திரைமொழி - 11
அத்தியாயம் 5 – Production Design
film directing
shot by shot
visualizing from concept to screen
Steven D. Katz தமிழில்: ராஜேஷ் |
Phase Two: Production Design
சென்ற கட்டுரையில் Production Cycle என்பதன் ஐந்து துணைப்பிரிவுகளைப் பற்றிப் பார்த்தோம். அவற்றில் முதல் பிரிவான திரைக்கதை எழுதுதல் (Script Writing) என்பதை முழுதும் பார்த்தோம். இனி, இரண்டாவது துணைப்பிரிவான Production Design என்பதைக் கவனிக்கத் துவங்கலாம்.
திரைக்கதை என்பது ’கதையில் என்ன நடக்கிறது?’ என்ற கேள்விக்கான விடையாக இருந்தாலும், ‘கதையில் நடப்பவை எங்கே நடக்கின்றன? எப்படி நடக்கின்றன?’ என்ற கேள்விகள் Production Design என்ற பதத்தாலேயே விளக்கப்படுகின்றன. திரைக்கதை எழுதும்போது இயக்குநரும் திரைக்கதையாசிரியரும் ஆராய்ந்து பெற்ற விஷுவல் விஷயங்கள் Production Design என்ற பிரிவுக்கான கச்சாப்பொருளாக மாறுகின்றன. அவற்றை வைத்துக்கொண்டு நிஜத்தில் படக்காட்சிகளின் சுற்றுப்புறங்களையும் உணர்வுகளையும் கட்டமைக்கும் விதத்தில் Production Design என்ற பிரிவு செயல்படுகிறது.
ஒரு இயக்குநர் தானாகவே சொந்தமாக இதில் ஈடுபடுகிறாரா அல்லது தனியாக ஒரு ப்ரொடக்ஷன் டிஸைனரை வைத்துக்கொண்டு திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடுவாரா? படத்தின் தயாரிப்புச் செலவு மிகமிகக் குறைவாக இருந்தால், தானாகவே ஒரு இயக்குநர் இதில் ஈடுபடக்கூடும். மாறாக ஒரு பிரபல ஸ்டுடியோ தயாரித்தாலோ அல்லது படத்தின் தயாரிப்புச் செலவு அதிகமாக இருந்தாலோ தனியாக ஒரு ப்ரொடக்ஷன் டிஸைனரை இயக்குநர் அமர்த்தக்கூடும். படத்தின் உருவாக்கத்திற்கு முன்னர் இந்தப் ப்ரொடக்ஷன் டிஸைனருடனான சந்திப்புகளில் ஒவ்வொரு காட்சிக்கான தேவையையும் இயக்குநர் விளக்கி, அதன்மூலம் படத்தில் என்னென்ன தேவை? அவை எப்படி இருக்கவேண்டும்? என்பதையெல்லாம் இயக்குநர் தெளிவுபடுத்துவார். ஒருவேளை இயக்குநர் படத்துக்கான ஆய்வை நன்றாகவும் தெளிவாகவும் செய்திருந்தார் என்றால் இந்தக் கட்டத்தில் என்னன்ன தேவை என்பதை மிக மிக எளிமையாகவும், அதேசமயம் உறுதியாகவும் விளக்க முடியும்.
Script Breakdown
திரைப்படம் உருவாக்குபவர்கள் பொதுவாகப் படப்பிடிப்பை முடிந்தவரை குறைந்த செலவில் எப்படி நடத்தலாம் என்பதற்காக எண்ணற்ற யோசனைகளில் அதிகநேரம் செலவுசெய்பவர்களாகவே இருப்பார்கள். எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் பட்ஜெட் மீட்டர், இவர்களின் சிந்தனையை ஒரே பாதையிலேயே செலுத்திக்கொண்டிருக்கும். ஆனால் சில சமயங்களில் பட்ஜெட் என்பது திரைப்படத்தை முடிந்தவரை ஆக்கபூர்வமாக, படைப்புத்திறன் மிகுந்து உருவாக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. எப்படியென்றால், சில சமயங்களில் தயாரிப்பாளர், இயக்குநர், ப்ரொடக்ஷன் டிஸைனர் ஆகிய மூவரும் ஒன்றிணைந்து, சில காட்சிகளுக்காக பட்ஜெட்டை மீறினாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்துச் செயல்படுவது வழக்கம். இதனால் திரைப்படம் அவசியம் நன்றாக எடுக்கப்படும். ஆனால் இந்த முடிவுகளில் பல சமயங்களில் வலி நிறைந்தவையாகவே இருக்கின்றன.
ப்ரிப்ரொடக்ஷன் என்ற, படப்பிடிப்புக்கு முந்தைய வேலைகளில் துணை இயக்குநரும் ப்ரொடக்ஷன் மேனேஜரும் திரைக்கதையை ஒவ்வொரு காட்சியாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு காட்சிக்கும் என்னென்ன பட்ஜெட் மற்றும் பிற தேவைகள் இருக்கின்றன என்பதை ஆராய்வது வழக்கம். இந்த வேலையின்போது ஒவ்வொரு காட்சியையும் எடுத்துமுடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? எவ்வளவும் பணம் தேவைப்படும்? போன்ற முக்கியமான இரண்டு கேள்விகளுக்கான விடைகள் இதனால் தெளிவாகின்றன. இருப்பினும் சில சமயங்களில் இன்னும் ஆழமாக இவைகள் விவாதிக்கப்படும்போது இந்த பதில்கள் மாறக்கூடும். ஆனால் மாறாமல் இருப்பது பெரும்பாலும் பட்ஜெட்தான். ஒருவேளை ஒரு காட்சிக்கான பணம் அதிகமானால், இன்னொரு காட்சியில் அதைக் குறைத்துக்கொள்வதன் மூலம் இந்த பட்ஜெட் சமன்படுகிறது.
திரைக்கதையைப் பிரித்துக்கொள்வது மற்றும் படப்பிடிப்புக்கான காலத்தைக் கணக்கிடுவது ஆகியவை சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த விஷுவலைஸேஷனுக்கான சிறந்த வழிமுறைகள் (படத்தின் ஆரம்பத்திலேயே எப்படிப்பட்ட படமாக அது வரவேண்டும் என்று முன்கூட்டியே யோசித்துப் பார்ப்பது). பெரும்பாலுமே திரைப்படங்கள் கண்டினியூட்டி என்ற காட்சித் தொடர்ச்சி சரியாக வரும்படியே எடுக்கப்படுகின்றன. காரணம் பட்ஜெட்டை சரியாக உபயோகப்படுத்துதலே. இந்த விதிதான் திரைக்கதையைப் பிரித்துக்கொள்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. "நடிகர்கள், செட்கள், லொகேஷன்கள் மற்றும் பிற விஷயங்கள் ஆகியவற்றை எந்த நாளிலும் முடிந்தவரை நன்றாக உபயோகித்துக்கொள்ளவேண்டும்" என்ற முக்கியமான விஷயத்தை மறந்துவிடமுடியாது. ஹாலிவுட்டில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டபோது நடிகர்களுக்கு நாட்கள் கணக்கிலேயே சம்பளம் அளிக்கப்பட்டுவந்ததால், ஒரு நாளில் மூன்றே வரிகள் வசனம் பேச நடிகர்களை அழைத்துவருவதுபோன்ற முட்டாள்தனங்கள் தவிர்க்கப்பட்டே வந்தன.
இதனால் நடிகர்கள் இடம்பெறும் காட்சிகளின் பெரும்பாலான வசனங்களை ஒரே நாளில் முடிந்தமட்டும் நடித்துக்கொடுப்பது சகஜம். இதனால் அந்தக் காட்சியில் இடம்பெறும் பிற நடிகர்கள் இன்னொரு நாளில் அவர்களின் பங்கை நடித்துக்கொடுப்பர். மொத்தமாகக் கவனித்தால், நடிகர்களின் தினசரி பங்களிப்பு முக்கியம் என்பதால் சமயத்தில் திரைப்படத்தின் முடிவை முதலில் எடுப்பவர்களும் உண்டு. இப்படி மாற்றி மாற்றி எடுப்பதால், திரைக்கதை மட்டுமே இந்தப் படத்தின் முதலிலிருந்து இந்தக் காட்சி எங்கு வருகிறது? போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடையளிக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு திரைக்கதை என்பது காட்சிகளை மையப்படுத்தியே எழுதப்படுவதால், தினசரி அந்தக் காட்சிகளுக்குள் இருக்கும் தனிப்பட்ட ஷாட்கள் எப்படியெல்லாம் எடுக்கப்படுகின்றன என்பதை அது சொல்லாது. இதனால் திரைக்கதை மேற்பார்வையாளர்தான் தெளிவாக ஒவ்வொரு காட்சியின் ஷாட்களைக் கணக்கில் வைத்துக்கொண்டு தெளிவாகப் பதிவு செய்துவைப்பார். இது குழப்பங்களைத் தவிர்க்கும். ஆனால் இப்படிச் செய்வதால் ஏற்கெனவே எடுக்கப்பட்ட காட்சிகள்தான் தெளிவாகப் பதிவு செய்யப்படுகின்றன. இனி எடுக்கப்படும் காட்சிகளுக்கு என்ன செய்வது? இதற்குத்தான் ஸ்டோரிபோர்ட்களோ அல்லது இன்னபிற விஷுவலைஸேஷன் வழிமுறைகளோ பயன்படுகின்றன. ஒருவேளை காட்சிகளைத் தெளிவாக விளக்க இவை பயன்பட்டாலுமே, ஒரு இயக்குநருக்கு அந்தக் காட்சியை முழுதாக யோசித்துப் பார்ப்பதில் முக்கியமானவையாக இவை விளங்குகின்றன.
Pictorial Design
இப்படிப்பட்ட விஷுவல் டிஸைன்கள் மொத்தம் இரண்டு வகைப்படுகின்றன. Pictorial மற்றும் Sequential. Pictorial என்பது படங்கள் சார்ந்து காட்சிகளை விளக்கும் வழிமுறை. செட்களை டிஸைன் செய்தல், காஸ்ட்யூம்கள், ப்ராப்பர்ட்டிகள், ஒப்பனை மற்றும் ஒரு லொகேஷனில் கதைக்கேற்ற விஷயங்களை உருவாக்க எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அதுவெல்லாம் இந்தப் படங்கள் சார்ந்து காட்சிகளை விளக்கும் Pictorial design என்பதில் அடங்குகின்றன. ஒரு திரைப்படத்தின் சுற்றுப்புறச் சூழல் இது. பொதுவாக நாடக உருவாக்கம் மற்றும் கட்டிட நிர்மாணிப்புக் கலை ஆகியற்றை ஒத்தே இருக்கிறது. ஒரு கலை இயக்குநரின் நேரடி மேற்பார்வைக்குக் கீழ் வருகிறது. மிகவும் கூர்த்த கவனம் தேவைப்படும் கலைப்பிரிவான இந்த Pictorial Design என்பது தொடர்ச்சியான – வரிசையான கலைத்திறன்கள் தேவைப்படும் எழுத்தாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியவர்களிடமிருந்து வேறுபட்டது.
ஒவ்வொரு திரைப்படமும் அதில் வேலை செய்பவர்களின் பிரத்யேக வழிமுறைகளால்தான் உருவாகிறது. இயக்குநரும் தயாரிப்பாளரும்தான் ஒவ்வொரு முறையும் எப்படி அனைவரும் சேர்ந்து வேலைசெய்யவேண்டும் என்பதையும் வேலைகளைப் பிரித்துக்கொள்வதையும் விளக்குகின்றனர். இயக்குநருக்குப் பெரும்பாலும் Pictorial Design என்பதன் தேவைகள் இருக்கும். கலை இயக்குநர் என்பவர் பெரும்பாலும் ப்ரொடக்ஷன் டிஸைனர் என்ற பெரிய குடையின்கீழேதான் இயங்குவது வழக்கம். சில சமயங்களில் ப்ரொடக்ஷன் டிஸைனருன் சேர்ந்தும் இயங்குவது உண்டு. எனவே, பெரும்பாலும் ஒரு திரைப்படம் எப்படி முன்னேறவேண்டும் என்பது இயக்குநர், ப்ரொடக்ஷன் டிஸைனர் மற்றும் கலை இயக்குநர் ஆகியோரின் மேற்பார்வையில்தான் முடிவாகிறது. இவர்களுக்குள் தெளிவான விவாதங்கள் நடந்ததும், படப்பிடிப்புக்குத் தேவையான வரைபடங்கள் மற்றும் மாதிரி ஓவியங்கள் வரையப்படுகின்றன. அவை ஒவ்வொருமுறையும் முன்னேற்றப்பட்டு இறுதி வடிவங்களை எட்டுகின்றன.
உதாரணமாக, பேட்ரீஷியா வான் ப்ராண்டென்ஸ்டீன் (Patricia Von Brandenstein) என்ற ஹாலிவுட்டின் பிரபல ப்ரொடக்ஷன் டிஸைனர், அவரது படங்களில் எல்லாம் (உதாரணம்: The Untouchables, Amadeus) பொதுவாக படப்பிடிப்புத் தளத்துக்கே நேரில் சென்று, படிப்படியாக ஒரு திரைப்படத்தின் காட்சிகள் உருவாக்கப்படும்போது இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளருடன் விவாதித்தே திரைப்படத்துக்கான டிஸைன்களை உருவாக்குகிறார். அவரால் இருக்கும் இடத்தில் இருந்தே எளிதில் கணினியில் இப்படிப்பட்ட டிஸைன்களை உருவாக்க முடியும் என்றாலும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே சென்று படிப்படியாக விவாதித்து டிஸைன்களை உருவாக்குவதுதான் தத்ருபமான பின்னணிகளையும் காட்சிக்கான தேவைகளையும் உருவாக்கும் என்பது அவரது கருத்து. இந்தக் காட்சிகளில் எடுக்கப்படும் தயாரிப்பு சார்ந்த முடிவுகள் எங்காவது குறித்து வைத்துக்கொள்ளப்படும் ஆனால் அந்தக் காட்சிகளை எப்படி எடுப்பது என்பதை லொகேஷனில் ஏற்கெனவே இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் முடிவுசெய்துவிட்டபின்னர்தான் ப்ரொடக்ஷன் டிஸைனரின் இந்த லொகேஷன் வருகை நடக்கும்.
சில குறைந்த பட்ஜெட் படங்களில் காட்சிகளுக்கான பட்ஜெட் மிகக்குறைவாகவே இருக்கும். இந்த நிலையில் ப்ரொடக்ஷன் டிஸைனர்கள் பிற செட்களுக்கும், லொகேஷன்களுக்கும் சென்று எதையெல்லாம் அப்படியே உபயோகிக்கலாம் என்பதைக் குறித்து வைத்துக்கொள்வது வழக்கம். அதேபோல் இப்படிப்பட்ட படங்களில் இயக்குநர்கள் பொதுவில் ப்ரொடக்ஷன் டிஸைனின் மிக மிக நுண்ணிய விஷயங்களில் கூடத் தலையிடுவார்கள். காரணம் இவர்களின் கைதேர்ந்த அனுபவமும், பட்ஜெட்டை மிகச்சரியாகப் பயன்படுத்தவேண்டும் என்ற கரிசனமும்தான்.
அடுத்த கட்டுரையில் Production Cycle என்பதன் இரண்டாவது துணைப்பிரிவான Production Design என்பதில் மீதம் உள்ள மற்ற தலைப்புகளைப் பார்க்கலாம்.
தொடரலாம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |