'இனம்' பிரச்சினையும் படைப்புச் சுதந்திரமும்
ஈழப் பிரச்சினை கேரள நடிகர்களையும் இயக்குனர்களையும் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது போலத் தோன்றுகிறது. ஈழப்பிரச்சினை பற்றி இதுவரையிலும் அவர்கள் ஆறு படங்களை உருவாக்கி இருக்கிறார்கள். ராஜிவ்காந்தி படுகொலை நிகழ்வை முன்வைத்து மேஜர் ரவி மிசன் 'நைன்டி டேஸ்' எடுக்க, நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆப்ரஹாம் 'மெட்ராஸ் கபே' எடுக்க, சந்தோஷ் சிவன் 'டெரரிஸ்ட்' எடுத்தார். நடிகர் சுரேஷ்கோபி ஈழப்போராளி பற்றிய கதையான 'ராம ராவணன்' படத்தினை பிரச்சாரம் செய்ய சென்னைக்கே வந்து போனார். சந்தோஷ் சிவன் 'இனம்' திரைப்படத்தில் மறுபடி ஈழப் பிரச்சினையைக் கையிலெடுததிருக்கிறார். இந்த ஐந்து படங்களோடு ஆறாவதாக ராஜேஷ் தொடுபுழா இயக்கிய 'இன் த நேம் ஆப் புத்தா' படத்தினையும் நாம் ஞாபகம் கொள்வோம்.
|
முல்லைப்பெரியாறு பிர்ச்சினையில் தமிழக மற்றும் கேரள மக்களைப் பீதிக்கு உள்ளாக்கிய 'டேம் 999' படத்தினையும் வரலாறு கருதி ஒருவர் இதனோடு சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.
'இன் த நேம் ஆப் புத்தா' இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டது. 'டேம் 999' தமிழக அரசினால் தடைசெய்யப்பட்டது. 'மெட்ராஸ் கபே' மற்றும் 'ராம் ராவணன்' என இரண்டு படங்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்களால் தமிழகத்தில் 'தடை' செய்யப்பட்டன. ஓப்பீட்டளவில் சந்தோஷ் சிவனின் 'டெரரிஸ்ட்' தமிழக சினிமாக்களில் பிரச்சினையின்றி வெளியாகியது. இத்துடன் துசரா பிரீஸ் எனும் சிங்கள இயக்குனரின் 'பிரபாகரன்' படத்திற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பில் அவர் காயங்களுடன் இலங்கைக்குத் தப்பி ஓடினார். தமிழக மீனவர் படுகொலை மற்றும் ஈழப் பிரச்சினையில் தமிழக அரயல்வாதிகளின் 'திருவிளையாடல்கள்' பற்றிய படமான லீனா மணிமேகலையின் 'செங்கடல்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.
மறு ஆய்வுக்குழ வரை சென்று போராடி தணிக்கைச் சான்றிதழ் பெற்றாலும் அதனை சென்னைத் திரைப்பட விழாவில் திரையிடச் செய்வதற்கே இயக்குனர் பெரும் போராட்டத்தினை நடத்த வேண்டியிருந்தது.
மணிரத்னத்தின் 'இருவர்' கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' நடிகர் விஜயின் 'தலைவா' போன்ற படங்களும் 'அரசியல் தடைக்கு' உள்ளானதும் தமிழக சினிமாவும் தடைகளும் அரசியலும் தொடர்பான சமகால சரித்திரச் சுவடுகள். சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள உறவின் வலிமையை, அது தரும் அதிகாரத்தை தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் உணர்ந்திருப்பது போல இந்தியாவில் பிற எவரும் உணர்ந்திருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். ஐந்து தமிழக முதல்வர்கள் திரைத்துறை சார்ந்தவர்கள் என்கிற ஓரேயொரு சான்று இதனை மெய்ப்பிக்கப் போதுமானது.
இச்சூழலில், உலகில் எங்கெங்கும் வாழும் தமிழர்களின் கொதிநிலைப் பிரச்சினையான ஈழம் பற்றிய, அதுவும் முள்ளிவாய்க்கால் பேரழிவு அனுபவங்களையும் பேசும் 'இனம்' படம் பிரச்சினைக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால்தான் எவரும் ஆச்சரியப்பட வேண்டி இருந்திருக்கும்.
****
பிரச்சினை படத்தின் தலைப்பிலேயே இருக்கிறது. சந்தோஷ் சிவன் 'பிபோர் த ரெயின்' என முழுமையாக ஆங்கிலப்படம் எல்லாம் எடுத்தவர். அவருடைய 'பயங்கரவாத எதிர்ப்பு'ப் படமான 'டெரரிஸ்ட்' ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் ஜான் மல்கவிச்சினால் உலகச்சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆங்கில மொழியை எப்படி புத்திசாலித்தனமாகப் பாவிப்பது என்பது இயக்குனர் சந்தோஷ் சிவனுக்குத் தெரியும். 'Inam : The Mob' என அவர் படத்திற்கு துணைத்தலைப்பு கொடுத்திருக்கிறார். இனம் என்பதனையடுத்து 'The People' எனவும் துணைத்தலைப்பு கொடுத்திருக்கலாம். 'Mob' என்பதற்கான உடனடி அர்த்தமும் உலகெங்கிலும் ஆங்கில ஊடகங்களிலும், திரைப்பட வரலாறெங்கிலும் பாவிக்கப்படும் அர்த்தமும்; 'கும்பல்' அல்லது 'குற்றம்புரியும் கூட்டம்' என்பதுதான். ஆங்கில அகராதியைத் தேடிச் சென்றால் 'மக்கள் கூட்டம்' எனும் 'சம்சயமான' அர்த்தமும் அந்தச் சொல்லுக்கு உண்டு என்பதனை அறியலாம். இப்படி 'இரண்டு விதமாகவும் அர்த்தம் கொள்ளப்படும்' ஒரு சொல்லையே அவர் படத்தின் துணைத் தலைப்பாக அல்லது 'இனம்' எனும் சொல்லுக்கான அர்த்தமாகப் பாவித்திருக்கிறார்.
இப்படி, சந்தோஷ் சிவனின் 'அரசியல் குறும்பு' உண்மையில் படத்தலைப்பிலேயே வந்துவிடுகிறது.
சந்தோஷ் சிவன் மற்றும் மணிரத்னம் இருவரும் ஒத்த சிந்தனைப் பள்ளி சார்ந்தவர்கள். தற்கொலைப் போராளிகள் பற்றி மணிரத்னம் 'உயிரே' எடுக்க, சந்தோஷ் சிவன் தமிழில் 'டெரரிஸ்ட்' எடுப்பார். காஷ்மீருக்குப் போய் அதே கன்சப்டில் 'தஹான்' என்று இந்தியில் தற்கொலைப் போராளி பற்றிப் படமெடுப்பார். பக்கச்சார்பற்ற, பிரச்சினைகளில் அரசியல் நிலைபாடற்ற, நிலவும் அமைப்பைக் காப்பாற்ற விரும்புகிற அறிவுஜீவி உலக நோக்கு இது. இது ஒரு திரைப்பட சூத்திரம். கொடுங்கோலர்கள் பத்துப்பேர் இருந்தால் அவர்களில் ஒரு நல்ல ராணுவத்தினனையும், ஒரு மனிதாபிமான புத்த பிக்குவையும் காண்பிக்க வேண்டும். இது கமர்ஷியல் சினிமா பார்முலா.
'இனம்' படத்திற்கு ஆதரவாகப் பேசுகிற ஆர்.கே.செல்வமணி 'இந்தப் பார்முலா 'இனம்' படத்தில் இருக்கிறது; இது தவிர்க்க முடியாதது' என்கிறார்.
கோளாறே இந்தப் பார்வையில்தான் இருக்கிறது. பார்முலாக்களை வைத்து அரசியல் சினிமாவை உருவாக்க முடியாது. வரலாறும் தரவுகளும் குறிப்பிட்ட பிரச்சினை குறித்த ஆய்வும், எல்லாவற்றுக்கும் மேலாக பிரசசினையை குறிப்பிட்ட படைப்பாளி தேர்ந்துகொள்ள அவருக்கு என்ன 'ஆத்மநெருக்கடி' என்பதும் முக்கியம். இப்படிப்பட்ட படைப்பாளி பிரச்சினைக்கு 'வெளியாளாக' இருந்து பிரச்சினையைப் பார்க்கவோ ஈடுபடவோ மாட்டான். அல்ஜீரியப் பிரச்சினையை எடுத்த பொன்ட கார்வோவும், நிகரகுவப் பிரச்சினையைத் தொட்ட கென்லோச்சும் ஐரோப்பிய இயக்குனர்கள் என்பதையும், பௌதீக ரீதியில் தாம் பேசும் பிரச்சினைகளுக்கும் நிகழும் புவிப்பரப்புக்கும் அவர்கள் 'வெளியாட்கள்தான்' என்பதையும் எவரும் மறந்துவிட வேண்டாம்.
ஆனால், 'பிரச்சினைக்கு வெளியாட்களாக'த் தம்மை அவர்கள் நிறுத்திக் கொள்வதில்லை. ஆகவே, இந்த 'வெளியாட்களாக' தம்மைத் 'தேர்ந்து' நிறுத்திக் கொண்டு 'நடுநிலைமை' பேசுவது என்பது பம்மாத்துப் பார்வை.
சிங்கள பௌத்தம், மனிதாபிமான புத்த துறவி, மனிதாபிமான சிங்கள ராணுவத்தினன், கருணை கொண்ட இந்திய அதிகாரி என்பது 'பார்முலா' சினிமாவுக்குப் பொருத்தமாக இருக்கலாம். அது தமிழ் சிங்கள இனப் பிரச்சினை 'வரலாற்றுக்கு' முரணானது. பொதுபல சேனா என்கிற சிங்கள பௌத்த பாசிச அமைப்பின் அனுசரனையாளராக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்சே இருக்கிறார். காலம் மெக்ரேவின் 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் மூன்று பாகங்களையும் முறையே இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, 'புரட்சி இயக்குனர்' வசந்தபாலன், 'பீட்சா' என்கிற திரில்லர் 'அமரகாவியம்' கொடுத்த சுப்புராஜ் போன்றவர்கள் பார்க்க வேண்டும். இலங்கையின் தெற்கில் வாழும் அரசு எழுத்தர் ஒருவர் முதல், அறிவுஜீவி, ராஜியவாதி, வெளிநாட்டமைச்சர், ஜனாதிபதி, ராணுவத்தினன் என அத்தனை பேரும் அச்சரம் பிறழாமல் 'தமது ராணுவம் தூய ராணுவம் என்றும், அது மனிதாபிமான யுத்தம் செய்தது' என்றும் ஒரே குரலில் சொல்வார்கள்.
இலங்கை அரசும் அதனது தெற்கு சிவில் சமூகமும் நிறுவனமயான இனவாதத்தினாலும் வன்முறை உணர்வினாலும் பீடிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து இலங்கை ராணுவமும் பவுத்த துறவிகளும் பற்றிய உண்மைகளை அறிய சந்தோஷ் சிவனை ஆதரிக்கும் தமிழக இயக்குனர்கள் ஹந்தகமாவின் 'இது எனது சந்திரன்' படத்தையும், பிரசன்ன விதானகேவின் 'பௌர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம்' படத்தையும் பாருங்கள். ராணுவமும் பவுத்தமும் எவ்வாறு இனவாத நிறுவனத்தின் திருகாணிகளாக இயங்குகிறது என்பதனை அப்போது இவர்கள் புரிந்துகொள்வார்கள்.
படத்தைப் பார்க்கிற வாய்ப்பு எனக்கு இல்லை. இந்நிலையில் குறிப்பாகப் படத்தின் காட்சியமைப்புகள் குறித்து என்னால் எதுவும் பேசமுடியாது. படத்தின் 'நடுநிலைமை' எனும் அரசியல் பிரச்சினை பற்றி, கமர்சியல் 'பார்முலா'வில் அரசியல் சினிமா எடுப்பது பற்றி, பிரச்சினைக்கு 'வெளியாளாக' இருந்து படமெடுப்பது என்பது பற்றி மட்டுமே நான் இங்கு பேசுகிறேன். மேலாக, மணிரத்னம், சந்தோஷ் சிவன் போன்றவர்கள் இனப் பிரச்சினையை ஒரு ஜனநாயக் கோரிக்கையாகப் பார்க்காதவர்கள். கூட்டரசுக்குத் 'தொந்தரவு' தருபவர்களாக, 'கலவரம்' செய்பவர்களாக, 'கருணையற்ற' தற்கொலையாளிகளாக மட்டுமே போராளிகளை அவர்களால் பார்க்க முடியும். 'ரோஜா', 'உயிரே', 'டெரரிஸ்ட்', 'தஹான்' என்கிற அவர்களது முன்னைய படங்கள் அதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. இந்த வகையில் சந்தோஷ்சிவன் ஒரு காத்திரமான அரசியல் சினிமா எடுக்கிற தகைமை கொண்டவர் என்பதனை ஒரு போதும் ஏற்கமுடியாது.
****
தடையும் படைப்புச் சுதந்திரமும் குறித்து இயக்குனர் சங்கம் அக்கறை செலுத்தியிருக்கிறது. பிரச்சினையை 'விஸ்வருபம்' படச்சிக்கலுடனும் அது இணைத்துப் பார்க்கிறது. அதுவும் இவர்களது அக்கறை கமர்ஷியல் சினிமா சுதநதிரம், தணிக்கைக் குழவின் முடிவுகளுக்கு அடிபணிவது எனும் அடிப்படையிலேயே இருக்கிறது. 'பம்பாய்' படத்துக்கு பால் தாக்கரேயினால் வந்த பிரச்சினை, 'இருவர்' படத்துக்கு தமிழக அரசினால் வந்த பிரச்சினை, 'தலைவா' படத்திறகு தமிழக அரசினால் வந்த பிரச்சினை, 'செங்கடல்' படத்தினை சென்னைத் திரைப்பட விழாவில் திரையிடாமல் தவிர்த்தது, 'பிரபாகரன்' பட இயக்குனரான துசரா பிரீஸ் எனும் சிங்கள இயக்குனர் தாக்கப்பட்டது, 'ராம் ராவணன்' நடிகர் சுரேஷ் கோபி சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது, கொஞ்சம் முன்னால் போய் 'காற்றுக்கென்ன வேலி' படத்துக்கு வந்த பிரச்சினை, 'மிதிவெடி' மற்றும் 'தேன்கூடு' போன்ற ஈழப் பிரச்சினை குறித்த படங்கள் மார்க்கெட்டிங் செய்ய முடியாமல் இருப்பது என இவர்கள் அக்கறை செலுத்தி இவை அனைத்தும் குறித்த ஒரு கொள்கை நிலைபாடு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அரசியல் கட்சிகளிடமும், தீவிரவாத மத அமைப்புக்களிடமிருந்து மட்டுமல்ல, அரசிடமிருந்தும் தணிக்கைக் குழவிடம் இருந்தும் கூட படைப்பாளர் சுதந்திரத்தைக் காக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது.
****
தடை, படைப்புச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் விமர்சனம் போன்ற பிரச்சினைகளை எவரும் வேறு வேறு தளங்களில் இருந்தே அணுகவேண்டும். ஓன்றையொன்று குழப்புகிற பார்வைகளே முகநூலிலும் சமூக ஊடகங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுத்த சுயம்புவான கலைஞன் என எவரும் இல்லை. வர்க்கம், சாதி, மதம், இனம், பால்நிலை என்பது கடந்த சுயம்புவான தத்துவம், அறம், அரசியல், கலை என்றும் ஏதுமில்லை. இந்த நிலையில் படைப்பு குறித்த விமர்சனம் என்பதை எந்தக் கட்டத்திலும் எவரும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
அ.ராமசாமி எழுதினாலும் அதிஷா எழுதினாலும் சினிமா விமர்சனத்தின் அரசியல் சார்புநிலைகளை என்னால் பகுத்துக் கொள்ள முடியும். எனது அறிவார்ந்த நிலைபாட்டுக்காக நான் சளையாது சமரமின்றிப் பேசுவேன். இதனது பொருள், எனக்கு மாறுபாடு கொண்ட கருத்துக்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்பது இல்லை.
அரசின் தடையை எதிர்த்துப் போராடுகிற ஒருவர், குறிப்பிட்ட அரசியல் கட்சி மற்றும் குறுங்குழு அமைப்பின் தடைகளை மட்டும் எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்? இதனை நாம் அனுமதிப்போமானால் கருத்துப் போராட்டம் என்பதும் வெகுமக்கள் பிரக்ஞையை உருவாக்குவது என்பதும் எவ்வாறு சாத்தியம்? தமிழகத்தைப் பொறுத்து அ;ச்சுறுத்தல் விடுக்கிற எந்தச் சிறு அமைப்பும் இன்று எந்தத் திரைப்படத்தையும் 'தடை' செய்துவிட முடியும். இது அடிப்படை கருத்துரிமைக்குச் சவாலாக இருக்கிறது. பத்திரிக்கை, பேச்சு என்பதன் மீதான தாக்குதலாகவும் இது வலுப்பெறும் ஆபத்து இருக்கிறது. இதற்கான கடந்த கால சான்றுகளும் இரு கழகங்களின் ஆட்சிகளிலும் இருக்கின்றன.
படைப்புச் சுதந்திரம் எவவளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது விமர்சன சுதந்திரம் என்பதனையும் நாம் இப்போது வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |