பிரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்
- கேள்விகள்: விஸ்வாமித்திரன், தமிழில்: அஜீதன், சித்ரா. தட்டச்சு உதவி: தினேஷ் குமார் |
திரைப்பட இயக்குநரான பிரசன்ன விதானகே தமது போருக்கெதிரான அரசியல் பார்வைகளால் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் போராட்ட குணம் வாய்ந்த படைப்பாளியாக மதிக்கப்படுகிறார். நாடகங்களுடனான ஈடுபாட்டில் எழுச்சிகொண்டது அவரது கலைத்துவக்கம். அதன் தொடர்பங்களிப்பாக 1986-ல் பெர்னாட்ஷாவினுடைய arms and the man என்ற நாடகத்தை மொழிபெயர்த்தார். 1991ல் டேரியா ஃபோவினுடைய aspberries and trumpets நாடகத்தை மொழிபெயர்த்தார். அவரது முதல் திரைப்படமான தீயின் மீது பனி (ice on fire) இலங்கையில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட ஒன்பது OCIC விருதுகளைப் பெற்று சாதனை படைத்தது. நான்கு வருடங்கள் கழித்து 1996-ஆம் ஆண்டில் அவரது இரண்டாவது படமான ஆன்மாவின் இருண்ட இரவு (dark night of the soul) வெளியானது. இப்படம் அவ்வருடத்திற்கான இலங்கையின் திரைப்பட விமர்சகர் விருதைப் பெற்றது. அவற்றுள் சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகள் உள்ளடங்கும். 1997ல் வெளியான மூன்றாவது படமான உள்ளிருக்கும் சுவர்கள் (walls within) பிரசன்னாவின் அடையாளத்தை உலகெங்கிலும் நிலைநிறுத்திக்கொண்ட படம். அதேவருடத்திலேயே அடுத்தபடமான ஒரு முழுநிலவு நாளின்போதான மரணம் துவங்கப்பட்டது. இலங்கையில் தொடரும் போர் சாமான்ய மக்கள்மீது நிகழ்த்தும் வன்முறையை வெகு தீவிரத்துடன் சுட்டிக்காட்டியது இப்படம். அடுத்த படம் ஆகஸ்ட் மாத சூரியன். 2003ல் வெளியான இப்படமும் முந்தைய படம்போலவே போர்ச்சூழலின் பின்விளைவுகளை கதைக்களமாக எடுத்துக்கொண்டது. இலங்கையில் அமைதிப்பேச்சு வார்த்தைக்கும் துப்பாக்கி குண்டுகளின் ஓசைக்கும் இடையே ஊசலாட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கும் போரின்மீதான படைப்பு ரீதியான காத்திர விமர்சனத்தை பிரசன்னாவின் படங்கள் அளித்துக்கொண்டிருக்கின்றன. எதன் காரணத்தை முன்வைத்தும் தனிமனித இழப்பு ஏற்கமுடியாது என்பதுவே சமூக அர்ப்பணிப்பை தனது உயிரிருப்பாக அணிந்துகொண்ட பிரசன்னா விதானகே எனும் அரசியல் கலைஞனது வீர்யமிக்க குரலின் சாராம்சம். அக்குரலின் பரந்த தளத்தை திசை சுட்டும் ஒரு சிறுபிரதேசமாக விரிவடைகின்றது. பிரசன்னா விதானகே செவ்வகம் இதழுக்காக அளித்த இந்த நேர்காணல்.
|
ங்களது இளமைப்பருவம் குறித்து கூறுங்கள்.?
எனது அம்மாவின் சொந்த ஊர் பாணதுரை. கொழும்பிலிருந்து பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எனது தந்தையின் ஊர் கண்டி நகருக்குப் பக்கத்தில் அவர் வருமான வரித்துறையில் குமாஸ்தாவாக வேலை செய்பவர். நான் சிறுவனாக இருந்தபோது, எங்களுடனான அவரது சந்திப்பு அரிதானதாகவே இருந்தது. நான் தனிமைப்பட்டுவிட்டதாக உணராவிட்டாலும் கொஞ்சம் மனச்சோர்வு உள்ளவனாகவே அவ்வயதில் இருந்திருக்கின்றேன். எனது இளம்பருவ நினைவோட்டத்தில் திடமாக ஞாபகத்திலிருப்பது எனது பாட்டியுடன் இருந்த காலகட்டம்தான். அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. என்னை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடற்கரைக்கு கூட்டிச்செல்வார். அங்கு நான் ஊஞ்சற்கட்டை விளையாட்டு விளையாட விரும்புவேன். ஆனால் அவ்விளையாட்டிற்கு இன்னொருவரும் தேவை. எனது குடும்பத்தில் நான் மாத்திரமே ஒரே குழந்தை என்பதால், என்னோடு சேர்ந்து விளையாடும் துணையில்லை. எனவே எனது அம்மா எங்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒரு சிறுமியை என்னுடைய விளையாட்டுத்துணையாக நியமித்திருந்தார். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் அவளுக்கு 5 செண்ட்கள் வழங்கப்படும். எனது இளமைப்பருவத்தில் அதிகமாக தனிமையில்தான் எனது காலம் கழிந்திருக்கின்றது. ஆனாலும் நான் தனிமைப்பட்டதாக உணர்ந்ததில்லை. ஏனெனில் எனது அம்மா வாசிக்கச்சொல்லி அளித்த புத்தகங்கள் எனது துணைக்கிருந்தன.
எனது அம்மாவிற்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் திருமணமும் ஆகியிருக்காத நிலையில் அன்றைய சூழலில் நான் குடும்பத்திலிருந்த ஒரே குழந்தை எனும் காரணத்தினால் அவர்கள் என்மீது முழுக்க கவனம் வைத்திருந்தார்கள். ‘பிற்காலத்தில் நீ எழுத்தாளன் ஆவாய்”, என்று அடிக்கடி கூறுவார்கள்.
சிறிது காலங்கழித்து எனது தந்தை எங்களுடனேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அவர் திரைப்படம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவர். எனக்கு ‘பிரசன்னா’ என அவர் பெயரிட்டதே இந்திய கிரிக்கெட் விளையாட்டுக்காரர் ‘இரப்பள்ளி பிரசன்னா’ சிறுவயதில் இளம்பிள்ளை வாதத்திற்கு ஆட்பட்டவர் எனினும் அந்த தடைகளையெல்லாம் கடந்து பிற்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த பந்து வீச்சாளராக புகழ்பெற்றவர் எனும் அடிப்படையிலும் எனது பெயர் ‘பிரசன்னா’ ஆயிற்று.
மேலும் எனது தந்தை இந்தியப் படங்களில், குறிப்பாக ஹிந்திப்படங்களைக் காண்பதில் ஆர்வமுடையவராக இருந்தார். இலங்கையில் எடுக்கப்படும் வர்த்தகப்படங்களிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. பொதுவாக, வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்கள் எங்களூரில் வெளியாகும். எனது தந்தையின் துணையால் சிறுவயதிலேயே திரையரங்கிற்கு வரும் அனைத்துப்படங்களையும் பார்த்துவிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பிற்பாடு பதின்மூன்று பதினான்கு வயதுகளில் படம் பார்க்க தனியாக செல்லும் வழக்கமும் ஏற்பட்டது. எனது இளமைப்பருவம் குறித்து எண்ணிப்பார்க்கையில் அப்பருவம் திரைப்படங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.
நீங்கள் இளைஞராக இருந்தபோது இலங்கையில் நிகழத்துவங்கிவிட்ட போர்ச்சூழலை எவ்விதம் எதிர்கொண்டீர்கள்?
1962- ஆம் வருடம் நான் பிறந்தேன். 1970- வரையிலும் இலங்கையில் நிலவின அரசியல்ரீதியான பொருளாதார ரீதியான சிரமங்களை நான் உணர்ந்திருக்கவில்லை. அனைத்தும் இயல்பாக இருந்தது என்று அதற்குப்பொருளாகாது. நான்தான் உணர்ந்துகொள்ளும் பருவத்தில் அப்போது இல்லை. எனது நினைவின்படி முதல் அரசியல் கிளர்ச்சி. 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற அப்போதைய ஆட்சிக்கெதிரான போராட்டம்தான். வங்காளத்தில் கிளர்ந்த நக்சலைட் இயக்கப்போராட்டத்தைத் தொடர்ந்து உருவான அந்நிகழ்வு கம்ப்யூனிஸ்ட் கட்சியும், 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இலங்கை சுதந்திரக் கட்சியும் உள்ளடங்கின. ஐக்கிய முன்னணி அரசை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கத்தில் நடந்தது. வாழ்வியல் சிரமங்களை எதிர்கொள்ள இயலாமல்போன வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் கலகமே 1971ஆம் வருட கிளர்ச்சிக்கு அடிப்படை. அவ்விளைஞர்கள் அனைவரும் ‘சிங்கள திரஸ்தவாதி’ என்பதாகும். எனது இளம்வயதில் ‘திரஸ்தவாதி’ என்ற வார்த்தை சரியாக உச்சரிக்கக் கூட எனக்கு வராது. இம்மாதிரியான சிலவற்றைத் தவிர்த்து அக்காலகட்டத்தின் அரசியல் குறித்து ஏதோவொன்றையும் நான் உணர்ந்ததில்லை.
எனது அம்மாவின் சகோதரர், மாவோ, லெனின், சே குவேரா போன்றோரின் வாழ்வியல் வரலாற்றை வைத்திருந்தார். ஆனால் நான் அப்புத்தகங்களை வாசித்ததில்லை. அவற்றின் மேலட்டைகளை மாத்திரமே புரட்டிப்பார்ப்பேன். 1974ஆம் ஆண்டில் எனது சிந்தனையில் தாக்கம் நிகழ்த்தின, இளைஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் எனது ஊருக்கு அருகாமையில் வசிப்பவரும் கூட. வீட்டில் அவரது தாத்தா ஒரு மருத்துவர். அவர் ஆர்வத்தில் பாதுகாத்து வைத்திருந்த துப்பாக்கியை அவ்விளைஞர் இயக்கம் ஒன்றிற்கு கொடுத்துவிட்டார். பின்பு அதன்காரணமாக பிடிபட்டு சிறையிலிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி ஊர் திரும்பியபோது எனக்கு இருபத்திரெண்டு அல்லது இருபத்திமூன்று வயதிருக்கும். அப்பொழுது டால்ஸ்டாய், குப்ரின் சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என ரஷ்ய இலக்கியங்களை நான் படித்துக்கொண்டிருந்த காலகட்டம். அந்த இளைஞர் தனது வாழ்வு சார்ந்து எவ்வித அரசியல்ரீதியான நெருக்கடிகளையும் பெற்றிருக்கவில்லை. எனினும் நீதியற்ற அமைப்பில் தான் உலவுவதை சகிக்க இயலாமல் தனது வீட்டுக்குச் சொந்தமான துப்பாக்கியை எடுத்து நிலவும் அமைப்பிற்கு எதிராக கிளர்ந்த இளைஞரியக்கத்திற்கு கொடுத்துவிட்டார். எனவே இவரின் தாக்கம் என்னுள் எழத்துவங்கியது. லெனின், மார்கல், ட்ராட்ஸ்கி ஆகியோர் சார்ந்த எழுத்துக்களின் மொழிபெயர்ப்புக்களை வாசிக்கும்படி புத்தகங்களை இவர் எனக்கு அளித்திருந்தார்.
பள்ளிப்பருவத்தில் தமிழர்களுடனான தங்கள் நட்பு எவ்விதமாக உணரப்பட்டது.?
நான் கொழும்பிலுள்ள ஒரு பள்ளியில் கல்வி பயிலச்சென்றேன். ஏனெனில் எனது அம்மா நான் சிறந்த கல்வியை பெற வேண்டுமென விரும்பினார். எனவே, அந்த தீவிலேயே சிறந்த பள்ளிக்கூடங்கள் ஒன்றிலேயே என்னைச் சேர்த்தார். பள்ளி நாட்களிலேயே நண்பர்களோடு சேர்ந்து அரசியல் குறித்து விவாதிப்பதுண்டு. இது அறிந்து ஒருமுறை பள்ளியில் தலைமையாசிரியர் என்னை அழைத்து எனது அரசியல் நம்பிக்கைகள் தொடருமானால் பள்ளியை விட்டு அனுப்பிவிடுவேன் என்று எச்சரித்தார்.
இன்றைக்கும் என்னுடைய பள்ளி நண்பர்கள் என்னை எப்பொழுது சந்தித்தாலும் ‘நான் ஒரு அரசியல்வாதியாக வருவேன்’ என்று அவர்கள் எண்ணியதாக கூறுவார்கள். அந்தப்பள்ளி மற்ற சிங்களவருக்கு அளிக்காத வேறு ஒரு தோற்றத்தை எனக்கு அளித்திருந்தது. ஏனெனில் பள்ளியில் தமிழ்ப்பிரிவு என்றும் ஆங்கிலப்பிரிவு என்றும் இரு பிரிவுகள் இருந்தன. பெரும்பான்மையான சிங்களவர்கள் தமிழர்களோடு பழகவிருப்பமில்லாதவர்கள். அதேபோல தமிழர்களும், சிங்களவரோடு பழக விரும்புவதில்லை. அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளால் சிங்களவரும் தமிழ் மக்களும் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். இந்தப்பிரிவினையின் மத்தியில், தமிழரோடு பழகும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். இதனால் அவர்களைப் பற்றி நான் அறிந்துகொள்ள முடிந்தது. அதே நேரத்தில் சினிமாவிலும் இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடும் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் ‘கலையின் பயன்பாடு’ குறித்த விவாதங்கள் எங்களுக்குள் எழும்பத்துவங்கின. ‘கலை என்பது மக்களுக்கானது’ என்பது சார்ந்த விவாதங்கள் சர்ச்சிக்கப்படும். இது சிங்கள மொழியில் ‘கலாப ஜனதா’ என்று அழைக்கப்படும். இந்தப் பார்வை சோசலிச யதார்த்த தாக்கத்தால் விளைந்த ஒன்று. அதே நேரத்தில் ‘கலை என்பது கலைக்காக மாத்திரமே’ என்பது சார்ந்த விவாதங்களும் ஏற்படுவதுண்டு. திரைப்படங்களைப் பார்க்க பல்வேறு கலாச்சாரத் தூதரகங்களுக்கும் உலகத் திரைப்பட விழாக்களும் வரும் நண்பர்களுடன் இத்தகைய உரையாடல்களை நான் நிகழ்த்துவதுண்டு.
இதன் தொடர்ச்சியாக சினிமா மீதான எனது ஈர்ப்பு அதிகமாயிற்று. அச்சமயம் சோவியத் யூனியன் சிதைவுற்றதைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் சூழல் மாற்றமடைந்தது. இடதுசாரி இயக்கம் வீழ்ச்சியுற்றது. வீழ்ச்சிக்கு அது மாத்திரமே காரணமல்ல. டிராஸ்கிய இயக்கம் இலங்கை சுதந்திரக் கட்சியோடு இணைந்ததும் அதனால் தனது அடையாளத்தை இழந்துபோனதும் ஒரு காரணம்.
1983 இல் நடந்த மிகவும் மோசமான இனக்கலவரத்தில் நாங்கள் குற்றவுணர்வு அடைந்ததற்கு எனது தலைமுறையில் நானும், திரைப்பட இயக்குனர் அசோகா ஹந்தகமாவும் உதாரணங்கள். நாங்கள் எதையும் செய்ய இயலாதபடி நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. சிந்திக்கக் கூடிய மக்களும், நேர்மையின் மீதும் நியாயத்தின் மீதும் நம்பிக்கைக் கொண்ட மக்களுமாகிய நாங்கள் எதுவும் செய்ய இயலவில்லை. தமிழ் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழருக்கு சொந்தமான கடைகளும், திரையரங்கங்களும் கொளுத்தப்பட்டன. இந்தக்கொடும் நிலை 1978லிருந்து துவங்கி 1983 வரையிலான ஆட்சியில் நடைபெற்றது.
|
உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சியடைந்தபிறகு , மக்கள் மற்றவர்களின் துயரங்களிலிருந்து தம்மை விலக்கப்படுத்திக்கொண்டார்கள். நகரப் பொருளாதாரம் மக்கள்மீது மிகுந்த பாதிப்பினை செலுத்தி நிறைய பொருட்களை வாங்கிக் குவிக்கும் வாய்ப்புகளை அளித்தது. கலையைப் பற்றி பேசிய கலைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்களும் கூட நிறைய பணம் சம்பாதிக்க வழி ஏற்பட்டது. நாளுக்குநாள் யதார்த்தத்தின் மீதிருந்த பிடிப்பு குறைய ஆரம்பித்தது. பரபரப்பு இல்லாத பாடல்கள் எழுதப்பட்டது. அது வெறுமனே பணம் சம்பாதிக்க மாத்திரமே. இதுதான் 1983ன் நிலை.
இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து சிங்கள அரசிற்கு எதிராக தமது உரிமைப்போரை துவங்கினார்கள். ஒரு மனிதனாக போரில் நான் நேரடியாக பங்கேற்கவில்லையெனினும், இந்தப்போர் சூழலில் 20வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். இந்தச் சூழல் போர், அரசியல் பற்றிய எனது சிந்தனையில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
1983க்கு பிறகு ஒர் சோஸியலிஸ்ட் கூறியதுபோல, ”அரசியல் மீது வகுப்புவாதம் செல்வாக்கை செலுத்தவில்லை. மாறாக இனவாதமே செலுத்துகிறது.” இலங்கையைப் பற்றிய தேசியகல்வி எங்கள் வாழ்வு மீது பாதிப்பு செலுத்திக்கொண்டிருக்க கூடிய ஒரு தொடர்ந்த விஷயம்.
நாடக அரங்கிலிருந்துதான் சினிமாவிற்கு வந்திருக்கிறீர்கள். நாடக அரங்கில் தங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாடு குறித்தும், அது தங்கள் மீது செலுத்திய தாக்கம் குறித்தும் கூறுங்கள்?
எனது பார்வையில் நாடக அரங்கு என்பது காட்சி அனுபவம் தருவது. சினிமாவில் பல காட்சிகள் உள்ளன. ஆனால் நாடக அரங்கில் ஒரு காட்சிதான். அல்லது ஒரே சட்டகம் தான். அங்கு நடிகர்கள் நகர்ந்துசெல்லும்பொழுது நீங்கள் அங்கு பல சட்டகங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். எனது அனைத்து நாடகமுமே காட்சி அனுபவத்தை தருபவைகள்தான். 1980களில் அரங்கவியலாளர் ஸ்டானிஸ் லாவிஸ்கின் நடிப்புகுறித்த விமர்சன எழுத்துக்களில் தாக்கம் அடைந்திருந்தேன். இலங்கையில் நாடக நடிப்பு என்பது ஒரு அரசியல் பிரச்சாரத்தை ஒத்திருந்தது குறிப்பாக கூறினால் நடிகர்கள் மேடைக்கு முன்புறம் வந்து மக்களிடம் நேரடியாக பேசுவார்கள். ஆனால் ஸ்டானிஸ் லாவிஸ்கியின் எழுத்துக்களில் நான் படித்தது என்னவென்றால் “நடிப்பின் அனைத்து அசைவுகளும் கதாபாத்திரத்தின் உள்மன நோக்கங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.” இதுவே நான் விரும்பிய பார்வையும் கூட.
ஸ்டானிஸ்லாவிஸ்கி ஒருமுறை கூறினார். மனிதப்பண்புகளைக்கொண்ட மனித உருவகம் தான் மனிதனுக்கு தேவைப்படுகின்றது. ” இந்த விஷயங்களெல்லாம் நான் நாடகங்களை இயக்கின காலகட்டத்தில் பாதிப்பை செலுத்தின. அரசியல் ரீதியான பார்வையோடு நான் இயக்கிய நாடகம் பெர்னாட்ஷாவினுடைய arms and the man. அந்நாடகம் போரின் உண்மை முகத்தை வெளிக்காட்டியது. போரை கேள்விக்குள்ளாக்கியது. போரை எள்ளி நகையாடியது. இந்த காரணங்களே அந்நாடகத்தை நான் இயக்க தூண்டினவை.
மற்றொரு நாடகம். டேரியோ ஃபோவினது raspberries and trumpets எல்லா விஷயங்களையுமே முடிவாக அரசியல்வாதிகளாளும் , மாற்றமடையும் அரசாங்கத்தாலும் தீர்மானிக்கப்படுகின்றன. இதில் தனிமனித வாழ்வு மாத்திரமே பாதிப்புக்குள்ளாகிறது. மேலும் பாதிப்பு உள்ளானவர்களே தன்னைத்தானே தேற்றிக்கொள்ள வேண்டியதாகிறது. உங்கள் கேள்விக்கு திரும்புகிறேன். நாடக அரங்கில் நான் கடந்து வந்த அனைத்துமே என்னை பாதித்தவைதான். அதே காலகட்டத்தில் நாடக இயக்குனர்கள் குறித்தும் அதிகம் வாசித்திருக்கிறேன். உதாரணத்திர்கு எலியா கஸானின் சுயசரிதை இந்தப்புத்தகம் என்னை வெகுவாக பாதித்த ஒன்றுதான்.
சிங்களப்படங்கள் உங்கள் மீது செலுத்திய தாக்கம் குறித்துக் கூறுங்கள்?
இக்கேள்வி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் குறித்துக் கேட்காமல் இலங்கைத் திரைப்படங்கள் குறித்துக்கேட்டது, எனது தலைமுறையில் அதிகமானோர் இலங்கைத் திரைப்பட இயக்குநர்களை முன்னுதாரணமாகப் பார்க்க முடிந்ததில்லை. ஒரு இயக்குநரை சுட்டிக்காட்டி ‘அவர்போல நீங்கள் ஆகவிரும்புகிறீர்களா?’ எனக்கேட்டால் எங்களால் பதில்கூற இயலாமல் போகும், எனினும் இரண்டு, மூன்று திரைப்பட இயக்குனர்கள் இருக்கிறார்கள். முதன்மையானவரான லெஸ்டர் ஜேம்ஸ் பெரிஸினுடைய அனைத்துப் படங்களையும் 1977 – ஆம் வருடம் நடைபெற்ற திரைப்பட விழாவில் பார்த்திருக்கிறேன். இலங்கையில் மற்ற இயக்குநர்களுக்கு கைவரப்பெறாத மேன்மைக்கும் பெரிஸினுடைய படங்களில் இருந்தது என்னை வெகுவாக ஈர்த்தது. நல்ல திரைப்படங்களை அவர் இயக்கிய அக்கால கட்டத்தில் , படங்களில் அவர் அதிகமான விஷயங்களைப் பேசியிருக்கிறார். அவருடைய படங்களில் இரண்டைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஒன்று மாற்றமடையும் கிராமம், மற்றொன்று செல்வம். ஆனாலும், செல்வம் படத்திற்கு பிறகு அவர் சிறிது சிறிதாக தரவீழ்ச்சி அடைந்தார் என்றே கூறவேண்டும். ஏனெனில் இளைஞர்களும் விமர்சகர்களும் ‘நாட்டின் யதார்த்தத்திலிருந்து அவர் முற்றிலும் விலகுவதாக’ குற்றம் சாட்டினார்கள். அதே சமயத்தில் ஆரம்ப காலத்தில் அவரிடமிருந்த அர்ப்பணிப்புணர்வு அவரது பிந்தைய படங்களில் இல்லாமல் போனது . அவரை விடுத்து மற்ற இரு இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஒருவர், தர்மசேனாபதி ராஜா, மற்றவர், வசந்த ஒபேயசேகரா பதிராஜாவின் one league of sky படத்தை 1974 இல் பார்த்தேன். அப்படம் என்னுள் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியது. அப்படம் வேலைவாய்ப்பற்ற இளைஞனை மையமிடுவது பதிராஜா எழுபதுகளின் இறுதிவரை சிறந்த படங்களை அளித்தார். சமகாலத்தில் அவரது ஈடுபாடும் அர்ப்பணிப்புணர்வும் தளர்ந்துவிட்டதாகவே நாங்கள் உணர்கிறோம்.
|
எனவே, நான் எண்பதுகளின் இறுதியில் திரைப்பட இயக்குநராக பிரவேசித்த போது நான் முன்னமே கூறின மாதிரி, இவரைப் போன்ற இயக்குநரக நான் வரவேண்டும். என்ற என்ணத்தை உதயப்படுத்தும்படி யாரும் அப்போது இல்லை. இருப்பினும் நான் வசந்த ஒபேய சேகராவுடன் பணிசெய்தபோது சினிமாவை வித்தியாசமான அம்சங்களில் அணுக விரும்பினவராக அவர் இருந்தது என்னை ஈர்த்திருக்கிறது.
திரைப்படத்துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட போது தங்களது, பெற்றோரது நிலைப்பாடு என்னவாக இருந்தது?
எனது பெற்றோர்கள் எனது சினிமா வாழ்க்கை என்றைக்கும் மறுப்பு தெரிவித்ததில்லை. திரைப்படங்களில் எனக்கிருந்த ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். பார்வையாளர்களால் பெரிதும் வரவேற்பு பெற்றிருந்த எனது நாடகங்களைக் கான எனது பாட்டி வரும்பொழுது எனது அம்மாவோ அல்லது உறவினர்களோ எனது பாட்டியைக் கேட்பார்கள். “உனது பேரனைக் கண்டு பெருமிதம் கொள்கிறாயா நீ?”, பாட்டி சொல்வார் “அடைகிறேன் தான், ஆனாலும் அவன் ஒரு அரசு ஊழியனாக வேலை பார்த்தால் இறுதியில் ஓய்வூதியமாக கிடைக்கும்”.
தங்களது முதல் திரைப்படமான தீயின் மீது பனி உருவானது குறித்து கூறுங்கள்.?
தான் திரைப்படம் எடுக்கத்துவங்கிய காலத்தில், அரசியல்ரீதியாக நாட்டில் மீண்டும் கலவரம் தலையெடுத்து, 1987ல் வடகிழக்கு பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும். இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் ‘இந்தோ – லங்கா ஒப்பந்தம்’ உருவானது. இந்திய ராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி புலிகள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து சில மாதங்களில் இந்திய ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே வடக்கில் போர் மூண்டது. தெற்கில் இதற்கெதிராக ‘ஜனதா விமுக்தி பெரமுனா’ (JVP) இயக்கம் கிளர்ச்சியை முடுக்கிவிட்டது. இந்திய அனுமானங்களை விரட்டியடியுங்கள். என்றும் இந்தியர்கள் விற்கும் பொருட்களை வாங்காதீர்கள்’ என்றும் பிரச்சாரம் செய்தது. எனவே இந்தோ- லங்கா ஒப்பந்தத்திற்கு எதிராக கிளர்ச்சி எழுந்தது. இப்பிரச்சனை உச்சத்திலிருந்து 1988 ஆம் வருடம்தான் எனது முதல் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றேன். படத்தின் பெயர்- தீயின் மீது பனி.
இலங்கையில் சம்பவித்த ஒரு கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்ட அப்படம். படத்தின் தயாரிப்பாளர் அப்பொழுது இலங்கையின் பிரபல நடிகராக இருந்தவர். அவர் என்னை அழைத்து யாரோ ஒருவர் எழுதியிருந்த திரைக்கதையை படிக்கச் சொல்லி தந்தார். அத்திரைக்கதையில் செய்யவேண்டிய மாற்றங்களை என்னிடம் கேட்டார். நானும் கூறினேன்,அவர் பிரபல நடிகராக இருந்தபோதிலும் அப்போதிருந்த சூழலில் திரைப்பட தயாரிப்பு நலிவடைந்த நிலையிலிருந்தது. எந்த ஒரு படப்படிப்பும் இல்லாது போன சூழல் எனவே அப்படத்தை கருப்பு வெள்ளைப்படமாக தயாரிக்கவே அவர் விரும்பினார். பின்பு அவரும் என்னுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறினார். திரைக்கதையை மீண்டும் ஒருமுறை எழுதினால் சிறப்பாக வரக்கூடும் என நான் அவரிடம் தெரிவித்தேன். அப்படத்தை நானே இயக்குவதாகவும் கூறினேன். கொலைவழக்கைப் பறிய அப்படம் வெகுஜனத் திரைப்படங்களுக்கு இணையாக மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. உண்மையில் கொலைநிகழ்வில் என்ன நடந்தது என்றும், ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எவ்விதமாக முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள் எனவும், அகிரா குரசோவாவின், ”ரஷோமான்” படம் போலவே ஆராயும் படம் அது. படத்தினது அனைத்துக் கதாபாத்திரங்களும் இப்பிரச்சனைகளோடு சம்பந்தப்பட்டவர்கள். எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கதையைக் கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் கருப்பு வெள்ளைப்படம் எடுப்பதென்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று.
இங்க்மர் பெர்க்மனின் படங்களிலும் நான் தாக்கம் பெற்றுள்ளேன். கொழும்பு நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பெர்க்மனின் படங்களை முதன்முறையாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது படங்களின் கருப்பு – வெள்ளை நிறத்தின் துல்லியம் என்னை வெகுவாக பாதித்தது. அதேசமயத்திலேயே புகழ்பெற்ற கியூப ஒளிப்பதிவாளர் நெஸ்டர் அல்மெண்ட்ரோலீனுடைய புத்தகமும் வாசிக்க நேர்ந்தது. சிறந்த கருப்பு – வெள்ளை ஒளிப்பதிவை திரைப்படங்களில் கொண்டுவர கலை இயக்கம் முதற்கொண்டு ஒவ்வொரு செயல்முறையும் கருப்பு வெள்ளை நிறத்திலேயே திட்டமிட்டு செய்யப்பட துல்லியமான கருப்பு – வெள்ளை நிறத்திலேயே திட்டமிட்டு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதன்படியானால், துல்லியமான கருப்பு – வெள்ளை காட்சிகளை பெறமுடியும். அல்மெண்ட்ரோஸ் கூறின அணுகுமுறையை பெர்க்மானின் திரைப்படங்களில் நான் கண்டேன்.
இரண்டாவது படமான ஆன்மாவின் இருண்ட இரவு குறித்து...?
ஆன்மாவின் இருண்ட இரவு படம் டால்ஸ்டாயினுடைய recurrection நாவலை அடிப்படையாக கொண்டது. 1989 ல் இலங்கையில் நடந்த நிகழ்வொன்று என்னைப் பாதித்தது. அந்நிகழ்வே படத்தின் பின்புலமாக அமையும். படம் ஒரு மனிதனின் வாழ்வுப் பயணம் சார்ந்தது. சிறிது காலத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்து பின்பு அவளிடமிருந்து விலகியவன். அப்பெண் ஒரு தொழிலதிபரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றம் அழைத்துவரப்படும்போது நடுவர் குழுவில் அவனும் இருக்கிறான். அவள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது தன்னை அடையாளம் கண்டுவிடுவாளோ என்று கவலையுறுகிறான். பின்பு கடந்த கால நினைவுகளில் ஆழ்கிறான். இள வயதில் சமூகத்தை மாற்றும் லட்சியத்துடன் வாழ்ந்த அவன் பின்பு சமூக அமைப்பின் ஒரு அங்கமாகிவிடுகிறான். இந்த பின்னணியில் அவனது கடந்தகாலம் நினைவூட்டப்படுகிறது.
இப்படத்தை நான் 1993ஆம் வருடம் துவங்கினேன். எனது மனைவியின் தயாரிப்பில் உருவான இப்படம் முழுமையடைய பல வருடங்கள் எடுத்துக்கொண்டது. ஏனெனில், குறைவான பணமே எங்களிடமிருந்தது , பின்பு வங்கியில் கடன் வாங்கி மீண்டும் படப்பிடிப்பைத் தொடர்ந்தோம். படம் முழுமையடைவதற்கு முன்பே அப்பணம் தீர்ந்துவிட்டது. வர்த்தக ரீதியாக படம் இயக்கமாட்டேன். என்கிற நிலையிலும் படத்திற்கான நிகழ்ச்சியை இயக்கினேன். அந்த சமயத்தில் எனது மேடைநாடகம் ஒன்றும் மக்களின் வரவேற்பைப்பெற்று தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருந்தது. அதன்மூலமாக கிடைத்த பணத்தையும் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து 1995ல் படம் நிறைவடைந்தது. அப்படத்தின் முதல்பிரதியை ஜெமினி லேப்பிலிருந்து பெற்றவுடன் கொல்கத்தாவிற்கு அனுப்பினேன். அப்படத்தின் முதல் திரையிடல் அங்கிருந்த ஒரு திரைப்படச் சங்கத்தால் நிகழ்த்தப்பட்டது. சிறந்த வரவேற்பையும் பெற்றது. அங்கிருந்து படம் டெல்லிக்குச் சென்றது. டெல்லி திரைப்பட விழா உலகின் மற்ற திரைப்பட விழாக்களுக்கு செல்ல வழிவகுத்தது. என்னை உலகிற்கு அடையாளப்படுத்தின முக்கியமான திரைப்பட விழா அது.
1994ல் இப்படம் முழுமையடைந்து கொண்டிருக்கும் நிலையிலேயே எனது அடுத்த படமான உள்ளிருக்கும் சுவர்கள் துவக்கப்பட்டது. படம் 1997இல் முழுமையடைந்தது. ஒரு படத்தின் நூறு சதவீதப்பணியை முடிப்பதென்பது எளிதான விஷயமில்லை, எழுபது சதவீதபணி முடியவேண்டுமென்றால் நூறு சதவீதம் பணி செய்தாகவேண்டும், என்பது இலங்கையிலிருந்த சினிமாவின் நிலை. எனவே அப்படம் பல விஷயங்களை முன்வைத்து அதிக காலம் எடுத்துக்கொண்டது. இலங்கையை ஒப்பிடும்போது, சென்னையில் ஒரு படத்திற்கு போதுமான காலத்தை யாரும் செலவழிப்பதில்லை. சென்னையில் படப்பிடிப்பு துவங்கவும் முதல்நாளன்றே அப்படத்தின் வெளியீட்டு நாளும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. ஆனால் உள்ளிருக்கும் சுவர்கள் படப்பிடிப்பிற்கும் பின்னான சப்தபணி மற்றும் தொகுப்பு போன்ற பல பணிகளுக்கு அதிக காலத்தை நான் செலவு செய்தேன்.
இப்படம் வெளிநாடுகளில் பரந்த அளவிலான வரவேற்பைப் பெற்றது. மற்ற நாட்டுத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பின்னரே, இலங்கையில் திரையிடப்பட்டது. படம் கொழும்பு நகரில் 78 நாட்கள் ஓடியது. ஆன்மாவின் இருண்ட இரவு வெகுமக்கள் ரசனைக்கு மிகவும் பொருந்தக்கூடிய படமில்லை என்பதால் 55 நாட்கள் மாத்திரமே ஓடியது. அப்படம் அ- நேர்கோட்டுப்பாணியில் (non lienear) அமைந்த படம் என்பதால் மக்களின் பார்வையில் கடினமான சொல்லாடல் கொண்ட படமாக கருதப்பட்டது என்று நினைக்கிறேன். எனவே அப்படத்தால் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் வரை எங்களது பணத்தை இழந்திருந்தோம். எனினும் அப்படத்தின் மூலமாகவே ஒரு முழுநிலவுநாளின் போதான மரணம் பட வாய்ப்பை நான் பெறநேர்ந்தது. ஆன்மாவின் இருண்ட இரவு ஃபுகுவாகோ திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டபோது, ஜப்பானிய தொலைத்தொடர்புக்குழு படத்தைப்பார்த்திருக்கிறார்கள், படம் இயக்கும் வாய்ப்பை அளித்தார்கள், இவ்வழியில் ஆன்மாவின் இருண்ட இரவு எனக்கு மற்றொரு படத்திற்கான பணத்தைப்பெற்றுத்தந்தது.
”ஒரு முழுநிலவுநாளின் போதான மரணம்”, படத்தை இயக்கும் போதுதான் முதன்முதலாக எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக பணிசெய்தேன். எனது முந்தைய படங்களான ”தீயின்மீது பனி”, ”ஆன்மாவின் இருண்ட இரவு”, ”உள்ளிருக்கும் சுவர்கள்”, ஆகியவற்றில் பிரபல நடிகர்கள் இடம் பெற்றார்கள். ஆனால் ”ஒரு முழுநிலவு நாளின் போதான மரணம்” படத்தில் நடித்தது ஒரு பிரபல நடிகரான ஜோ அபேவிக்ரமசிங்கே மாத்திரம்தான். மற்ற கதாபாத்திரமேற்றோர் எல்லோரும் அப்பொழுதுதான் முதன்முதலாக ஒளிப்பதிவுக் கருவியை பார்ப்பவர்கள். ஏனெனில், படத்தயாரிப்பாளர்கள் எனது நாட்டின் இயல்பைப் படத்தில் சித்தரிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இக்காரணத்தால் வர்த்தக ரீதியான லாப நோக்கத்தின்பால் நான் தள்ளப்படவில்லை.
படத்தில் ராணுவம் சார்ந்த காட்சிகள் தேவைப்பட்டதன் காரணமாக படத்தின் திரைக்கதையை இலங்கை ராணுவ அதிகாரிகளிடம் அளித்தேன். அவர்களது அனுமதியில்லாமல் படத்தில் ராணுவத்தை எந்தமாதிரியான காட்சியமைப்பிலும் நாங்கள் இடம் பெறச்செய்ய இயலாது. எனது திரைக்கதையிலிருந்த உடல் தகனம் செய்யப்படும் காட்சிக்காக ராணுவம் அமைந்துள்ள மைதானம் தேவைப்பட்டது. (அக்காட்சி படத்தில் இடம்பெறவில்லை) அவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கமாட்டார்கள் என்றும் தோன்றியது. ஆனால் திரைப்பட விழாக்களில் வெகுவாக வரவேற்பைப்பெற்று பல விருதுகளையும் வென்றது. அதற்குப்பின்னர் தணிக்கைக்கு படத்தை அனுப்பினேன். திரையிடவும் அனுமதி கிடைத்தது. படம் இலங்கையில் வெளியாகி ஏழு நாட்களில் , திரைப்படத்துறையின் பொறுப்பை வகித்த அமைச்சரின் குறுக்கீட்டால் தடைசெய்யப்பட்டது. எனவே இப்பிரச்சினை மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் அனைத்து இளைஞர்களும் அறிவுஜீவிகளும் என்னை ’சீர் குலைப்பு குணம்’, கொண்ட இயக்குனராக அடையாளம் கண்டிருந்தார்கள். ஆனால் இதையறியாமல் அரசும் அமைப்புகளும் எனக்கு விருதுகளை வழங்கிக் கொண்டிருந்தன. (சிரிக்கிறார்). பின்பு படம் தடை செய்யப்பட்டதை முன்னிட்டு அதற்கெதிராக போராடப்போவதாக அறிவித்தேன். சிலர்தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இலங்கைத் திரைப்படத்துறை இத்தடைக்கு எதிராக எதையும் செய்யவில்லை. இந்தியாவில், ராகேஷ் ஷர்மாவின் இறுதித் தீர்வு எனும் ஆவணப்படம் தடைசெய்யப்பட்டபோது மற்ற இந்திய இயக்குனர்கள் அத்தடையை எதிர்த்து குரல்கொடுத்தார்கள். ஆனால் அவ்வெதிர்ப்பு இலங்கையில் நிகழவில்லை. பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க கூடிய படம் இது’ என அமைச்சர் வாதிட்டார். எனவே அவர்மீது ‘மனித உரிமைக்கெதிரான வன்முறை’ சார்ந்த வழக்கு தொடர்ந்தேன். அவ்வழக்கு எனது வாழ்வின் ஒரு வருடத்தை எடுத்துக்கொண்டது.
அதே நேரத்தில் படம் தடைசெய்யப்பட்டிருந்த காரணத்தால் இலங்கைக்கு வெளியே பிரபலம் அடைந்திருந்தது., இலங்கையின் திரையமைப்புகள் பல்வேறு இடங்களில் படத்தை திரையிட்டார்கள். இறுதியில் வழக்கில் நான் வெற்றி பெற்றேன். அமைச்சர் இழப்பீட்டுப் பணம் கட்ட நேர்ந்தது. படமும் இலங்கையில் மீண்டும் வெளியாகி உடனடியான வெற்றியையும் ஈட்டியது. அதற்குப்பின்னர் இலங்கையிலிருந்த திரைப்பட ஏற்றுமதி நிறுவனமான EAP-Films எனது படத்தின் கதையைக்கூட கூறும்படி என்னிடம் கேட்கவில்லை. நானாகவே பத்து நிமிடங்களுக்கு கதையை விவரிக்க உடனே ஒப்புக்கொண்டார்கள். அச்சமயத்தில் ஒரு முழு நிலவு நாளின்போதான மரணம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்ததும் ஒரு காரணம். ஆகவே, ‘பணம் திரும்பக் கிடைத்துவிடும்’ என்று எண்ணினார்கள். அதன்படி எனது ஐந்தாவது படமான ”ஆகஸ்ட் மாத சூரியன்” உருவானது.
ஒளிப்பதிவாளர் எம்.டி. மகிந்தபாலாவிற்கும் தங்களுக்குமான அகஒருமையை தங்களது படங்களில் உணரமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் நீங்கள் உள்ளுணர்ந்த மிகத் துல்லியமாக படம்பிடிக்க வல்லவர் அவர் என்பதற்கான சாட்சியங்கள் தங்களது படங்களில் விரவியுள்ளன. மகிந்தபாலாவுடனான தங்களது பணிகுறித்து அறிய விரும்புகிறேன்?
நன்றி. மகிந்தபாலாவைப் பற்றி கூறுகையில், அவர் எனது ஆன்மாவின் ஒரு பகுதியாக இருக்கிறார். அத்துடன் அவரது சொந்த ஆன்மாவையும் பெற்றிருப்பவர். நாங்கள் இணைந்து பணியாற்றும்பொழுது அவரது எண்ணங்களை ஆழ்ந்து கவனிப்பேன். ஒரு ஒளிப்பதிவுக்கலைஞராக அவர் ஒளியமைப்பு சார்ந்து மட்டுமே அக்கறை கொள்வதில்லை. படக்காட்சி, கோணம், கதாபாத்திரங்களின் மனிதம் என அனைத்திலும் அக்கறைகாட்டுவார்.
தேவையிருந்தும் தவிர்க்கப்பட்ட அல்லது தணிக்கைக்குள்ளான காட்சிகள் என ஏதேனும் தங்களது படைப்பனுபவத்தில் நேர்ந்திருக்கின்றனவா?
சில நேரங்களில் மனிதர்களின் உணர்வெழுச்சிகளை, துன்பங்களை மேன்மையான திரைப்பரப்பில் கொண்டு வந்துவிட்டதால், நாம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். எனினும், ஏதோவொன்றும் ஆகஸ்ட் மாத சூரியன் படத்தின் ஒரு காட்சியிலும், அராஃபத்தும் அவரது மகனும் வீட்டுச் சாதனங்களை எடுத்துச்செல்ல வாகனம் தேடிச்செல்லும் வழியில் ஒரு வீட்டிலிருந்து ரத்தம் வழிய ஒரு பெண்மணி நடந்துவருவதைக் காண்கிறார்கள்.ஆனாலும், ஒரு கணம் மாத்திரமே அவளைக் கவனித்துவிட்டு கடந்து சென்று விடுகிறார்கள். ஆரம்பத்தில் எழுதப்பட்ட திரைக்கதையில் எனது திரைக்கதையாளர் அந்தப்பெண் தனது தாலியைத் தேடுவதாகவும் ‘எங்கே எனது தாலி’ என்று கேட்டுக்கொள்வதாகவும் எழுதியிருந்தார்., இதேமாதிரியான காட்சியை நான் வேறொரு படத்தில் பார்த்திருந்தேன். எனவே அந்தக்காட்சி தவிர்க்கப்பட்டது.
ஆகஸ்ட் மாத சூரியன் அனைவருக்கும் பொதுவாக சூழ்ந்திருக்கிற விதியின்பால் அகப்பட்டுக்கொண்ட மக்களைப் பற்றியது. எனவேதான் அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் நிற்பதில்லை. ஒரேவிதமான பிரச்சனையே இருசாராரையும் சூழ்ந்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட காரணத்திற்காகவே, அப்பெண் தனது தாலியைத் தேடுவது போன்ற காட்சி அவசியமற்றது என படப்பிடிப்பின் போது தோன்றியது. அராஃபத்தும் அவரது மகனும் ஒருகணம் நின்று அப்பெண்ணைப் பார்த்துவிட்டு செல்லும் காட்சியை அக்காட்சியில் ஒரு உபகதையும் சொல்லப்படுவதால் இணைத்துக்கொண்டேன்,
ஒரு முழுநிலவு நாளின் போதான மரணம் படத்தில் வன்னி ஹாமி சவப்பெட்டியை சந்தேகிக்கும் காட்சி. இக்காட்சி இடம்பெற்ற காரணத்தினாலேயே படம் இலங்கையில் தடைசெய்யப்பட்டது. பல சர்ச்சைகளுக்குப் பிறகு அமைச்சர் என்னிடம் “படத்தின் ஒரு காட்சியை வெட்ட நீங்கள் இணங்கினால் படத்தை வெளியிட எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை” என்று கூறினார். அவர் துண்டிக்க எத்தனித்த காட்சியே நீங்கள் விரும்பியதாக கூறின காட்சி. (சிரிக்கிறார்.......) ஆனால் நான் சம்மதிக்கவில்லை. அவரிடம் “நீங்கள் ஒரு படத்தொகுப்பாளர் போல பேசுகிறீர்கள்!” என்றேன். அவர் உடனே கூறினார். “ஆமாம் நான் ஃபிரான்சில் இருந்தபோது ஐந்து வருடங்கள் சினிமா சார்ந்த கல்வி பயின்றேன்.” (மீண்டும் சிரிக்கிறார்) எவ்வழியிலும் அக்காட்சியைத் தணிக்கைசெய்ய நான் ஒத்துக்கொள்ளவில்லை. இப்பொழுது அவர்கள் என்னைத் தடுக்கமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும், நான் நினைத்ததைச் செய்வதில் பிடிவாதகுணமுள்ளவன் என்பது.
நிர்வாண மற்றும் பாலுறுவு சார்ந்த காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்கள் சார்ந்து தணிக்கைத்துறையின் விதிமுறைகள் எவ்விதமான நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. ?
தணிக்கைத் துறைக்கு நான் சான்றிதழ் வழங்கமுடியாது என்று நினைக்கிறேன். (சிரிக்கிறார்...) வி.எச்.பி மற்றும் சிவசேனாவைப் போன்று இலங்கையிலும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை தடைப்படுத்த முயலும் அமைப்புகளை நாங்கள் எதிர்க்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆதிக்கவெறி நிரம்பினவர்கள் மற்ற பிரபல கலைவடிவங்களுக்கு தணிக்கைத்துறை மாத்திரம் மறுக்கப்படுகிறது. ஏனெனில், திரைப்படம் மாத்திரமே பாலுறுவு குறித்துப் பேசுகிறது.
மேலும், தணிக்கைத்துறை என்று வெளிப்படையான அமைப்பு இலங்கையில் இல்லை. இடைக்கால தணிக்கைத்துறை மாத்திரமே உள்ளது. ஏனெனில் தணிக்கைத்துறை வேண்டும். என்பதில் அப்போதிருந்த ரனில் விக்ரமசிங்கே அரசிற்கு ஆர்வமில்லை. பாலுறுவை மையப்படுத்தி வந்த அசோக ஹிந்தகமாவினது படம் ஒற்றை இறைக்கையில் பறத்தல் இடைக்கால தணிக்கைத்துறை இப்படத்தில் சில காட்சிகள் வெட்டப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. எனினும், இறுதியில் பிரதமரின் தலையீட்டிற்குப் பின்னர் அந்தப்படம் ஒரு வெட்டுகூட இல்லாமல் வெளியானது. அதேசமயத்தில் அப்படம் பல எதிர்காரணிகளால் தாக்கப்பட்டது., ‘திரைப்படங்களில் நிர்வாணம் என்பது ஒழுக்க கேடானது’ என்று அவை உரிமைக்குரல் எழுப்பின. எனவே, தணிக்கைத்துறை எப்படத்தையும் தணிக்கைக்குட்படுத்தாமல் வெளியிடக்கூடும் பட்சத்திலும், இம்மாதிரியான எதிரமைப்புக்கள் திரைப்பட இயக்குநர்களுக்கு பல இடையூறுகளை விளைவிக்க முயல்கிறது.என்பதே இலங்கையில் எமது இன்றைய நிலை.
உங்களது படங்களில் மையமாக இழையோடுவது – அடையாள இழப்புணர்வு ஒவ்வொரு படத்தில் வரும் கதாபாத்திரங்களும் ஏதோ ஒன்றை இழந்திருக்கிறார்கள். முக்கியமாக தமது சுய அடையாளத்தை இழந்திருக்கிறார்கள். தமது உறவை இழந்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் இலங்கையில் நிகழ்வதான ஒரு உண்மையான தோற்றத்தையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறார்கள். இந்தக் கதாபாத்திரங்கள் உள்ளுணர்வுமிக்கதாயும் உள்ளன. இவர்களை நீங்கள் எவ்விதம் அடையாளப்படுத்துகிறீர்கள். ?
தமது அடையாளத்தை இழந்தவரிடமும் தமது மதிப்பை இழந்தவரிடமும் தமது வாழ்வின் அனைத்தையும் இழந்தவரிடமும் நான் அண்மைப்பட்டிருக்கிறேன். மேலும், தம்மையே இழந்த மக்களிடமும் நான் அண்மைப்பட்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் எதை இழந்தார்கள் என்பது குறித்து நான் ஆர்வப்படவில்லை. ஆனால், இழந்த மதிப்பை திரும்பப் போராடி பெறுவது குறித்துதான் எனது ஆர்வம் எழுகிறது., அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிற விஷயங்களைத் தொடர்வதிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதில்லை. அவர்களது எழுச்சி நியாயமானது. எனவே அவர்களைப் போன்ற மக்களிடம் நான் ஈர்க்கப்படுகிறேன். நீங்கள் கூறினதுபோலவே எனது அனைத்துக் கதாபாத்திரங்களும் உண்மையானவைதான்.
அராஃபத் ஒர் இஸ்லாமியர். இலங்கையிலுள்ள எந்தவொரு இஸ்லாமியர் வீட்டிலும் நாய் வளர்ப்பது அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற நாடுகளின் நடைமுறைகளைப்பற்றி நான் அறியவில்லை. ஆனால் இலங்கையில் இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளை நாய்களோடு விளையாட அனுமதிப்பதில்லை. நாய் ஒரு அடக்கமுடியாத ஜீவன் என்பதுவே அதன் காரணம் நாயும் ஒருவிதத்தில் ‘சீர்குலைக்கும் குணம்’ வாய்க்கப் பெற்றதுதான். அராஃபத்தும் ‘சீர்குலைப்பு குணம்’ கொண்டவர்தான். எனவேதான் அவர் சூழலோடு ஒவ்வாத தன்மையோடு நடந்துகொள்கிறார். மனதுக்குள் பாதுகாக்கிறார். வெளிக்காட்டிக்கொள்வதில்லை.
|
சமேரி இறுதியாக தான் ஒரு உண்மையான மனைவியல்ல என்று கூறுகிறாள். அதேசமயம் உறவை விட்டுக்கொடுப்பதாயும் இல்லை. வன்னி ஹாமியும் இந்தக் குணத்தை ஒத்தவர்தான். கிராம மக்களோடு புத்த பிக்குகள் அவரைப்பார்த்து சமாதானப்படுத்த வருகின்றனர். அந்த வருகையின் பின்னணியில் இயங்குவது அவர் ‘தனது மகனை மறந்துவிட வேண்டும்’ என்கிற எண்ணம் வன்னிஹாமியின் இறந்துபோன மகனுக்காக ஒரு நினைவுக்கல் எழுப்ப வேண்டும். என்று கூறுகிறார்கள். வன்னிஹாமி பதிலளித்தார். “சரி ரொம்ப நல்லது, ஆனால் யாருக்கு நினைவுக்கல் எழுப்புவது?”
சமேரியையும் வன்னிஹாமியையும் வைத்துப் பார்க்கும் பொழுது அவர்கள் இருவருமே, பிடிவாதகுணமும் உடையவர்கள்தான்., அதேசமயம் அவர்கள் தங்களை புரட்சிக்காரர்களாகவும், பாவித்துக்கொள்வதில்லை. ஆனால் தமது விருப்பங்களை தமது தேவைகளை தமது இதயத்திலிருக்கும் நம்பிக்கைகளை தங்கள் உள்மனத்திலிருக்கும் பிடிவாத குணங்களை தம்முள் நினைத்துக்கொள்ள கூடியவர்களாக இருக்கிறார்கள்.
படத்தின் இறுதிக்காட்சியில் வன்னி ஹாமி பேசவேண்டிய நேரம் வரும்போது பேச முடியாதவராகிறார். ஆனால் அவர்களுடன் சண்டையிடுகிறார். அவரது நம்பிக்கைகளை அவர்களிடம் கூறவிரும்புகிறார். சமேரியும், அராஃபத்தும் இதே மனப்பான்மையை பெற்றிருக்கிறார்கள். சிலநேரங்களில் இந்த சமூகமும் நாம் அனைவரும் இந்த மனப்பான்மையை எதிர்கொள்கிறோம், என்றே நினைக்கிறேன். அமைப்பிற்காக போராடும் இவர்கள் நாத்திகர்கள். அமைப்பிற்கெதிராக சண்டையிடுகிறார்கள். அதே நேரமும் அமைப்பால் உறிஞ்சப்படுகிறார்கள்.
பல சிங்களத் திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது தமிழர் மீதான இரவுக்கவுணர்வை பாவிக்க கூடிய தன்மையை கணிக்கமுடிகிறது. உதாரணத்திற்கு அசோகா ஹந்தகமாவின் இது எனது நிலவு, எனும் படம். அதில்வரும் பாதிக்கப்பட்ட பாவிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. சோமரத்ன திஸ்ஸநாயகாவின் படங்களிலும் இதே பிரச்சினை இருக்கிறது. இரக்கவுணர்வு சுவாரஸ்யமளிக்கும் கலைப்பண்டமாக மாறிவிடும். அபாயம் இங்கே நிகழ்ந்துவிடுகிறது. இந்தப் பிரச்சனை சார்ந்து தங்களது படங்களில் வரும் கதாபாத்திரங்களின் தோற்றத்தை எவ்விதமானதாக நீங்கள் அனுமானிக்கிறீர்கள்?
1983-க்குப் பிறகு இலங்கையில் என்ன நடந்ததென்றால்- தமிழராகவோ அல்லது முஸ்லீம்களாகவோ அல்லது சிங்களராகவோ – யாராக இருப்பினும் போர்ச்சூழலில் வாழ்வு ஒட்டுமொத்தமாக நாசப்படுத்தப்பட்டது. எங்களது தலைமுறையினரால் ஏதும் செய்யமுடியாமல் போர்ச்சூழலுள் சிக்கிக்கொண்டு அதைக்காண்பதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாதிருந்த நிலையில், மக்கள்மீது பரிவுணர்வு காட்டுவது மாத்திரமே அப்போதைய நிலையில் வெளிப்படுத்தக்கூடுமானதாய் இருந்தது. ஆனால் அவர்களது வாழ்வை திரைப்படமாக்கும் வேளையில் எந்தவொரு கதாபாத்திரத்தையும் பரிவுணர்விற்குரியதாக சித்தரிக்க நான் விரும்பவில்லை. பரிவுணர்விற்கும் புரிந்துகொள்ளுதலுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. மற்றுமொரு மனிதனாக , நான் அவர்களை அறிந்துகொள்ள., புரிந்துகொள்ளவே முயல்கிறேன். எனவே பார்வையாளர்களிடமிருந்து இரக்கவுணர்வை நான் எதிர்பாக்கவில்லை. வன்னிஹாமி அராஃபத் போன்ற கதாபாத்திரங்களிடம் இரக்கவுணர்வை பாவிக்கும்படி நான் கூறவுமில்லை. ஆகஸ்ட் மாத சூரியன் படத்தில் ஒரேவிதமான வாழ்க்கைப் போராட்டத்தில் அலைபடும் அராஃபத்தும் சமேரியும் பார்வையாளர்களிடம் இரக்கவுணர்வை வேண்டவில்லை. மாறாக, அவர்களை தம்மை புரிந்துகொள்ளும்படியே வினவுகிறார்கள்.
எங்களைச்சுற்றி என்னென்ன நிகழ்கிறதோ அதையே படமாக்கத் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் சொல்ல நினைத்ததை அடியொற்றியே படத்தின் இறுதிவடிவம் முழுமையடைந்தது. ஒரு திரைப்பட இயக்குநராக நான் வேறு என்ன செய்வது? என்னால் முடிவதெல்லாம் மனிதர்களை புரிந்துகொள்ள முயல்வதுதான், ஏனெனில் ஒரு கலைஞனாக அம்முயற்சி எனது கடைமையும் கூட.
-------------------------------------------------------------------
(தமிழில் வெளிவந்த திரைப்பட சிற்றிதழ்களில் இருந்து முக்கியமான, அல்லது விவாதத்திற்குரிய, அல்லது ஆவணமாக இருக்க கூடிய சில கட்டுரைகளை பேசாமொழியில் படிக்க கொடுக்கிறோம். முடிந்த வரை அந்த கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகை ஆசிரியர்களின் அனுமதி பெற்றே அவை வெளியிடப்படும். ஆனால் சில சிற்றிதழ்களின் ஆசிரியர்களை அணுகவே முடியாத சூழலில் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இங்கே வெளியிடுகிறோம். தொடர்புடைய யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் கட்டுரைகள் நீக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
விஸ்வாமித்ரனை ஆசிரியராக கொண்டு வெளிவந்த செவ்வகம் சிற்றிதழில் இருந்து சில கட்டுரைகளை இந்த இதழில் வாசிக்க கொடுக்கிறோம்)
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |