களைக் கூட மீண்டும் திரையிட மாட்டார்கள். ஆனால், சென்னையில் நல்ல படங்களை திரும்பவும் திரையிடுகிறார்கள். இதெல்லாம் சென்னை திரைப்பட விழாவின் நிறைகள். கோவாவில் காலையில் ஒரு படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லையென்றால் அந்தப் படம் மீண்டும் பார்க்க இயலாது.
உட்லேண்ட்ஸ் திரையரங்கத்தில் 1100 இருக்கைகள் உள்ளது. பார்வையாளர்கள் நிறைந்ததோடுதான் திரையிடப்படுகிறது.
பல நாடுகளிலிருந்தும் உலகப்படங்கள் திரையிடப்படுகிறது. அவர்கள் படங்களின் கதைகள் நம் கமர்ஷியல் படங்கள் போல வேகமாக இருக்காது. மெதுமெதுவாகத்தான் கதைக்குள் பார்வையாளர்களை இழுத்துச்செல்வார்கள். படம் பார்ப்பவர்கள் முதல் பத்து நிமிடங்களிலேயே இந்தப்படம் தேறாது என்ற முடிவிற்கு வந்து திரையரங்கை விட்டு வெளியே செல்கின்றனர். அந்தப் படங்களை பார்க்கின்ற பொறுமை இங்கு குறிப்பிட்ட பார்வையாளர்களிடையே இல்லை. நாங்களும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். செல்போன் பேச வேண்டாம், படத்தின் இடையில் யாரும் எழுந்து வெளியேச்செல்ல வேண்டாம் என்றெல்லாம் சொல்லி வருகிறோம். ஆனாலும், யாரும் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. மேலும் அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் திரையரங்க உறுப்பினர்கள் தலையிட மாட்டார்கள். Volunteersதான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நாங்கள் எங்கள் அரங்கை அவர்கள் திரைபடத்திற்கு கொடுக்கிறோம். படம் போடுகிறோம். படத்தின் இறுதியில் ஏதேனும் தடங்கல்கள் வந்தால் மட்டுமே நாங்கள் தலையிடுகிறோம். இதுவரை அப்படியான பெரிய தடங்கல்கள் ஏதும் வரவில்லை.
தமிழ்சினிமாவில் பார்த்தீர்களேயானால் பாட்டு வந்துவிட்டால் தியேட்டரை விட்டு வெளியே வந்துவிடுவார்கள். ஆகையால் எந்த நேரத்தில் பார்வையாளர்கள் வெளியே வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், இங்கு குறிப்பிட்ட பத்து நிமிட இடைவேளையில் ஒவ்வொரு திரையரங்கிலும் படம் திரையிடுவதால் முதல் பத்து நிமிடம் பார்த்து விட்டு படத்தின் கதை என்ன என்று கூட சரியாகத்தெரியாமல் இன்னொரு திரையரங்கத்தில் திரையிடப்படுகிற படம் பார்க்கச் சென்றுவிடுகின்றனர். நாங்களும் இதனையெல்லாம் உணர்ந்துதான் திரையரங்க வாயிலில் எழுதிக்கூட வைத்திருக்கிறோம். மக்கள் அதனையும் பார்க்கிறார்கள். இருப்பினும் தியேட்டரினுள் உள்ளே வருவதும், வெளியே போவதுமாகத்தான் இருக்கிறார்கள். கோவாவில் இது அதிகமாக நடப்பதில்லை.
இங்கு இருப்பவர்களுக்கும் சினிமாவைப் போற்றுகின்ற பக்குவம் வரவேண்டும்.
இந்த முறை மட்டும் I.C.F பணப்பற்றாக்குறையின் காரணமாக செமினார் போன்றவைகளைத் தவிர்த்துவிட்டார்கள். செமினார்க்கென ஒரு நபரை இங்கு அழைத்து வரவேண்டுமானால் அவர் வந்துபோகின்ற செலவே லட்சங்களைத்தாண்டுகிறது , அதனால் இந்த முறை நடத்தவில்லை. கர்நாடகா அரசாங்கம் கூட பெங்களூர் திரைப்பட விழாவிற்காக மூன்று கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால், நம் தமிழ்நாடு அரசாங்கம் ஐம்பது லட்சத்திலேயே நிற்கிறது, இன்னமும் கொஞ்சம் அதிகப்படுத்தினால் நன்றாகயிருக்கும். அதே சமயம் பார்வையாளர்களும் இதனைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். மொத்தம் எட்டு நாட்கள் இந்த பிலிம் பெஸ்டிவல் நடைபெறுகிறது. ஒரு நாளில் ஐந்து படங்கள், மொத்தம் எட்டு நாட்களுக்கு நாற்பது படங்கள் பார்க்க கூடும். அவர்கள் அதிகபட்சமாக செலுத்தக்கூடிய தொகை 500 ரூபாய் மட்டுமே. ஒரு படத்திற்கு பத்து ரூபாய் கட்டணம். இன்றைய நாளில் வெளியில் சென்று குடிக்கிற தேநீர் கூட பத்து ரூபாயில் விற்கிறது. ஐ.சி.எஃப் கூட அடுத்த முறையிலிருந்து இந்த கட்டணத்தை உயர்த்தலாமா என்ற யோசனையில் இருந்து வருகிறார்கள். மேலும் யூரோவும், டாலரும் நாளுக்கு நாள் மதிப்பில் உயர்ந்து வருகிறது. அவர்கள் ஒருமுறை படம் திரையிட கொடுக்க வேண்டிய தொகையும் அதிகமாக இருக்கிறது. இதனையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உட்லேண்ட்ஸ் திரையரங்கத்தில் (திரைப்பட விழாவின் போது) திரையிடுகின்ற படங்களைப் பார்க்க வருகின்ற பார்வையாளர்களை நீங்கள் கவனித்திருப்பதுண்டு. அவர்கள் எவ்விதமான படங்கள் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்?
சிலர் படத்தில் செக்ஸ் காட்சிகள் இருந்தால் பொறுமையாகப் பார்க்கிறார்கள். அந்தப்படங்களைப் பார்க்க நன்றாக விசாரித்துவிட்டு வருகிறார்கள். இருபது சதவீதமானவர்கள் இது மாதிரியான படம் பார்க்கத்தான் பெஸ்டிவல்களுக்கு வருகிறார்கள். மீதி 40 சதவீதமானவர்கள் கல்லூரி மாணவர்கள். வெளியிலிருந்து படம் பார்ப்பவர்கள் இருபது சதவீதமானவர்கள் இருப்பார்கள். பின்னர் திரைப்படச்சங்கத்தின் உறுப்பினர்கள், வி.ஐ.பிக்கள் என்றெல்லாம் சேர்ந்துதான் திரைப்பட விழாக்களுக்கு வருகின்றனர்.
இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் திரில்லர் வகையைத் தவிர்த்து Family Dramaக்களாகத்தான் திரையிட்டோம். அவர்கள் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளவும் இந்த மாதிரியான படங்கள் உதவுகின்றன. ரசிகர்களும் அதனை புரிந்துகொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து படம் பார்க்கின்றார்கள். Winter sleep என்கிற படம் மூன்று மணி நேரங்கள் கடந்து ஓடக்கூடிய படம். அது கான் திரைப்பட விழாவில் விருது வாங்கியிருந்த படம். அப்படத்தை உட்லேண்ட் திரையரங்கில் திரையிடுகிற பொழுது, இடைவேளை ஏதும் தரவில்லை. இருப்பினும் மக்கள் அதனை ரசித்து பொறுமையாக பார்த்தனர்.
உங்கள் திரையரங்கில் தமிழ் படங்கள் திரையிடுவதில்லை, இதனை நீங்கள் முடிவெடுப்பதா அல்லது திரைப்படச் சங்க உறுப்பினர்களே இதுமாதிரியாகத்தான் படங்களை உங்களுக்கு கொடுக்கிறார்களா?
நாங்கள் எந்த அடிப்படையிலும் படங்களை தேர்ந்தெடுப்பது கிடையாது. I.C.F உறுப்பினர்களே திரையிட வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். குறிப்பாக சந்தானம் என்பவர் இவற்றைக் கவனித்துக்கொள்கிறார்.
அவர்கள் கொடுக்கிற படங்களைத்தான் நாங்கள் திரையிடுகிறோம். சென்ற வருட திரைப்பட விழாவில் படங்கள் திரையிடுகிற பொழுது என்னவிதமான பிரச்சனைகள் வந்தது, அதனை இந்த வருடம் எப்படி நிவர்த்தி செய்யமுடியும்., என்றெல்லாம் ஆலோசனைகள் அவர்களுக்குக் கொடுப்போம். கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் பெரும்பாலான குறைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. உலகின் பல மூலைகளிலும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளது. அதனை இங்குள்ளவர்களைக் கொண்டு அந்த தொழில்நுட்ப விஷயங்களை அறிந்துகொள்கிறோம். அவர்கள் திடீரென Operating System மாற்றிவிடுவார்கள். நாங்கள் இங்கு வேறொரு OS வைத்திருப்போம். பின்னர் இரவோடு இரவாக அந்த OSக்கிற்கு படத்தை மாற்றி திரைப்படம் ஓடுகிறதா என்று சோதித்துப்பார்ப்போம்.
இப்படியும் சிலசமயங்களில் Subtitle வேலை செய்யாமல் போய்விடும். பின்னர் இணையத்தின் வாயிலாக அதனை தரவிறக்கம் செய்து ஒளிபரப்புவோம். எங்களுக்கு பக்கத்திலேயே பாலாஜி நகரில் real image நிறுவனம் இருக்கிறது. அவர்கள் இந்த தொழில்நுட்ப விஷயத்தில் எங்களுக்கு உதவிசெய்து வருகிறார்கள்.
திரைப்பட விழா துவக்க நாளின் பொழுதிலிருந்தும், அல்லது அதற்கு முன்பாகவும் திரையரங்கத்தினர்களின் தரப்பில் உங்கள் வேலை என்னவாக இருக்கிறது?
பெரும்பாலும் படங்களைத் தேர்ந்தெடுத்து இன்னின்ன படங்கள் இன்ன திரையரங்கத்தில் திரையிடலாம் என்ற விபரங்களை திரைப்படச் சங்க உறுப்பினர்களே முடிவெடுத்து விடுகிறார்கள். படங்களின் லிஸ்ட் தான் எங்கள் கைகளுக்கு கிடைக்கும். மேலும் visual communication மாணவர்களை Volunteers ஆக எடுத்துக்கொள்வார்கள். காரணம் அவர்கள் தான் ஒரு ஈடுபாட்டுடன் நிர்வாகத்தினை மேற்கொள்கிறார்கள். என்ன மாதிரியான கதை உலகப்படங்களில் கையாளப்படுகிறது, தொழில்நுட்பங்கள் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் கவனிக்கிற ஆர்வம் அந்த மாணவர்களுக்குத்தான் இருக்கும். ஆகையால் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாற்பதிலிருந்து ஐம்பது வரையிலும் தன்னார்வலர்கள் திரைப்பட விழாக்களில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.
I.C.F வருடம் முழுவதும் படங்கள் பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே அவர்களுக்கு என்னென்ன படங்கள் திரையிட வேண்டும் என்ற விபரங்கள் தெரியும், ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கான் திரைப்பட விழா தான் அவர்களின் முக்கிய இலக்கு. அங்கு சென்று ஒவ்வொரு படமாகப் பார்த்து அங்கிருந்து நல்ல படங்களாக இங்கு திரையிடுகிறார்கள்.
படம் திரையிடுவதற்கு முன்பாக அவர்கள் எங்களின் சர்வர் எண்ணையெல்லாம் கேட்பார்கள். உதாரணமாக உட்லேண்ட்ஸ் திரையரங்கில் இந்தப்படம் திரையிடப்படும் என்று ஒரு படத்தை குறித்துவைத்துக்கொண்டால், அந்தப் படம் அந்த திரையரங்கில் மட்டும் தான் திரையிட முடியும். உட்லேண்ட்ஸில் திரையிடவேண்டிய படத்தை சிம்பொனி தியேட்டரில் திரையிட்டால் கூட அது ஓடாது. சில சமயங்களில் சர்வர் எண் சரியாக இருந்தாலும் படம் ஓடாமல் போய்விடும். அந்த மாதிரியான நேரங்களில் யார் படம் அனுப்பினார்களோ அவர்களிடம் அழைத்துப் பேசலாம். படம் துருக்கியிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தால், அவர்கள் பேசுகிற மொழி நமக்கும் புரியாது. எனவே நாங்கள் அந்த மாதிரியான சமயங்கள் ரியல் இமேஜ் நிறுவனத்தை உதவிக்கு அழைக்கிறோம். சில சமயங்களில் அந்தப்படங்கள் Hard disc-ல் இருக்கும். கொஞ்சம் கீழே தவறவிட்டுவிட்டால் கூட அது உடைந்துவிடும் அபாயம் உண்டு. ஆகவே ஒரு இதயத்தை கையில் ஏந்தி வருவது போல அதனைக் கொண்டு வரவேண்டும். சில படங்கள் குறுந்தகடுகளாக வரும். சில நாட்டில் hard disc இல்லை. அவர்கள் DVDக்களில் அனுப்பி வைக்கிறார்கள். உஸ்பெகிஸ்தானில் Hard Disc கிடையாது.
அமெரிக்கப்படங்கள் வருவதில்லை. இந்த முறை மேக்ஸ்முல்லர் பவன் ஏற்பாட்டில் பழைய திரையரங்கங்களின் புகைப்படங்களை கண்காட்சிக்கு வைத்திருக்கிறோம். அதனையும் மக்கள் ஆவலாக பார்த்துச்செல்கிறார்கள்.
உங்கள் திரையரங்கை இன்னும் மேம்படுத்த திட்டமுள்ளதா?
ஏற்கனவே எங்கள் திரையரங்கம் நல்ல வசதிகளுடன் தான் இருக்கிறது. அண்மையில் கூட இருபது லட்சம் செலவில் சிம்பொனி தியேட்டரில் 2k projection செய்திருக்கிறோம். இதுவரையிலும் 2k க்கு மேல் எந்த ப்ரொஜக்டரும் வரவில்லை. நீங்கள் இன்னொன்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது வருகின்ற தமிழ்படங்களை வைத்து தியேட்டரில் வருமானவே வருவதில்லை. அனைத்து தியேட்டர்களும் நஷ்டத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறது. படங்கள் தான் அதிகமாக வந்துகொண்டிருக்கிறதே தவிர, அதற்கு தகுந்த திரையரங்கங்கள் கிடையாது. வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து படங்கள் வருகிறது. வருடத்திற்கு 260 படங்கள் வெளியாகிறது. 400 திரைகள் உள்ளது. எப்படி அனைத்து திரைப்படங்களையும் திரையிட முடியும். அடுத்த வாரமே இன்னொரு படத்திற்காக முந்தைய படத்தை நீக்கிவிடுவோம்.
சென்னையிலேயே எடுத்துக்கொண்டால் கூட மிகுந்த வசூல் செய்து, ஹிட் ஆன படத்தைக்கூட பத்து லட்சம் பேர்தான் பார்த்திருப்பார்கள். ஒரு மாதத்தில் தமிழ்நாடு முழுவதுமே எடுத்துக்கொண்டால் மூன்று கோடி பேர்தான் படம் பார்க்கிறார்கள். இது புள்ளி விவரம் சொல்கிறது. மீதிப்பேர் திருட்டு டி.வி.டிக்களை நம்புகின்றனர்.
திரையரங்க நிர்வாகத்தில் வேறென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்கள்?
பைலட் போன்ற ஒரு திரை உள்ள திரையரங்கங்கள் மூடப்பட்டு வருகின்றன. 2006ல் தான் திரைப்படத்திற்கான கட்டணத்தொகையை விதித்தார்கள். அப்போது மின் கட்டணம் 1.50 பைசாவாக இருந்தது. இப்போது பத்து ரூபாயாக உள்ளது. அப்போது வேலையாளுக்கு சம்பளமாக 3500 கொடுத்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இன்றைக்கோ குறைந்தது பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்தாக வேண்டும். ஆனால், நாங்கள் மட்டும் இன்றைக்கும் 2006ல் விதித்த கட்டணத்தொகையையே பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. டிக்கெட் விலையை ஏற்ற முடியாது. அரசாங்கமும் எந்த மானியமும் தருவதில்லை.
நாங்கள் எங்கள் தரப்பில் முறையிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த முறையீடுகளையெல்லாம் வாங்கிவைத்துக்கொள்கிறார்களே தவிர எந்த பதிலும் வரவில்லை.
மல்டிப்ளக்ஸ் மாதிரியான இரண்டு திரையரங்குகளுக்கு அதிகமானவைகளுக்கு வேறுபட்ட கட்டண விதிமுறைகள் உள்ளது. நாங்கள் இரண்டு தியேட்டர்கள் வைத்திருக்கிறோம். 95 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், ஒரு தியேட்டர் (Single Screen) மட்டும் வைத்திருப்பவர்கள் 50 ரூபாயைத் தாண்டக்கூடாது. இது அரசாங்க விதிமுறையில் இருக்கிறது.
2004ல் மட்டும் 2265 திரையரங்கங்கள் செயல்பாட்டுடன் இருந்தது. 2014ல் 995 திரையரங்கங்கள்தான் உள்ளது. இதில் மூடப்பட்டுள்ள 1200 திரையரங்குகளில் 800க்கும் அதிகமானவைகள் Single screen திரையரங்குகள்தான். மின் கட்டணம் பத்து மடங்கு உயர்ந்திருக்கிறது. கேளிக்கை வரி 15% லிருந்து 30%ஆக உயர்ந்திருக்கிறது. டிக்கெட் கட்டணம் மட்டும் உயரவில்லை. இப்படியான நடைமுறை இருக்கையில் யாரும் நஷ்டத்திற்கு படம் போட விரும்புவதில்லை. செலவுகள் அதிகமாகிறது, டிக்கெட்டுகளிலிருந்து வருகிற வருமானம் குறைகிறது.
படங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் கூட 2004ல் 116படங்கள் வந்திருக்கிறது. சென்ற வருடம் 265 படங்கள் வெளியாகியுள்ளது. இனி யாரும் திரையரங்க தொழிலுக்கு வர முன் வர மாட்டார்கள். இப்படியான சூழலில் உட்லேண்ட்ஸ் திரையரங்கில் அட்மாஸ் ஒலி அமைப்பைக் கொண்டுவந்தால் எனக்கு 40 லட்சங்கள் செலவாகிறது. அப்படியானால், எனக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது. அட்மாஸ் (Atmos) என்றால் எப்படியும் 45 ஸ்பீக்கர்கள் போட வேண்டும். நீங்கள் அட்மாஸ் ஒலி வசதி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் கட்டணமாக பத்து ரூபாய் உயர்த்திக்கொள்ளலாம் என்று அரசாங்கம் அனுமதி தந்தால் நாங்கள் தைரியமாக முதலீடு செய்ய தயாராக இருப்போம். திரும்பிவராத தொகையை எதற்காக முதலீடு செய்ய வேண்டும்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi |