கோவா - திரைப்பட விழா - அனுபவங்கள்
‘பள்ளிக்கட்டு சபரி மலைக்கு…கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என ஐயப்ப பக்தர்கள் கேரளா கிளம்பிச்செல்லும் போது நாங்கள் கோவா செல்வோம். ஐயப்பபக்தர்கள் இருமுடி கட்டி கிளம்புவது போல் இரண்டு டிசர்ட்டை மட்டும் மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டு விடுவார் என் குருசாமி இயக்குனர் அருண் கார்த்திக். 22 வயது அருண் கார்த்திக்கை குருசாமியாக ஏற்றுக்கொள்ள எந்த தயக்கமும் இல்லாத 52 வயது உலகசினிமா பக்தன் நான். 2013ல் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இருவரும் கலந்து கொண்டோம். 2014ல் தமிழில் ஒரு உலகசினிமாவை படைத்து, அந்த படைப்போடு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என சத்தியம் செய்து கொண்டோம். 2013 சத்தியம்….2014ல் சாத்தியமாயிற்று.
|
அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவான ‘சிவபுராணம்’, என்.எப்.டி.சி பிலிம் பஜாரில், தேர்வான 17 படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு இருந்தது. மற்ற திரைப்பட விழாக்களை விட கோவா சர்வதேச திரைப்பட விழாவை முக்கியமாக கருதக் காரணம், ‘என்.எஃப்.டி.சி பிலிம் பஜார்’. கோவா சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக ‘என்.எப்.டி.சி பிலிம் பஜார்’ உற்சவம் நடைபெறுகிறது. சிறந்த திரைக்கதை, சிறப்பாக உருவாக்கப்படும் படைப்பு, ஆவணப்படம் என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தி விருதும்,பரிசுத்தொகையும் கொடுக்கிறது என்.எப்.டி.சி பிலிம் பஜார். முதல் பரிசை தேர்வு செய்வது கான்,வெனிஸ் போன்ற உலகப்புகழ் பெற்ற சர்வதேச விழாவை நடத்தும் தளபதிகள்.
இயக்குனர் அருண் கார்த்திக் பிலிம் பஜாரில் கலந்து கொள்ள, நான் தினமும் குறைந்தது ஐந்து உலகசினிமாக்களை பார்த்தேன். நான் பார்த்து வியந்த மிகச்சிறந்த உலகசினிமாக்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவற்றை ‘திருக்குறள்’ அளவில் அறிமுகம் செய்து வைக்கிறேன்.
|
I Won’t Come Back [ Ya Ne Vernus ] | 2014 | Kazakhstan | 109 min | Directed by : Ilmar Raag.
இரண்டு மலைகளில் பிறந்த ‘அநாதை நதிகள்’ ஒன்றாக பயணித்து ஒரு ‘இலக்கை’ அடைய முற்படுகின்றனர்.
விதியின் சதியால் ஒரு நதி ‘வற்றி விட’ மற்றொரு நதியாவது இலக்கை அடைந்ததா ?
Forgotten [ Olvidados ] | 2014 | Bolivia | 112 min | Directed by : Carlos Bolado.
70களில், தென் அமெரிக்க நாடுகளில் உள்ள சர்வாதிகார அரசுகளின் அதிகார வர்க்கம் அமெரிக்க துணையோடு கம்யூனிஸ்ட் போராளிகளை வேட்டையாடிய வரலாற்றை வலியோடு சொல்லும் படம்.
நாஜி சித்ரவதைக்கூடத்தை வடிவமைத்து போராளிகளை சித்ரவதை செய்து கொன்று குவிக்கும் மிருகங்கள் இடையே ‘ஒரு புனிதனும்’ இருந்ததை திரைக்கதையாக்கிய காவியம் இது.
When You Wake Up [ Pakeliui ] | 2014 | Lithuania | 98 min | Directed by : Ricardas marcinkus.
போதை மருந்துக்கு அடிமையான ஒரு பாடகனை திருத்தி வாழ வைக்கிறாள் ஒரு குட்டி தேவதை.
பாடகனுக்கு இழந்த புகழையும், காதலியையும் மீட்டுக்கொடுக்கும் குட்டி தேவதையின் சாகசங்கள்தான்…
இந்த ‘பீல் குட் மூவி’.
The Director’s Angst [ Cherdat Ha-Bamai ] | 2014 | Israel | 83 min | Directed by : Dan Wolman.
ஒரு இயக்குனரது முதல் படத்தின் அறிமுக திரையிடல் நிகழ்ச்சியையும், அந்த திரைப்படத்தின் காட்சிகளையும் ஒருங்கிணைத்து திரைக்கதையாக்கி விட்டார் இயக்குனர். ஒரு திரைப்படத்தின் திரையிடலில் நிகழும் அத்தனை அபத்தங்களையும் சாடி, சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இந்த இயக்குனர்.
Winter Sleep [ Kis Uykusu ] | 2014 | Turkey | 196 min | Directed by : Nuri Bilge Ceylan.
2014 கான் திரைப்பட விழாவில் உயரிய விருதைப்பெற்ற இத்திரைப்படத்தின் இயக்குனர் பெயர் ‘சிலான்’ என்றாலே தரம் எளிதில் விளங்கும். நின்று நிதானித்து அனுபவிக்கும் 196 நிமிட ஓவியம் இது.
The Wonders [ Le Meraviglie ] | 2014 | Italy | 111 min | Directed by : Alice Rohrwacher.
வீடு இருந்தாலும் கதவு கூட இல்லாத எளிய வாழ்க்கையில் இனிமையை காணும் எளிய விவசாயி அவன்.
அவனது கட்டுப்பாடான வாழ்க்கையை, தொலைக்காட்சி எனும் ஊடகம் புயலாக…பூகம்பமாக நுழைந்து கலைத்துப்போடுவதை மிக அழகியலோடு படம் பிடித்து ‘விமர்சித்து இருக்கிறார் இயக்குனர்.
Leviathan | 2014 | Russia | 141 min | Directed by : Andrey Zvyagintsev.
குடும்பம், அரசியல், மதம், சமூகம் என பல்வேறு காரணிகளால் எழும் சிக்கல்களை பேசுவதைப்போல் இக்காவியம் தோற்றமளிக்கும். மிக வலிமையான குறியீடுகளாலும், காட்சிகளை கட்டமைத்த விதத்தாலும் சோவியத் ரஷ்யாவின் மாட்சிமையையும், ரஷ்யாவின் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டி விமர்சித்து இருக்கிறார் இயக்குனர்.
Ida | 2013 | Poland | 80 min | Directed by : Pawel Pawlikowski.
கன்னியாஸ்திரியாவது…காதலனை கைப்பிடிப்பது… ‘நேற்றுமில்லை….நாளையில்லை…எப்பவும் ராஜா’ என சந்தோஷமாக…சுதந்திரமாக இருப்பது….என மூன்று விதமான வாழ்க்கையில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய ‘கதாநாயகி’. மூன்று வித வாழ்க்கையையும் விளக்கி, இறுதியில் கதாநாயகி ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கைப்பாதை சரிதானா? என்ற விமர்சனத்தை பார்வையாளனை எழுத வைத்து இருக்கிறார் இயக்குனர்.
Los Hongos | 2014 | Colombia | 103 min | Directed by : Oscar Ruiz Navia.
இளைஞர் பட்டாளத்தின் கனவு,கொண்டாட்டம்,இசை, நடனம், ஓவியம், மூச்சு, பேச்சு அனைத்தையும் எதேச்சதிகாரத்திற்கெதிராக திருப்பி விடும் வல்லமை வாய்ந்த படம். அனைத்து கல்லூரிகளிலும் கட்டாயம் ‘ரகசியமாக’ காட்டப்பட வேண்டிய மிக முக்கியமான அரசியல் படம்.
Hippocrates | 2014 | France | 102 min. | Directed by : Thomas Lilti.
மருத்துவர்களின் கொண்டாட்டங்கள், துயரங்கள் அனைத்தையும் பகிர்ந்த படம். தன் திரைப்படத்தை, திரைக்கதை அமைப்பால்…ஜேம்ஸ்பாண்ட் படங்களை விட விறுவிறுப்பாக நகர்த்தி சாதித்து இருக்கிறார் இயக்குனர்.
Like Never Before [ Jako Nikdy ] | 2014 | Czech Republic | 98 min | Directed by : Zdenek Tyc.
இவன் போல வாழ்ந்து மறைய வேண்டும்…என பொறாமையை தூண்டும் ஒரு ஓவியனது வாழ்க்கை காவியம்தான் இத்திரைப்படம். ஒவ்வோரு கதாபாத்திரத்துக்கும் முக்கியம் தந்து யாரையும் புனிதப்படுத்தாமல் மிக நேர்மையோடு ஒவ்வொருத்தர் குறைகளையும் நிறைகளையும் காட்சிப்படுத்தியதில் ‘காப்பியம்’ படைத்து இருக்கிறார் இயக்குனர்.
Sivas | 2014 | Turkey | 97 min. | Directed by : Kaan Mojdeci.
ஒரு சிறுவனது காதல், காமம், கோபம், குரோதம், மனிதநேயம் போன்ற குணங்களை அச்சு அசலாக ‘கேண்டிட் கேமரா’ போல் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். திரையில் இச்சிறுவனின் சித்து விளையாட்டை பார்க்கும் போது ‘இவந்தான் நான்’ என பார்வையாளர்களை உணர வைத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.
Today | 2014 | Iran | 87 min. | Directed by : Reza Mirkarimi.
ஒரு டாக்சி டிரைவரின் ஒரு நாள் நிகழ்வை படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குனர். இரான் நாட்டு சென்சார் கண்களில் எத்தனை அழகாய் மண்ணைத்தூவி, காட்சிக்கு காட்சி இரான் அரசியலை விமர்சித்து இருக்கிறார் இயக்குனர் !.
The Way He Looks [ Hoje Eu Quero Voltar Sozinoho ] | 2014 | Brazil | 95 min. | Directed by : Daniel Ribeiro.
ஒரு பார்வையற்ற இளைஞனது ‘ராஜபார்வையை’ மிக யதார்த்தமாக பதிவு செய்த படம். சம வயதுள்ள மூன்று இளைஞர்கள் தங்களுக்குள் இருப்பது நட்பா…காதலா…என்பதை பிரிவின் வழியாக தெரிந்து கொள்வதை மிகச்சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
Beyond-Beyond [ Resan Till Fjaderkungens Rike ] | 2014 | Sweden | 78 min | Directed by : Esben Toft Jacobsen.
‘இதுதாண்டா 3டி அனிமேஷன்’ என ‘ஹாலிவுட் அப்பனுக்கு’ பாடம் சொன்ன ‘சுப்பன்’ இந்த இயக்குனர்.
கதைக்கருவும்…கையாண்ட விதமும்…தொழில்நுட்பமும்… போட்டி போட்டு மிரட்டிய படம்.
Timbuktu | 2014 | France | 96 min. | Directed by : Abdherrahmane Sissako.
இது என் கதை அல்ல…உன் கதை…என காட்சிக்கு காட்சி உணர வைப்பதில் வெற்றி காண்பவர் இயக்குனர் சிஸாகோ.
கால் பந்தாட்டம் தடை செய்யப்பட்ட நாட்டில் மைதானத்தில் ‘மாயப்பந்தை’ உருவாக்கி இளைஞர் பட்டாளம் விளையாடும் ‘கால்பந்தாட்ட போட்டி’ ஒன்று போதும் இப்படத்தை காலமெல்லாம் நினைவில் வைத்திருக்க !.
Goodbye To Language [ Adieu Au Language ] | 2014 | France | 70 min. | Directed by : Jean-Luc Godard.
உலகின் தலை சிறந்த பத்து இயக்குனர்களில் ஒருவரான கோடார்ட் இன்றும் நம்மிடையே வாழும் 84 வயது சகாப்தம்.
இது வரை கடைப்பிடிக்கப்படும் சினிமா மொழிக்கெல்லாம் ‘குட்பை’ சொல்வதற்கென்றே ஒரு படம் எடுத்து இருக்கிறார் ‘மேதைகளுக்கெல்லாம் மேதையான’ கோடார்ட்.
A Few Cubic Meters Of Love [ Chand Metere Moka’ab Eshgh ] | Afghanistan | 2014 | 90 min. | Directed by : Jamshid Mahmoudi.
ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தின் துவக்க காட்சி போல் தடதடத்து, இறுதியில் இரத்தத்தை உறைய வைத்து விட்டார் இக்காதல் கதையின் இயக்குனர். ஒரு காதல் கதைக்குள் இத்தனை அரசியலா…இத்தனை அழகியலா…இத்திரைப்படத்தை உருவாக்கியது ஆப்கானிஸ்தானா !..எனக்காட்சிக்கு காட்சி வெட்கி தலை குனிய வைத்த படம்.
A Pigeon Sat On A Branch Reflecting On Existence | 2014 | Sweden | 100 min. | Directed by : Roy Andersson.
இயக்குனர் ராய் ஆண்டர்சன் உருவாக்கிய டிரையாயலஜியில் இத்திரைப்படம்தான் மூன்றாவது காண்டம்.
மனித நேயத்தை தொலைத்து விட்டு இந்த உலகம் எத்தனை கொடூரமாக வன்முறையில் இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை இக்காவியத்திலும் படம் வரைந்து பாகத்தை குறித்து இருக்கிறார் இயக்குனர்.
Mommy | 2014 | Canada | 134 min. | Directed by : Xavier dolan.
ஒரு திரைப்படத்தின் தொழில் நுட்பத்தை அதன் ‘கதைக்கருதான்’ தீர்மானிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட வந்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தை காண இரு கண்களையும் , பாராட்டி கை தட்ட இரு கரங்களையும் வழங்கிய கடவுளுக்கு நன்றி.
[ கோவா, சென்னை இரு விழாக்களிலும் திரையிடப்பட்ட சில காவியங்களை தவிர்த்து இருக்கிறேன்.]
கோவாவில் என்.எப்.டிசி நடத்திய ‘பிலிம் பஜாரில்’ இயக்குனர் அருண் கார்த்திக் உருவாக்கிய ‘சிவ புராணம்’ முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு ‘பத்து லட்சம்’ ரொக்கமாக உதவித்தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்ற இனிய செய்தியோடு கோவாவிடமிருந்து விடை பெற்றோம்.
சர்வதேச திரைப்பட விழாக்கள் பார்வையாளர்களிடமும்,படைப்பாளிகளிடமும் ஒருங்கே ரசனையை வளர்க்கிறது.
பல்வேறு நாடுகளின் படைப்புத்திறனை, கலாச்சாரத்தை,அரசியலை என பல்வேறு பரிமாணங்களை அறியத்தருகிறது.
வெளிநாடுகளில் இருந்து தங்கள் படைப்புகளோடு வந்து கலந்து கொள்ளும் படைப்பாளிகளை உள்ளூர் படைப்பாளிகள் கலந்து உரையாடி தங்கள் படைப்புத்திறனை மேம்படுத்த வழி வகை செய்கிறது.
சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைக்கு வழி வகை செய்கிறது. ஆனால் 12 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் ‘சென்னை சர்வதேச திரைப்பட விழா’ இத்தகைய பணியினை செய்கிறதா ? கோவா, கேரளா, சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட அனுபவத்தில் சில பரிந்துரைகளை முன் வைக்கிறேன்.
1. சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.ஒரு அரசால்தான் விழாவை பிரம்மாண்டமாக்கி வெற்றி காணச்செய்ய முடியும். உ.ம்: உலகத்தமிழ் மாநாடு.
2. ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனி வாரியமே அமைக்கப்பட வேண்டும். வாரியம் அமைக்கப்படும் போது விழாவுக்காக வருடம் முழுக்க செயல்படும் ஒரு அமைப்பு உருவாகி விடும்.
3. உண்மையான உலகசினிமா ரசிகர்களை கொண்ட குழு அமைத்து செயலாற்ற வேண்டும்.
4. அக்குழு உலகெங்கிலும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று நடப்பாண்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த உலகசினிமாக்களை ‘சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்’ திரையிட வேண்டும்.
5. திரையிடப்படும் உலகசினிமா படைப்பாளிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களை நம் விழாவில் பங்கு பெறச்செய்ய வேண்டும்.
6. படைப்பாளிகளுடன் கலந்துரையாட தனி அரங்கங்கள் அமைக்கப்பட வேண்டும்.
7. தமிழகத்திலுள்ள அனைத்து விசுவல் கம்யூனிகேஷன் ஆசிரியர்கள், மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்பது கட்டாயமாக்க வேண்டும்.பதேர்பஞ்சலி கூட பார்க்காத ஆசிரியர்கள் விஸ்காம் ஆசிரியர்களாக உலா வருகிறார்கள்.
8. கலந்து கொள்ளாத கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் தடா…பொடா போன்ற சட்டங்கள் இயற்றி தண்டிக்கலாம்…தப்பில்லை.
9. சென்னை சத்யம்,அபிராமி போன்ற பெரிய திரையரங்குகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் தினசரி ‘பாஸ்களை’ வழங்கி ‘உலகசினிமாக்களை’ பார்வையிடச்செய்ய வேண்டும். ‘குடும்பத்தோடு’ பார்க்கும் வகையிலான ‘உலகசினிமாக்களை’ தேர்வு செய்து திரையிட வேண்டும். உ.ம்: சில்ட்ரன் ஆப் ஹெவன், பேண்ட்ரி, ராபிட் ப்ரூப் பென்ஸ்.
10. சர்வதேச அனிமேஷன் திரைப்படங்கள், ஆவணத்திரைப்படங்கள், குறும் படங்கள் முதலியவற்றையும் கட்டாயம் திரையிட வேண்டும். இதன் நீட்சியாக ஒவ்வொரு பிரிவுக்குமே தனித்தனி விழாக்களை அமைத்து கொண்டாடப்பட வேண்டும்.
11. சென்னை நகரம் முழுக்க விளம்பர பதாகைகள், மின் விளக்கு அலங்காரங்கள் அமைத்து திருவிழாக்கோலம் பூணச்செய்ய வேண்டும்.
12. சர்வதேச திரைப்படங்களோடு, தமிழ் சினிமாக்களை மோத விட்டு ‘சிறந்த விருது’ வழங்கப்பட வேண்டும்.அப்போதுதான் தமிழ் சினிமாவின் தரம் சர்வதேச தரத்திற்கு மேம்படும்.
13. கோவாவில் என்.எப்.டி.சி நடத்தும் ‘பிலிம் பஜார்’ சென்னையிலும் நடத்தப்பட வேண்டும். தரமான தமிழ் சினிமாக்கள் உருவாக ‘பிலிம் பஜார்’ துணை செய்யும்.மாற்று சினிமா தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள் என அனைவருமே பயன் பெற முடியும்.வழி காட்டல் கிடைக்கும்.
14. கோவா,கேரளா போன்று, ஒரு திரை அரங்கிலிருந்து மற்றொரு திரை அரங்கிற்கு மாறிச்சென்று படம் பார்க்க ஏதுவாக ‘இலவச ஆட்டோக்களை’ இயக்க வேண்டும்.
15. உட்லண்ட்ஸ்,காசினோ திரையரங்குகளுக்கு ‘குட்பை’ சொல்லி விட்டு ‘மல்டிப்ளக்ஸ்’ தியேட்டர்களில் மட்டும் திரையிட வேண்டும்.
16. ‘திரையிடல் அட்டவணையில்’, எந்த ‘பார்மேட்டில்’ திரைப்படம் திரையிடப்படுகிறது என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும். உ.ம்: டி.சி.பி., 35 எம்.எம்., ப்ளுரே , டிவிடி [ 2014 விழாவில் சில படங்கள் ‘திருட்டு டிவிடியில்’ படம் பார்க்கும் எபெக்டை உண்டு பண்ணியது ]
17. அரங்கத்தில் பேசும் அம்பானிகளிடமிருந்து செல்போனை பிடிங்கி மிக்சியில் போட்டு அரைத்து விட வேண்டும்.
18. முக்கியமாக அரசு விழாவாக நடக்க வேண்டும். ஆளும் கட்சி விழாவாக நடத்தக்கூடாது.
19. அம்மா விருது, ஆட்டுக்குட்டி விருது போன்ற ‘ஜால்ரா விருதுகள்’ ஒழிக்கப்பட வேண்டும்.
20. உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகள் ‘சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்’ விருது பெறுவதை கனவாக கொண்டிருக்க வேண்டும்.
21. கனவு மெய்ப்பட வேண்டும்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi |