இதழ்: 18     ஆடி (15 - 30) (July 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
தியடோர் பாஸ்கரனுடன் - யமுனா ராஜேந்திரன் உரையாடல் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ் ஆனந்தன் - 5 - தினேஷ் குமார்
--------------------------------
தமிழில் சினிமா சஞ்சிகைகள் - அறந்தை மணியன்
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 4 - பி.கே.நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 4 - நிமாய் கோஷ் - சுனிபா பாசு
--------------------------------
கே.வி. சுப்பண்ணா உடன் ஒரு நேர்காணல் - சந்திப்பு: ஞாநி
--------------------------------
நூல் விமர்சனம் - முரண்படும் படிமங்கள் - கே.எஸ்.சங்கர்
--------------------------------
திரைப்படம் எடுப்பது: சில குறிப்புகள் - அகிரா குரோசவா
 
   


   

 

 

கே.வி. சுப்பண்ணா உடன் ஒரு நேர்காணல்

- சந்திப்பு: ஞாநி


பார்வையாளர்கள் கருத்து எனக்கு முக்கியமல்ல!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருக்கு 350கி.மீட்டர் தொலைவில் ஷிமோகா மாவட்டத்தில் ஹெக்கோடு என்ற கிராமம் இப்போது உலக அளவில் கலைப்பட ரசிகர்களுக்கு தெரிந்த பெயராகியிருப்பதற்குக் காரணமானவர் கே.வி.சுப்பண்ணா.

பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன் சொந்த கிராமமான ஹெக்கோடுவில் சத்யஜித் ரே, குரோசவா, பெர்க்மன், ஃபெலினி, ஐசன்ஸ்டன் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களை கிராம மக்களுக்கு இலவசமாக காட்டி ஒரு புதிய சாதனை முயற்சியைத் தொடங்கினார் சுப்பண்ணா. நாடகக்காரராகவும், இலக்கியவாதியாகவும் அதற்கும் முன்பே பரவலாக அறியப்பட்டிருந்த சுப்பண்ணா ‘பேட்டில்ஷிப் பொடாம்கின்’, ‘ரஷமோன்’, ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ முதலிய திரைக்கதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.

1949ல் தன் 17-வது வயதில் சுப்பண்ணாவும் அவரது சிநேகிதர்களுமாக ஹெக்கோடுவில் தொடங்கிய நீலகண்டேஸ்வர நாட்டிய சேவா சங்கம் (சுருக்கமாக –’நிசாசம்’) தற்போது நாடகப்பள்ளி, திரைப்படக்கழகம், நூல்வெளியீட்டு நிறுவனம் என்று பலகிளைகளாக உருவெடுத்திருக்கிறது.

கிராம மக்களிடையே நாடகத்தைப் பரப்பும் பணிக்காக சுப்பண்ணாவைப் பாராட்டி இந்த ஆண்டு மக்ஸ்ஸே விருது (பிலிப்பைன்ஸிலிருந்து) வழங்கப்பட்டிருக்கிறது. விருது தொகையான எட்டு லட்சம் ரூபாயை கர்நாடகத்தில் ஐந்து கிராமங்களில் நாடக அரங்கம் அமைக்கப் பயன்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் சுப்பண்ணா.

மக்ஸ்ஸே விருது பெற்றவர்கள் பலரும் அண்மையில் சென்னையில் சந்தித்து பேசியதையொட்டி சுப்பண்ணாவும் வந்திருந்த போது, சென்னை ஃபிலிம் சொசைட்டியும் கைவினைப்பொருட்கள் கழகமும் அவருடன் ஒரு ‘நேருக்கு நேர்’ சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தன. அந்த நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாக அவரது அறையில் நிகழ்த்திய உரையாடலிலிருந்து சில பகுதிகள்;

நல்ல நாடகம், நல்ல திரைப்படம் இரண்டையும் அவாவி அவற்றுக்காக உழைக்கும் உங்களுக்கு இவற்றில் ஈடுபாடு வந்தது எப்போது? எப்படி?

இந்தியாவுக்கு சுதந்திரம் வந்த சமயம். எங்கள் கிராமத்தில் இருந்த மற்ற நண்பர்களோடு சேர்ந்து நானும் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். எங்களுக்கு பல கனவுகள் இருந்தன. எல்லாம் சுதந்திரப் போராட்டத்தால் ஏற்பட்ட கனவுகள், நாங்கள் தினசரி சந்திக்கவும் கூடிப்பேசவும் ஒரு அமைப்பு தேவை என்று தோன்றியதால் நிநாசத்தை ஆரம்பித்தோம்.

வருடத்துக்கு ஓரிரண்டு நாடகங்கள் தயாரித்து நடத்தினோம். மற்றபடி விவாதங்கள், கூட்டங்கள் நடத்தி வந்தோம். ஒரு ஏழெட்டு கிலோ மீட்டார் சுற்றளவுக்குள் இருந்த பத்து கிராமங்களிலிருந்துமாக எங்கள் நண்பர்கள் குழு அமைத்திருந்தது. ஆரம்பத்திலிருந்து நாங்கள் நாடகம், திரைப்படம், இலக்கியம் என்று மட்டும் இல்லாமல் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபாட்டுடன் இருந்தோம்.

அந்த சமயத்தில் நீங்கள் பார்ப்பதற்கு எப்படிப்பட்ட நாடகங்கள், சினிமாக்கள் இருந்தன?

குப்பி வீரண்ணா போன்றோரின், கம்பெனி நாடகங்கள், யட்ச கான பயலாட்டா நிகழ்ச்சிகள். அப்போது , புதிதாக நாடகங்கள் எழுதிய கைலாசம், ரங்கா முதலியோரின் எழுத்துக்களை நாங்கள் விரும்பிப் படித்தோம். அவை நவீன யதார்த்த பாணியில் இருந்தன. பின்னால் நாங்கள் நாடகம் போடும்போதும் நவீன யதார்த்த பாணி நாடகங்களையே தயாரித்தோம்.

கன்னடத்தில் சிறுபத்திரிக்கை இயக்கம் ஏதும் அப்போது இருந்ததா?

நிறைய புது எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். ந்யூ ரைட்டிங்க் என்று கூறப்படும் இலக்கியம் பாவலாயிருந்தது. நாங்கள் கூட ஒரு வாரப்பத்திரிக்கையை சுமார் ஒன்றரை வருடங்கள் நடத்தினோம். உருட்டச்சு முறையில் 700 பிரதிகள் அடித்து விநியோகித்து வந்தோம்.

பிறகு நான் மைசூருக்கு கன்னட இலக்கியப் பட்டப்படிப்புக்கு சென்றபோது பத்திரிக்கை நின்றுவிட்டது.

சினிமாக்களைப் பொறுத்தமட்டில் அப்போது அமெரிக்கப் படங்கள்தான் நிறைய பார்க்க கிடைக்கும். பிரிட்டிஷ் கம்பெனிகள் கூட அமெரிக்கப்படங்களையே விநியோகித்து வந்தன.

1951- 1952ல் தான் நிலைமை மாறியது. முதல் முறையாக உலகத் திரைப்பட விழா இந்தியாவில் நடத்தப்பட்டது. ஜவஹர்லால் நேரு அதற்கு முயற்சி எடுத்தார். அப்போதுதான் திரைப்படப்பள்ளி ஆரம்பிக்கும் யோசனையும் வந்தது. மேரி சீட்டனை(Marie Seaton) அழைத்து ஒரு மத்திய திரைப்படக் களஞ்சியத்தை ஏற்படுத்தித்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்தப் படவிழாவுக்கு வந்திருந்த திரைப்படங்களில் சிலவற்றை வர்த்தகரீதியில் கொட்டகைகளிலும் காட்டினார்கள். ராஷோமன், பைசைக்கிள் தீவ்ஸ், தி பிட்டர் ரைஸ் நாங்கள் பார்த்தோம். அந்த அனுபவம் ஒரு பரவசமான அனுபவம். அப்படித்தான் எங்களுடைய சினிமா ரசனை ஆரம்பமாயிற்று.

1954ல் நான் படிப்பு முடிந்து, கிராமத்துக்குத் திரும்பினேன். சத்யஜித் ரே, ‘பதேர் பாஞ்சாலி’ படத்தை உருவாக்கியிருப்பது பற்றியெல்லாம் கேள்விப்பட்டோம். படித்துத் தெரிந்து கொண்டோம். ஆனால் நாங்கள் எந்த முயற்சியிலும் அப்போது ஈடுபட இயலவில்லை. ஒரு பத்தாண்டுகள் கழித்து 1963 வாக்கில், எங்கள் கிராமத்துக்கருகே உள்ள தாலுகா தலைமையிடமான சாகர் டவுனில் ஒரு பிலிம் சொசைட்டியைத் தொடங்கினோம். ரேர் டேஸ்ட்ஸ் க்ளப் (Rare Tastes Club) என்று அதற்கு பெயர்.
அந்த க்ளப்பில்தான் ரே, ரித்விக் கடக் படங்களை கல்கத்தாவிலிருந்து வரவழைத்து உறுப்பினர்களுக்குப் போட்டுக் காட்டினோம். தனியே ப்ரொஜக்டர் வசதிகள் இல்லை. உள்ளூர் சினிமா கொட்டகையில் ஞாயிற்றுக்கிழமை காலைக் காட்சியாக நடத்துவோம்.

பிறகு 1967ல் புனேவில் வகுப்பில் நடந்த முதல் திரைப்பட ரசனைப் பயிற்சி வகுப்பில் நான் கலந்து கொண்டேன். யுனெஸ்கோ உதவியுடன் நடந்த அந்த வகுப்புகளுக்கு மேரி சீட்டன் இயக்குநராக இருந்தார். அந்த ஆறுவாரப் பயிற்சிதான் எனக்கு ஒரு புதிய உலகத்துக்கே வழி திறந்து விட்டது.

அதையடுத்து ஹெக்கோடுவில் ஒரு பிலிம் சொசைட்டியை ஆரம்பிக்க விரும்பினோம். அங்கே புரொஜக்டர் வசதிகள் கிடையாது. எனவே முதலில் சினிமா பற்றிய புத்தகங்களை எழுதி வெளியிடத் தொடங்கினோம். 1972ல் ‘பேட்டில்ஷிப் பொட்டெம்கின்’ பற்றி 250 பக்கத்தில் கன்னடத்தில் புத்தகம் எழுதினேன். படத்தின் முழு ஸ்கிரிப்டையும் மொழிபெயர்த்திருத்திருந்தேன். ஐசன்ஸ்டைன் பற்றிய விவரமான கட்டுரையும் அதில் இடம்பெற்றது. அடுத்த வருடம் மேரி சீட்டன் இந்தியாவுக்கு வந்தபோது எங்கள் கிராமத்துக்கு வந்திருந்தார். அவருடைய வருகை, தந்த உத்வேகத்தில் 1975ல் பிலிம் சொசைட்டியை ஆரம்பித்தோம். 1977ல் திரைப்பட விழாவை நடத்தினோம். தினசரி படங்களுமாகத் திரையிட்டு பத்து நாட்கள் நடத்தினோம். எல்லோருக்கும் இலவச அனுமதி.

செலவுக்கு என்ன செய்தீர்கள்?

நன்கொடைகளாக வசூலித்தோம். எங்கள் நடவடிக்கைகள் எல்லாமே அப்படித்தான் செய்யப்பட்டு வந்தன. விழாச்சிறப்பிதழ் வெளியிட்டு விளம்பரங்கள் வாயிலாகவும் வசூல் செய்தோம்.

உங்கள் சங்க உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைகளில் எல்லாம் உங்களோடு ஈடுபட்டு வருகிற நண்பர்கள் யார்? இலக்கியவாதிகளா? கல்லூரி ஆசிரியர்களா? எந்த தொழிலில் ஈடுபட்டுவந்தார்கள்?

அப்போது எல்லாருமே இளைஞர்கள் பெரும்பாலும் என் கிராமத்தையும் சுற்றியுள்ள கிராமங்களையும் சேர்ந்த விவசாயிகள். மற்றபடி சாகர் டவுனில் உள்ள ஆசிரியர்கள், பல்வேறு வியாபாரிகள் போன்றோர் சங்கத்தில் இருந்தார்கள். எல்லாருமே நல்ல சினிமா, நல்ல இலக்கியம், நல்ல நாடகம் முதலியவற்றில் ஆர்வமாக இருந்தவர்கள்.

77ல் திரைப்படவிழாவாக மட்டுமே நடத்தினோம். அடுத்த வருடத்திலிருந்து அத்துடன் சேர்த்து திரைப்பட ரசனைப் பயிற்சி வகுப்புகளும் ஆரம்பித்தோம்.

இவற்றுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 100 பேர் வரை வந்து கலந்து கொண்டார்கள். சதீஷ் பகதூர், நாயர் போன்றவர்கள் வகுப்புகள் நடத்தினார்கள்.

படங்களைப் பொறுத்தமட்டில் யாரும் பார்க்க வரலாம் என்றே வைத்திருந்தோம். சுமார் ஆயிரம் பேர் உட்காரக் கூடிய அரங்கம் கட்டியிருந்ததால் எத்தனைபேர் வந்தாலும் சரி என்று நினைத்தோம். விரும்புகிறவர்கள் பணம் தரலாம். கட்டணம் என்று எதுவும் வைக்கவில்லை.

வர்த்தக சினிமாக்களைத் திரையிடும் கொட்டகைகள் உங்கள் பகுதியில் எத்தனை உண்டு?

சாகர் டவுனில் மூன்று கொட்டகைகள் இருந்தன. இந்திப்படங்கள், கன்னடப்படங்கள், அமெரிக்கப்படங்கள் காட்டப்பட்டு வந்தன. ஹெக்கோடுவில் கொட்டகை கிடையாது. எட்டு பத்து கிலோமீட்டர் தொலைவு சென்று தான் படம் பார்க்க முடியும். அப்படிப்போய் வர்த்தக சினிமா பார்க்கக்கூடியவர்கள் எங்கள் கிராமத்தில் சுமார் 25 சதவிகிதம் பேராவது உண்டு. வாரம் ஒரு படமாவது அவர்கள் பார்த்திருப்பார்கள். மற்றவர்கள் வருடத்துக்கு 3 அல்லது 4 படங்கள் பார்த்திருக்கக்கூடும்.

உங்கள் பகுதியில் இருந்தவர்களின் படிப்பறிவு நிலை எப்படிப்பட்டதாக இருந்தது.? இலக்கிய ஆர்வம் ஏற்படும் அளவுக்கு நிறையப் படித்தவர்கள் உண்டா?

மாநில சராசரியை விட எங்கள் பகுதியில் படித்தவரக்ள் விகிதம் அதிகம்தான். இப்போது சுமார் 63 சதவிகிதம் இருக்கலாம். அப்போது கூட 50க்கு மேலேதான் இருந்தது. பெரும்பாலானவர்கள் பிராமணர்கள். முறையான கல்லூரிப்படிப்புக்குப் போகாத விவசாயிகளாக அவர்கள் இருந்தபோதும், யாரும் எழுத்தறிவு இல்லாதவர்கள் கிடையாது. படிக்கத் தெரிந்தவர்கள்தான்.

உங்களுடைய முயற்சிகள் நடைபெற்ற சூழல் ஒரு கிராமத்துடையது. அங்குள்ள சனாதானிகளோ, அரசியல் அமைப்புகளோ இத்தகைய முயற்சிகளை எப்படி எதிர்கொண்டார்கள்?

நான் வெளியாள் அல்ல. அதே கிராமத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதில் பெரிய பிரச்னைகள் எதுவுமில்லை. சனாதானிகள் எதிர்க்கவில்லை. அதிகபட்சம் முணுமுணுத்தார்கள் இதெல்லாம் வீண்வேலை என்பதாக விவசாயிகள் ஏன் இப்படி நேரத்தை வீணாக்க வேண்டும் என்று பேசினார்கள். அவ்வளவுதான்.

அரசியலைப் பொறுத்தமட்டில் எங்கள் கிராமத்தின் அரசியல் என்பது எங்கள் ஊடாகத்தானே நடக்க வேண்டியிருந்தது. 1947 சமயத்தில் விடுதலைப் போராட்டத்தின் பாதிப்பு எங்களுக்கெல்லாம் இருந்தது என்றாலும் போகப்போக அதன் தாக்கம் ஏதும் இல்லை.

எங்கள் பகுதியில் சோஷலிஸ்ட் இயக்கம் பிரபலமாகவும், வலுவாகவும் நடைபெற்றது. பின்னால் தேவராஜ் அர்ஸ் முதலமைச்சராகி நிலச்சீர்த்திருத்தங்கள் செய்த காலம் வரையிலும் சோஷலிஸ்ட் இயக்கம் பலமானதாகவே இருந்து வந்தது. நான் அதில் தீவிரமாக இருந்து வந்தேன்.

என் நண்பர்கள் பலர் காங்கிரசில் இருந்தார்கள். ஆனால் இந்த வேறுபாடுகள் நிநாசம் பணிகளை பாதிக்கவில்லை. காங்கிரசில் இருந்த என் நண்பர்கள் கூட சோஷலிச கருத்துக்களை ஆதரிக்கிறவர்களாகவே இருந்தார்கள்.

கலாச்சாரத்துறையைப் பொறுத்தமட்டில் அரசியல் கட்சிகளின் அணுகுமுறை பொதுவாக சீரற்றதாகவும் ஆழமற்றதாகவும் உள்ள பிரச்னை இருக்கிறது. உங்கள் அனுபவம் எப்படி?

எங்களுடைய கலாச்சார வேலையை கட்சி முக்கியமானதாக கருதவில்லை. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. சில நபர்கள் மட்டுமே ஈடுபாட்டுடன் இருந்தார்கள். கோபால் கெளடா (கர்நாடகத்தின் புகழ்மிகுந்த சோஷலிஸ்ட் தலைவர்) போன்ற சிலர் அடிக்கடி எங்கள் நாடகங்களுக்கு வருவார்கள். அக்கறையோடு கலந்து கொள்வார்கள்.

ஐம்பதுகளில் நீங்கள் இப்படிப்பட்ட முயற்சிகளை தொடங்கியபோது இருந்த சூழ்நிலையை இப்போதுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிட முடியுமா?

அது மிகவும் கடினம். அப்போதுள்ள நிலைமைகளுக்கும் இப்போதுள்ளவற்றுக்கும் இடையே நிறைய நுட்பங்களும், சிக்கல்களும் இருக்கின்றன. ஒரு புறம் இந்தியா முழுவதுமே சமூக சீரழிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். மதிப்பீடுகள் குலைந்துவிட்டன என்று தோன்றுகிறது.

இன்னொரு புறம் சமூகம் ஜனநாயகமயப் படுத்தப்படுவதால் இடைக்காலத்தில் நிகழும் வேதனையான மாற்றங்கள்தான் இவை என்று தோன்றுகிறது. அப்படிப்பார்த்தால் இதிலொன்றும் தவறில்லை என்று சொல்லலாம்.

தவிர அப்போது இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் சதவிகிதத்துக்கும் இப்போது ஈடுபடுகிறவர்களின் சதவிகிதத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்போது பெரும்பாலும் மேல் ஜாதிக்காரர்கள் – மேல் வர்க்கத்தினர் மட்டுமே இதற்கெல்லாம் வந்தார்கள். இப்போது அடுத்த அடுக்குகளில் உள்ள ஜாதியினரும் வர்க்கத்தினரும் கூட இவற்றில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.

என்னுடைய ஜாதிய அவியக் பிராமணர்கள் 1940 – 50களில் ஏறத்தாழ ஒரு பழங்குடியினரைப் போலத்தான் இருந்தார்கள். யாகங்கள் செய்யவும் காவியம் எழுதவும் வடக்கேயிருந்து (எல்லா பிராமணர்களும் சொல்லிக்கொள்வது போல) கடம்ப மன்னன் அழைப்பின்பேரில் அவர்கள் மூதாதையர் வந்தார்களாம்! அன்று எங்கள் ஜாதியில் ஒரு பட்டதாரி கூட கிடையாது. தொழில் விவசாயம்தான். இப்போது ஏராளமான பட்டதாரிகள். எல்லா ஜாதிகளிலுமே நிறைய பட்டதாரிகள் வந்துவிட்டார்கள்.

ஒரு கிராம அளவில் ஜாதி மிகவும் வெளிப்படையாக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களின் ஜாதிவாரியான பங்கு என்ன?

மேல்ஜாதி, மேல்வர்க்கத்தைச் சேர்ந்த பார்வையாளர்கள்தான் ஆரம்பத்தில் உண்டு. இப்போது மற்றவர்களும் வருகிறார்கள். நாங்களும் எல்லோரும் வரவேண்டும் என்ற பிரக்ஞையோடு வேலை செய்கிறோம். ஆனாலும் இன்னும் கூட அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.

நிநாசத்தின் செயல்பாடுகளில் உறுப்பினர்களாக தீவிரப்பங்காற்றக் கூடியவர்கள் இன்னமும் மேல்ஜாதி மேல்வர்க்கத்திலிருந்துதான் வந்தவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் வருவது இன்னமும் அரிதாகவே இருக்கிறது.

இதற்கு காரணம் உங்கள் அமைப்பையே ஒரு குறிப்பிட்ட மேல் ஜாதி அல்லது வர்க்கத்தின் க்ளப் என்பதற்காக மற்ற ஜாதியினர் கருத நேர்ந்ததாக கூட இருக்கலாம் அல்லவா? ஒரு நகரத்தைவிட கிராமத்துச் சூழலில் இதற்கு சாத்தியம் அதிகமாயிற்றே?

அதுவும் உண்மைதான். ஆனால் இது நிநாசத்தின் பிரச்னை மட்டுமல்ல. எல்லா கிராமங்களிலும் இருக்கிறது. இந்திய சமூகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருக்கிறது. நிநாசம் மட்டுமாகத் தனியே இதைத் தீர்த்துவிடவும் முடியாது. சமூகம் முழுவதுமாகத்தான் தீர்த்தாக வேண்டும்.

நீங்கள் சார்ந்திருந்த சோஷலிஸ்ட் அரசியல் இயக்கம் இதைத் தீர்க்க உதவவில்லையா?

நிச்சயமாக உதவியிருக்கிறது. ஆனால் அது மட்டும் போதவில்லை. ஏனென்றால் இது சமூக விருப்பு வெறுப்பு பற்றிய பிரச்னை மட்டும் அல்ல. இதற்கு ஒரு பொருளாதாரப் பின்னணியும் இருக்கிறது. இப்படிப்பட்ட கலாச்சார செயல்களிலும் ஈடுபடத் தேவைப்படும் பொருள் வசதி – வசதியின்மை பிரச்னையும் இருக்கிறது. முந்தைய கலாச்சாரப் பின்னணியும் முக்கியமனது. ஒரு ‘தலித்’ இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு வருவதாகவே வைத்துக்கொள்ளலாம். அவர் பங்கேற்பதை யாரும் எதிர்க்கவோ தடுக்கவோ செய்யாவிட்டாலும் கூட மற்றவர்களுக்கு ஆயிரமாயிரம் வருடங்களாக மரபாக இருந்து வந்த கலாச்சார பின்னணியினால் கிடைத்துள்ள வசதிகள், அவருக்கு இல்லாத நிலையில் தான் அவர் செயல்பட வேண்டியிருக்கிறது.

உங்கள் பார்வையாளர்களில் தற்போது எல்லா பிரிவினரும் உண்டல்லவா? நீங்கள் காட்டும் சினிமாக்கள் பற்றி அவர்களுடைய பதில்விளைவுகள் என்ன?

எல்லா பிரிவுகளும் பார்க்கிறார்கள். ஆனால் யட்சகான பயலாட்ட நிகழ்ச்சிகளுக்கு கூடத்தான் இதுபோன்ற கலவையான பார்வையாளர்கள் வருகிறார்கள். அவர்களுடைய பதில் விளைவு பற்றி சொல்ல எதுவுமில்லை.

யட்சகானத்துக்கும் உங்கள் நிகழ்ச்சிக்கும் வித்தியாசம் உண்டா? அதில் கதைகள் தெரிந்தவை. புராண இதிகாச விஷயங்கள்தான். நீங்கள் காட்டும் ‘பேட்டில்ஷிப் பொடெம்கின்’, ‘ரோஷமான்’, எல்லாம் சமூக பிரச்சனைகளை – சமகால செய்திகளைத் தாங்கியவை ஆயிற்றே? வடிவரீதியாகவும் அவர்களுக்குப் பழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து இவை மாறுபட்டிருக்கின்றனவே?இவற்றைப் பற்றியெல்லாம் பார்வையாளர்களுக்கு அபிப்ராயங்கள் இருக்குமல்லவா? அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பவில்லையா?

அந்த அபிப்ராயங்களை மதிப்பிடுவது மிகவும் சிரமமானது. அப்படிப்பட்ட மதிப்பீடுகளில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நிறைய கத்தை கத்தையாக கேள்வித்தாள்கள் நிரப்பப்பட்டு எங்களிடமும் இருக்கின்றன. ஆனால் அந்த பதில்களோ, நேரடி பேட்டிகளில் கிடைத்த கருத்துக்களோ எனக்கு முக்கியமாகப் படவில்லை. ஒரு நுட்பமான செயல் ஏற்படுத்திய தாக்கத்தை அப்படியெல்லாம் அளக்கமுடியாது என்று நான் நினைக்கிறேன். பதிலளிக்கிறவரும் சற்று விழித்துக் கொள்கிறார். நாமே கூட நம்மீது ஏதோ ஒன்று ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி உடனடியாகச் சரியாகச் சொல்லிவிடமுடியாது.

அப்படி அளவிடுகிற முயற்சிகளெல்லாம் முயற்சிப்பதற்கான அவசியமற்றவை என்று நான் நினைக்கிறேன். நான் செய்ய விரும்புவதை நான் செய்துகொண்டே போகவேண்டியதுதான்.

இது ஒரு கர்மயோகி மனப்பான்மையா? விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் காரிய மாற்றச் சொல்லும் கீதை வழியைப் பின்பற்றுகிறீர்களா?

அப்படி இல்லை. எதனுடைய தாக்கத்தையும் எப்படி அளவிடமுடியும்.? புத்தர் ஏற்படுத்திய தாக்கம் என்பது என்ன?, என்று இப்போது சொல்ல முடியுமா? காந்தியின் தாக்கம் என்ன? அஹிம்சை, தர்மம் எல்லாம் பேசப்பட்ட நாடு முப்பதே வருடத்தில் நரகம் மாதிரி இருக்கிறது. தாக்கத்தை எப்படி அளப்பது? நியண்டர்தால் மனிதன் காலத்திலிருந்து பார்த்தோமானால் மனிதன் பெருமளவு முன்னேறி வந்துள்ளதாகச் சொல்லலாம். எதையும் விளக்க கால அவகாசம் தேவைப்படும், இப்போது எதுவும் சொல்ல முடியாது. வருடாந்திரத் திரைப்படவிழா, ரசனைப் பயிற்சி முகாம் முதலியவற்றை இப்போது 14 வருடங்களாக நடத்தி வந்திருக்கிறீர்கள்? அடுத்த தலைமுறையின் பங்கேற்பு எப்படியிருக்கிறது?

நிறைய இளைஞர்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் நாடக குழுவில் பயிற்சி பெற்றவர்கள் வேறு இடங்களில் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இப்போது இந்த வருடாந்திர விழா நாடு முழுவதும் அறியப்பட்டிருக்கிறது. பல இடங்களிலிருந்து வருகிறார்கள்.

இப்படிப் பிரபலம் ஏற்பட்டு வெளிநபர்கள் பங்கேற்பு அதிகமாவதால் கூடவே ஒரு போலித்தனம் இந்த நடவடிக்கைக்கு வந்துவிடுகிறதல்லவா? இது ஒரு மோஸ்தராக மாறுவதால் ஏற்படுகின்ற போலித்தனம்?

ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் அதைத் தவிர்க்க முடியாது. இரண்டு விதமான கலாச்சாரங்கள் மோதும்போது இவையெல்லாம் நிகழத்தான் செய்கின்றன. முதல்முறையாக ‘பதேர்பாஞ்சாலி’ படத்தைப் பார்த்தால் அந்தப்படம் கூட என் ’இன்னொசன்சை’ (பேதமையை)இழக்கச் செய்கிறது. அதற்காக அதைப்பார்க்காமல் இருக்க முடியாது. இந்த மோதல் நடந்துதான் தீரவேண்டும்.

உங்கள் நடவடிக்கைகள் பரவலாக வரவேற்பு பெறும் அதே சமயத்தில் கர்நாடகத்தில் ஃபிலிம் சொசைட்டி இயக்கம் நலிவடைந்திருப்பதற்கு என்ன காரணம்? இருபது அமைப்புகள் இருந்ததிலிருந்து 4, 5 ஆக சுருங்கிவிட்டது ஏன்?

அதற்குக் காரணம் டெலிவிஷன்தான். ஃபிலிம் சொசைட்டியின் இப்போது தங்கள் பயனை இழந்துவிட்டன. அவை செய்து வந்ததை டெலிவிஷன் செய்கிறது. உலக அளவில் தரமான படங்களை டெலிவிஷன் காட்டிவிடுகிறது. அதனால் ஃபிலிம் சொசைட்டிகள் இப்போது தேவைப்படவில்லை.

உங்களுடைய இந்தக் கருத்து சர்ச்சைக்குரியது. ஏனென்றால் எல்லா நல்ல படங்களும், டெலிவிஷனில் வருவதில்லை. தவிர பெரிய திரை அனுபவமும், சிறிய திரை அனுபவமும் வேறு என்பது உள்ளவரை சொசைட்டி தேவைப்படும். இது ஒரு முடிவற்ற விவாதமாக நீளுமென்பதால் அடுத்த பிரச்சனைக்கு போவோம். கர்நாடகத்தில் பிலிம் சொசைட்டி மட்டும் குறையவில்லை. காரந்த், கர்னாட், ஜி.வி.அய்யர் போன்றோர் தொடங்கிய புதிய சினிமா தயாரிப்பு முயற்சிகளே குறைந்துவிட்டன. மலையாளத்திலும் வங்கத்திலும் இப்படி ஆகவில்லை. ஏன்?

இதற்கு சுலபமாக பதில்கூறமுடியாது. நிறைய காரணங்கள் இருக்கலாம். சற்று சிக்கலான விஷயமாகத் தோன்றுகிறது.

கன்னட இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மிகச்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் ஏராளமாக வந்தன. பிறகு எண்பதுகளின் இறுதியில்தான் கர்னாட் எழுதிய நல்ல நாடகம் வந்தது. லங்கேஷ், தேஜஸ்வி ஆகியோரின் நல்ல படைப்புகள் வந்தன. சில சமயம் இப்படித்தான் ஆகிறது. இதற்கு சமூகவியல் காரணங்கள் உண்டு என்று நினைக்க முடியவில்லை. நேரடி சமூகக் காரணம் உள்ளதாக தோன்றவில்லை. கர்நாடகத்தில் ஒரு காலத்தில் மைசூரில் மிகச் சிறந்த பரதநாட்டியக் கலைஞர்கள் இருந்தார்கள். இப்போது ஒரு நல்ல நாட்டியக் கலைஞர் கூட இல்லை. இதையெல்லாம் நேரடியாக சமூக காரணத்துடன் பொருத்திப் பார்க்க முடியாது. இது மிகவும் சிக்கலான பிரச்னை. சினிமாவைப் பொறுத்தவரை வர்த்தக சினிமா கூட நெருக்கடியில்தான் இருக்கிறது. பலகொட்டகைகளை மூடுகிறார்கள். கமர்ஷியல் படங்கள் கூடப்பழைய மாதிரி வெற்றிபெறுவதில்லை. இதில் பொருளாதாரம் சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும் லட்சியவேகம் இருக்கும்போது இவை தடையாக இல்லை என்பதுதானே உண்மை? மலையாளத்தில் ஜான் ஆப்ரகாமும் ஒடிஸா அமைப்பும் தெருக்களில் பணம் வசூலித்துப் படம் எடுக்க முடிந்திருக்கிறதே? சமூகவியல் காரணங்களுக்கும் கலாச்சார எழுச்சிக்கும் தொடர்பு பலமாகவே இருக்கிறது என்பதுதான் என் கருத்து. பொதுவாக ஆண்ட்டி – எஸ்டேப்ளிஸ்மெண்ட் (ஆதிக்க எதிர்ப்பு) உணர்வுகள் மேலோங்கும் காலங்களில் கலை இலக்கிய வெளிப்பாடுகளும் வளமடைந்துள்ளன. விடுதலைப் போராட்ட காலத்தில் பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு கூர்மையடைந்த அறுபதின் இறுதிகளில் எழுபதுகளின் தொடக்கத்தில்; பின்னர் நெருக்கடி நிலையிலிருந்து விடுதலை பெற்ற கட்டத்தில் எண்பதுகளின் இறுதியில் தொண்ணூறுகளில் அத்தகைய பெரிய சமூகக் கூர்மைகள் எழுச்சிகள் லட்சியவேகங்கள் இல்லை. அதனால் கலைஇலக்கியத்திலும் தேக்கம் என்று பார்க்கலாமே!?

உங்கள் ஆய்வு மதிப்பீடு சரியானதாகவே தோன்றுகிறது. ஆனால் இன்னும் சிக்கலான பிரச்னை இது. என்றாலும் முன்னேற்றம் நேர்க்கோட்டில் நிகழ்வதல்ல. அது சுழற்சியானது. எனவே மீண்டும் கலாச்சார எழுச்சி வருமென்றும் நம்புவோம்.

(இந்த நம்பிக்கையான தீர்மானத்துடன் உரையாடலை முடித்துக்கொள்ள முடிவு செய்தோம்)

(சலனம் அக்டோபர் – நவம்பர் ’91)

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி. தொடர்புடையவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், கட்டுரை நீக்கப்படும்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </