ஒரு சகாப்தத்தை மீட்கும் பணி
- தமிழில்: அம்ஷன் குமார், சலனம் ஜீன் – ஜீலை 1993 :: தட்டச்சு உதவி: தினேஷ் குமார் |
சத்யஜித் ராய் மேற்கின் கண்டுபிடிப்பு என்பது கசப்பான ஆனால் மறுக்கவியலாத உண்மை, தவறான காரணங்களுக்காக சில சமயங்களில் பாராட்டப்பட்டிருந்தாலும் ராயின் உயர்வை அலசிப் புரிந்து கொண்டவர்கள் மேற்கத்திய ரசிகர்கள் தான். ராயைப் புரிந்து கொள்வதிலும் ரசிப்பதிலும் பின்தங்கிய நாம் அவரது படங்களைப் பாதுகாப்பதிலும் சிறிதும் பொறுப்பற்றவர்களாக இருக்கிறோம்.
உலக சினிமா சாதனையாளர்களுள் எவருடைய நெகடிவ் பிலிம் சுருளாவது மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது என்றால் அது சத்யஜித் ராயினுடையதுதான், என்பதை உணர்ந்த அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் லயன்ஸ் (யுனைடெட் ஸ்டேட்ஸ்) டேவிட் ஷெபர்டு (David Shepard) என்பவரை புனருத்தாரண பணிக்காக அனுப்பி வைத்தது.
|
நெகடிவ் படங்களை மீட்பதில் நிபுணரான ஷெபர்டு, லூயிபிமேயர் பிலிம் அண்ட் டெலிவிஷன் செண்டரில் டைரக்டராகப் பணியாற்றுபவர். நிறைய புத்தகங்களையும் கல்வி சரித்திர சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் டி.வி. தொடர்களையும் தயாரித்தவர். டாகுமெண்டரி படங்களையும் டைரக்ட் செய்துள்ளார். அரிய பிம்பங்கள் (Precious images) என்னும் அவரது ஏழு நிமிடப்படம் 1986ஆம் ஆண்டில் அகாதமியிடமிருந்து ஒரு விருதினைப் பெற்றது.
சென்ற வருடம் டிசம்பர் மாத இறுதியில் கல்கத்தாவிற்கு வந்து, ராய் படங்களை மீட்கும் பணியில் பத்து நாட்கள் ஈடுபட்ட ஷெபர்டை அசோக் நாக் பேட்டி கண்டார். அதிலிருந்து சில பகுதிகள்:
ராயின் படங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதை அகாதமி எவ்வாறு உணர்ந்தது?
அவரது படங்களின் பிரதிகள் அதிகமாக புழக்கத்தில் இல்லை. சில பிரதிகள் மீது பாதுகாப்பு தரும் பூச்சுகளும் இல்லை. இந்த படங்கள் பிழைத்திருப்பது என்பது இவற்றின் ஆதார நெகடிவ் பிலிம்கள் கையாளப்படுவதை பொறுத்தாகிறது. ஒவ்வொரு முறையும் ஒரு 16 எம்.எம். பிரிண்ட் தேவைப்படுகிறது என்றால் இந்த நெகடிவ்கள் ஒரு நலிந்த மேற்பூச்சுடன் மெஷினில் ஒட்டப்படுகின்றன. ஆஸ்கார் பரிசளிப்பின் போது காட்டப்படுவதற்கு ராயின் படங்களிலிருந்து ஒரு கெளரவமான தொகுப்பை உருவாக்க கூட அகாதமி மிகவும் கஷ்டப்பட்டது. கடைசியாக அது வீடியோ கேசட்டுகளை பயன்படுத்த வேண்டியதாயிற்று. இது கூட சாத்தியமானதற்கு காரணம் அவரது படங்களில் சிலவற்றை இங்கிலாந்திலுள்ள வர்த்தக டெலிவிஷன் வாங்கியிருந்தது. அந்த 35 எம்.எம். பிரிண்டுகள் இங்கிலாந்து டெலிவிஷனில் ஒளிபரப்புவதற்கென்று பிரத்யேகமாக அனுப்பப்பட்டிருந்தன. தியேட்டர்களில் திரையிட பயன்படுத்தப்பட்டிருந்தபடியால் அவை நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ப்ரொஜக்ஷனுக்காக வந்த அந்த பிரிண்டுகளை திரையில் காட்ட உபயோகிப்பதற்கு தான் பயன்படுத்த முடியாது. எனவே இந்த திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிறைவேற்ற முடியாது. இதற்கு நான்கைந்து வருடங்கள் பிடிக்கலாம். இந்த படத்தின் பிரதிகள் ராயின் படங்களை படிப்பதற்கும் அவைபற்றி எழுதுவதற்கும் கிடைக்க கூடும். அவற்றை பார்க்க விவாதிக்க ஏற்படும் சந்தர்ப்பம் மட்டுமே அவற்றை பிழைத்திருக்க வைக்கமுடியும்.
நீங்கள் கடந்த சில நாட்களாக ராயின் நெகடிவ்களை ஆராய்ந்து வருகிறீர்கள். அவற்றின் தற்போதைய நிலைகுறித்து உங்களது எண்ணம் என்ன?
மேற்கு வங்காளத்தில் இடைநிலை நெகடிவ்களை உபயோகிக்காது எல்லாவற்றிற்கும் நெகடிவ் மீதே கையை வைப்பது என்னும் பழக்கம் இருந்து வருகிறது. இருந்தும் கூட இவை பொதுவாக நல்ல நிலையில் காணப்படுகிறது. (பதேர் பாஞ்சாலியைத் தவிர) மற்றவை ஆங்காங்கே தேய்மானங்களுடன் தென்படினும் ஓரளவு சுமாரான உபகரணங்களை வைத்து அவற்றை சுலபமாக மீட்டு விடலாம். தற்போது பதேர் பாஞ்சாலியைத்தவிர மற்றவை அபாயகரமான நிலையில் இல்லை. அதாவது ரசாயன விளைவுகளால் அவை பாதிக்கபடுமுன் ஏதாவது உடனடியாக மீட்டு பணியில் ஈடுபட்டால் அப்போதும் கூட படங்கள் பாழாவதைத் தடுக்க பராமரிப்பிற்கு வேண்டிய மூலகங்களைத் தருவிக்க வேண்டும். உயர்தரமான பிரதி ஒன்றினை பாதுகாப்பான சூழலில் பத்திரப்படுத்துவதே சரியான பராமரிப்பு முறையாகும். அவ்வாறு செய்யப்பட்டால் அனு வெடிப்பில்கூட அது தாக்குப்பிடிக்கும். எனவே நெகடிவ்களை அந்த நிலைக்கு கொண்டு வந்து அவற்றின் மூலம் கிடைக்கும் பிரதிகளை ஆரம்பத்தில் நெகடிவிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட பிரதிகளைப் போன்று இருக்குமாறு செய்யவேண்டும்.
|
பதேர் பாஞ்சாலி உண்மையிலேயே அந்த அளவிற்கு மோசமான நிலையிலுள்ளதா?
ஆமாம். பதேர் பாஞ்சாலி ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தப்படம் 12 ரீல்கள் கொண்ட்து. ரசாயன விளைவுகளால் மூன்று ரீல்களின் பகுதிகள் நாசமடைந்து விட்டன. மற்றும் மூன்று ரீல்களின் பாகங்களைத்தான் முழுமையான பிரதியை உருவாக்க பயன்படுத்த வேண்டும். படம் சிதைந்து பல இடங்களில் ஓட்டப்பட்டு இருக்கிறது. சில ரீல்கள் நன்றாக உள்ளன. அவற்றை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக நெகடிவிற்கு உயிர்கொடுக்க வேண்டி அதன் மீது ஒரு பூச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி வேலையை ஹாலிவுட் அல்லது யு.கே. இல் தான் செய்யமுடியும். இந்தப்பூச்சை யார் கொடுத்தார்களோ அவர்களால்தான் அதை நீக்க முடியும். இந்த பூச்சில் தூசுகள் சிக்கிக் கொண்டிருப்பதால் இதை உரித்து எடுக்க வேண்டும். துரதிஷ்ட வசமாக இந்த வேலையை எக்குத்தப்பாக யாரோ செய்ததில் பூச்சு மெலிதாக்கப்பட்டு பிரிண்டின் மீது கறைப்பட்டது தான் மிச்சம். எனவே இப்போது என்ன செய்ய வேண்டும், என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு ரசாயனவாதி இப்பூச்சுகளை அகற்றும் வரை இதுபற்றி எதுவும் கூற முடியாது. பின்னர் அதன் பிற பிரச்சனைகளை நாம் அணுகத் தொடங்கலாம். ஆங்காங்கே மூல நெகடிவ் காப்பாற்ற இயலாதபடி சிதிலமடைந்துள்ளது. அல்லது தரம் குறைந்த பிரதியால் இடம் பெயர்க்கப்பட்டுள்ளது.
கல்கத்தாவில் உங்களால் எத்தனை படங்களை ஆராய முடிந்தது?
பதினொரு படங்களை பார்த்திருப்பதாக நம்புகிறேன். மேலும் ஆறு படங்களை பம்பாயில் பார்க்க உள்ளேன். புறப்படுமுன் ராயின் 20 படங்களை பரிசோதிக்க முடியுமென நினைக்கிறேன். பிற படங்களைப் பற்றி பி.கே. நாயர் மூலம் நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதே போன்று ஜெர்மனி, இங்கிலாந்து, ஆகிய நாடுகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள நெகடிவ்கள் பற்றி அதன் தயாரிப்பாளர்கள் நம்பகமான தகவல்கள் தந்துள்ளனர். பிரச்னைகளைப் பொருத்தவரை படத்திற்கு படம் பெருத்த ஒற்றுமைகள் உள்ளன. எனவே எதிர்பாராமல் வரும் அபாயத்தை கணக்கிலெடுத்துக் கொள்ளாது அனுமானித்தால் நான் பார்க்காத படங்களை நல்ல நிலைக்கு கொண்டுவர அதிகம் பிரயாசைப்படத் தேவையில்லை என்று தோன்றுகிறது.
யு.எஸ்.இல் ஆஸ்கார் பரிசுக்குப் பிறகு ராய் படங்களைக் காணும் ஆர்வம் தூண்டப்பட்டுள்ளதா?
‘அபு மூன்றன் தொகுதி’ அமெரிக்க விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் குலுக்கிய அந்த ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு ராய் படங்களை வெளியிடுவதில் இருந்த தொய்வினை எவ்வாறு அர்த்தப்படுத்துகிறீர்கள்?
ராய் படங்களைக் காண்பதில் ஆர்வம் தூண்டப்படுவது என்பது சற்று கடினமான விஷயம். இங்கே யு.எஸ்.இல் அவரது வெகுகுறைவான படங்களே நல்ல நிலையில் பார்க்க கிடைக்கின்றன. இந்த கேள்விக்குப் பதில் 1993 கோடையில்தான் கிடைக்கும். இஸ்மாயில் மர் சண்ட் ராயின் ஏழெட்டு படங்களை யு.எஸ்.இல் திரையிட வாங்கியுள்ளார். அவரது விற்பனை உயர்த்தும் திறமை உற்சாகப் படும்படி இல்லாதபடியால் ராய்க்கு கொடுக்கப்பட்ட ஆஸ்கார் அப்போது கை கொடுக்கலாம்.
அறுபதுகளின் பார்வையாளர்கள் இப்பொழுது சினிமா பார்க்கும் பழக்கமில்லாத நடுத்தர வயதினர்களாகி விட்டனர். உண்மையைக் கூறினால் ராயின் படைப்புகளை அறிந்தவர்கள் இன்று வெகு சிலரே, திரும்பவும் கற்பிக்கப்படுவதன் மூலம் தான் ராய் அறியப்பட வேண்டும். சர்வதேச சினிமா சந்தையின் போக்கு யு.எஸ்.இல் மாறிவிட்டது. இம்மாதிரியான படங்கள் பிரபலமான காலத்திலிருந்ததை விட இப்போது அது குறைந்துவிட்டது. எட்வர்ட் ஹாரிசன் ராயின் படங்களை விநியோகித்த அந்நாட்களில் ஃபெல்லினி, பெர்க்மென், ட்ரூஃபோ, குனிலோவா ஆகியோரது படங்கள் பரபரப்பாக ஓடின. இப்பொழுது இந்தப்படங்களில் ஏதோ ஒன்றுதான் வெற்றி பெறுகிறது. அறுபதுகளின் பின்பகுதியில் வெளிநாட்டுப் படங்கள் அமெரிக்க நகர்ப்புற சினிமா சந்தையை 10 சதவிதம் ஆக்கிரமித்திருக்கின்றன. இப்பொழுது அது கால் சதவிகிதம். (சிரிக்கிறார்) சுவாரஸ்யமான படங்கள் தயாரிக்கப்படுவதில்லை என்று இதற்கு பொருள் இல்லை. படம் பார்ப்பவர்கள் தனித்துவம் கொண்ட புத்தி பூர்வமான படங்களை விட்டு துரிதகதிப் படங்களை (Action films) நோக்கி நகர்வதாக தெரிகிறது. சமீபகாலங்களில் வந்த அமெரிக்க வசூல் படங்களைப் பாருங்கள்.
|
ஆஸ்கார் பரிசு கொடுக்கப்பட்ட பிறகுதான் அவரது படங்களை புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று அகாதமி நினைக்கத் தொடங்கியதா?
இல்லை. அவரது படங்களை மீட்கும் வேலை இரண்டு காரணிகளை அடிப்படையாக கொண்டது. பேராசிரியர் திலீப் பாசு இத்தகைய எண்ணத்தை வெகுநாட்கள் கொண்டிருந்தது மட்டுமின்றி இதை செயலாக்க இந்தியாவிலுள்ள பொறுப்பாளிகளுக்கும் அகாதமிக்கும் இடையே உற்சாகத்துடன் ஈடுபட்டதை ஒரு காரணமாக கூறவேண்டும். இரண்டாவது ஆஸ்கார் பரிசின் போது ராயின் படங்களை தொகுக்க முடியாது அவதிப்பட்ட அகாதமியின் அனுபவம். ராயின் படங்களைப் போலவே வேறு எவரது படங்களும் இந்த அளவிற்கு சிதிலமடையவில்லை என்பதை உணர்ந்து கொண்டபிறகு அகாதமிக்கு வேறு பிரச்சனை ஏதும் எழவில்லை.
பிலிம் மீட்டு பணியில் உங்களது தனித்த ஆர்வம் பற்றி பேசவிரும்புகிறேன். அது குறித்த உங்களது அசாத்திய அனுபவங்களிலிருந்து சிலவற்றை விவரிக்க முடியுமா?
அம்மாதிரியான அனுபவங்கள் எனக்கு இந்த வருடம் இரண்டு ஏற்பட்டது. பதேர் பாஞ்சாலியின் மூல நெகடிவ் அடங்கிய முதல் பெட்டியைத் திறந்து அதை எடுத்த போது; மற்றது சாப்ளினின் கோல்ட்ரஷ் படத்தின் மூல நெகடிவை தற்செயலாக பாத்தபொழுது. சாப்ளின் ஆசாமிகள் ‘கோல்ட்ரஷ்’ஷை தாங்கள் வைத்திருந்ததைக் கூட தெரியாமலேயே இருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜப்பானிய எழுத்துக்களால் குறிக்கப்பட்டிருந்த ஒரு பெட்டி கிடங்கில் இருந்தது. அதை இங்கிலாந்தின் கிராமப்புற பகுதியிலுல்ள படப்பெட்டிக் கிடங்குக்கு காரில் எடுத்துச் சென்றோம். நான் வேட்டையைத் துவங்கியபொழுது அது என்னை வெறித்துப் பார்த்தது. நான் Whoop என்று லண்டன் வரை கத்திக்கொண்டே சென்றதை நீங்கள் கேட்டிருக்க முடியும்.
இன்று காலை நான் ஷேக்ஸ்பியரைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு சானட்டில் வரும் இரண்டு வரிகளை கல்கத்தாவில் இங்கு அமர்ந்து கொண்டு யோசிக்கும் பொழுது சினிமாவிற்கும் பொருந்துவதைப் பார்க்கமுடிகிறது. (ஷேக்ஸ்பியர் 151 புத்தகத்தை எடுத்த பக்கங்களை புரட்டிவிட்டு சப்தமாகப் படிக்கிறார்.)
So long as man can breathe
Their eyes can see
So long lives this and
This gives life to thee
ராயின் படைப்புகள் குறித்தும் மற்றும் இறந்த பின்னும் தங்கள் படைப்புகள் மூலம் மக்களை நெகிழவைக்கும் விதமான சாதனை ஏற்படுத்திய சினிமா கலைஞர்கள் குறித்தும் இவ்வரிகள் மூலம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். முந்தைய வருடங்களில் பிலிமை மீட்பது பற்றி யாரும் சிந்திக்கவில்லை. காரணம் அதன் ஒடிசலான நிரந்தரமற்ற தன்மையை எவரும் அறிந்திருக்கவில்லை. சினிமா தெக்கின் முயற்சியினால் பிரான்சில் இன்று பிரெஞ்சு மெளனப் படங்களில் 15 சதவிகிதம் தான் எஞ்சியுள்ளது. என்னால் வர்த்தகரீதியான படங்களைத் தயாரிக்க முடியும். ஆனால் முர்னா, ராய் அல்லது சாப்ளின் ஆகியோரது படங்களை நல்ல நிலையில் வைத்திருப்பது அதைவிடவும் முக்கியமானதாக தோன்றுகிறது.
நீங்கள் ராயின் படங்களை வீடியோவில் ஒவ்வொரு இரவும் பார்ப்பதாகவும் அவர் பற்றிய எழுத்துக்களை படிப்பதாயும். சந்திப் ராய் (ராயின் மகன்) கூறுகிறார். ராயின் பன் முகம் வாய்ந்த மேதமையை ஒன்றிணைக்கும் முயற்சியாக இதைக்கருதலாமா?
அவரது படங்கள் அறுபதுகளுக்குப்பின்னால் யு.எஸ்.இல் காண்பிக்கப்படாததால் நான் அவற்றைப் புரிந்து கொள்ள செய்யும் முயற்சியாக இதைக்கருத வேண்டும். சினிமாவை விரும்புபவர் எவரும் மோசமான நிலையில் ராயின் படங்களைக் காண விழைய மாட்டார்கள். ராயின் கேமராமேன், சுப்ரதோ மித்ரா, நான் இந்தியா புறப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் யு.எஸ்.ஸிற்கு வந்து இளநிலை தயாரிப்பு நிகழ்ச்சியில் கேமரா வகுப்பில் பேசினார். ஏற்கனவே விநியோகத்தில் உள்ள ராயின் படங்களை அவர் அதில் காட்ட அனுமதிக்கவில்லை. அவற்றின் பிலிம் தரம் மோசமாக உள்ளது என்பதால் எனக்கு இங்கு அப்படங்களை அணுகமுடிவது ஒரு விஷயம். நாள் முழுவதும் இப்படங்களைப் பார்க்கும் பொழுது அவற்றின் மேற்பூச்சான களங்கங்களை மீறிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் உற்சாகம் கொள்கிறேன்.
மீட்புப் பணி மிகவும் கடினமானது என்று உணர்கிறேன். நீங்கள் இந்தத் திட்டத்தை எங்கனம் நிறைவேற்றப் போகிறீர்கள். நீங்கள் கல்கத்தாவிற்கு மறுபடியும் வரும்படி இருக்குமா?
ராயின் ஒவ்வொரு படத்தின் நிலைமை பற்றியும் அதன் மீட்பு பணிக்கான அணுகுமுறைகள் பற்றியும் விரிவான அறிக்கை தயார் செய்வது முதல் கட்ட வேலையாகும். அதன் மூலம் இத்திட்டத்திற்கான பணத்தேவையை உறுதி செய்யமுடியும். பணத்தை திரட்டுவதற்கான வழிமுறைகளையும் யோசிக்க அது ஏதுவாயிருக்கும். அதன் பெரும்பாலான தொழில் நுணுக்க வேலைகளை சென்னையிலோ பம்பாயிலோ வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படலாம். விசேஷ கவனிப்பினைக் கேட்கும் அவரது ஆரம்பகால படங்களை வெளிநாட்டிற்கு அனுப்பும்படி இருக்க கூடும்., இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் அவரது அனைத்துப் படங்களுக்கும் உயர்தரமான டூப் நெகடிவ்களை ஒன்று சேர்ப்பதாகும். புனருத்தாரணம் செய்யப்பட்ட மூல நெகடிவ்களை தயாரிப்பாளர்களிடமே திரும்பவும் ஒப்படைக்கப்படும்.
|
நீங்கள் ராய் என்கிற மனிதனை நேரடியாக சந்திக்க முடியாமல் போனதற்காக ஒரு சிறு வருத்தத்தை சுமந்து கொண்டு போக வேண்டும்.
விசித்திரமான முறையில் நான் அவரை சந்தித்தாகவே உணர்கிறேன். நேற்று இரவு அவரது படிப்பறையில் புத்தகங்களையும் ரிகார்டுகளையும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
மிகவும் பிடிப்பு வாய்ந்த குழு அவரிடமிருந்தது. அதிலிருந்த இருவர் அனில்செளத்தி ரமேஷ் ஆகியோர் எனக்கு கல்கத்தாவில் உதவி செய்து வருகிறார்கள். ராய்க்கும் அவர் குழுவிற்கும் இடையே இருந்த அன்பினைப் பற்றி அவர்கள் கூறுகிறார்கள். ராய் எவ்வாறெல்லாம் தன்னை வெளிக்கொணர்வார்; எவ்வாறெல்லாம் படத்தில் வரும் காட்சிகளுக்கு சம்பந்தமான நிஜ வாழ்க்கையின் சம்பவக் குறிப்புகளைத் தருவார். ; என்பதை சொல்கிறார்கள். அவரை பார்க்க முடியாதது குறித்து எனக்கு வருத்தமே! பதினேழு., பதினெட்டு வருடங்களுக்கு முன்னால் நான் டைரக்டர்கள் கில்டில் சேரக் காரணம் அமெரிக்காவின் சினிமாவைச் சேர்ந்த எனது ஹீரோக்களை சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஹிட்ச்காக்,., லாங், ஹாக்ஸ், ஒயில்டர், கக்கர், வெல்ஸ், வெல்மன், காப்ரா ஜார்ஜ் ஸ்டீவன்ஸ், நான் அவர்களை எல்லோரையும் தெரிந்து கொண்டேன். சிலரை மிக நெருக்கமாக, டைரக்டர்களும் அவர்களது பொருத்தமாக உயர்ந்து நின்றார்கள். ராயும் நிச்சயம் அப்படி செய்வார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்.
- தொடரும் -
சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, உலக சினிமா சாதனையாளர்கள் தொடரை இங்கே வாசகர்களுக்காக படிக்க கொடுக்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |