வரியும்....ஒளியும்...
மாண்டோவின் "திற" சிறுகதையும் - பிரின்ஸ் என்னாரெசு பெரியாரின் "திற" குறும்படமும்...
கார்த்திக் பாலசுப்பிரமணியன் |
சிறுகதைகளை குறும்படமாக்க வேண்டியதின் அவசியம் கருதி, ஒரு சிறுகதையும், அதை தழுவி எடுக்கப்பட்ட ஒரு குறும்படமும் இந்த பகுதியில் உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
|
சாதத் ஹசன் மண்ட்டோ |
அந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. பயணிகளில் பலர் வழியிலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இன்னும் சிலர் தொலைந்து போயினர்.
மறுநாள் காலை சிராஜூதின் கண் விழித்து பார்த்த பொழுது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தார். அவரைச் சுற்றி, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அடங்கிய ஒரு கூட்டம் குமுறிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டு பதற்றமடைந்த அவர் தூசு நிரம்பிய வானத்தை வெகு நேரமாக வெறித்துக் கொண்டிருந்தார். அந்த முகாமெங்கும் ஒரே சத்தமாக இருந்தது. ஆனால் எதுவும் சிராஜூதினின் காதில் விழவில்லை. இவரைப் பார்த்த யாரும், ஏதோ ஆழ்ந்த துயரச் சிந்தனையில் இருக்கிறார் என்று யூகித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் மனது வெறுமையாய் இருந்தது.
சூரியன் கண்ணில் படும் வரையிலும் அவர் அந்த தூசு நிறைந்த வானத்தையே உற்று நோக்கியபடி இருந்தார். சூரியனின் வெப்பம் அவரின் ஒவ்வொரு நரம்பிலும் பாய்ந்தது. ஏதோ ஒரு துடிப்பில் எழுந்தார். அந்த துர்சம்பவக் காட்சி அவர் கண் முன்னே எழுந்தது - தீ சுவாலைகள், திருட்டு.. ஆட்கள் ஓடுகிறார்கள்.. ஒரு ரயில் நிலையம்.. துப்பாக்கிச் சூடு... இருட்டு மற்றும் சகினா.
பயத்தாலும், பதற்றத்தாலும் ஆட்கொள்ளப் பட்டவராய், ஒரு பித்துப் பிடித்தவனைப் போல, அந்தக் கூட்டத்தில் சகினாவைத் தேடத் துவங்கினார்.
மூன்று மணி நேரமாக " சகினா.. சகினா.. " என்று கேவிக் கொண்டிருந்தார். அவளை அந்த முகாமின் மூலை முடுக்கெல்லாம் தேடினார் ஆனால் அவரின் ஒரே இளம் பெண்ணைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சுற்றியெங்கிலும் ஒரே ஓலமாய் இருந்தது - அகதிகளில் சிலர் தங்களின் குழந்தைகளைத் தேடிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் தங்களது அன்னையர்களைத் தேடிக் கொண்டிருந்தனர்; சிலர் மனைவிகளையும் மேலும் சிலர் தங்கள் மகள்களையும் தேடிக் கொண்டிருந்தனர்.
களைப்பிலும் விரக்தியிலும் சிராஜூதின் ஓரிடத்தில் அமர்ந்து, சரியாக எங்கே எப்போது சகினாவைத் தவறவிட்டார் என்று நினைவுகூற முயற்சித்தார். திடீரென்று அவர்தம் மனைவியின் உடலின் துர்பிம்பம் ஒரு முறை அவரின் கண்களின் மின்னி மறைந்தது - அவளின் குடல் வெளியேறி தரையில் அவள் சரிந்திருந்தைக் கண்டார். அதன் பின் அவர் மனது வெறுமையாகிவிட்டது.
சகினாவின் அம்மா இறந்துவிட்டாள். அவரின் கண் முன்னாலேயே கொல்லப்பட்டாள் - ஆனால் சகினா எங்கே? அவள் நிரந்தரமாய் கண்ணை மூடும் வேளையிலும், சகினாவின் அம்மா, " என்னைப் பற்றி கவலைப் படாதீர்கள்.. ஓடுங்கள்.. சகினாவை இங்கிருந்து கூட்டிப் போய்விடுங்கள் " என்றுதான் வேண்டினாள்.
சகினா அவருடன் தான் இருந்தாள் - அவர்கள் இருவரும் வெறும் கால்களால் ஓடினார்கள். சகினாவின் துப்பட்டா தரையில் விழுந்து விட்டது. அவர் அதை எடுக்க முனைந்த பொழுது, " அதை விடுங்கள் அப்பா " என்று கத்தினாள். ஆனால் அவர் அதை எடுத்துவிட்டிருந்தார். அது நினைவுக்கு வந்த உடனே, அவர் தனது கோட் பையில் கைவிட்டு அதனை வெளியே எடுத்தார். அவரிடம் சகினாவின் துப்பட்டா இருந்தது... ஆனால் சகினா எங்கே போனாள்??
சிராஜூதின் யோசிக்க முயற்சித்தார் ஆனால் முடியவில்லை. சகினா அவருடன் ரயில் நிலையம் வரை வந்தாளா? அவருடன் ரயில் ஏறினாளா? வன்முறையாளர்கள் ரயிலைத் தாக்கியபோது அவர் மயக்கமடைந்து விட்டாரா? அவர்கள் அவளைக் கடத்திக் கொண்டு போய்விட்டனரோ?
அவரின் எந்த கேள்விக்கும் அவரிடமே பதில் இல்லை.
சிராஜூதினுக்கு கருணையும், உதவியும் தேவைப்பட்டது. ஆனால் அவரைச் சுற்றியிருந்த அனைவருக்கும் அவையே தேவைப்பட்டன. அவரிடம் அழுவதற்குக் கூட கண்ணீர் மிச்சமிருக்கவில்லை. முனங்கும் சத்து கூட இல்லாதிருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, தனது சக்தியெல்லாம் திரட்டிக் கொண்டு, அங்கிருந்த யாராவது அவருக்கு உதவ இயலுமா என்று கேட்டார். ஆயுதங்கள் தாங்கியபடி எட்டுப் பேர் ஒரு பார வண்டி வைத்திருந்தனர்.
அவர், அவர்களுக்கு ஆசிகள் வழங்கி, சகினா எப்படி இருப்பாள் என்று விளக்கினார். " அவள் சிவப்பாய், மிகவும் அழகாக இருப்பாள். அவள் அம்மாவைப் போல. என்னை போலன்று. பெரிய கண்கள், கறுத்த கூந்தல் மேலும் அவளின் வலது கண்ணத்தில் பெரியதொரு மச்சம். அவள்தான் என் மகள். நீங்கள் அவளைக் கொண்டு வந்து சேர்ப்பீர்களானால், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் "
அந்தத் தன்னார்வ சமூகத் தொண்டர்கள், அவரின் மகள் உயிரோடிருந்தால் கொஞ்ச நாளில் அவளைக் கண்டுபிடித்து கொண்டு வருவதாய் மிகுந்த நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் உறுதியளித்தனர்.
அந்த வாலிபர்கள் அவர்களால் முடிந்தவரையில் தேடினார்கள். அவர்களின் உயிரைப் பணயம் வைத்து அம்ரிஷ்டர் வரை சென்றனர். பல பெண்களையும், ஆண்களையும், குழந்தைகளையும் மீட்டு அவர்களை அவர்களின் குடும்பத்துடன் சேர்த்தனர். பத்து நாட்களாகத் தேடியும் அவர்களால் சகினாவைக் கண்டுபிடிக்க இயல்வில்லை.
ஒரு நாள், மேலும் சில அகதிகளுக்கு உதவ அம்ரிஷ்டர் சென்ற பொழுது, ஒரு பெண் சாலை ஓரமாய் நிற்பதைக் கண்டனர். அவள் பார வண்டியின் சப்தம் கேட்டதும் ஓடத் தொடங்கினாள்.
அவர்கள் பார வண்டியை நிறுத்திவிட்டு அவள் பின்னால் ஓடினர்.
வயலில் அவளைப் பிடித்துவிட்டனர். அவள் அழகாய் இருந்தாள். அவளின் வலது கண்ணத்தில் பெரியதாய் ஒரு மச்சம் இருந்தது.
அந்த இளைஞர்களில் ஒருவன், " பயப்படாதே, உன் பெயர் சகினாவா? " என்றான்.
அவள் முகம் மேலும் வெளிறிப் போனது. அவள் பதில் சொல்லவில்லை. மற்றொரு இளைஞன், உறுதியளித்த பின் அவள் தான் சிராஜூதினின் மகள் என்பதை ஒத்துக் கொண்டாள்.
அந்த எட்டு இளைஞர்களும் சகினாவிடம் அன்பாக நடந்து கொண்டனர். அவளுக்கு உணவும், பாலும் அளித்தனர். அவள் அந்த பார வண்டியில் ஏற உதவினர். அவளிடம் துப்பட்டா இல்லாத்தால் சங்கோஜமாக உணர்ந்தாள். அவளின் மார்பகங்களை தன் கைகளால் மீண்டும் மீண்டும் மூடினாள்.
பல நாட்கள் கடந்தன - சகினாவைப் பற்றி எந்த செய்தியும் சிராஜூதினுக்கு கிடைக்கவில்லை.
ஒவ்வொரு காலையும், முகாமிற்கும், அலுவலகத்திற்கும் வந்து சகினா குறித்து விசாரிப்பார். அவளைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாள் இரவும், சகினாவை கண்டுபிடித்து தன்னிடம் சேர்ப்பதாக வாக்களித்துப் போன அந்த தொண்டு செய்யும் இளைஞர்களுக்காக வேண்டிக் கொண்டார்.
ஒரு நாள் முகாமில் அந்த தொண்டு செய்யும் இளைஞர்களைப் பார்த்தார். அவர்கள் தங்களின் பார வண்டியில் அமர்ந்திருந்தனர். அந்த வண்டி கிளம்பத் தயாராக இருந்தது. இவர், அவர்களிடம் ஓடிச் சென்று, அங்கு ஒருவனிடம், " மகனே.. நீங்கள் சகினாவை கண்டுபிடித்தீர்களா? " என்று கேட்டார்.
" நாங்கள் கண்டுபிடிப்போம்.. நாங்கள் கண்டுபிடிப்போம்.. " என்று அவர்கள் மொத்தமாகக் கூறி வண்டியைக் கிளப்பிச் சென்றார்கள்.
சிராஜூதின் அந்த இளைஞர்களின் வெற்றிக்காக வேண்டிக் கொண்டார். கொஞ்சம் நிம்மதியடைந்தார்.
அன்று மாலை முகாமில், சிராஜூதின் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே ஒரே கூச்சல் குழப்பமாய் இருந்தது. நான்கு பேர் யாரையோ தூக்கிக் கொண்டு இவரைக் கடந்து சென்றார்கள்.
அவர் விசாரித்த போது, ஒரு பெண் ரயில் தண்டவாளத்தில் சுய நினைவின்றி கிடந்ததாகவும், அவர்கள் அவளை முகாமிற்கு அழைத்து வந்ததாகவும் அறிந்து கொண்டார்.
அவர் அவர்களை பின் தொடர்ந்தார்.
அவர்கள் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் ஒப்படைத்தனர். சிராஜூதின் மருத்துவமனைக்கு எதிரே இருந்த கம்பத்தில் கொஞ்ச நேரம் சாய்ந்திருந்தார். பின், மெதுவாக மருத்துவமனைக்குள் சென்றார்.
அந்த அறையில் யாருமே இல்லை. அந்தப் பெண்ணின் உடல் மட்டும் கிடத்தியில் வைக்கப் பட்டிருந்தது.
அவர் அப்பெண்ணிற்கு அருகே சென்றார்.
யாரோ திடீரென்று விளக்குகளை போட்டனர்.
அவர் அப்பெண்ணின் வலது கன்னத்தில் பெரிய மச்சத்தைக் கவனித்தார். "சகினா" என்று கதறினார்.
விளக்குகளைப் போட்ட அந்த மருத்துவர், "என்ன விஷயம் ? " என்று விசாரித்தார்.
" நான்.. நான் அவளின் தந்தை " என்று முணுமுணுத்தார்.
மருத்துவர், அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி, அவளின் நாடியைச் சோதித்தார். பிறகு " ஜன்னலை திற " என்றார்.
கிடத்தியில் இருந்த சகினா கொஞ்சம் அதிர்ந்தாள்.
அவள் வலியுடன் தன் கைகளை, அவளது சல்வாரை இறுக்கியிருந்த நாடாவை நோக்கி கொண்டு சென்றாள்.
மெதுவாக அவள்தன் சல்வாரை கீழே இழுத்தாள்.
" அவள் உயிருடன் இருக்கிறாள். என் மகள் உயிரோடிருக்கிறாள் " என்று அவளின் தந்தை மகிழ்ச்சியில் கூச்சலிட்டார்.
மருத்துவர் துளிர்த்த குளிர்ந்த வியர்வையில் உடைந்து போயிருந்தார்.
* * *
மூலம் : சாதத் ஹசன் மண்ட்டோ
ஆங்கில மொழியாக்கம் : அலோக் பல்லா
தமிழில் : கார்த்திக் பாலசுப்பிரமணியன்.
உதவிய சுட்டி : http://pratilipi.in/2009/03/open-it-saadat-hasan-manto/
* * *
இந்த குறும்படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=DYlghGxHtLw
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |