இதழ்: 27     மார்கழி (January 01 - 15), 2015
   
 
  உள்ளடக்கம்
   
திரைப்பட விழா அனுபவங்கள் : கலை – சந்தை – அரசியல் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
சென்னைத் திரைப்பட விழா - தங்கராஜ் நேர்காணல் - தினேஷ், அருண் (தமிழ் ஸ்டுடியோ)
--------------------------------
வூட்லேண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கட்டுடன் நேர்காணல் - தினேஷ், அருண் (தமிழ் ஸ்டுடியோ)
--------------------------------
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - அனுபவங்கள் - படிமை மாணவர்கள் (தமிழ் ஸ்டுடியோ)
--------------------------------
கேரளத் திரைப்பட விழா - அனுபவங்கள் - வைஷ்ணவ் சங்கீத்
--------------------------------
பெங்களூரு திரைப்பட விழா - அனுபவங்கள் - 'கருந்தேள்' ராஜேஷ்
--------------------------------
கோவா - திரைப்பட விழா - அனுபவங்கள் - உலக சினிமா ரசிகன்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 10 - தினேஷ் குமார்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா - தினேஷ் குமார்
--------------------------------
 
   
 


   

 

 

சென்னைத் திரைப்பட விழா

தங்கராஜ் நேர்காணல்

- தினேஷ், அருண் (தமிழ் ஸ்டுடியோ)

2003 ஆண்டு தொடங்கப்பட்ட ICAF (Indo Cine Appreciation Foundation) என்கிற ப்லிம் சொசைட்டியின் செயலாளரும், சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் நிறுவனருமான தங்கராஜ் அவர்களை பேசாமொழி இணைய இதழுக்கு நேர்காணல் செய்தோம். சுமார் 500 உறுப்பினர்களுடன், ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று திரைப்பட விழாக்களை இந்த அமைப்பு நடத்துகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் திரைப்படங்களை குறுந்தகடுகளாக வாங்கி அதனை ICAF இன் உறுப்பினர்களுக்கு காண்பிக்கிறார்கள். இங்குள்ள திரைப்பட துறையைச் சார்ந்தவர்கள் வெளிநாட்டு திரைப்படங்களின் தொழில் நுணுக்கங்களைப் படித்து நன்கறிந்து தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதுதான் இதன் முழுமையான நோக்கம் என்கிறார் தங்கராஜ். எளிமையாகவும், இளைஞர்களை (வயதில் மூப்படைந்திருந்தாலும் இன்னமும் பலர் இங்கே சுறுசுறுப்பாக வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள்) வைத்து வேலை வாங்கிக்கொண்டும் இருந்த தங்கராஜிடம் பேசியதில் இருந்து கிடைத்த தகவல்களையும் இங்கே படிக்கக் கொடுத்திருக்கிறோம்.

உங்களைப் பற்றி? எப்படி திரைப்படங்களின் மேல் காதல் வந்தது?

என் பெயர் தங்கராஜ். வயது 74. நான் ரிசர்வ் பேங்கில் சாதாரண கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்து, அதற்குப்பின்பாக படிப்படியாக பணியில் உயர்ந்து officer பதவியுடன் பணி ஓய்வு பெற்றேன். அப்பொழுது நானும் எனது நண்பர்களும் இணைந்து அண்மையில் மறைந்த திரு. பாலச்சந்தர் அவர்களுடைய ’எதிர் நீச்சல்’ , ’நீர்க்குமிழி’ போன்ற நாடகங்களை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி கலா மண்டபத்தில், இரண்டு ரூபாய், கட்டணத்தில் டிராமாவாக பார்ப்போம். முக்கியமாக எதிர் நீச்சல் படத்திலும் நடித்த ’செளகார் ஜானகி’ அப்போதும் டிராமாவிலும் நடித்துக்கொண்டிருப்பார்.

அவர்களின் காதில் வைரத்தில் தோடு போட்டிருப்பார்கள். அங்கு வைரம் தனியாக தெரியவேண்டுமென்பதற்காக வெளிச்சத்தையெல்லாம் அணைத்துவிட்டு அதனை காண்பிப்பார்கள். அந்தக்காலத்தில் இதற்கெல்லாம் நாங்கள் கைதட்டி சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தோம். அப்போது பேசிக்கொண்டிருந்த பொழுது நாம் ஏன் ஒரு ஃப்லிம் சொசைட்டி ஆரம்பிக்க கூடாது, என்ற யோசனையில் நண்பர்களெல்லாம் ஒன்று சேர்ந்தோம், பின்னர் ஒரு ஃபிலிம் சொசைட்டி ஆரம்பித்து நாங்களும் அதிலெல்லாம் உறுப்பினர்களாகச் சேர்ந்தோம். அதற்கு Indo cine appreciation forum என்ற பெயரில் 1977ல் அந்த ஃபிலிம் சொசைட்டி ஆரம்பித்தார்கள். அதில் நான் உறுப்பினர் ஆனேன். கொஞ்ச நாட்களுக்கு அதில் வேலை பார்த்து வந்தேன். பின்பு Federation of film society என்பதன் தலையமையகம் கல்கத்தாவில் இருக்கிறது. அதனுடைய கிளை ஒன்று சென்னையில் இருந்தது. அதில் எனக்கு ஆபீஸில் ஒரு வேலையும் கொடுத்தார்கள். பின்பு அஸிஸ்டண்ட் செகரட்டரி, ரீஜன் செகரட்டரி ஆனேன்.

அந்தப் பதவியை வகித்துக்கொண்டிருக்கும்பொழுது ஒவ்வொரு ஆண்டும், டெல்லிக்குச் சென்று எல்லா வெளிநாட்டுத் தூதரகங்களிலும் நாங்கள் படங்கள் கேட்டு, வாங்கி வருவோம். முப்பதுக்கும் மேற்பட்ட ப்லிம் சொசைட்டிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இயங்கி வந்தன, அவைகளுக்கெல்லாம் படங்கள் கொடுத்து வந்தோம்.

அதற்குப் பின்பாக federation office மாற்றலாகி, ஹைதராபாத்திற்குப் போனார்கள். நானும் ரிசர்வ் பேங்கிலிருந்து 2001ல் ஓய்வு பெற்றேன். இந்த I.C.Fல் 200 உறுப்பினர்களாகயிருந்தவர்கள், ஒரு கட்டத்தில் ஆயிரம் உறுப்பினர்களாக ஆனார்கள். அப்போது ஞாயிறு காலையில் அபிராமி, அல்லது ஃபைலட் தியேட்டரில் முதல் படம் திரையிடப்படும். காலை 8:30 என்பதால் இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் ஓடி வந்து படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நானும் அதில் ஒருவன். அது மாதிரியான வெளிநாடுகளிலிருந்து தரம் வாய்ந்த படங்களை இந்த மக்களுக்கு திரையிட்டுக் கான்பிப்பதுதான் எங்கள் நோக்கம், இதில் நல்ல வெற்றியும் கிடைத்தது. அதற்குப் பின்பாக சாட்டிலைட் தொலைக்காட்சி வந்தவுடன், ஃபிலிம் சொசைட்டியின் நடவடிக்கைகள் குறைந்துபோயின. ஆக , 2001 பிலிம் சொசைட்டியை மூடி விடலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள். இந்தச்சூழலில் நான் டெல்லிக்குப் போய் வந்தேன்.

அப்போது அங்கு ஹங்கேரியன் பேக்கேஜ் கொடுத்தார்கள். நவம்பர் 30ல் நான் ரிடையர்டு ஆனேன். டிசம்பரில் டெல்லிக்குச் சென்றேன். அங்கு கொடுக்கப்பட்ட பேக்கேஜ்ஜை என் உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காண்பித்தேன். நல்ல வரவேற்பும் இருந்தது. 2002ல் என்.எஃப்.டி.சி ஸ்பெஷல் காட்சி ஒன்று நடத்தித்தருமாறு என்னிடம் கேட்டார்கள். நாங்களும் சரி என்று சொல்லி அவர்களோடு சேர்ந்து நடத்திக்கொடுத்தோம். அப்போது ஹேம மாலினிதான் Chair person of NFDC. அவர்கள் தான் அந்த விழாவை துவக்கி வைத்தார்கள். ஜனவரியில் எங்கள் சொசைட்டியைப் பற்றி நல்ல பெயர் பொதுமக்கள் மத்தியில் உண்டாயிற்று. அச்சமயத்தில் எங்களின் I.C.F ன் சில்வர் ஜீப்ளியைக் கொண்டாடுகின்ற வேளையில், விழாவில் கமலஹாசன் பேசுகையில், ”இச்சங்கத்தில் 222 உறுப்பினர்கள் இருந்தால் நான் 223 ஆவது உறுப்பினராகச் சேர்ந்துகொள்கிறேன்.

இதுதான் திரைப்பட வளர்ச்சிக்கு உதவும், நாங்களெல்லாம் இந்த திரைப்படங்களைப்பார்த்துதான் வளர்ந்தோம்” என்றெல்லாம் அருமையாக உத்வேகமளிக்கும் வண்ணம் பேசினார். எதிர்பாரா விதமாக தலைவராக இருந்த ராஜ கோபாலன் இறந்துவிட்டார். வருமான வரித்துறையில் இருந்த மொகபத்ரா பின்பு தலைவரானார். அவர்தான் இச்சங்கத்தை விரிவுபடுத்தலாம் என்ற யோசனையைக் கூறினார்.

பின்னர் சில தொழில்நுட்ப தவறுகளின் காரணமாக, இது பாதிக்கப்பட்டு, 2003ல் Indo Cine Appreciation Foundation என்ற புது சொசைட்டி ஒன்றினை ஆரம்பித்து பதிவு செய்தோம். அப்போது தலைவர் சொன்னார், ”ஏன் நீங்கள் மாதா மாதம் திரையிடுவதற்குப் பதிலாக ஒன்றாக ஒரே விழாவாக மொத்தமாக நல்ல படங்களைத் திரையிடக்கூடாது” என்று கேட்டார். நானும் ’தாராளமாக நடத்த முடியும்’ என்று கூறினேன்.

’அப்படியெனில் நான் அதற்கு என்ன செய்ய வேண்டும்’, என்று கேட்டார், ’நீங்கள் பணம் கொடுங்கள் நான் படங்களைக் கொண்டு வருகிறேன்’, என்றும் கூறினேன். அந்த ஆண்டில் பத்து லட்சம் ரூபாய் தொகை கிடைத்தது, அதில் ஹீண்டாய் நிறுவனம் ஏழு லட்சம் கொடுத்தது, நல்லி குப்புசாமி 2 லட்சம் கொடுத்தார், ரிஜிஸ்ட்ரேஷனிலிருந்து ஒரு லட்சம் வந்தது, திரைப்பட விழாவிற்கு ஆன மொத்த செலவு 5 லட்சம், மீதி 5 லட்ச ரூபாயைக் கொண்டுதான் இந்த அலுவலகத்தை வாங்கினோம். இந்த அலுவலகம் ஃப்லிம் சொசைட்டியின் பெயரில் தான் உள்ளது.

என் வீட்டிலும் இதற்கு எந்தப்பிரச்சனையும் வராது, சொல்லப்போனால் எனக்கு நான்கு குழந்தைகள் எட்டு பேரப்பிள்ளைகள். எனக்கு ரிசர்வ் பேங்கிலிருந்து இன்றைக்கும் பென்ஷன் தொகை வருகிறது. ஆகையால் எனது முழுநேரத்தையும் இந்த ஃபிலிம் சொசைட்டிக்கு கொடுப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை உண்மையாகவே பெருமையாகச் சொல்லப்போனால் அம்மா அவர்களின் ஆசீர்வாதம் தான்.

ஏனெனில் அவர்கள் 2011ல் முதலில் 50 லட்சம் கொடுக்கின்ற பொழுது எங்களை அழைத்துக் கேட்டார்கள்., இந்த காசோலையை யார் கையில் கொடுப்பது? என்று, ”எல்லாமே இவர் தான் பார்த்துக்கொள்கிறார், ஆகையால் தங்கராஜ் கையில் கொடுங்கள்” என்று சரத்குமார் சொன்னார். ஆகையால், அம்மா என்கையில் காசோலையை கொடுத்துவிட்டு, உட்கார்ந்து பேசினார்கள். பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள், அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும்,? என்று கேட்டார்கள். எங்களுக்கு படங்களை திரையிட தியேட்டர் ஒன்று வேண்டும் என்று கேட்கையில், அதனை அரசாங்கமே கட்டிக்கொடுக்க வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கும் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். அரசாங்கம் 61 கோடு ரூபாய் செலவு செய்து அரங்க வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆக அந்த வசதியும் எங்களுக்கு கிடைக்கின்ற பொழுது இன்னமும் நன்றாக திரைப்பட விழா பேசப்படும்.

இங்கு வேலை செய்கின்ற யாருக்கும் சம்பளம் கிடையாது, நான் மதிய சாப்பாட்டை எடுத்து வந்துவிடுகிறேன், இப்படித்தான் நாங்கள் வேலை செய்துவருகிறோம். காரும் என் சொந்தமான கார். ஆக, எங்களின் முழு நோக்கம், ஃபிலிம் சொசைட்டி நன்றாக வளர்ந்து அத்தோடில்லாமல், தரம் வாய்ந்த படங்களை தொழில் நுணுக்கம் நிறைந்த படங்களை , இங்குள்ள தமிழ்நாட்டு மக்களும், முக்கியமாக சென்னையில் உள்ளவர்களும், பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதில் சந்தோஷப்படவேண்டிய இன்னொரு விஷயம் பாண்டிச்சேரி, இன்ன பிற தமிழ்நாட்டிலிருக்கின்ற மாவட்டங்களிலிருந்தும் படம் பார்க்க சென்னைக்குத்தான் வருகிறோம். எல்லோரும் படம் பார்த்துவிட்டு பிரம்மாதமாகயிருப்பதாகச் சொல்லிச்செல்கிறார்கள்.

12வது சென்னை சர்வதேச திரைப்பட விவா துவக்க நாளின் பொழுது இயக்குனர் மகேந்திரன் சொன்னார், ”நீங்கள் ஏன் சென்னையில் மட்டும் படம் போடுகிறீர்கள், ஏன் வெளியூரில் போடக்கூடாது?” என்று கேட்டார். இதனை செயற்படுத்திக்காட்ட ஏற்கனவே முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். கோயம்புத்தூரில் திரையிட முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே கோவையில் மாதாந்திர திரையிடல் நடந்து வருகிறது. ஈரோப்பியன் திரை விழா ஏறத்தாழ மூன்று வருடங்களாக நடத்தி வருகிறேன். இதேபோல முதலில் கோவையில், பின்பு திருச்சி, மதுரை என 170 படங்கள் போட முடியாவிட்டாலும், சிறிது படங்களாவது திரையிட முயற்சி செய்து வருகிறேன். இதற்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் இருந்தால் இதனை அழகாக செய்து முடித்துவிடுவேன்.

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பற்றி?

ஒவ்வொரு மாதமும் டிசம்பர் மாதத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழா, நடத்துகிறோம். கடந்த 2003ஆம் ஆண்டு தான் இவ்விழாவினை ஆரம்பித்தோம். முதன் முதலாக ஆரம்பிக்கின்ற பொழுது இரண்டே திரையரங்கம் 17 நாடுகளைச் சார்ந்த 63 படங்களைத் திரையிட்டோம். அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து இந்த ஆண்டு (2014) சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளிலிருந்து 171 படங்கள் திரையிடுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். உலகம் முழுதும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவினைப் பற்றி நன்று அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. அனைவருக்கும் நாங்கள் நடத்துகிற இத்திரையிடலைப் பற்றியும் தெரிகிறது. அதுவும் கருத்து ரீதியாக நல்ல திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் சென்னை சர்வதேச திரைப்பட சங்கத்தினர் என்ற பெயர் எங்களுக்கிருக்கிறது.

இதற்கெல்லாம் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த மக்கள் முதல்வர் அம்மா அவர்களுடைய நல்ல ஆசியுடனும், நல்ல ஆதரவுடனும் நாங்கள் இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறோம். தமிழக அரசின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழக அரசின் சார்பில் மானியத்தொகை கிடைக்கிறது. மூன்று ஆண்டு காலமாக ஐம்பது லட்சம் ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் கொடுத்திருக்கிறார்கள். இதுமட்டுமின்றி திரைப்படத்துறையில் இருக்கின்ற திரு.சரத்குமார், திருமதி. சுஹாசினி மணிரத்னம், திருமதி. ரேவதி போன்றோர்களெல்லாம் எங்களுக்கு ஆதரவு கொடுத்து இந்த விழா மென்மேலும் வளர்வதற்கு உதவி செய்து வருகிறார்கள்.

12வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் படங்கள் பார்ப்பதற்காக இந்த ஆண்டு மூவாயிரம் பேர் பதிவுசெய்துள்ளார்கள். அதுமட்டுமின்றி 2000 பேருக்கு Guest pass என மொத்தம் 5000 பேர்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து திரையரங்குகளில் ஒவ்வொரு நாளும் ஐந்து படங்கள் திரையிட்டு எல்லோரும் நன்றாக பாராட்டுகின்ற அளவிற்கு தரமான படங்களைக் கொடுத்திருக்கிறோம். இது மென்மேலும் வளர்வதற்கு திரைப்பட ரசிகர்களின் ஆதரவும் , அரசாங்கத்தின் ஆதரவும் இருந்தால் போதும். மற்றுமொரு சந்தோஷமான செய்தி என்னவெனில், தமிழக அரசு எங்களின் வேண்டுகோளை ஏற்று, 61 கோடி ரூபாயில் 4 புதிய கலையரங்கங்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இந்த ஜீன் மாதம் கட்டி முடித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படி வந்தால், அம்மாவின் திருக்கரத்தால் அந்த திரையரங்கை திறந்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இது மாதிரியான ஆதரவுகள் அரசாங்கத்தினரிடமிருந்து வந்தால் உலக அளவில் சென்னை திரைப்பட விழாதான் சிறந்தது என்ற பெயர் வாங்க வாய்ப்பாக அமையும்.

இந்த ஃபெஸ்டிவலுக்காக என்றிலிருந்து எவ்வளவு பேர் வேலை செய்கிறீர்கள்?

தை 1 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்ற எங்கள் குலதெய்வத்தை வழிபடுவதற்காகச் செல்வேன், அன்றிலிருந்து இந்த சென்னை திரைப்பட விழாவிற்கான வேலைகளைத் தொடங்கிவிடுவேன். ஜனவரியில் ஆரம்பித்து டிசம்பர் வரை இந்த வேலைகள் நடக்கும். அதாவது கடந்த ஆண்டு சில படங்களைக் கேட்டிருப்போம், கொடுக்கமுடியாது என்று சொல்லியிருப்பார்கள். அவர்களிடம் மீண்டும் கேட்க ஆரம்பித்துவிடுவேன். பின்னர் மார்ச் மாதம் டெல்லிக்குச் செல்வேன். தூதரகத்தைப் பார்த்து டிசம்பரில் எங்களுக்கு பெஸ்டிவல் வருகிறது நீங்கள்தான் எங்களுக்கு படம் கொடுக்க வேண்டும் என்ற விவரத்தைச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். மாதாந்திர திரையிடலுக்காக படம் வாங்குவேன். அதேசமயம் சென்னை திரைப்பட விழாவில் திரையிடவும் படம் கேட்பேன்.

மே மாதம் ப்ரான்ஸில் நடைபெறுகின்ற கான் திரைப்பட விழாவிற்குச் சென்று ஸ்க்ரீனர்ஸ் வாங்கிவந்துவிடுவேன். இதற்கிடையில் ஈரானிலேயோ , பெர்னிலுக்கோ சென்று அங்கு ஸ்க்ரீனர்ஸ் கிடைத்தால் அதனையும் வாங்கிவந்து, அதனையெல்லாம் மே மாத இறுதியிலிருந்து எங்கள் கமிட்டி பார்க்க ஆரம்பிக்கும். கமிட்டி உறுப்பினர்களெல்லாம் விவாதித்து ஜீன், ஜீலை வாக்கில் திரையிடப்போகும் படங்களை உறுதி செய்துவிடுவோம். செப்டம்பரில் அந்தந்த படங்களின் இயக்குனர்களை தொடர்புகொள்ள ஆரம்பித்துவிடுவோம். ஆக ஜனவரி 15ல் ஆரம்பிப்பது டிசம்பர் இறுதிவரை எங்கள் பணி தொடர்ந்துகொண்டேயிருக்கும்.

பின்னர் ஒரு தவறான குற்றச்சாட்டும் நிகழ்ந்துவருகிறது. ஒவ்வொரு பெஸ்டிவல் இரவின் பொழுதும் விருந்தினர்களுக்கும், திரைத்துறையினருக்கும் சாப்பாடு பார்ட்டி என செலவு செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதற்காக பெஸ்டிவல் பணத்தில் ஒரு பைசாக்கூட செலவு செய்ய மாட்டோம். திரைத்துறையில் பெரிய ஆட்களும், அல்லது சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களுமே விருந்து உபசரிப்பு அளிக்கிறோம், வாருங்கள் என்று அழைப்பார்கள். அப்படித்தான் பார்ட்டி நடைபெறுகிறது. இதுவரையில் பெஸ்டிவல் பணத்திலிருந்து செலவு செய்தது கிடையாது.

இந்த வருடம் இரண்டே டின்னர் தான் நடந்தது. முதல் துவக்க நாளில் கோட்தே இன்ஸ்டிட்யூட்டில், (Goethe Institude) மேக்ஸ்முல்லர் பவனில் அவர்களின் எக்ஸ்பிஷன் போட்டதால் அவர்கள்தான் எங்களுக்கான டின்னர் கொடுப்பார்கள். முழு தொகையும் மேக்ஸ்முல்லர் பவன் தான் கொடுத்தது. பெஸ்டிவலின் இறுதி நாளில், எங்களுடைய பிரசிடண்ட் மிஸ்டர் கண்ணன் அவர்கள், மிகவும் கட்டுப்பாட்டுடன் நூறு பேருக்கும், கமிட்டியிலிருந்து ஆறு பேருக்கும் இரவு உணவு உபசரித்தார். இப்படித்தான் நடத்தினோம். தவறான கருத்து இனியும் தொடர வேண்டாம்.

சென்னை திரைப்பட விழாவில் திரையிட எதன் அடிப்படையில் ஒரு படத்தை தேர்வு செய்கிறீர்கள்?

இதற்கு மூன்று வகையான வழிமுறைகள் இருக்கிறது. அதில் ஒன்று , வெளிநாட்டு தூதரகங்கள் வாயிலாக, அவர்கள் சில படங்களை எங்களின் திரைப்பட விழாவிற்காக எடுத்து வைத்திருப்பார்கள். அவர்களே படங்களைக் கொடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு மே மாதமும் ’கான் திரைப்பட விழாவிற்கு’ நான் சென்று வருகிறேன். அதுதான் இன்றுவரையில் தலைசிறந்த விருது விழாவாக மதிக்கப்படுகிறது. அதில் படம் வந்தாலே உலகம் முழுவதும் அந்தப்படத்திற்கான நல்ல எதிர்பார்ப்பு உருவாகிவிடுகிறது. அங்கு சென்று படங்கள் பார்ப்பேன். அங்கு வருகின்ற இயக்குனர்களும், உலகப்படங்களைத் திரையிடுபவர்களும் சிறந்த படங்களுக்கான தரவுகளை எங்களிடம் இலவசமாக கொடுப்பார்கள். உடனுக்குடன் 200க்கும் அதிகமான ஸ்க்ரீனர்ஸ் (படங்களைப் பற்றிய குறிப்புகள்) கையில் கொண்டுவந்து விடுவேன். அந்த ஸ்கிரீனர்ஸை எங்களின் செலக்ஷன் கமிட்டி உறுப்பினர்களிடம் கொடுத்து அவர்களை படம் பார்க்க அழைப்போம்.

அவர்கள் பார்த்து எது சிறந்த படம் என்று சொல்வார்கள். இதில் எது திரைப்பட விழாவில் திரையிட தகுதி வாய்ந்த படமாக இருக்கும் என்பதன் அடிப்படையில் ஒரு படத்தைக் கொண்டுவருவோம். அது மட்டுமின்றி கான் திரைப்பட விழாவில் எது திரையிடப்படுகிறது., என்று பார்த்து அது சிறந்த படமாக இருப்பின் அந்த ஏஜெண்ட்களைப் பார்த்து அவர்களிடமிருந்து படங்களைப் பெற்றுக்கொள்வேன். சிலர் டி.வி.டிக்களைக் கையில் கொடுப்பார்கள். சிலர் அதனை டி.வி.டியில் கொடுக்காமல் ஆன்லைன் காபி மட்டுமே கொடுப்பார்கள். அது மாதிரித்தான் ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுப்போம். பின்புதான் நாங்கள் அந்தந்த ஏஜெண்ட்களிடம் விவாதிப்போம். இந்தப்படத்தை தேர்ந்தெடுத்திருக்கிறோம்., என்கிற விவரத்தை அவர்களிடம் சொல்வோம். நாங்கள் குறிப்பிடுகிற தேதியில் அந்தப்படம் தர முடியுமா என்றும் கேட்போம், எத்தனை முறை திரையிடப் போகிறீர்கள் என்று ஏஜெண்ட்கள் கேட்பார்கள், இரண்டு முறை என்று சொல்வோம், அவர்களுக்கும் சம்மதம் என்றால் அதற்கான தொகையை எங்களிடம் கேட்பார்கள். படம் திரையிட கட்டணமாக 500 யூரோ என்று சொல்வார்கள். அல்லது 600 யூரோ அல்லது டாலர் என்பதுபோலத்தான் பேசுவார்கள். இதிலும் பேரம் பேசுதல் நடைபெறும், அவர்கள் 1200ல் ஆரம்பிப்பார்கள், நானோ 300லிருந்து ஆரம்பிப்பேன், இப்படியே பேசிப்பேசி 500, அல்லது 600க்கு இரண்டு ஸ்கிரீனிங்க் பேசி அனுமதி வாங்குவோம்.

முன்பு இருந்தது போல இப்போதெல்லாம் பிலிம் பிரிண்ட் கிடையாது. இன்றைக்கு 99 சதவீதம் டிஜிட்டல். DCP. டிஜிட்டல் பார்மேட்டில் படம். அப்படியில்லை என்றால் ப்ளூ ரே டி.வி.டி. இந்த டிசிபி யில் இரண்டு வழிமுறைகள் இருக்கிறது. ஒன்று என்கிரிப்டெட் (Encrypted), அடுத்து நான் என்கிரிப்டெட் (Non-Encrypted). இங்கு நான் என்கிரிப்டெட்டில் சாவி (Key) தேவையில்லை., எல்லா தியேட்டர்களிலும் ஒரு சர்வர் இருக்கும், அந்த சர்வர்களில் அந்தப்படத்தை ஏற்றி விடுவார்கள். பின்பு தானாகவே திரையிட வேண்டிய நேரத்தை பதிவு செய்து வைத்துவிட்டால், சரியாக ஒளிபரப்பாகும் வசதி அதில் உள்ளது. இதற்கு ஆபரேட்டர்கள் கூட தேவை கிடையாது. அதேபோல எங்கள் டி.சி.பி சர்வரில் அவர்கள் கொடுக்கிற படங்களைப் போடுகிற பொழுது, அதை ஒளிபரப்புகிற வேளையில் அதற்கான கீ (key) வேண்டும். அதற்காக எந்த ஏஜெண்ட் படம் கொடுத்தாரோ, அவருக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தகவல் கொடுக்க வேண்டும்.

இந்தப்படம் இந்த தேதியில், இந்த திரையரங்கில், இந்த சர்வர் எண்ணில், இந்த நேரத்தில் ஒளிபரப்ப இருக்கிறோம் என்ற தகவலைக் கொடுக்க வேண்டும். பின்னர் அதற்குத் தகுந்த மாதிரி அந்த கீ தகவலையும் எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த தகவல்களை நாங்கள் தியேட்டர்களுக்கு கொடுத்து விடவேண்டும். அந்த தகவல்களை கம்ப்யூட்டரில் செலுத்தினால் அது தானாகவே ஒளிபரப்பாகும் வண்ணம் அங்கீகாரம் கிடைக்கப்பெற்று திரையிடப்படும்.

சில சமயங்களில் அப்படி படம் அங்கீகரிக்கப்பட்டால் கூட தொழில்நுட்ப பிரச்சனையால் அந்த திரைப்படம் ஓடாமல் போய்விடும். நாம் எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது என்று சகஜமாக இருந்தாலும், திடீரென அந்த கீ ஆபரேட்டர் வரவில்லையெனில் படம் நின்றுவிடும். அந்தச்சமயங்களில் தான் அந்தப்படங்கள் வேறு நாட்களில் திரையிடப்படுகிறது.

நாளைக்கு திரையிடப்படப்போகிற படத்தை அன்றைக்கு இரவே லோட் பண்ணுவார்கள். ஒரு சர்வரில் ஐந்து அல்லது ஆறு படங்களை லோட் பண்ண முடியும். லோட் பண்ணுகிற பொழுது ஏதேனும் பிரச்சனை ஆகிவிட்டதென்றால் அந்தப் படத்தினை ஒளிபரப்ப முடியாது. அதேபோல ப்ளூ ரே (Blu-ray) என்றால், அதற்கு ப்ளூ ரே பிளேயர் கொடுக்க வேண்டும், ப்ளேயரில் அந்தப்படம் ஓடுகிறதா என்று சோதித்துப்பார்க்க வேண்டும். பின்னர் டி.வி.டியிலும் சில படங்கள் வருகிறது இதெல்லாம் வருகிற பொழுது, எங்கள் செலவில் இன்னொரு ஃபெஸ்டிவலில் பங்கெடுக்கிற படங்களையும் இங்கு திரையிடுகிறோம். கொரியர் செலவு செய்து அந்தப்படங்களை இங்கு கொண்டு வந்து அந்தப்படங்களை இங்கு திரையிட்டுக் காண்பிக்கிறோம்.

பின்னர் அதேபோல அந்தப்படங்களை வேறெந்த ஃபெஸ்டிவல்களில் கேட்டுள்ளார்களா என்பதையெல்லாம் பார்த்து அவர்களுக்கு அனுப்பி வைப்போம். இதெல்லாம் சங்கிலித்தொடர் போல தொடர்ந்து செய்யக்கூடிய வேலைகள். ஒரு ஏஜெண்டிடம் பேச வேண்டும், அவர்களிடம் நம் திரை விழா பற்றி விவாதிக்க வேண்டும், அவர்களின் படம் இங்கு வரவேண்டும், அந்தப்படம் ஓட வேண்டும், இதெல்லாம் முடிந்து அந்தப்படத்தை திருப்பி அனுப்ப வேண்டும், அதற்கு முன்பே ஸ்க்ரீனிங்கான தொகை அவர்களுக்கு கிடைத்தால் தான் படம் கிடைக்கும், இல்லையேல் தர மாட்டார்கள். அநேகமாக முப்பதிலிருந்து 40 லட்சம் வரை ஸ்க்ரீனிங்க்கான தொகையாக வந்துவிடுகிறது.

பின்பாக தியேட்டர் புக்கிங்க். ஜீலை மாதமே தியேட்டர்களை புக்கிங்க் பன்ணிவிடுகிறோம். ஆனால் இந்த முறை மட்டும் இரண்டு தியேட்டர்கள் ஐநாக்ஸ் (inox) தருவதாக இருந்து கடைசி நிமிடத்தில் இரண்டு தியேட்டர்களுமே இல்லை (‘லிங்கா’ போன்ற பெரிய படங்களின் வரவால்) என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் கஷ்டப்பட்டு ஒரு தியேட்டரை மட்டுமே கொடுத்தார்கள். ஆக, ஆறு தியேட்டர்களில் போட வேண்டிய படங்களை ஐந்து தியேட்டர்களில் திரையிட வேண்டிய சூழல் ஏற்பட்டுப்போயிற்று. ஆகையால் ஒரு திரைப்படத்தை இரண்டு முறைகள் திரையிடுவது இந்த முறை இயலாத காரியமாக ஆகிவிட்டது.

ஒரு முறை திரைப்படத்தை தவறவிட்டவர்கள் கூட அடுத்த முறை சரியாக அந்தப்படத்தைக் காண்கிற வாய்ப்பு பெறுவார்கள். இதற்காக வழக்கமாக 40 படங்களை மீண்டும் திரையிடுவோம், ஆனால், இம்முறை 10 படங்களை மட்டுமே மீண்டும் மறுதிரையிடல் செய்தோம். முழுநேரமாக இதை முடித்தால் தான் சிறந்த பலனை நீங்கள் அடைய முடியும். இதற்கு நாங்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது. முன்பு சொன்னதுபோல டி.சி.பி யில் ஏஜெண்ட்கள் கொடுக்கிற தரவுகள் சர்வரில் சரியாக செல்லவில்லையானால் படம் திரையிடப்படாது. ஆக, அதற்காக நாங்கள் தற்காப்பிற்காக இன்னொரு ப்ளூ ரே பதிவையும் வைத்திருப்போம். திரையிடப்படும் இடங்களுக்கெல்லாம் அந்த ப்ளூ ரே ப்ளேயரையும் கொடுத்து வைத்திருப்போம். அப்பொழுதுதான் படம் எந்தவித இடையூறும் இல்லாமல் திரையிட ஏதுவாக இருக்கும்.

பின்பு பார்வையாளர்களுக்கு படம் பார்ப்பதற்கான பாஸ் கொடுப்பது முதற்கொண்டு, முடிவு விழாவின் போது சிறப்பு பரிசுகள் கொடுப்பது வரை இதற்கான ஒரு விழா வழிமுறைகள், செயல்பாட்டு முறைகளை விளக்கவும்?

படம் பார்ப்பதற்கான ரிஜிஸ்ட்ரேஷனில், டிசம்பர் ஒன்றாம் தேதியே தினசரி நாளிதழ்களில் விளம்பரம் அல்லது எங்கள் இணயதளத்தில் (www.icaf.org) தகவல்களைக் கொடுத்துவிடுவோம். எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இலவசமாக கொடுத்துவிடுவோம். திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டும் முந்நூறு ரூபாய். மற்றவர்களுக்கெல்லாம் ஐந்நூறு ரூபாய் கட்டணமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி கெஸ்ட் பாஸ் (guest pass) சிலருக்கும் கொடுத்துவிடுவோம். புகைப்படமும், தக்க சான்றிதழும் கொடுத்துவிட்டால் ஃபெஸ்டிவல் தொடங்குவதற்கு முன்பாகவே அவர்களுக்கான ஐ.டி. கார்டுகளைக் கொடுத்துவிடுவோம்.

முற்றிலும் இணையத்தின் மூலமாகவே கூட ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணலாம். பின்னர் யார் யாரெல்லாம் ரிஜிஸ்டர் பண்ணியிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஃபெஸ்டிவல் புத்தகம் ஒன்று கொடுத்துவிடுவோம். திரையிடப்போகிற படத்தின் கதைச்சுருக்கமும், அதன் தகவலும் அந்தப்புத்தகத்தில் இருக்கும். இதற்காகத்தான் அந்தப் பணம் வசூலிக்கிறோம். பின்னர் ஒரு நாள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே படம் திரையிடுகிற ஷெட்யூலைக் கொடுத்து விடுகிறோம். எந்தப்படம் எந்த திரையரங்கத்தில் திரையிடப்படும் என்பதும் அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். அது மட்டுமின்றி அதன் தகவல்களும் இணையத்தில் அவ்வப்போது பதிவேற்றப்பட்டுக்கொண்டேயிருக்கும். எந்தப்படம் எந்த பிரிவில் விருது வாங்கியிருக்கிறது என்ற தகவலும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

திரையிடலின் துவக்க நாளின் பொழுது சிறப்பு விருந்தினர்களை அழைத்து துவக்கி வைக்கிறோம். பணம் கொஞ்சம் அதிகமாக இருந்தால் இசை நிகழ்ச்சி, அல்லது நடன நிகழ்ச்சி இதுபோன்று செய்ய முடியும். ரசிகர்களை பொறுமையிழக்காமல் நிகழ்ச்சிகளை ஒரு அரை மணிநேரத்திற்குள் முடித்து விட்டு துவக்க நாளுக்கான படத்தை திரையிட்டு விடுவோம். மேலும், இங்குதான் தமிழ் படங்களுக்கான போட்டி வைத்து நடத்துகிறோம். தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய ஒரு விழாவிற்கு நாமே தமிழ் படங்களுக்கான போட்டி வைத்துக்கொடுக்கவில்லையானால், வேறு யார்தான் செய்து தர முடியும். ஆக, தமிழ்படங்களை வெளிநாட்டு இயக்குனர்களும் பார்த்து இங்கும் திறன் வாய்ந்த இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதுதான் எங்கள் எண்ணம். அதற்காக சிறு பரிசுத்தொகை எல்லாம் கூட கொடுத்து தமிழ்படங்களை ஊக்குவித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டு முதன்முறையாக எம்.ஜி. ஆர் டி.வி அண்ட் ப்லிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் எடுத்திருக்கிற படங்களை இங்கு திரையிட்டு அதிலிருந்து வருகின்ற சிறந்த ஒரு படத்திற்கு “அம்மா விருது” வழங்கி சிறப்புச் செய்கிறோம். ஆக, அரசாங்கம் நடத்துகிற ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கிற மாணவர்களுக்கு நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்துகொடுப்பார்கள், அதனையும் நாங்கள் செய்துகொடுத்திருக்கிறோம். அதனைக்கண்டு அரசாங்கமும் எங்களை பாராட்டினார்கள். இது மாணவர்களுக்கும், சினிமாத்துறையினருக்கும் தூண்டுகோலாக இருக்கும் என்ற காரனத்தினால் தான் இதனை செய்துவருகிறோம்.

தேர்வுக்குழுவில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? அவர்களது பணி என்ன? தேர்வுக்குழுவில் புதிதாக யாரேனும் வரமுடியுமா? இதற்கான நிபந்தனைகள் என்னென்ன?

எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களே கூட திரைப்படங்களைப்பற்றியெல்லாம் நன்றாக தெரிந்தவர்கள். அவர்கள் படங்களை தேர்வுசெய்வார்கள். அவர்களும் தேர்வு செய்ய குழப்பமாக இருக்கின்ற பொழுது நானும் கூட சேர்ந்து இந்தப்படம் இன்னன்ன பிரிவுகளில் விருதுகள் வாங்கியுள்ளது என்ற வழிமுறைகளையும் சொல்லி அந்தப்படத்தை திரையிட ஏற்பாடு செய்வேன். மேலும் இது ஒரு தொடர் முயற்சியின் பலனாக சாதிக்க முடிந்த காரியமாதலால், இடையில் யாரும் வந்து சேரமுடியாது.

பின்னர் கான்ஸ் பெஸ்டிவலில் ஒரு படம் விருது வாங்கியிருக்கிறதென்றால் அந்தப்படத்தை பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. சொல்லப்போனால் இந்த வருடம் திரையிடப்பட்ட “Winter Sleep” கான்ஸ் விருது வாங்கியிருக்கிறது. அது மாதிரியான படங்களுக்கெல்லாம் ஸ்க்ரீனர்ஸ் வாங்கவே மாட்டோம், அந்தப்படத்தை இங்கு திரையிடுவதற்கான வேலையைத்தான் செய்வோம். அப்படி சில படங்களுக்குத்தான் ஸ்க்ரீனர்ஸ் வாங்குவோம். சில படங்களை இணையத்தில் பார்ப்பேன். மேலும் நானும் கான்ஸ் விருது வழங்கும் விழாவிற்குச் செல்வதால் எப்படியும் நாற்பது படங்களாவது பார்த்துவிடுவேன், நானே கூட நல்ல படங்களாக அங்கேயே தேர்வுசெய்து வந்துவிடுவேன்.

சென்னைத் திரைப்பட விழா நடத்துவதற்கான முக்கியமான குறிக்கோள் என்ன?

ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக விழா நடத்த ஆரம்பித்தார்கள். ஆக, நாமும் சென்னையில் ஒரு விழா நடத்த வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இதனை ஆரம்பித்தோம். முதலிலேயே சொன்னது போல இங்குள்ள திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள், தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து படித்து, தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்வதற்கு நாங்கள் நடத்துகிற ஃபெஸ்டிவல் ஒரு தூண்டுகோலாக இருக்கும். ஒருவேளை இங்கு திரையிடப்படுகின்ற தமிழ்படங்களை வெளிநாட்டினர் பார்த்து அந்தப்படம் வெளியே கொண்டுசெல்லப்பட்டால் நம்முடைய திறமை பிற நாட்டினருக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமைகின்றது, அந்த வாய்ப்பு நம் முயற்சியால் அமைந்தது எனும்பட்சத்தில் நமக்கு பெருமை தானே. அவர்களின் வெற்றிக்கு நாங்கள் ஒரு தூண்டுதலாக இருக்கிறோம்.

தொடர்ந்து ஃப்லிம் பெஸ்டிவல் நடத்திக்கொண்டு வருகிறீர்கள். இதன் மூலம் மக்களிடம் எவ்விதங்களிலெல்லாம் ரசனை மாற்றம் நடந்திருக்கிறது ?

நிறையவே நடந்திருக்கிறது. நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு சொல்கிறார்கள். நேற்று கூட ஒரு பெண் கேரளாவிலிருந்து அழைத்துப் பேசினார்கள். நான் கேரளாவில் பார்க்க முடியாத படங்கள் கூட சென்னையில் பார்க்க முடிந்த சூழல் எனக்கு உருவாகியது. கேரளாவில் 1200 இருக்கைகள் கொண்ட திரையரங்கங்கள் இல்லை. ஆனால், இங்கு அப்படியான திரையரங்கில் சந்தோஷமாக படம் பார்த்தேன். என்று கூறினார்கள்.

பெரும்பாலும் படங்கள் கருத்து ரீதியாக தேர்ந்தெடுக்கிறோம். மாணவர்கள் கூட கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்துச்செல்கிறார்கள். பிற மாநிலத்தவர்கள் கூட சொல்கிறார்கள், ”ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கிற பொழுது ஒரு காட்சிக்கு கைதட்டி ரசிக்கிற மக்கள் கூட்டத்தை இந்த ஃபெஸ்டிவலில் தான் பார்க்கிறேன். வேறெந்த இடத்திலும் நான் பார்த்ததில்லை”, என்று சொல்கிறார்.

திரைத்துறையிலிருந்து இதற்கான ஆதரவு எப்படியிருக்கிறது?

நடிகர், நடிகைகள் திரையரங்கத்திற்கு வந்தால் கூட்டம் சேர்ந்துவிடும். கூட்டம் சேர்ந்துவிட்டால் அவர்களுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலை வரும். அதற்காகத்தான் கடந்த மூன்று வருடமாக ரெட் கார்பெட் என்று ஒரு ஷோ நிகழ்த்தினோம். இந்த முறை தான் அதை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அந்த காட்சியில் ப்லிம் இண்டஸ்ட்ரி ஆட்களை அழைத்து அந்தப்படங்களைப் பார்க்க ஏற்பாடு செய்தோம். அதில் கூட நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய பெரிய நடிக, நடிகையர்கள் எல்லாம் வரவில்லை. பாலச்சந்தர் வந்திருக்கிறார், பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்றோர் வந்திருக்கின்றனர், இவர்களைத்தவிர மற்ற எவரும் வரவில்லை.

அவர்களுக்காகத்தான் தனியான திரையரங்கில் திரையிடுகிறோம், அதுவும் ஐநாக்ஸ் போன்ற மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் தான் ஏற்பாடுசெய்கிறோம். எங்களின் ஆசை என்னவென்றால், ஃப்லிம் இண்டஸ்ட்ரியைச் சார்ந்தவர்கள் எங்களோடு சேர்ந்து படம் பார்க்க வருவது, வெளிநாட்டு இயக்குனர் ஒருவர் இந்த பெஸ்டிவலுக்காக வந்திருக்கிறார் என்றால் அவரோடு பேசலாம், அப்படி அவர்கள் பங்கெடுத்துக்கொண்டால் இன்னமும் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன்.

சினிமா சம்பந்தமாக நிறைய ஆய்வுகள் நடக்கின்றது. நிறைய பேர் ஃப்லிம் ஸ்காலர்ஷ் (Film Scholars) ஆக இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஃபெஸ்டிவல்ஸ்களில் அவர்களை அழைத்து மரியாதை செய்வது, அல்லது அவர்களுடன் கலந்தாலோசிப்பது ஏதேனும் நடைபெறுகிறதா?

அதுமாதிரி செயல்படவும் ஒரு யோசனை இருக்கிறது. வெளிநாட்டுப் படங்களோ, அல்லது இங்குள்ள பிற மொழி படங்களோ நாங்கள் திரையிடுகிறபொழுது படம் முடிந்தவுடன் அந்த வெளிநாட்டு இயக்குனருடன் ஒரு படம் பற்றி விவாதிக்கலாம். அப்பொழுது இந்த துறையைச் சார்ந்தவர்கள் இவர்களும் உட்கார்ந்து அவர்களோடு பேசினால் அவர்கள் இந்த கோணத்தில் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள மக்கள் இந்த கோணத்தில்தான் படம் பார்க்க விரும்புகிறார்கள். என்பதைப்பற்றியெல்லாம் பேசினால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். சென்ற முறை ஆர்.வி. உதயகுமார் சேர்மன் ஆஃப் த ஜீரி ஆக இருந்தார். இந்த முறை பி.வாசு இருக்கிறார்.

ஃபிலிம் ஸ்காலர்ஷுடன் நிகழ்ச்சியை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அவர்களுக்கு நேரம் கிடைக்கவேண்டும், ஆனால், எங்கள் ஃபெஸ்டிவல் அனைவருக்கும் தெரியும், டிசம்பர் மாதம் தான் நடைபெறுகிறது, ஆக கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவர்கள் வந்தால் சந்தோஷமாக இருக்கும்.

மக்களைத் தவிர்த்து இந்த ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் உங்கள் திரைப்பட விழாக்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

உதவி இயக்குனர்கள் எல்லாம் படம் பார்த்துவிட்டு பக்கம் பக்கமாக கடிதம் எழுதுகிறார்கள். பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். உதவி இயக்குனர்களும், மாணவர்களும் இதனை ஒரு பாடமாக படித்து அறிவை வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறோம், எல்லோரும் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள். நிறைய பேர் எனக்கு போன்செய்தும் சொல்லியிருக்கிறார்கள்.

பிற மாநிலங்களில் இருப்பது போன்று ஒரு இயக்குனருடன் படம் முடிந்தவுடன் விவாதிப்பது, அல்லது சினிமா பற்றிய செமினார் வகுப்புகள் அதிகளவில் இங்கு நடக்காதது ஏன்?

ரெட்ரோஸ்பெக்டிவ் (Retrospective) மற்றும் ஒரு இயக்குனரின் அனைத்துப் படங்களையும் போட்டுவிட்டு அவருடன் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்துவது என்றெல்லாம் யோசனையில் இருந்தோம். இந்த முறை பணம் இல்லாததன் காரணமாக அதைச்செய்ய முடியவில்லை. பின்னர் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் வெளியிலிருந்து ஒரு இயக்குனரை அழைத்து இங்கு பேசவைப்பது செமினார் எடுப்பது எல்லாமே திட்டத்தில் இருந்த்து. பணம் இருந்திருந்தால் சத்யம் திரையரங்கத்தில் கூட ஏற்பாடு செய்திருப்போம் இது எல்லாமே பெஸ்டிவலின் ஒரு பங்குதான். ட்ரிப்யூட் (Tribute) ஏதும் போட முடியவில்லை. அடுத்த முறை பாலச்சந்தருக்கு ஏற்பாடுசெய்யலாம் என்று இருக்கிறோம். இந்த முறை,Phillip Noyce, Kryzsztof Zanussi போன்றோரது படங்கள் ரெட்ரோஸ்பெக்டிவில் இருந்தது.

பிற நாட்டு படங்களை இந்த ப்லிம் பெஸ்டிவலில் போடுகிறீர்கள். அந்தந்தப் படங்களின் இயக்குனர்களை இங்கு அழைத்து வருவதில் உங்களுக்கு இருக்க கூடிய சிரமமாக எதை நினைக்கிறீர்கள்?

இரண்டு விதம். ஏஜெண்டிடமிருந்து படம் வாங்கினால் இயக்குனரை அழைக்க முடியாது. இந்த முறை டர்க்கியிலிருந்து 25 படங்கள் பார்த்து நான்கு படங்களைத் திரையிட்டோம். இது இயக்குனர்களிடமிருந்து நேரடியாக வாங்கி திரையிடலாம். அவர்களை நம் விழாவிற்கு அழைத்தால் அவர்கள் விமானத்தில் எக்கானமிக்கல் வகுப்பிற்கு கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். பிஸினஸ் க்ளாஸ் கேட்பார்கள். பின்பு இங்கு வந்து தங்குவது. அதையெல்லாம் பார்த்தால் ஒரு நபருக்கே இரண்டு அல்லது மூன்று லட்ச ரூபாய் செலவாகிறது. இது எங்களுடைய நிர்வாகச்சூழலில் முடியாது. இந்த முறை நாங்கள் சொன்னது இயக்குனர் வந்தால் ஏர் டிக்கட்டைத்தவிர நான்கு நாட்களுக்கு தங்கும் இடமும், உணவும் இலவசமாகத் தந்துவிடுகிறோம். என்று ஒழிவு மறைவின்றி கேட்டுக்கொண்டோம். சிலர் இதற்கு ஒத்துழைப்பார்கள். செர்பியாவிலிருந்து ஒருவர் வருவதாக இருந்தது, கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட்டது.

ஆனால் ஒரு பெண் ஈரானிலிருந்து வந்திருந்தார். அவர் அந்தப்படத்தில் நடித்திருந்த காரணத்தினால் வந்தார். அவர்களுக்கு நாங்கள் கொடுத்தது ஹோட்டல் அக்காமடேஷன் மட்டும்தான். அவர்களும் சாதாரண ஓட்டல்களில் தங்கமாட்டார்கள், ஃபைவ் ஸ்டார் ஓட்டல் வேண்டும், அவர்களுக்கென்று கார் ஏற்பாடு செய்ய வேண்டும், மேலும் சொன்னது போல திடீரென மகாபலிபுரம் செல்ல வேண்டும் என்று சொன்னாலும் அங்கும் அழைத்துச்செல்ல வேண்டும் . ஆனாலும், பெரும்பாலான வெளிநாட்டு இயக்குனர்கள் தன் திரைப்படம் திரையிடப்படுகிற இடத்தினைக் காணவே ஆவலாக இருக்கிறார்கள்.

ஆனால், இந்தியன் பனோரமாவில் செலக்ட் ஆன படங்களிலிருந்து இரண்டு இயக்குனர்கள் வந்தார்கள், கேரளா, ஒரிசா, பெங்கால், மகாராஷ்டிரா இந்த இடங்களிலிருந்தெல்லாம் வந்தார்கள். இவர்களுக்கெல்லாம் பதினைந்தாயிரம் வரைதான் செலவாகும். இது ஒன்றும் பிரச்சனையில்லை. பணம் அதிகப்படியாக செலவாகிற காரணத்தினால்தான் வெளிநாட்டு இயக்குனர்களை அழைப்பதைத் தவிர்க்கிறோம்.

மற்ற எல்லா ஃபெஸ்டிவலைக்காட்டிலும் சென்னையில் ஹாஸ்பிட்டாலிட்டி நம்பர் ஒன் என்பதை எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள். விருந்தினர்கள் வந்து இறங்கியதிலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரைக்கும் ஒரு ஆள் கூடவே இருந்துகொண்டேயிருப்பார். மற்ற மாநிலங்களில் இந்த கவனிப்பு முறைகள் இல்லை.

கோவாவில் ஃபிலிம் பெஸ்டிவலுக்கு பதினைந்துகோடி தருவதாகவும், கேரளாவில் மூன்று கோடியும் அரசு தரப்பிலிருந்து தருவதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் இருப்பவர்களுமே கூட அந்த திரைப்பட விழாக்கள் தான் சிறந்தது என்று இங்கிருந்து அதனை நாடிச் செல்கின்றனர். இது குறித்து தங்கள் கருத்து?

இந்த இரு திரைப்பட விழாக்களுமே அரசாங்கம் நடத்துகிற விழா. அரசாங்கம் தனது மானியத்தொகையோடு நடத்துகிற பெஸ்டிவல். ஆனால், நல்ல படங்கள் பார்க்கத்தான் மக்கள் வருகிறார்கள் என்று சொன்னால், சென்னையை யாராலும் வெற்றிகொள்ள முடியாது. இதனை நான் சவாலாகச் சொல்கிறேன். நாங்கள் திரையிட்ட படங்கள் போல வேறு எங்கும் இல்லாத காரணத்தினால்தான், அனைவரும் சென்னையில் திரையிட்ட கருத்துமிக்க படங்களைப்பார்த்துவிட்டு எங்களைப் பாராட்ட ஆரம்பித்தார்கள்.
கோவாவில் இது திருவிழா போல நடைபெறுகிறது. ஆடம்பரமாக அலங்காரம் பண்ணியிருப்பார்கள். அங்கு சென்றால் ஒரு ஆள் மூன்று படங்களுக்கு மேல் பார்க்க முடியாது. ஒரு படம் பார்க்க டிக்கெட் ஒரு நாளைக்கு முன்னாலேயே வாங்க வேண்டும். ஆனால், இங்கு யார் எப்ப வேண்டுமானாலும் போய் படம் பார்க்கலாம், ஒரு நாளைக்கு ஐந்து படங்கள் பார்க்கலாம். இது மாதிரியான வசதிகள் வேறு எந்த ஃபெஸ்டிவல்களில் இருக்கிறது?. அவர்களிடம் பணம் இருக்கின்ற காரணத்தினால் நல்ல செமினார்கள், கான்வெர்ஷேஷன்ஸ் மற்றும் ரெட்ரோஸ்பெக்டிவ் ஏற்படுத்தலாமே தவிர, எங்கள் படங்கள் அளவிற்கு தரம் சிறந்த படங்கள் அவர்களால் திரையிட முடியாது. வேடிக்கை பார்க்க வேண்டுமானால் கோவா சிறந்தது என்று சொல்வார்கள். படம் பார்க்க மட்டுமே வருகின்ற ரசிகர்களுக்கு இதுதான் சிறந்த இடம் என்று சொல்வேன்.

கேரளாவில் ஒரு திரையரங்கத்திலிருந்து இன்னொரு திரையரங்கம் செல்வதற்கு ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும், ஒரு படம் இரண்டு முறை திரையிடப்பட்டால் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுப்பதும், குறுஞ்செய்தி அனுப்புவதும் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு படம் பார்க்க வருகிற மக்களை அவர்கள் மதித்துச் செயல்படும் முறை. பின்னர் நம் சென்னையில் படம் பார்க்க கூட பிற மாவட்டங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் வரக்கூடும், அவர்கள் தங்கவும் குறைந்த வாடகையில் இருப்பிடம் ஏற்பாடுசெய்து தருவது, போன்ற வசதிகளை சென்னை ஃபிலிம் பெஸ்டிவலும் செய்யும் என்று எதிர்பார்க்கலாமா?

கண்டிப்பாகச் செய்யலாம். ஒரு திரையரங்கத்திலிருந்து இன்னொரு திரையரங்கம் செல்வதற்கு பத்து பதினைந்து ஆட்டோ ஏற்பாடு செய்யலாம். அதை எல்லோருமே சொன்னார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு கூட ஆட்டோ ஏற்பாடு செய்திருந்தோம். இந்த முறை வேண்டுமானால் ஒரு வேன் ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், ப்ராக்டிக்கலாக கடைசி நேரத்தில் எங்களால் அதைச் செயல்படுத்த முடியவில்லை.

இரண்டாவது நீங்கள் சொன்னது வெளி மாவட்டங்களிலிருந்து வருகின்ற மாணவர்களை தங்கவைப்பதற்கு ஏற்பாடுசெய்வது. உட்லேண்ட் திரையரங்கத்திற்கு பின்பாக லாட்ஜ் இருக்கிறது. அவர்களுக்கு அங்கிருந்து அறைகளெல்லாம் வாங்கிக்கொடுத்தோம். ஆனால் மாணவர்கள் அதனை விரும்பவில்லை. மாணவர்களே இந்த இடம் வேண்டாம், நாங்கள் வேறு எங்காவது தங்கிக்கொள்கிறோம் என்று சொன்னால், எங்களால் ஏதும் சொல்ல முடியாது. ஆனால், இந்த முறை கலையரங்கம் கிடைத்துவிட்டால் நான்கு திரையரங்கங்கள் ஒரே இடத்தில் இருக்கும். அதற்கு எதிர்த்தாற்போலவே பெங்கால் அசோஸியேஷன் மாதிரியான இடங்கள் இருக்கிறது. அங்கிருந்து கூட அவர்கள் தங்குவதற்கு இடம் வாங்கிக்கொள்ளலாம். அது இன்னமும் போகப்போக மேம்பட்டுவிடும். பணம் இருந்தால் போதும், இதெல்லாம் கஷ்டமே கிடையாது.

போன முறையெல்லாம் வடசென்னை மக்களுக்காகவே அபிராமி மெகா மாலில் கூட படம் போட்டீர்கள். இந்த முறை முழுக்க தென்சென்னை மக்களுக்கான ஃபெஸ்டிவலாகவே மாறிவிட்டதாக சொல்லப்படுவது குறித்து?

நாங்கள் இப்படி வடசென்னை தென்சென்னை என்றெல்லாம் பிரிக்கவில்லை. போன முறை நிறைய படங்கள் வருகின்ற பொழுது வடசென்னையில் மேற்கொண்டு இரண்டு தியேட்டர்கள் எடுத்தோம். பணம் பற்றாக்குறையின் காரணமாக தியேட்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியது. ”லிங்கா” படமும் தோதாக வெளியாகியிருப்பதால் எந்த தியேட்டர்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களுக்காகவே உட்லேண்ட் திரையரங்கம் ஆறே நாட்களில் லிங்காவை நீக்கிவிட்டு பெஸ்டிவலுக்கு தியேட்டரைக் கொடுத்தார்கள். அம்மாவின் ஆசிர்வாதத்தால் கலையரங்கம் தயாராகிவிட்டால் நான்கு தியேட்டர்கள் கிடைத்துவிடும். பின்பு ’தேவி’யில் தியேட்டர்கள் கேட்டிருக்கிறோம், அது கிடைக்கவில்லையானால் உட்லேண்ட், பின்னர் கேசினோ என்று வாகனம் ஏற்பாடு செய்வதற்குக் கூட வசதியாக மாறிவிடும்.

திரையரங்க உரிமையாளர்களிடம் திரைப்பட விழாவிற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது.?

மக்களில் சிலர் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் படம் போட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகத்தான் ஐநாக்ஸில் இரண்டு தியேட்டர்கள் கேட்டோம். ஆனால் கடைசி நேரத்தில் அது ஒரு தியேட்டராக மாறிவிட்டது. இந்த தருணத்தில் Real Image நிறுவனத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எங்களுக்காக ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு ஆளை பணிக்கு நிமர்த்தி உட்காரவைத்து எந்த தொழில்நுட்ப குறிக்கீடும் நிகழாமல் செய்துகொடுத்தார்கள். எல்லா தியேட்டர்களிலும் எங்களுக்கான ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது.

இந்த திரையிடலில் பங்குபெறுகிற படங்களுக்குண்டான தணிக்கை விதிமுறைகள் குறித்து?

நாங்கள் என்ன படங்கள் திரையிட்டாலும் அதற்கான சென்சார் Excemption (தணிக்கை விலக்கு) வாங்க வேண்டும். தணிக்கை சான்றிதழ் வாங்க வேண்டாம். Excemption வாங்குவதில் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. கமிட்டியில் அவர்கள் வந்து பார்த்துவிட்டு எதை எந்த காட்சியை நீக்கவேண்டும் என்று சொல்வார்கள். வெளிநாட்டுப்படங்களை இங்கு ஒளிபரப்புகிற பொழுது சென்சார் வாங்க வேண்டும். படங்கள் வெளியிலிருந்து வருவதற்கும் கஸ்டம்ஸ் விலக்கு வாங்கவேண்டும். எண்டெர்டெய்ன் மெண்ட் வரியிலிருந்து விலக்கு , கமர்ஷியல் டாக்ஸ் விலக்கு போன்ற ஆர்டரை வாங்க வேண்டும். இந்த ஆர்டரை வைத்துக்கொண்டுதான் ஒரு நாளைக்கு ஐந்து படங்கள் போடுகிறோம் என்று போலீஸ் பர்மிஷன் கேட்போம். இதுமட்டுமின்றி ஒவ்வொரு படத்திற்கும் சென்சார் Excemption வாங்கவேண்டும்.

ஆக ஒவ்வொரு படத்தையும் திரையரங்கத்திற்கு கொடுப்பதற்கு முன்பு தணிக்கை விலக்கு், மற்றும் கஸ்டம்ஸ் விலக்கு இரண்டு லிஸ்டையும் அவர்கள் கையில் கொடுத்துவிடுவோம். இயக்குனர் எடுத்த முழுப்படமும் ஒரு வெட்டு கூட இல்லாமல் அப்படியே ஒளிபரப்ப நாங்கள் சான்றிதழ் வாங்க வேண்டும்.

இது அனைத்து ஃப்லிம் சொசைட்டிக்கும், ஃப்லிம் பெஸ்டிவல் நடத்துகிறவர்களுக்கும் பொதுவானதே.

சுயாதீன திரைக்கலைஞர்களையும் உங்கள் தேர்வுக்குழுவில் இணைத்துக்கொள்ளாததுதான் இதுமாதிரியான பிரச்சனைகளெல்லாம் வருவதற்கு காரணமா?

அவர்களைச் சேர்த்துக்கொள்வதால் எங்களுக்கு ஏதும் பிரச்சனைகள் இல்லை. அவர்களும் ஃபிலிம் சொசைட்டிக்குள் வரவேண்டும், இங்கு வந்து சிலநாட்கள் வேலைசெய்தால் இங்கு என்னென்ன நடைமூறைகள் இருக்கிறது என்பது தெரியும். சும்மா பேருக்காக இவர்களை அழைத்தேன் என்று இருக்க கூடாதல்லவா. இங்கு தொடர் வேலைகள் நடந்து வருகிறது. நேற்றைக்கு சென்னை திரைப்படவிழா முடிந்துவிட்டதென்றால், அடுத்த வேலையை இன்றிலிருந்து ஆரம்பித்துவிட்டோமே, இப்படி தொடர் வேலைகள் செய்துகொண்டிருக்கும்பொழுது இடையே ஒரு ஆளை அழைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

ஒருவேளை அவர்களையும் என் தேர்வுக்குழுவில் இணைத்து மூன்று பேரும் மூன்றுவிதமான அபிப்ராயங்களைக் கொடுத்தால் அது மிகப்பெரிய பூதாகரமான பிரச்சனையாக வெடித்துவிடும். இங்கு அதுமாதிரியான பிரச்சனைகள் நடப்பதில்லை. இங்கு கூட மனோபாலா இருக்கிறார், இவர்களிடம் அதுமாதிரியான பிரச்சனைகள் வருவது இல்லை. இந்தப்படம் எடு, அந்தப்படம் எடுக்கலாம் என்றெல்லாம் சொல்லவே மாட்டார்கள். ஜீரிக்களையும் நாங்கள்தான் தேர்வுசெய்கிறோம்.

அமிதாப் பச்சன் இந்த ஃப்லிம் பெஸ்டிவலுக்காக பதினொரு லட்சம் கொடுத்திருக்கிறார். அதனை வங்கியில் கொடுத்து அதிலிருந்து வருகிற வட்டிப் பணத்தை இளம் தலைமுறையினர்களில் சிறந்த கலைஞர்களுக்கு விருது கொடுத்து வருகிறீர்கள். அதையே ஏன் வறுமையில் படம் எடுத்து சிரமப்படுபவர்களுக்கோ, அல்லது தன்னிச்சையாக திரைப்படம் எடுக்க நினைக்கின்ற ஆவணப்பட இயக்குனர்களுக்கோ, குறும்பட இயக்குனர்களுக்கோ கொடுக்காமல் அனிருத் போன்ற பணம் படைத்தவர்களுக்கு கொடுத்து வருகிறீர்கள்.?

இதற்கான அர்த்தம் அப்படியில்லை. ஆவணப்படமே போடாமல் ஒரு ஆவணப்பட இயக்குனருக்கு அதனைக் கொடுக்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதினோரு லட்சம் தருவதாக அமிதாப் பச்சன் மேடையில் பேசினார், மூன்று நாள் கழித்து அவரிடமிருந்து காசோலை வந்துவிட்டது. மற்றவர்கள் போல பேச்சு ஒன்று செய்கை ஒன்று என்பது போல இல்லாமல் வீட்டிற்குச் சென்று சேர்ந்தவுடனே காசோலையை அனுப்பிவைத்தார். எங்கள் கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து அதனை ஃபிக்ஸ்ட் டெபாஸிட்டில் போட்டுவைத்து, அதிலிருந்து வருகின்ற பணத்தை வைத்து “youth icon award” கொடுக்கலாம் என்று முடிவு எடுத்தோம். திரைப்படத்துறையில் எந்த பிரிவாக இருந்தாலும் வளரும் இளம்தலைமுறையினருக்கு அந்த விருது கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அச்சமயத்தில் வளர்ந்துவருகின்ற இளம் இசையமைப்பாளர் பெயர் வாங்கியிருக்கின்ற ’அனிருத்’ பெறுகின்ற பொழுது அந்த விருதுக்கும் ஒரு பெயர் கிடைக்கும் என்ற காரணத்தினால் அப்படிச் செய்தோம்.

இந்தமுறை ’ஜிகிர்தண்டா’ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிக்கு கொடுத்திருக்கிறோம். ஒரு வேளை அடுத்த முறை வேறொரு நடிகருக்கு கொடுக்கப்படலாம்.

இந்த நிலைமையில் நடிகருக்கு கொடுக்கவேண்டுமானால் சிவகார்த்திகேயன் போன்றோர் உள்ளனர். அது போன்று ஆட்களை கவனித்துக்கொண்டுதான் வருகிறோம். அவர்களின் செயல்பாடு நன்றாக இருக்கவே அவர்களுக்கு பரிசளிக்கிறோம். இது அவர்களுக்கு உந்துதலாக இருக்கும்.

ஆவணப்படத்திற்கும்,குறும்படத்திற்கும் போட்டி வைத்து ஒன்று தேர்வுசெய்து அதற்கும் பரிசுகள் கொடுக்கலாம். முதலில் அதனை திரையிட வழிமுறைகள் செய்ய வேண்டும். ஒரு வேளை நாமும் அதற்கான ஏற்பாடு செய்துவிட்டு படம் பார்க்க ஆட்கள் வரவில்லையென்றால் அந்தப்படத்தினை எடுத்தவர்கள் மனது புண்படும். இங்கு திரையிடுகிற படங்களைக் காணக்கூட அதில் நடித்தவர்கள், இயக்குனர்கள் யாரேனும் வரக்கூடும், ஒரு வேளை அந்நேரத்தில் கூட்டம் வரவில்லையானால் அவர்களுக்கு மன வருத்தம் கொடுக்கும். இதற்காகத்தான் சரியான திட்டமிடல் அவசியம். சில வெளிநாட்டு இயக்குனர்கள் எந்த திரையரங்கத்தில் திரையிடுகிறீர்கள் என்றெல்லாம் விசாரிக்கிறார்கள். 200க்கும் குறைவான பார்வையாளர்கள் இருக்கிற இடத்தில் என் படத்தை திரையிடுங்கள் என்றும் சொல்கிறார்கள். கூட்டம் குறைவாக இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை.

எடிட்டர் லெனின் இந்தியன் பனோரமாவிலும், கேரளா ஃப்லிம் பெஸ்டிவலிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். அவரைப்போன்றோரை சென்னை சர்வதேச திரைப்பட விழா எந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்கிறது.?

அவரோடு கலந்துபேசி விவாதித்திருக்கிறோம். இப்பொழுது அவர் கொஞ்சம் பல்வேறு வேலைகளில் இருப்பதால் இங்கு வரமுடியவில்லை. அவரது சகோதரர் கண்ணன் ஜீரியாக வந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய ஆரம்ப காலத்தில் என்னைத் தட்டிக்கொடுத்தவரே பீ.லெனின் அவர்கள்தான். பைலட் தியேட்டரில் படம் போட்டுக்கொண்டிருந்த பொழுது என்னுடன் வந்து நின்றவரே அவர்தான்.

படத்தை எவ்வித இடையூறும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சின்ன இடைவேளை கூட இல்லாமல் படம் போடுகிறீர்கள். படங்களின் கதையை தொகுத்து புத்தகமாக கொடுக்கிறீர்கள். ஆனால், பார்வையாளர்கள் கதவைத் திறப்பதும், முதல் பதினைந்து நிமிடங்கள் படம் பார்த்துவிட்டு படம் பிடிக்கவில்லையானால் தியேட்டரை விட்டு எழுந்துபோவதும், தொலைபேசியில் பேசுவதுமாக இருக்கிறார்கள். இந்த பார்வையாளர்களை எப்படி எதிர்நோக்குகிறீர்கள்?

பார்வையாளர்களை படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு பின்பாக உள்ளே விட மாட்டோம். திரைப்படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலிருந்து உள்ளே விடமாட்டோம் என்று திரையரங்கத்தின் முன் எழுதிப்போட்டிருக்கிறோம். யாராவது வெளியே போகவேண்டும் என்று சொன்னால் கூட பக்கவாட்டுக் கதவை பயன்படுத்தலாம் என்றுதான் சொல்வோம். அதேசமயம் நீங்கள் படம் பார்க்க உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு படம் பிடிக்கவில்லையானால் எழுந்து வெளியே போகக்கூடாது என்று என்னால் சொல்ல முடியாது. அது உங்களது விருப்பம் தானே. கால் மணி நேர இடைவெளியில் ஒரு படம் ஆரம்பிக்கிறோம். முதல் கால் மணிநேரம் படம் பார்த்துவிட்டு நன்றாகயிருந்தால் படம் பார்க்கலாம், இல்லையேல் அடுத்த திரையரங்கத்திற்கு சென்றுவிடுகிறார்கள். அதுமாதிரியாக இருப்பவர்கள், திரையரங்கத்திலிருந்து வெளியே செல்லலாம், ஆனால், மீண்டும் உள்ளே வரமுடியாது. ஆயிரம் இரண்டாயிரம் பேர் வருகிறார்கள். அவர்களில் யார் சிறந்த பார்வையாளர் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு விருது வழங்கவும் முடியாது. இதெல்லாம் சாத்தியமில்லை. படம் பார்ப்பவர்களே சூழ்நிலைகளைப் புரிந்து நடந்து கொள்ளலாம்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களுக்கு இந்த முறை விருது வழங்கியிருக்கிறீர்கள். அதன் பின்னணியில் எழுந்திருக்கும் சர்ச்சைகள் பற்றி?

இதனை தேர்வு கமிட்டி முடிவு செய்கிறது. ”பூவரசம் பீப்பீ” என்ற படத்திற்கு ஸ்பெஷல் மென்ஷன் என்ற பிரிவில் இந்த முறை சிறப்பு செய்திருக்கிறார்கள். இதன் இயக்குனர் ஒரு பெண் தான். அவர் சொல்கிறார், ” இரண்டாவது பெஸ்டிவலில் இருந்து இதனில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறேன். இந்தமாதிரியான பெஸ்டிவல் தான் ”பூவரசம் பீப்பி” மாதிரியான படம் எடுக்க எனக்கு தூண்டுகோலாக அமைந்த்து. அதற்காக நான் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சொன்னார். இதனை கமிட்டிதான் செயல்படுத்துகிறது.

தமிழ் படங்களுக்கு பணம் கொடுப்பது போலவே ஏன் மற்ற மொழி படங்களையும் தேர்ந்தெடுத்து பரிசுகள் கொடுப்பதில்லை?

பணம் இருந்தால் செய்யலாம். கேரளாவில் ஏசியன் ஃபிலிம் காம்பிடீசன், அல்லது லத்தீன் அமெரிக்கன் ப்லிம் காம்பிடீசன் என்று வைப்பார்கள். அவர்களால் பணம் ஒதுக்க முடியும், அவர்களிடமும் நிறைய பணம் இருக்கிறது. நாங்கள் இங்கு தமிழ் படங்களை முன்னிறுத்தும் வகையில் விழா நடத்திக்கொண்டிருக்கிறோம். மற்ற மொழி படங்களுக்கும் விருது என்று அறிவித்தால் குறைந்தது நூறு படங்களுக்கு மேல் வந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. அதற்கான ஜீரிக்கள் மூன்று பேர் வேண்டும். மூன்று பேரில் ஒரு இந்தியன் மீதி இரண்டு பேர் வெளிநாட்டினைச் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். ஜீரி என்ற பெயரில் ஒரு இயக்குனர் வந்தால் அவர் வந்து போகிற செலவு ஆறு லட்ச ரூபாய். பின்னர் அவர்களை ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்க வேண்டும், அவர்களுக்கும் தனி கார் கொடுக்கவேண்டும், இப்படிப் பார்த்தால் ஒவ்வொரு ஆளுக்கும் பத்து லட்ச ரூபாய் செலவாகும். எங்களுக்கு அவ்வளவு வசதியில்லை, இண்டர்நேஷனல் ஃப்லிம் காம்பிடிசன் வைக்க வேண்டும் என்ற சூழலும் இப்போதைக்கு தேவையில்லை. கர்நாடகத்தில் வைத்தால் கன்னட படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கேரளாவில் மட்டும் லத்தின் அமெரிக்கப்படங்களுக்கும், ஏசியன் இண்டர்நேஷனல் பிலிமுக்கும் போட்டி வைக்கிறார்கள்.

இந்த ஃப்லிம் பெஸ்டிவல்களில் ஒதுக்கப்பட்டவர்களாக சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் ஒரு திரையரங்கம் ஒதுக்கி அவர்களிடமும் திரைப்பட ரசனைக்கான விதையை விதைக்க நினைக்கவில்லையா?

இந்த ப்லிம் பெஸ்டிவல்களில் பங்குபெற பதினெட்டு வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஹைதராபாத்தில் சில்ட்ரன் பிலிம் பெஸ்டிவல் நடத்துகிறார்கள். சென்னையிலேயே கூட ’டான் போஸ் ஸ்கூலில்’ நடத்தியிருக்கிறார்கள். இதுமாதிரியாக யாரேனும் எங்களுக்கு நடத்திக் கொடுங்கள் என்று கேட்டால் தாராளமாக செய்துகொடுப்போம். படங்களை எப்படியும் கொண்டுவந்துவிடலாம். இன்ன பிற தியேட்டர், வசதிகளை யார் செய்துகொடுப்பது. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக கூட ரஷ்யன் கல்ச்சுரல் சென்ரலில் திரையிடல் நடத்தியிருக்கிறோம்.

ஐ.சி.ஏ.எஃப்க்காக ஆரம்பத்திலிருந்து உழைத்தவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இன்றைக்கிருக்கின்ற வெகுஜன சினிமாக்காரர்களோடு சேர்ந்து, இந்த பெஸ்டிவல் நடத்துவதாக வருகின்ற குற்றச்சாட்டு குறித்து?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எங்கள் சுதந்திரத்தில் யாரும் குறுக்கிடவும் மாட்டார்கள். அதற்கு நாங்கள் ஒத்துழைக்கவும் மாட்டோம். ஏழாவது ஃப்லிம் பெஸ்டிவலின் போது சுஹாசினியும், ரேவதியும் ஜீரியாகத்தான் வந்தார்கள். நான் ஒவ்வொரு முறையும் இலவசமாக பாஸ் தருகிறேன் என்று சொன்னால்கூட நான் பணம் கொடுத்தே வாங்கிச்செல்கிறேன் என்று சுஹாசினி செல்வார். அவர்களே பெஸ்டிவல் முடித்தவுடன் சொல்கிறார்கள், ”இந்த மாதிரியான கருத்துகொண்ட படங்கள் ஏதும் வெளியில் அதிகமாக இல்லை. அப்படியிருக்கையில் இந்தமாதிரி தரம் வாய்ந்த படங்களைத் திரையிடுகின்ற உங்களுக்கு ஏன் விளம்பரங்கள் அதிகமாகயில்லை”, என்று கேட்கிறார்கள். அப்படியிருக்கையில் அவர்களாகவே உள்ளே வந்து உங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு பணவசதி கிடைக்க முயற்சித்தார்கள். நிகழ்ச்சிகள் நடத்தவும் உதவி செய்தார்கள். ஹாஸ்பிட்டாலடிக்காக சவேரா ஹோட்டலைக் கேட்கையில் எனக்கான அப்பாய்ண்ட்மெண்டே கிடைக்காது. ஆனால், சுஹாசினி தொலைபேசியின் வாயிலாகவே தகவல் சொல்லி ஆறு ரூம்கள் இலவசமாக வாங்கிக்கொடுத்தார்கள். பழைய ஆட்களை நாங்கள் ஒதுக்கவும் இல்லை. இன்னமும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். இதில் ஒதுக்கப்படுகிறவர்களென்று யாருமே கிடையாது. இதில் சினிமாக்காரர்களின் தலையீடு, குறிக்கீடு என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அதேபோலத்தான் சரத்குமார் அவர்களும், அன்றைக்கு பாலச்சந்தர் இறந்த அன்று மிகவும் துயரத்தில்தான் இருந்தார். ஆனாலும் பெஸ்டிவலின் துவக்க விழா அன்று எங்களுடன் இருந்தார். சுஹாசினியும் படப்பிடிப்பு வேலைகளால் முழுமையாக பங்குபெற முடியவில்லையாயினும் துவக்க விழா அன்றும், நிறைவு விழா அன்றும் எங்களுடன் இருந்தார். எவ்வித பிரதிபலனும் இல்லாத குழு எங்கள் குழு. குறைகள் இருக்கலாம், சொல்லுங்கள் நிவர்த்தி செய்கிறோம். தொடர்ந்து பார்வையாளர்களாகிய உங்களின் ஆதரவுகள் இருந்தால்மட்டுமே எங்களால் சிறப்பான திரைப்பட விழாக்களைச் செயல்படுத்திக்காட்ட முடியும்.

மும்பையில் நடக்கிற பெஸ்டிவல்களிலெல்லாம் சென்சார் செய்யப்படாத படங்களைத் திரையிடுகிறார்கள். கமர்ஷியல் படங்களை அவர்கள் தவிர்க்கிறார்கள். பிரச்சனைக்குரிய படங்களுக்கு அவர்கள் வாய்ப்பளிக்கிறார்கள். இந்த முறை ’முசாபர் நகர்’ திரையிட்டார்கள். அதேபோல ஆவணப்படங்களுக்கு தனியாக ஒரு பகுதி கொடுக்கிறார்கள். மக்களின் பிரச்சனைகளைப் பேசுகிற படங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க 5000 பேர் கூடுகிற பெஸ்டிவல் சிறந்த வாய்ப்பாக சுயாதீன திரைக்கலைஞர்களுகு இருக்கிறது. இவர்களின் முயற்சிகளையும் வெளிக்கொணர சென்னை பெஸ்டிவல் முயற்சிக்கிறதா?

சில படங்களைப் பார்க்கிற பொழுதே தெரிந்துவிடும். ஒரு படம் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ, ஒரு அரசு அமைப்பையோ, அரசையோ, தனி நபரையோ திட்டுகிற மாதிரி கருத்து கொண்டிருந்தால் அந்தப்படத்தை நான் திரையிட மாட்டேன். இலங்கையிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் படங்கள் வந்தாலும் அதனை நான் திரையிடமாட்டேன். ஏனெனில் அரசியல் ரீதியாக அந்தப்படத்தினால் ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதால் அதைச்செய்ய மாட்டேன். ஆவணப்படம் எடுப்பவர்களைப்பார்த்தால் வேண்டுமென்றே சிலரைத் தாக்குவதுபோல எடுக்கத்தொடங்கிவிடுகிறார்கள். அந்தப்படங்களை ஒளிபரப்பவும் நாங்கள் சான்றிதழ் வாங்கவேண்டும். பின்பே அதனை ஒளிபரப்ப இயலும். அடுத்த ஆண்டோ, அதற்கடுத்த ஆண்டோ ஆவணப்படங்களையும், குறும்படங்களையும் திரையிட தனியான பிரிவு ஏற்படுத்தப்படும். அப்பொழுதுகூட அதையெல்லாம் சரியான முறையில் பரிசோதித்துத்தான் திரையிடுவோம். ஒரு சர்ச்சைக்குள்ளான கருத்தோ, தர்க்க ரீதியாக மன உலைச்சலை அளிக்க கூடிய படமாக இருந்தால் அதனை திரையிடாமல் தடுக்கவே முயற்சிப்பேன்.

நல்ல எண்ணெத்தில் படங்களைத் திரையிடுகிறோம். திரைப்பட விழா நடத்துகிறோம். அந்நேரத்தில் திடீரென படத்தை நிறுத்து என்று ரசிகர்கள் கத்தக்கூடாது. சிலர் சொல்கிறார்கள், பாலியல் ரீதியாக அதிகமான காட்சிகள் காட்டப்படுகிறது என்கிறார்கள். இது அந்நாட்டினருடைய கலாச்சாரம். அந்தப்படத்தைத் திரையிட நாங்கள் எக்ஸிம்ஜன் வாங்க வேண்டும். அதற்கு 5 பேர் சென்று இந்தப்படத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம், என்று வாக்குறுதி கொடுத்த பின்பு தான் சான்றிதழ் கொடுப்பார்கள். போன போக்கில் அந்த சான்றிதழை கொடுக்க மாட்டார்கள். தணிக்கைத்துறை உறுப்பினர்கள் கூட படம் பார்க்க வருவார்கள், அவர்கள் கூட படத்தின் மீது புகார் கொடுக்கலாம்.

அண்மையில் கூட பிரசன்ன விதானகேயின் படம் வடபழனியில் ஆர்.கே.வி ஸ்டூடியோஸில் திரையிட்டார்கள். அங்கும் கூட கூச்சல் தான் நிகழ்ந்திருக்கிறது. அவர்களுடைய நோக்கம் வேறு, எங்களுடைய நோக்கம் வேறு. சிங்களவர் என்றும், தமிழர் என்றும் பாகுபாடு, காழ்ப்புணர்ச்சியை எல்லாம் ஏன் நாம் பெஸ்டிவல்களில் கொண்டுசெல்ல வேண்டும் என்றுதான் தவிர்க்கிறோம்.

காவல்துறையே கூட இலங்கைப்படமா என்று கேள்வி கேட்பார்கள். ஏனெனில் இது அவர்களுக்கே இடையூறு ஏற்படுத்தும். நீங்கள் சொல்கிற மும்பை பெஸ்டிவல்களில் இது மாதிரியான படங்கள் போடுகிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் அதுவாக இருக்கும், எங்களுடைய நோக்கத்தில் திடமாக இருக்கிறோம். நாங்கள் அரசியல் ரீதியாக பிரச்சனை எழுப்புகிற படங்களைத் திரையிட மாட்டோம்.

செங்கடல் போன்ற படங்கள் திரையிட மறுக்கப்பட்டதன் காரணமாக பிரச்சனைகள் நடந்திருக்கிறது. தமிழ் படங்களைத் திரையிடத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல் என்ன?

தமிழ் படங்கள் திரையிடலில் பன்னிரண்டு படங்கள் வேண்டும். கடந்த ஆண்டு அக்டோபர் 16 முதல் இந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி வரைக்கும், தணிக்கையான தமிழ் முழுநீளப்படம் தேர்ந்தெடுக்கிறோம். தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது முதல் விதி. அது திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அது தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தப்படங்களின் குறுந்தகடுகளைக் கேட்போம். அவர்களும் கொடுப்பார்கள். அந்தப்படத்தினையும் பார்ப்போம். அதுமாதிரியாக அவர்கள் கொடுத்த இருபத்திரண்டு படங்களிலிருந்து பன்னிரண்டு படங்களைத்தேர்ந்தெடுக்கிறோம். எங்களுடைய கமிட்டிதான் அதனை தேர்ந்தெடுக்கிறது.

இதில் பல பிரச்சனைகளும் நடந்திருக்கிறது. ’செங்கடல்’ படம் தேர்வாகவில்லை என்று பிரச்சனையாகியிருக்கிறது. ’செங்கடல்’ படம் feature film அல்ல. அது டாக்யூ பியூச்சர் பிலிமாகத்தான் அதனைக்கொண்டு செல்கிறார்கள். அது நாங்கள் திரையிடுகிற வரையறைக்குள் வராது. அன்றைக்கு லீனா மணிமேகலை அதனை அரசியலாக்கப்பார்த்தார்கள். கத்தினார்கள்.சண்டை போட்டார்கள்., அதற்குப் பின்பாக அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதே தெரியாது.

பின்பு சீனு ராமசாமியின் ’நீர்ப்பறவை’ படம் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கும் படம், அதனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அப்படி நேஷனல் அவார்டு வாங்கியிருந்தாலோ, இந்தியன் பனோரமாவில் தேர்வாகியிருந்தாலோ அதனை அப்படியே சேர்த்துக்கொள்வோம். போன வருடம் ’தங்கமீன்கள்’ இந்தியன் பனோரமாவில் வந்த படம். இந்த ஆண்டு ஒரேயொரு படம் தான் வந்திருந்தது. அதுவும் ’குற்றம் கடிதல்’ அதனையும் எடுத்துக்கொண்டோம். பின்னர் அது தரமானதாகயிருந்தால் விருதும் வழங்குகிறோம். இதனை ஜீரிக்கள் முடிவு செய்கிறார்கள். இந்த முறை நாசர், பூர்ணிமா பாக்யராஜ் போன்றோர் இருந்தனர்.

திரைத்துறையைச் சார்ந்த ஒரு ஆண், ஒரு பெண், மற்றும் பத்திரிக்கையாளர் கொண்ட குழுவே ஜீரிக்களாக இருப்பார்கள். நான் தேர்வுக்குழுவில் தலையிடுவதுகூட இல்லை. இன்றைக்கு விருது வழங்கும் விழா என்றால் மாலை ஆறு மணிக்குத்தான் எந்தப்படம் தேர்வாகியிருக்கிறது என்று சொல்வார்கள். பின்னர் என்னிடம் வந்து ’ஜிகிர்தண்டா’ ஏன் எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். உங்களுக்கு நல்ல படமாக தெரிவது எங்களுக்கு நல்லபடமாக தெரிந்திருக்காது. மேலும் கமர்ஷியல் வெற்றி என்பது வேறு, ஃபெஸ்டிவல் சர்க்யூட் என்பதும் வேறு. உங்களுடைய படங்களை வெளிநாட்டுக்காரன் வந்து பார்க்கவேண்டும். அவனும் நல்லாயிருக்கு என்று சொல்லவேண்டும். அந்த கோணத்தில் தான் நாங்கள் படத்தைப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு பிரபு சாலமனின் ”மைனா” படத்தை ஃபிலிம் சேம்பரில் மூன்று வருடத்திற்கு முன்பு திரையிட்டோம். இரு ஜப்பான் பெண்மணிகள் படம் பார்த்துப் பாராட்டுகின்றனர். கதாநாயகன் , கதாநாயகியின் காலிலிருந்து முள் எடுப்பதைப்பார்த்து அந்தப்பெண்கள் படம் பெயரைச் சொல்கிற அளவிற்கு அவர்களை அந்தப்படம் ஈர்த்திருக்கிறது.

அம்மாதிரியாக வெளிநாட்டவர் பார்த்து பாராட்டுவதைத்தான் விரும்புகிறோமே தவிர கமர்ஷியல் சக்ஸ்ஸ் என்கிற வட்டத்திற்குள் நாங்கள் போகமாட்டோம். காண்ட்ரவெர்சியல் இல்லாமல்தான் கொண்டுபோகிறோம்.

இந்தியன் பனோரமாவிற்கு 27 தமிழ் படங்கள் போனது. மராத்திப்படங்களும், கேரளாப்படங்களும் நிறையவே தேர்ந்தெடுத்தார்கள். ஏன் ஒரு தமிழ்படம் மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். கேரளாவிலும், மராத்தியிலும் ஏழு படங்கள் தேர்வாகிற பொழுது ஏன் தமிழில் மட்டும் ஒரு படம் என்று இவர்கள் ஏன் சண்டைபோடவில்லை. இவர்கள் தான் கேட்க வேண்டும். எந்த விதத்தில் எங்கள் தமிழ் படம் குறைந்துவிட்டது. சண்டைபோட அங்கு ஆள் இல்லை. இல்லையேல் வேறு ஆட்களைப் போட வேண்டும். நாம் மற்ற மாநிலத்தவரின் படங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
 
  </