ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 5
- பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த் |
திரைப்பட உருவாக்கம் என்பது அதன் அழகியலுக்கும் மேலாக உடல் வலுவை வெளிப்படுத்தும் விளையாட்டு போன்றது என்பது உங்களின் கூற்று. ’ஹெர்ஸாக்கின் அடிப்படைத் திரையாக்க விதி’என இதை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?
நான் சிறுவயதில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தவன். பனியில் சறுக்கி மேலே பாய்ந்து பின் கீழே இறங்கும்போது தலையை முன்புறம் நீட்டுவதைத் தவிர்க்கமுடியாது. உடலைப் பின்னே தள்ளும் காற்றின் அழுத்தத்தை நேர்செய்வதற்கான வழி என இதைச் சொல்லலாம். இது ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்காக மிக உயரத்திலிருந்து கீழே குதிப்பதைப் போன்றது. கீழே குதிக்கும்போது பாதிதூரம் வரும் நேரத்தில் யாருமற்ற அந்த வெளியில் நமக்கு உதவுவார் எவரும் இல்லை என்று உணர்வோம். சினிமா எடுப்பதும் இதைப் போன்றதுதான். தொடங்கிய பிறகு உங்களுக்கு உதவ யாரும் கிடையாது. தயங்காது சமாளித்து தொடங்கியதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
திரைப்படம் எடுக்கும் ஒவ்வொருவரும் ஒரு அளவுக்காவது உடல்வலிமை கொண்டவராக இருப்பது அவசியம். ஏனென்றால் சினிமா வெறும் அறிவுசார் உத்திகளைக் கொண்டு மட்டும் உருவாக்கப்படுவதல்ல. அது உங்கள் கால்கள், முழங்கால்களின் பலத்தைக் கொண்டு உருவாகிறது. இருபத்திநான்கு மணி நேரமும் உழைப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். திரைப்பட உருவாக்கத்தில் எந்த அனுபவமும் இல்லாத விமர்சகர்களைத் தவிர திரைப்படத்தை இயக்கியிருக்கும் ஒவ்வொருவரும் இதை ஏற்கெனவே அறிந்தவர்கள்தான். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற ஆரம்ப வேலைகள் பலவற்றை நான் செய்துமுடித்துவிடுவேன். அனைத்துப் பணிகளையும் நான் ஒருவனே செய்யமுடியாது. நல்ல உதவியாளர்கள் குழு ஒன்று எனக்கு உண்டு. படப்பிடிப்புற்கு என்ன தேவை என்பதை ஓரளவு தீர்மானித்து முடிவெடுத்துவிடுவேன். இது பலமுறை அடிபட்டுக் கற்றுக்கொண்டது. படம் எடுக்கும் இடத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைச் சரியாகச் சொல்லவே முடியாது. ஏதாவது ஒரு ஆச்சரியம் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும். நமது திட்டங்களுக்கு எதிராக ஒரு பெரிய சக்தியே அங்கு வேலைசெய்துகொண்டிருக்கும். ஒரு காட்சியைத் திட்டமிட்டபடி படமெடுக்க முடியவில்லை என்றால் தயங்காது அதை மாற்றியமைத்துவிடுவேன்.
நான் அடிக்கடி சொல்வது போல் என் படத்தின் பிரிண்ட் பிரதிகளை நானே சுமந்து செல்வது எனக்குப் பிடிக்கும். மொத்தமாக நாற்பத்துஐந்து பவுண்டுகள் எடையிருக்கும். திரைப்படம் எடுப்பதில் என் உடல் தொடர்பான இறுதி வேலை இதுதான். படப்பிடிப்பின்போது முடிந்தவரை சப்தமாகப் பேசி இயக்குவது வழக்கம். மெகாபோன் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை. உடல் இயக்கம் முழுமையாக அனுமதிக்கும் வரை மட்டுமே என்னால் படம் எடுக்க முடியும்.
பனிச்சறுக்கு விளையாட்டு மீதுள்ள பற்று பற்றியும் ம்யூனிக்கில் ஒரு கால்பந்தாட்டக் குழுவில் சேர்ந்துகொள்ள விரும்பியது பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். இம்மாதிரியான விளையாட்டுகளில் எப்போதும் ஆர்வமுள்ளவராக இருந்துவந்திருக்கிறீர்களா?
காலபந்தாட்டம்,பனிச்சறுக்கு விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்திருக்கிறேன். அறிவுசார் கோட்பாடுகளையும், அறிவு மூலமான புரிதலையும் கொண்டுதான் படத்தின் கதைப்போக்கு எவ்வாறு அமையவேண்டும் என்பதை முடிவுசெய்யமுடியும் என்று அனைவரும் நினைப்பது வழக்கம். காலபந்தாட்டக்குழுவில் விளையாடும் ஒவ்வொருவரும் திறம்பட விளையாடவும், எதிர்பராது அமைந்துவிடும் தருணங்களைச் சரியாகப் பயன்படுத்தவும் வழிகாட்டி உதவும் பயிற்சியாளனைப் போலச் செயல்படுபவன் நான். என்னைச் சுற்றியுள்ள பரப்பை சரியாகப் பயன்படுத்துவது எவ்வாறு என்று அறிந்திருப்பது மட்டுமே கடைநிலைத் தகுதியுள்ள கால்பந்து விளையாட்டுக்காரனான எனக்குத் தெரிந்த கலை. கால்பந்து அணியில் பலகாலம் இருந்திருக்கிறேன். என்னுடைய அணியில் இருந்த அனைவரும் விளையாட்டு நுட்பங்களை நன்கு அறிந்த, என்னைவிடச் சிறந்த, வேகமான விளையாட்டுக்காரர்கள். ஆனால் விளையாடும்போது பந்தின் போக்கைத் துல்லியமாகக் கணித்து அது போய் நிற்கும் இடத்தில் சரியாகப் போய் நிற்பேன். நிறைய கோல்கள் போட்டிருக்கிறேன். கோல் போடும்போது கோல் கம்பங்களைக் கண்ணால் சரியாகப் பார்ப்பதுகூடக் கிடையாது. ஆனால் கோலைச் சரியாகப் போட்டுவிடுவேன். அந்நேரத்தில் எனது இயக்கம் பற்றிச் சிந்தித்துச் செயல்பட ஒருசில கணங்கள் எடுத்திருந்தால் எல்லாமும் பாழாய்ப் போயிருக்கும். குறைந்தது ஐந்து பேர்களாவது கோலுக்குள் பந்து செல்லவிடாது தடுத்து நிறுத்தியிருப்பார்கள். திரைப்படம் எடுப்பதும் இதைப்போன்றதுதான். தயக்கங்களை ஒத்திவைத்துவிட்டுப் பயமின்றித் துணிந்து இறங்கிவிடவேண்டும்.
அரங்க வடிவமைப்பாளருடன் இணைந்து அரங்க அமைப்பில் ஈடுபடுவேன். படமெடுக்கப்போகும் இடத்தை உடலால் நேராகப் பரிச்சயம் செய்து கொள்வது என்னுடைய வழக்கம். முன்பே அந்த இடத்தை அறிந்துவைத்துக்கொளவது படப்பிடிப்புக்கு இன்றியமையாதது. முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உதவும். காமெராவில் எந்த லென்ஸை உபயோகிக்கவேண்டும், காமெராவை எங்கெல்லாம் வைத்துப் படமெடுக்க வேண்டும் என்று முதலிலேயே எளிதாக முடிவு செய்துவிடலாம். படமெடுக்கும் குழுவும் நடிகர்களும் வந்து சேர்ந்தவுடன் காலத்தை விரயமாக்காது படப்பிடிப்பைத் தொடங்கிவிடலாம்.
நீங்கள் ஸ்டுடியோக்களில் படம் எடுப்பதைத் தவிர்ப்பவரா?
இதுவரை ஸ்டுடியோக்களைத் தவிர்த்தே எனது படங்களை உருவாக்கியிருக்கிறேன். ஸ்டுடியோக்களில் படம் எடுப்பது என் படங்களின் தன்னியல்பான தன்மையைச் சிதைத்துவிடும் என்று நினைக்கிறேன். Invincible படத்தின் ஒரு காட்சிக்காக ஒரு நாள் ஸ்டுடியோவில் செலவிட்டிருக்கிறேன். மற்றபடி ஸ்டுடியோவின் இருக்கமான சூழ்நிலையில் என்னுடையவகைத் திரைப்படங்களை உருவாக்க முடியாது. ஸ்டுடியோ உலகம் இயக்குநருக்கு மிக அரிதாக ஆச்சரியங்களை அளிக்கும் இடம். ஊதியத்திற்கு உழைப்பவர்களைக் கொண்ட, இயற்கையான சூழல் அற்ற, நான்கு சுவர்களுக்குள்ளான ஒரு உலகம். நான் செய்யாத மற்றொன்று ஸ்டோரிபோர்டைப் (Story board) பயன்படுத்துவது. இயக்கங்களை முன்பே நிர்ணயிக்கும் வகையில் ஸ்டோரிபோர்டை உருவாக்கிக்கொள்வது தன்னியல்பாக படம் எடுக்கும் என்னுடைய வழக்கத்திற்கு ஒத்துவராது. கட்டுப்பாடுகள் அற்ற திறந்த மனதைக் கொண்டிருந்தால் வியப்பூட்டும் வகையில் தற்செயல் நிகழ்வுகளுக்கு இடமிருக்கும். ஸ்டோரிபோர்ட் என்பது திறந்தமனக் கற்பனைகளுக்கு இடமளிக்க அச்சப்பட்டு முன்பே முடிவுசெய்த நிகழ்வுகளை அப்படியே படமாக்க விரும்புவர்களுக்கானது. என்னைப் பொறுத்தவரை ஒரு வகையில் கோழைத்தனமானது. .
ஒவ்வொரு காட்சியிலும் பொதுவாக என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பேன். இருந்தும் முன்கூட்டியே தீர்மானிக்காது இயற்கையாக அக்காட்சியின் நிகழ்வுகள் உருவாகுவதற்கு வழிவிடுவேன். சில நேரங்களில் தட்பவெட்பநிலை, நடிகர்கள் பங்கேற்பு போன்ற பிற தாக்கங்களுக்கு ஏற்றவாறு புதிய மாற்றங்களை மூலக்கதையிலிருந்து அதிகம் வேறுபடாத வகையில் சேர்த்துக்கொள்வேன். திரைப்பட உருவாக்கத்தை அணுகும் எனது முறை இதுதான். பட உருவாக்கத்தில் புதிய அனுபவங்களை இயக்குநர் அனுமதிக்க வேண்டும்.
நடிகர்கள் தங்கள் நடிப்பைத் தன்னியலாக மேம்படுத்திக்கொள்ள இடமளிப்பதைப் பற்றி…
நடிகர்களை அவரவர்களுக்கான இடங்களில் இருக்கச் செய்தபின் காமெரா எங்கு இருக்க வேண்டும், எம்மாதிரியான அசைவுகளையும் நகர்வுகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒளிப்பதிவாளருடன் சேர்ந்து முடிவு செய்துகொள்வேன். படம் எடுக்கும் நேரம் புதிய மாற்றங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியதிருக்கும் எனும் பார்வையுடன்தான் திரைக்கதையை உருவாக்கியிருப்பேன். படப்பிடிப்பின் போது எத்தனை ஷாட்கள் எடுக்கப்போகிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. நடிப்பைப் பெரும்பாலும் நடிகர்களிடம் விட்டுவிடுவேன். அவர்களின் மேல் எப்போதும் நம்பிக்கை கொண்டவன். வசனத்தைப் பேசுவதில் சிறு பிழைகள் நேர்ந்தாலும் காட்சிக்குக் குந்தகம் இல்லையென்றால் அப்படியே விட்டுவிடுவேன். நடிகர்களில் கின்ஸ்கி அபாரமான நடிகர். அவருக்கு அதிக சுதந்திரம் உண்டு.
ஒளிப்பதிவாளர்களுடன் பணிபுரிவது பற்றி இங்கு சிறிது சொல்லவேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் காமெராவை நேரம்எடுத்து மிகச்சரியாக ஆயத்தம் செய்து படமெடுப்பது எனக்கு அறவே பிடிக்காது. மிகஅழகாக எடுப்பதை விட அந்த நேரத்திற்கேற்ப ஒரு காட்சியில் எதைப் பார்வையாளர் காண வேண்டுமோ அதைக் காமெரா வழியாகச் சரியாகப் பதிவுசெய்பவர்கள் எனக்குத் தேவை. எப்போதும் படம் எடுக்கப்போகும் இடங்களுக்கு ஒளிப்பதிவாளரை முன்கூட்டியே அழைத்துச் செல்வது வழக்கம். படப்பிடிப்பிற்காகக் கிரீஸ் சென்றிருந்தபோது மூன்றுநாட்கள் படப்பிடிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதற்குப் பதிலாக நடிகர்களையும், படப்பிடிப்புக் குழுவினரையும் படமெடுக்கும் இடத்திலிருந்த கோட்டையையும் குன்றுகளையும் சுற்றி நடந்து அந்த இடத்தின் தன்மையை உள்வாங்கச் செய்தேன், குன்றுகளின் கற்களைக் கைகளினால் தொட்டு உணரச் செய்தேன். அதற்குப் பிறகுதான் படப்பிடிப்பைத் தொடங்கினேன். இருந்தும் ஒருசில முக்கியமான காட்சிகளைப் படமெடுப்பதை முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் ஆகவேண்டும்.
அழகியலைப் பற்றி நான் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. காட்சி அழகாக எடுக்கப்படுவது பற்றி ஒளிப்பதிவாளர்களுடன் ஆலோசிப்பதில்லை. ஒளிப்பதிவுக்கான ஒளியமைப்பு, காமெரா கோணங்கள் பற்றி நீண்ட விவாதங்களும் ஆலோசனைகளும் நடத்தியோ, காட்சியமைப்புக்காகக் கோடிக்கணக்கில் செலவழித்தோ எந்த ஒரு படத்தையும் நான் உருவாக்கியதில்லை. இருந்தும் எனது படைப்புகளில் தேவையான அளவு அழகியல் இணைந்திருக்கும். அதை எடுத்துச் சொல்வதை அழகியலை விவரிக்கும் விற்பன்னர்களிடம் விட்டுவிடுவேன்.
Nosferatu படத்தின் கனவுக்காட்சி போன்று உங்கள் படங்களின் காட்சிப்படுத்துதலில் பரிசோதனை முயற்சிகள் பல காட்சிகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதைச் சொல்ல முடியும். அது பற்றி…
என் படங்களில் Nosferatu படத்தில் படமாக்கியிருப்பது போன்று முன் கூட்டியே திட்டமிட்டுப் பரிசோதனை முயற்சிகளாய்ப் படமாக்கப்பட்ட காட்சிகள் உண்டு. கட்டாயம் தேவை எனக் கருதும் இடங்களில் இவ்வாறு காட்சிகளை அமைத்திருப்பேன். இதைப் பரிசோதனை திரைப்படங்களின் முன்னோடியான ஸ்டான் ப்ராகேஜ்(Stan Brakhage), ஜெர்மனியைச் சேர்ந்த க்ளாஸ் வைபர்னி (Klaus Wyborny) போன்றவர்கள் மூலம் என்னிடம் உருவான பாதிப்பாகச் சொல்லலாம். சஹாராவுக்குப் படமெடுக்கச் சென்றபோது என்னுடன் க்ளாஸ் வைபர்னியையும் அழைத்துச் சென்றிருந்தேன். கனவுக்காட்சிகளில் சிலவற்றை அவர் படமாக்கினார். Nosferatu படத்தின் கனவுக்காட்சியை அயர்லாந்தில் பனி மூடிய மலைப்பகுதியில் படமாக்கினோம்.
உங்கள் நோஸ்பெராத்து (Nosferatu) படத்தில் இருளும் ஒளியும் முக்கிய பங்கு வகிப்பது பற்றி ….
செவ்வியல் Vampire பகுப்புப்(genre) படங்களுக்குரிய மரியாதையை இந்தப்படத்திற்கு அளிக்க முடிவு செய்தேன். படத்தின் இறுதிக் காட்சி ஹாலந்து நாட்டின் பரந்த கடற்கரை ஒன்றில் படமாக்கப்பட்டது. புயல் போன்ற கடுங்காற்றில் கடற்கரை மணல் அனைத்து திசைகளிலும் விசிறிப் பறந்துகொண்டிருந்தது. கருமேகங்கள் நிறைந்த வானம் அற்புதக் காட்சியாகத் தோன்றியது. ஒவ்வொரு சட்டகத்திற்கும் (frame) பத்து நொடிகள் (Seconds) என single exposureஇல் படமாக்கினோம். பின்னர் அங்கு படமாக்கப்பட்ட படச்சுருளின் இறுதிச் சட்டகம் முதலில் வருமாறு தலைகீழாக(reverse) மாற்றிப் பயன்படுத்தி வானிலிருந்து நிலப்பரபிற்குள் மேகங்கள் தொங்கிக்கொண்டிருப்பது போலத் தோன்றும்படியான இருண்மையான காட்சியாக அமைத்தோம். அழிவிற்கான இருண்ட உணர்வை வெளிப்படும்படித் திட்டமிட்டு உருவாக்கிய காட்சி என்பதை நான் மறுக்கமாட்டேன். இதை நீங்கள் சொல்வது போல் ’அழகியல் தொடர்பானது’ என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
Nosferatu படத்தின் செவ்வியல் தன்மை பாதிக்கப்படாதிருக்க, எடுக்கவேண்டிய காட்சிகளைப்பற்றி ஒளிப்பதிவாளர் ஷ்மிட் ரைட்வானுடன் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவது அவசியமாக இருந்தது. அவர் இருண்ட, அச்சமூட்டக்கூடிய உணர்வுகளைக் காட்சிகளில் உணர்த்தும்வண்ணம் படமாக்குவதில் தேர்ந்தவர். ஒளிப்பதிவாளர் தாமஸ் மாச்சை எடுத்துக்கொண்டால், அவர் அற்புதமான உடல் சார்ந்த லய உணர்வு கொண்டவர். அவர் என்னுடைய Signs of Life, Agquirre, Ftzcaraldo படங்களின் ஓளிப்பதிவாளர். இவர்கள் இருவரையும் சரியாகப் பயன்படுத்திவந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.
என்னுடைய படங்களில் அருகாமைக் காட்சிகள் அதிகம் இருக்காது. அதி அருகாமை (extreme cloeup) காட்சிகள் இல்லாமலே என்னுடைய பாத்திரங்களைப் பார்வையாளரால் மிக அருகாமையில் நெருக்கமாக உணரமுடியும்.
நீங்கள் பார்வையாளரின் உணர்வுகளுக்கும் எதிர்வினைகளுக்கும் மதிப்பளிப்பவரா? உங்கள் படங்கள் பற்றிய விமர்சனங்களை வாசிப்பதுண்டா?
விமர்சனங்கள் சிலவற்றைப் படிப்பதுண்டு. எனக்கு அவை பெரிதாகத் தெரிந்ததில்லை. ஆனால் பார்வையாளரின் எதிர்வினைகளையும், கருத்துக்களையும் மிகமுக்கியமானவைகளாகக் கருதுபவன் நான். மக்களின் கருத்து புனிதமானது.
விமர்சகர் சைமனும் அவரோடு சேர்ந்து சில விமர்சகர்களும் The Enigma of Kasper Hauser படத்தில் பதினாறு வயது நாயகன் காஸ்பர் பாத்திரத்தை நாற்பது வயதான புரூனோ ஏற்று நடித்திருப்பது பற்றிக் கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி…
|
நிஜக் கதையில் அவ்வாறு சொல்லப்படுகிறது. என் படத்தில் காஸ்பரின் வயது பற்றிய தகவல் எதுவும் கிடையாது. சொல்லப்போனால் புருனோ பதினாறு வயது காஸ்பருக்குரிய கலை வெளிப்பாடோடு அப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வேறு எந்த நடிகராலும் அவர் அளவுக்குக் காஸ்பரின் கதாபாத்திரத்தை உயிரோட்டமுள்ளதாக அளித்திருக்கமுடியாது இந்தப்படத்தில் வயது ஒரு பிரச்சினை அல்ல. அதுபற்றிப் பேசப்படுவதும் இல்லை. இதை நான் சரித்திரத்தை நிறுவும் படைப்பாகவும் உருவாக்கவில்லை. புத்தகங்களைக் கையில் எடுத்துக்கொண்டு திரைப்படத்தைப் பார்க்கவரும் சிலர் அவற்றில் இருப்பதுபோல படத்தில் இல்லை என்று சொல்வதைப் பற்றி நான் என்றும் கவலைப்பட்டதில்லை. இது பதினெட்டாம் நூற்றாண்டு ஜெர்மனியைப்பற்றிய சரித்திரப் படம் அல்ல. ஒரு மனிதனை ஊனமாக்கும் அளவு சமுதாயத்தால் அவன் வாழ்க்கை பாதிக்கப்டுவதைப் பற்றிய கதை; சமுதாயத்தின் மீதான ஒரு விமர்சனம். ஜெர்மனியின் ஃப்ரான்க்கோனியா பகுதியில் உள்ள அழகான அன்ஸ்பாக் என்ற ஊரில் இப்படத்தைப் படமாக்கினோம். அன்ஸ்பாக் இன்றும் பழையகாலக் கற்சுவர்களையும் சாலைகளையும் கொண்ட ஊர்.
இந்தப் படமும் Fata Morgana போன்று அறிவியல் புனைவுக்கான கூறுகளைக் கொண்டது என்பது பற்றி…
இபடத்தில் கதையை எடுத்துவிட்டுக் கனவுக் காட்சியை மட்டும் வைத்துக்கொண்டால் அது மேற்சொன்ன வகை அறிவியல்புனைவாக மாறிவிடும். இதுபோலக் கதையை எடுத்துவிட்டுக் காற்றாடி ஆலைகள் காட்சியை வைத்துக்கொண்டால் Signs of Life படமும் இந்தவகையைச் சேர்ந்ததாகிவிடும். மனிதர்களால் கண்டுபிடிக்கப்படும்வரை காஸ்பருக்கு உலகைப் பற்றிய அறிவு சற்றும் கிடையாது. அபாயம் என்றால் என்னவென்று தெரியாது. அவன் தீயைப் பார்த்ததில்லை. கலாச்சாரம், மொழி, நாகரீகம் எதுவும் அற்ற ஆதிமனிதனைப் போன்றவனாக இருந்தவன். ஒரு புனிதனைப் போல் இருந்தவன். வேற்று கிரக வாசிகளால் நமது பூமியில் கொண்டுவந்து விடப்பட்டவன் என அறிவியல் புனைவில் வருவது போல அவனைச் சொல்லலாம்.
புரூனோவைக் காஸ்பர் பாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்தது எப்படி?
ஒரு படத்தில் புரூனோவைப் பார்த்தபின் அதன் இயக்குநருடன் பெர்லினில் இருந்த அவர் அறைக்குப் போய் சந்தித்தேன். அவர் அதிகம் பேச விரும்பவில்லை. என்னை நேராகப் பார்ப்பதற்கு அரை மணி நேரம் ஆனது. நடிப்புக்கான சில தேர்வுகளை முன்னெடுக்க வேண்டியதிருந்தது. அவரால் இப்பாத்திரத்தில் நடிக்க முடியுமா என்பதில் அனைவருக்கும் சந்தேகம். ஒளிப்பதிவாளர் ஷ்மிட் ரைட்வான் ஒருவர் மட்டும் உற்சாகமாக புருனோவை அங்கீகரிக்க, புருனோவைத் தேர்ந்தெர்டுத்தேன். அவருடைய தன்மை கருதி அவரைப்பற்றி வெளியில் அதிகம் அறிப்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டோம்.
நிஜ வாழ்கையில் புருனோ சிறுவயதிலிருந்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர். மூன்று வயதாக இருக்கும்பொழுது பாலியல் தொழிலாளரான தாயார் கொடூரமாக அடித்ததில் அவருக்குப் பேச்சு வராமல் போயிற்று. பின்னர் மனநிலை பிறழ்ந்த குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றில் சேர்த்துவிடப்பட்டார், அங்கிருந்து தப்பித்து ஓடுகையில் பிடிபட்டவர் இருபத்து மூன்று வருடங்கள் அனாதை இல்லங்களில் காலம் கழிக்க வேண்டியதாயிற்று. நான் சந்தித்தபோது அதுவரை அவர் சந்தித்திருந்த வன்முறைகளல் அதிகம் பாதிக்கப்பட்டவராக இருந்தார். படத்தில் நடிக்கத் தொடங்கியபின் சமுதாயம் எவ்வாறு தன்னை வன்முறைகொண்டு பாதித்ததோ அதுபோன்று காஸ்பரும் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர் என்பதை புருனோ உணர்ந்திருந்தார். என்னிடம் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததால் அவரை நடிக்கச்செய்ய அதிக சிரமப்படவில்லை. அவரை ‘சினிமாவின் அறியப்படாத போர்வீரன்’ (Unknown soldier of Cinema) என்பேன்.
The Enigma of Kasper Hauser எவ்வாறான வரவேற்பைப் பெற்றது?
வழக்கம் போல் ஜெர்மனியில் சரியான வரவேற்பில்லை. சில விமர்சகர்கள் இப்படத்தை த்ரூஃபோவின் L’Enfant Sauvage படத்தோடு ஒபீட்டார்கள். அது சரியல்ல. Aguirre படத்தையும் இவ்வாறு போர்ஹே, ஷேக்ஸ்பியர், ரிம்போ படைப்புகளோடு ஒப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் இம்மாதிரி பெயர்களைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களை அதிகம் சந்தேகிப்பவன்.
உங்களின் அடுத்த படைப்பான Heart of Glass இல் நடிகர்களை மனவசியக்கலையைப் (hypnotism) பயன்படுத்தி நடிக்கவைத்திருக்கிறீர்கள்…
ஒரு படைப்பை உருவாக்கும் நேரத்தில் என்னுடைய நிலைகூட வசியத்தால் கட்டுண்டிருப்பவனைப் போன்று இருக்கும். மனவசியக்கலை போன்ற சோதனைமுயற்சிக்குக் காரணம் இப்படத்தின் கதை. இப்படத்தில் வருங்கால நிகழ்வுகளை அறியும் திறமைகொண்ட ஆடு மேய்ப்பவனாக வரும் ஹியாஸ் அந்த நகரம் அதன் முக்கிய கலைஉருவாக்கமாகக் கருதப்படும் கண்ணாடிப் பொருட்களோடு தீயினால் அழிவதையும் அங்கு வாழ்பவர் பாதிக்குமேல் மன நிலை பிறழ்ந்தவர்களாக ஆகிவிடுவதையும் தீர்கத்தரிசனமாகச் சொல்கிறான். படத்தின் முடிவில் கண்ணாடிப் பொருட்கள் தொழிற்சாலையை அதன் உரிமையாளர் தீக்கிரையாகிவிடுகிறார். தீர்க்கத்தரிசனம் சொன்ன ஹியாஸ் மீது பழி சுமத்தப்படுகிறது.
படத்தில் பாத்திரங்கள் தங்களை மறந்து பிரமை கொண்டவர்கள்போலத் திறந்த கண்களுடன் மயக்கநிலையில் நடமாடவேண்டும். வழக்கமான சைகைகள் அசைவுகளிலிருந்து அவர்களின் அசைவுகள் மாறுபட்டதாக இருக்கவேண்டும். முக்கிய பாத்திரம் தவிர்த்து மற்ற அனைவரும் மனவசியநிலைக்கு உட்படுத்தப்பட்டனர். மனவசியநிலையில் ஒருவரை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும் என்பது உண்மையல்ல.
வசனங்கள் இல்லை என்ற போதிலும் ஒரு கவிதை போன்று அற்புதமான வெளிப்படுகளைக் கொண்ட படைப்பாக இப்படம் உருவாகியிருக்கிறது..
கவிதை பற்றி அறியாதவர்களிடமிருந்து கவித்துவமான உணர்வுகள் வெளிப்படவேண்டுமென விரும்பினேன். படம் எடுப்பதற்குமுன் மனவசியப் பரிசோதனைகளில் பங்கேற்க விரும்புபவர்கள் தேவை எனப் பத்திரிகையில் விளம்பரம் செய்தேன். ஆறு மாதங்களாக வாரம் ஒருமுறை நடைபெற்ற பயிற்சிக்குப் பிறகு முப்பத்துஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்தோம். மனவசிய நிலையில் அதிக வெப்பமாக இருக்கிறது என்றோ, குளிர்ச்சியாக இருக்கிறது என்றோ நாம் சொல்லியபடி அவர்கள் உணர்வார்கள். தன்னைக் கவிஞன் என்றோ பாடகன் என்றோ அவர்களை அந்நேரத்தில் உணரவைக்கலாம்.
ஒத்திகை பார்க்கையில் இதற்கான பயிற்சியாளரைப் பயன்படுத்தினோம். பிறகு நான் நடிகர்களுக்கு மனவசியக் கட்டளைகள் இட்டுப் படத்தின் இயக்கத்தைத் தொடர்ந்தேன். ஒளிப்பதிவாளரிடம் மெதுவான குரலிலும், நடிப்பவர்களிடம் வழக்கமான குரலிலும் இருவகையாகப் பேசவேண்டியதிருந்தது. 1100 டிகிரி செலெஷியஸ் வெப்பமுள்ள திரவநிலையில் கண்ணாடியைப் பயன்படுத்தி நுட்பமான வேலைகளைச் செய்துகொண்டிருந்த கண்ணாடித் தொழிற்சாலைப் பணியாளர்களை வசியம் செய்வது ஆபத்தானது என்பதால் அவர்களை விட்டுவிட்டோம்.
நடிகர்கள் மனவசியம் செய்யப்பட்டது பற்றிப் பார்வையாளர்களுக்கு அறிவிக்கவில்லை. படத்தைப் பார்த்தவர்கள் படத்தில் வெளிப்படும் ஒரு வகையான கனவுத் தன்மையைப்பற்றி மட்டுமே பேசினர். நடிகர்களிடம் மனவசியக் கலையைப் பயன்படுத்தியிருப்பதை அவர்களால் அறிய முடியவில்லை. திரையில் தோன்றி பார்வையாளரிடமும் மனவசியக்கலையைப் பயன்படுத்த முடியும். முதலில் அவ்வாறு திட்டமிட்டிருந்தேன். படத்தில் நான் தோன்றி பார்வையாளர் சம்மதித்தால் மனவசியத்திற்கு ஆளான நிலையில் அவர்கள் இப்படத்தைக் காணலாம். என்னுடைய குரலைப் பின்தொடர்ந்து நான் சொல்வதைப் பின்பற்றவேண்டும் எனச் சொல்லி அவர்களை மனவசிய நிலைக்குக்குள் கொண்டுவந்து படத்தைத் தொடங்கியிருப்பேன். அதுபோன்று முடிவிலும் படத்தில் தோன்றி மனவசிய நிலையிலிருந்து அவர்களை மெதுவாக எழுப்பமுடியும். வசிய நிலையை விரும்பாதவர்கள் கண்களை வேறு பக்கம் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தால் போதும். நான் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாக ஆகிவிடும் என்பதால் இதைப் படத்தில் செயல்படுத்தவில்லை.
உங்கள் படைப்புகளில் மிக அழகாக எடுக்கப்படிருக்கும் படங்களில் இது ஒன்று...
விளபரத்திற்கோ, வியாபாரத்திற்கோ தேவையான உத்திகளைக் கொண்டிராத படம். அதிவேக எடிட்டிங்கிற்குப் பழக்கப்பட்ட இன்றைய இளைஞர்கள் மெதுவாக நகரும் இந்தத் திரைப்படதைப் பார்க்கச் சிரமப்படுவார்கள். பதினேழாம் நூற்றாண்டு பிரெஞ்சு ஓவியர் Geaorges de La Tour வரைந்திருக்கும் ஓவியங்களின் தன்மையை உள்ளடிக்கிய படைப்பாக இப்படம் அமையவேண்டும் என ஒளிப்பதிவாளர் ஷ்மிட் ரைட்வானும் நானும் விரும்பினோம். முதலில் நாம் மேலிருந்து கீழே பார்க்கும் பள்ளத்தாக்குப் பகுதியும், மேகமூட்டமிக்க ஆற்றுப்பகுதியும் மிச் சிறப்பான காட்சிகள். தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் மலைமீதிருந்து இக்காட்சியைப் படமாக்கினோம். ஒவ்வொரு சட்டகமாகப் படமாக்கி முடிவில் நான் விரும்பியபடி அக்காட்சி அமைந்த பிறகுதான் படப்பிடிப்பை நிறுத்தினோம். பதினெட்டாம் நூற்றாண்டின் கதை என்று படத்தின் காலத்தை உறுதியாகச் சொல்ல முடியாதபடி அமைந்துவிட்ட படம். படமாக்கப்பட்டுள்ள நிலப்பரப்புகள் அத்தகைய தன்மையை உடையவை.
பெரும்பகுதி படப்பிடிப்பை பவேரியாவில் முடித்துவிட்டோம். அலாஸ்காவிலும் சுவிட்சர்லாந்திலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. பவேரிய நிலப்பரப்புகள் எனக்கு மிகவும் நெருக்கமானவை; நான் நன்கு அறிந்த நிலப்பரப்புகள். நான் சிறுவயது முதல் Heart of Glass போன்ற கதைகளைக் கேட்டு வளர்ந்தவன். இறுதிப் பகுதியை அயர்லாந்திலிருக்கும் Skelling Rock என்ற அற்புதமான இடத்தில் படமாக்கினோம். கடலிலிலிருந்து 300 மீட்டர்கள் உயரத்திற்குப் பிரமிட் போன்று உயர்ந்து நிற்கும் பகுதி அது. கோடைகாலத்தில் மட்டும் மழையிலும் காற்றிலும் மணிக்கணக்காக சிறு படகுகளில் பயணம் செய்து அந்த இடத்திற்குப் போய்ச்சேர முடியும். அதன் உச்சிப்பகுதி நீராவிபோன்று சூழ்ந்திருக்கும் மேகப்படலம் கொண்ட தட்டையானபகுதி. அந்த இடத்தை அடைய கத்தோலிக்கத் துறவிகள் பாறைகளில் செதுக்கிவைத்திருக்கும் நூற்றுக்கணக்கான படிகளில் செங்குத்தாக ஏறிச்செல்லவேண்டும்.
|
படத்தின் முக்கிய பாத்திரம் ஹிலாஸ் அந்த இடத்தில் வருடக்கணக்காக நின்றுகொண்டிருக்கும் மனிதனைத் தன் தீர்க்கத்தரிசனப் பார்வையில் அறிகிறான். அந்த மனிதன் அங்கிருந்து கடலைத் தாண்டி ஓரிடத்தைப் பல வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். உலகம் தட்டையானது என்றும் அது கடலைத் தாண்டி ஒரு பாதாளத்தில் முடிகிறது என்றும் நம்பிக்கொண்டிருக்கிறான். அவனுடன் மேலும் மனிதர்கள் சேர்ந்துகொள்கின்றனர். ஒருநாள் துணிந்து அந்த இடத்திற்குச் செல்ல முடிவு செய்து ஒரு படகில் புறப்படுகின்றனர். இறுதிக்காட்சியில் அலைகள் மிகுந்து இருண்டுகொண்டிருக்கும் பரந்த கடலில் நால்வர் படகில் சென்றுகொண்டிருப்பதுடன் படம் முடிகிறது.
- தொடரும் -
பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்கு தனது வாழ்க்கை, படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக் மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘Herzog on Herzog’ நூலின் முக்கிய பகுதிகள் தமிழில் தொடராக அளிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |