இதழ்: 23     புரட்டாசி (October 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
 
கோவிந்த் நிஹ்லானி - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா 4 - சாரு நிவேதிதா
--------------------------------
உயிர் கொடுக்கும் கலை 13 - டிராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி - 12 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 8 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 6 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 8 - தினேஷ் குமார்
--------------------------------
ஏகாதிபத்தியப் பார்வையில் போராட்டம், புரட்சி, தீவிரவாதம் - டி.டி.ராமகிருஷ்ணன்
--------------------------------
 
   

   

 

 

ஏகாதிபத்தியப் பார்வையில் போராட்டம், புரட்சி, தீவிரவாதம்

- டி.டி.ராமகிருஷ்ணன், மலையாளத்திலிருந்து:கே.வி.ஜெயஸ்ரீ

பெண்டகனில் திரைப்பட விழாவா ? ஆமாம், 2003 ஆகஸ்ட் 27ல் பிரபல இத்தாலிய இயக்குநர் கீலோ போன்ட்ரிகோவாவின் ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ என்ற திரைப்படம் பெண்டகனின் இராணுவத்தினருக்காகத் திரையிடப்பட்ட போது, அமெரிக்காவின் போர் எதிர்ப்பாளர்கள் இப்படித்தான் கேட்டார்கள். பெண்டகன் இராணுவ அதிகாரிகள் இந்தப் படத்தை மிகவும் விருப்பத்தோடு பார்த்ததற்கு, அதன் சிறந்த கலைத்தன்மையோ அல்லது சரித்திரப்பூர்வமான மெய்த்தன்மையோ காரணமல்ல. இஸ்லாமிய நாடுகளின் அர்பன் கொரில்லா போர்த்தந்திரங்களைக் கற்றுக்கொள்வதற்கும், பாக்தாத் தெருக்களில் தங்களுடைய நீக்கங்களை அதற்கேற்ப திட்டமிடுவதற்காகவும்தான். சே குவேரா, மாவோ ஆகியோரின் படைப்புகளைப் போல, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களின் பாடப் புத்தகமாவது என்ற சாபக்கேடுதான் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் விருது பெற்ற இந்தத் திரைப்படத்திற்கும் நேர்ந்தது. விண்டர் ஹாராவின் இசையும், மேலும் பல கலைப் படைப்புகளும் இப்படி விவரிக்கப்படலாம்.

திரைப்படத்தை சரித்திரப்பூர்வமான மெய்மைத் தன்மையோடு அணுகிய இயக்குநர்கள் கீலோ போண்ட்ரிக்கோவ. ரோசெல்லியைக் குருவாகக் கண்ட கீலோ ஒவ்வொரு சினிமாவையும் அக்காலகட்டத்தின் வரலாறாகவே கருதினார். 1919ல் இத்தாலியின் பிஸா நகரத்தில் உயர்ந்த யூத குடும்பத்தில் பிறந்த அவர், முப்பதுகளின் முடிவில் ஃபாஸிஸ எதிர்ப்பு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டார். இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலி கம்ப்யூனிஸ்ட் கட்சிக்கு தகவல் அளிப்பவராகவும் பத்திரிக்கையாளராகவும் பணிபுரிந்தாரென்றாலும், 1965ல் ஹங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறினார். எனினும் கம்யூனிஸத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் கைவிடவில்லை. அந்த நம்பிக்கைதான் 1919ல் பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் திரைப்படமெடுக்க அவரைத்தூண்டியது.

130 வருட ஃபிரெஞ்ச் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான அல்ஜீரிய மக்களின் சுதந்திரப் போராட்டம்தான். “பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸி”ன் உட்கரு. 1954 நவம்பர் ஒன்றில் எஃப். எல்.என் (F.L.N) துவக்கிய விடுதலைப் போராட்டமும், கைகலப்புகளும், கொரில்லா ஆக்கிரமிப்புகளும், ரத்தம் சிந்துதலுமாக எட்டு வருடங்கள் நீண்டது. ஃபிரெஞ்ச் போலிசும் இராணுவமும் சகல சக்தியும் உபயோகித்து புரட்சியை அடக்குவதற்கு முயன்றன. எஃப். எல். என் (F.L.N) உறுப்பினர்கள் மிகக் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். 1962 ஜீலை 4 அன்று வேறு வழியொன்றுமின்றி அல்ஜீரியாவிற்கு சுதந்திரம் வழங்கி ஃபிரெஞ்சுக்காரர்கள் பின்வாங்கினர். இந்தச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களும் அதைத் தலைமையேற்று நடத்தியவர்களும் அல்ஜீரியாவின் மிகவும் சாதாரண மக்களே. அவர்களில் பலரும் அடிப்படைக் கல்வியைக்கூட முடித்திருக்கவில்லை.

‘அலி லா போன்ரே’ என்ற எழுத்தறிவற்ற குற்றவாளி உடனிருந்த சிறைக்கைதியை மரண தண்டனைக்கு உட்படுத்துவதைக் கண்டு ஆவேசம் பூண்டு 1954ல் எஃப். எல். என். அனுதாபியாக மாறுகிறார். ஃபிரெஞ்சு ஆட்சி அல்ஜீரியர்களின் பொருளாதார அரசியல் அடிமைத்தனத்திற்கு மட்டுமல்ல, கலாச்சார மதிப்பீடுகளின் வீழ்ச்சிக்கும் காரணமாகிறது என்று எஃப். எல். என். அறிவிக்கிறது. எஃப். எல். என் தலைமையிடம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு கட்டிடம் குண்டு வெடிப்பில் சிதறுகிறது. அதன்பிறகுதான் திரைப்படத்தின் முக்கியமான திருப்பங்கள், ஃபிரெஞ்சு பெண்களைப் போல மாறுவேடமிட்ட மூன்று அரபுப் பெண்கள் கசம்பாவிலிருந்து ஐரோப்பிய நகரத்திற்கு அத்துமீறி ஊடுருவி அங்கிருந்த மதுவிடுதிகளிலும் ஏர் ஃபிரான்ஸ் அலுவலகத்திலும் பால் பூத்திலும் குண்டு வைக்கிறார்கள். தொடர்ச்சியாக மூன்று குண்டுவெடிப்புகள். குழந்தைகளும் பெண்களும் உட்பட நிறைய பிரெஞ்சுக்காரர்கள் கொல்லப்படுகிறார்கள். மேலும் பலர் காயமடைகின்றனர். தொடர்ந்து உண்டான கலவரத்தை அடக்க பிரெஞ்சு இராணுவத்தின் பத்தாவது பாரா டிவிஷன் உள்ளே நுழைகிறது. கசம்பாவிலுள்ள அனைத்து மக்களின் மீதும் கடும் வன்முறைத் தாக்குதல் நடத்துகிறது. பிரெஞ்சு இராணுவ அதிகாரி லெப். மாத்யூ ‘ஆப்பரேஷன் ஷாம்பெயின்’ என்று பெயர் சூட்டிய இந்த இராணுவ நடவடிக்கையினூடாக எஃப். எல்.என் செயல்பாடுகளை ஒட்டு மொத்தமாக நிர்மூலம் செய்யமுயன்றார். கசம்பாவின் நான்கு லட்சம் அரபிகளில் மிகக்குறைவானர்களே எஃப். எல்.என் அனுதாபிகளாக உள்ளனர் என்றும் அவர்களைத் தனிமைப் படுத்தி ஒடுக்கிவிட வேண்டுமென்றும் அந்த அதிகாரி தன்படைகளுக்கு ஆணையிடுகிறார். அதற்கு ஏதாவது உபாயம் கண்டுபிடிக்க வேண்டுமென்றும், அது கிடைக்கவில்லையென்றால் தானே ஏதாவது காரணம் உண்டாக்கித் தருவதாகவும் அவர் படையிடனரிடம் கூறினார். எஃப்.எல். என் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கிறது. கர்னல், வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்பவர்களையெல்லாம் எஃப்.எல். என் ஆட்களாகத்தான் கருதுவோம் என்றும் சொல்கிறார். குண்டுவெடிப்புகளும், கைகலப்புகளும், கடும் வன்முறைகளும் கடுமையாகத் தொடர்கிறது.

அதே சமயம், அல்ஜீரியாவில் நடக்கும் ஃபிரெஞ்சு இராணுவத்தின் கடும் வன்முறைகளுக்கு எதிராக பாரீஸில் பொதுஜன அபிப்ராயம் வலுப்படுகிறது. சார்த்தரேவைப் போன்ற அறிவுஜீவிகள் அரங்கத்திற்கு வருகிறார்கள். இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஃப். எல். என் உறுப்பினர்களுக்கு எதிரான கடும் வன்முறைகளைப் பற்றிக் கேள்வி கேட்ட ஒரு நிரூபரிடம் கர்னல் சொல்லும் பதில் இதுதான். ‘ I Will ask you a question myself; should France stay in Algeria? If the answer is till yes, you’ll have to accept all the necessary consequences” தொடர்ந்து புரட்சிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை மிகவும் புராதனமான முறையில் தண்டிக்கப்படும் காட்சிகள்தான். கர்னல் புரட்சியாளர்களின் ஒவ்வொரு முகாம்களையும் அழிக்கிறார். இறுதியில் , அலி லா போன்ரேவைக் கொன்றுவிடுவதன்மூலம் எஃப். எல். என் இன் நடவடிக்கைகளுக்குத் தற்காலிகமாவது முடிவுகட்ட கர்னல் மாத்யூவால் முடிகிறது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு எஃப். எல். என். இன் செயல்பாடுகள் வலுப்பெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக 1962 ஜீலை 4 அன்று அல்ஜீரியாவிற்கு விடுதலையளித்து, ஃபிரெஞ்சுக்காரர்கள் பின் மாறுகிறார்கள். அல்ஜீரிய தேசியக்கொடியைப் பறக்கவிட்டபடி பெருந்திரளான மக்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான ஊர்வலக்காட்சியுடன் நிறைவடையும் திரைப்படம் தெளிவான அரசியல் செய்தியை நமக்கு அளிக்கிறது.

இத்தாலிய நியோ ரியலிசத்தின் ஆதரவாளரான ரோசெல்லியை தன் முன்மாதிரியாக ஏற்றுக்கொண்ட கீலோ போண்ட்ரிக்கோவா மிகவும் யதார்த்த உணர்வோடுதான் இத்திரைப் படத்தை இயக்கியுள்ளார். கர்னல் மாத்யூவின் பாத்திரத்தில் வரும் ஜீன் மார்ட்டின் தவிர மற்ற தொழில்முறை நடிகர், நடிகையர் யாரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கவில்லை. ‘அலி லா போன்ரே’வாக நடித்தவர், கிலோவால் சிட்டி பஜாரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இப்ராஹீம் ஹாஜியாக் என்ற ஏழை விவசாயி. மேலும் நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமானவர்களை அவர் அல்ஜீரியத் தெருக்களிலிருந்து கண்டுபிடிக்கிறார். அவர்களில் பலரும் சினிமாவைப் பற்றியோ நடிப்பைப் பற்றியோ ஒன்றுமே அறியாதவர்கள். கசம்பாவில் பல மாதங்கள் தங்கியிருந்து புரட்சியின் போது நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் சாதாரண மக்களோடு விரிவாகப் பேசியும் விவாதித்தும் தான் கீலோவும் ஃபிராங்கோ சோலினாசும் சேர்ந்து படத்தின் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்கள். பல காட்சிகளிலும் ஒரு டாக்குமெண்டரி படமோ என்று சந்தேகிக்கப்படும்படியான முறையில் கறுப்பு வெள்ளையில் நுட்பமான திரை உத்தியின் மூலம் ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் மறக்க முடியாமல் செய்கிறார். கொடும் துன்புறுத்தலின் சூட்சுமமான காட்சி முதல் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சிதறி ஓடும் ஜனக்கூட்டம் வரை மிகுந்த யதார்த்தத்தோடு சித்தரித்துள்ளார். அதனால்தான் உலகசினிமாவுடையதும் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தினுடையதுமான வரலாற்று ஆவணமாகவே இத்திரைப்படம் கருதப்படுகிறது.

பெண்டகனில் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திரையரங்குகளுக்கு வந்த இந்தப்படம் ஒவ்வொரு அமெரிக்கனிடம் கர்னல் மாத்யூ கேட்ட அதே கேள்வியைத்தான் மீண்டும் கேட்கிறது. “should America stay in Iraq? If your answer is yes you have to face all necessary consequences.” ஆனால் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷோ, இராணுவ அதிகாரிகளோ அப்படியான ஒரு கேள்வியைக் கூட அமெரிக்க மக்களிடம் கேட்கவோ அதற்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பைத் தருவதோ இல்லை.

ஆனால் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலக சமாதானத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அமெரிக்காவின் ஏகாதிபத்திய மோகமும் ஆயுத விற்பனையும்தான் என்று புரிந்துகொள்ளவும் அதற்கெதிராக உலகம் முழுவதும் ஓரணியில் சேர்வதற்கான சாத்தியக்கூறுகளும்தான் இப்போது நம் கண் முன்னால் தெரிகிறது. கறுப்பினத்தவர்கள் உலக கலாச்சார அரசியல் தளங்களில் முன்னணிக்கு வருவதும் பங்கேற்பதும் ஆசியாவிலும் , லத்தீன் அமெரிக்காவிலும் , ஆப்பிரிக்காவிலும் மேலும் பல நாடுகளிலும் ஆட்சியதிகாரத்தில் தவிர்க்க முடியாத வகையில் செல்வாக்கு பெறத் துவங்குவதும் இதற்கான சான்றுகளே.

இந்தப் பின்புலத்தில்தான் ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ என்ற சினிமாவை பெண்டகன் ஒரு இராணுவப் பாடப்புத்தகமாகவே பயன்படுத்துவது குறித்து பரிசோதிக்க வேண்டியதிருக்கிறது. நீண்ட காலமாகவே சிறுபான்மையிராயினும் பிரெஞ்சுக்காரர்களும் அல்ஜீரிய மக்களின் ஒரு பாகமாகவே ஆகியிருந்தனர். இந்தக் கட்டத்தில் அல்ஜீரியா, பிரான்ஸ், இவற்றின் சரித்திரம் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் பின்னிப் பிணைந்துவிட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் பிரெஞ்சு ஆட்சியதிகாரத்திற்கு எதிரே விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கிறது.

’பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ இன் கொரில்லா போர்த்தந்திரங்கள் , ஐரோப்பிய நகரம், கசம்பா என்று இப்படி இரண்டாகப் பிரிக்கப்பட்ட அல்ஜீரிய நகரத்தின் தனிப்பட்ட குணத்தினடிப்படையிலேயே உருப்பெறுகிறது. பிரெஞ்சு இராணுவம் அதை எதிர்கொண்டதும் அப்படித்தான். ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில் பாக்தாதில் ஊடுருவிய அமெரிக்க இராணுவம் , ஆக்கிரமிப்புப் படைதான், ஈராக் மக்களோ மிகவும் வித்தியாசமான அரசியல் சூழலில் வாழ்பவர்கள், சூழ்நிலைகளில் எவ்வளவு வித்தியாசமாயிருப்பினும் வன்முறை, தீவிரவாதம் இவற்றின் அடிப்படைக்குணம் ஒன்றாகவே இருக்குமென்ற அடிப்படை சித்தாந்தத்தின்படியே அமெரிக்கன் போர்த்தந்திரவாதிகள் இந்தத் திரைப்படத்தை விவரிக்கின்றனர். ஆனால் புரட்சியும், தீவிரவாதச் செயல்களும் இரண்டும் வெவ்வேறு என்பதையும், சமீப காலமாக, புரட்சி என்பதனோடு பொதுமக்களுடைய அணுகுமுறையில் அதிக வேறுபாடு வந்திருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

’பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’க்குப் பிறகு, அல்ஜீரியாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், திரைப்படங்களும், நாடகங்களும் வெளிவந்துள்ளன. அதில் மெர்சாக் அலுவாஷேயுடைய ‘ராப் எலோத் சிட்டி’ , யாமின்ஹ பாக்கிரீன் ‘ரஷீதா’ என்ற திரைப்படங்கள் மிகுந்த கவனத்திற்குரியது. 1994ல் வெளிவந்த ‘பாப் எலோத்’ பகுதியில் வாழும் தொழிலாளிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் அரசியலைவிட அதிகமாக கதாபாத்திரங்களின் சொந்த வாழ்க்கையையே முக்கியக் கருவாகக் கொண்டுள்ளது.

’பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ இருந்து ‘பார் எலோத் சிட்டி’க்கும் , அதிலிருந்து ‘ரஷீதா’விற்கும் வந்து சேரும்போது அல்ஜீரிய சினிமாவிற்கும், சமூகத்திற்கும் வருகின்ற மாற்றம் மிகுந்த கவனத்திற்குரியது. போண்ட்ரிகோர்வாவின் சினிமாவில் ஃபிரெஞ்சு பெண்களைப்போல ஆடையணிந்து ஐரோப்பிய நகரத்தில் ஊடுருவிச் சென்று அல்ஜீரியப் பெண்கள் குண்டு வைக்கிறார்கள். ஆனால், ரஷீதாவில், பள்ளியில் குண்டு வைக்கத்தூண்டும் தீவிரவாதிகளை எதிர்த்து நின்று குண்டடிபட்டு இறக்கும் பெண்களையே பார்க்கிறோம். இங்கேதான் புரட்சிக்கும் பயங்கரவாதத்திற்குமிடையேயான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்கிறோம்.

பெண்டகனின் இராணுவ மூளைகளுக்கு இந்தப்புரிதல் கூட இல்லாமல் போயிருக்கிறது. தங்களின் அதிகாரத்தின் மீது கேள்வி எழுப்புபவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக முத்திரை குத்துவதும், அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக கடுமையான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதுமான தந்திரத்தை மிகுந்த சாமர்த்தியத்துடன் பயன்படுத்தும் அமெரிக்க ஆட்சிபீடம் தன் படத்தை பெண்டகனில் திரையிட்டு யுத்த தந்திரங்களைக் கற்றுக்கொள்கிறது என்பதை உணர்ந்துகொண்ட கீலோ, இவ்வாறு மறுக்கிறார்.

“I can tell you that what newspapers said at the time. The movie doesn’t show how to make war. It just shows how to make an incredible film”

நேர்காணல்: கீலோ போண்ட்ரிகோர்வா

பேட்டில் ஆஃப் அல்ஜியேர்ஸின் இயக்குநர் கீலோ போண்ட்ரிகோர்வாவுடனான வேல்ட் சோஷியலிஸ்ட் வெப்சைட்டின் சார்பாக மரியோ எஸ் பாஸிட்டோ நடத்திய நேர்காணல்.

பேட்டில் ஆஃப் அல்ஜியேர்ஸைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் தாங்கள் எப்படித் திரைப்பட இயக்குநர் ஆனீர்கள் என்பதையும், இலக்கியத்திலும் சினிமாவிலும் தங்களைப் பாதித்தவர்கள் யார் யார் என்பதையும் சொல்வீர்களா?

முதலில் ரோசெல்லினி. (இத்தாலிய இயக்குநரான ரோபர்டோ ரோசெல்லினி) அவர்தான் உலக சினிமாவின் மிகச் சிறந்த மேதையென நான் கருதுகிறேன். காரணம், எதார்த்தத்தோடு பெரிதும் வித்தியாசமான அணுகுமுறையை அவர் கொண்டு வந்தார். எதார்த்தத்தோடு அன்றுவரை இல்லாத ஒரு நெருக்கம். அவர் என்னுடைய நெருங்கிய நண்பராகவும் இருந்தார். எழுத்தாளர்களுள் என்னை மிகவும் பாதித்தவர் (ஐஷக் பாஷெவிஸ்) சிங்கர்தான் இத்தாலிக்கு வெளியேயுள்ள யூதர்களின் உலகத்தைப்பற்றி எனக்கு மிகுந்த பரிச்சயமில்லாதிருந்ததால் சிங்கருடைய மேலும் பலருடைய நாவல்களில் எனக்கு விருப்பம் தோன்றியது. அவர்தான் மிகவும் முக்கியமான எழுத்தாளர் என்றெல்லாம் நான் நம்பவில்லை. எனினும் அவரைத்தான் நான் அதிகமும் நினைவில் கொள்கிறேன். ஆனால், இதற்கெல்லாம் மேலாக என்னை மிகவும் பாதித்தவர் ரோசெல்லினி தான். நான் ஃபெல்லினியுடைய நண்பனும்கூட. ஆனால், நான் விரும்பியதும், திரைப்படமெடுக்க நினைத்ததும் ஃபெல்லினியின் உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதைத்தான். ரோசெல்லினி தான் என்னுடைய ரோல்மாடல்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் பி.பி.சி என் திரைப்படத்தை சத்தியத்தின் ஏகாதிபத்தியம் என்று விமர்சித்திருந்தனர். எதார்த்தங்களில் ஊன்றி நிற்பது, எதார்த்தமற்ற ஏதாவது எஃபெக்ட்டைப் பயன்படுத்தி பொதுஜன விருப்பத்தைப் பூர்த்தி செய்வது – இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சூழ்நிலை வருமென்றால் நான் முதலாவதைத்தான் தேர்ந்தெடுப்பேன்.

அதனால்தான் பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் ஆவணப்பட பாணியில் எடுக்கப்பட்டதா?

ஆமாம், பேட்டில் ஆஃப் அல்ஜியேர்ஸீக்காக நடிகர்களை திரைச்சோதனை செய்ய வெறும் நான்கு நாட்களே தேவைப்பட்டபோது, எதார்த்தத்தை அதன் முழு அர்த்தத்தோடு வெளிக்கொணர்ந்து படமெடுப்பதற்குத் தகுந்த ஃபோட்டோகிராபருக்காக மூன்று மாதம் அலைந்தோம். நியூஸ் ரீல்களில் உள்ளது போன்ற அதிகபட்ச காண்ட்ராஸ்ட்டுடனிருக்கும் அமெச்சூர் ஃபோட்டோகிராபரே எனக்குத் தேவையாக இருந்தார். அவரைத்தான் நான் தேடினேன். ஆனால் இப்படத்தை பணம் கொடுத்து மக்கள் பார்க்க வேண்டியதிருக்கிறது. அதனால் கொஞ்சம் அழகும் மெருகுமேற்ற வேண்டுமென எண்ணினேன். அதற்கு சில வசதிகள் தேவையாக இருந்தது. அதற்கான டெக்னிக்கைக் கண்டுபிடிக்க ஒரு மாதம் ஆனது. ஒரிஜினல் நெகடிவின் ஒரு பிரதியெடுத்து அதை ரீஃபோட்டோகிராஃப் செய்தோம்.

தயாரிப்பு முன்னேற்பாடுகளுக்கு எவ்வளவு காலம் பிடித்தது. படமெடுக்க யார் நிதியுதவி செய்தது?

ஸ்கிர்ப்ஃட் எழுதுவதற்கு மிகக் குறைவான காலமே ஆகியிருந்தது. ஏறத்தாழ இரண்டு மாதம். ஆனால் அதற்கு வேண்டிய விபரங்களைச் சேகரிக்க மிகுந்த காலமாகியது. திரைக்கதை ஃபிராங்கோச்ஸோலினாசும் நானும் காம்பாவில் பல வாரங்கள் செலவிட்ட பின்னர்தான் அங்கே நடந்த கொடூரங்களின் முகத்தை உணர்ந்து கொண்டோம். பின்னர், நாங்கள் ஃபிரான்ஸிக்குச் சென்றோம். அன்று இணை ராணுவத்தினராகப் பணிபுரிந்திருந்த உயரதிகாரிகளுடன் நீண்ட விவாதம் நடத்தினோம். இவ்வாறு திரைக்கதை எழுத எடுத்துக்கொண்ட நாட்களை விட விபரங்கள் சேகரிப்பதற்காக நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டோம்.

நிதியுதவி செய்யக்கூடிய நபரைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டோம். என்னுடைய ”காபோ”. என்ற படத்திற்கு ஆஸ்கர் நாமினேஷன் கிடைத்திருந்ததால் தயாரிப்பாளர்களுடன் நல்லுறவு இருந்தாலும் அவர்களனைவரும் எனக்கு விருப்பமில்லாத படத்தை எடுக்கவே விரும்பினர். நான் பேட்டில் ஆஃப் அல்ஜியேர்ஸை எடுப்பதற்கான என் விருப்பத்தை தெரிவித்தபோது, “கேலி செய்யாதீர்கள். இத்தாலியர்கள் இதைப் போன்ற கறுப்பினத்தவர்களைப் பற்றிய படத்தைப் பார்க்க விரும்புவார்களா?” என்று தான் கேட்டார்கள். “அவர்கள் கறுப்பர்கள்” என்று நான் சொன்னேன். ஆனால் பணம் கொடுக்க மட்டும் யாரும் தயாராக இல்லை. “உங்களுக்கு வேறெந்தப் படமெடுக்கவும் பணம் தருகிறோம். ஆனால் இந்தப் படத்திற்கு மட்டும் முடியாது” என்றுதான் அனைத்துத் தயாரிப்பாளர்களும் கூறினார்கள். ஒரு தயாரிப்பாளர், “என் நெற்றியில் முட்டாள் என்று எழுதி வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டுதான் யாரும் காண வாய்ப்பில்லாத இந்தச் சினிமாவை எடுக்க என்னிடம் கேட்கிறாயா?” என்று கேட்டார். இத்தனைக்கும் மிகக்குறைந்த தொகையே படம் வெளிவந்து இருபது நாட்களுக்குள் வசூலாகும் தொகையை மட்டுமே அவரிடம் கேட்டேன். இறுதியில் கூட்டுறவுச்சங்கம் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கினோம். இயக்குநர், திரைக்கதையாசிரியர், இவ்வாறுதான் படத்திற்கான பணத்தைச் சேகரித்தோம்.

எங்கள் பொருளாதார நெருக்கடியை உணரும் பொருட்டு இதையும் சொல்கிறேன். ஸ்கிரிப்ட் எழுதுவதற்குக்கூட ஒரு பெண் இல்லாமல்தான் நாங்கள் அல்ஜீரியாவிற்குப் போனோம். படத்தின் கண்டினியூட்டிக்கும் ரீடேக்குகளுக்கும் அப்படியொருவர் தேவையாக இருந்தார். தேவைப்பட்டால் அங்கேயே ஒருவரைக் கண்டுபிடிக்கலாமென்றும் அவருக்குக் கற்றுக்கொடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாமென்றும் நாங்கள் நினைத்தோம். ஆனால் பதினைந்து நாட்கள் நீண்ட சிரமத்திற்குப் பிறகு, அதற்கான பணமில்லாத போதும் இத்தாலியிலிருந்தே ஒருவரை வரவழைக்க வேண்டியதாயிற்று.

ஆனால், அல்ஜீயர்கள் எங்களுக்கு மிகவும் உதவினார்கள். தெருவில் படப்பிடிப்பு நடத்தவும், மற்றவைகளுக்காகவுமான அனுமதிகள் வெகுகாலத்தில் கிடைத்தன .

கர்னல் மாத்யூவாக நடித்த ஜீன் மார்ட்டின் தவிர வேறு தொழில்முறை நடிகர்கள் யாரும் படத்தில் இல்லையே? எவ்வாறு அல்ஜீரியாவில் நடிகர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று விபரமாகச் சொல்கிறீர்களா?

ஜீன் மார்ட்டின் கூட அப்பொழுது ஃபிரான்சில் ஒரு சாதாரண நடிகராகவே இருந்தார். அவருடைய முகமும் தோற்றமும் என்னை மிகவும் கவர்ந்தது, என்னைப் பொறுத்தவரையில் நடிகனின் உடல்மொழிதான் பிற திறமைகளைவிட முக்கியமானது. நான் எதிர்பார்த்தது போன்ற உருவமுடைய ஒருவருக்கு மேலும் பல திறமைகளுமிருப்பின் மிகவும் நல்லதுதான். Professional அல்லாத, என்றாலும் மிகத் துல்லியமான முகபாவமுள்ள ஒருவரை வைத்து, கொஞ்சம் கஷ்டங்கள் அனுபவித்தாலும் அதுதான் நல்லதென்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு ஓவியனுக்கு அவன் விரும்பும் வண்ணங்கள் கிடைப்பது போன்றுதான் இதுவும். அதனால் நடிகனின் உடல்மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் நான் தீர்மானமெடுப்பேன். இத்தாலியிலும், பிரான்சிலும் மிகவும் அலைந்து திரிந்த பிறகுதான் பேட்டில் ஆப் அல்ஜீயர்ஸீக்காக, நாங்கள் விரும்பிய தோற்றம் உடையவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.

படப்பிடிப்பு எத்தனை நாட்கள் நடந்தது.?

நான்கு மாதத்திற்கும் மூன்று நாட்கள் குறைவு ஒரு கூட்டுறவு அமைப்பாக இருந்ததால் எங்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு மணி நேரத்தின் மதிப்பும் மிகத் துல்லியமாகத் தெரிந்திருந்தது.

எப்படி இந்தச் சினிமாவின் இசையைத் தீர்மானித்தீர்கள்?

இசைக்கு இந்தப் படத்தில் முக்கிய பங்குண்டு. பிரபலத் திரை இசையமைப்பாளரான எனிமியோ மொரிக்கோன் (Eminio Morricone) ஒவ்வொரு வாரமும் புதிய டியூன்களுடன் வருவார். நான் விரும்பியது போல் எதுவும் இல்லை. அப்போது நான் கம்போஸ் செய்த டியூன்களை விசிலடித்தோ, பாடியோ காண்பிப்பேன். அது அவருக்குப் பிடிக்காது.

அப்படி ஒரு இசையும் சரியாக வராமல் பல வாரங்கள் சென்ற பிறகு ஓர் இரவு எனக்கு மூன்று டியூன்கள் கிடைத்தன. நான் அதை ஒரு சின்ன டேப்பில் பதிவு செய்தேன். மறுநாள் காலை ஏழரை மணிக்கு ஃபோனில் அழைத்து நிச்சயமாக நீங்கள் விரும்பும் டியூன்களைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி அவர் என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்தார். நான் கண்டுபிடித்த டியூன்கள் மறந்து போகாமலிருப்பதற்காக விசிலடித்த படியே ஐந்தாவது மாடியிலிருந்து எனியோவின் ப்ளாட்டிற்குச் சென்றேன்.

நான் உள்ளே சென்றபோது நீங்கள் பதிவு செய்த டியூன்களைக் கேட்பதற்கு முன்னால் நான் இன்று காலையில் கம்போஸ் செய்த மூன்று டியூன்களைக் கேளுங்கள் என்று சொல்லி, நான் பதிவு செய்து வைத்திருந்த அதே டியூன்களையே அவர், பியானோவில் வாசிக்கத் தொடங்கினார்.

எனக்கு ஆச்சரியம். எப்படி அதே டியூன்களை நீங்களும் வாசித்தீர்கள் என வினவ, ஒரு மாதம் நாம் ஒன்றாக விவாதித்தால் ஒரே அலைவரிசையில் சிந்தித்துக் கொண்டிருப்போம் என்றார் அவர்.

அலைவரிசையா? இது அதே நோட்ஸ்தான். அலைவரிசையல்ல என்றேன்.

அவர் பதிலேதும் பேசவில்லை. பின்னர் வெனிஸ் நகரத்தில் தங்கச் சிங்கம் விருது தரும்போது எதனால் இசையமைப்பாளரின் பெயரில் கொடுத்திருக்கிறீர்கள் என்று யாரோ ஒருவர் மொரிக்கோனிடம் கேட்டார். அப்போது அவர் விளக்கியது இப்படித்தான். அன்று விடியலில் கீலோ இந்த டியூன்களை விசிலடித்துப் பாடிய படியே படியேறி வந்தார். வீட்டிற்குள் வந்தவுடன் தயவுடன் கவனியுங்கள் என்று சொல்லி அதே டியூன்களை பியானோவில் வாசித்துக் காண்பித்தேன். அது எப்படி நிகழ்ந்ததென்று புரியாமல் கீலோ அதிசயப்பட்டு நின்றார். ஆனால், அப்போது அவரிடமொன்றும் சொல்லவில்லை. பின்னர் நான் கீலோவின் மனைவியை அழைத்து நடந்த விஷயத்தைச் சொன்னேன். வெனிஸில் விருது கிடைக்குமென்றால் மட்டுமே இந்தச் செய்தியைக் கீலோவிடம் சொல்ல வேண்டும் என்று கூறினேன்.

தங்கச் சிங்கம் விருதுக்குப் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் , எனிமியோ இதைச் சொன்னபோது எல்லோருக்கும் அது ஒரு தமாஷாகத் தோன்றியது.

நீங்கள் பாசிஸ்ட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்களே. அந்த அனுபவங்கள் திரைப்படத் தயாரிப்பிற்கு உதவியிருக்கிறதா?

நிச்சயமாக, ஊன்றிப்பார்த்தால் எல்லா கொரில்லாப் போராளிகளுக்கும் இடையில் மிகுந்த ஒற்றுமையிருக்கிறது. பாரீசாக இருந்தாலும் ரோமாக இருந்தாலும் ஃபாசிசத்துக்கெதிரான போராட்டமும், அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திற்கெதிராக நடந்த போராட்டமும் நேரிடும் பிரச்சனைகளும் பயன்படுத்தும் யுத்ததந்திரங்களும் ஒன்றாகவே இருக்கின்றன. அதனால் என் அனுபவங்கள் எனக்கு அப்படி... என்று எனக்கு கற்பனை செய்ய முடியும். அல்ஜீரியா., கசம்பாவின் மக்கள் எனக்கு மிகவும் உதவினர். கொடிய வறுமையில் வாடும் மக்கள் வாழும் பகுதி அது. அவர்களால் அங்கே நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் தெளிவாக விவரிக்க முடிந்தது.

நாம் இதைப் பற்றிப் பேசும்போது யு.எஸ். படைவீரர்களும் கூட்டாளிகளும் ஈராக்கிலும் அதைத்தானே செய்கின்றனர். கூட்டம் கூட்டமாகப் பிடிக்கப்படுதல், கொடும் துன்புறுத்தல், கொலைகள் – நீங்கள் திரையில் காண்பித்த அதே காட்சிகள், அமெரிக்காவின் ஈராக் ஆக்ரமிப்பைப் பற்றிய உங்களின் அபிப்ராயமென்ன?

உலகத்திலுள்ள எந்த நாட்டின் மீது நடத்தப்படும் ஆக்ரமிப்புக்கும் நான் எதிரானவனே, இராக் ஒரு சுயாட்சி அதிகாரமுள்ள நாடாக இருக்க வேண்டும். பேட்டில் ஆப் அல்ஜீயர்ஸில் ஈராக்கியச் சூழலோடு நெருங்கிய ஒற்றுமை கொண்ட ஒரு காட்சியிருக்கிறது. சில பத்திரிக்கையாளர்கள் புரட்சித் தலைவர்களில் ஒருவரான பெண் மெஃப்தியிடம் உங்களுடைய FLNக்கு இந்த சக்தி வாய்ந்த பிரெஞ்சு இராணுவத்தைத் தோல்வியுறச் செய்ய முடியுமென்று நம்புகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அவர், இல்லை. ஆனால், பிரான்சிற்கு சரித்திரத்தைத் தடைசெய்ய முடியுமென்று நான் எண்ணவில்லை என்றார்.

அல்ஜீரியா, ஈராக் இவற்றின் சூழ்நிலைகளில் வித்தியாசமிருப்பினும் இந்த விஷயத்தில் ஈராக்கிற்கும் ஒருநற்செய்தி இருக்கிறது. கடைசியில் ஈராக்கும் அது போன்ற பிற நாடுகளும் ஆக்கிரமிப்புகளுக்கெதிரான போராட்டத்தில் வேதனையினூடாகவும் தங்களுடைய நாட்டின் சுதந்திரத்தைத் திரும்பப் பெறுவதில் வெற்றிபெறும் என் கணக்கு சரியாக இருப்பின் ஈராக் இன்னும் சிறிது காலத்திற்குள் சுதந்திரநாடாக மாறும். நான் இப்படி எதிர்பார்ப்பது, அது மிக இயல்பான நிலையில் நிகழப்போகிறது என்பதால் அல்ல. அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு அநியாயமும், சட்ட விரோதமுமானதென்று நம்புவர்களின் வாதத்தை ஒத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. சமீபத்தில் ஈராக்கிய கைதிகளை துன்புறுத்துவது பற்றி வெளியே வந்துகொண்டிருக்கும் செய்திகள் அதையே நமக்கு உணர்த்துகின்றன. துன்புறுத்தல்கள் பற்றி இதுவரை வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் மட்டுமே நாம் விவாதிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஈராக்கில் இத்தாலியின் படைநிறுத்தம் பற்றிய தங்களின் அபிப்ராயம்?

நான் இதைக் கடுமையாக எதிர்க்கிறேன்.

பேட்டில் அப் அல்ஜீயர்ஸ்க்கு பிறகு நீங்கள் பேர்ண் (Burn) என்றொரு படமெடுத்தீர்களே அதில் மார்லோன் பிராண்டோவுடன் பணிபுரிந்தது எப்படி?

பிராண்டோ பெரிய மேதமை கொண்டவரும் அசாதாரண நடிகருமாக இருப்பினும், சட்டென்று உணர்ச்சிவசப்படுபவராக இருப்பதால் அவரோடு இணைந்து பணிசெய்வது மிகக் கடுமையானதே. மிகவும் சென்ஸிடிவான ஒரு பந்தயக்குதிரையைப் போலவே அவர் இருந்தார். ஆனால், ஒரு திறமையான பிரொபஷனல் ஆக இருந்ததால் நாம் சொல்லுகிற விஷயங்களெல்லாம் மிக அழகாகச் செய்வார். பேர்ண் படமெடுக்கும்போது சிரமமிருந்தது. அப்போதெல்லாம் தினமும் ஒரு மாதம் நானும் மார்லோனும் பரஸ்பரம் பேசிக்கொள்வது கூட இல்லை. நான் எதிர்பார்ப்பதை என்னுடைய உதவியாளர்கள் மூலமே தெரிவித்துக்கொண்டிருந்தேன். படப்பிடிப்பு முடிந்தபோது ஒரு கைகுலுக்கல் கூடத் தராமல், குட்பை கூடச் சொல்லாமல் தான் நாங்கள் பிரிந்தோம்.

ஆனால் அதன் பிறகு எங்களின் நட்பு மிக நல்ல நிலைக்கு வந்தது. பேர்ண் படப்பிடிப்பு முடிந்த ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் செவ்வியந்தியர்களைப் பற்றி ஒரு படம் எடுக்கப்போவதாகக் கூறி அவர் என்னை அணுகினார். அவரைப் பார்த்தபோது, நம் இருவரின் குணத்திலும் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் நாம் இருவரும் ஒன்றாக இணைந்து மேலும் ஒரு படமெடுக்கத் துவங்கினால் மூன்றாம் நாளே சண்டை போட்டு பிரிந்துவிடுவோம் என்றேன். இல்லை... இல்லை... அரசியல் மற்றும் மரபான காரணங்களினால் நான் அப்படி நிகழாதிருக்க முயற்சி செய்கிறேன். இத்தகைய படமெடுக்க மிகப் பொருத்தமானவர் நீங்கள்தான் என நான் கருதுகிறேன். அதனால்தான் இந்தத் திரைப்படத்தையெடுக்கும்படி உங்களிடம் வேண்டுகிறேன் என்றார் அவர். 20 நாட்களோ, ஒரு மாதமோ ஒரு செவ்விந்தியக் குடியிருப்பில் தங்கியிருந்து அவர்களின் உரையாடல்களைக் கவனிக்க நான் அனுமதி கேட்டேன். அவர் அதற்குச் சம்மதித்தார். தொடர்ந்து ஒரு மாதம் வரை நான் மிகவும் வறுமையான நிலையிலிருந்த ஒரு செவ்விந்தியக் கிராமத்தில் போய்த் தங்கினேன். அது மிகவும் ரசமான அனுபவமாக இருந்தது. என்ன கெட்ட நேரமோ- என்னுடையவோ, மார்லோனுடையவோ கட்டுப்பாட்டில் இல்லாத சில காரணங்களால் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு கைவிடப்பட்டது. அதானால், செளத் – டக்கோட்டையின் சியேக்ஸ் இந்தியர்களுடன் ஒரு மாதம் வரை தங்கியிருக்கும்படியான ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததில் நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

நீங்கள் பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸிம், பேர்ணும், உருவாக்கியபோது அதிக அளவில் இடது சாரி இயக்குநர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திரைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால், இன்று அப்படியான திரைப்படங்கள் எடுப்பவர்கள் மிகக் குறைவே. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

துரதிருஷ்டவசமாக திரைப்படத்தயாரிப்பில் கடந்த பதினைந்தோ இருபதோ வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிடவும் மோசமான ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சினிமா எடுப்பவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைந்துள்ளது. அல்லது மக்களின் பிரச்சினைகளின் மீதான அக்கறை குறைந்துள்ளது. அப்படிப்பட்ட படங்களெடுக்க முன்புபோலத் தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவிப்பதில்லை. மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இயக்குநர்களைப் பொறுத்தவரை இது கொஞ்சம் வித்தியாசமானது. காரணம் அவர்களின் விருப்பங்கள் வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல.; அரசியலும், சமூகமும் சார்ந்ததுமாக இருக்கிறது. கலைத்தன்மை மிக்க திரைப்படமெடுக்க விரும்புவர்கள் பெருமளவில் உள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மீடியாக்களுக்கும் ஐரோப்பாவின் பொது மக்களுக்கும் அரசியல் மீதான விருப்பங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.

நீங்களே 1956 வரை P.C.I. (Italian Communist Party) உறுப்பினராக இருந்தீர்களே எதனால் அதிலிருந்து வெளியேறினீர்கள்?

ஹங்கேரி பிரச்னை மட்டுமல்ல நான் வெளியேறியதற்கு காரணம். என்னால் மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தை அங்கீகரிக்க முடியாது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் அவர்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருந்தார்கள். ஆனால், அதற்குப் பிறகும் நானொரு இடதுசாரியாகவேயிருந்தேன். ஒருபோதும் அதன் எதிரியானதேயில்லை.

நீங்களே ஒரு சோஷியலிஸ்ட் என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக எனக்கு சோஷியலிஸத்துடனும் முற்போக்குச் சிந்தனைகளுடனும் மிக நெருங்கிய உறவு உண்டு.

இளம் இயக்குநர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

உங்களின் தைரியத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள் என்பதே நான் சொல்ல விரும்புவது. மிக்க கடினமானதாக இருப்பினும் அது நீண்டகால அடிப்படையில் நல்ல பலன் தரும். உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு சினிமா எடுப்பதைவிட பத்து மடங்கு திருப்தியும் பெருமையையும் அது தரும். அதை நீங்கள் உறுதியாகக் கடைப்பிடியுங்கள், நிச்சயமக அங்கீகரிக்கப்படுவீர்கள்.

டி.டி.ராமகிருஷ்ணன்,
மலையாளத்திலிருந்து:கே.வி.ஜெயஸ்ரீ

திரை ஏப்ரல்-2006
நன்றி: லீனா மணிமேகலை மற்றும் திரை இதழ் நிர்வாகத்தினருக்கு.

 

go to to  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: esaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/esaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </