இதழ்: 23     புரட்டாசி (October 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
 
கோவிந்த் நிஹ்லானி - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா 4 - சாரு நிவேதிதா
--------------------------------
உயிர் கொடுக்கும் கலை 13 - டிராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி - 12 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 8 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 6 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 8 - தினேஷ் குமார்
--------------------------------
ஏகாதிபத்தியப் பார்வையில் போராட்டம், புரட்சி, தீவிரவாதம் - டி.டி.ராமகிருஷ்ணன்
--------------------------------
 
   

   

 

 

விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 8

- தினேஷ் குமார்

சென்ற இதழின் தொடர்ச்சியாக:

பத்மினி:

பத்மினியை சினிமா உலகில் இருக்கும் பொழுதே பல புகைப்படங்கள் எடுத்திருக்கின்றேன். மிகவும் அன்பானவர். ”பப்பிம்மா”, என்று சினிமா உலகில் செல்லமாக அழைக்கப்படுபவர். பூர்வீகம் திருவிதாங்கூர். முதலில் அறிமுகமானது இந்தி மொழித் திரைப்படம் (கல்பனா) என்றாலும், தமிழ்த்திரையுலகில் கோலோச்சிய நடிகை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். “தில்லானா மோகானாம்பாள்”, திரைப்படத்தில் வரும் மோகனாங்கி அவ்வளவு எளிதில் தமிழ் மக்கள் மனச்சித்திரத்தில் இருந்து அகலவில்லை. சிறந்த நடிகையாக பத்மினி “ஏழை படும் பாடு” திரைப்படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது அவரை நான்தான் புகைப்படங்கள் எடுத்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன் என்று முந்தைய இதழில் சொல்லியிருக்கின்றேன். இதே “ஏழை படும் பாடு” திரைப்படத்தில் மூத்த சகோதரி லலிதாவும் நடித்திருக்கின்றார். இவர்களின் இளைய சகோதரி ராகினி கூட ”வீரபாண்டிய கட்டபொம்மன்” என்ற தமிழ்படத்திலும், பெருவாரியாக மலையாளப் படங்களிலும், ஒருசில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். இவர்கள்தான் “திருவிதாங்கூர் சகோதரிகள்” என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் பரதநாட்டியக் கச்சேரி அந்நாட்களில் வெகு பிரசித்தம்.

ஒருநாள் பத்மினிக்கு டாக்டர் சந்திரசேகர் என்பவருடன் கல்யாண ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக எனக்கு செய்தி கிட்டியது. கல்யாணத்திற்கு முன்பு ஏனைய நடிகைகளைப் போலவே இவரும் சிறிது சிறிதாக திரையுலகிலிருந்து ஒதுங்கிக் கொள்ள நேரிடும் என நான் கருதியதால், பிறிதொரு சமயம் அவரை படப்பிடிப்புத்தளத்தில் சந்தித்து உங்களை திருமணத்திற்கு முன்பாக ஒரு புகைப்படம் எடுக்க ஆசை என்று கூறினேன். ஸ்டூடியோவினுள் புகைப்படம் வேண்டாம், நாளை மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வாருங்கள் என்று சொன்னார் பத்மினி.

அடுத்த நாள் மாலை சரியாக 4 மணிக்கெல்லாம் நான் பத்மினியின் வீட்டில் இருந்தேன். ஆனால் அவர் வீட்டில் இல்லை. படப்பிடிப்புத் தளத்தில் இருக்கிறார் என பத்மினியின் தங்கை ராகினி என்னிடம் கூறினாள். நாட்டியப் பேரொளியின் கால்ஷீட் இனிமேல் கிடைக்காது என்ற காரணமோ தெரியவில்லை மாலை ஆறு மணிக்கு மேலேயும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. நான் ராகினியுடன் பேசியபடியே நேரத்தை மென்றுகொண்டிருந்தேன். ஏழு மணிவாக்கில் பத்மினி வீட்டிற்கு போன் செய்தார். “இங்கு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, எப்போது முடியும் என்று சரியாகத் தெரியவில்லை, வீட்டிற்கு ஆனந்தன் வந்திருப்பார். அவரைச் சாப்பிட வைத்து நன்றாக கவனித்துக்கொள், நான் வந்துவிடுகின்றேன்” என்று ராகினியிடம் சொன்னார். ஆனாலும், இரவு எட்டுமணியாகியும் அவர் வரவில்லை. பத்மினி சொன்னதுபோலவே நானும் சாப்பிட்டு முடித்துவிட்டு காத்திருக்கின்றேன். சரியாக இரவு பத்துமணிக்கு பத்மினி வருகிறார். வந்ததும் காரைக்கூட சரியாக நிறுத்தவில்லை, டிரைவரிடம் ”கார் வாசலிலேயே இருக்கட்டும், ஆனந்தன் சார் சிறிது நேரத்தில்வருவார், அவர் வீட்டிற்குச்செல்ல வேண்டும் தயாராக இரு”, என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்தார்.

பத்மினி என்னைப் பார்த்ததும், நான் எழ முற்பட்டேன். “இதோ ஒரு நிமிஷம் ஆனந்தன்” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார் பத்மினி. அவர் திரும்பி வருவதற்குண்டான நேர இடைவெளியை, என் கேமராவினை சரியாக இயங்குகிறதா என்று சோதித்துப் பார்த்துக்கொகொள்ள நான் பயன்படுத்திக்கொண்டேன். அதிகப்படியான முகப்பூச்சுகளெல்லாம் இல்லாமல், முகத்தை மட்டும் கழுவிவிட்டு, புருவத்தினை நேர்த்திசெய்து கொண்டு பளிச்சென்று வந்தார் பத்மினி. அவரை புகைப்படங்கள் எடுக்கின்றபொழுது இரவு பதினொரு மணியாகியது. ஆறு புகைப்படங்கள் எடுத்தேன். பின்னர் அவர்காரிலேயே நான் வீட்டிற்கும் வந்து சேர்ந்தேன். அழகாக தெரியவேண்டுமென என்ன மேக்கப் இருக்கிறதோ அவை எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கின்ற நடிகையர்கள் இருக்கின்றார்கள். ஆனால் போட்டிருந்த மேக்கப்பையும் கலைத்துவிட்டு வந்த பத்மினியின் வசீகரமிகு முகம் அவ்வளவு அழகு. இப்படியான நடிகையின் திருமணத்திற்கு எப்படியாவது சென்றுவிடவேண்டும் என்று எனக்குள் உள்ளூர ஆசை.

ஆனால் கல்யாணம் நடந்தது குருவாயூரில், பின்னர் நானும் இன்னொரு நண்பருமாக கடைசி நேரத்தில் அவர் கல்யாணத்திற்கு செல்வது என்று முடிவுசெய்தோம். அவர் பெயர் ஜோசப். கோயம்புத்தூரிலிருந்து குருவாயூருக்கு செல்கின்ற கடைசி ட்ரெயினில் நாங்கள் ஏறினோம், கல்யாணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவசரஅவசரமாக கிளம்பியிருக்கின்றோம், அத்தோடு கடைசிவண்டியை தவறவிட்டுவிடக்கூடாது என்ற படபடப்பும் கூடவேயிருந்த காரணத்தினால் , ட்ரெயின் டிக்கெட் எடுக்கவில்லை.

என்ன செய்வது என்று யோசிப்பதற்குள்ளாகவே, டிக்கெட் பரிசோதகர் வந்துவிட்டார். பின்னர் நாங்களிவரும் நடந்தவிஷயத்தை அப்படியே சொன்னோம். இருவரும் சினிமாவிற்கு நெருக்கம் என்றும், பத்மினியின் கல்யாணம் என்றெல்லாம் சொன்னவுடன் புரிந்துகொண்டு டிக்கெட் பரிசோதகர் பயணத்தொகையை மட்டும் செலுத்தச் சொல்லிவிட்டு எங்களிடமிருந்து நகர்ந்தார். காலை டிபனும் சாப்பிடவில்லை. கோயம்புத்தூர் வந்து இறங்கியாயிற்று, குருவாயூருக்குச் செல்லும் கடைசி ட்ரெயினில் ஓடிப்பிடித்து ஏறினோம் அங்கும் டிக்கெட் எடுக்கவில்லை என்பது ட்ரெயினில் ஏறியவுடன் தான் ஞாபகம் வந்தது. டிக்கெட் பரிசோதரிடமும் முன்னம் சொன்ன அதே தகவலைச் சொன்னோம். கோயம்புத்தூரிலும் சாப்பிடவில்லை, இப்படியாக அரும்பாடுபட்டு குருவாயூருக்கு வந்து சேர்ந்தோம்.

இனி கல்யாண மண்டபத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமே. பெரிய பெரிய மண்டபமாக ஏறியிறங்குகின்றோம். தெரியாத ஊர் என்பதால் எவரிடமும் சரியாக முகவரியை விசாரிக்க முடியவில்லை. இப்படியாக அலைந்து திரிந்து கொண்டிருந்த வேளையில் ஒருமண்டபத்தில் பத்மினியின் மூத்த சகோதரி லலிதாவை
கண்டுபிடித்துவிட்டோம். சாலையில் நாங்கள் நின்றுகொண்டிருக்கின்றோம். மண்டபத்தின் முன்புறம் நல்ல கூட்டம். சாலையிலிருந்தவாறே கைகளை உயர்த்திக்காண்பிக்கிறோம். எங்களை அடையாளம் கண்டுகொண்ட லலிதா உடனே எங்களிருவரையும் மண்டபத்தினுள் அழைத்துச்சென்றார். நாங்கள் மண்டபத்தை கண்டுபிடித்து உள்ளே நுழையவே இரவு ஆகிவிட்டது. பத்மினியின் சகோதரிகளே எங்களை அழைத்துச்சென்று சாப்பிடவைத்தனர். எங்களுக்கு முன்னரே மாலைமுரசு இன்ன பிற பத்திரிக்கைகளிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர்.

காலை 5 மணிக்குத்தான் திருமணம். மண்டபமே நிலைகொள்ளாத அளவிற்கு கூட்டம் கலைகட்டியது. கூட்டத்திலிருந்து வந்த ராகினியிடம் நவீன 16எம்.எம். கேமிரா இருந்தது. அந்தக் கேமிராவை என்னிடத்தில் தந்து கல்யாணப் போட்டோக்கள் எடுத்துத்தரும்படி சொன்னாள் ராகினி. நான் கொண்டு சென்ற கேமிராவை விட நவீனவசதிகள் கொண்டது ராகினி தந்த கேமிரா, அதுமட்டுமின்றி என்னுடைய காமிராவில் வெளிச்சம் சரிவர இல்லையானால், போட்டோக்களும் தரமானதாக இருக்காது. எனவே ராகினி கொடுத்த கேமிராவை வாங்கிக் கொண்டேன். முன்பே குறிப்பிட்டது போல அங்கு ஏகப்பட்ட கூட்டம். என்னைப் போலவே ஏகப்பட்ட பத்திரிக்கையாளர்கள் பத்மினியின் மணக்கோல வரவிற்காக காத்திருக்கின்றனர். கூட்டம் அலைமோதுகின்றது. நானும் ராகினி கொடுத்த 16எம்.எம் கேமிராவை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றேன். பத்மினியும் மணக்கோலத்தில் வருகின்றாள். எண்ணினால் இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது, முகத்தை மட்டும் காண்பித்துவிட்டு உடனே காரில் ஏறிச்சென்றுவிட்டாள். என்ன செய்ய?

என்னால் சரியாக போட்டோக்கள் எடுக்கமுடியவில்லை, என்னோடு உடனிருந்த பத்திரிக்கையாளர்களுக்கும் இதே கதிதான். பத்மினி சென்றதும் ராகினி மேடையிலிருந்து இறங்கி என்னிடம் விசாரிப்பதற்குள், நான் முதலிலேயே காமிராவை அவரிடம் கொடுத்துவிட்டு, ”மன்னிச்சுக்கம்மா, என்னால சரியாக படம் எடுக்கமுடியல”, என்றேன். நான் வருத்தப்பட்டு பேசியதை உணர்ந்து கொண்ட ராகினி “போட்டோதான எடுக்கணும், யார் கிட்டயும் சொல்லாதீங்க, அந்த முதல் கார்ல ஏறிடுங்க, அது எனக்கான சீட், அங்க உங்கள யாரும் இறங்கச் சொல்லமாட்டாங்க, அந்தக்கார்ல போய் உட்காருங்க” என்றாள். மற்ற பத்திரிக்கையாளர்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கையில் நான்மட்டும் சென்று அவள் காட்டிய முதல் காரில் ஏறிக்கொண்டேன். ராகினி கூறியது போலவே யாரும் என்னை அங்கிருந்து எழுந்திருக்கச் சொல்லவில்லை.
கார் ஒரு பெரியபங்களாவின் முன்னால் நின்றது. பங்களாவினுள் நுழைந்தால் பத்மினியும், மாப்பிள்ளையும் ஊஞ்சலில் மணக்கோலத்தில் ஜம்பமாக அமர்ந்திருக்கின்றனர். எனக்கான இன்ப அதிர்ச்சி கலைவதற்குள் அவர்களை அங்கேயே அந்த 16எம்.எம் கேமிராவில் போட்டோக்கள் எடுத்தேன். அடுத்தநாள் ஹிந்துவில் நான் எடுத்த புகைப்படம் வந்தது. மற்ற பத்திரிக்கைகாரர்கள் எல்லோருமே ஆச்சர்யப்பட்டுப் போயினர். அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, நான் மட்டும் அந்த மணக்கோல புகைப்படம் எடுத்துவிட்ட காரணத்தினால் அங்கலாய்த்தனர்.

”தோடி”ராகம் பாடிய ஜேசுதாஸ்:

இதேபோல் சினிமாப்பிரபலம் ஒருவர் கல்யாணத்தில் கே.ஜே.யேசுதாஸ் கச்சேரி நடப்பதாக இருந்தது. ”அப்படி நடப்பதாக இருந்தால் தோடி ராகத்தில் எனக்கு மிகவும் பிடித்த, ”தாயே யசோதா”,பாடினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்”, என்றேன். அதேபோலவே அவரும் ”தாயே யசோதா”, பாடலை தோடி ராகத்தில் பாடினார். அவர் பாடிக்கொண்டிருக்கின்ற சமயத்தில் நான் எங்கும் செல்லவில்லை, அவர் எனக்காகத்தான் தோடி ராகம் பாடுகின்றார் என்பது தெரியும். அமைதியாக இசையை ரசித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டேன்.

பின்பு சாப்பாட்டு பந்தி நடக்கின்ற இடத்திற்கு மனைவியுடன் சென்றிருந்தேன். அப்பொழுது எனது மகன் டைமண்ட் பாபு கைக்குழந்தையாக இருக்கின்றான். அவனுக்காக கையில் பால்புட்டியுடன் நின்றிருக்கின்றேன். ஜேசுதாஸ் கச்சேரி முடிந்து நண்பர்களுடன் சாப்பிடவந்தவர் என்னைப் பார்த்துவிட்டு, அத்தோடு கையில் பால்புட்டியும் வைத்திருப்பதால் ”என்ன ஆனந்தன் சார், இன்னமும் பால்புட்டி பழக்கம் போகலையா ?”,என்று கிண்டல் பண்ணுகிறார்.

மேலும் “தோடி, சந்தோஷமா?” என்று கேட்டுவிட்டுச் சென்றார். அவர் எவ்வளவு பெரிய பாடகர் ஆனால், நான் கேட்டதன் காரணமாக ஒரு பாடல் பாடியிருக்கின்றார் என்றால் இந்த ஆனந்தனுக்கு இதுவே ஆனந்தம். என்.எஸ்.கிருஷ்ணன், பத்மினையைப்போல கே.ஜே.யேசுதாஸும் என்பால் அன்பு கொண்டவர் என்பதை அந்தக்கச்சேரியில் நான் கண்டுகொண்டேன்.

தனிமனித பி.ஆர்.ஓ:

ஸ்ரீதர், ”கல்யாணப்பரிசு”, என்றோர் படம் எடுக்கின்றார். படம் நன்றாக ஓடிவசூலையும் குவிக்கின்றது. இந்தப் படம் ஹிந்தியில், தெலுங்கில் எடுக்கப்பட்டும் நன்றாக ஓடியது. இதற்குப் பின்னர் ஸ்ரீதர் தனக்காக ஓர் பி.ஆர்.ஓவை வைத்துக்கொண்டார். இதன் பின்பு தான் தனிப்பட்ட பி.ஆர்.ஓக்களின் காலம் அதிகமானது.

தொடரும்...

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
    </