இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை
என்னுரை
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதையை எதற்காகச் சொல்ல வேண்டும்? வேறு எந்தச் சினிமா வரலாற்றுக்கும் இல்லாத சோகக்கதை எமது இலங்கைத் தமிழ்ச் சினிமா வரலாற்றுக்கு இருக்கிறதே. அதனால் சொல்ல வேண்டும்.
இந்தத் தமிழ்ச் சினிமாவின் கதையை நான் எவ்வாறு சொல்ல வந்தேன்? பெரும்பாலான இலங்கைத் தமிழ்ப் படங்களைப் பற்றிய தகவல்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன். பல புகைப்படங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கு விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். எங்கள் சினிமாவுக்குக்காக அரும்பாடுபட்ட பல கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன். அவர்கள் செய்த சாதனைகளுக்காக அவர்களில் சிலரை தொலைக்காட்சியில் பேட்டி கண்டிருக்கிறேன்.
இந்த அநுபவங்கள்தான் என்னை இப்படியான நூல் ஒன்றை எழுதத் தூண்டியது. இலங்கைச் சினிமா முன்னேற உழைத்த உன்னதக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இந்நூலில் எழுதியுள்ளேன். இந்நூலை நான் விமர்சன ரீதியாக எழுதவில்லை. வரலாற்றுப் பாங்காகவே எழுதியுள்ளேன்.
ஆனால், நமது தமிழ்ச் சினிமாவை ஆராயப்போகும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்நூல் அடிப்படையாக அமையும் என்று எண்ணுகிறேன்.
இந்நூலின் பெரும்பகுதி தினகரனில் வெளிவந்தது. சிறுபகுதி வீரகேசரியிலும் வந்திருக்கிறது. அதற்காக அவற்றின் ஆசிரியர்கள், திருவாளர்கள் ஆர். சிவகுருநாதன், ஆ. சிவநேசச் செல்வன், ஆர். ராஜகோபால் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.
இந்நூல் சுருக்கமாக அமையவேண்டும் என்பதற்காக, சில சம்பவங்களைச் சுருக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. இலங்கை - இந்தியக் கூட்டுத்தயாரிப்புகளின் கதையைத் தவிர்த்திருக்கிறேன். சினிமாச் சஞ்சிகைகளைப்பற்றிச் சொல்லவேயில்லை.
எனது அறியாமை காரணமாகச் சில தகவல்களை நான் தவறவிட்டிருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை அடுத்த பதிப்பில் சேர்த்துக்கொள்ளுவேன்.
எனது தொடர் கட்டுரைகளை இவ்வாறு நூலுருவில் கொண்டுவருவதில் பிரபல கட்டடக் கலைஞரும், கலை அபிமானியுமான திரு. வி. எஸ். துரைராஜா பெரிதும் உதவியிருக்கிறார். எனது கனவை நனவாக்கிய அவரின் உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அழகிய முறையில் அச்சிட்ட காந்தளகம் உரிமையாளர். க. சச்சிதானந்தன் அவர்களுக்கும் நன்றி. அழகாக அட்டைப் படம் வரைந்த எஸ்.டி. சாமி அவர்களுக்கும் நன்றிகள். அணிந்துரை வழங்கிய பிரபல நெறியாளர் பாலு மகேந்திராவுக்கும் எனது நன்றி.
1993ஆம் ஆண்டுவரையான கதைதான் இது. இதுவரை இலங்கையில் திரைக்கு வந்த திரைப்படங்களின் வரலாற்றைச் சுருக்கமாகத்தான் எழுதியிருக்கிறேன்.
2000ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. இலங்கைத் தமிழ்ச் சினிமாவுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி உலகரீதியிலும் சந்தை வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்தச் சந்தை வாய்ப்புக்கு ஏற்ற விதத்திலே படங்களைத் தயாரித்தால் இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்று நம்பலாம்.
எனது இந்நூலின் முதலாவது பதிப்பில் 1993ஆம் ஆண்டு வரையான கதையையே எழுதினேன். இவ்விரண்டாவது பதிப்பில் 2000ஆம் ஆண்டு வரையான கதையை எழுதியுள்ளேன். இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றை எழுதப் போகின்றவர்களுக்கு எனது இந்நூல் ஆரம்பப் படியாக அமையும் என்று நம்புகிறேன்.
நான் அரும்பாடுபட்டுத் தேடிச் சேர்த்த தகவல்களையும் அவற்றுக்கு ஆதாரமான புகைப்படங்களையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். சினிமா என்ற கலைமீது ஆர்வம் கொண்ட அனைவரும் இப்புத்தகத்துக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
வாசகர்கள் அனைவரும் என் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்,
தம்பிஐயா தேவதாஸ்
90/5 புதுச்செட்டித்தெரு
கொழும்பு - 13
இலங்கை
06.01.2000
-----------------------------------------------------
திரு. தம்பிஐயா தேவதாஸ்
இவர், யாழ்ப்பாணம் புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிஐயா, ஈஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வர். புங்குடுதீவு மகாவித்தியாலயம், கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவர்.
தற்பொழுது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல்துறையில் பேராசிரியராகக் கடமையாற்றி வரும் இவர், கொழும்பு மெதடிஸ்த தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உதவி அறிவிப்பாளராகவும், கல்விச்சேவையில் அதிதித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கை வானொலியில் ‘நாளைய சந்ததி’, ‘அங்கும் இங்கும்’ ஆகிய நிகழ்ச்சிகளையும், தொலைக்காட்சியில் ‘காதம்பரி’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். ‘இதயத்தில் ஓர் உதயம்’ என்ற தொலைக்காட்சி நாடகத்தின் தயாரிப்பாளரும் இவரே ஆவார்.
சிறுகதை எழுத்தாளராகவே இலக்கிய உலகிற்குள் நுழைந்த இவர் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சினிமா சம்பந்தமான பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ‘நெஞ்சில் ஓர் இரகசியம்’, ‘இறைவன் வகுத்த வழி’, ‘மூன்று பாத்திரங்கள்’ ஆகிய மூன்று நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து நூலுருவில் வெளியிட்டிருக்கிறார். ‘இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை’ என்ற இந்நூல், இவரது நான்காவது நூலாகும்.
தமிழ் சினிமாவின் கதை என்கிற, தம்பிஐயா தேவதாஸின் நூலை இணையத்தில் பதிவேற்றிக்கொள்ள அவரிடம் அனுமதி வாங்கி, அதனை தொடராக வெளியிடுகிறோம்.
அவரது மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |