இதழ்: 27     மார்கழி (January 01 - 15), 2015
   
 
  உள்ளடக்கம்
   
திரைப்பட விழா அனுபவங்கள் : கலை – சந்தை – அரசியல் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
சென்னைத் திரைப்பட விழா - தங்கராஜ் நேர்காணல் - தினேஷ், அருண் (தமிழ் ஸ்டுடியோ)
--------------------------------
வூட்லேண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கட்டுடன் நேர்காணல் - தினேஷ், அருண் (தமிழ் ஸ்டுடியோ)
--------------------------------
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - அனுபவங்கள் - படிமை மாணவர்கள் (தமிழ் ஸ்டுடியோ)
--------------------------------
கேரளத் திரைப்பட விழா - அனுபவங்கள் - வைஷ்ணவ் சங்கீத்
--------------------------------
பெங்களூரு திரைப்பட விழா - அனுபவங்கள் - 'கருந்தேள்' ராஜேஷ்
--------------------------------
கோவா - திரைப்பட விழா - அனுபவங்கள் - உலக சினிமா ரசிகன்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 10 - தினேஷ் குமார்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா - தினேஷ் குமார்
--------------------------------
 
   
 


   

 

 

சென்னைத் திரைப்பட விழா

12'வது சென்னை சர்வதேச திரைப்படவிழா - அனுபவங்கள்

- படிமை மாணவர்கள் (தமிழ் ஸ்டுடியோ)

சினிமா இன்று ஒவ்வொரு சராசரி மனித வாழ்விலும் இரண்டற கலந்து விட்டது. நான்கு பேர் ஒன்று கூடினால் கூட சினிமா தான் அதிகமாக பேசப்படுகிறது. அரசியல் பற்றிய பேச்சு வந்தாலும் நடிகர், நடிகை எந்த கட்சியில் மாறினார் என்று தான் பேச்சு போகிறது. அப்படி சினிமா ஏற்படித்திய தாக்கம் என்பது அதிகமானது தான்.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் வெளியாகும் ஹீரோயிச தாக்கம் கொண்ட சினிமா நமது திரையரங்குகளில் பார்ப்பதற்கு மிக எளிதாக கிடைக்கிறது. ஆனால் கலை வடிவம் கொண்ட உலக சினிமா என்று சொல்லக்கூடிய ஈரான், இத்தாலி, ரஷ்யா, சீனா, கொரியா, லத்தின் அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளின் திரைப்படங்கள் இங்குள்ள நமது திரையரங்குகளில் பார்ப்பதற்கு திரையிடப்படுவதில்லை.

இந்த உலக சினிமாக்கள் பெரும்பாலும் அந்த நாட்டு மக்களின் பண்பாடு, கலாச்சாரம், நிலம், வீரம், போர், அரசியல், வறுமை போன்றவற்றை பிரதிபலிக்ககூடியவை, இது போன்ற சினிமாவை சென்னையில் உள்ள திரைப்பட சங்கங்கள் மற்றும் பிற சினிமா இயக்கங்கள் தொடர்ந்து திரையிடல் நடத்திவருகிறது. இருந்தபோதிலும் இதனை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் [ICAF] சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவாக நடத்திவருகிறது.

இந்தாண்டு 12'வது திரைப்பட விழா திசம்பர் 18 முதல் 25'ம் தேதி வரை நடைப்பெற்றது. உட்லன்ஸ், உட்லன்ஸ் சிம்பனி, கேசினோ, ஐநாக்ஸ் மற்றும் ரஷ்யன் கலாச்சாரமையம் என ஐந்து திரையருங்குகளிலும், ஒரு நாளைக்கு ஐந்து கட்சிகள் வீதத்தில் திரையிடப்பட்டது.

முதல் நாளான திசம்பர் 18'ம் தேதி தொடக்க விழா நடைப்பெற்றது. இதில் பல பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியமாக இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டார். தொடக்கம் முதலே மக்களின் முதல்வர் என்று அம்மாவின் துதிபாடல் தான் இருந்தது. இந்தாண்டு முதல் அம்மா விருது என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். இந்த விழாவில் இயக்குனர் மகேந்திரன் பேசியவற்றை குறிப்பிடவேண்டும், இங்கு நடைபெறும் இந்த விழாவை போல் தமிழ் நாடு முழுவதும் நடைபெற செய்யவேண்டும், நம் தமிழ் சினிமா இன்னமும் பாடல், சண்டைக்காட்சியை தூக்கி பிடித்து நிற்கிறது, இந்த நிலை மாற வேண்டும் என்றும், உலக சினிமாக்களை தொடர்ந்து பாருங்கள் என்றார். இரசனை மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தினார். சென்னையில் உள்ள திரைப்பட இயக்கங்கள் பல மாவட்டங்களில் உலக சினிமாக்களை திரையிடல் நடத்துகின்றது என்பதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உட்லன்ஸ், சிம்பனி திரையரங்குகளில் தான் பெரும்பாளான படங்கள் திரையிடப்பட்டன, இந்த திரையரங்குகளில்தான் இருக்கைகள் அதிகமாக இருந்தன, ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகள் மல்டி ப்ளக்சாக இருப்பதால் ஒரு காட்சியை தொடர்ந்து அதே திரையரங்குகளில் அடுத்த காட்சியை காண முடிவதில்லை. இந்த நிலைக்கு இது போன்ற வசதியான அரங்கில் இருக்கைகள் குறைவாக உள்ளதே காரணம், அதேபோல் ரஷ்யன் கலாச்சார மையத்தில் திரையிடப்பட்ட குற்றம் கடிதல் திரையிடலுக்கு முன் ரசிகர்களின் கூட்டம் அதிகமும், இருக்கைகள் பற்றாக்குறையும், நீண்டவாக்குவாதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இதே அரங்கில் திரையிடப்பட்ட என்னதான் பேசுவதோ திரைப்படம் பாதியிலே நின்றுவிட்டது, மேலும் திரைப்பட விழா நடத்திய எந்த திரையரங்கிலும் ஒரு மனிதனின் தாகம் தீர்க்கும் குடிதண்ணீர் கூட கிடைக்காத ஒரு அவலநிலையைத்தான் திரைப்படவிழாவில் நேர்ந்தது.

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் குறிப்பிடத் தகுந்த சில திரைப்படங்கள்.

JIMMY’S HALL [U.K. நாட்டுத் திரைப்படம்]
Jimmy’s அரங்கத்தில் ஆப்ரிக்காவின் நடனம், இசை போன்றவற்றை நடைமுறைப்படுத்தி மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கிறான் Jimmy. அதற்குள் பல இடையூறுகளை சந்திக்கிறான். இருந்த போதும் இளைஞர்களின் ஆர்வமும் வேகமும் தொடர்ந்து அதிகரிக்க Jimmy’s அரங்கம் வெற்றிகரமாக செயல்படுகிறது. கம்யூனிசம் பேசுபவர்கள், கடவுள் மறுப்பாளர்கள், வேற்று நாட்டு கலாச்சாரத்தினை கொண்டு வருபவர்கள் என்று மதகுருக்கள் மொத்தமாக Jimmy’s குழுவை எதிர்க்கிறார்கள். Jimmy'யை நாடு கடத்த முடிவு செய்கிறார்கள். இருந்தும் தலைமறைவாய் வாழ்ந்து வரும் Jimmy'யை கைது செய்கிறார்கள். போராட்டத்தினை உணர்ச்சி பூர்வமாக யதார்த்த நிலையில் பதிவு செய்ததில் வியக்க வைத்த படம்.

A GIRL AT MY DOOR [கொரியா நாட்டுத் திரைப்படம்]
தாய் இல்லாமல் தந்தையிடமும், பாட்டியிடமும் பாசத்திற்கு ஏங்கும் ஒரு சிறுமியின் வாழ்வு, அந்த பகுதிக்கு இடம் மாற்றமாகி வரும் பெண் போலீஸ் அதிகாரி சிறுமியிடம் காட்டும் அன்பு, இதனால் அந்த பெண் அதிகாரி சந்திக்கும் பிரச்சனைகள், தன்னால் சிறைக்கு செல்லும் பெண் அதிகாரிக்கு எப்படி சிறுமி தண்டனையில் இருந்து விடுதலை பெற்று கொடுத்தாள், தன் தந்தையால் ஏற்ப்பட்ட இந்த பிரச்சனைகளுக்கு முடிவு எப்படி அமைந்தது என்பதே இந்த திரைப்படத்தின் மையம்.

BEHAVIOUR [கியூபா நாட்டுத் திரைப்படம்]
தந்தையில்லாத சிறுவன் போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கும் தன் தாயிடம் பாசத்தை எதிர்பார்க்கிறான். அவள் தேவைக்காக நாய்களை வளர்த்து அதை சண்டைக்கு அனுப்பி சம்பாதிக்கிறான். பாலஸ்தீனத்தில் இருந்து வந்து இந்நாட்டில் அகதியாக தன் தந்தையுடன் வாழும் சிறுமி. இந்த இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கின்றனர். இதற்கிடையே சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு மாற்றுகிறார்கள். வகுப்பில் முதல் மாணவியான அந்த சிறுமியை முகவரி இல்லாத காரணத்தினால் பள்ளியில் மேற்கொண்டு அனுமதிக்க மறுக்கிறார்கள். இவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களை தாயுள்ளத்துடன் அணைத்து அன்பு செலுத்தும் ஆசிரியர், இவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர சந்திக்கும் பிரச்சனைகள், அழைத்து வந்ததால் ஆசிரியருக்கு நேரும் பிரச்சனைகள் என்று நீள்கிறது இந்த திரைப்படம். கியூபா போன்ற நாடுகளில் இயேசுவின் உருவப்படத்தை பள்ளியில் அனுமதிப்பதில்லை என்பதையும் அகதிகளின் நிலையையும் அதன் அரசியலையும், சிறுவர்களின் வாழ்வையும் யதார்த்தமாக பேசுகிறது இந்த படம்.

FANDRY [மராத்தி மொழிப்படம்]
மராத்தி மொழியில் தேசிய விருது பெற்ற திரைப்படம். இந்தியாவில் மதங்களும், சாதிகளும் ஒடுக்கப்பட்ட மக்களை இன்றளவிலும் எந்த நிலையில் வைத்துள்ளது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இதனை சினிமாவாக எடுத்த விதம் முக்கியமானதாகும். ஒரு கிராமத்தை தேர்வு செய்துகொண்டு அங்குள்ள ஒரு ஒடுக்கப்பட்ட குடும்பத்தின் பின்னணியில் சொல்லப்பட்டது சிறப்பானது. பள்ளியில் படிக்கும் சிறுவனின் காதல், மற்ற மாணவர்கள் முன்னிலையில் பன்றி பிடிக்கும் போது ஏற்படும் அவமானம், இயலாமை, வறுமை போன்றவற்றை பிரதிபலித்த படம். இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் ஒடுக்கப்பட்ட அந்த சிறுவனால் எறியப்படும் கல், இந்த சமூகத்தின் முகத்தில் அறைகிறது.

PATERNAL HOUSE [ஈரானிய திரைப்படம்]
குறைந்த செலவில் சிறந்த படங்களை எடுப்பதில் ஈரானிய கலைஞர்கள் வல்லுநர்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று இத்திரைப்படம். ஒரு வீட்டை மையமாக கொண்டு அந்த குடும்பத்தில் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்த பெண் பிள்ளைகளின் மனநிலையை ஒரு சம்பவத்தோடு இணைத்து இயக்கியுள்ளார் Kianoush Ayari.

படம் 1929'ல் துவங்குகிறது. தந்தை தன் மகனின் உதவியுடன் தனது பதின்பருவத்து மகளையே கொன்று சடலத்தை வீட்டின் ஒரு அறையிலே புதைக்கிறார். குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு இந்த சம்பவம் மறைக்கபடுகிறது. கதை அப்படியே 1946க்கு நகர்கிறது. இன்னொரு மகளின் கணவரால் மூண்ட விவாதத்தின் விளைவாக தன் மகனின் வாயாலே அவள் மகள் புதைக்கப்பட்ட சம்பவத்தை அறியப்பட்டு, அதே அறையில் இறக்கிறாள் தாய். பிறகு 1966 மற்றும் 1986ல் அந்த அறை மூலமாக வரும் பிரச்சனைகளை, அந்த மகனின் பெண் வாரிசுகள் மூலமாக சொல்லபடுகிறது. 1996ல் அந்த வீட்டை புதுபிக்க போகிறார்கள் என்பதை அறிந்து அங்கிருந்து வெளியேறி இருந்த அந்த மகன், தன்னுடைய மகனின் உதவியால் அவன் சகோதரியின் சடலத்தை எடுக்க செல்கிறான். அங்கு தன் சகோதரிக்கு தான் இழைத்த தீங்கை எண்ணி வருந்தி சடலத்தை எடுக்கும்போது இடிந்து விழுகிறான். மகனின் தோழியின் உதவியால் அவனை மருத்துவமனையில் சேர்ப்பதோடு கதை முடிகிறது.

ஒரே வீட்டில் நடப்பது போல பல படங்கள் வந்திருந்தாலும் அவை பெரும்பாலும் த்ரில்லர், horror வகைமையை சார்ந்தே இருக்கும். ஆனால் இந்த படத்தை அதிலிருந்து மாறுப்பட்டு டிராமாவாக இயக்கி பார்வையாளனையும் கவர்ந்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கியமாக அந்த இரண்டு தலைமுறை உறவுகளையும், குழந்தைகளாக இருந்தவர்கள் வயதானவர்களாக வரும்போதும், பார்வையாளர்களுக்கு சந்தேகம் வராமலிருக்க எழுத்து வடிவத்தில் குறிப்பிடாமல் காட்சிமொழியில் பார்வையாளர்களுக்கு புலப்படுத்தியிருக்கும் இயக்குனர் பாராட்டுக்குரியவர். படத்தின் ஒரு காட்சியை கூட அந்த வீட்டின் வெளியே வைக்கவில்லை இயக்குனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் படம் எடுக்கப்பட்ட அந்த வீட்டின் மாறுதல்களை மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர். ஈரானில் 65 ஆண்டுகளில் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றம் பார்வையாளன் உணர்ந்திருப்பாயின் அதுவே இத்திரைப்படத்துக்கு வெற்றி.

IN THE NAME OF MY DAUGHTER [இயக்குனர் - André Téchiné]
திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமாக இப்படம் திரையிடப்பட்டது, காணாமல் போன மகளை தேடும் தாய்க்கு, தன் மகள் எழுதிய கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தில் காதலனுக்கு எழுதிவைத்த சொத்தைப் பற்றியும், காதலனை பற்றியும் குறிப்பிடுகிறாள். சிலநாட்கள் கழித்து மகளின் காதலனே தன் மகளை கொலை செய்து விட்டதாக அவன் மீது வழக்குதொடர்கிறாள். யார் அவன்? யார் கொலையை செய்தது? இவன் கொலை செய்ததானா? இல்லை இந்த வழக்கின் தீர்ப்பு என்ன என்பதே கதை.

படத்தில் அவளை அன்புக்கு ஏங்கும் ஒரு பெண்ணாகத்தான் வருகிறாள் அந்த இடத்தை தன் தாயிடம் வேலை பார்க்கும் ஒருவன் பூர்த்திசெய்கிறான்.

அதிகபடியான வசனங்கள் வைக்காமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி இருக்கிறார்கள், கேமராவின் நுட்பமான காட்சிகள் இரசிக்கவைத்தன. குறிப்பாக அவள் கடலில் நீந்தும் காட்சியில் தண்ணீருக்கு உள்ளேயும் வெளியேயும் மாறிமாறி வரும் காட்சி மற்றும் நாயகன் மோட்டார் சைக்கிளில் செல்லும் ஒரு காட்சியில் கேமராவின் பயன்பாடு, அதன் காட்சி நீளம் அழகை கூட்டினாலும், நீச்சல் அடிக்கும் காட்சியும் காதலனுடன் அவள் அன்பை பரிமாறும் காட்சியும் திரும்ப திரும்ப வருவது ஒருவித சலிப்பை ஏற்படுத்தி, என்னதான் நடக்க போகிறது என்று நினைக்க வைக்கிறது. மேலும் இந்த படத்தில் France நாட்டின் வாழ்க்கையையும் பெரிதாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

WINTER SLEEP
படம் திரையிடும் முன்னரே திரைப்பட ஆர்வலர் ஒருவர், கேரளாவில் திரையிட்ட படம் என்று கூறிய கருத்தால் மிகப்பெரிய வரவேற்புடன் சென்ற பார்வையாளர்களுக்கு இரண்டு நீண்ட உரையாடலும், மெதுவாக நகரும் காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்தினாலும், துருக்கியின் பனிப்பிரதேசத்தை காணமுடிந்தது. மிருகங்களை வேட்டையாடும் கதாப்பாத்திரத்தைக் கடைசிவரை மாற்றாமல் கதையை நகர்த்தியிள்ளார் இயக்குனர். இது போன்ற கதை தமிழில் வந்திருந்தால் ஹீரோ திருந்தி நல்லமனிதனாக வாழ ஆரம்பித்துவிடுவார். படத்தில் ஒரு அரை மணி நேர விவாதத்திற்கு பின் பிடித்து வந்த குதிரையை அவிழ்த்து விடும் காட்சி ஒரு லாங் ஷாட்டாக இருக்கும், இந்த காட்சி இரவு நேரத்தில் பனிப்பொழிவில் படமாக்க பட்டுள்ளது. அதேபோல் படம் தொடங்கும் முதல் காட்சியில் ஒரு சிறுவன் கல்லால் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து விடுவான், அப்போதும் அந்த கிராமத்தின் தோற்றத்தை அழகாக காட்சிபடுத்தியிருப்பார்.

CONSEQUENCE [இயக்குனர் - Ozan Aclktan]
ஒர் இரவில் நடக்கும் கதையை 106 நிமிடத்தில் விறுவிறுப்பான கதை சொல்லல் மூலம் பார்வையாளனை இரசிக்க வைத்த படம் இது.

கதை இரவு நேரத்தின் ஒரு பார்ட்டியில் ஆரம்பிக்கிறது. நாயகனின் நண்பனுக்கும் நாயகிக்கும் திருமணம் நிச்சயமாகிறது. இதற்கு முன்னரே நாயகனும், நாயகியும் காதலித்து பிரிந்து விடுகிறார்கள், திடிரென ஒரு நாள் அந்த பார்டியில் சந்திக்கிறார்கள், பின் அவன் அங்கிருந்து வெளியேறுகிறான். பின் நாயகியும் அவனை தேடி அவன் வீட்டுக்கே வருகிறாள். இருவரும் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் நேரத்தில் யாரோ ஒருவன் அந்த அறைக்குள் நுழைகிறான், நாயகனுக்கும் முகம் தெரியாதவனுக்கும் இடையே ஏற்படும் தகராறில் அந்த முகம் தெரியாதவன் மாடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறான், இவன் ஒரு பெயின்ட்டர் என்று அவன் நண்பன் வந்து சொல்கிறான், அடிபட்டவனை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள், அந்த இடத்திலிருந்து நாயகி வெளியேறுகிறாள். வெளியேறிய அவளை அடிபட்டவனின் சகோதரர் ஒரு காரில் கட்டி போட்டு அண்ணனை பற்றி விசாரிக்கிறான், தனது நண்பனுடன் அந்த வீட்டிற்கு சென்று நாயகனையும் அவன் நண்பனையும் அடிக்கிறான். அப்போது உங்கள் அண்ணனுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி அவனை அழைத்து சென்று காட்டி விட்டு வரும் வழியில், நாயகன் நாயகிக்கு போன் செய்கிறான். அந்த போன் தனது கூட வரும் பெயிண்டரின் தம்பியிடம் இருக்கும். இந்த செல்போன் எப்படி இவனிடம் வந்தது? அந்த பெயிண்டர் ஏன் அங்கு வந்தான்? நாயகி ஏன் அந்த வீட்டிற்கு வந்தால்? அந்த காரிலிருந்து யார் அவளை விடுவித்தது, கடைசியில் என்ன நடந்தது என்பது தான் கதை. ஒரு உயிரின் மதிப்பையும் அவரவர் சூழ்நிலையையும் துருக்கியின் நகரத்தில் நடக்கும் இந்த கதை வேகமான திரைக்கதை மூலம் ஒரு இரவின் ஆரம்பத்தில் தொடங்கி காலை வெளிச்சத்தில் ஒரு மனித உயிரின் மதிப்பை உணர்த்தி முடிக்கப்பட்ட படம்.

LABOUR OF LOVE [பெங்காலி மொழிப்படம்]
இயக்குனர் பாலுமகேந்திரா, ஒரு நேர்காணலில் வசனத்திற்கும் காட்சிமொழிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை சொல்லி இருப்பார். உதாரணமாக தாஜ்மஹாலை எடுத்துக்கொள்ளுங்கள், கட்டிடக்கலையின் மாபெரும் அற்புதம் அது. ஆயிரம் பக்கங்களில் உருக்கமாக மாய்ந்து மாய்ந்து தாஜ்மஹாலை வர்ணித்து எழுதி இருப்பதை படித்த பிறகும் வராத உணர்வை அதன் ஒரு காட்சி ரூபம் கொடுத்து விடும். அதே போல் காட்சி ஊடகம் தான் சினிமா என்ற கூற்றை நிறுபித்தது பெங்காலி திரைப்படமான Labour of Love.

கணவனுக்கு தினப்பத்திரிக்கையில் இரவு வேலை, மனைவிக்கு ஏற்றுமதி வியாபார கம்பெனியில் பகல் வேலை என இருவரும் வேலைக்கு செல்லும் நடுத்தர குடும்பத்தின் ஒரு நாளைய வாழ்க்கையே இப்படத்தின் கதை. வாழ்வின் எதார்த்தத்தோடு அதை திரைக்கதையாய் அமைத்து, அதனை வடிவம் சார்ந்து ஒவ்வொரு காட்சியையும் அழகியலோடு படைத்திருக்கிறார் இயக்குனர்.

காலையில் வேலை முடித்து வீட்டிற்கு வரும் கணவன், துவைத்து போட்ட துணிகளை எடுத்து உள்ளே வைத்து விட்டு, குளித்து, சாப்பிட்டு, மீன் வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு படுக்கையில் சாய்கிறான். தெருக்களில் பாடல்கள் சத்தம் அதிகமாக இருக்க அவன் தூங்க அவதிபடுகிறான். மீண்டும் மாலை எழுந்து அவன் வேலைக்கு சென்றுவிட, அவன் மனைவி வேலை முடித்து வீட்டிற்கு திரும்புகிறாள். அவன் துவட்டி காயப்போட்டு போன துண்டை எடுத்துக்கொண்டு இவள் குளிக்க போகிறாள். கணவனின் துணிகளை எல்லாம் துவைத்துவிட்டு ஈரம் படிந்த காலுடன் நடந்து வருகிறாள். அந்த காலடி தடத்தை ஈரம் காயும் வரை mid-close up'ல் காட்டுவது எத்தனை அழகான காட்சி. அடுத்த நாள் காலை விடியும் முன் எழுந்து கணவனுக்கு சப்பாத்தி, சாப்பாடு என தயார்ப்படுத்தி விட்டு, கணவன் வாங்கிவைத்திருந்த மீனை வறுப்பதற்கு வாணலை எடுத்து அடுப்பில் வைக்கிறாள். வாணல் சூடாகி அதில் இருக்கும் நீர் கொதித்து காயும் வரை closeup'ல் காட்சி படுத்தியிருப்பார்கள். பின் இவள் வேலைக்கு தயாராகிறாள். கணவன் வேகமாக சைக்கிளில் வந்துவிடுகிறான். அவன் வருவதை அவள் மாடியில் இருந்து பார்க்கிறாள். இருவரும் சேர்ந்து வீட்டிற்க்குள் நுழைய அவனுள் ஒரு கற்பனை விரிகிறது. அழகான காடு, பனி இருட்டு, அங்கு ஒரு மரக்கட்டில் அதில் இருவரும் அமருகிறார்கள். ஒருவரையொருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொள்கிறாள். அப்போது கணவனின் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு நேரமானது என எழுந்து சென்று அவனுக்கு டீ கொடுத்துவிட்டு அவள் வெளியேறுவது போல அந்த கற்பனை கலைகிறது. நிஜத்திலும் அவள் வெளியேறுகிறாள். டீ குடித்துக்கொண்டே அவள் வெளியேறுவதை மாடியில் இருந்து பார்த்துக்கொண்டு இருப்பான் கணவன். அதை Long shot'ல் பதிவு செய்திருப்பது அவர்கள் மீண்டும் சந்தித்து கொள்ள அடுத்த நாள் காலை வரை காத்திருக்கும் கால தூரத்தோடு ஒப்பிட்டு படம் முடிகிறது. இப்படம் சினிமாவின் மொழி எது என்பதை உணர்த்தியது.

UNTO THE DUSK and MUNNARIYIPPU
மலையாள படங்களான இவை இரண்டும் ஒரு தனிமனிதனின் உளவியலை அடிப்படை கருவாக உள்ள படங்களாகும்.

Unto the dusk கதையின் நாயகன் இறையியல் மாணவன், வாழ்க்கையின் பின்னணியில் நடந்த சம்பவங்கள் இவனை உளவியல் ரீதியில் பாதிக்கிறது, கல்லூரியிலிருந்து வெளியேறி ஒரு தேடல் மிகுந்த பயணத்தைத் தொடர்கிறான். இந்த பயணத்தின் ஊடே தனது பால்யகால வாழ்க்கையை நினைக்கிறான், அப்போது தன் தாய் வேறொருவனுடன் உடலுறவு வைத்துக்கொள்வதைப் பார்த்துவிடுகிறான். மகன் பார்த்துவிட்டான் என்ற குற்ற உணர்வில் சில நாட்களில் தூக்கு போட்டு இறந்து விடுகிறாள். தந்தையும் வேலைக்காக வெளியூர் சென்று விடுகிறான். இப்படி சிறுவயதிலிருந்தே தாய் தந்தையின் அன்பும் பாசமும் கிடைக்காமல் போகிறது. பின் ஒரு பெண்ணை காதலிக்கிறான் அவளும் இறந்து விடுகிறாள், பின் உறவினர்களால் இறையியல் படிப்பு சேர்க்கப்படுகிறான். அவன் தேடிச்செல்லும் வழிகளிலே ஒரு சிறுவன் விளையாடுவது, ஒரு நாய்க்குட்டியை ஒரு பாட்டி அடிப்பதும், அவன் காட்டு வழியாக செல்லும் போது பாம்புகள் இழைவது, பறவைகள் கூட்டமாக பறப்பது போன்ற காட்சிகள் இவன் இழந்த சந்தோஷமான பால்ய வாழ்க்கை, இவன் அன்பு, பாசத்திற்கு ஏங்கியது என இவனை மனதளவில் பாதித்தது என்பதை படம் முழுவதும் குறியீடுகளாக சொல்லியிருப்பார் இயக்குனர். மேலும் யாரைத்தேடி இவனுடய பயணம் இருக்கிறது, அவர்களை இவன் பார்த்தானா, ஏன் அவன் அவர்களை தேடி செல்கிறான்?. என்ன நடந்ததது என்பது தான் கதை.

கேரளாவின் அழகியல் காட்சிகள் இயற்கையான ஒளிப்பதிவில் படமாக்கப்பட்டுள்ளது, படம் முழுவதுமே காட்சி பூர்வமாக அதிகப்படியான வசனம் மற்றும் ஹீரோயிசத்தாக்கம் இல்லாமலும், மனதளவில் பாதித்த ஒருவனின் பின்னணியில் என்ன இருக்கும் அவன் ஏன் அந்த சிக்களுக்குள்ளனான் என்பதையும் இந்த படத்தின் இயக்குனர் சொல்லியிருக்கிறார் .

MUNNARIYIPPU
ஒரு பெரிய நடிகர் என்றில்லாமல் இந்த கதைக்குள் தன்னை இணைத்து வாழ்ந்துள்ளார் மம்மூட்டி. நாயகன் இரண்டு கொலை செய்து விட்டு ஜெயிலில் இருக்கிறான், பத்திரிக்கையாளராக வரும் நாயகி ஜெயிலுக்கு காவல் துறை அதிகாரியை பார்க்க செல்கிறாள், அப்போது நாயகனை பார்க்கிறாள், தற்செயலாக அவன் எழுதிய டைரியை படிக்கிறாள், நன்றாக இருந்ததால் அதை ஒரு கதையாக மாத பத்திரிகையில் வெளியிட, பெரியளவில் பேசப்படுக்கிறது. அதனால் அவனை அவள் ஜெயிலில் இருந்து வெளியில் கூட்டி வந்து அவன் வாழ்கையில் பயணித்தவற்றை எழுத சொல்கிறாள். அவன் எழுதினானா? அவன் மனநிலை எப்படி இருந்தது? என்பது தான் கதை.

படம் முழுக்க மம்மூட்டி குறைந்த வசனங்கள் பேசினாலும் தேவையான இடத்தில் இசை மூலமாக மௌனத்தையும், மனநிலையையும் சொல்லியிருக்கிறார்கள். நாயகி அடிக்கடி எழுத சொல்லி கட்டாயப் படுத்தும் போது நாயகன் அடையும் இறுக்கமான மனநிலையை காட்சியின் மூலம் அற்புதமாய் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். தனிமையில் இருக்கும் நாயகனை, இடையிடையே வரும் சிறுவன், தான் கதை சொல்கிறேன் என்று கதையில் ஒரு இடையுறு செய்கிறான். பின் அவள் ஒரு தனிமை நிறைந்த இயற்கையான நதி அருகே அவனை விட்டுவிட்டு வந்து விடுவாள், நீண்ட நாட்களாக ஜெயிலில் இருந்து ஒரு மனிதனின் பார்வை, ஒரு புதிய கண்ணோட்டத்தில் அவன் இந்த உலகை பார்ப்பது புதிதாக உள்ளது. ஒரு நான்கு சுவருக்குள் படுத்து கொண்டு நிலாவெளிச்சத்தையே பார்த்து கொண்டு இருக்கும் இவன் வெளியில் வருகிறான். அவள் நினைத்தது போல் கதை எழுதினானா? இல்லை வெளியில் அவன் மனநிலை எப்படி இருந்தது என்பதே கதை.

திரைப்பட விழா இறுதி நாளன்று, அண்மையில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பிரபல நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்துக்கொண்டார்கள். சென்ற ஆண்டு முதல் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் இளம் படைப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிற்கு அமிதாப் பச்சன் விருதும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்பு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய திரைப்படத்தில் சிறந்த படைப்பிற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இந்த ஆண்டு முதல் அம்மா விருது என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருதிற்கு பின்னிருக்கும் அரசியலை கவனிக்க வேண்டியுள்ளது. சென்னையில் உள்ள எல்லா திரைப்படக் கல்லூரி மாணவர்களிடமிருந்தும் திரைப்படம் பெறப்பட்டு அதில் எது சிறந்ததோ அதை தேர்வு செய்யலாம். அதை விடுத்து அரசு கல்லூரி மாணவர்கள் எடுத்த படங்களுள் மட்டும் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறுவது மாற்றான் தாய் மனநிலை தான் இதற்கு பின்பு உள்ளது.

நடுவர்களின் பெயரால் வழங்கும் JURY விருது இந்த ஆண்டு ‘பூவரசன் பீப்பி’ படத்திற்கு வழங்கப்பட்டது. Special Jury விருது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு வழங்கப்பட்டது. இதில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு மட்டும் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாவது விருது ‘சதுரங்க வேட்டை’ படத்திற்காக இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் தலா ஒரு லட்சமும் விருதும் வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசினை ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் பெற்றது. இந்த படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது. இயக்குனருக்கு 2 லட்சமும் தயாரிப்பாளருக்கும் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு முதல் கே பாலச்சந்தர் பெயரில் சிறந்த கலைஞர்களுக்கான விருது தரப்படும் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு வெளிவந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ முக்கியமான திரைப்படமாக எல்லா விமர்சகர்களாலும் சொல்லப்பட்ட படம். இப்படம் விருது பட்டியலில் இடம் பெறாமல் போனது வருந்தக் கூடியது. இயக்கம், நடிப்பு, இசை, கேமரா, எடிட்டிங், ஒலிப்பதிவு என பல துறைகளில் இருந்தும் முக்கியமான திரைப்படக் கலைஞர்களை நடுவர் குழுவிற்குள் தேர்வு செய்யலாம். இல்லையென்றால் சதுரங்க வேட்டை, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ போன்ற படங்கள் தான் விருது பெற்றுக்கொண்டிருக்கும்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
 
  </