இதழ்: 14,     சித்திரை - 2014 (April)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 9 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
'இனம்' பிரச்சினையும் படைப்புச் சுதந்திரமும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
திரைமொழி 9 - ராஜேஷ்
--------------------------------

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்

--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - தினேஷ் குமார்

--------------------------------

அப்பாஸ் கிராஸ்தமி - எம்.ரிஷான் ஷெரீப்

--------------------------------
பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 1 - தினேஷ் குமார்
--------------------------------
ஃபன்றி (Faundry) : சிரிதரன் துரைசுந்தரம்
--------------------------------
இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம - தினேஷ் குமார்
--------------------------------
 
   

   

 

 

ஃபன்றி (Faundry) : மராத்திய தலித் திரைப்படம்

- சிரிதரன் துரைசுந்தரம்

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஃபன்றி' எனும் மராத்தி மொழித்திரைப்படத்தை சென்னை உலகத் திரைப்பட விழாவில் எதிர்பார்த்து ஏமாந்த மாற்றுச் சினிமா ரசிகர்கள் அதிகம். வரலாறு முழுக்கவும் ஒரு சாராரால் கொண்டாடவும், பிற சாராரால் நிராகரிக்கவும்பட்ட அழகிய மிருகமான ஃபன்றியின் பெயரில் ஒரு மராட்டியப்படம். தலித் சிறுவன் ஒருவனின் விருப்பம், துக்கம், வேதனை, ஏமாற்றம் போன்ற வேறுபட்ட உணர்வுகளை மையமாக கொண்ட கருவே ஃபன்றி திரைப்படாக ஆகியிருக்கிறது.

வறண்ட மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் பின்னணியில் ஒரு அழகான காதல் கதை ஃபன்றி. வரலாற்றுத் தொகுப்பு மட்டுமல்ல சமுதாயத்தில் இன்னும் நிலைத்து இருக்கும் தீண்டாமையை சேர்த்து சித்தரிக்கும் ஒரு அழகான படம் ஃபன்றி. ஒடுக்கப்பட்ட தலித்(பட்டியல் இன மக்கள்)  குடும்பத்தில் பிறந்த சிறுவன் தான் விரும்பியதை செய்ய நினைப்பதையும், சமூகம் அவன் செய்ய விரும்பாததைக் கட்டாயப்படுத்தவதையும் இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே ஃபன்றி மற்றும் இரட்டை வால் குருவி என படிமங்களை மையமாக வைத்து திரைக்கதையை உருவாகியுள்ளார். இந்திய சமூகத்தின் கிராம வாழ்க்கை முறை அதனுள் இயங்கும் தீண்டாமையின் உண்மை முகத்தை அப்பட்டமாகக் காட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளெவின் வெளிப்படையான பார்வையை எவரும் பாராட்டியயே ஆக வேண்டும்.

ஃபன்றியை இந்துப் புராணங்கள் மகா விஷ்ணுவின் அவதாரம் என்று புகழ்கின்றன. ஒரு சக இந்துவை ஃபன்றி எனக் கூறி விட்டால் அதற்காக எந்த இந்தும் மகாவிஷ்ணுவுக்குப் ஃபன்றியை ஒப்பிட்டதாகப் பெருமைப்படுவது இல்லை. திருப்பி அடித்து விடுவான். ஃபன்றி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு ஃபன்றி விரும்பி சாப்பிடும் உணவையே படைக்கலாமா என்று கேட்டால், உடனே மதத்தைப் புண்படுத்துகிறார்கள் என்று ஓலமிடத் தொடங்கி விடுவார்கள். மேம்போக்கில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத உணவுப்பழக்கங்களின் உதாரணங்கள் நம் எல்லோருக்கும் தெரியும். சீனர்கள் நாய் மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். பசும்பாலை வெறுக்கிறார்கள். நமக்கோ பசும்பால் மிகவும் பிடிக்கும்; நாயைச் சாப்பிடமாட்டோம்.
பிரேசிலில் இருக்கும் சில பழங்குடியினர் எறும்புகளை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். மான் கறியைச் சாப்பிடமாட்டார்கள்.

வரலாற்று நோக்கில் ஃபன்றி எனும் புதிரைப் பாரப்போம். ஒரே மிருகத்தை சிலர் மிகவும் வெறுக்கவும் மற்றும் சிலர் மிகவும் விரும்பவும் காரணம் என்ன? ஃபன்றியை வெறுப்பவர்களைப் பற்றியதான ஃபன்றிப்புதிரின் ஒரு பகுதியைப் பற்றி யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் கிரிஸ்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும். பழங்காலத்திய ஹீப்ரூக்களின் கடவுள் சம்பந்தமேயில்லாமல,; ஜெனஸிஸ் பகுதியிலும், மறுபடி லெவிடிகஸ் பகுதியிலும் ஃபன்றியைச் சுத்தமற்ற மிருகம் எனவும், தொட்டாலோ சாப்பிட்டாலோ தீட்டு என்றும் அறிவிக்கிறார். 1500 வருடங்கள் கழித்து, அல்லா தனது தூதரான முகம்மதுவிடம் இஸ்லாமின் வழி நடப்பவர்களுக்கும் ஃபன்றி பற்றிய நிலைப்பாடு அதேதான் என்று தெரிவிக்கிறார். வேறெந்த மிருகத்தையும் விட, கிழங்குகளையும், தான்யங்களையும் அதிக தரமுள்ள கொழுப்பாகவும், புரோட்டானாகவும் மாற்ற வல்லதாக இருந்தாலும், ஃபன்றி என்ற இந்த மிருகம், லட்சக்கணக்கான யூதர்களுக்கும் கோடிக்கணக்கான முஸ்லீம்களுக்கும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.

அதிகம் தெரியாதது, அதிதீவிரமாக ஃபன்றியை விரும்புபவர்களது பாரம்பரியம். நியூ கினியாவிலும், பசிபிக் மெலனீசிய தீவுகளுமே உலகத்தின் ஃபன்றி விரும்புபவர்களது மையம். இங்கு கிராமங்களில் வாழ்கிற, தோட்டவேலையை முக்கியமான வேலையாகக் கொண்டிருக்கும் பழங்குடியினர்களைப் பொருத்தவரை ஃபன்றிகள் புனிதமான மிருகங்கள். முக்கியமான நிகழ்ச்சிகளான திருமணம், இறப்பு போன்ற தருணங்களில், இந்தப் ஃபன்றிகள் முன்னோர்களுக்குப் பலியிடப்பட்டு உண்ணப்படுகின்றன. இன்னும் பலவேறு பழங்குடி சமூகங்களில் ஃபன்றிகள் போரினை அறிவிக்கவும், அமைதியை அறிவிக்கவும் பலியிடப்படுகின்றன. இந்தப் பழங்குடியினர் தங்களது இறந்த மூதாதையர்கள் ஃபன்றி மாமிசத்துக்கு மிகவும் ஆசைப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். இறந்தவர்களிடமும் உயிரோடு இருப்பவர்களிடம் ஃபன்றி மாமிசம் வேண்டி அளவுகடந்த பசி உண்டாகிற நேரம் மாபெரும் விருந்துகளை வைத்து ஒரே நாளில் ஊரில் இருக்கும் எல்லாப் ஃபன்றிகளையும் கொன்று தின்றுவிடுகிறார்கள். பல நாட்கள், கிராமத்தினரும், அவர்களது விருந்தினர்களும் அளவுகடந்து ஃபன்றி மாமிசத்தைத் தின்று கொண்டே இருப்பார்கள். அவர்களால் செரிக்க முடியாததை வாந்தி எடுத்துக் கொட்டி விட்டு, இன்னும் இருக்கும் மாமிசத்தைத் தின்ன வயிற்றில் இடம் தேடுவார்கள். எல்லாம் முடிந்த பின்னர் உயிரோடு இருக்கும் ஃபன்றிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிடும். மீண்டும் இந்தப் ஃபன்றிகளை வளர்த்து முன்னைப்போல எண்ணிக்கையுள்ள ஃபன்றிக் கூட்டத்தை உருவாக்க பல வருடங்கள் பிடிக்கும். அதே எண்ணிக்கையுள்ள ஃபன்றிகள் உருவானதும், இன்னொரு விருந்துக் கொண்டாட்டம் போட விஷயங்கள் தயார் செய்யப்படும். இதே போல இந்த வினோதமான வீணடிப்புச் சுழற்சி போய்க் கொண்டே இருக்கிறது.

யூத மற்றும் இஸ்லாமியப் ஃபன்றி வெறுப்பாளர்களிடமிருந்து பிரச்னையை ஆரம்பிப்போம். யெஹ்வா மற்றும் அல்லா போன்ற உயர்ந்த, மேலான கடவுள்கள், உலகத்தின் பல பகுதிகளில் மிகவும் விரும்பிச் சாப்பிடப்படும் ஒரு தொந்தரவும் செய்யாத, பார்த்தாலே சிரிப்பு வரவைக்கும் ஒரு மிருகத்தை, ஏன் வெறுக்க வேண்டும்? பைபிள் மற்றும் குரான் சொல்லும் வெறுப்பை ஒப்புக்கொண்ட பல அறிஞர்கள் இதற்குப் பலவித விளக்கங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

மறுமலர்ச்சிக்கு யுகத்திற்கு முன்பு, மிகவும் பிரபலமாக இருந்த காரணம் ஃபன்றி என்ற இந்த மிருகம் மிகவும் அசுத்தமானது என்பதும், இது தனது மூத்திரத்தில் புரள்வதும், மலத்தைச் சாப்பிடுவதும் இது அசுத்தமானது என்பதற்கு உதாரணம் என்பதும் சொல்லப்பட்டது. வெளிப்புற அசுத்தத்தையும், மத ரீதியான வெறுப்பையும் இணைப்பது சில முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பசுவும் தனது மூத்திரத்திலும் மலத்திலும் விளையாடுகிறது. பசித்த பசுக்கள் மனித மலத்தை ஆர்வமாகச் சாப்பிடும். நாய்களும், கோழிகளும் இதே வேலையை யாரையும் புண்படுத்தாமல் செய்கின்றன. சுத்தமான சூழ்நிலைகளில் வளர்க்கப்படும் ஃபன்றிகள் நல்ல மனிதத்தோழர்கள் என்பது பழங்காலத்து மனிதர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அழகியல் நோக்கில் நாம் சுத்தம் பற்றிய மதிப்பீட்டைக் கொண்டோமானால், வெட்டுக்கிளிகளையும் பூச்சிகளையும் பைபிள் சுத்தம் என்று வரையறுப்பதை முரண்பாடாகப் பார்க்கலாம். பூச்சிகள், ஃபன்றிகளைவிட அழகியல் நோக்கில் முழுமையானவை என்பது இந்த மத நம்பிக்கைக்கு ஏற்றம் தருவது அல்ல.

மறுமலர்ச்சி யுகத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் யூத மதகுருக்கள் இந்த முரண்பாடுகளை உணர்ந்திருந்தார்கள். 12 ஆம் நூற்றாண்டில் எகிப்தில், கெய்ரோவில், அரசர் ஸலாதீன் அவர்களது அரசவை மருத்துவராக இருந்த மோஸஸ் மைமோனிடெஸ் அவர்களுக்கே, ஃபன்றியை வெறுக்கும் யூத, முஸ்லீம் கொள்கை பற்றி முதன்முதலாக இயற்கை ரீதியான விளக்கம் அளித்ததற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். பொதுமக்களின் சுகாதாரம் வேண்டித்தான் கடவுள் ஃபன்றி மாமிசத்தைச் சாப்பிடக்கூடாது என்று கடவுள் ஆணையிட்டிருக்கிறார் என்று மைமோனிடெஸ் கூறினார். இந்த யூத மதகுரு ராபை ஃபன்றியின் மாமிசம் மனித உடலுக்குக் கெடுதி என்று எழுதினார். மைமோனிடெஸ் இதற்கான மருத்துவ காரணங்களைச் சொல்லவில்லை. ஆனால் அவர் அரசரின் மருத்துவர். அவரது ஆலோசனை வெகுவாக மதிக்கப்பட்டது.

'ஃபன்றி' திரைப்படம் குறித்த கவிதையே இந்தப் படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது. கவிதையில் வரும் குருவிதான் ஜப்யா என்கிற மாணவன்.

வறுமையின் கோரப்பிடியில் சிதைந்த ஜப்யா என்கிற மாணவனுக்கு தனது குடும்பத்தில் சகோதரியின் வரதட்சணை மற்றும் திருமணச் செலவிற்காக தந்தை கச்சர்யாவுடன் சேர்ந்து பல்வேறு தொழில் செய்யவேண்டிய நிர்பந்தம். கடைசியில் தனக்குப் பிடிக்காத செயலான ஃபன்றி பிடிக்கப்போய், இரட்டை வால் கறுப்புக்குருவியை பிடிக்கா முடியாமல் துயருறுகிறான். எப்போதும் குடும்பத்தில் வறுமை. கௌரவத்துடன் வாழ்வதற்கு அவன் தனது கூட்டத்துடன் கலந்து வாழ வேண்டியுள்ளது. அவன் தனது குடும்பத்துடன் வாழ என்று தான் விரும்பாத வேலைகளைச் செய்ய மறுக்கிறான். அவனது அதிர்ஷ்டம் மாற்றுடையாக ஒரு ஜோடி உடுப்பு வாங்க பணத்தைச் சேமிக்க முடியும் என்று நம்புகிறான.; கருப்புக்குருவியை வேட்டையாட நேரம் செலவிடுகிறான். என்னதான் இலவசப் புத்தகம், இலவசக் கல்வியை அரசு கொடுத்தாலும், படிக்கும் சூழ்நிலை பல தலித் மக்களின் குடும்பத்தில் உருவாகவில்லை. சமூகமும் அதனை அனுமதிக்க மறுக்கிறது.

சிதைந்த கனவை தேடி செல்லும்
சிறகுடைந்த சிட்டு குருவி
மனதில் இருக்கும் சுமையை
சலிப்பின்றி சுமக்கும் சின்ன குருவி
தேடிச் சென்ற திசை எங்கும்
கண்ட உறவுகள் பல கோடி
உறவாடிய அத்தனை உறவுகளும் பிரிந்தன
அந்த நொடி தனி மரமாய்த் தேடி அலைகையில் கடந்த சவால்கள் எண்ணிலடங்கா
கடந்த பாதையை நினைத்துப் பார்க்கையில் கண்ணீரத்துளிகள் கணக்கிலடங்கா
எப்போது நிறைவேரும் இதன் ஆசைகள்?
எப்போது மறையும் இதன் தழும்புகள்?
இலக்கில்லாமல் அலைவதாய் ஒர் உணர்வு
இலக்கை அடையாமல் இருப்பதா என்றொரு துடிப்பு பாசத்தின் சங்கிலியால் பூட்டப்பட்ட
ஒரு சின்னஞ்சிறு குருவியின் அலறல்
இடைவிடாது போராடும் ஒரு இதயமிழந்த
உயிர்க் குருவி

'ஃபன்றி' திரைக்கதையில் ஒரு காட்சியில் ஓய்வு நேரங்களிலும், பள்ளிக்குச் செல்லும்போதும் சைக்கிள் கடையில் சிறுநேரம் அமர்ந்து தான் விரும்பும் பள்ளி மாணவியான ஷாலுவைப் பார்ப்பது ஜப்யாவின் வழக்கம். அந்தச்சமயம் கடையின் அருகில் இருக்கும் உயர்சாதி வீட்டுக்காரர் ஒருவர் தனது வீட்டு முகப்புக் கிடங்கில் ஒரு ஃபன்றிக்குட்டி விழுந்துவிட, அதனைத் தூக்கிவிட இச்சிறுவனை அழைக்க, அதை இவன் செய்யமால் மறுக்கிறான். வீட்டுக்காரன் சிறுவனின் தந்தையிடம் 'நான் சொல்லி உன் மகன் மறுத்துவிட்டான். ஏன் அவன் செய்ய மாட்டானா என்னடா?' என்று திமிருடன் கேட்கும் காட்சி கிராமிய சமூகம் தலித்துகளைச் சில காரியங்களுக்கே கட்டாயப்படுத்துகிறது என்பதைக்காட்டுகிறது. தலித்துகள் இழிவான தொழிலைச் செய்வதால்தான் அவர்கள் முன்னேறாமல் இருக்கிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள். அவர்கள் விரும்பி அதனைச் செய்யவில்லை. சமூகம் அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது.

மற்றொரு காட்சியில் பள்ளி மைதானத்தில் மாணவிகள் விளையாடும் சமயத்தில், ஒரு மாணவியைப் ஃபன்றிக் குட்டியொன்று உரசிவிட்டதால் அந்த மாணவி வகுப்பு ஆசிரியரிடம் தான் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று கேட்கும்போது ஆசிரியர்களே அதை அனுமதிக்கிறார்கள். பள்ளியின் சுவற்றில் புரட்சியாளர் அம்பேத்கர், ஜோதிபாய் புலே, சாவித்திரி பாய்புலே போன்றவர்களின் படம் பாடமாக இல்லாமல் இருப்பதாலேயே ஆசிரியர்களும் தீண்டாமையை எதிர்க்கமால் துணை போகிறனர். மாணவியின் தாயார் பிற்பாடு மாணவிக்குத் தீட்டு கழிக்கும்காட்சி கிராமத்தின் தீண்டாமையைப் பிரிதிபலிக்கிறது.

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான காதலைக் கருவாகக் கொண்ட பெரும்பான்மையான படங்களில் அன்று தொடங்கிய 'பாரதி கண்ணமா' முதல் இன்றைய 'பருத்தி வீரன்', 'ரம்மி' படம் வரை ஒடுக்கப்பட்ட காதலன் ஆதிக்க சாதிப்பெண்ணை மணக்க திரைப்படம் அனுமதிப்பது கிடையாது. அதுபோல மராத்தியத் திரைப்படங்களிலும் இவர்கள் காதல் செய்ய அனுமதிப்பது கிடையாது. இந்தப் படத்திலும் ஒரு தலைக் காதல்தான். தமிழ் சினிமாவில் விடலைகளின் காதலை வைத்துப் பல படங்கள் வந்துள்ளன. பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்கள் காதலித்து, பின் ஓடிப்போய்க் கல்யாணம் செய்வது கொள்வதைக் காண்பித்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை இப்படங்கள் சீரழித்திருக்கின்றன. கல்லூரிக் காதலையாவது ஓரளவுக்கு நாம் ஏற்றுக் கொள்ளலாம். பள்ளிக் காதலை சினிமாவில் பார்க்கும் போதெல்லாம் எமக்குக் கோபமே மிஞ்சும். அதே பாணி போல இந்த படமும் இருந்து விடுமோ என்கிற எனது எதிர்ப்பார்ப்புச் படம் நகரும்போது சுக்குநூறாக ஆகிப்போனது.

பள்ளிக் காலத்தில் காதல் வருவதே இல்லை என்று சொல்லவில்லை. அது கன்றுக்காதல். காதல் என்றே தெரியாமல் ஒரு அலை அடித்து விட்டு போய் விடும்; அவ்வளவு தான். இந்தப் படத்தில் அப்படி அல்ல. துளி ஆபாசம் கிடையாது. இரட்டை அர்த்த வசனம் கிடையாது. சிறுவனின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. நண்பனாக வரும் மற்றொரு சிறுவனின் கதாபாத்திரமும், அவனது குறும்பும் நடிப்பும் அற்புதம்.

காதல் முதலில் முக அழகையும் நிறத்தையும் வைத்துத்தான் வருகிறது. பின்னர் காதல் நிலைத்திருப்பது அன்பினால் மட்டுமே. சிறுவன் கூட தனது காதலைச் சொல்ல நினைத்து மனதின் உள்ளே பேசிக்கொள்வதைப் பாருங்கள் : 'உன்னை நான் அதிகமாக நேசிக்கிறேன், உன் தந்தையை விட, உன் தாயை விட, இந்த உலகத்தில் நான்தான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன், ஒரு வேளை என்னை நீ விரும்பவில்லை என்றால் உன் தந்தையிடம் சொல்லி விடாதே' எனும் அவன், 'என்னை விரும்பினால் நீ இரட்டைச்சடை போட்டுக்கொண்டு வா, நான் புரிந்துக்கொள்கிறேன்' என்று சொல்லும்போது அவன் நமது மனத்தை அள்ளிச் சென்று விடுகிறான்.

அவள் பார்வையைக் கவர திருவிழாவில் ஆட்டம் போடும்போது படத்தைப் பார்க்கும் நம்மையும் அவன் ஆட வைக்கிறான். தன்னுடன் படிக்கும் உயர் சாதி மாணவன் இவனை ஆட விடமால் தடுக்க, சிறுவனின் சைக்கிள்கடை முதலாளி இவனைத் தோளில் தூக்கி ஆட வைக்க, சற்று நேரம்தான் அவனது இன்பம் மிஞ்சுகிறது. கொஞ்ச நேரத்தில் சிறுவனின் தந்தை சகோதரியின் திருமணச் செலவுக்காக திருவிழாவில் விளக்குப் பிடிக்க இவனையும் சேர்க்க இவனது ஆட்டம் நிற்கிறது. அவனும் அழுகிறான். நம்மையும் அழவைக்கிறான். இங்கு மட்டும் அவன் நம்மை அழவைக்க வில்லை. ஜீன்ஸ் போடுவது அவனது ஆசை. அதற்காக இவனும் நண்பனும் ஐஸ் விற்கச் செல்வதும், ஒரு நாள் இவன் சைக்கிள் ஒரு கடையின் பக்கம் நிற்க, எதிர்பார்த்த விதமாக இரக்கமற்ற டெம்போகாரனால் அவன் சைக்கிள் நொறுக்கப்பட தான் விரும்பும் பெண்ணின் முன்னால் ஜீன்ஸ் மற்றும் புதிய ஆடைகளை ஆணிய வேண்டும் என்கிற அவனது ஆசையும் நொறுங்கிப் போகிறது. அவனது ஆசை கனவில் மட்டுமே நிறைவேறுகிறது. பார்த்துக் கொண்டிருப்பது படம் என்பதும் மறந்து நம்மையும் அழ வைத்து விடுகிறது இந்தக் காட்சி.

மற்றவர்கள் போல தான் இருக்க நினைப்பதும், பிறருடன் சேர்ந்து வாழ்வதும் குற்றமா? அவன் விரும்பியதைச் செய்ய நினைப்பது அவன் குற்றமா? சமூகம் அவன் செய்ய விரும்பாததை கட்டாயப்படுத்துகிறது. கடைசிவரை தனது விருப்பத்தை சிறுவன் தான் விரும்பும் பெண்ணிடம் அவன் சொல்லமாலே இருக்கிறான். அவன் விருப்பும் காதலியுடன் ஒரு ரம்மியமான பாடல், இரட்டைவால் கறுப்புக்குருவி பிடிப்பது, ஜீன்ஸ் அணிவது எல்லாம் அவனது கனவிலே நடக்கிறது. அதுவும் கொஞ்ச நேரத்தில் தந்தையால் தூக்கத்திலேயே கலைகிறது.

சிறுவன் வெறுமேன பெண்ணின் பின்னால் அலைய மட்டும் செய்யவில்லை. தாய் அவனைக் கூலிவேலைக்கு அழைக்கும் போது நான் வர மாட்டேன் என்று சொல்வது மட்டும் இல்லாமல், தாயிடம் 'நானும் பணம் தருகிறேன்' என்று சொல்கிறான். குடும்பச் சூழலை அவன் அறிந்து இருக்கிறான். சிறுவனின் சகோதரியை பெண் பார்க்கும் காட்சி அசலாக இன்னும் கிராமத்தில் நடைபெறும் சம்பவத்தைக் காட்டுகிறது. பெண்ணின் விரும்பம் இல்லாமல் திருமண ஒப்பந்தம் தாயின் தலையீடும் கிடையாது.

கதையின் இறுதிக் காட்சிகளில் பள்ளி செல்லாமல் ஃபன்றி பிடிக்க ஜப்யாவும்னும் அவனது குடும்பமும் பங்கு பெறும்போது, தான் விரும்பம் பெண் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ஜப்யா ஒழிந்து நிற்கும் காட்சி நம் நெஞ்சை அறுக்கும் காட்சி.

ஃபன்றி பிடிக்கக் கொக்கிநீட்டும் நேரத்தில், ஜனகனமன பாடல் ஒலிக்கிறது. இந்தியா போன்ற நாட்டின் அரசுகளும், அதிகார வர்க்கமும், சமூகமும்தான் தலித்மக்களை இந்தச் சமூக இழிவுக்குக் கொண்டு சென்றது. படித்த ஆசிரியர்கள் மற்றும் உயர் சாதி இளைஞர்கள்தான் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதும் எங்கு வெளிச்சம் ஆகியுள்ளது. மூத்த தலைமுறையினர் தீண்டாமையை எதிர்க்க இயலாத அவலத்தையும், இந்தத் தலைமுறையினர் அவற்றை எதிர்கொண்டு கேள்விகள் எழுப்புவதும், அப்படி எதிர்கொண்டால் வன்முறை அவர்கள் மீது ஏவப்படும்; என்கிற சமூகப்பார்வை அல்லது 'சூத்ரா' எனும் இன்னொரு இந்தி  மொழிப்படத்தின் இறுதிக்காட்சியில் வருவது போல எதிர்த்தால் உங்களுக்கு அழிவுதான் என்கிற காட்சி அமைப்பு என இல்லாமல் ஃபன்றி படத்தை முடித்து இருப்பது வரவேற்கத்தக்க காட்சிப்படுத்தலாக நிமிர்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் குறித்து  பேசும் படித்த ஊர் இளைஞர்கள் தீண்டாமை என்பது  ஒரு பெரும் குற்றம் என்பதை தெரியமால் இருப்பதும், திருவிழாவின் போது ஃபன்றி குறுக்க வந்ததால் சாமி அதனால் திட்டு பட்டு விட்டது என ஊரில் இருக்கும் ஃபன்றிகளை கொல்ல ஜப்யா தந்தையிடம் சொல்வது மூடநம்பிக்கை கடைபிடிக்கும் ஊரை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.  சக மாணவர்களின் கேலி, வன்சொல் ஜப்யாவை மட்டுமல்ல படம் பார்க்கும் நம்மையும் கூனிக்குறுகச் செய்கிறது.

ஒரு கட்டத்தில் ஊர் இளைஞர்களின் எல்லை மீறிய கேலியால், வன்சொல்லால், பொறுமை இழந்து அதை எதிர்கொள்ள ஜப்யா கற்களைத் தூக்கிஎறிவதும், அடிவாங்கிய ஊர் இளைஞர்கள் ஜப்யாவைத் திருப்பி அடிக்கவர, இவனது மூத்த சகோதரி இவனைத் தடுக்க, என்ன நடக்கப்போகிறதோ என நாம் யோசிக்க, சிறுவன் ஜப்யா மறுபடியும் கோபத்துடன் உறுதியுடன் கற்களை ஏறிய, படம் தீண்டாமை எதிர்ப்புடன் முடிகிறது

கடைசிவரை சக மாணவியான தனது காதலி இவனிடம் பேசுவது கூடக் கிடையாது. கடைசிக் காட்சியில் சிறுவன் ஃபன்றி பிடிப்பதை சக மாணவர்கள் பார்த்து கேலி செய்யும் போது, அவளும் அவர்களுடன் சேர்ந்து ரசிக்கும்போது, இவளை இவன் ஏன் விரும்பினான் எனும் கேள்வி நமக்கு வருகிறது. விடை தெரியாமல் நம்மிடம் புதைந்து கிடைக்கிற பதில் மௌனம் கலந்த புன்னகையாக இருக்க முடியாது.

*

கட்டுரையாளர் சிரிதரன் துரைசுந்தரம் மும்பை விழித்தெழு இயக்கத்தின் செயல்பாட்டாளர்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </