உலக சினிமா சாதனையாளர்கள் - 4
நிமாய் கோஷ்
- சுனிபா பாசு :: தமிழில்: எம்.பால்சுப்பிரமணியன் : தட்டச்சு உதவி: தினேஷ் குமார் |
மிகக் குள்ளமான உருவம் டி சர்ட், ஹவாய் செருப்பு, தோளில் ஒரு துணிப்பை ஆகியவைகளுடன், திரைப்பட சங்கங்களின் திரையிடல்கள், அமெரிக்கன் செண்டர், இப்ரிட்டிஷ் கவுன்சில், மேக்ஸ் முல்லர் பவன் திரையிடல்கள் போன்றவைகளிலும் சில வேளைகளில் அப்படங்களைப்பற்றி அறிமுகம் தந்து கொண்டும் உள்ள ஒரு மனிதரை, நல்ல திரைப்படங்களில் ஆர்வம் கொண்ட எவரும் பார்க்க தவறி இருக்க மாட்டார்கள். அவர்தான் நிமாய்கோஷ்.
நிமாய் தனது ஐம்பத்து ஐந்து ஆண்டு கால திரையுலக வாழ்வில் பல்வேறு நிலைகளில், அதாவது காமிரா மேதையாக, இயக்குனராக, கல்வியாளராக, திரைப்பட சங்க அமைப்பாளராக, தொழிற் சங்கவாதியாக பரிமளித்திருக்கிறார். சிறிய ஸ்டூலில், பாரமான காமிராவினை கையாளத் துவங்கிய அந்த குள்ள உருவ மனிதர் திரைப்படத் துறையில் தொழிற் நுட்ப மாற்றங்களுக்கு என பல பரிமாணங்களை சந்தித்து, யுமாட்டிக் நாடாவில் சுவீடன் நாட்டு செஞ்சிலுவை சங்கத்திற்கு வண்ணத்தில் செய்திப்படம் எடுத்துத் தரும் நிலைவரை உயர்ந்திருந்தார்.
|
1914, மே 17ஆம் நாள் வளமான குடும்பத்தில் பிறந்த நிமாய் என்கின்ற பிமலேந்து தனது குழந்தை பருவத்தினை டாக்காவில் (தற்பொழுது பங்களாதேஷில் உள்ளது) கழித்தார். அவர் எட்டாவது வயதில் முதன்முதலில் பயாஸ்கோப் பார்த்த நாளிலிருந்து திரைப்படங்களின் மீது ஆர்வம் கொண்டார். பேசும் படங்களின் வருகை திரைப்படங்களின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தினை அதிகமாக்கியது. இளம் பருவத்தில் கதாநாயகனாக திரையில் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், அது சாத்தியமின்மையால், திரைப்பட இயக்குனராக ஆக வேண்டும் என முடிவெடுத்தார். இதற்கு, முதலில் படப்பிடிப்பு கலையில் வல்லுநராக தன்னை ஆக்கிக் கொள்ள தீர்மானித்தார். தனது இளம் வயது முதலே, நிமாய் திரைத்துறை தொடர்பான பத்திரிக்கைகள் வாயிலாக காட்சி அமைப்பு படமெடுக்கும் முறை போன்றவைகள் பற்றியும், தான் பார்க்கும் படங்கள், அவைகளின் தொழிற்நுட்பங்கள் பற்றிய விளக்கங்களையும் தனது கருத்துக்களையும் குறிப்பெழுதி வைத்துக்கொண்டார். தனக்கு பிடித்த இயக்குனர்களாகிய ஜான் ஃபோர்டு, ஃப்ரிட்ஜ் லங், ஹிட்ச்காக் போன்றவர்களின் படங்களைக் கண்டு திரைப்படத் தயாரிப்பின் அடிப்படை விதிமுறைகளை தனக்குத் தானே கற்று தெரிந்து கொண்டார். பொழுது போக்கிற்கு மட்டுமின்றி, சமூக கண்ணோட்டமும் கொண்டவை திரைப்படங்கள் என்ற நம்பிக்கையினை சாப்ளினின் படங்கள் அவருக்குத் தந்தன.
நிமாய் அவர்கள் திரையுலகில் நுழைவது, அவரது தந்தையாருக்கு பிடிக்கவில்லை. உறவினர் ஒருவரின் கடையில் வேலைப் பார்த்து வந்த நிமாய், கடையின் வாடிக்கையாளர் ஒருவரின் உதவியினால் பரூவா பிக்சர்ஸ் தயாரிப்பான அஹே மஜ்லு மான் என்ற படத்தின் காமிரா நிபுணராக பணியாற்றியவரிடம் எந்தவித பணமும் பெறாத உதவியாளராக சேர்ந்தார்.
பத்தொன்பதாவது வயதிலேயே தனியாக செய்திப்படம் ஒன்றிற்காக பணியாற்றும் வாய்ப்பினை பெறும் அளவுக்கு காமிரா நுட்பங்களைக் கற்றுக் கொண்டார். இத்துணை இளம் வயதிலேயே இது போன்ற வாய்ப்பினை பெற்றவர் நிமாய் ஒருவராக மட்டுமே இருக்க முடியும். பெரும்பாலும் அவரின் ஆரம்ப காலப் பணி டாக்குமெண்டரி படங்களாகவும், அரசின் விளம்பரப் படங்களாகவுமே அமைந்தன. மேற்கண்டவாறு உண்மை நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் கையாளக் கூடிய சிறந்த திறமை பெற்றமையால் பிற்காலத்தில் குறிப்பிடத்தக்க சில செய்திப் படங்களை அவரால் தர முடிந்தது. இவைகளில் ஒன்று எல்.வி.பிரசாத் இயக்கத்தில் உருவான “வீரேஷ் லிங்கம் பந்தலு” என்ற டாக்குமெண்டரி படமாகும். 1966ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு நிமாய் தயாரித்து தந்த “விதி எண் 93ம் மல்லிகைப் புதரும்” என்ற டாக்குமெண்டரிகள் அரசு செய்திப்படங்களில் சிறந்தவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நூற்றாண்டின், நாற்பதாம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் சுதந்திரமான கேமரா மேனாக இருந்தார். மேலும் இந்திய மக்கள் நாடக சங்கத்துடன் [I.P.T.A] தன்னை இணைத்துக் கொண்டு காவியம் படைத்த இந்திய நாடகமாகிய நபானாவில் தன் பங்கினை அளித்தார். இதுபோன்ற கலைவடிவங்கள், மக்களிடம் நல்ல கருத்துக்களை சேர்த்து, விழிப்புணர்வினை தூண்டும் கருவிகள் என்ற எண்ணத்தால் தூண்டப்பட்டார். அவர் மார்க்சீய கருத்துக்களை மனதார ஏற்றுக்கொண்ட போதிலும், தன் வாழ்நாள் முழுவதும் எந்த கம்ப்யூனிஸ்ட் இயக்கத்திலும் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.
இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்ட போது, பிரிவினை காரணமாக வெள்ளம் போன்று எண்ணற்ற அகதிகள் கல்கத்தாவின் வீதிகளில் நிரம்பி வழிந்தார்கள். மேற்கண்டவைகளின் பாதிப்பையும், தனது எதிர்ப்பினையும் காட்டும் வண்ணம் ஒரு படத்தினை நிமாய் எடுத்தார். இயற்கைக்கு புறம்பாக , இந்திய துணைக் கண்டம் பிளவுப்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட பாதிப்புகளை வெளிக்காட்டிய ஒரே படம் நிமாய் கோஷின் சின்னமுள் (1951) ஆகும் . இது கோஷின் கடினமான உழைப்பினால் உருவாக்கப்பட்ட மனித ஆவணமாகும். பிரிவினையின் பாதிப்பினைக் காட்டும் உண்மையான செய்திப்பட காட்சிகளோடு, கதை நிகழ்ச்சிகளை இணைத்து அது உருவாக்கப் பட்டது. ரஷ்ய நடிகர் சேர்கசாவ், இயக்குநர் புதோகின் ஆகியோர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றதோடு மட்டுமின்றி, வெளிநாட்டு படங்களை தருவிக்கும் சோவியத் நிறுவனத்தால் (SOVEXPORT) வாங்கப்பட்டு, ஒரே நேரத்தில் சோவியத் நாட்டில் 181 திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் இந்தியப் படமும் ஆகும். இந்தப் படத்திற்கு நம் நாட்டில் உரிய அங்கீகரிப்பு கிடைக்காமல் போனதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. சின்னமுள் இங்கு முதன்முதலில் வெளியான போது இத்தகைய திறமையான படைப்பினைப் பாராட்டும் நிலையில் பார்வையாளர்களும் விமர்சகர்களும் இல்லை. தீவிர கண்ணோட்டத்துடன் திரைப்படங்களை காண்பது பற்றி யாருக்கும் எடுத்து சொல்லப்படவில்லை. முதன்முதலாக இந்தியாவில் திரையிடப்பட்டபோது; இந்தப்படம் அறிவுப்பூர்வமான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படவில்லை. சமகாலத்திய உண்மையான நடப்பினை, நேர்மையான அணுகுமுறையில் தந்தமை , வங்காள பத்திரிகைத்துறையை மட்டும் சிறிது அச்சுறுத்தியது. குறைவான வசனங்களையே கொண்டிருந்தபோதும் வங்காள மொழி அறிந்தோர் அல்லாமல் பிறருக்கு, மொழி மாற்று விளக்க குறிப்புகள் (Subtitiles) இல்லாமல், இப்படத்தினை புரிந்து கொள்வது கடினமான ஒன்றே. மேலும் குடும்ப நிகழ்ச்சிகளை சித்தரிக்கும்போது கையாளப்படும் அணுகுமுறையும், வங்காளத்தினை கிராமிய பேச்சு மொழியும் தவிர்க்கப்பட்டு, காப்பிய உணர்வூட்டும் இலக்கிய மொழிநடை அமைந்த தன்மை கையாளப்பட்டது. குறைந்த தயாரிப்பு செலவு, தொழில்முறை நடிகர் அல்லாதவர்களை நடிக்க செய்தமை. தனது இயக்கத்தில் உருவான முதல் படம் போன்ற பல தடைகளையும், சிறப்பு அம்சங்களாக மாற்றிக்கொண்டு வெளிவந்த படம். கோஷின் படங்களில் மழைத் துளியினையே மழையாகவும், வழி தவறிய நாயினை, பாழாகி பறிதவிக்கும் குடும்பத்திற்கும், பூட்ஸ் கால்கள் கதவினை உதைப்பதினை காவல்துறையின் முரட்டுத்தனத்திற்கும் உருவகமாக அமைத்தது. அவர் இத்துறையினை முழுமையாக புரிந்து கொண்டமையினை காட்டுகிறது. பின்னணி இசையின் துணை கொண்டே துன்பத்தின் உச்சத்தை நாம் உணரும் தன்மையினை ஏற்படுத்தினார். தனது படத்திற்கும் இந்தியாவின் முதல் நியோ ரியலிச படம் என்ற தவறான முத்திரையை அளித்தார்.
அவர் சின்னமுள் படத்தினை தயாரிப்பதற்கு முன் எந்த ஒரு நியோ ரியலிச படத்தையும் பார்த்தவரில்லை. (இந்தியாவில் வேறு யாரும் கூட பார்த்திருக்க சாத்தியமில்லை) ஆனால் அது குறித்து இத்தாலிய இயக்குனர்களின் சோதனை முயற்சிகளைப் பற்றியும், சில புகைப்படங்களையும், திரைப்பட தொடர்பான பத்திரிக்கைகள் வாயிலாக அறிந்திருந்தார். தனதுகற்பனையின் துணை கொண்டு, சொந்த முயற்சியால், தொழில் முறை நடிகர் அல்லாதவர்கள் ஐம்பது சதவீதமும், திரையுலகில் அறிமுகமில்லாத இந்திய மக்கள் நாடக சங்கத்தினைச் சேர்ந்த நாடக நடிகர்களை மீதமும் கொண்டு இப்படத்தினை தயாரித்தார். பிற்காலத்தில் திரையுலகில் புகழ் பெற்ற ரித்விக் கட்டக், பிஜான் பட்டாசார்யா, சாரு பிரகாஷ் கோஷ், சோவா சென், கங்கபாடா பாசு போன்றவர்கள் நியோ ரியலிச திரைப்படத்தில் நடிப்பது போல் மேக்கம் இல்லாமல் நடித்தார்கள். உண்மையில் புதோகின், ஐஸன்ஸ்டீன் போன்ற இயக்குனர்களின் படைப்புகள் தந்த உத்வேகமே இப்படி ஒரு படத்தை நிமாய் தர காரணமாயிருந்தது. தனது படத்திற்கான வேலைகளை துவக்கும் முன்பு ‘போர்க்கப்பல் பொத்தோம்கின்’ படத்தின் 16 மி.மீ பிரதியை பலமுறை ஒவ்வொரு காட்சியாக பார்த்து பார்த்து ரசித்தார். ஆகவே பல மேதைகளுடைய படைப்புகளின் பாதிப்பே சின்னமுள் போன்ற ஓர் உன்னத படைப்பு தோன்ற காரணம். இது ஒரு நியோ ரியலிச படைப்பாக திரைப்பட விமர்சகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் படத்தின் தாக்கம் இரண்டு தலைமுறைக்கு வங்காள இயக்குனர்களை சென்றடைந்தது. சத்யஜித்ராய், ரித்விக் கட்டக், மிருணாள் சென் மற்றும் விமர்சகர்கள் இப்படம் பல்வேறு வகையில் முன்னோடியாக அமைந்திருந்தமையினை ஒப்புக் கொள்கிறார்கள்.
|
இந்தப் படம் முதன்முதலில் ரஷ்ய நாட்டில் திரையிடப்பட்டபோது நிமாய் கோஷ் அவர்களுக்கு ரஷ்யாவுக்கு வர அழைப்பு வந்தபோதும், நமது இந்திய அரசின் உள்துறை அவருக்கு பாஸ்போர்ட் கொடுக்கவில்லை. 1951ம் ஆண்டு முதன்முதலில் திரைப்பட பிரதிநிதிகளின் குழு (ரஷ்யாவுக்கு சென்ற இந்தியாவின் இரண்டாவது கலை பிரதிநிதிகளின் குழு) ரஷ்யாவுக்கு சென்றபோது அதில் இடம் பெற்ற தொழிற்நுட்ப கலைஞர் கோஷ் மட்டுமே, ரஷ்யாவில் அவருக்கு சென்னையிலிருந்து பிரதிநிதிகளாக வந்திருந்த என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், கே.சுப்ரமணியம் ஆகியோரின் நட்பு கிடைத்தது. அவர்கள் கோஷினை சென்னைக்கு வந்து பணியாற்ற அழைப்பு விடுத்தனர். கோஷின் ரஷ்ய பயணம், அவரை கம்ப்யூனிஸ்ட் எற முத்திரையிட்டு, பாரபட்சம் காட்டி வேலையின்மை என்ற நிலைக்கு கொண்டு சென்றது. மேலும் கல்கத்தாவில் நடந்த உலகப்படவிழாவின் போது என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நிமாய்க்கு சென்னை வர தான் விடுத்த அழைப்பினை உறுதிப்படுத்த, அதனை ஏற்று சென்னைக்கு வர நிமாய் முடிவு செய்தார். இருந்தபோதிலும், பணமின்மையால் சென்னை வருவதற்கு புகை வண்டிக்கு மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டு வாங்குவதற்கு, ரஷ்யாவில் தனக்கு அன்பளிப்பாக தரப்பட்ட காமிராவினை விற்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சென்னையில் என்.எஸ்.கே மற்றும் சுப்ரமணியம் போன்றவர்கள் தாங்களே அவரை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியாத நிலையில் திரையுலகினர். இதனால் முதன்முதலில் 1952 மார்ச்சில் கல்கியின் பொய்மான் கரடு கதையினை தழுவி ஏ.டி. கிருஷ்ணசாமியின் இயக்கத்தில் டி.ஆர். ராமச்சந்திரன் நடிக்க, உருவான ”பொன்வயல்”, படத்தில் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றார்.
சென்னையில் ஸ்டுடியோக்கள், கல்கத்தாவினை விட சிறந்த சாதனங்களை கொண்டவைகளாக விளங்கின. இதனால் வல்லவரான நிமாய் கோஷ் சிறந்த முறையில் படம் பிடித்து பலரின் பாராட்டுதல்களை பெற்றார். விரைவிலேயே ஒரு நாளைக்கு மூன்று ஷிப்டுகள் என்று இடைவிடாத பணியில் ஈடுபடலானார். உறக்கம் கூட அவருக்கு அந்த வேளைகளில் காரில்தான். அவர் அப்போது பணியாற்றிய படங்களின் கதையம்சம் வழக்கத்திலிருந்து மாறுபட்டவைகளாவோ, முற்போக்கானவைகளாகவோ இல்லாதிருப்பினும், அப்போதைய தரமான இலக்கியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, படமாக்கிய விதத்தில் சிறிதும் விரசம் தோன்றாமலும் அமைந்திருந்தன.
இவ்வாறு கோஷ் பணியாற்றுகையில், தமிழ் மொழியினை கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டார். அனைவரிடமும் நட்போடு பழகினார். ரஷ்யா சென்று வந்த காமிரா கலைஞர் என்று அனைவராலும் மதிக்கப்பட்டு, தொழிற்நுட்பாளர்கள், தொழிலாளர்கள் போன்றோர்களின் அன்பையும், ஆதரவினையும் மெதுவாக பெறத்துவங்கினார். அந்த நாட்களில் தொழிற்நுட்ப கலைஞர்களுக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட குறைவாகவும், சில வேளைகளில் காலம் தாழ்த்தியுமே தரப்பட்டன. மேலும் தாங்களே தங்களின் சம்பளத்தை வேண்டுமென்றே குறைத்துக் கொண்டு ஒருவர் வாய்ப்பினை மற்றொருவர் பறித்துக் கொள்ளும் நிலைமையும் இருந்ததால் அவர்கள் சுரண்டப்பட்டார்கள். இதுபோலவே கோஷ் அவர்களின் சம்பளமும் ஒரு கட்டத்தில் தாமதமாக வரும் நிலைமை வந்தது. ஒரு படத்தயாரிப்பாளர் நடிகர்களுக்கு சம்பளத்தை ஒழுங்காகத் தந்துவிட்டு , நிமாய்க்கு தரவேண்டிய பணத்தை தர தாமதித்ததால், நண்பர்களின் ஆலோசனைப்படி அப்படத்திற்கு வேலை செய்வதினை நிறுத்தினார். தொழிற்நுட்ப கலைஞர்களும், தொழிலாளர்களும் கோஷின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தமையால், படத்தயாரிப்பாளர் நீண்ட நாட்களாக தராமல் வைத்திருந்த தொகையை உடன் தந்து படப்பிடிப்பினை தொடரும் நிலை ஏற்பட்டது. அனைவரும் தன்னிச்சையாக ஒருமித்து முன்வந்து கோஷிக்கு ஆதரவு தந்தமை அவரது தொழிலில் பின்விளைவுகளை ஏற்படுத்தியது. அவர் திரைப்படத் தொழிலாளர்கள் ஒன்றுபடுத்த துவங்கினார்.
திரைப்பட தொழிற் நுட்பக் கலைஞர்கள் சங்கம் இருந்தபோதிலும் அது ஓர் அமைப்பு போல்தான் செயல்பட்டு வந்தது. சங்கத்தில் தொழிலாளர்களை சேர்ப்பது கடினமாக இல்லையெனினும், தொழிற்நுட்ப கலைஞர்களும், தொழிலாளர்களும் இதில் சேருவதற்கு தயங்கினார்கள். 1957ல் திரைப்பட தொழிற் நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் ஸ்தாபன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிமாய் கோஷ் பதினான்குமுறை, அதாவது 1972ல் அச்சங்கம் தானே கலைக்கப்படும் வரை அதன் தலைவரகாக இருந்தார். இச்சங்கம் துவக்கப்பட்ட சிறிது காலத்திற்கு பிறகு, அரசு கச்சாபிலிம் இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டதால், திரைப்பட தயாரிப்பிலும் சரிவு ஏற்பட்டு, தொழிலாளர் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அரசின் இக்கொள்கையினை எதிர்த்து போராடுவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைப்பாளராக நிமாய் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரைப்படத்துறையில் பணிபுரிவோர் ஊர்வலம், கூட்டம் போன்றவற்றை நடத்தினர். இக்கூட்டத்தில் முன்னணி நட்சத்திரங்கள், எம்.ஜி.ஆர். சிவாஜி. என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர். அரசு தனது முடிவினை மீண்டும் பரிசீலிப்பதாக கூறியது.
தொழிலாளர்களின் உண்மையான ஒத்துழைப்பு இல்லாமல் எந்த பெரிய போராட்டமும் பலன் தராது என்பதனை அறிந்த கோஷ். தொழிலாளர்களை தனித்தனியாகவும், குழுக்களாகவும் சந்தித்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள். போராட்ட நெறிமுறைகள் பற்றியும் விளக்கி, அவர்கள் செய்யும் தொழிலின் மதிப்பினை உணர்த்தி, அம்மதிப்பினை அவர்கள் திரும்ப பெறவும் வகை செய்தார். திரைப்படத் துறையிலுள்ள பல்வேறு தொழிற்நுட்ப கலைஞர்களும், அவர்களின் தொழிற்பிரிவிற்கேற்ப சங்கம் அமைத்து, அனைத்து சங்கங்களும் ஒரு பெரிய அமைப்பின் கீழ் இணைக்கப் பாடுபட்டார். இதனை ஏற்படுத்த பல வருடங்களும், அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்பட்டது.
பம்பாய் போன்று அல்லாமல், திரையுலக நட்சத்திரங்கள் உறுப்பினர்களாக சேராமையால் சங்கம் பலவீனமாக இருந்தது. பத்தாயிரம் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டதாக இருந்தபோதிலும், முழு நேர தொழிற்சங்கவாதிகளை தலைவர்களாகவோ, எந்த ஒரு கட்சியின் கொடியின ஊர்வலங்களில் கொண்டதாகவோ செயல்படவில்லை. சங்கத்தின் முழக்கம் திரையுலகும் வளமாகட்டும்., நாமும் வளமாகுவோம் என்பதே.
இறுதியாக 1972ல் இச்சங்கம் 25 சிறிய தொறிற்நுட்ப சங்கங்களாக உடைந்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் (FEFSI) கீழ் இயங்கத் தொடங்கியது.
இந்தியாவில் திரைப்படங்கள் தயாரிக்கும் முக்கிய நகரங்களின் திரையுலகப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் நிமாய் அவர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மண்டல கூட்டமைப்புகளும், ஓர் அமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். இதன் விளைவாக 1973ல் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (A.I.F.E.C) தோன்றியது. நிமாய் இதன் துணைத் தலைவரானார். நிமாய் அவர்களின் ஆரம்ப கால தொழிற்சங்க போராட்டத்தில் அவர் உடன் இருந்து கை கொடுத்த குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் எம்.பி. சீனிவாசன் ஆவார்.
இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னை வந்த இவர், ஆரம்ப நாட்களில் துணை நடிகராகவே இருந்தார். வாசு என்றே சீனிவாசனை, நிமாய் அழைப்பார். கம்யூனிஸ்ட் இயக்க உறுப்பினர் திரு.கே.சுப்ரமணியன் இல்லத்தில் நிமாய், சீனிவாசனை சந்தித்து, நட்பாகி ஒரே கருத்து கொண்ட இருவரும் தொழிலாளர்களை ஒன்று திரட்டும் செயலில் இறங்கினார்கள். நாளடைவில் தொழிலாளர்களின் உரிமைகள் ஓரளவு பாதுகாக்கப்பட இசையமைப்பு தொழிலாளர்களின் நலனும் , பிற தொழிலாளர்களின் நலனும் சிலரால் வெவ்வேறாக எண்ணப்பட்ட, இசையமைப்பாளர்களின் தலைவராக கருதப்பட்ட எம்.பி. சீனிவாசனுக்கும், நிமாயுக்கும் கருத்து வேற்றுமை தோன்றியது. இதனால் அவர்களின் நட்பில் விரிசல் தோன்றி அதிகரித்தது. இது பத்தாண்டுகள் நீடித்து, இருவரும் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் சரியானது.
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு நிமாய் எப்பொழுதும் முதலிடம் கொடுத்தார். 1968ல் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவர் ஸ்டுடியோவுக்கு திரும்பியதும், தனது நலனைப் புறக்கணித்து, சங்க நடவடிக்கைகளில் ஈடிபட்டமையால் பல பெரிய தயாரிப்பாளர்கள் இவரிடமிருந்து ஒதுங்கினார்கள். நிமாய் தனக்கு என கேட்காமல் பிறருக்கு , என கேட்டார். இதனால் ஒரு தருணத்தில் அவருக்கு சென்னை ஸ்டுடியோக்களில் வேலை செய்யும் அனுமதிகூட மறுக்கப்பட்டு, கர்நாடகத்திலும் வெளிப்புற படப்பிடிப்புகளில் மட்டுமே கலந்து கொள்ளும்படியான நிலை கூட ஏற்பட்டது. கேமிரா கலைஞர்களின் சங்க செயலாளர் என்.எஸ்.வர்மா, “நிமாய் ஒருபோதும் தனக்கென போராடியதில்லை ; மற்றவர்களுக்காகவே போராடியவர்” என்று அடிக்கடி சொல்வர். எம்.பி.சீனிவாசனுக்கு கூட அவர் சார்ந்திருந்த கட்சி பக்கத் துணையாக இருந்தது. ஆனால், நிமாய்க்கு அதுபோல் எதுவும் இல்லை.
நிமாயின் கடின, இடைவிடாத தொழிற்சங்க நடவடிக்கைகள் பலனைத்தந்தன. குறைந்த பட்ச ஊதியம், பணிபுரிந்தவுடன் சம்பளம் போன்றவைகளையும், தொழிலாளர்களுக்கு பட ஆரம்ப நாட்களில் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லையென்றால், படம் வளர முடியாமல் வேலை நிறுத்தம் செய்தல் போன்ற தொழில் பாதுகாப்பு முயற்சிகள் நடைமுறைக்கு வந்தன.
கோஷ் அவர்களின் நேரம், உழைப்பு ஆகியவைகளை எடுத்துக் கொண்ட மற்றொரு பிலிம் சொசைட்டிகள் அமைப்பாகும். கோஷ் கல்கத்தாவிலிருந்தபோது தனது நண்பருடன் தான் பார்த்து மகிழ்ந்த திரைப்படங்களிலிருந்து தனக்கு கிடைத்த அறிவுப்பூர்வமான மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டார். அந்த நண்பர்தான் திரு.சத்யஜித்ராய். அவர் அப்பொழுது டி.ஜே. கேமர் என்ற நிறுவனத்தின் ஊழியர். ராய் அவர்கள் நிமாயை சித்தானந்த தாஸ் குப்தா, ஹரிசதன் தாஸ் குப்தா, மிருணாள் சென் ஆகிய நண்பர்களின் வட்டத்திற்கு அறிமுகப்படுத்தி இந்தியாவின் முதல் பிலிம் சொசைட்டியாகிய கல்கத்தா பிலிம் சொசைட்டியினை ஏற்படுத்தினார்கள். இதன் நுறுவன உறுப்பினர்களில் கோஷ் ஒருவர் மட்டும்தான் தொழிற்நுட்ப பின்னணி கொண்டவர். கோஷ் கல்கத்தாவினை விட்டு சென்னைக்கு வந்த பிறகு இங்கு பிலிம் சொசைட்டி இல்லாதமையினைக் கண்டு, திரைப்பட ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், நல்ல படங்களைப் பார்க்கவும் பிலிம் சொசைட்டி அவசியமானது என எண்ணினார். இந்த எண்ணமே மெட்ராஸ் பிலிம் சொசைட்டி தோன்ற அடிப்படைக் காரணம். நிமாய் இதனை தோற்றுவித்தவர்களுள் முக்கியமானவர். படத்திரையிடல்களின்போது படத்தினைப் பற்றி அறிமுக உரை கூறிவிட்டு படம் முடிந்தவுடன் அதில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி விவாதித்தல் அவரது வழக்கம். நிமாய் கல்கத்தாவில் இருந்தபோது பிலிம் சொசைட்டியின் உறுப்பினர்களிடையேயும், படங்களை பார்ப்பது மட்டுமின்றி அவைகளைப் பற்றி விவாதித்தலும் அவசியம் என வலியுறுத்தினார். ஒரு சமயம் ராய் அவர்களிடம், உறுப்பினர்கள் கட்டாயமாக குறைந்த பட்சம் சில கருத்தரங்குகளிலும், விவாதங்களிலும் கலந்துகொள்ள வேண்டும்.
இல்லையெனில் உறுப்பினராக நீடிக்க முடியாது என்பது போன்ற கருத்துக்களை கூறினார். கருத்தரங்கங்களும், விவாதங்களும் உறுப்பினர்களை கவரும் வகையில் சிறந்த முறையில் அமைக்கப்பட வேண்டும் என்றும், பிலிம் சொசைட்டிக்கும் , சபாவுக்கு உள்ள வித்தியாசங்களை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று கூறினார். மேலும் பிலிம் சொசைட்டி இயக்கம் என்பது மக்கள் இயக்கமாகவும், இந்திய படங்களுக்கு ஊக்கம் கொடுப்பவைகளாகவும் , நல்ல படங்கள் உருவாக தூண்டுதலாகவும் அமையவேண்டும் என்றும், பிலிம் சொசைட்டி உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் தணிக்கை செய்யப்படாத படுக்கையறை காட்சிகளை காணுவதனையே விரும்புகிறார்கள் என்ற கருத்தினையும் மாற்ற வேண்டும் என்றார். நகரம் அல்லாது வெளியூர்களில் உள்ள பிலிம் சொசைட்டிகள் பல வகையில் ஆர்வம் மிக்கவைகளாக விளங்குவதையும், அவைகள் ஏற்பாடு செய்யும் கருத்தரங்குகளிலும், கூட்டங்களிலும் பல்வேறு சிரமங்களுக்கிடையேயும் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்.
நிமாய் பல ஆண்டுகள் மெட்ராஸ் பிலிம் சொசைட்டியின் உப தலைவராகவும், தலைவராகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் வெளியீடான ‘விஷன்’ வெளிவர உதவினார். அவர் இடைவிடாமல் ஆங்கிலத்திலும், வங்க மொழியிலும், சங்கங்களின் வெளியீடுகளுக்காக எழுதினார். எவ்வளவோ வேலைகளுக்கிடையேயும், பிலிம் சொசைட்டிகளின் வேலைகளுக்கு நேரத்தை ஒதுக்கினார். 1976 முதல் 1984 வரை பிலிம் சொசைட்டிகளின் கூட்டமைப்பு (தென் மண்டலம்) (FFSI Southern Region) க்கு உதவித் தலைவராக இருந்தார். இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக தனது வெளிப்படையாக பேசும் தன்மையைக் கூட குறைத்துக் கொண்டு இயக்கத்தில் குழுக்களுக்கிடையே உள்ள போட்டி மனப்பான்மையினை நீக்க பாடுபட்டார். அவர் பதவிகளை என்றும் விரும்பியதில்லை என்றாலும், அவரது தலைமை இயக்கத்தின் வளர்ச்சிக்கு அவசியமாகிறது. ஒன்பது ஆண்டுகள் உதவி தலைமை பொறுப்பேற்று கூட்டமைப்பினை சிறப்பாக நடத்தியபோதும், பத்தாம் ஆண்டில் அதன் பொறுப்பேற்க அவர் அழைக்கப்படவில்லை என்றாலும் , அதற்காக வருந்தாமல் பிலிம் சொசைட்டிகளின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.
நிமாய்க்கு, எம்.பி.சீனிவாசன் அவர்களோடு தொடர்பு ஏற்பட்ட பிறகு , தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள விரும்பி, சில நண்பர்களின் துணையோடு, குமரி பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கினார். 49 பங்குதார்ர்கள், ரூ 5000 /- வரைதான் ஒவ்வொருவரின் முதலீடும் என்ற நிபந்தனை , ரூ 1000/- வரைதான் சம்பளம் என்பன போன்ற விதிமுறைகளை கொண்டு, ஆதரவாளர்கள், கொள்கை பிடிப்புள்ளவர்கள் குறிப்பாக பொதுவுடமை சிந்தனை உள்ளவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்ட படம் தான் “பாதை தெரியுது பார்”(1961) இந்த படம் எம்.பி.சீனிவாசன் அவர்களுக்கு, இசையமைப்பாளர் என்ற உயர்வை தந்தது. இதன் கதாநாயகர் கே.விஜயன் பிற்காலத்தில் புகழ்பெற்ற இயக்குனரானார். கம்ப்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் அவர்கள் கேமிராவை இயக்கி படப்பிடிப்பினைத் துவங்கி வைத்தார். நகர தொழிற்சாலையில் பணிபுரியும் இரு மத்திய தர குடும்பத்தினைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஏற்படும் முரண்பாட்டினை அடிப்படையாக கொண்டது இத்திரைப்படம். திரையுலகில் புதிய பாதை ஒன்றினை ஏற்படுத்திய இத்திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருந்த கதாநாயகி எல்.விஜயலெட்சுமி அப்பொழுது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நாட்டிய நடிகையாக இருந்த போதிலும், இப்படத்தில் அவருக்கு ஒரு நாட்டியமோ, கதாநாயகனோடு சேர்ந்து பாடுவது போன்ற பாடற் காட்சியோ இல்லை. படத்தின் உரையாடலில் கூட எளிமையான மொழிநடையே கையாளப்பட்டது.
பெரிய செல்வந்தரின் மகளாக படத்தில் வரும் எல்.விஜயலெட்சுமி, அதனைத் துறந்து உழைக்கும் வர்க்கத்தின் வெற்றி ஊர்வலத்தில் கலந்து கொள்ள ரோட்டிற்கு வருவது போல் படம் முடிவடைகிறது. படம் சரியாக ஓடவில்லை என்றாலும், பத்திரிகைகள் அனைத்தும் படத்தினை பாராட்டின. படத்தினை வெளியிட்டவர்கள், படத்தை நல்ல திரையரங்குகளில் வெளியிடாததும் ஒரு வாரத்திற்குள் படத்தினை எடுத்து விட்டதும், படம் ஓடாததற்கு காரணம் என்று நிமாய் தெரிவித்தார். படத்தினைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டன. தமிழ்த் திரையுலகில் இதுபோன்ற படம் வந்தது ஆச்சரியமே. இப்படம் மக்களின் கவனத்தை எப்படி கவராமல் சென்றது என்றும் இயக்கம், படப்பிடிப்பு, நடிப்பு, இசை என்று எல்லா விதத்திலும் மக்களின் மனதினை கவர்ந்த போதிலும் என்பது வியப்பே! தமிழரின் வாழ்க்கையினை உண்மையில் படம்பிடித்துக் காட்டுகிறது. பாடல்களை படமாக்கிய விதமும் அருமை என போற்றப்பட்டது. சில காட்சிகளை மொத்தத்தில் படம் நன்றாக உள்ளது தவிர என்ற கருத்தும் நிலவியது. தொழிலாளர் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட இப்படம் இன்று என்னவாயிற்று என்றே தெரியவில்லை. எம்.பி.சீனிவாசன் இசையில் உருவான பாடல்களை மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
”பாதை தெரியுது பார்”, படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு ரஷ்யா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நன்கு ஓடியது. இது போன்ற சிறப்பு பெற்ற முதல் தமிழ்ப்படம் இதுவே. மேலும் அந்த ஆண்டில் தமிழில் வெளியான சிறந்த மாநில மொழித் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதி விருதும் இப்படம் பெற்றது. இந்த விருதினைப் பெற எம்.பி.சீனிவாசன் டெல்லி சென்ற அதே நேரத்தில் கோஷ் மீண்டும் திரையுலகில் தனது காமிரா மேன் பணியினை துவக்கினார்.
நிமாய் தனது காமிரா கலையினை, புத்தக படிப்பினை , ஆழ்ந்த உற்றுநோக்கல், கடின உழைப்பு ஆகியவை வாயிலாக வளர்த்துக் கொண்டார். அவர் இத்துறைக்கு வர ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு புனே திரைப்படக் கல்லூரி போன்ற பயிற்சிக் கல்லூரிகளின் பயிற்சியினைப் பாராட்டி, எதிர் காலத்தில் திரைப்படத் துறையினை கட்டிக்காக்க போகும் இளைஞர்களின் நலத்திலும் நாட்டம் கொண்டார். புனே திரைப்படக் கல்லூரியில் அவ்வப்போது விரிவுரைகள் நிகழ்த்தியும், மாணவர்களை சேர்க்கும் குழுவிலும் , தேர்வு குழுவிலும் பணியாற்றினார்.
சென்னை மத்திய தொழிற்நுட்பக் கல்லூரியில் திரைப்பட தொழிற் நுட்பத்துறை ஏற்படுத்தப்பட்டபோது அதன் ஏற்பாடுகளையும், அத்துறையின் இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இத்துறையே பின்னர் வளர்ச்சி அடைந்து தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியாக மாறியது. இக்கல்லூரி அடையாறு சென்றபின்பும் அதன் வளர்ச்சியில் ஆர்வம் காட்டினார். இதன் சிறப்பு விரிவுரையாளராகவும், தேர்வாளராகவும் 1963 முதல் பணியாற்றினார். கோஷீன் விரிவுரைகள் உயிரோட்டமானவையாகவும், தொழிற்நுட்ப அறிவை வளர்ப்பவையாகவும் இருந்தன. கோஷ் இதுபோல் திரைப்படத் துறையில் ஆர்வமுள்ள மற்றும் பயிலும் இளைஞர்களுடன் உரையாடுவதை தூசு படிந்த தனது அறிவை தட்டி மீண்டும் தீட்டிக் கொள்வதாக எண்ணினார்.
திரைப்பட தொழிலாளர்களின் சங்க விதிகளின் படி நிமாய், காமிரா பொறுப்பினை கையாள படங்களுக்கு பெற்றுக் கொண்டிருந்த சம்பளம் குறைவாக இருந்தமையால், புதிய இயக்குனர்களும், பட்ஜெட் படத்தயாரிப்பாளர்களும், நிமாயின் திறமையான படப்பிடிப்பினையும், குறைவான சம்பளத்தினையும் திரைப்படத்தில் அவரின் அனுபவத்தினையும் கருத்தில் கொண்டு அவரை தங்களின் படங்களுக்கு காமிரா பொறுப்பேற்க செய்தார்கள். குறைவான செலவில் தயாரிக்க துவங்கப்பட்ட பலப்படங்கள் பணப்பற்றாக்குறையால் பாதியிலேயே வெளிவராமல் நின்றன. சக்கரவர்த்தி என்ற தயாரிப்பாளரின் “அவள் இல்லாமல் நான் இல்லை” என்ற படத்திற்காக வீட்டில் நடப்பது போன்ற காட்சிகளை முதன் முதலில் உண்மையான வீட்டிலேயே எடுத்தபோது திரையுலகில் பலர் அவரைப் பார்த்து நகைத்தார்கள். அந்த படம் வெளிவரவில்லை என்றாலும், மேற்சொன்னது போல் படமெடுக்கும் முறை தோன்றியது. நிமாய் பணியாற்றிய வெற்றிப் படங்களுள் ”ரத்த பாசம்”, ஒன்றாகும். ஜெயகாந்தனின் ”உன்னைப் போல் ஒருவன்”, படத்திற்கு அவர் ஆலோசகராகப் பணியாற்றினார். அதன் கேமிரா பொறுப்பினை ஏற்றிருந்தவர் நடராஜன் என்பவர். ஜெயகாந்தன் இப்படத்தினைப் பற்றிக் கூறுகையில், வங்கத்தின் நறுமணத்தை, தமிழகத்தின் மண்ணில் பெற விரும்பினோம் என்றார். கோஷ் எப்பொழுதும் முறையாக செயல்படுவதையும், ஒவ்வொரு நடிகர்களின் நிறத்திற்கேற்ப வெளிச்சம் சரி செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதால் படப்பிடிப்புக்கு நடிகர்கள் காலம் தாழ்த்தாமல் வரவேண்டிய அவசியத்தையும் உணர்த்தினார். கே.பாலச்சந்தரின் முதல் படமான “நீர்க்குமிழி”யின் கேமிரா பொறுப்பினை நிமாய் ஏற்று செய்தார். நிமாயின் நண்பரான சகஸ்ரநாமத்தின் “நாலுவேலி நிலம்” படத்திற்கான நிமாயின் படப்பிடிப்பினை பலரும் பாராட்டினாலும் படம் வெற்றிப்படமாக அமையவில்லை “பனித்திரை”, “ஆயிரம் காலத்துப் பயிர்” போன்ற படங்களில் அவரது திறமை மிளிர்ந்தது. எம்.ஜி.ஆரின் ஒரு படத்திற்குக்கூட அவர் கேமிராமேனாக பணியாற்றவில்லை என்றாலும், அவரின் மாற்று கேமிரா மேனாகவும், அவசியமான நேரங்களிலும் பணியாற்றி உள்ளார். எம்.ஜி.ஆர் அவர்களும், நிமாயும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து, மதிப்பும், மரியாதையும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
சென்னை சினிமா ஸ்டுடியோக்கள் பெற்றிருந்த சாதனங்களை கையாளுவதில் ஆர்வம் கொண்டவரான கோஷீக்கு தரப்பட்ட படப்பிடிப்பு வேலைகல் சில சமயங்களில் திறமைக்கு குறைவானவையாகவும், எழுச்சியற்றவையாகவும் தோன்றின. இந்த தருணத்தில் ஜீ.வி. அய்யரின் ஹம்சகீத்தே திரைப்படத்திற்கு கேமிரா பொறுப்பேற்கும் வாய்ப்பு வந்தது. இப்படத்தின் பல அம்சங்கள் அவருக்குப் பிடித்துப் போகவே, படத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டார். அதனால் அருமையான படம் உருவாகி, 1975, - 76ஆம் ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான கர்நாடக அரசின் விருதினைப் பெற்றார். இந்த படம் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதினையும் பெற்றது. இப்படத்தின் போது அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்தாலும், அதனையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினார்.
எழுபதுகளின் துவக்கத்தில், திரைப்பட நிதி நிறுவனத்தில் (FFC) பணியாற்றும் பலரும், அந்நிறுவனத்தின் உதவிப்பெற்று நிமாயை படம் தயாரிக்க கேட்டுக் கொண்டாலும், அதிகமான பங்குத் தொகை, பிணையம் கொடுக்க சொத்து இல்லாமை போன்ற காரணங்களால் நிதியுதவி வேண்டாம் என ஒதுக்கி வந்த கோஷ், பிறகு அந்த நிறுவனத்தின் உதவியோடு படத்தயாரிப்பில் ஈடுபட்டார். கோஷ் படமாக்க விரும்பிய கதை திரைப்பட நிதி நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த கால கட்டத்தில்தான் கதையாசிரியர் எம்.ஏ. அப்பாஸ் அவர்களுடன் கூட்டாக இணைந்து சித்ரபாரத் நிறுவனத்தை ஆரம்பித்தார். பணம் கிடைப்பதில் தமதம் ஏற்பட , முன்பு “பாதை தெரியுது பார்” படம் தயாரித்த போது உதவிய நண்பர்களைக் கொண்டு ஒரு லட்சம் முதலீடு செய்து, 1979ல் நிதி நிறுவனம் அளித்த நான்கு லட்சம் உதவித் தொகையினையும் பெற்று “சூறாவளி” என்ற படத்தினை எடுத்தார். இந்தப் படத்தின் கதையாசிரியர் எம்.ஏ. அப்பாஸ், படத்தின் வெளிப்புற காட்சிகளில் கோஷ் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார். கதை மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையினை வலியுறுத்துவதாக அமைந்திருந்தமையால், படம் மாநில அரசின் விருதினையும் , ஒரு லட்சம் ரூபாய் மானியமும் பெற்றது. இந்த மானியத்தையும், தொலைக் காட்சியில் இப்படம் ஒளிப்பரப்பானதற்கான பணத்தினையும் தேசீய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்திடமிருந்து (NFDC) பட செலவிற்கென பெற்ற கடனுக்காக அளித்தார். இந்த படம், “சின்னமுள்”, “பாதை தெரியுது பார்” போன்ற அவரின் பிறபடங்களைப் போல சிறந்த படமாக வரவில்லையென்றாலும், தமிழில் வெளிவந்துள்ள தரமான படங்களுள் ஒன்றாகும். கருத்து வேற்றுமை அதிகமான நிலையில் அப்பாஸ் அவர்களுடனான கூட்டு முறிந்தது. தேசீய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் வேறு மீதிக் கடனை நிமாயிடமிருந்து திரும்ப பெற வேண்டி பல வழிகளில் முயற்சியினை எடுத்துக் கொண்டது.
”சின்னமுள்”படத்தில், அழகிய வேலைப்பாடுகள் அமைந்த தங்கத்தினால் சீப்பு (COMB) செய்து விற்கும் பொற்கொல்லன் ஒருவன், விதிவசத்தால் சொந்த ஊரை துறந்து, கல்கத்தாவின் கூட்டமான , கவனிப்பாரற்ற மக்கள் செல்லும் வீதிகளில் உரக்க கத்தியபடி அமெரிக்காவில் தயாரான பிளாஸ்டிக் சீப்புகளை விற்கும் காட்சி ஒன்று வருகிறது. மனதை நெருடும் இக்காட்சி நிமாய் அவர்களின் சொந்த வாழ்விற்கும் பொருந்தும். “சின்னமுள்” , “பாதை தெரியுது பார்” போன்ற அரிய கலைப் படைப்புகளைத் தந்த கலைமேதை நிமாய் கோஷ் தனது இறுதி காலத்தில் கூந்தல் தைலம், பற்பசை போன்றவைகளின் விற்பனைக்காக விளம்பரப் படங்கள் தயாரித்து வாழவேண்டிய நிலையில் இருந்தார். சில வேளைகளில் இதுபோன்ற விளம்பரப்பட வாய்ப்புகளும் அவருக்கு குறைந்தன.
சரிவை ஈடு செய்வது போல், நிமாய் அவர்களின் வாழ்வின் இறுதி வருடங்களில், பல கருத்தரங்குகளுக்கும், மகாநாடுகளுக்கும் அவர் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். 1981ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திய பேசும் பட சினிமாவின் பொன்விழா, பிலிம் சொசைட்டிகளின் கூட்டமைப்பின் தலைமை நிலையத்தினரால் (FFSI, C.O) கொண்டாடப்பட்டபோது, அதன் தலைவரான சத்யஜித்ராய், துணைத்தலைவர் மிருணாள் சென் ஆகியோர் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று இத்துறையில் நிமாய் அவர்கள் ஆற்றிய முன்னோடியான அரிய பல சேவைகளைப் பாராட்டி வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியும் அவருக்கு கெளரவ பட்டமளித்து பாராட்டியது. கல்கத்தாவில் நடைபெற்ற பட விழாவின் போது, நிமாய் அவர்கள் மேற்கு வங்காள அரசால் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். புகழும் கெளரவமும் சிறிய மற்றும் பெரிய அளவில் அவரைத் தேடி வந்த வண்ணம் இருந்தது. 1986ல் கல்கத்தா தொலைக்காட்சியால் “சின்ன முள்” படம் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கடிதங்கள் எண்ணற்ற படங்களை அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு உயர்ந்தமைக்கண்டு அவர் மகிழ்ந்தார்.
1987 ஜனவரி மாதம் சோவியத் தூதரகத்தில், தனது குருவாக நிமாய் அவர்கள் மதித்து வந்த புதோவ்கின் அவர்களைப் பற்றி புதோவ்கின் திரைப்பட சங்கத்தின் துவக்க நாளில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றி முடித்த சிறிது நேரத்தில் காலமானார். திரைப்படத்துறைக்கு பணியாற்றிக் கொண்டே இருக்கும் நேரத்தில் இறக்க வேண்டும் என அவர் விரும்பினார். அவரது விருப்பம் போலவே, அப்பணியில் இருக்கும்போதே புகழ்வாய்ந்த நிமாய் மறைந்தார்.
சலனம் ஜீன் – ஜீலை 1993
- தொடரும் -
சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, உலக சினிமா சாதனையாளர்கள் தொடரை இங்கே வாசகர்களுக்காக படிக்க கொடுக்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |