தமிழ் ஸ்டுடியோ - இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம் - நூறு திரைப்படங்கள் திரையிடல்
தானும் தன்மக்களும் புலகாங்கிதம் அடையவேண்டி, இந்திய சினிமாவை அரவணைத்துக்கொண்டது போன்ற பாசாங்குடன், உண்மையான கலைஞர்களின் புறக்கணிப்பினது வெற்றியிலும், புலம்பலே தாய்மொழியான சாமான்யர்களின் வெற்றுக்கோபத்தினது கனலிலும் சுகமாக குளிர்காய்ந்த கூட்டத்திற்கிடையில், சினிமாவில் நடிப்பவர்களெல்லாம் எங்கள் நடிப்பில் பிசிறைக்கூட தொடமுடியாது என்று முன் வரிசையில் தொந்திசரிய அமர்ந்துகொண்டனர் அரசியல் வியாதிகள், படைப்பின் உச்சங்களும் மிச்சங்களும் நாம் எதிர்பார்த்தே வந்தகாரியங்கள் தான் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்பதனால் முகத்தில் எவ்வித எதிர்ப்பையும், அயர்ச்சியையும் காட்டாமல் பின்னிருக்கையில் பதுங்கிக்கொண்டனர்.
|
தன் நிலையை பறைசாற்றிக்கொள்வதற்கும், படாடோபங்களுக்கும், சுவரொட்டிகளுக்கும் வேலைகொடுக்கவும், அரசியல் எதிரிகளை இந்நிகழ்வுகளை வைத்து புறக்கணிப்பதற்கும், கரைவேட்டிகளுக்கு மரியாதை கொடுப்பதற்காகவும் நடத்தப்பட்ட விழாவாகத்தான் இருந்தது தமிழக அரசின் நூறுவருட இந்திய சினிமா கொண்டாட்டம். இவ்விழாவில் இந்திய சினிமாவை கொண்டாடினார்களோ இல்லையோ, யாரைக்கொண்டாடினார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவ்விழாக்கள் தான் இந்திய சினிமாவின் வயதில் மூன்றுவயது இளையவனான தமிழ்சினிமாவிற்கு வாய்த்திருக்கும் அதிர்ஷ்டம் என்று அங்கலாய்த்து பெருமூச்சுவிடுகின்ற சினிமாபக்தர்களும், ஆளுமைகளும் ஒருபுறமிருக்க, படங்களை கட்டணம் கொடுத்துதான் பார்க்கின்றோம் என்கின்ற முறையில் ஒவ்வொரு மனிதனுக்கும் சினிமாவின் வளர்ச்சியில் குறைந்த அளவிலாவது பங்குண்டு. ஆனால், அப்படி பங்கெடுத்துக்கொண்டவர்களில் எத்தனைபேர் இந்தியசினிமாவைப் போற்றக்கூடிய விழாக்களை முன்னெடுத்தனர்? அல்லது முன்னெடுக்க முயன்றனர்? சினிமாவின் வளர்ச்சியில் தன்பங்கும் அளப்பறியது என்றுமார் தட்டிக்கொள்ளும் எவரும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை செய்துபார்க்கலாம் என்று முயற்சிசெய்துகூட பார்க்கவில்லை.
ஆனால், உண்மையாகவே சினிமாவை நேசிப்பவர்களால் அவ்வாறு இருப்பது வழக்கத்திற்கு மாறான கடினம். அதன்படியே தமிழ்ஸ்டூடியோசார்பில் நூறுவருட இந்தியசினிமாவை கொண்டாடும் விதமாககிடைப்பதற்கு அரிதானதாகவும், ஏதோஓர்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்ற படங்களை திரையிடும் நிகழ்வு நடத்தப்பட்டுவருகின்றது.
இந்நிகழ்வின் தொடக்கமானது இயக்குனர் திரு. அம்ஷன்குமார், ஆவணப்படஇயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன், திரு. அறந்தைமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தகுதிவாய்ந்தத லைமையோடு சிறப்பாக நடந்தேறியது இக்கூட்டம்.
முதலாவதாக பேசிய அம்ஷன்குமார், நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்களை, லூமியர்பிரதர்ஸின் படத்தை பார்க்கவந்த கூட்டத்தினரோடு ஒப்பிட்டுப் பேசினார். மற்ற துறைகளில் எம்மாதிரியான மாற்றங்களெல்லாம் நிகழ்ந்துள்ளதோ அதேமாற்றங்கள் தான் நம்சினிமாவிலும் நிகழ்ந்துள்ளன. ஆனால் கேரளாவில்கூட அவ்வபோது சினிமாவைக் கொண்டாடுகின்ற வகையில் அரியபடங்கள் வருகின்றன. ஆனால், தமிழ்ச்சினிமாவில் அப்படியான மாறுதல்கள் ஒன்றும் இதுவரையிலும் நிகழவில்லை. நூறுவருட இந்திய சினிமாவைக் கொண்டாடுகின்றவேளையில் தமிழ்சினிமாவின் தந்தை என அழைக்கப்படுகின்ற நடராஜமுதலியாரைப் பற்றி படமெடுக்கலாம், அல்லது எல்லீஸ் ஆர் டங்கன் வாழ்க்கையைக் குறித்த திரைப்படமெடுக்கலாம். அதுவும் இல்லையென்றால் குறைந்தது அவர்களைப் பற்றிய புத்தகங்களையாவது அதிக அளவில் கொண்டுவரலாம். ஆனால், இவைகளையெல்லாம் தவிர்த்த நிலையில்தான் தமிழஅரசின் மூன்றுநாள் விழாக்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
அப்படியான சூழலில் இம்மாதிரியான நூறுபடங்கள் திரையிடும் நிகழ்வு மகிழ்வுக்குரியதாக உள்ளது. இப்படியான தன் பேச்சை துவக்கிய அம்ஷன்குமார், அடுத்தடுத்து தாதா சாகேப் பால்கே, பற்றியும் இந்திய சினிமாவின் ஆளுமைகளைப் பற்றியதுமான தனது பேச்சை நீட்டித்தார்.
இன்றளவும் நாம் திகில் படங்களைப் பார்த்து பயந்துகொண்டுதான் இருக்கின்றோம்., ஆனால் ”The great train robbery”, என்ற படத்தில் இறுதியாக துப்பாக்கி சுடும் காட்சிவருகின்றது. அதனைப் பார்த்த பார்வையாளர்கள் பலர் தன்னைத்தான் சுடுகின்றனர், என்று நினைத்து தியேட்டரிலேயே அலறினார்கள். அதேதான் திரையில் இரயில் வண்டி வரும்பொழுதும் மக்கள் திரையரங்கைவிட்டு வெளியேறினார்கள். இங்கு அம்ஷன்குமார் குறிப்பிடுகின்ற விஷயங்களுக்கும் முதல்நாள் திரையிடப்பட்ட படத்திற்கும் ஏகபொருத்தம், காரணம் முதல் படமாக தாதாசாகேப்பால்கேயின் “ராஜாஅரிச்சந்திரா”விற்குப் பின்பாக”The great train robbery”படம் தான் திரையிடப்பட்டது.
மேலும், ”தாதாசாகேப்பால்கே ஒரு தீர்க்கதரிசி”, என்று அம்ஷன்குமார் தெரிவித்தார், காரணம் தான் மேற்கொண்டு வருகின்ற செயல் பிற்காலத்தில் போற்றப்படக்கூடிய மகத்தான துறையாக வளரப்போகிறதென்று உணர்ந்திருந்த காரணத்தினால்தான், படமெடுக்கின்ற பொழுதே அதனையே ஒரு ஆவணமாகவும் தனியாக எடுத்துவைத்திருக்கின்றார். ஆனால், கால சுழற்சியினாலும், தன்னுடைய பொறுப்பின்மையினாலும் ”ராஜாஅரிச்சந்திரா”, முழுப்படமும் தம்கைகளில்லை. இவர் பெயரால்தான் பால்கே விருதுகள் தரப்படுகின்றன. இதுதான் சினிமாவிற்காக தரப்படுகின்ற மிகப்பெரிய விருது, ஆனால் இதனை யாரும் இங்கு மதிப்பதில்லை. இங்கு சினிமாவில் உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் பத்மஸ்ரீ தான் மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கின்றனர்.
ஆர்.ஆர். சீனிவாசன்
இந்திய சினிமா நூற்றாண்டைக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இவ்விழாக்களைப் பயன்படுத்திக் கொண்டு நல்ல படங்களைப் பார்க்கலாம், அதுதான் இவ்விழாக்களைக் காட்டிலும் மகிழ்வுக்குரியதாக அமையும்.
இதற்குமுன்பு 1995ல் உலகசினிமாவினுடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதனை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் சிறப்பாக கொண்டாடினர். ஏனைய மாநிலத்தவரையைக் காட்டிலும், கேரளாவில் வெகுசிறப்பாக கொண்டாடினர். பதினைந்து நாட்களுக்கு தொடர்ச்சியான படங்கள், ஒரு நாளில் ஏழு அல்லது எட்டு படங்கள் திரையிட்டனர். சினிமாவின் ஆரம்ப கால படங்களாகிய லூமியர்பிரதர்ஸில் ஆரம்பித்து 1995ல் வெளியான படங்களில் முக்கியமான படங்கள் வரையில் தினமும் ஏழு அல்லது எட்டுபடங்கள் திரையிட்டனர். அங்கு திரையிடப்பட்ட படங்களில் எல்லா படங்களையும் தவறவிடாமல் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
நானும் நண்பர்களும் குறிப்பிட்ட பதினைந்து நாட்களுக்கு திரையரங்கத்தினுள்ளே தான் இருந்தோம். முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து படங்களும் மெளனப்படங்களாக மட்டுமே திரையிட்டனர். தியேட்டர்களில் உள்ள ஒலிப்பெருக்கி சாதனங்களுக்கு வேலையேயில்லை. இதனை வாய்ப்பாக அமைத்துக்கொண்டு உலகின் முக்கியமான அனைத்து படங்களையும் பார்த்தேன். ஒரு படம் முடிந்து இருக்கையை விட்டு எழுமுன்னர் அடுத்த படம் திரையிடப்படும். விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம், இல்லாதவர்கள் வெளியில் செல்லலாம். உண்மையிலேயே சினிமாவை விரும்புவன் படம்பார்ப்பான் என்பது அவர்களின் நம்பிக்கை.
எந்த படங்களையும் தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காக நண்பர்களெல்லாம் சேர்ந்து கொண்டு காய்கறிகளையெல்லாம் வாங்கி வைத்து சாப்பிட்டுக்கொண்டே படம் பார்த்தோம். வெளியில் சென்று சாப்பிடுவதற்கெல்லாம் நேரமிருக்காது. இன்னொரு முக்கியமான விஷயம் காலை நேரத்தில் 6 மணிக்கெல்லாம் திரையிடல் தொடங்கினாலும் திரையரங்கம் நிரம்பிய கூட்டம் இருக்கும். என்ன தான் சினிமாவில் அவர்களை நாம் விமர்சித்தாலும் காலையில் 6 மணிக்கு ‘தர்காவ்ஸ்கி’, படம் போட்டால் குறைந்தது 500 பேர்களாவது தியேட்டர்வாசலில் இருப்பார்கள். இப்படியாக தொடர்ச்சியான 120 படங்கள் பார்த்ததில் நிறைய தமிழ்படங்களின் மூலங்களெல்லாம் எங்கிருந்து வந்திருக்கின்றன என்பது தெரிகின்றது. இது என்னால் மறக்கமுடியாத சம்பவம்.
இப்படியான திரையிடலை முடித்து வந்த பின்னர், அப்பொழுது சினிமா நூறாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட புத்தகத்தை பார்த்தேன். அழகான தாள்களில் அச்சடிக்கப்பட்ட நூல். நூறுவருட சினிமாவையும் முழுமையாக தனக்குள் வைத்திருக்க கூடியதாக இருந்தது.
அதேபோல் 1968ல் அண்ணாவின் தலைமையில் நடைபெற்ற உலகத்தமிழ்மாநாடு சிறப்புமலர் வெளியிடப்பட்டிருக்கின்றது. அப்புத்தகத்தில் முதல் பக்கத்தில் மட்டும் ஒருநபருடைய புகைப்படம் இடம் பெற்றிருக்கின்றது. ஆனால் இன்று வரையிலும் அவர் யாரென்றுகூட தெரியவில்லை. அந்தப்புத்தகத்தை அச்சிட்டுத் தந்தவருடைய படம்மட்டும்தான் அப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றது. மற்ற யாருடைய புகைப்படமும் அதில் இடம்பெறவில்லை. அதேசமயம் அவ்வாட்சியில் முதல்அமைச்சராக இருந்த அண்ணாவின் படம் எங்குமே இடம்பெறவில்லை. அண்ணா அப்புத்தகத்தில் வாழ்த்துரை மட்டும் எழுதியிருக்கின்றார். மற்றபடி அவருடய படம் எங்குமே காணக்கிடைக்காது. முன்பு குறிப்பிட்டது போல அந்த முகம் மறந்து போன மலர்க்குழுத்தலைவரின் படம் மட்டுமே புத்தகத்தின் முதல்பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றது. அண்ணா போன்ற தலைவர்களும் நம்மாநிலத்தில் முதலமைச்சராக இருந்திருக்கின்றனர்.
அனைவருமே சினிமாக்கொண்டாட்டங்களுக்காக பத்துகோடி ரூபாய் கொடுத்ததற்காக கண்டனம் தெரிவித்தனர். என்னைப்பொறுத்தவரையில் சினிமாவைக் கொண்டாட மட்டுமே நூறுகோடிவரையில் செலவு செய்யலாம், தவறில்லை. ஆனால் அந்தப்பணமெல்லாம் எல்லாம் எப்படி செலவு செய்யப்பட்டிருக்கின்றன? என்பது தான் முக்கியம்.
இன்னும் மூன்று வருடங்கள் அதாவது 2016ல் நம் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவரவிருக்கின்றது. அவ்விழாவினை இதைக்காட்டிலும் சிறப்பாக கொண்டுவர இப்பொழுதிலிருந்தே உழைத்தால்தான் சிறப்பாக நடத்திக்காட்டமுடியும். யாருடைய உதவியும் இல்லாமலேயே இப்பொழுதிலிருந்தே மூன்றுவருடங்கள் வேலை செய்து வந்தோமேயானால் சிறப்பானதொரு விழாவினைக் கொண்டாடமுடியும்.
அதேசமயம் திரையிடலை பொறுத்தவரையில் சத்யஜித்ரேயின், “பதேர்பாஞ்சாலி”,படம் ஞாபகத்திற்கு வருகின்றது. ‘ரே’, இப்படத்தை மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் எடுத்திருக்கின்றார். கதாபாத்திரங்களின் மரணங்கள் துல்லியமாக இப்படங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இம்மாதிரியான படங்களைப் பார்க்கும் சமயத்தில்தான் ‘ரே’,எவ்வளவு வேதனையான கலைஞன் என்பது புரிகின்றது. நீங்கள் திரையிடப்படும்பொழுதும் இம்மாதிரியான மூன்று படங்களையும் தொடர்ச்சியாகவே திரையிடுங்கள். இம்மாதிரியான வாய்ப்பு மீண்டும் அமைவதுகடினம். இன்று ஒரு படமும், மற்றொருநாள் அடுத்த படமும் திரையிடுவதினால் எந்த விதமான பயன்களும் இல்லை, ஒருநாவலைப் படிப்பதைப்போலவே மூன்றுபாகங்களையும் ஒன்று சேர்த்தாற்போல பார்த்தால்தான் முழுமையான அனுபவம் கிடைக்கும். இந்த பதினைந்துநாள் விழாவினை முழுமையாகப் பார்த்ததினால்தான் முழுமையான சினிமாவரலாறு தெரிந்தது. இதனைவிட முக்கியமான விஷயம் என்னவெனில் இது அரசாங்கம் சேர்ந்து நடத்திய விழா அல்ல. ‘சூர்யா’, என்ற தனிநபர் திரைப்படசங்கம், பலபேர்களின் ஒத்துழைப்போடு சேர்ந்து நடத்தியவிழா.
இப்படியான விழாக்கள் எடுக்கப்படுவதற்கு சினிமாவிற்கு முழுத்தகுதியும் உண்டு. சாதிசமய ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக காணப்படுகின்ற நம்சமூகத்தில் இரயில்வண்டிகளும், சினிமாவும் இதனை ஓரளவேனும் முதலில் குறைத்தது எனலாம். சினிமா அனைவரையும் சமமாக அமரவைத்திருக்கின்றது.
இப்போது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வரவுகள் சினிமாவிற்கான வரப்பிரசாதமாக கூறுகின்றனர். ஆனால், இதே ‘கமலா’, தியேட்டரை எடுத்துக்கொள்ளலாம், பழைய கமலாதியேட்டரில் ஒரு ரிக்ஷாக்காரனோ, ஆட்டோக்காரனோ நம்மோடு பக்கத்தில் உட்கார்ந்திருப்பார். இன்னைக்கிருக்கின்ற கமலா தியேட்டரில் 120 ரூபாய் கொடுத்து தினக்கூலிகள் எவரும் உட்காரமாட்டார்கள்.
தமிழ் ஸ்டூடியோவின் திரையிடலில் பெரும்பாலும் பழையபடங்கள்தான் திரையிடப்படுகின்றன. ஆனால் இவைகள் தான் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. அண்ணாவின் ”ஓர்இரவு”, படத்திற்கும் மிஷ்கினின் ”ஓநாயும்ஆட்டுக்குட்டி”,யும் ஒரே மாதிரியான கதைக்களம் கொண்டவைகளாத்தான் இருக்கின்றன.
இங்கு ஆர்.ஆர்.சீனிவாசன் குறிப்பிடுகின்ற ஓர்இரவு திரைப்படமும் திரையிடல் பட்டியலில் இருக்கின்றது. இப்படத்தோடு அணியில் இருக்கின்ற அதிமுக்கியமான படங்களின் தனியியல்புகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
அந்தநாள்-பாடல்களே இடம்பெறாமல் வெளிவந்த திரைப்படம்
ஹரிதாஸ் - 18 சூப்பர்ஹிட் பாடல்களுடன் மூன்று தீபாவளிகளுக்கு தொடர்ந்து திரையரங்குகளில் ஓடியத் திரைப்படம் என்கிற சாதனை படைத்த திரைப்படம்.
மலைக்கள்ளன்- குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.
தோ பிகா ஜாமீன் (Do BighaZamin), இந்தியாவில் இருந்து முதல் முறையாக வெளிநாட்டு விருதை வென்ற திரைப்படம்
அவன் அமரன் - தமிழில் வெளிவந்த முதல் கம்யூனிசத் திரைப்படம்
ஒரே ஒரு கிராமத்திலே - தமிழ்நாடு அரசு முதன்முறையாக தடைவிதித்த திரைப்படம்
ஆர், ஆர். சீனிவாசனை தொடர்ந்து அறந்தைமணியன் இந்திய சினிமாவின் நூற்றாண்டைக் குறித்து தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.
அறந்தைமணியன்:
1948ல் ஆரம்பித்த திரைப்பட சங்கங்களின் எண்ணிக்கை 250யையும் ஒரு காலத்தில் தாண்டியது. பின்னர் தொலைக்காட்சி, குறுந்தகடுகளின் ராஜ்ஜியங்களுக்குப் பின்னர், அனைவரும் வீடுகளிலேயே அனைத்துப் படங்களையும் பார்த்துவிடுவதால் அம்மாதிரியான திரைப்படசங்கங்களின் செயல்பாடுகள் குறைந்து விட்டன. ஆனால், திரைப்பட சங்கங்களிலிருந்து வந்தவர்கள்தான் சினிமாவில் இன்றளவும் பேசப்படுகின்றனர் எனலாம். உதாரணமாக சத்யஜித்ரே, மிருணாள்சென், அடூர்கோபாலகிருஷ்ணன், ஷியாம்பெனகல், நிமாய்கோஷ், போன்றோர்.
இவ்வேளையில் சினிமாவின் தொடக்ககாலம் பற்றியவரலாறுகளைப் பேசுவதும் மிகப்பொருத்தமாக அமையும். சினிமாவின் தொடக்கம் அசையும் பொம்மை, அதாவது பொம்மலாட்டம் என்பதன் அடிப்படையில் தான் வந்தது.
ஓடும் குதிரையின் நான்கு கால்களும் ஒரேசமயம் தரையில் படாமலிருக்க முடியுமா? என்று ஏற்பட்ட சந்தேகம் தான் சினிமா தோன்றலுக்கான அடிப்படை. பின்னர் எடிசனின் பயாஸ்கோப் வழியாக ஒருவர் மட்டுமே காட்சிகளைப் பார்க்கும் படியாக இருந்தது, பின்னர் அனைவரும் இணைந்து ஒரே திரையில் படம்பார்க்கும் வண்ணம் அதனை லூமியர்பிரதர்ஸ் மேம்படுத்தினர். பலபடங்களைத் தயாரித்து உலகம் முழுவதும் அனுப்பி கவனம் பெற்றனர்.
நம் நாட்டில் தாதாசாகேப்பால்கே தொடர்ந்து ஏற்பட்ட திரைப்படத்தின் மீதான தாக்கத்தால் லண்டன் சென்று அதற்கான படிப்பு முடித்து வந்தார். ஆனால் இவர் பணவீக்கம் உடையவராக இருந்த காரணத்தினால் இவரால் தனியாக படம் எடுக்க முடியவில்லை. அதே சமயம் பால்கேயின் நண்பர் இவரை அழைத்து அழைத்து “உன்னால் படம் ஒழுங்காக எடுக்க முடியும் என்பதனை என்னால் எப்படி நம்பமுடியும்?” என்று கேட்டார் . இன்று வரையிலும் கூட தயாரிப்பாளர்கள் இயக்குனர்களைப் பார்த்து கேட்கின்ற கேள்வி இதுவாகத்தான் இருக்கின்றது. தயாரிப்பாளருக்கு இயக்குனரின் மேல் நம்பிக்கைவந்தால் தான் அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பிக்கமுடியும்.
பால்கே என்ன செய்தாரென்றால் உடனடியாக வீட்டிற்கு சென்று தொட்டியில் சிறு அவரை விதையை முளைக்கவைத்து பின்னர் துளிர்விட்டு செடியாக மாறுவதை படம்பிடித்து நண்பரிடம் காட்டி இதுதான் சினிமா என்று விளக்கினார். பின்னர் அந்நண்பர் உதவி செய்தாரெனினும் பாதி படத்திற்குப் பின்னர் அவரும் உதவி ஏதும் செய்யவில்லை. பின்னர் பால்கே தனது மனைவியின் நகையை அடகு வைத்து மீதி படத்தை முடித்திருக்கின்றார். ஆனால் நம்நாட்டவரின் அஜாக்கிரதையினால் படத்தின் கால் பங்கு மட்டுமே கிடைத்திருக்கின்றது. இதுமாதிரியான வரலாற்று சிறப்புமிக்க ஏராளமான படங்கள் அழிந்துவிட்டன . 1936 வரையிலும் வந்த படங்கள் நம்மிடம் இல்லை. 1937ல் வந்த அம்பிகாபதியும், சிந்தாமணியும்தான் நம்மிடம் இருக்கின்றது. முதல் 5 வருட தமிழ் படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பால்கேவிற்கு கதாநாயகி கிடைத்ததுதான் இதைவிட சுவாரஷ்யமான சம்பவம். பால்கே உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் பெண்மை கலந்த மென்மையுடன் ஒரு ஆடவன் அவர்களுக்கு உணவு பரிமாறவந்தான். அச்சமயத்தில் பால்கே அவனை அணுகி”படத்தில் நடிக்கின்றாயா?”,என்று கேட்டிருக்கின்றார். ஆனால் முன்பு எவ்விதமான படங்களையும் பார்த்து பழக்கமறியாத அவன் “நான் எந்தப்படமும் பார்த்ததில்லையே என்று சொல்லியிருக்கின்றான். பின்பு பால்கேயே அவனிடம் “நான் சொல்லித்தருகின்றேன் நடிக்கின்றாயா?” என்று கேட்டவுடன் அவன் அடுத்து கேட்ட கேள்வி, “எவ்வளவு சம்பளம்? “ என்பதுதான். பின்னர் உணவு விடுதியில் அவனது சம்பளத்தை விசாரித்து தினசரி பத்து ரூபாய் அவனிடம் சம்பளமாக பேசி அப்படத்தில் நடிக்கவைத்திருக்கின்றார் பால்கே.
மராத்தி சினிமாவில் ‘how harichandra made’,என்கிற பெயரில் ஒரு படமே எடுத்துள்ளனர், அதுவும் தேசியவிருது வென்றுள்ள படம். ஆனால், 1916ல் முதல் தமிழ்ப்படம்“கீசகவதம்”,எடுத்த நடராஜமுதலியாரைப் பற்றியாரும் மூச்சுகூட விடுவதில்லை. சிலர் இவ்வாறு நினைக்கவாய்ப்புண்டு , ’நடராஜமுதலியார்’, எடுத்தது மெளனப்படம் ஆயிற்றே! தமிழில் பேசினால் தானே தமிழ்ப்படம் என்று சொல்லமுடியும். அப்படிப்பார்த்தால் காளிதாஸும் முழுமையான தமிழ்ப்படம் அல்லவே. அதில் வருகின்ற கதாநாயகன், தெலுங்கு பேசுகின்றான், பாடல்கள் ஹிந்தியில் உள்ளன.
மேலும் அக்காலத்தில் படம்தான் மெளனமாக இருந்ததே தவிர ஒருவர் திரையரங்கினுள்ளே நாற்காலியின் மீதேறி நின்றுகொண்டு என்னென்ன நடக்கிறதென்று ரசிகர்களுக்கு விளக்கிக்கொண்டிருப்பார், இது மேலைநாடுகளில் அதிகமாக நடந்துள்ளது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக நேரடியாக ஒலியமைப்பும் சில அரங்குகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இங்கு நிலவிவருகின்ற மற்றொரு கருத்துநாடகத்திலிருந்து தான் சினிமாவந்தது என்பது. ஆனால் அப்படி அல்ல. பேசும்படம் ஆரம்பித்த காலகட்டத்தில் தான் நாடகக்காரர்கள் சினிமாவிற்குள் நுழைந்தனர். அதற்குமுன்பே சினிமா பலமாற்றங்களை அடைந்துள்ளது.
மேலும் அனைத்து கலைகளின் கலவைதான் சினிமா. சினிமாவுற்கென்றே தனியான அழகியலும், மொழியும் உண்டு.
பத்துகோடி கொடுத்து படமெடுத்து, அப்படத்திலிருந்து பத்துகோடி படம்பண்ணுவதுதான் இன்றைய சினிமாவின் நிலை. இது ஹாலிவுட்டில் இருந்து கவரப்பட்டிருக்கின்றது. அவர்களது தார்மீக மந்திரமே, “sell your films, do your stars” என்பதே.
தமிழ்ப் படங்களுக்கு உலக அங்கீகாரம் வரவேண்டுமென்பது பலரது கனவாக இன்றும் நிலவுகின்றது. ஆனால் நம் படங்களுக்கு இந்திய அங்கீகாரமே முழுக்ககிடையாது. இங்கு வருகின்ற படங்கள் எல்லாமே சுட்டபடங்கள்தான். இதன் நிலை மாறவேண்டுமானால், நிறைய இளைஞர்கள் தமிழ்சினிமாவிற்கு வரவேண்டும். இதன் நிலை மாறவேண்டும்.
என்று அறந்தைமணியன் தன்பேச்சை நிறைவு செய்து கொண்டதற்குப்பின்பாக தாதாசாகேப்பால்கேயினது “ராஜாஹரிச்சந்திரா” படமும், “The great train robbery” படமும் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டதோடு நிகழ்ச்சி தொடர்ந்தது அவரவர் சிந்தனைகளில்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |