இதழ்: 22     புரட்டாசி (September 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
கென்லோச் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா 3 - சாரு நிவேதிதா
--------------------------------
திரைமொழி - 11 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - 1 - அறந்தை மணியன்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 6 - தினேஷ் குமார்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 - 3 - யுகேந்தர்
--------------------------------
திரையில் புதினம் - வருணன்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நிகழ்வுகள் - செப்டெம்பர் - தினேஷ் குமார்
--------------------------------
 
   

   

 

 

கென்லோச் :
பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று

- யமுனா ராஜேந்திரன்


"சுதந்திரத்திறகான போராட்டம் பற்றிய கதை என்பது திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. திரும்பத் திரும்பவும் அது நிகழ்கிறது. எந்தக் காலமும் இந்தக் கதையைச் சொல்வதற்கான பொருத்தமான காலம்தான். உலகத்தில் எப்போதுமே ஏதோ ஒரு இடத்தில் ரரணுவ ஆக்கிரமிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளான மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். பிரித்தானியப் படைகள் இப்போது எங்கே இருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. துரதிருஸ்டவசமான, வன்முறை நிறைந்த, சட்டவிரோதமான ராணுவ ஆக்கிரமிப்பு இப்போது எங்கே நடந்து கொண்டிருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. எனது திரைப்படம் அன்னிய ஆக்கிரமிப்பு குறித்தது. அதனோடு அசாதாரணமான தோழமையும் வீரமும் குறித்தது. அதனோடு இந்தக் கதையினுள் இடம்பெறும் தோழர்களுக்கு இடையிலான துயரகரமான முரண்பாடு குறித்தது. அறுதியில் பார்க்கிறபோது நாம் தவிர்க்க முடியாத ஒரு கதையாக இது இருக்கிறது".

கேன் திரைப்பட விழா ஏற்புரையில்
இயக்குனர் கென்லோச்

-------------------------------------------------------------------------------------------------------

1.

2006 ஆம் ஆண்டு இறுதியில் நிகழ்ந்த பிரான்ஸ் கேன் திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருதினைப் பெற்ற திரைப்படம் ‘பார்லிக் கதிர்களை அசைத்தச் செல்லும் காற்று’(The Wind That Shakes The Barley). பாசிசத்திற்கு எதிரான ஸ்பானிஸ் இடதுசாரிகளின் போராட்டம் பற்றி ‘மண்ணும் விடுதலையும்’(Land and Freedom) மற்றும் அயர்லாந்தில் பிரித்தானிய அரசு புரிந்துவரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய ‘மறைதிட்டம்’ (Hidden Agenda) நிகரகுவா விடுதலைப் போராட்டம் பற்றிய ‘கார்லாவின் பாடல்’ (carla’s song) போன்ற முக்கியமான அரசியல் திரைப்படங்களை இயக்கிய மார்க்சியரான கென்லோச் இத்திரைப்படத்தின் இயக்குனர்.

1830 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த ரோபர்ட் டுவையர் ஜோய்ஸினால் எழுதப்பட்ட பாடல் வரிகளை அடியொற்றியது கென்லோச்சின் திரைப்படத்தின் பெயர். கடந்து இரு நூற்றாண்டுகளாக அர்த்தம் மாறாமல், நாட்டுப்புறப் பாடலாக அயர்லாந்து மலைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது இப்பாடல். பிரித்தானிய அரசிடமிருந்து தப்பி அமெரிக்கா சென்ற கலகக்காரப் பேராசியரியான ஜோய்ஸ், பிற்பாடு 1884 ஆம் ஆண்டு அயர்லாந்து திரும்பி, தனது தாய்பூமியிலேயே மரணத்தைத் தழுவினார். பாடலின் கருத்து வடிவம் இவ்வாறு இருக்கிறது…

வடஅயர்லாந்தின் பச்சை மலைகளினிடையில் சரிந்து விரிகிற மழை பெய்து முடிந்த பள்ளத்தாக்கினிடையில், பெண்களின் மதிர்த்த மார்புகள் போலும் காதலில் கனிந்து நிற்கின்றன சிறு சிறு குன்றுகள். அதனது மடியில் அமர்ந்தபடி தனது இரண்டு காதல்களை நினைவு கூர்ந்தபடியிருக்கிறான் வட அயர்லாந்தின வாலிபனொருவன். அவன் காதலியின் கூந்தலைத் தடவிக் கொண்டிருக்கிற அவ்வேளை, மலைகளில் விளைந்து நிற்கும் தங்கநிற பார்லிக் கதிர்களில் மோதி, பார்லிச் செடிகளை அசைத்துச் செல்கிறது மலைக்காற்று.

அயர்லாந்து எனும் அவனது நிலத்தின் மீதான வாலிபனின் முதல் காதலை, அவன் புராதனக் காதல் என்கிறான். அவனது புதிய காதலி அவனது மடியில் இருக்கிறாள். அவனது தேசம் அடிமைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது. அவனது தோழர்களோடு சேர்ந்து நின்று போராட, அயர்லாந்து விடுதலை இயக்கத்தில் சேரப்போவதாகத் தனது காதலியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் வாலிபன். 1798 ஆம் ஆண்டு அயர்லாந்து விடுதலை எழுச்சி பற்றித் தனது காதலியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் வாலிபன்..

அவ்வேளையில் குன்றுகளின் இடையிலிருந்து சீறி வந்த பிரித்தானிய ஆக்கிரமிப்பாளனின் துப்பாக்கிக்குக் குண்டுக்குப் பலியாகிறாள் காதலி. அவளது இரத்தம் அவனது மார்பை நனைக்கிறது. பிசைந்த களிமண்ணால் தடவி அவன் அவளது உடலை மலைக் குன்றுகளின் இடையில் புதைக்கிறான். அவளது இரத்தம் தோய்ந்த உடலின் மீதான துயர நினைவுகளும, அடிமைப்பட்ட தனது தேசத்தின் விடுதலை குறித்த போராட்ட நினைவுகளும் வாலிபனைச் சூழ, அவ்வேளை அயர்லாந்து மலைகளில் விளைந்து நிற்கும் தங்கநிற பார்லிக் கதிர்களில் மோதி, பார்லிச் செடிகளை அசைத்துச் செல்கிறது மலைக்காற்று..

அவ்வாறு காற்று வீசும் நாளொன்றில், அதே பார்லிச்செடிகள் தலைசாய்க்கும் அயர்லாந்து மலைக்குன்றுகளின் இடையில், தமது புராதன விளையாட்டான ஹாக்கியை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அயர்லாந்து இளைஞர்கள். இப்போது 1918 ஆம் ஆண்டு. மழை பெய்து முடிந்த பச்சைப் பசேல் பூமியில், பந்தைத் தட்டி விளையாடும் வாலிபர்களின் உரத்த குரல்களுடன் துவங்குகிறது கென்லோச்சின் திரைப்படம்.

2.

திரைப்படத்தின் காலம் 1918 ஆம் ஆண்டு துவங்கினாலும், திரைப்படத்தின் கதை நிகழும் காலம் 1916 ஆண்டிலிருந்து 1922 ஆம் ஆண்டு வரை நீள்கிறது.

1916 ஆம் ஆண்டு அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் ஒரு மைல்கல். தெற்கு அயர்லாந்தின் டப்ளின் நகரில் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் மகத்தான் ஆயுதக் கிளர்ச்சி தோன்றியது. மார்க்சியரான ஜேம்ஸ் கோனெல்லி உள்ளிட்ட அயர்லாந்து தாராளவாதிகளின் ஆயுத எழுச்சி ஆறு நாட்களின் பின் பிரித்தானிய ராணுவத்தினரால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ஜேம்ஸ் கொனெல்லி பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டார். மார்க்சியத்தையும் தேசியத்தையும் இணக்கப்படுத்துவதில் மகத்தான பங்காற்றியவர் கொனெல்லி.

அயர்லாந்தின் நிஜமான தேசிய விடுதலை என்பது தேசியக் கொடியின் நிறமாற்றமோ அல்லது அரசதிகாரம் ஆங்கில நிலப்பிரபுகளுக்கு மாற்றாக அயர்லாந்து நிரப்பிரபுக்களின் கைகளில் சென்று சேர்வதோ அல்ல என்றவர் கொனெல்லி. கொனெல்லியன் கருத்துக்களைப் பிரதிபலிப்பவராகவே கென்லோச்சினது திரைப்படத்தின் கதாநாயனான டேமியன் டொனாவன் வருகிறார். இவரோடு தோழமை பாராட்டுகிற மூத்த தலைமுறையைச் சேர்ந்த போராளியாகவும், டப்ளின் எழுச்சியில் பங்கு பற்றியவராகவும், இந்நாளில் புகையிரதவண்டி ஓட்டுனராகவும் டேன் எனும் பாத்திரம் வருகிறது. இவ்வாறாக 1916 ஆம் ஆண்டு டப்ளின் ஆயுத எழுச்சியும், அயர்லாந்து தேசிய விடுதலைப் போராட்டத்தில் அதனது படிப்பினையும், கென்லோச்சினது திரைப்படத்தின் கதையின் ஊடுபிரதியில் மிக முக்கியமான பாத்திரமாகவே அங்கம் வகிக்கிறது.

படத்தின் இன்னும் மிக முக்கியமான இரு அண்டுகள். 1920 மற்றும் 1922. 1920 ஆம் ஆண்டு, ஆங்கில-அயர்லாந்து ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி வடஅயர்லாந்து தவிர்ந்த, தெற்கு அயர்லாந்து அயர்லாந்துக் குடியரசு (Irish Republic) எனும் பெயரில் தனியரசாக அமையும். வடஅயர்லாந்து (Northern Ireland) பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வரும். ஒப்பந்தம் 1922 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வருவதுடன், அயர்லாந்துக் குடியரசு அமைந்தது. வட அயர்லாந்துப் போராளிகள் தொடர்நது பிரித்தானிய ஆக்கிரமிப்பை எதிர்த்தும், ஒன்றுபட்ட அயர்லாந்திற்காகவும் போராடி வரலானார்கள். ஆங்கில-அயர்லாந்துக் குடியரசு இரண்டிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, அயர்லாந்து குடியரசிற்குள் வரும் வடஅயர்லாந்துப் போராளிகளை, அயர்லாந்துக் குடியரசு நாடு கடத்த வேண்டும் அல்லது பிரித்தானிய ராணுவத்தினரிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்.

இந்தக் குறிப்பிட்ட வரலாற்றுப் பின்புலங்கள் இல்லாமல் கென்லோச்சினது மனிதர்களை அவர்களது மூச்சுக் காற்றின் அணுக்கத்தில் சென்று தரிசிப்பது என்பது சாத்தியமில்லை. இந்த வரலாற்றுப் பின்னணி எதனையும் புரிந்து கொள்ளாமேலேயே கூட, அரசியல் தாண்டிய அதிமேதாவிகள், கென்லோச்சினது இரத்தமும் சதையுமான மனிதர்களைக் கொண்ட இந்த அற்புதமான படத்தினை வெறுமனே நேர்த்திவாதத்துடன, சவம்போல் கூறுபோட்டு விடமுடிகிற ஆபத்தும் தமிழ்ச் சினிமா விமர்சனச் சூழலில் உண்டு.

படத்தின் மிக விமர்சனத்திற்குரிய இன்னுமொரு கதா பாத்திரம் டெர்ரி டொனாவன். இவர் டேமியனது சகோதரர். மார்க்சியர்களுக்கும், ஒன்றுபட்ட அயர்லாந்துக் கோரிக்கையை முன்வைக்கும் டேமியன் போன்றவர்களுக்கும் நேர் எதிரிடையான பாத்திரம் இவர். அதிகாரம் பெற்ற அயர்லாந்துக் குடியரசின் ராணுவ அதிகாரியாகப் பரிமாணம் பெறும் டெர்ரி, தன்னுடைய முன்னாள் தோழர்கள் அனைவரையும் கொன்று குவிப்பவராக, ஆங்கில நிலப்பிரபுக்களுக்கு மாற்றாக அயர்லாந்து நிலப்பிரபுக்களை ஆதரிப்பவராகப் பிற்பாடு பரிமாணம் கொள்கிறார்.

‘பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று’ அயர்லாந்து குறித்த கென்லோச்சின் இரண்டாவது திரைப்படம். முன்னதாக ‘மறைதிட்டம்’ படத்தில் கென்லோச், எந்த விதமான விசாரணையுமின்றி, அயர்லாந்துப் போராளிகளைக் கண்ட இடத்தில் சுட்டுக்கொன்று விட வேண்டும் எனும் பிரித்தானிய அரசின் கொலைகாரத் திட்டத்தைப் பற்றிப் பேசினார். அயர்லாந்து தொடர்பான தன்னுடைய இந்த இரண்டாவது படத்தில் பிரித்தானிய அரசின் ஒடுக்குமுறையோடு பிறதொரு முக்கியமான கருத்தியல் பிரச்சினை பற்றியும் கென்லோச் பேசுகிறார்.

அப்பிரச்சினை அயர்லாந்து தேசிய விடுதலைப் போராட்டம் என்பது எத்திசை நோக்கிப் பயணப்பட்டிருக்க வேண்டும் எனபது தொடர்பானதாகும். ஒரு வகையில் கென்லோச்சின் ஸ்பானிஸ் விடுதலை பற்றிய படமான ‘மண்ணும் விடுதலையும’ படத்துடன் இப்படத்தினை நாம் நிறைய ஒப்பிட்டுப் பேசமுடியும்.

பிரதான ஆக்கிரமிப்பு எதிரிக்கு எதிராக, பல்வேறு குழுக்குள் ஒன்றுபட்டுப் போராட வேண்டியதின் தேவையையும், ஆதிக்கம் செலுத்தும் பிரதான குழவின் அணுகுமுறையினால் எவ்வாறு போராட்டத்தின் திசைவழி மாறிப்போகிறது என்பதனையும் கென்லோச் இரண்டு திரைப்படங்களிலும் பேசுகிறார். நிலத்தின் மீதான அதிகாரம் என்பது நிலப்பிரபுக்களிடமிருந்து உழைக்கும் மக்களின் வசம் கொண்டுவருவதனால் மட்டுமே மண்மீட்பு என்பது மனித விடுதலை நோக்கிச் செல்வதாக அமையும் என்கிற தரிசனத்தையும் கென்லோச் இரண்டு படங்களிலும் முன்வைக்கிறார்.

‘மண்ணும் விடுதலையும்’ படத்தில் பிராங்கோவின் பாசிசத்தை எதிர்த்து ஸ்பானிஸ் குடியரசு வாதிகள் போராடுகிறார்கள். ஸ்டாலினை நம்புகிற கம்யூனிஸ்ட்டுகளும், டிராட்ஸ்கியத்தை நம்புகிற மாரக்சியர்களும் ஆரம்பத்தில் ஒன்னறினைந்து பொது எதிரிக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுகிறார்கள். ஸ்டாலினது வழிகாட்டுதலின்படி டிராட்ஸ்க்கிய ஆரதவாளர்களின் ஆயுதங்களை ஸ்டாலின் ஆதரவு இடதுசாரிகள் பலவந்தமாகக் களைகிறார்கள். அது மட்டுமல்ல ஆயுதபாணிகளல்லாத அவர்களைக் கூட்டமாகக் கொல்லவும் செய்கிறார்கள். பொது எதிரிக்கு எதிரான போராட்டம் இதனால் பலவீனமடைந்து என்கிறார் லோச்.

சொந்தத் தோழர்களைக் கொல்வதாலும் பொது எதிரிக்கு எதிரான போராட்டம் பலவீனமடைகிறது எனவும் இப்படத்தில் கென்லோச் காட்சிகளின் வழி விவரிக்கிறார்.

இதே விதமான செய்தி ‘பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று’ படத்திலும் இருக்கிறது. ஒன்றுபட்ட அயர்லாந்துக்காகப் போராடிய தோழர்கள் பிற்பாடு தமக்குள்ளாகவே கொலைகளில் ஈடுபடுகிறார்கள். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினோடு கூட்டுச் சேர்கிற அயர்லாந்தின் நிலப்பிரபுக்களின் ஆதரவாளர்களும், கத்தோலிக்கச் திருச்சபையினரும் பிற்பாடு வடஅயர்லாந்தைச் சேர்ந்த தமது சொந்தச் தோழர்களையும் சகோதரர்களையும் கொல்லத் தொடங்குகிறார்கள். பிரித்தானியக் காலனியப் பொது எதிரிக்கு இவ்வகையில் வெற்றிகரமாக அரசியல் ஆதிக்க வெளியை இவர்கள் உருவாக்கித் தருகிறார்கள்.

ஆங்கில-அயர்லாந்து ஒப்பந்தத்தை எதிர்த்த புரட்சியாளர்களை மைக்கேல் கோலின்ஸ் தலைமையிலான அயர்லாந்துக் குடியரசு ராணுவம் தேடி அழிக்கிறது. முதலில் பிரித்தானியக் காலனியவாதிகளின் கொலைக்கு ஆளானவர்கள், பிற்பாடு சொந்தத் தோழர்காளலேயே கொல்லப்படுகிறார்கள். இவ்வாறாக அமைந்த அயர்லாந்துக் குடியரசு உலகின் எந்த முதலாளித்துவ அரசை விடவும் மீட்சியை முன்வைக்கும் அரசாக அமையவில்லை. அயர்லாந்து நிலப்பிரப்புக்கள் மேலாதிக்கம் செய்யும் அரசாக, அடிப்படைவாதக் கத்தோலிக்க நிறுவனம் அரசில் ஆதிக்கம் செய்யும் அரசாக, ஈராக் யுத்தத்தில் அமெரிக்க பிரித்தானிய ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் அரசாக அயர்லாந்துக் குடியரசு இன்று இருக்கிறது என்கிறார் கொன்லோச்.

3.

1918 ஆம் ஆண்டு மழைபெய்து முடித்த நாளொன்றில் நண்பர்கள் ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளையாடி முடித்த நண்பர்கள், அருகிலுள்ள தமது தோழன் மைக்கேலின் பண்ணை வீட்டுக்கு வருகை தருகிறார்கள். வயது முதிர்ந்த ஓரு மூதாட்டியையும் மைக்கேலின் தாயையும் சந்தித்து விட்டுச் செல்வது அவர்களது நோக்கம். முக்கியமாக அப்போதுதான் மருத்துவக் கல்வியயை முடித்துவிட்டு இலண்டனுக்கு மருத்துவச் சேவைக்குச் செல்லவிருக்கும் டேமியன் அந்தப் பெண்களிடம் விடைபெற்றுக் கொள்ள வந்திருக்கிறான். அதனோடு அவனது காதலியான சைனாட்டிடமும் விடைபெற்றுக் கொள்வது அவனது நோக்கம். பெண்களிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது மூதாட்டி அவனை வாழ்த்துகிறாள்.

திடீரென இரைச்சலிட்டபடி பிரித்தானிய ராணுவம் அங்கு வருகிறது. ஆண்கள் அனைவரையும் சுவற்றோடு சேர்ந்து நிற்குமாறு ஆணையிடுகிறது. பெண்களை துப்பாக்கி முனையில் அவ்விடத்திலருந்து விரட்டுகிறது. அனைத்துவிதமான ஒன்றுகூடல்களும் தமது ஆடசியின் கீழ் தடை செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களது விளையாட்டும் அதற்குள் அடங்கும் என்கிறான் பிரித்தானிய ராணுவ அதிகாரி. ஆண்கள் அனைவரும் உடைகளைக் களைய வேண்டும் என அவன் ஆணையிடுகிறான். அவர்களது பெயர், முகவரி, தொழில் போன்றவற்றைக் கேட்டுப் பதியுமாறு துணையதிகாரிக்கு ஆணையிடுகிறான். துணையதிகாரி மைக்கேலின் பெயரை ஆங்கிலத்தில் சொல்லுமாறு கேட்கிறான். 17 வயதே ஆன மைக்கேலுக்கு ஆங்கிலம் தெரியாததால், அவன் அயர்லாந்து மண்ணின் மொழியான ‘காலிக்’ மொழியில் பதில் சொல்கிறான். இதனைக் கேட்டு கடுஞ்சினம் கொள்ளும் பிரித்தானிய அதிகாரி, துப்பாக்கியின் பின்கட்டையால் மைக்கேலை அடிக்கிறான். மைக்கேல் திருப்பி பிரித்தானிய ராணுவத்தினனை அடிக்கிறான். மைக்கேலை பண்ணை வீட்டினுள்ளெ இழுத்துச் செல்லும் பிரித்தானியப் படையினர், அவனது கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி நெற்றியில் சுட்டுவிட்டு, மரணித்த உடலை நின்ற நிலையில் விட்டுச் செல்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அயர்லாந்து விடுதலை அமைப்பில் இருக்கும் டேமியனின் சகோதரன் டெட்டிக்கும் டேமியனுக்கும் விவாதம் நடக்கிறது. டேமியன் விடுதலை அமைப்பில் சேரவேண்டும் எனச் சகோதரன் கோருகிறான். ‘போதுமான ஆயுத வலிமையற்ற நாம் பிரித்தானியர்களை வெல்ல முடியாது எனும் டேமியன், ‘மைக்கேல் கொல்லப்படக் காரணம் அவனுக்கு ஆங்கிலம் தெரியாததுதான் என்பதோடு, அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் அவன் தப்பியிருப்பான்’எனவும் சொல்கிறான். விவாதம் அத்துடன் முடிகிறது.

கோர்க் பிரதேசப் புகையிரத நிலையத்தினுள் டேமியன் இலண்டனுக்குச் செல்வதற்காக நுழையும் போது, பிரித்தானிய ராணுவத்தினர் இரைச்சலுடன் பிளாட்பாரத்தில் அணிவகுப்பு நடத்துகிறார்கள். புகையிரத வண்டியினுள் ஏற முற்படும் ராணுவத்தினரை நிலைய அதிகாரி தடுக்கிறார். தமது ரயில்வேத் தொழிற்சங்கம் ‘பிரித்தானிய ராணுவத்தினரையோ ஆயுதங்களையோ இரயிலில் ஏற்றக் கூடாது’ எனத் தெரிவித்திருப்பதாகச் சொல்கிறார் நிலைய அதிகாரி. ‘அயர்லாந்துத் தேவடியா மக்களே, நாய்களே’ எனக் கூக்குரலிட்டபடி நிலைய அதிகாரியை அடிக்கிறான் ராணுவ அதிகாரி. சத்தம் கேட்டு ஓடி வரும் ரயில் ஓட்டுனரும் உதவியாளரும், ‘பிரித்தானிய ராணுவத்தினரைத் தாம் ஏற்ற முடியாது, அது எமது தொழிற்சங்க உத்தரவு’ என்கிறார்கள். அவர்கள் இருவரையும் துப்பாக்கியின் பின்புறத்தினால் அடித்துச் சாய்க்கிறார்கள் பிரித்தானிய ராணுவத்தினர். இறுதியில் மிகுந்த ஆத்திரத்துடன் புகையிரத நிலையத்தினை விட்டு அவர்கள் வெளியேறுகிறார்கள்.

நடந்தவைகள் அனைத்தையும் பார்க்கும் டேமியன், அடிபட்டு இரத்தம் கசிந்தபடியிருக்கும் நிலைய அதிகாரியையும், இரயில் ஓட்டுனரையம், அவரது உதவியாளரையும் கைத்தாங்கலாகப் பிடித்து அவர்கள் எழுந்திருக்க உதவி செய்கிறான். இதனது விளைவாக டேமியன் இலண்டன் செல்லாது, அயர்லாந்து விடுதலை அமைப்பில் சேர்கிறான்.

அமைப்பாகச் சேர்ந்த அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் துப்பாக்கிகளைக் கொள்ளயைடிக்கிறார்கள். அதனை வைத்து அன்றாடும் தங்களை மிரட்டி அடிபணிய வைக்கும் பிரித்தானிய ராணுவத்தினரை அவர்கள் வேட்டையாடுகிறார்கள். ஆயுதபாணிகளான இவர்களை பிரித்தானிய ஆதரவாளரான உள்ளுர் பிராடஸ்தாந்து நிலப்பிரபு ஒருவரின் வேவு உதவியுடன் பிரித்தானிய ராணுவத்தினர் கண்டுபிடிக்கிறார்கள். கைது செய்யப்பட்டு சித்தரவதை செய்யப்படுகிறார்கள். டெட்டியின் கைவிரல் நகங்கள் ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட, ஆயுதங்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் பிரித்தானிய ராணுவ அதிகாரிகள்.

அடுத்த நாள் அவர்கள் அனைவரும் பிரித்தானியப் படுகொலைப் படையின் (firing squad) முன் நிற்கவைக்கப்பட்டு, ராணுவ விசாரணையின் பின் சுட்டுக் கொல்லப்படப் போகிறார்கள். ஆனால் அன்றிரவு காவலுக்கு இருக்கும் அயர்லாந்தைச் சேர்ந்த காவல்துறை இளைஞனொருவனால் அவர்கள் தப்புகிறார்கள். டேமியன், டெட்டி, மார்க்சியரான டேன் போன்றவர்கள் தப்புகிறார்கள். தமது பிற தோழர்கள் அடைத்து வைக்கப்பட்ட கொட்டடியின் சாவி தன் வசம் இல்லை எனத் தப்புவிக்கும் இளைஞன் சொல்வதால், அவர்களைக் குற்றவுணர்வுடன் விட்டு மற்றவர்கள் தப்பிக்கிறார்கள்.

தப்பிக்கும் அவர்கள், தம்மைக் காட்டிக் கொடுத்த பிரித்தானிய ஆதரவு நிலப்பிரபுவை ஆயுத முனையில் கடத்திக் கொண்டு தொலைதூரத்திலுள்ள பண்ணை வீடொன்றுக்கு வருகிறார்கள்.

ஆயுத முனையில் அழைத்துவரப்படும் இன்னொருவன் பிராடஸ்தாந்து நிலப்பிரபுவின் பண்ணையாளாக வேலை செய்யும் கிரிஸ் ரீலி. கிரிஸ் அயர்லாந்து இளைஞன். டேமியனின் குழந்தைப் பிராயத் தோழன். அவனை இவர்கள் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வர என்ன காரணம்? தனது பிராடஸ்தாந்து பண்ணை எஜமானின் மிரட்டுதலுக்குப் பணிந்து, டெட்டி, டேமியன் போன்ற தோழர்களைக் காட்டிக் கொடுத்த இளைஞன்தான் 17 வயதேயான கிறிஸ். இப்போது அவன் அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தின் துரோகியாக ஆகியிருக்கிறான்.

பண்ணை வீட்டில் தோழர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்க, தூரத்தில் குதிரையில் அமர்ந்தபடி சைனட் இவ்ர்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். கெரில்லாக்களுக்கான செய்தி கொண்டு வருபவள் சைனட். சாவியில்லாமல் சிறையில் விட்டுவிட்டு வந்த தோழர்களை பிரித்தானியப் படையினர் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்பதுதான் செய்தி. தம்மிடமிருக்கும் எதிரியான பிரித்தானிய நிலப்பிரபுவைக் கொன்றுவிட வேண்டும் எனும் கட்டளையும் செய்தியில் வந்திருக்கிறது. துரோகியான கிறிஸ்ஸை என்ன செய்வது எனும் கேள்வி வருகிறது. ‘நம்மில் ஒருவன் அவன், சிறு பையன்’ என்கிறான் ஒருவன். ஆனால் ‘நடந்து கொண்டிருப்பது போர்’ என்கிறான் இன்னொருவன்.

இருவரையும் சுட்டுக் கொல்லும் பொறுப்பை டேமியன் மிகுந்த பதட்டத்துடன் ஏற்கிறான். ஆங்கில ஆதரவு நிலப்பிரபுவிடம் போகிறான். ‘உறவினர்களுக்கான கடிதத்தைத் தந்துவிட்டு, பின் திரும்பி நில்’ என்கிறான். ‘ஐந்து வருடம் உடல்கூற்றியல் படித்த நான் இப்போது ஒரு மனிதனை அவனது நெற்றியில் சுட்டுக் கொல்கிறேன்’ என்றபடி நிலப்பிரபுவைச் சுடுகிறான் டேமியன். அடுத்து கிறிஸ். ‘அம்மாவுக்குக் கடிதம் கொடு’ என்கிறான் டேமியன். ‘அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது’ எனும் கிறிஸ், ‘அம்மாவை நான் நேசிக்கிறேன் என்ற மட்டும’ அவளிடம் சொல்லுங்கள்’ என்கிறான். ‘டெட்டியிடம் என்னை மன்னித்து விடச் சொல்லுங்கள’ என்கிறான். அறுதியாக ‘அந்த நிலப்பிரபுவினோடு என்னைப் புதைக்காதீர்கள்’ என்கிறான். நிலைகொள்ள முடியாத மனநிலையில் அவனை டேமியன் சுட்டுக் கொல்கிறான்.

திரும்பி வரமுடியாத பாதையில் டேமியனும் தோழர்களும் நுழைந்து விட்டார்கள். இதனைத் தனது காதலியான சைனடிடம் டேமியன் சொல்லவும் செய்கிறான். ‘நான் இப்படி ஆகிப் போனேன்’ எனவும் அவன் அரற்றுகிறான். கிறிஸ்ஸின் தாயை அவளது தனயனின் புதைகுழியினிடம் அழைத்துச் சென்றதனையும், ஆறு மைல்கள் மௌனமாக நடந்து வந்த அந்தத் தாய், புதைகுழியின் முன்பாக அழுது முடித்துவிட்டு, ‘இனியென்றும் என் முன் வராதே’ என்று இவனைப் பார்த்துச் சொன்னதையும் கண்ணீருடன் தனது காதலியுடன் பகிர்ந்து கொள்கிறான் டேமியன்.

போராட்டம் தொடர்கிறது. பிரித்தானியப் படையினரை வழிமறித்து தாக்குதல் தொடுக்கும் டெட்டி, டேமியன், டான் அணியினர் அத்தாக்குதலில் பிரித்தானியப் படையினர் முழுவதையும் கொன்றொழிக்கிறார்கள். ‘மிருகத்தனத்தை எமக்குத் தரும் பிரித்தானியப் படையினருக்கு அதே விதமான மிருகத்தனத்தை நாம் திருப்பிக் கொடுத்திருக்கிறோம். இதனை வெளியுலகம் அறியட்டும்’ என்கிறான் தளபதியான டெட்டி.

தாக்குதல் முடிந்து சைனடும் மைக்கேலின் அன்னையும் மூதாட்டியும் வாழும் பண்ணை வீடு நோக்கி வருகிறார்கள் அயர்லாந்து விடுதலை வீரர்கள். ஆனால் அங்கு ஏற்கனவேயே பிரித்தானிய கறுப்புப் படையினர் வந்துவிட்டிருக்கிறார்கள். தாக்குதல் தொடுத்த அயர்லாந்து வீரர்களின் பெயர்கள், இருப்பிடம் போன்றவற்றைக் காட்டித் தருமாறு அவர்கள் அங்குள்ள பெண்களைச் சித்திரவதை செய்கிறார்கள். படுவக்கிரமான சொற்களை பெண்களின் மீது வீசுகிறார்கள்.

டேமியனின் காதலியான சைனைடைப் பிடித்து ஒரு கல்லின் மீது உட்காரவைத்து, அவளது கைகளையும் கால்களையும் தலைமுடியையும் பலர் பிடித்துக் கொள்ள, அவள் கதறக் கதற ஒரு பழைய கத்திரிக் கோலைக் கொண்டு அவளது தலைமுடியை அறுக்கிறான் ஒரு ராணுவத்தினன். கொத்துக் கொத்தாக அவளது முடி இரத்தம் சொட்டச் சொட்ட அவன் கைகளில் வருகிறது. பெண்களின் கதறல் அந்தப் பண்ணைப் பிரதேசம் முழுக்கவும் ஒலிக்கிறது. பண்ணைவீடு எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தக் குரூரத்தை தூரத்து மேட்டில் மறைந்திருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் டேமியன், டெட்டி போன்ற அயர்லாந்து வீரர்கள். டேமியன் அங்கே போக முயற்சிக்கிறபோது டெட்டி தடுக்கிறான். அப்போதுதான் தாக்குதல் முடிந்து வந்த அவர்களிடம் போதுமான ஆயுதங்கள், துப்பாக்கிக் குண்டுகள் இல்லை. இந்த நிலையில் மறுபடியும் பிரித்தானிய ராணுவத்தினரை எதிர்கொள்ளும் ஆயுத வலிமையுடையவர்களாக அவர்கள் இல்லை. பண்ணைவீட்டை எரித்துவிட்டு, எந்த விதமான தகவலும் அறிய முடியாத நிலையில் பிரித்தானியப் படையினர் விலக, டேமியனும் தோழர்களும் இறங்கி சைனடுக்கும் பெண்களுக்கும் ஆறுதல் சொல்கிறார்கள்.

சைனடும், கொல்லப்பட்ட மைக்கேலது தாயும் அங்கிருந்து வேறிடம் போக முனைகிறார்கள். மூதாட்டி வர மறுக்கிறாள். பஞ்சத்தில் பலர் மாண்ட போதும், தானும் தன் கணவரும் வாழ்ந்த வீடு அது என்கிறாள் அவள். கோழிக் கூட்டைத் திருத்தி அதற்குள் நான் இருப்பேன் என்கிறாள் அவள். சில தோழர்கள் கூரையைத் திருத்த முயற்சி செய்கிறார்கள்.

சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன், ‘கீழேயிருந்து உங்களுக்கு ஒருவர் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்’ என்கிறான். செய்தியைத் தொலைத்து விட்டு மலங்க மலங்க விழித்துக் கொண்டு நிற்கிறான் சிறுவன். ‘டீ’ எனும் எழுத்தால் அந்த முக்கியமான செய்தி தொடங்குகிறது என்கிறான் அவன். அவன் வந்த வழியில் தேடிச் செல்லும் ஒருவன் செய்தி எழுதப்பட்ட காகிதத்தை சேற்றிலிருந்து எடுக்கிறான். செய்தி இதுதான் : ‘சண்டை நிறுத்த உடன்பாடு காணப்பட்டிருக்கிறது. ஆங்கில-அயர்லாந்து ஒப்பந்தம் (anglo –irish treaty) ஏற்பட்டிருக்கிறது’ என்பதுதான் அந்தச் செய்தி.

அடுத்த காட்சியில் தாளம் தவறாத அடிகள் நிறைந்த அயர்லாந்து நடனத்துடன் கொண்டாட்டம் தொடங்குகிறது. கொண்டாட்டக் கூட்டத்திலிருந்து பின்னறைக்கு நகரும் டேமியன், சைனடின் தலைப் புண்களை மூடிய துணியை விலக்கிவிட்டு அவளுடன் கலவியில் ஈடுபடத் துவங்குகிறான். அயர்லாந்து விடுதலையின் பிறதொரு துயரநாடகக் காட்சியும் அன்றுதான் துவங்குகிறது….

4.

திரைக்கு முன்பாக பியானோவின் முன்பாக அமர்ந்திருப்பவர் காட்சியின் உணர்ச்சி வேகத்திற்கு ஏற்ப கைகளை அசைக்கிறார். திடீரென்று எக்காள இசை கேட்கிறது. நடந்து கொண்டிருக்கும் படம் இடை நிறுத்தப்பட்டு ஆங்கில- அயர்லாந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என அறவிக்கப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அமையும் அயர்லாந்துப் பாராளுமன்றம் இங்கிலாந்து முடியாட்சியின் பெயரால் உறுதி மொழி எடுக்க வேண்டும் எனும்போது மக்கள் எரிச்சலை வெளியிடுகிறார்கள். ‘இதற்காகத்தானா போராடினோம்’ என்கிறார்கள். வட அயர்லாந்து பிரிக்கப்பட்டு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருக்கும் என்கிறபோது மக்கள் ஆற்றாமையை வெளியிடுகிறார்கள்.

திரைப்படக் கொட்டகைகளில் தொடங்கிய விவாதம் நாடெங்கிலும் நடக்கிறது. அயர்லாந்து விடுதலை அமைப்பினால் அமைக்கபட்ட விடுதலை நீதிமன்றங்களில் சில போராளிகள் வட்டிக் கடைக்காரருக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். தீர்ப்பு வட்டிக் கொடுமைக்கு ஆளான மூதாட்டிக்குச் சார்பாக இருந்தாலும் அவர் கைவிடப்படுகிறார். கத்தோலிக்கப் போதனை மண்டபத்தில் போதகர், மார்க்சியர்களையும் ஒப்பந்தத்திற்கு எதிராகப் பேசுபவர்களையும் கடளிளனதும் திருச்சபையினதும் எதிரிகள் என்கிறார். விடுதலை அமைப்பு சார்ந்தவர்கள் விவாதிக்கும் இடத்தில், இந்த ஒப்பந்தம் அயர்லாந்து ஒற்றமையைக் குலைக்கிறது, ஆங்கில ஆதிபத்தியத்தை அப்படியே வைத்திருக்கிறது, ஏழைகளை வஞ்சிக்கிறது, பணக்கார்களுக்கு ஆதரவாகவும் நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் ஆதரவாகவும், மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாகவும் இருக்கிறது எனும் நிலைபாடுகள் முன்வைக்கப்படுகிறது.

விவாதங்கள் நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, பிரித்தானிய ராணுவத்திடமிருந்து பாதுகாப்புப் பொறுப்பை புதிதாக அமைந்த அயர்லாந்துக் குடியரசுப் படை ஏற்றுககொள்கிறது. ஒப்பந்தத்திற்கு எதிரானவர்களை ஆயுதங்கைளக் கீழே வைக்குமாறு குடியரசு கோருகிறது. ஓப்பந்தத்திற்கு எதிரானவர்களும் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபடுகிறார்கள். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை ஒன்றுபட்டு எதிர்த்த சகோதரர்களான டேமியனும் டெட்டியும் இப்போது எதிரெதிர் திசையில் நிற்கிறார்கள். டெட்டி அயர்லாந்துக் குடியரசின் ராணுவ அதிகாரி ஆகிறான். டேமியன் ஒப்பந்த எதிர்ப்புக் கலகக்காரப் போராளி ஆகிறான். டேமியனோடு, இரயில் ஓட்டுனரும் டப்ளின் சேரிப் புறத்திலிருந்து வந்த ஏழையானவருமான டேன் நிற்கிறார். இவர்களுக்கிடையிலான தத்துவார்த்த மோதலும் ஆயுத மோதலும்தான் படத்தின் பின் பாதியாக இருக்கிறது.

கலக்காரர்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவது குடியரசு இராணுவத்தின் நோக்கமாக இருக்க, குடியரசு ராணுவத்திடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவதன் வழி என தமது போராட்டத்தைத் தொடர்வது கலகக்கார்களின் நோக்கமாகிறது. டேமியனின் தலைமையில் குடியரசு ராணுவத்தினர் மறிக்கப் பெற்று ஆயுதங்கள் கையகப்படுத்தப்பட்டு, பண்ணை வீடொன்றில மறைத்து வைக்கப்படுகிறது. சமரில் குடியரசுப் படையினன் ஒருவன் கொல்லப்படுகிறான். குடியரசு ராணுவம் ஆயுதங்களைத் தேடி எதிர்த் தாக்குதல் நடத்துகிறது. தேடுதலில் டேமியனின் தோழரும், மார்க்சியரும், இரயில் ஓட்டுனரும் ஆன டேன் சுட்டுக் கொல்லப்படுகிறார். டேமியன் அந்தச் சமரில் குடியரசு ராணுவத்தினரிடம் பிடிபடுகிறான்.

வரலாறு மீண்டும் திரும்புகிறது. டேமியனும் டெட்டியும் பிரித்தானிய ராணுவத்தினரிடம் பிடிபட்டு எந்தச் சிறைக்குக் கொண்டுவரப்பட்டார்களோ அதேச சிறைக் கொட்டடிக்கு டேமியன் இப்பேர் கொண்டு வரப்பட்டிருக்கிறான். அப்போதும் ‘ஆயுதங்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்’ என்றுதான் பிரித்தானியர்கள் கேட்டார்கள். இப்போது பிரித்தானியர்களின் இடத்தில் டெட்டி இருக்கிறான். டெட்டியும் டேமியனிடம் ‘எங்கே ஆயுதங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது, சொல்லிவிடு’ எனத்தான் டேமியனைக் கேட்கிறான்.

டேமியன் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டடிக்குள் டெட்டி வருகிறான். ‘ஆயுதங்கள் இருக்கும் இடத்தைச் சொல்விவிடு. நீ நன்றாகப் படிப்பவன். இலண்டனுக்குப் போய் விடு. உனது அன்பான காதலி சைனட் உனக்காகவே காத்திருக்கிறாள். நீஙகள் பெண்களையும் பையன்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். நீ அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும்’ என்கிறான் டெட்டி. டேமியன் அமைதியாகச் சொல்கிறான், ‘நான் ஏன் கிறிஸ்ஸைக் கொன்றேன் தெரியுமா?, விலை போகி விடக் கூடாது என்பதற்காகத்தான்’ என்கிறான். டேமியனின் எதிரிலிருந்து எழும்பும் டெட்டி, ‘எனில் நாளைக் காலை நீ சுட்டுக் கொல்லப் படுவாய். உனது கடிதங்களை எழுதிவிடு’, எனச் சொல்லி விட்டு வேகமாக சிறைக் கொட்டடியிலிருந்து வெளியேறுகிறான்.

டேமியன் கடிதத்தை எழுதத் தொடங்குகிறான். கடிதத்தின் வரிகள் திரையில் நமக்குக் கேட்கும்போது, அதிகாலையில் டேமியன் குடியரசுப் படையினரால், சுட்டுக் கொல்லப்படவென கொலைக்களத்திற்கு சிறைத் தாழ்வாரத்தில் அழைத்து வரப்படுகிறான். சைனட் முன்னொரு நாள் டேமியனிடம் கொடுத்த அவளது சகோதரனின் சிலுவையைத் திருப்பி அவளிடம் கொடுக்கவென கடிதத்துடன் எடுத்து வைக்கிறான்.

கடிதம் தொடர்கிறது : ‘சைனட், நான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட விரும்பியிருக்கவில்லை. நான் ஈடுபட்டேன். நான் இப்போது வெளியேற விரும்புகிறேன். ஆனால் முடியவில்லை. டெட்டியை நீ பார்த்துக் கொள். அவன் ஏற்கனவே செத்துப் போய்விட்டான்’ என முடிகிறது கடிதம்.

டேமியனின் கைகள் பின்பறமாக நிற்கும் மரக்கம்பத்துடன் பிணைத்துக் கட்டப்படுகிறது. ‘சுடுவதற்கான ஆணையை நான் வேண்டுமானால் தருகிறேன்’ என்கிறான் டெட்டியின் சக அதிகாரி. ‘இல்லை, நானே தருகிறேன்’ எனும் டெட்டி, பதட்டத்துடன் சுடு ஆணையை விடுக்கிறான். டேமியன் தனது மூச்சுக்காற்றினை கடைசி முறை இழுத்து வேகமாக, முகம்முட்ட வெளியிடும்போது, டேமியனின் உடலை நான்கைந்து ரவைகள் துளைக்க, டேமியனின் தலை, சிலுவையில் இயேசுவின் உடல் சரிந்த போது தொய்ந்தது போலச் சாய்கிறது..

உடலின் அருகில் வரும் டெட்டி குமுறி அழுகிறான். டேமியனின் உள்ளங்கையில் பொதிந்து வைத்திருந்த சிலுவையையும் கடிதத்தையும் சேகரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சைனடைப் பார்க்க பண்ணை வீட்டுக்கு வருகிறான்.

பண்ணை வீட்டில் யாருமில்லை. நான்கு திசைகளிலும் திரும்பித் திரும்பி ‘சைனட் சைனட்’ என்கிறான். சைனட் பின்புறமிருந்து கையில் இரும்புக் கூடையுடன் வருகிறாள். சைனடை நோக்கி கடிதத்தையும், கூடவே அவள் டேமியனுக்குக் கொடுத்த சிலுவை மாலையையும் நீட்டுகிறான் டெட்டி. கடிதத்தைத் திறக்கிறாள் சைனட். அவளுக்குத் தெரிந்து விடுகிறது. ஓங்கிக் கதறியபடி டெட்டியின் மார்பில் அடிக்கத் தொடங்குகிறாள். டெட்டி அவளை தேற்ற முற்படுகிறான். ‘சைனட், என்னை மன்னித்து விடு’ என்கிறான். தொடர்ந்து அவனை நெட்டித் தள்ளியபடி அவனது மார்பில் அடிக்கிறாள் சைனட். அவனை முகத்துக்கு நேராகப் பார்த்து, ‘நிற்காதே பேயர்விடு, என்னுடைய நிலத்திலிருந்து வெளியே போய்விடு’ என்கிறாள் சைனட். ‘இனியெப்போதும் என்முன் வந்துவிடாதே, போய்விடு’ என்கிறாள். டெட்டி தலைகுனிற்தபடி மோட்டார் சைக்கிளைத் திருப்புகிறபோது, சைனட் தரையில் அமர்ந்து கதறியபடி, ‘டேமியன் ஹோ டேமியன்’ எனத் தொடர்ந்து கதறிச் சரியும் போது, திரை அடர்த்தியாக இருள்கிறது.

5.

கலை மேதமை அல்லது கலைப் படைப்பில் மானுடச் சித்தரிப்பு என்பதுதான் என்ன? தேர்ச்சி அல்லது ஊடக அல்லது மொழிவிளையாட்டுத்தான் கலை மேதமை என திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லப்படுகிறது. மாறாக தனக்கு வசமான ஊடகம் அல்லது மொழியின் வழி கலைஞன் தனது படைப்பில் படைக்கும் ‘அறியப்படாத மனித அறம்தான் கலைமேதமை’ என்பதை கென்லோச் நமக்குச் சொல்லித் தருகிறார்.

பாலுறவுச் சித்தரிப்பு என்பது கலைஞர்களைக் கவிழ்த்துப் போடும் மலை உச்சி. மானுட உறவும் அதன் நெகிழ்ச்சியும் பரவசமும் கொண்டது பாலுறவு அனுபவம். கென்லோச் படங்களில் இடம் பெறும் பாலுறவுக் காட்சிகளை எடுத்துக் காட்டினால் போதும், அவர் முன்வைக்கும் அறமும் அவரது சார்புநிலையும் ஒருவருக்கு விளங்கக் கூடியதாகிவிடும்.

சில பிரபலமான ஹாலிவுட் அரசியல் படங்களுடனான ஒப்பீடுகள் மூலமும் இதனை நாம் நிறுவலாம். அயர்லாந்து இயக்குனரான நீல் ஜோர்டனின் ‘மைக்கேல் கோலின்ஸ்’ படத்தினையும், ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ‘மூனிக்’ படத்தனையும் நாம் எடுத்துக் கொள்ளலாம். முதல் படம் அயர்லாந்து விடுதலை பற்றியது. இரண்டாவது திரைப்படம் ஜெர்மன் மூனிக் ஒலிம்பிக் பந்தயத் திடலில் பாலஸ்தீனப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேலியத் தளகடவீரர்கள் பற்றி திரைப்படம்.

‘மைக்கேல் கோலின்ஸ்’ படத்தில் லியாம் நீசன் தனது காதலியாக நடிக்கும் ஜூலியா ரோபர்ட்டுடன் கொள்ளும் பாலுறவுச் சித்திரிப்பும், ‘மூனிக்’ படத்தில் தற்போதைய ஜேம்ஸ்பான்டும் மூனிக் படநாயகனும் ஆன டேனியல் கிரெய்க் தனது மனைவியுடன் கொள்ளும் பாலுறுவும், இரத்தக்களறியின் தருணத்தில் அல்லது வன்முறைவெறியாட்டத்தின் தருணத்தின் (orgy of violence) இடையில் நிகழ்வதாகவே காண்பிக்கப்படுகிறது. மைக்கேல் கோலின்சின் அரசியல் எதிரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் மன உலைச்சலின் அல்லது ஆண் உடல் வன்முறையின் போக்கிடமாக இங்கு பெண் உடலுக்குள் வழியும் விந்துவெளியேற்றம் ஆகிறது. ஆண் உடலினது வன்முறையின் போக்கிடமாக இங்கு கலவியும் பெண்ணுடலும் ஆகிறது. அது போலவே ‘மூனிக்’ படத்தில் பாலஸ்தீனர் போராளிகள் இஸ்ரேலியர்களை கண்மண் தெரியாமல் சுட்டுக்கொண்டிருக்கும் காட்சி மனதில் தோன்ற, அவர்களின் மீதான பழிதீர்க்கும் வஞ்சினத்துடன் மன உளைச்சலுடன் டேனியல் கிரெய்க் இயந்திர கதியில் தனது மனைவியின் உடலின் மீது இயங்குகிறான். அவனது வன்முறையின் போக்கிடமாக அவனது விந்தை ஏந்திக்கொள்ளும் உடலாகப் பெண் உடல் நைந்து அமிழ்கிறது. வன்முறையின் போக்கிடமாகவும் வெளியேற்றமாகவுமே இங்கு பாலுறவு நிகழ்வு என்பது இருக்கிறது.

கென்லோச்சினது அரசியல் படங்களில் பாலுறவுத் தருணங்கள் முற்றிலும் வேறானதொரு தளத்தில் வெளிப்படுகிறது. அவரது மூன்று படங்களை எடுத்துக் கொள்வோம். நிகரகுவாப் புரட்சி தொடர்பான ‘கார்லாவின் பாடல்’, ஸ்பானியப் புரட்சி தொடர்பான ‘மண்ணும் விடுதலையும்’ மற்றும் நாம் பேசிக்கொண்டிருக்கும் ‘பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று’ அந்த மூன்று படங்கள். முதல் படத்தில் பித்தானியாவுக்கு அகதியாக வந்திருக்கும் நிகரகுவாப் பெண்ணொருத்தியுடன், கிளாஸ்கோ நகரத்து பஸ் டிரைவர் பாலுறவு கொள்ளும் தருணம் சித்தரிப்புப் பெறுகிறது. பெண்ணின் உடுப்பு ஒவ்வொன்றையும் தனது பற்களால் கழற்றுகிறான் நாயகன். நாயகி ஒரு கட்டத்தில் வலி தாளாது கதறுகிறாள். அவளது முதுகு முழுக்கவும் காயங்கள். ஸான்டினிஸ்ட்டாப் போராளியான அப்பெண்ணுக்கு எதிரிகளால் ஏற்படுத்தபட்ட ரணங்கள் அவை. அதன் பின்னான அக்கலவி பெண்ணின் வலிமீட்சியாகவும், ஆண்பெண் ஒன்றுகூடலின் ஆன்மீகப் பரவவசமாகவும் ஆகிறது. இரண்டாவது படத்தில் பயிற்சியின் போது காயம்பட்டு சிகிச்சைக்காகப் பார்ஸிலோனா வரும் ஒரு போராளி தனது சக பெண் போரளியை அங்கு சந்திக்கிறான். அவர்களுக்கிடையில் நிகழும் கலவிக் காட்சியும் ரணங்களிலிருந்து உடல் மீளும் வலிநீக்கக் காட்சியாகவே அனுபவமாகிறது.

‘பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று’ படத்தில் பிரித்தானிய ராணுவத்தினரால் உடல் வாதைக்குள்ளாக்கப்பட்டு தலைநிறைந்த இரத்தக்காயத்துடன் இருக்கும் சைனடுடன் டேமியன் கலவி கொள்கிறான். துணியினால் கட்டப்பட்டிருக்கிற அவளது காயங்களுக்கு வலித்துவிடாமல் அதனை அகற்றி, அப்போதுதான் வளரத்துவங்கியிருக்கும் அவளது கூந்தலைத் தழுவியபடி அவளை முத்தமிடுகிறான் டேமியன். இருவரும் ஆரத்தழுவியபடி தரையில் சரிகிறார்கள். இங்கும் கலவியென்பது வலிமீட்சியாகவும் ஆண்பெண் உறவினூடு ஆன்மீக மீட்சியாகவும் ஆகிறது.

அதிகாரமும் ஒடுக்கமுறை உணர்வும் பழிவாங்கும் வெறியும் கொண்டவர்களிடம், பெண் உடலும் கலவியும் போக்கிடமாகவும் இயந்திரமாகவும் ஆகிறது. மனதளவிலும் இயல்பிலும் விடுதலையை அவாவுகிற அதிகாரமற்ற மனிதர்களிடமும் ஏழைகளிடமும் அதே கலவியென்பது வலிமீட்சியாகவும் ஆண்பெண் உடல் சங்கமத்தின் வழி ஆன்மீPக ஈடேற்றமாகவும் ஆகிறது. கென்லோச்சின் அரசியல் படங்களாயினும், தனிமனிதர்களின் அவல வாழ்வு குறித்த படங்காளயினும் சரி, கலவி குறித்த இந்தத் தரிசனம் மிக இயல்பாக நமக்குள், நமது வாழ்வில் ஒரு மந்திரம் போல இறங்குகிறது. இந்தக் கலை மேதமை சகலவித ஒடுக்குமுறைகளிலிருந்தும் ஆன்மாவும் உடலும் விடுதலை பெற வேண்டும் என நினைக்கிற கலைஞர்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும்.

6.

‘பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று’ அயர்லாந்து விடுதலை இயக்கத்தின் பிரச்சாரப் படம், அதனோடு பிரித்தானிய அரசிற்கு எதிரான தேசத் துரோகியின் படம் என, படம் குறித்த தமது விமர்சனங்களில் எழுதின தி ‘டெய்லி மெயில’, ‘தி ஸன்’, ‘தி டெயில் டெலிகிராப’, ‘தி டைம்ஸ்’ போன்ற பத்திரிக்கைகள். வலதுசாரிகளிடமிருந்து இதற்கு மாற்றாக நான் எதிர்பார்க்கவில்லை என்று பதிலிறுத்தார் கென்லோச்.

சீனத் திரைப்பட இயக்குனர் வாங் கார்வாயின் தலைமையில் அமைந்த ஒன்பது பேர் கொண்ட தேர்வுக் குழு கென்லோச்சின் திரைப்படத்தினை ஒருமனதாகச் சிறந்த படம் எனத் தேந்தெடுத்தது. இது ஒரு அபூர்வமான நிகழ்வு என்கிறார் கார்வாய். பிற விருதுகள் எல்லாவற்றுக்கும் தேர்வுக் குழவினரிடையே பல மணி நேரங்கள் விவாதங்கள் நடந்தது. இந்தப்படம் குறித்து விவாதங்களே நிகழவில்லை எனத் தெரிவித்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸாமுவேல் ஜாக்ஸன். இந்தத் திரைப்படம் எங்கள் அனைவரையும் அசைத்துவிட்டது என்றார் அவர்.

கென்லோச்சின் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை ஒன்றுவிடாமல் தேடித் தேடிப் பாரத்தவன் எனும் அளவில ஓரு எளிமையான விடயத்தை என்னால் உணர முடிந்தது. உலகின் மகத்தான கலைஞர்கள் அனைவரையும் போலவே கென் லோச் தனது எல்லாத் திரைப்படங்களிலும் ஒரே ஒரு கதையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் கதையை, உலகின் வேறு வேறு பிரதேசங்களுக்கும், மொழிகளின் இருளடர்ந்த நுண்பரப்புகளுக்கும் ஊடே சென்று அவர் கொண்டு வருகிறார். ‘சுதந்திரத்தைக் கையகப்படுத்த முயன்ற இந்த வாழ்வு மறுக்கப்பட்டவர்கள், தேர்ந்திருக்க வேண்டிய சாத்தியமான தடங்கள் இதுவாயிருப்பின் எவ்வாறு இருக்கும்’ என ஒரு உலகை அவர் தனது எல்லாப் படங்களிலும் தேடித் திரிகிறார்.

இந்தச் ‘சாத்தியமான வேறு தடங்கள்’ என்பதுதான் அவரது அனைத்துத் திரைப்படங்களிலும் சொல்லப்படும் கதை. இந்தக் கதையை அவர் இரண்டு விதமாகச் சொல்கிறார்.(1). முதலாவதாக நாம் அன்றாடம் உழலும் ‘சமூக அமைப்பின் முன் தோற்றுவிட்ட ஏழைத் தனிமனிதர்களின் வாழ்வின் துயரங்களிலிருந்து அவர்கள் தம்மளவில் மீட்சி பெறுவது குறித்த சாத்தியங்களை’ அவர் சொல்கிறார்.(2). இரண்டாவதாக ‘வரலாறும் மரபும் தம் மீது சுமத்திய அரசியல் அமைப்பின் முன் தோற்றுப் போய்க் கொண்டிருக்கும் தனிமனிதர்கள் தம்மீதான சுமைகளை உதறியபடி தமது விடுதலையை அடைவதற்கான சாத்தியங்கள்’ குறித்து அவர் சொல்கிறார்.

இவ்வகையில் அவர் உருவாக்கும் கலை அல்லது கற்பிதங்கள் மனித விடுதலை நோக்கிய அதியற்புதமான கலை ஆவணங்களாக அமைந்துவிடுகின்றன..

‘பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று’ திரைப்படத்தில், கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பான காலனியாதிக்க நாட்களில் துவங்கி, இன்றளவும் விவாதத்திற்குரிய பிரச்சினைகளை, முக்கியமாக இரண்டு அரசியல் பிரச்சினைகளை அவர் பேசுகிறார்.

காலனியாதிக்கம் என்பது எப்போதுமே ஒரு நாட்டில் உள்ள சகோதார சக்திகளை பகைச் சக்திகளாக்கி அவர்களை மோதவிட்டுத் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும். இந்தியா தொடங்கி அயர்லாந்து ஈராக, இன்று ஈராக் வரையிலும் இதுதான் நடந்து வருகிறது எனகிறார்கள் படத்தினது கதையாசிரியரான பால் லாவர்ட்டியும், இயக்குனர் கென்லோச்சும். ஒரு வகையில் ஈராக்கில் நிகழந்துவரும் அமெரிக்க– பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பிரச்சினையைத்தான் தங்களது திரைப்படம் பேசுகிறது என கேன் பரிசளிபபு விழாவின் போது இருவருமே தெரிவித்திருக்கிறார்கள்.

காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக எந்தத் தேசமும் போராடி வெல்லும் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சோசலிசம் காலாவதியாகிவிட்டது, இது தேசியத்தின் யுகம் எனக் கூச்சல் போடுகிறவர்கள் மத்தியில், மீண்டும் தேசியக் கருத்தியலுக்கும் சோசலிசத் திட்டத்திற்கும் உள்ள இணக்கப்பாடுகள் மற்றும் முரண்கள் குறித்து, அயர்லாந்து விடுதலைப் போராட்ட அனுபவங்களை முன்வைத்துப் பேசியிருக்கிறார் கென்லோச்.

எந்த தேசிய விடுதலைப் போராட்டத்திலும் தேசியத்தின் தலைமைக்கும், நிலமுதலைகளுக்கும் முதலாளித்துவவாதிகளுக்கும் இருக்கும் இணைப்புக் கண்ணிகளை உடைக்காமல், அந்தத் தேசத்தின் பெரும்பான்மையான வறிய மக்களின் துயர்களைப் போக்கமுடியாது என்பதனை மறுபடியும் திறந்த ஒரு விவாதமாக கென்லோச்சின் படம் முன்வைக்கிறது.

பிளவுபட்ட வடஅயர்லாந்தும் அதனது வறிய மக்களும், பிரித்தானியா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்தக் கூட்டாளியாக இருக்கும் இன்றைய அயர்லாந்துக் குடியரசும், இன்று தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்திச் செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது என்கிறார் கென்லோச்.

ஜனநாயக ஏற்றுமதி எனும் பெயரில் இராணுவ ஆக்கிரமிப்பையும், உலகவயமாதல் எனும் பெயரில் நவீpன பொருளியல் காலனியாதிக்கத்தையும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒரு கருத்தியல் நிலைபாடாக உலகில் பரப்பிக் கொண்டிருக்கும் சூழலில், சோசலிசக் கருத்தியலின் பின்னடைவுக்கான காரணங்களை விமர்சனத்துடன் தன்னுடைய ‘மண்ணும் விடுதலையும்’ படத்தில் பேசிய கென்லோச், ‘பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று’ படத்தில, நிலமும் வளங்களும் ஒரு தேசத்தின் வறிய மக்களின் வாழ்நிலையை மேற்கொண்டு செல்வதாக இருக்கும்போது மட்டுமே அது உண்மையான விடுதலையாக ஆகும் தகமை கொண்டது எனும் செய்தியை கலை மேதைமையுடன் சொல்லியிருக்கிறார்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </