திரைமொழி - 10
அத்தியாயம் 5 – Production Cycle
film directing
shot by shot
visualizing from concept to screen
Steven D. Katz தமிழில்: ராஜேஷ் |
Production Cycle என்பது, ஒரு திரைப்படம் எடுக்கப்படும் முழுமையான காலகட்டத்தைக் குறிக்கிறது. ஒரு புகைவண்டி ரயில்நிலையத்திலிருந்து வரிசையாகப் பயணிகள் அமர்ந்திருக்கும் பெட்டிகளையும் சரக்குப் பெட்டிகளையும் இழுத்துக்கொண்டு செல்லத் தயாராக இருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள். ரயில் கிளம்பிவிட்ட பின்னர் - படப்பிடிப்பு துவங்கிவிட்ட பின்னர் – படப்பிடிப்பின் காலகட்டத்தில் மாற்றங்கள் செய்வது என்பது மிகக்கடினம். படத்தில் லட்சக்கணக்கான பணமும் ஆட்களும் பங்கேற்க ஆரம்பிக்குமுன்னர், திட்டமிடும் நேரத்தில் மட்டுமேதான் இனி வரும் வேலைகளில் மாற்றங்கள் செய்ய இயலும். மாறாகப் படப்பிடிப்பு துவங்கியபின்னர் இப்படி வேலைகளை மாற்றுவதால் எக்கச்சக்கமான பொருள் வீணாகிவிடும். எனவே, இப்படித் திட்டமிடும் மிக முக்கியமான நேரத்தில்தான் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆகியோர் ஒன்றுகூடி, இனிவரும் வேலைகளுக்கான பட்டியல் தயாரிப்பது வழக்கம். இந்த நேரத்தில்தான் ஒரு இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை இதற்குக் கைகொடுக்கும். பின்னால் வரப்போகும் வேலைகளை இப்போதே யோசித்துப் பார்த்து அவற்றில் ஏதேனும் மாற்றங்கள் வரப்போகின்றனவா – எப்படியெல்லாம் அவைகளைச் செயல்படுத்தலாம் – அப்படிச் செய்யும்போது நேரும் பிரச்னைகளுக்கு மாற்றுவழிகள் யோசிக்கப்பட்டிருக்கின்றனவா, என்பதெல்லாம் ஒரு இயக்குநர் தனது தொலைநோக்குப் பார்வையால் சிந்திக்கவேண்டிய விஷயங்கள்.
இத்தனை ஏற்பாடுகள் இருந்தாலும், ஒரு திரைப்படத்தில் என்னென்ன வேலைகள் நடக்கப்போகின்றன என்பதெல்லாம் முன்னறிந்து கூறமுடியாதவைதான். அதுதான் படப்பிடிப்பின் விசித்திரம். ஆனால் இது ஒருவகையில் நல்லதாகவும், அதேசமயம் கெட்டதாகவும் இருக்கிறது என்று சொல்லலாம். நல்லது ஏனெனில், இப்படிப்பட்ட பிரச்னைகளால் திடீரெனத் திரைப்படத்தில் எதிர்பாராமல் சில காட்சிகளோ, நடிகர்களோ, வசனங்களோ மாற்றப்பட்டு அதனால் அந்தப் படம் இன்னும் நன்றாக அமையக்கூடும். அதேசமயம், இப்படிப்பட்ட பிரச்னைகளால் நேரும் கால இழப்பு மற்றும் பொருள் இழப்பு ஆகியவை இந்தச் சமயங்களில் கெட்டதாகவும் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், பிரச்னைகள் நேராமல் இருக்க தொலைநோக்குப் பார்வையும் துல்லியமான திட்டமிடுதலுமே சிறந்த வழிகள்.
எந்தத் திரைப்படமாக இருந்தாலும், அவைகளை எப்படிப் படமெடுத்து முடிக்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். அந்தந்தப் படங்களில் ஒரு இயக்குநர் என்பவர் படப்பிடிப்புத் தளத்தில் நேரக்கூடிய மாற்றங்கள், கேமராவை வைக்கும் கோணங்கள் ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கிறார். செட்கள், காஸ்ட்யூம்கள், ப்ராப்பர்ட்டி எனப்படும் விதவிதமான பொருட்கள் ஆகியவையெல்லாம் அந்தந்தப் படங்களில் வேலைசெய்யும் ப்ரொடக்ஷன் டிஸைனரின் மேற்பார்வையின் கீழ் வருகின்றன.
முக்கியமாக, ஒவ்வொரு இயக்குநரும் தனக்கேயுரிய பாணியில் வேலைசெய்வதன்மூலம் தன்னால் இயன்ற பங்களிப்பை எந்த விதத்தில் சிறப்பாக அளிக்க முடியும் என்பதில் தெளிவாக இருத்தல் நல்லது. இதனால்தான் இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் படப்பிடிப்புக்கான வழிமுறைகள் முடிந்தவரை குறிப்பாக இல்லாமல் எளிதில் இசைந்துகொடுக்கும் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கின்றன. அதேபோல் படத்தின் உருவாக்கத்தைப் பற்றிய ஒரு செயல்முறை விளக்கமாகவும் இவைகளைக் கருதமுடியும்.
ஒரு படத்தின் தயாரிப்பில் விஷுவலைசேஷன் (தொலைநோக்குப் பார்வையில் திட்டமிடுதல்) என்பது இரண்டு வகைப்படுகிறது. முதலில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் தேவைப்படக்கூடிய யோசனைகளையெல்லாம் திரட்டி, படத்தின் மையக் கருவை எப்படியெல்லாம் சிறப்பாக வெளிப்படுத்தலாம் என்று திட்டமிடுவது; அடுத்ததாக, முடிந்தவரை எளிமையாக இவற்றையெல்லாம் அலசி, இருப்பதிலேயே சிறந்த, நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய யோசனைகளை வைத்துக்கொண்டு பிற விஷயங்களைக் கழித்துக் கட்டுவது. நமது திரைப்படம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, இந்த இரண்டு வகையான திட்டமிடுதல்கள் மொத்தம் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1. Scriptwriting – திரைக்கதை எழுதுதல்
2. Production Design
3. Script Analysis – எழுதப்பட்ட திரைக்கதையை அலசி, அதை இன்னும் சிறந்ததாக ஆக்குதல்
4. Cinematography – ஒளிப்பதிவு
5. Rehearsal – ஒத்திகைகள்
இந்த உட்பிரிவுகளுக்கு எத்தனை நேரத்தை ஒதுக்கீடு செய்வது என்பது ஒவ்வொரு திரைப்படத்தையும் பொறுத்து மாறுபடும். உதாரணத்துக்கு ஒரு ஆக்ஷன் திரைப்படத்துக்கு இவற்றையெல்லாம் திட்டமிட்டு உருவாக்குதல் நேரம் எடுக்கும். அதுவே ஒரு உணர்ச்சிபூர்வமான படத்துக்கு இவைகளை ஒப்பீடளவில் குறைந்த கால அளவில் உருவாக்க முடியும். அதேபோல் விநியோகமும் (distribution) சந்தைப்படுத்துதலும் (Marketing) முக்கியம். ஹாலிவுட்டில் எப்போதும் பெரிய ஸ்டுடியோக்கள் தயாரிக்க்ம் படங்களுக்கான தயாரிப்பு வேலைகள், பட வெளியீட்டுக்கு ஒரு வருடம் முன்னரே துவங்கிவிடுகின்றன. ஆனால் பெரிய ஸ்டுடியோக்கள் இல்லாமல் Independent films என்று அழைக்கக்கூடிய குறைந்த பட்ஜெட் படங்கள் அப்படித் தயாரிக்கப்படுவன அல்ல. மிகக்குறைந்த கால அளவில், எக்கச்சக்க நேரடிப் பிரச்னைகளைச் சந்தித்தே அவை தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம் இந்தப் படங்களில் உள்ள இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படங்களில் ஸ்டுடியோக்களால் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் இயக்குநர்களைப் போலல்லாமல் சுதந்திரமாக செயல்படும் தன்மையுடையவர்கள். பெரிய இயக்குநர்களுக்கே இந்தச் சுதந்திரம் கிடைப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான ஜான் சேய்ல்ஸ் (John Sayles), தனது தனிப்பட்ட தயாரிப்பான The Return of the Secausus Seven என்ற படத்தை இப்படித்தான் தயாரித்தார். நகைச்சுவையான, குறைந்த பட்ஜெட் Horror படங்களுக்குத் திரைக்கதை எழுதியே தனது படத்தின் தயாரிப்புக்கான பட்ஜெட்டை சம்பாதித்தார். அதன்பின் படத்தை எடுத்தபின்னர் தானே எடிட்டும் செய்தார். அவருக்கு எடிட்டிங் என்றால் என்னவென்றே தெரியாது என்பதுதான் இங்கே முக்கியம். இப்படிக் கஷ்டப்பட்டதால், பெரிய பெரிய படங்களில் வேலைசெய்தே சம்பாதிக்கக்கூடிய அனுபவத்தை ஒரே படத்தில் பெற்றார் சேய்ல்ஸ். இதுபோன்ற குறைந்த பட்ஜெட் Independent படங்களை எடுத்த பல இயக்குநர்கள் இப்போது ஹாலிவுட்ட்டில் பெரிய இயக்குநர்களாக இருப்பதைக் காணலாம் (Quentin Tarantino, Robert Rodriguez, Richard Linklater முதலியோர்). இவர்களெல்லாம் இப்படிக் கஷ்டப்பட்டுதான் விலைமதிப்பில்லாத அவர்களது அனுபவங்களைப் பெற்றனர். இதுமட்டும் ஒரு திரைப்படத் தயாரிப்புக்குப் போதுமானது அல்ல என்றாலும், இவையும் மிக முக்கியமான விஷயங்கள் என்பதால் இங்கே குறிப்பிடப்படுகிறது.
இப்போது மேலே பார்த்த ஐந்து பிரிவுகளை விரிவாகக் கவனிக்கத் துவங்குவோம்.
Phase One: ScriptWriting
ஹாலிவுட்டின் சரித்திரத்தில், மிக ஆரம்ப காலத்திலேயே, ஒரு காட்சிக்குத் தேவையான விபரங்களைத் தனியாகவும் விஷுவலாக எடுக்கப்படவேண்டிய வசனங்களைத் தனியாகவும் எழுதிக்கொள்ளும்வகையிலான இப்போது வழங்கப்படும் திரைக்கதை வடிவம் தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், ஒரு திரைக்கதையை இப்படித்தான் எழுதவேண்டும் என்ற எந்த உறுதியான விதியும் இல்லை (அதேசமயம், எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட திரைக்கதை வடிவத்தைத்தான் ஸ்டுடியோக்களின் பிரதிநிதிகள் படித்துப் பார்க்கவே எடுத்துக்கொள்வது வழக்கம். பெரிய இயக்குநர்களின் திரைக்கதைக்குத்தான் எந்த விதிகளும் இல்லை என்றே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்) பிரபல திரைக்கதையாசிரியர் டேவிட் பைர்ன் (David Byrne) எழுதி வெளியிட்ட True Stories என்ற படத்துக்கான திரைக்கதை மற்றும் ஸ்டோரிபோர்ட்கள் அடங்கிய புத்தகத்தின் முன்னுரையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
‘இந்தப் படத்தின் கட்டமைப்பு, இயக்குநர் ராபர்ட் வில்ஸனுடன் நான் வேலைசெய்தபோது அவரது பாணியைப் பார்த்துக் கவரப்பட்டு உருவானது என்று சொல்லலாம். நாடகமோ திரைப்படமோ, எதுவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காட்சியை உருவாக்கும்போது முதலில் விஷுவலாக அந்தக் காட்சியை எப்படிக் காட்டவேண்டும் என்று யோசித்து, பின்னர் ஒலிகளையும் வசனங்களையும் உருவாக்க முயல்வது அவரது பாணி. அதேபோல் நானும் முதலில் பல ஓவியங்களை ஒரு சுவற்றில் பரவலாக வரைந்தேன். அவையெல்லாம் ஒரு நகரத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்கள். அதன்பின் அந்த ஓவியங்களில் ஒருவிதத் தொடர்ச்சி அமையும்படி அவைகளை மாற்றியமைத்துக்கொண்டே இருந்தேன். அதேசமயத்தில் அந்த ஓவியத்தில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு, உள்ளூர் பத்திரிக்கைகளில் வரும் பெயர்களைச் சூட்டினேன்’.
ஆனால் இத்தகைய முயற்சிகள் திரைக்கதையாசிரியர்களிடையே மாறுபடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். டேவிட் பைர்ன் எழுதிய திரைக்கதை, ஸ்டுடியோக்களின் நிர்வாகிகளைக் கவரும் வகையில் எழுதப்படவில்லை. அவருக்குப் பிடித்த கதையை அவரது இஷ்டப்படியே எழுதினார். இதனால் அவருக்கு, அந்தத் திரைக்கதையை முற்றிலும் செப்பனிட்டுச் சரிசெய்யப் போதுமான நேரம் கிடைத்தது. அதேசமயம் அவரது பிரத்யேக வழிமுறையால், படத்தின் திரைக்கதையில் விஷுவல்களையும் வசனங்களையும் சரியாகப் பிரித்து எழுதி, நல்லதொரு திரை அனுபவம் ஆடியன்ஸுக்குக் கிடைக்கும் வகையில் எழுதவும் அவரால் முடிந்தது. ஹாலிவுட்டின் வழிமுறைகளைப் பொறுத்தவரை இந்தப் படம் ஒரு மரபுவழியான, வழக்கமான படம் அல்ல. இதற்குக் காரணம், அவர் பின்பற்றிய ஓவிய வழிமுறைதான். கூர்ந்த கவனிப்பு (observation) என்பதே இங்கே முக்கியமானதாக இருந்தது. தனது திரைக்கதையை உருவாக்கும் நேரம் முழுதும் உள்ளூர் பத்திரிகைகளைக் கவனித்துக்கொண்டே இருந்தார் பைர்ன். அவற்றில் எழுதப்படும் செய்திகளை நன்றாகப் படித்து உள்வாங்கி, அதனை அவரது பிரத்யேக ஓவிய வழிமுறைக்குள் வைத்தார்.
இதன்மூலம் நாம் கவனிக்கவேண்டியது, வழக்கமான திரைக்கதை வழிமுறையில் முதலில் வார்த்தைகளைத்தான் நாம் எழுதுவோம். வசனங்களை ஒரு பக்கத்தின் நடுவே எழுதி, அவற்றின் மேலேயும் கீழேயும் விவரிப்புகளை எழுதுவதே ஹாலிவுட் திரைக்கதை வழிமுறை. ஆனால் அதனைப் பின்பற்றாமல், முதலில் ஒரு நகரத்தின் பல்வேறு சம்பவங்களை ஓவியமாக வரைந்து, அதன்பின் அவற்றை மாற்றியமைத்து, அதில் இருக்கும் கதாபாத்திரங்களுக்குப் பத்திரிக்கைகளில் இருந்து பெயர்களைச் சூட்டி பைர்ன் உருவாக்கிய திரைக்கதை வழிமுறை, ஹாலிவுட் திரைக்கதையமைப்புக்கு முற்றிலும் தொடர்பில்லாதது. எனவே, நமக்கு எப்படியெல்லாம் எழுதத் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் திரைக்கதைகளைச் சுதந்திரமாக எழுதமுடியும் என்பதைக் காட்டத்தான் பைர்னின் உதாரணம் சொல்லப்பட்டுள்ளது.
Memory and Research
ஒரு திரைக்கதை எழுத, குறிப்பிட்ட காட்சிகளுக்கான படங்களையும் ஓவியங்களையும் தன்னுடன் வைத்துக்கொள்வது உதவலாம். உதாரணமாக, குழந்தைகளைப் பற்றி எழுத, குழந்தைகளின் படுக்கையறை, அவர்கள் அவ்வப்போது உபயோகிக்கும் பொருட்கள் ஆகியவற்றின் புகைப்படங்களை நம்முடன் வைத்துக்கொள்ளலாம். இவைகளைக் கவனிப்பதன்மூலம் காட்சிகள் இன்னும் நன்றாக எழுதப்படக்கூடும். அதேபோல் ஒரு காட்சியைப் படமாக்குகையில் அந்தக் காட்சியில் என்னென்ன பொருட்கள் இருக்கலாம் என்பது இந்தப் புகைப்படங்களைப் பார்த்தாலே புரிந்துவிடும்.
ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க, பொதுவாக அந்தக் கதாபாத்திரத்துக்கான கேரக்டர் ஸ்கெட்ச் – கதாபாத்திரத்தின் முழு விபரங்களும் (பிறப்பதற்கு முன்னாலேயே அவர்களின் பெற்றோர்களைப் பற்றியும் இதில் இருக்கும்) அடங்கிய குறிப்புகள் – எழுதிக்கொள்வது திரைக்கதையாசிரியர்களின் வழிமுறை. இதனால் அந்தக் கதாபாத்திரங்கள் துல்லியமாகவும் தத்ரூபமாகவும் உருவாகும். இதற்கும் பல்வேறு வகையான புகைப்படங்கள் உதவலாம்.
Connections
பொதுவாக ஹாலிவுட்டில் Index Cards எனப்படும் சிறீய வடிவிலான அட்டைகளில் ஒவ்வொரு அட்டையிலும் ஒரு காட்சியின் சுருக்கம் எழுதிக்கொள்ளப்படுகின்றன. இந்த அட்டைகளை ஒரு பெரிய போர்டில் ஒட்டவைத்து, அவற்றின் இடையே உள்ள தொடர்புகளைத் திரைக்கதையாசிரியர்கள் யோசிப்பது வழக்கம். முடிந்தவரை அவைகளை இடம்மாற்றியும் பார்த்து, அதனால் காட்சிகள் என்னென்ன பாதிப்பை அடைகின்றன; அவற்றுக்குள்ளே இருக்கும் தொடர்பு எப்படி மாறுகிறது என்றெல்லாம் கவனிப்பார்கள். இதேபோல் வரிசையாக ஒவ்வொரு காட்சியையும் குறிக்கும் படங்களையும் வைத்து யோசித்துப் பார்க்கலாம்.
இந்தப் படங்களால் என்ன நன்மை என்றால், ஒரு காட்சியைத் திரைக்கதையில் இருந்து படிப்பதற்கும், அது சம்மந்தப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதுதான். உதாரணமாக, ஒரு மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றித் திரைக்கதையில் படிப்பதற்கும், அந்தச் சம்பவங்கள் புகைப்படங்களாகக் காட்டப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை யோசித்துப் பாருங்கள் (அறுவைசிகிச்சை நடக்குமிடம், நோயாளிகளின் அறை, வரவேற்பறை, ஓய்வறைகள், மருத்துவமனையின் உணவகம் ஆகியவற்றைப் படங்களாகப் பார்த்தால், அந்தக் காட்சிக்கான மனநிலை யாருக்குமே உடனடியாக உருவாகிவிடுமல்லவா?). இந்த மனநிலை மாற்றத்தை ஒரு திரைக்கதையின் பக்கங்களால் மெதுவாகத்தான் உருவாக்க முடியும்.
Sound and Music
அதேபோல், குறிப்பிட்ட காட்சிகளை எழுதும்போது அதற்கேற்ற இசையைக் கேட்டுக்கொண்டே எழுதுவது அந்தக் காட்சியை இன்னும் தத்ரூபமாக எழுதவைக்கும் தன்மையுடையது. காட்சிக்கான மனநிலையும் காட்சியின் வேகமும் இதனால் இன்னமும் நன்றாக அமையும். அமையலாம். போலவே, குறிப்பிட்ட காட்சிக்கான இசையின்மூலம் அதன் ஒளிப்பதிவாளருக்கும் எடிட்டருக்குமே பல யோசனைகள் தோன்றலாம்.
அதேபோல் ஒவ்வொரு காட்சியிலும் இடம்பெறும் ஒலிகளும் காட்சிகளைத் துல்லியமாக மாற்றவல்லன. திரைக்கதை எழுதும்போது அந்தந்த ஒலிகளைத் திரைக்கதையாசிரியர் கேட்பது எப்போதும் நல்லது. உதாரணமாக ஒரு தெருவில் நடக்கும் காட்சிகளை எழுதும்போது அதன் பலவகையான வாகன ஒலிகள், ஆம்புலன்ஸின் ஒலி, மக்களின் பேச்சு போன்ற பல்வேறு ஒலிகள் அடங்கிய குறிப்புகளைக் கேட்கலாம். காட்டைப் பற்றி எழுதும்போது பறவைகள், மிருகங்களின் ஒலிகளைக் கேட்கலாம். இது கற்பனை சக்தியை அதிகரிக்கும். நடிகர்களுக்கும் உதவும்.
A Visual Sketchbook
ஒரு படத்தை இயக்கும்போது அதன் இயக்குநருக்கு விஷுவலாகக் காட்சிகளை அமைக்கும் விதம் தெரியவேண்டும். அதற்கு, கேமராவின் மூலம் தனது சுற்றுப்புறத்தைப் பார்ப்பது, படம் பிடிப்பது ஆகியவை உதவும். தற்காலத்தில் மிகச்சிறிய கேமராக்கள் வந்துவிட்டதால் இது இன்னும் சுலபம். கேமராவுக்குப் பின்னர் வேலைசெய்வது எத்தகையது என்பதை இயக்குநர் உணர்ந்தால் காட்சிகள் நன்றாக அமையும். கேமராவின் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஒலிகளும் படங்களும், பின்னர் நிஜமான திரைப்படத்தில் இடம்பெறக்கூடிய காட்சிகளையும் ஒலிகளையும் நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
அடுத்த இதழில் இரண்டாவது பிரிவான ப்ரொடக்ஷன் டிஸைன் என்பதைக் கவனிக்கலாம்.
தொடரலாம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |