தமிழ் ஸ்டுடியோ நிகழ்வுகள் - செப்டெம்பர்
சிறுவர் திரைப்படம் திரையிடல் நிகழ்வு:
அப்பாவும் மகனுமாக ஓர் உணவு விடுதிக்குள் நுழைகின்றனர். சாப்பிட்டு முடித்த பின்பு, “இன்னும் ஏதேனும் வேண்டுமா?”, என்று கேட்க, தனக்கு குளிர்பானம் வேண்டும் என்கிறான் மகன். அப்பாவும் அவனின் ஆசைப்படியே வாங்கிக்கொடுக்கின்றார். குளிர்பானக் கோப்பையை அந்தச் சிறுவன் ஒரே மடக்கில் குடித்து விடுகின்றான். இதுவரை சிக்கல் இல்லை, ஆனால், குடித்துமுடித்த அந்தச் சிறுவன் தன் தந்தையைப் பார்த்து ‘அப்பா சரக்கடிச்ச மாதிரி இருக்குப்பா’ என்றிருக்கின்றான். இத்தனைக்கும் அவன் ஐந்து வயதுகூட நிரம்பியிராத பாலகன்.
|
இன்னொரு சம்பவம், பெற்றோர்கள் தன் குழந்தையை எல்.கே.ஜி வகுப்பிற்கு அனுப்ப அவனைத் தயார் செய்கிறார்கள். புத்தகப்பையில் ஒரு நோட்டை அம்மா வைக்கின்றாள். அதைக் கவனித்த குழந்தை, “நான் என்ன காலேஜிக்கா போறேன். ஒரு நோட்டு கொடுக்கிறீங்க?” என்கிறான். அவனின் உள்ளத்தில் இப்படித்தான் மது குடிப்பார்கள் என்றும், கல்லூரிக்குப் போகிறவர்கள் கையில் ஒரு நோட்டைத்தான் வைத்திருப்பார்கள் என்ற வகைமையை உருவாக்கித் தந்திருப்பது, அவன் பார்த்து வந்த திரைப்படங்களும் அவை பிஞ்சு மனதில் தோற்றுவித்த பிம்பங்களுமே!, என்று தான் கண்டுணர்ந்த விஷயங்களை பார்வையாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டு சிறுவர் திரையிடலை துவக்கி வைத்தார் சாதனா நாலெட்ஜ் பார்க்கின் உரிமையாளர் திரு. கிருஷ்ண வரதராஜன்.
இது சிறுவர் திரையிடலுக்கான இரண்டாவது மாதம். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு சாதனா நாலெட்ஜ் பார்க்கில் இத்திரையிடல் நடைபெறுகின்றது. முதல் மாதம் ஈரான் திரைப்படமான ”சில்ட்ரன் ஆஃப் ஹெவன்” (Children of Heaven) திரையிடப்பட்டது. குழந்தைகளை பயன்படுத்திக்கொண்டு பெரியவர்களும் இம்மாதிரியான படங்களைப் பார்த்து மகிழ்ந்தனர். ”சில்ட்ரன் ஆஃப் ஹெவன்”, திரைப்படத்துடன் இணைந்து சுப்புராஜ் இயக்கியிருந்த ”செடி”, குறும்படமும் திரையிட்டதோடு, இயக்குனருடன் ஓர் உரையாடலும் இறுதியில் நடைபெற்றது. மேலும் படம் எத்தன்மையது?, அது சொல்லவரும் விஷயங்கள் என்ன? என்பதையெல்லாம் குழந்தைகளே புரிந்துகொண்டு தன் கருத்தினை முன்னுரைத்தனர்.
இந்த இரண்டாவது மாத சிறுவர் திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படம், ‘த வே ஹோம்’ (The Way Home). வயதான பாட்டிக்கும், விடுமுறையில் கிராமத்திற்கு வருகின்ற அவளது பேரனுக்கும் இடையேயான வாழ்முறைகளை அதன் நியாயங்களோடு சொல்லியிருக்கின்ற படம். சொல்லி வைத்தாற்போன்றே (செப்டம்பர் 7 ஆம் தேதி) அன்றைய தினம் தாத்தா பாட்டிகள் தினம். பொருத்தமான படமும் திரையிடப்பட்டிருக்கின்றது.
மாற்றத்திற்கான விதையை குழந்தைகளிடமும் விதைக்க வேண்டும். ஏனெனில் பெரியவர்கள் என்ற பிரிவினுள் அடங்கியிருப்பவர்கள் ஏற்கனவே இந்த வணிக சினிமாவினால் பீடிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கும் முயலாமல் அதிலேயே உழன்றுகொண்டிருக்கின்றனர். மகிழ்ச்சியாக.
மேலும் குழந்தைகள் சினிமா பார்ப்பதால் கெட்டுவிடுவார்கள் என்று தப்பிதமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் வீட்டின் வரவேற்பரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சியில் பலமடங்கு ஆபத்தான வன்முறைகளையும், ஆபாசங்களையும் தினந்தோறும் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அதனையும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். குழந்தைகளை முழுமையாக திரைப்படங்களிலிருந்து புறக்கணிக்காமல், அவர்களுக்கு இதுதான் நல்ல சினிமா என்று அடையாளப்படுத்த இந்நிகழ்வினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்னும் இந்த வணிக சினிமாவின் சூழலுக்குள் முழுமையாக சிக்கிக்கொள்ளாதவர்களாக இக்குழந்தைகளே இருக்கின்றார்கள். அல்லது போதிய தெளிவின்றி அதில் சிக்கியிருந்தாலும் அவர்களை இலகுவாகவே யதார்த்த சினிமாவின் பக்கமாக திருப்ப இயலும். அதற்கு இப்போதிருந்தே தகுந்த படங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்விக்க வேண்டும். அதனையே தமிழ்ஸ்டுடியோ செய்கின்றது. இதனில் சாதனா நாலெட்ஜ் பார்க்கும் இணைந்துள்ளதால் இச்சிறுவர் திரைப்படங்கள் தொடர் திரையிடல் நிகழ்வு சாத்தியப்பட்டிருக்கின்றது என தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் அருண் இத்திரையிடலுக்கான நோக்கத்தையும், பார்வையாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.
புரிதலுக்கு ஏதும் தடையில்லாத ‘த வே ஹோம்’ திரைப்படம் முடிந்த பின்பு, பல கேள்விகள் கேட்கப்பட்டது. ”த வே ஹோம்”, கொரியதிரைப்படம். ஆகையால் மாற்றத்தை கொண்டுவர நினைப்பவர்கள் முதலில் குழந்தைகளுக்கு எளிதில் புரியும்படியாக இருக்கின்ற தமிழ் திரைப்படங்களிலிருந்து ஆரம்பிக்கலாம், சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு தமிழ் மீதான பற்றும் அதிகரிக்கும் என்றார் ஒரு பெண்மணி. இதனை ஆமோதிக்கும் விதமாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கொரிய மொழிக்குப்பதிலாக ஆங்கிலத்தில் இருந்தால் கூட படம் புரிந்துகொள்ள சுலபமாக இருந்திருக்கும் எனச் சிலரும் கூறினர். இம்மாதிரியான படங்கள் மிக மெதுவாக நகர்கின்றன, இதைவிட சுவாரசியம் மிக்க படங்களை குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள், அது போன்ற படங்களைத் திரையிடலாம். முதலில் ஆங்கில கார்ட்டூன்களை கண்டு ரசித்திருந்த குழந்தைகள் இப்பொழுது சுட்டி டி.வி போன்ற அலைவரிசைகள் வந்தபின்பு அவைகளைத்தான் பெரிதும் விரும்புகின்றன. என்றெல்லாம் சரவணன் என்பவர் பேசினார்.
ஆனால், இன்னொரு பார்வையாளர் எழுந்து, இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக தன் கருத்தினைத் தெரிவித்தார். முதலில் குழந்தைகளுக்கு உதாரணமாக கற்றுக்கொடுக்க ‘த வே ஹோம்’ மாதிரியான படங்கள் தமிழில் இல்லை. மேலும் படம் கொரிய மொழியில் உள்ளது, துணை உரை( Subtitile) ஆங்கிலத்தில் உள்ளது, தமிழில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றெல்லாம் பேசுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், சினிமா என்பதே ஒரு மொழி. கொரியத் திரைப்படமானாலும், சீனத் திரைப்படமானாலும் அது பார்வையாளர்களிடத்தில் சென்று சேர தனக்கான மொழியைக் கொண்டுள்ளது. காட்சிகளால் கதை சொல்லும், உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதனும் மொழி தெரியாமலேயே ஒரு படத்தைப் பார்த்து புரிந்துகொள்ள இயலும். சினிமாவிற்கான காட்சி மொழியில்தான் அது பார்வையாளர்களுடன் உரையாடுகிறது. இதனை குழந்தைகளுக்கு உணர்த்த இதுபோன்ற சினிமாக்கள் தான் முன்னுதாரணம் என்றார். மேலும், தமிழ் மீது பற்று வேண்டும், குழந்தையிலேயே அதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றவர்களெல்லாம் தங்கள் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வி தவிர்த்த பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர். எங்கே போயிற்று அவர்கள் பற்று?
முதலான கேள்விகளையும் அந்தப் பார்வையாளர் எழுப்பினார். இது சிந்திக்க வேண்டிய விஷயமாக அங்கிருந்த பலரும் உணர்ந்தனர். இது போன்ற கேள்விகள் முன்னெடுக்கப்படுவதும் அதற்கான பதிலை விவாதத்தின் வாயிலாகவே கண்டறிவதும் கூட திரையிடலின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
தமிழ் ஸ்டுடியோ குறுந்திரையரங்கம்:
முதல் மாதம் முழுக்க ஈரான் திரைப்படங்களுடன் தொடங்கிய குறுந்திரையரங்கம், சென்ற ஆகஸ்டு மாதம் முழுவதும் போருக்கு எதிராக மனிதத்தைப் போற்றக்கூடிய திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டன. முதல் திரைப்படமாக ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஸ்லிண்டலர்ஸ் லிஸ்ட் (Schindler's List) திரையிடப்பட்டது. இத்தொடர் திரையிடலில் அனைவருக்கும் பிடித்த படமாக டோக்கியோ ஸ்டோரி (Tokyo Story) இருந்தது எனலாம். மேலும் ஹோட்டல் ருவாண்டா(Hotel Rwanda) போர்க்காலத்தின் குரூரத்தை கண் முன்னே நிறுத்தியப்படம். அனைவரும் நன்கு அறிந்திருந்த பைசைக்கிள் தீவ்ஸ் (Bicycle Thieves), சிட்டிசன் கேன் (Citizen Kane), லா ஸ்ட்ராடா(La Strada) போன்ற திரைப்படங்கள் திரையிடலில் தனித்த இடத்தைப் பிடித்திருந்தன. மூன்றரை மணி நேரங்களுக்கும் மேலான கால அளவு கொண்ட திரைப்படம் மால்கோல்ம் எக்ஸ் (Malcolm X)ம் சென்ற மாத திரையிடலில் இடம்பெற்றிருந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி படத்தொகுப்பாளர் பீ.லெனின் பெயரில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறுகின்றது. எனவே அதற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14 அன்று பீ.லெனின் இயக்கத்தில் வெளிவந்த ”ஊருக்கு நூறு பேர்” திரைப்படம் திரையிடப்பட்டது.
|
மனிதத்தைப் போற்றக்கூடிய திரைப்படங்கள் திரையிடல் முடிந்த பின்பு, நடப்பு மாதமான செப்டம்பர் முழுவதும், இத்தாலியின் நியோ ரியலிசப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்ஸ்டுடியோ அலுவலகத்தில் திரையிடப்பட்டுவருகின்றன. படங்களின் கால அளவுகளைப் பொருத்து மாலை 7 மணி அல்லது 7:30 மணிக்கு திரையிடல் நடைபெற்று வருகின்றது. போர்ச்சூழல் பற்றி விவரிக்கும் ரோஸ்ஸெலினியின் ரோம் ஓபன் சிட்டி(Rome, Open City), மற்றும் ஜெர்மனி இயர் ஜீரோ (Germany, Year Zero), பாய்சான் (Paisan) முதலான படங்கள் சினிமாவின் மீது ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படங்கள். சென்ற மாத திரையிடலில் இடம்பெற்றிருந்த பைசைக்கிள் தீவ்ஸ் திரைப்படமே இந்த மாதத் திரையிடலிலும் இடம்பெற்றிருக்கின்றது. இருப்பினும் எத்தனை முறை திரையிட்டாலும் இப்படத்திற்கு தகுந்த வரவேற்பு தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. பைசைக்கிள் தீவ்ஸ் இயக்கிய, விட்டோரியா டி சிகா-வின் மற்றொரு படமான ஷோஷைன் (Shoeshine) இந்த மாத நியோ ரியலிசத் திரைப்படங்களில் முதலாவதாக திரையிடப்பட்ட படம்.
இனி வரும் நாட்களிலும் முக்கியமான இயக்குனர்களின் படங்கள் திரையிடலுக்கு அணிவகுத்து நிற்கின்றன, குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், விட்டோரியா டி சிகா-வின் டூ உமன் (Two Women), மிராக்கிள் இன் மிலன் (Miracle in Milan), பசோலினியின் இயக்கத்தில் உருவான அக்கட்டோன் (Accattone), டினோ ரிசி போன்ற புதிய அலை இயக்குனர்களின் படங்கள் தவிர்க்க இயலாதவை. ஆர்வமுள்ளவர்கள் பங்கெடுத்துக்கொள்ளலாம். அனுமதி இலவசம்.
முகவரி:
தமிழ் ஸ்டுடியோ அலுவலகம்,
30A கல்கி நகர்,
(அல்லது) வெங்கடேஸ்வரா நகர் 17 வது தெரு,
கொட்டிவாக்கம்
சென்னை.41
சிறுகதை பயிற்சிப் பட்டறை.
இயற்கை வனப்புமிகு திருவண்ணாமலையில், மரங்களும் கூட கதைசொல்லும் எழுத்தாளர் பவா செல்லத்துரையின் தோட்டத்தில் மூன்று நாட்கள் (செப்டம்பர் 12, 13, 14) இந்தச் சிறுகதை பயிற்சிப் பட்டறை வகுப்புகள் நடைபெற்றன. தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்தே இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.
பயிற்சிப் பட்டறை ஆரம்பித்த நாள் செப்டம்பர் 12 அது வேலை நாளான வெள்ளிக்கிழமை. ஆதலால், அன்றைய தினம் நிகழ்வில் பங்கெடுத்துக்கொள்ள முடியாத சிலரும் அடுத்த இரண்டு நாட்கள் தவறாமல் வகுப்பில் தன் இருப்பினை உறுதி செய்தனர்.
சிறுகதை பயிற்சிப் பட்டறையின் இறுதி நாளில், பங்கெடுத்துக்கொண்ட இயக்குனர் மிஷ்கின், “இம்மாதிரியான வசீகரமிக்க இடங்களுக்கு வரும்போதுதான், காதுகளின் செவிப்பறைகள் கூட திறக்கின்றன” என்றார். முற்றிலும் உண்மை. வாகன இரைச்சல் சப்தங்களுக்கும், கூச்சல்களுக்கும் மத்தியில் வாழப் பழகிக்கொண்ட நாம், பட்சிகளின் அழைப்பொலியை இங்கு தான் கேட்க முடிந்தது. கிணற்றில் குளியலும், கூட்டாகச் சேர்ந்து உண்பதும் மறக்கடிக்கப்பட்ட வாழ்வை மீட்கச் செய்வதாகவே அமைந்திருக்கின்றது. மரத்தடியில் வகுப்பு எடுப்பதன் மகிழ்ச்சியை பள்ளிக்காலங்களில் பெரும்பாலானோர் சுவைத்திருக்கக்கூடும். பால்ய காலத்தை மீட்டெடுக்கக்கூடியதான அத்தருணத்தை முதல் நாளே இங்கு தெரிந்துகொண்டோம்.
அந்நியத்தன்மையை உணர இயலாத வீடு. இரவில், சட்டென அனுமானிக்க முடியாதபடி முப்பது பேர் கூடுவார்கள். எந்தச் சலனமும் இருக்காது, மத்தியில் ஒரு குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்கும். அது பவாவின் குரலாக இருக்கும். முப்பது பேரும் அங்கு கதைக்காக ஒன்று கூடியிருப்பார்கள். பசை போல கதை அனைவரையும் ஒட்டிவைத்திருக்கும். சுகானுபவம்.
பவா குடும்பத்தினரின் உணவு உபசரிப்புகளையும், அதன் ருசியையும் அனைவரும் அறிந்ததுதான், ஆகையால் அதனை பிரத்யேகமாக இங்கு குறிப்பிடவேண்டியதில்லை, அறியாதவர்கள் வேண்டுமானால் அவர் வீட்டிற்கு ஒருமுறை சென்று வரலாம்.
அவ்வப்போது பெய்த மழை அடுத்த நாள் காலையை புதிதாக வைத்திருந்தது. குறிப்பாக, ஒரு கூரை வேய்ந்த குடிலின் கீழ் முப்பது பேர் கூடியிருக்கின்றார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன், லா.ச.ராவின் கதையுலகு குறித்தான நுட்பங்களை விவரித்துக்கொண்டிருந்தார். பூமியை தூரலால் நனைத்துக்கொண்டிருந்த வானம், சட்டென மழையாக பொழிகின்றது. ஏதொரு இடைஞ்சலும் இல்லை. மழை எவ்வித இடையூறும் எங்களுக்குச் செய்யவில்லை. கதகதப்பான கதையைக் கேட்க ரம்மியான சூழலை மழை உண்டாக்கி உதவியிருக்கின்றது. அதேபோல முற்றிலும் இருள் சூழ்ந்த வெளியில் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா தன் படைப்புகள் இயங்கும் தளம் குறித்து பகிர்ந்துகொண்டதையும் குறிப்பிடலாம். இந்தப் பட்டறையில் நீண்ட நேரம் வகுப்பு எடுத்தவர்களில் முதலாவதான இடம் எழுத்தாளர் நா.குப்புசாமிக்கு உண்டு. தகுந்த முன் தயாரிப்புகளோடு வந்திருந்த அவர், உலக இலக்கியம் குறித்தும், தன் ஆதர்சமான ரேமண்ட் கார்வர் படைப்புகள் மற்றும் கார்வரின் ஆளுமையான ஆண்டன் செகாவ் குறித்தும் தகுந்த புரிதலை வழங்கினார். பட்டறை முடிந்து வீட்டிற்குச் செல்லும் பலரும் மறக்காமல், நிச்சயமாக உலக இலக்கியத்தை செகாவிலிருந்தும், கார்வரிலிருந்தும் ஆரம்பிப்பதற்கான அடித்தளத்தை ந.குப்புசாமி உருவாக்கித்தந்திருக்கின்றார்.
ஆனால், முதல் வகுப்பு எடுக்கவேண்டிய பிரபஞ்சன், கடைசி வகுப்பு எடுக்கக் கூட வரவில்லை. இது சிறிய ஏமாற்றம். எனினும், முறையான சிறுகதை அறிமுகம் குறித்து, எழுத்தாளர் அஷ்வகோஷ் (ராஜேந்திர சோழன்), எழுத்தாளர்களாகயிருப்பவர்கள் சினிமாவிற்கு வரும்போது ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ராஜீ முருகன், கட்டுரை எப்போது கதையாக மாறுகின்றது, என எஸ்.கே.பி.கருணா, முழு நேர வாசிப்பாளனாக தன் அனுபவம் குறித்து திரு. லிங்கம், ஏன் சிறுகதைகளைப் படிக்க வேண்டும்? என இயக்குனர் மிஷ்கின் போன்றோர் திடீர் விருந்தாளிகளாக வந்திருந்து தன்னிடத்தில் கதைகள் ஏற்படுத்திய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். வகுப்பு எடுக்கின்றபொழுதும், முடிந்த பொழுதும் தன் சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ள ஒவ்வொரு வகுப்பிற்குப் பின்பாகவும் தகுந்த நேரம் ஒதுக்கப்பட்டது. ஆர்வலர்கள் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் தகுந்த இடமாக இதனைப் பயன்படுத்திக்கொண்டனர். கலந்துரையாடலுக்கு எவ்வித தடையுமின்றியே வகுப்புகள் முழுவதுமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
முதல் நாளில், நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டனர். வகுப்புகள் தொடங்கும் முன், பவா செல்லத்துரை ஒவ்வொரு படைப்பாளிகளையும் முறையாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்தப் பட்டியலில் பவா செல்லத்துரை அவர்களும், எழுத்தாளர் என்கிற முறையில் மாணவர்களிடத்தில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கையில், அவருக்கான அறிமுகத்தை தமிழ் ஸ்டுடியோ அருண் செய்தார்.
இந்தப் பட்டறையில் கலந்துகொண்ட நாற்பது ஆர்வலர்களும், வெவ்வேறு இடங்களிலிருந்தும், பணிகளிலிருந்தும் வந்திருந்தனர். இவர்களை இங்கே கூட வைத்திருப்பது கதை எனலாம். வந்திருந்த ஆர்வலர்கள் பலருக்கும் சினிமாத்துறையின் மீதே கனவாக இருந்தது. பொதுவாகவே சினிமாவில் இருப்பவர்களுக்கு இலக்கியப் பரிச்சயம் கிடையாது என்ற புகார் உண்டு. இனி வருங்காலங்களில் இதுபோன்ற கூற்றுகள் வழக்கொழிந்துவிட இம்மாதிரியான பயிற்சிப் பட்டறைகளும் அவற்றிலிருந்து வெளிப்படுபவர்களுமே சாட்சியம் கூறுவார்கள்.
குறிப்பு: வெளியூர் நண்பர்கள் மற்றும் அலுவல் காரணமாக நிகழ்வில் பங்கெடுத்துக்கொள்ள இயலாதவர்களுக்காக, சிறுகதை பயிற்சிப் பட்டறையில் கலந்துரையாடிய படைப்பாளிகளின் கருத்துகள் யாவும் கட்டுரை வடிவில் ஒவ்வொரு பேசாமொழி இதழிலும் வெளிவரும்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |