கண்ணாடியறையிலிருந்து எறியப்படும் கல்...
நிலவொளியில் அரங்கேறும் நாடகங்களின் காதலராகவும், இலக்கிய கூட்டங்களிலும், புத்தகக் கண்காட்சிகளிலும் எளிதில் எதிர்படும் மனிதராகவும் ஒளிப்பதிவாளர் செழியன் இருக்கிறார். இச்சாதாரண செயல்களெல்லாமே அவர் கைக்கொண்டிருக்கின்ற தொழிலுடனும் பொருத்திப் பார்க்கையில் சற்றே விந்தையானதாக தோன்றுகிறது. புகழ்பாடிக் கூட்டங்களையே பெரிதும் விரும்புகின்றவர்கள் சினிமாக்காரர்கள் என்ற மையத்திலிருந்து நோக்கினால்., சிறந்த ஒளிப்பதிவாளராக ஏற்கனவே பரவலாக நன்கு அறியப்பட்டிருக்கின்ற செழியன் போன்றோர் அந்த மையத்திலிருந்து தன்னை பிய்த்துக்கொண்டு வ
ெளிவருவதை வியப்பு மேலிட பார்ப்பதும் இயல்பானது. இதன்பால் அவர்மீது மிகுந்த மதிப்புண்டு.
மேலும், செழியன் சிறுபத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதுவதில் முனைப்புடன் இருப்பவர். ”பேசும் படம்”, ”உலக சினிமா”, என்கிற தலைப்புகளில் புத்தகம் எழுதியிருப்பது இவரது தனித்த அடையாளங்களில் சில. தான் பார்த்து, அனுபவித்த, உணர்ந்த செய்திகளை மட்டுமே ஆதாரங்களாய்த் திரட்டிக்கொண்டு செழியன் எழுதியிருக்கின்ற மற்றொரு புத்தகம்தான் உயிரெழுத்து வெளியீடான ‘முகங்களின் திரைப்படம்’. இந்தப் புத்தகத்தில் மட்டும் அவர் “சில்ட்ரன் ஆப் ஹெவன்”படத்தை அடிக்கோடிடும் வகையில் அதிகமாக ஏதும் எழுதவில்லை. இவரது இன்னபிற புத்தகங்களில் அப்படம் தனித்த இடம் பெறுவதை படித்ததுண்டு.
இவரது மற்றொரு புத்தகமாக குறிப்பிடத் தக்கது ”பேசும்படம்”. அந்தப் புத்தகத்திலும் திரைப்படம் என்ற பெயரில் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஆபாசங்களையும், வன்முறைகளையும் வரிசைப்படுத்தி சுட்டிக்காட்ட செழியன் தவறவில்லை. சினிமாவின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருப்போருக்கு, சத்யஜித்ராயையும், பதேர்பாஞ்சாலியையும் அறிமுகப்படுத்துகின்ற புத்தகம் அது. அதேபோல குழந்தைகள் கூட இத்தகைய மோசமான திரைப்படங்களால் எப்படி சீரழிகின்றன?, என தன் கருத்தை ’பேசும்படம்’ நூலில் முன்னிலைப்படுத்தியவர், இந்த ”முகங்களின் திரைப்படம்” புத்தகத்திலும் சற்றே அவரது முந்தைய கருத்திற்கு இணையான கட்டுரையொன்றை ‘தொலைக்காட்சியும் விளம்பரங்களும்’என்ற கட்டுரையில் தந்திருக்கின்றார்.
உதாரணத்திற்கு நீங்கள் ஓர் நிறுவனத்தை நிர்வகித்து வருவதாக வைத்துக்கொள்வோம், அதனின் தற்போதுள்ள வணிக நிலையை தக்கவைத்துக்கொள்ள., அல்லது மேம்படுத்த, இன்றைய நவீன அவசர உலகில் விளம்பரங்களை நாடவேண்டிய காலகட்டமாக இருக்கின்றது. நீங்கள் பிரகடனப்படுத்த வேண்டிய பொருளை எந்தெந்த வகையிலெல்லாம் மக்களிடம் கொண்டுசேர்க்க முடியுமென விளம்பர தயாரிப்பாளர்கள் தங்களின் மூளையைச் செலவிடுகின்றனர்., என்பதோடு நில்லாமல், அடுத்தகட்டமாக அதில் இருக்கின்ற அரசியலையும் விமர்சிக்க வேண்டிய நிர்பந்தம் இந்தக் கட்டுரையை படிப்பதன் வாயிலாக தொற்றிக்கொள்கின்றது.
|
”எந்த விஷயத்தையும் ஏழுமுறை பார்க்கும்பொழுது நம் நினைவில் பதிகின்றது”, என்ற உளவியல் சித்தாந்தமே இத்தகைய விளம்பரங்களுக்கான அடிப்படை. மேலும், விளம்பரங்கள் உங்களை சிந்திக்கவிடாதபடிக்கு அடுத்தடுத்த வேகமான காட்சிகளை நகர்த்திவிடுவதில் பலம்பெறத் தொடங்குகின்றது. அது என்னமாதிரியான விளம்பரம் என்றெல்லாம் யோசிப்பதற்குள்ளாகவே அடுத்த விளம்பரமும் வரத்துவங்கியிருக்கும். இவ்வாறு செல்லுமிடங்களிலெல்லாம் இந்த விளம்பரங்கள் துரத்திக்கொண்டேயிருப்பதனால், அனிச்சைச்செயலாகவே கடைக்குச் செல்கின்ற பொழுது விளம்பரங்களில் பார்த்த பொருட்களெல்லாம் மேன்மையானவை என்ற சாமானியனின் மனோபாவங்கள் வலுவடைகின்றது. அப்பொருட்களெல்லாம் சுயதெளிவின்றி, நம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துக்கொள்கின்றது. இத்தகைய விளம்பரங்களின் வெற்றி எத்தனை சதவீதம் என்பதற்கு உங்களிடம் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால் எளிதில் புலப்படும்.
உதாரணத்திற்கு,’புடவை’, என்றவுடன் உங்கள் கண்களை மூடி யோசித்துப்பாருங்கள், உங்கள் மனக்கண்ணில் ஏதோ ஓர் பிரபல நிறுவனத்தின் பெயரும் இணைந்துகொள்ளும், அதே போல் சோப், பற்பசை, சாப்பாடு எனும்போதெல்லாம் ஏதோ ஓர் வணிகநிறுவனத்தின் அடையாளத்துடன் உங்கள் மனது இசைந்துவிட்டால் இதுவே அந்நிறுவனங்களின் வெற்றி அரசியல், என்பது செழியனின் வாதமாக இக்கட்டுரையிலிருந்து முன்வைக்கின்றார்.
மற்ற தொழில்களைப் போலவே இந்த விளம்பரத் தொழிலும் தன்னை தக்கவைத்துக்கொள்ள இம்மாதிரியான நுணுக்கமான கைங்கரியங்களை கையாள்கின்றன. ஆனால், அவர்கள் அப்படி அரும்பாடுபட்டு முன்னிறுத்துகின்ற பொருட்களின் தரம் எப்படியானது? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த நிர்பந்தத்திற்கான செழியனின் விளம்பர அலசல் பின்வருமாறு; இது அவருக்கான பார்வை என்று மட்டும் கொள்ளாமல், கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் அனைவருக்கும் புத்தியில் உரைத்த விஷயங்கள்தான்., ஆனால் வழக்கம்போல நாம் பொருட்படுத்தவில்லை என்ற முடிவிற்கு வரலாம்.
விளம்பரங்கள் முன்னிலைப்படுத்துகின்ற பொருட்களிலிருந்து உதாரணத்திற்கு ஒன்று முக அழகு தரும் கிரீம்கள்.
”ஏழே நாட்களில் சிகப்பழகு”, என்று சொல்லி விற்கப்படுகின்ற பொருட்கள் எத்தனை பேருக்கு அதன் வாக்குறுதியை நிறைவேற்றித்தந்திருக்கிறது?.
நாங்கள் அந்த வாக்குறுதிகளை நம்பவில்லை, அத்தகைய பொருட்களை நாங்கள் வாங்குவதில்லை என்று நீங்கள் சொன்னால், உங்களுக்கு மற்றொரு கேள்வி, அப்படி யாரும் வாங்குவதில்லை என்று வைத்துக்கொண்டால் அம்மாதிரியான பொருட்களின் வரத்துகள் குறையத்துவங்கியிருக்கும். ஆனால், இன்றும் கடைகளில் அவைகளே தனித்த இடம் பெறுகின்றன. அதற்கான விளம்பரங்களைப் பார்க்கையில் சிகப்பழகு கிரீம்களுக்கென பற்பல நிறுவனங்கள் மென்மேலும் வரத்துவங்கியிருக்கின்றன எனலாம்.
இதனையெல்லாம் செழியன் விளம்பர அரசியல் என்னும் கட்டுரையின் கீழ் கொண்டுவருகின்றார். இதே வழிமுறைகளைப் பயன்படுத்தி ஓடாத திரைப்படங்களை நன்றாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக மக்களை ஏமாற்றும் திரைப்பட விளம்பரங்கள் இன்னொன்று. ஆனால், மூன்றாவதாக ”அரசியல் விளம்பரங்களும்”, குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சி துவங்கும் முன்னரே தனக்கென தொலைக்காட்சி சேனல்களை தொடங்குவதில் முனைப்பு காட்டுபவர்கள் அரசியல்வாதிகள். அப்படியிருக்க ஒவ்வொரு சேனல்களும் ஒவ்வொரு கட்சியை சார்ந்திருக்கின்ற காரணத்தினால், ஒரு அலைவரிசையில் ஒளிபரப்பப்படுகின்ற குறிப்பிட்ட செய்தியானது, மற்றொரு அலைவரிசையில் வேறு மாதிரியாக திரிக்கப்படுகின்றது. இதில் எது உண்மை?என்றெல்லாம் ஆராய்வதில் சமூகத்தில் பிரக்ஞையற்றிருக்கும் மக்களுக்கு நேரமின்மையாதலால், எது தன் அறிவுச்சூழலுக்கு ஒத்துப்போகின்றதோ அதனுடன் உடன்படுகிறான். இங்கு “அவசரத்தில் இருக்கின்ற மனிதனால் சிந்திக்க முடியாது”, என்ற பிளேட்டோவின் வாசகத்தை கச்சிதமாகப் பொருத்திப் பார்க்கின்றார் செழியன்.
சில ஆண்டுகளுக்கு தேர்தலுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி, காவல்துறை அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்படுவதை தொடர்ந்து ஒளிபரப்பியதும்., எம்.ஜி.ஆர் தேர்தலின் பொழுது மருத்துவமனையில் இருந்ததை அதிகமாக காட்சிப்படுத்தியிருப்பதன் வாயிலாக நிகழ்ந்த லாபத்தை தேர்தலின்பொழுதெல்லாம் அவர்கள் அடைந்தே விட்டார்கள் எனலாம். இதுதான், மோடி பற்றி அதிகமாக பிரகடனப்படுத்துவதற்கும் காரணம். இக்கட்டுரை வெளியாகின்ற சமயத்தில் மோடியும் அதற்கான பலனை அடைந்திருப்பதால், விளம்பர அரசியலின் வலிமையை அறிந்துகொள்ளலாம்.
செழியன் விளம்பரத்துறையிலும் பணிபுரிந்ததன் காரணமாக அதில் நிகழ்கின்ற அரசியலை இக்கட்டுரையில் சுலபமாக முன்வைத்திருக்கின்றார். இந்தப் புத்தகத்திலேயே ரசிகர் மன்றங்கள் செயல்பட, அதற்குப்பின்னிருக்கின்ற அரசியலையும் செழியனின் விமர்சனம் தொடுகின்றது.
மேலும், செழியன் விளம்பரத்துறையில் மட்டுமல்லாமல், சினிமா ஒளிப்பதிவிலும் பணிபுரிந்திருக்கின்றார். ”பரதேசி”, ”கல்லூரி”, ”தென்மேற்குபருவக்காற்று”, முதலான படங்களெல்லாம் செழியனின் ஒளிப்பதிவில் வெளிவந்தவை. எனவே, இவர் சார்ந்திருக்கின்ற தொழிலின் மேன்மையை உணராத சில ஒளிப்பதிவாளர்கள் எப்படியெல்லாம் அறியாமையாக ’அண்மைக்காட்சி’ (Close up) உள்ளிட்ட இன்னபிற தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதை செழியனின் தரப்பிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
ஒளிப்பதிவின் பொழுது உலக படங்களில் எவ்விதமான அண்மைக்காட்சிகள் பயன்படுகின்றன. அதுவே நம்மூர் படங்களில் அவை எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்று ஆரம்பித்த கட்டுரையின் தொடக்க நிலையானது, அடுத்தடுத்த படிநிலைகளில்.,அவரது உதாரணங்களின் படியே பார்க்கையில் ஒரு திரைப்படத்தில் குழந்தையை தொலைத்துவிட்டு பதற்றமாக அமர்ந்திருக்கின்ற தாயைக் காட்டுகின்ற பொழுது ஒளிப்பதிவாளர் அந்த தாயின் முகத்தை திரை முழுக்க காட்சியாக்குவதற்குப் பதிலாக,இறுக்கமாக கோர்த்திருக்கின்ற தாயின்கைகளை காண்பிக்கின்றனர். இந்தக் காட்சியானது, தாயவளின் பதற்றமான மனநிலையை காட்சிப்படுத்த ஏதுவாக அமைகின்றது.
ஒரு காட்சியில் பார்வையாளர்களை அழவைப்பதைக் காட்டிலும், திரைப்படத்தில் இடம்பெறுகின்ற காட்சிக்கு வலிமைசேர்க்கின்ற ஒளிப்பதிவு கோணத்தையே பயன்படுத்துவது சாலச்சிறந்தது. இரண்டாவது 400 blows படத்தின் இறுதியில் சிறுவனின் முகத்தை அண்மைக்காட்சியில் காண்பிக்கையில் இனிமேல் அந்த சிறுவனின் மீதி வாழ்க்கை சிறையில் தான் கழிக்கப்போகின்றான் என்பதாக உணர்த்தும்படி அமைகின்றது. மஜித் மஜிதியின் color of paradise படத்தில் கண்பார்வையற்றவனை காண்பிக்கின்ற பொழுது அவனது ஊனத்தை பிரதானப்படுத்துகின்ற சுயநலமான வேலையை அந்த இயக்குனர் ஒருபோதும் செய்யவில்லை. ஆனால் நம் தமிழ்படங்கள் அண்மைகாட்சிகள் என்ற பெயரில் இதே வேலையைத்தான் நெடுநாட்களாக செய்துவருகின்றன என்பதை நம் படங்களின் வரலாறுகளைத் தேடினாலே கிடைக்கின்றது.
மேலும் இந்த அண்மைக்காட்சி (close up) எனும் நுட்பத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோமெனில், ஒருவன் அழுகின்றான், சிரிக்கின்றான் என்பதைக் காட்ட ஒரு க்ளோஸ் அப்., தூரத்தில் நடந்து வருகின்ற பெண் கல்யாணமானவள் என்பதைக் காட்ட அவரின் தாலிக்கு ஒரு க்ளோஸ் அப், முக்கியமாக காமத்தை தூண்டும் நாயகிகளின் அங்க அசைவுகளுக்கெல்லாம் கட்டாயமாக ஒரு க்ளோஸ் அப்., என்பதாகத்தான். மேலும் இரண்டு காட்சிகளை இணைக்கையில் படத்தொகுப்பில் கோர்வையை ஏற்படுத்துவதற்காகத்தான் பெரும்பாலும் அண்மைக்காட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மலினமான நோக்கத்திற்காக அண்மைக்காட்சிகளை பயன்படுத்துபவர்கள் நாம்தான் என்கிறார் செழியன்.
இப்படி அண்மைக்காட்சிகளை தவிர்த்து படமாக்கியிருக்கின்ற படமாக அவர் உலகப்படங்களிலிருந்து சுட்டிக்காட்டுவது சாய் லிங் மியானின் ”what time is it there”. அங்க அசைவுகளை க்ளோஸ் அப்பில் பார்த்த நமக்கு இதுபோன்ற படங்களைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.இம்மாதிரியான விஷயங்களின் கோர்வையாக மூன்றாவது கட்டுரையாக தொகுத்துள்ள ”முகங்களின் திரைப்படம் காட்சிமொழிக்குறிப்புகள்”, சுட்டிக்காட்டுகின்றன.
இதே போன்றதொரு தொழில்நுட்ப பிரிவான ஒலியமைப்பைப் பற்றியும் செழியன் இப்புத்தகத்தின் முதல் கட்டுரையாக எழுதிச் சென்றிருக்கின்றார். இப்போது அநேகமான திரையங்குகள் டிஜிட்டல் ஒலியமைப்பைக்கொண்டுவந்துள்ளன. ஆனால் இந்த கருவிகளின் உபயோகங்களெல்லாம் கழுத்தெழும்பு உடையும் ஒலி, அறுவாள் சீவுகின்ற சப்தம், கதாநாயகன் கையைத்தூக்கினால் ஏற்படுத்தும் போலித்தனமான மிகையுணர்ச்சி ஒலிகளுக்கே பயன்படுகின்றன.
இந்த ஒலியமைப்புகள் இல்லாமல் கதாநாயகனின் வருகையைப் பார்த்தால் அவ்வளவாக எடுபடாது. அண்மைக்காட்சிகளைப்போலவே ஒலியும் மக்களை தன்பக்கம் திருப்புவதற்காக மலினமாகப் பயன்படுத்தப்படுகின்றது.”முதன்முதலாக குழந்தை பேசுகின்ற பொழுது ஆனந்தமடைகின்ற நாம், அதுவே வளர்ந்து பெரியவனாகி தன்னைத் திட்டும்பொழுதும் பொறுத்துக்கொள்வதுபோல அமைந்திருக்கின்றது இன்றைய சினிமாவின் ஒலியமைப்பு வசதிகள்” என்ற ஆதங்கம் முதல் கட்டுரையில் செழியன் வாயிலாக வெளிப்படுகிறது.
கதைக்கும் திரைக்கதைக்குமான ஒப்பீடுகளை இப்புத்தகத்தில் விளக்குகையில் “கதை என்பது சொல்வதன் மூலம் வெளிப்படுவது, அதேவேளையில் திரைக்கதை என்பது காட்டுவதன் மூலம் வெளிப்படுவது” என்கிறார். ”திரைக்கதை என்பது திரைப்படங்களின் வரைபடங்கள் போல”, ”நூறு வார்த்தைகளுக்கு இணையானது ஒரு காட்சி” , “திரைப்படத்தில் நிறையப் பணத்தை முதலீடாகப்போடும் தயாரிப்பாளர் எவரும் கலாச்சாரத்தை வளர்க்க விரும்ப மாட்டார்.” ; “திரைப்படம் என்பது எடுப்பதன் மூலமே கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கலை” என்பன மாதிரியான பலவகை மேற்கோள்கள் இப்புத்தகத்தில் சுட்டக்காட்ட தகுதியாகயுள்ளது. புதுமைப்பித்தன் தொட்டு, பல எழுத்தாளர்கள் இந்த திரைக்கதை எழுதுவதில்தான் சரிக்குகின்றனர் என்ற கருத்தையும் செழியனின் பார்வையாக இக்கட்டுரைகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
”முகங்களின் திரைப்படம்”, புத்தகத்தை எழுதியுள்ள செழியனை, அவரது எழுத்துக்களை வைத்துக்கொண்டே ஓர் அலகுக்குள் கொண்டு வரலாம். அதாவது தமிழிலும் எப்பொழுது புதிய அலை சினிமா வரும் என்று தவம் கிடந்தவர் போல அமைந்திருக்கின்றது. மேலும் வணிக கட்டமைப்பிற்குள் காலங்காலமாக அடைபட்டுக்கொண்டிருக்கின்ற சினிமாவை மீட்பர் போல செழியன் பல கோணங்களில் அணுகியிருக்கின்றார். மீட்பதற்கான வழிமுறைகளையும் அவரே சொல்கின்றார்.,
முதலில் 2 ½ மணி நேரம் என்ற நேர ஒதுக்கீடு சினிமாவிற்கு வேண்டாம். அதனைக் களைவதில் சிலருக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால், அதை எப்படியெல்லாம் களையலாம் என்று செழியன் முன்வைக்கின்ற தர்க்கங்களை பார்த்துவிட்டு அந்த தயக்கத்திற்கு வரலாம்.
முதலாவதாக படங்கள் திரையரங்கங்களில்தான் திரையிடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை உதற வேண்டும். பொதுவிடங்களில் மக்கள் முன் படங்கள் திரையிடப்பட வேண்டும்.
முன்னணியாக கதாநாயகனே முன்னிலைப் படுத்தப்படுவது தவிர்ப்பதன் வாயிலாக பட்ஜெட்டை குறைக்க முடியும். (இங்கு பெரும்பாலும், இயக்குனரைக் காட்டிலும், கதாநாயகனுக்கே செல்வாக்குண்டு. அதனால், இயக்குனர்கள், தம் மக்களுக்கான கதையைத் தவிர்த்து, கதாநாயகனின் வணிக நிலையை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், அவரது ரசிகர்களின் குதூகலத்தை அதிகப்படுத்துவதற்கும் கதை செய்ய வேண்டிய கட்டுப்பாடு நிலவுகிறது)
பாடல்களை தவிர்த்துவிடுவதன் வாயிலாக 25 நிமிடங்களையும், அதற்கான தயாரிப்புச்செலவையும் மிச்சப்படுத்தலாம்.
சண்டைக்காட்சிகளை தவிர்ப்பதனால் 15 முதல் 20 நிமிடங்கள் மிச்சப்படும். பின்னர் நாயக, நாயகி அறிமுகம், கதைக்கு சம்பந்தமில்லாத கவர்ச்சி இதையெல்லாம் கழித்துவிட்டாலே 90 நிமிடங்களுக்கு திரைப்படங்களின் நேரம் சுருங்கிவிடும். பெரும்பான்மையான உலகப்படங்களின் கால அளவு 90 நிமிடங்கள் என்பதால்தான் செழியன் 90 நிமிடக்கோட்பாட்டை இங்கு முன்வைக்கின்றார்.
இந்த 90நிமிட படங்களும் திரையரங்கை முன்வைக்காமல் மக்களுக்கு மத்தியில் பொதுவிடங்களில் திரையிடப்படலாம். தரமான படங்கள் வணிக லாபத்தையும் அடையவேண்டுமாயின்,திரைப்படங்களுக்கான உலகச்சந்தையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மற்றொரு கட்டுரையில் மக்களுக்கான ரசனையை மேம்படுத்த பல உலகப்படங்களை அவர்களுக்கு திரையிட்டு அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். இந்த மாற்றங்களை 15 வயதிற்குள் இருப்பவர்களிடமிருந்துதான் முக்கியமாக ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் செழியன்.
மேலும் உலக திரைப்படங்கள் அனைத்தும் குறுந்தகடுகளாக 50ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்ற காரணத்தினால் அதிக எண்ணிக்கையில் குறும்பட நூலகத்தை ஏற்படுத்த வேண்டும். ஊருக்கு ஒரு திரைப்பட சங்கத்தை உருவாக்க வேண்டும். திரைப்பட இயக்கங்களில் படங்கள் திரையிடுவதோடல்லாமல், படங்களைப் பற்றி மக்களோடு விவாதிக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள், குறும்படங்களும், ஆவணப்படங்களும் எடுக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். கலை இரவுகள், வணிகப்படங்களை தவிர்த்து குறும்படங்களுக்கான விருதுகள், கெளரவம் என இன்னும்பல செழியனின் சிந்தனைகளாக இப்புத்தகத்தின் வழியே விரிகின்றன.மேலும் மாற்றுசினிமாவிற்கான இதழ் ஒன்றை வெளியிட்டு மக்களின் மாற்று சினிமா சிந்தனையை ஊக்குவிக்கலாம் என்பதும் இதில் சேர்த்தி. இதற்கு முன்னோடியாக ஜான் ஆபிரஹாம் போன்றோரையும் அவரது “ஒடேசா” இயக்கத்தையும் செழியன் உதாரணப்படுத்துகிறார்.
இக்கட்டுரைத்தொகுப்புகளில் ஏற்கனவே பலவாறாக அறியப்பட்ட கட்டுரை ஒன்றும் இணைந்திருக்கின்றது. அது சென்னைக்கு ”மக்மல்பஃப்”, வந்திருந்தபொழுது அவரை செழியன் சந்தித்த கதை. இது ஆனந்த விகடனிலும் வெளியாகியிருக்கின்றது. இப்புத்தகத்தில் அக்கட்டுரைக்கு இன்னும் சில பத்திகள் சேர்த்திருக்கின்றார் செழியன். திரும்ப படிக்கின்றோம் என்ற நினைப்பைத் தவிர்த்து, மறுபடியும் படிக்கவேண்டிய கட்டுரை என்றே இதனைச் சுட்டிக்காட்டலாம்.
அதேநேரம் கருத்துச்செறிவுள்ள இந்தப்புத்தகம் நல்ல சினிமாவிற்கான முயற்சி எடுப்பவர்களெல்லாம்தவறாமல் படிக்க தகுதியானது. முன்னர் கூறியது போல, நாம் பல தருணங்களில் தெரிந்தும், தெரியாமலும் மேம்போக்கான அசட்டுத்தனத்தால் சிந்திக்கத் தவறியவைகளையே., செழியன் நுண்ணிய பார்வையோடு தனக்கேயுரிய தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தி “முகங்களின் திரைப்படம்” புத்தகத்தை எழுதியிருக்கின்றார்.
இருப்பினும் இந்தப் புத்தகத்தை படிக்கின்ற பொழுது சில தர்க்கமான சிந்தனைகள் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.
இத்தகைய கட்டுரைகளை செழியன் வெளிப்பூச்சுகளின்றி தன் மனதில் பட்டதையே எழுதியிருக்கின்றார் என்று வைத்துக்கொண்டால், இந்தப்புத்தகம் வெளியான தினத்திலிருந்து கணக்கெடுத்துக்கொண்டால்கூட, இன்றுவரை நல்ல சினிமாவிற்கான அவரின் முயற்சி எத்தகையது?..
யதார்த்த சினிமாக்களின் மீது தெளிவான, தீர்க்கமான சிந்தனைகளைக் கொண்டிருக்கின்ற செழியன் ஒருவேளை முயற்சிகள் எடுத்திருந்த வேளையில், தகுந்த வரவேற்பின்மையால் பழிக்காமல் போயிருக்கலாம். ஆனால், இம்மாதிரியான புத்தகங்களை எழுதுவதைத்தவிர்த்து அவர் வேறெந்தெந்த வகைகளில் மாற்றுசினிமா முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றார்.
முன்னர் கூறிய 90 நிமிட கோட்பாட்டின்படி சில லட்சங்களில் படம் எடுத்து முடித்துவிடலாம் என்கின்றார் செழியன். மக்மல்பஃப் கூட இதையே மொழிகையில், இருவரும் அடுத்த முறை சந்திக்கின்ற பொழுது அடுத்து படம் எடுப்பதைப் பற்றி பேசலாம் என்று உரையாடல் வருகின்றது. ஒருவேளை மக்மல்பஃப் போன்றோர் வரும்போது மட்டுமே இதுமாதிரியான படங்களை செழியன் எடுப்பார் என்று எதிர்பார்க்கலாமா? என்று தெரியவில்லை.
இவரே இந்நூலில் ஆணித்தரமாகக் கூறுகின்றார் “உலக வன்முறையாளர்கள் எல்லாம் பயப்படும் ஒரே கருவி ஒளிப்பதிவுக்கருவிதான்” என்று. ஆனால் அதனையே தொழிலாக வைத்துக்கொண்டிருப்பவர் நிகழ்த்திக் காட்டியிருக்கின்ற சாத்தியங்கள் எத்தகையன? படங்கள் எத்தன்மையுடையன?
வெறுமனே இதுபோன்றெல்லாம் சந்தர்ப்பவாதமாக எழுதிச் செல்வதால் மட்டுமே தான் சினிமாவிற்கு செய்யவேண்டிய நற்செயல்களையெல்லாம் செய்து முடித்தாயிற்று என்று ஏற்றுக்கொள்வதில் சிரமமாகயிருக்கின்றது. ”கலைஞனின் தத்துவார்த்த விருப்பங்களுக்கேற்பவே., அவனது தேர்வுகளும் அமையும்” என்ற சாஞ்சினெஸ் கூற்றிற்கேற்ப., சுதந்திரமாக படமெடுக்க விரும்பிய மக்மல்பஃப்., சொந்த ஊரிலிருந்து., நம் பகுதிக்கு வந்து படத்திற்கான பிற்தயாரிப்பு வேலைகளைச் செய்கிறார். காரணம் என்னவெனில், ”தன்னை ஈரானிலிருந்து படமெடுக்க தடைவிதித்திருக்கின்றார்கள்”, என்கின்றார் மக்மல்பஃப். பின்னர் “எந்த வகைபடம் எடுக்க வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும், அதை அரசாங்கம் தீர்மானிக்க கூடாது? என்பதால் ஈரானிலிருந்து வெளியேறி கஜகஸ்தானில் படம் எடுத்துவிட்டு தொழில்நுட்ப உதவிகளுக்காக சென்னைக்கு வந்திருப்பதாகச்”, சொல்கின்றார்.
ஆனால் நம்மூரில் நல்ல படமெடுத்தால் நாடு கடத்தி விடுவேன் என்று அரசாங்கமும் சொல்லவில்லை. அரசியல் ரீதியான சிக்கல்களை படம் தொட்டிருந்தால் தணிக்கையில் வேண்டுமானால் சில பிரச்சனைகள் வரலாம். இந்தப் பிரச்சனைகளும் கூட்டுமனப்பான்மை சாத்தியமாயின் தீர்க்கப்படக்கூடியதே.
மக்மல்பஃபை சுட்டிக்காட்டியே செழியன் நம்மைப் பார்த்து ஓர் கேள்வி கேட்கின்றார்.
“மக்மல்பஃப் ஈரானிலிருந்து சென்னை வந்து என்ன மாதிரியான படங்கள் எடுக்கின்றார். நாம் சென்னையில் இருந்துகொண்டே எந்தமாதிரியான படங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்”.
அவர் மற்றவர்களை மட்டுமல்ல தன்னையே பார்த்து கேட்டுக்கொள்ளக்கூடிய கேள்வியும் இதுதான்.
இங்கு இருக்கின்ற பல ஒளிப்பதிவாளர்களுக்கு சினிமா பற்றிய புரிதலோ, கருணையோ இல்லாதிருக்க, செழியன் போன்றோர் இதுபோல் எழுதுவதை குறைகூறலாகாது., என்ற பார்வையில் வைத்துக்கொள்வதானாலும், செழியன் வேலை பார்த்திருக்கக்கூடிய படங்களைப் பார்க்கின்றபொழுதும் அவரது தனித்தன்மை வெளிப்படுவதாகத்தான் அமைகின்றதே! என்பது உங்கள் கருத்தானால், செழியனின் வார்த்தைகளிலிருந்தே இதற்கான பதிலைக் கூற விரும்புகிறேன்.
அதன்படி,
“முப்பது மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு இன்னும் ஐந்து மதிப்பெண் சேர்த்துப் போட்டு ஆசிரியர் தனது கருணையினால் தேர்ச்சியடைய வைப்பதைப்போல, வணிகத் திரைப்படங்களின் நடுவே கொஞ்சம் விலகி இருக்கிற படங்களைக் கூட நமது ஊடகங்களும், நாமும் கொண்டாடி விடுகிறோம்.”“’ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை’ என்றொரு சொலவம் இருக்கிறது. உயர்ந்தது இல்லை என்பதற்காக இருப்பதில் கொஞ்சம் சிறந்ததைப் பாராட்டுவது. “
விளைபொருளைத்தவிர்த்து, அதன்விளைநிலத்தின் தரம் எத்தகையது என்பதெல்லாம் வீணான ஆராய்ச்சி, தொடர்ந்து “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்”, ”உலகசினிமா”, “மஹ்மல்பஃப்”. “சத்யஜித்ரே” ‘ப்ரசன்ன விதானகே’, போன்றோரை சிலாகிப்பவரிடமும், நல்ல சினிமாவை எப்படி எடுத்து, எந்த வழியில் பிரகடனப்படுத்த முடியும்., எந்த வகையில் பணத்தேவையையும் ஈடுகட்ட முடியும்.,என்ற வழிமுறைகளையெல்லாம் அலசி ஆராய்ந்து விரல் நுனியில் வைத்திருப்பவரிடம் அவர் சுட்டிக்காட்டுகின்ற படங்களின் தரத்தை அவரது படங்களிலிலும் எதிர்பார்ப்பதில் தவறேதுமில்லை.
இத்தகைய தருணத்தில் சுந்தர ராமசாமியின் வரிகளும் ஏனோ நினைவில் வருகின்றன.
“சுதந்திரத்திற்கான பரிபூரண வெளி என்று நாம் நினைக்கின்ற இடத்திலும்.,
மெளனமான அடக்குமுறை நிலவுகிறது”
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |