மற்ற மொழிக் குறும்படங்கள்
சிக்கன் அலா கார்ட் - பசித்தலின் அரசியல்
கார்த்திக் பாலசுப்பிரமணியன் |
சாப்பாட்டை வெறுப்பவரா நீங்கள்? புத்தகம் வாசித்தவாறோ, தொலைக்காட்சி ரசித்தவாறோ, அலைபேசியவாறோ உணவு உண்பவரா நீங்கள்? பசிக்காமல் புசிப்பவரா நீங்கள்? எப்போதும் சாப்பாட்டு மேசையில் எதையாவது மிச்சம் வைப்பரா நீங்கள்? உபசரிப்பு என்ற பெயரில் விருந்தினரின் தேவையை மீறி உணவுகளை திணிப்பவரா நீங்கள்? பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பவரா நீங்கள்? இதில் ஏதேனும் ஒரு கேள்விக்கு ஆம் என்று பதில் சொன்னாலும் நீங்கள் கட்டாயமாக பார்த்தே தீர வேண்டிய குறும்படம் இது.
2006 ஆம் ஆண்டு, 56வது பெர்லின் சர்வதேச திரைப்படத் திருவிழாவில் " உணவு, ருசி மற்றும் பசி " என்ற தலைப்பில் ஒரு குறும்படப் போட்டி நடை பெற்றது. உலகெங்கிலும் இருந்து 3600 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதிலிருந்து 32 குறும்படங்கள் மட்டும் 'பெர்லினல் டேலண்ட் கேம்பஸி'ல் திரையிடப் பட்டன. அதில் இக்குறும்படம் மிகவும் பிரபலமான படமாக தேர்வு செய்யப்பட்டது.
முதல் காட்சியில் கே.எஃப்.சி, மெக்டொனால்டு, ஜோலிபீ மற்றும் ச்சோவ் கிங் போன்ற பிரசித்தி பெற்ற உணவகங்கள் காட்டப் படுகின்றன. அதன் பின் படத்தின் பெயர் போடப்படுகிறது. "சிக்கன் அலா கார்ட்". அலா கார்ட்(à la carte) என்னும் ப்ரெஞ்ச் வார்த்தைக்கு "விலைப் பட்டியல்" என்று பெயர். முன்னால் காட்டப் பட்டது போன்ற ஒரு உயர்தர உணவகத்தில் இரு இளம் பெண்கள் நுழைகிறார்கள். சுவர் முழுக்க நிறைந்திருக்கும் உணவுப் பட்டியலிலிருந்து தங்களுக்குப் பிடித்தமானவற்றை தேர்வு செய்து ஆர்டர் கொடுக்கிறார்கள்.
அவர்கள் ஆர்டர் செய்த உணவு வகைகள் அதி தொழில் நுட்ப உதவியுடன், கைபடாத நேர்த்தியோடு அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றது. அவர்கள் ஆர்டர் செய்தது இதுதான். பொறித்த இரண்டு சிக்கன் துண்டுகள், ஒரு கப் அரிசிச் சோறு (பார்ப்பதற்கு அப்படித்தான் தெரிகிறது), கொஞ்சமாய் காய்கறி சாலட், சின்ன தொரு சாக்லெட் கேக் மற்றும் ஏதோ ஒரு பானம் அடங்கிய ஒரு காம்போ. ஆனால் வந்த உணவில் ஒரு பாதியைக் கூட இருவருமே உண்ணவில்லை. மிச்சம் வைத்துவிட்டு அது பற்றிய குற்ற உணர்வின்றி தங்களுக்குள் உரையாடிச் சிரித்தபடி வெளியேறுகிறார்கள். அவர்கள் எந்த நாட்டு யுவதிகள் என்று தெரியவில்லை. இருப்பினும் ஒன்றுமில்லை. எல்லா நாட்டு யுவதிகளும் இப்படித்தான் போலும்.
கடை எல்லாம் அடைக்கப்பட்டு விட்ட பின்னிரவில், பக்கத்தில் பொருள் வைத்துக் கொள்ளும் வசதியுடைய நான்கு சக்கர மிதிவண்டியில் ஒருவன் வருகிறான். அவன் தன்னுடன் கறுப்பு நிறத்திலான ஒரு பிளாஸ்டிக் கூடை ஒன்றை கொணர்கிறான். அந்த உணவகத்தில் மீந்து போயிருந்த, வாடிக்கையாளர்களால் மிச்சம் வைக்கப்பட்ட உணவுக் குவியல் இவனிடம் தரப்படுகின்றது. அந்த மீந்து போன உணவிலிருந்து உண்ணுவதற்கு தகுதியான, எலும்புகளை நீக்கி, சதைப் பற்றுள்ள பதார்த்தங்களை தான் கொண்டு வந்த அந்த பிளாஸ்டிக் கூடையில் எடுத்துச் செல்கிறான்.
|
அவன் அதை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியே ஒரு குடிசைப் பகுதி போன்ற ஒன்றிற்குச் செல்கிறான். அங்கே இவனது வருகைக்காக பத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் காத்திருக்கிறார்கள். இவன் வந்ததும் அங்கு உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. எங்கெங்கும் மகிழ்ச்சியலைகள். பின்னே இசையுடன் கூடிய அந்த ஆங்கிலப் பாடல் ஒலிக்கிறது. (அதனை தமிழில் மொழிப் பெயர்த்து கீழே கொடுத்துள்ளேன்) அந்த பிளாஸ்டிக் கூடையை பல்வேறு கைகள் ஆக்கிரமிக்கின்றன. உணவைக் கண்ட அவர்களின் முகங்களில் அப்படியொரு உவகை ! ( இப்படியொரு உற்சாகத்துடன் நாம் ஒரு நாளாவது உணவை உண்டிருக்கிறோமா? கடமையைக் கழிப்பது போன்று உண்பவர் நம்மில் பலர் ) அதில் ஒரு சிறுமி அந்த கூடையினுள்ளே தன் முகத்தை நுழைத்து உணவைக் கவ்வுகிறாள். அவள் முகம் முழுவதும் உணவு ஒட்டியிருக்கிறது. சிறுவன் ஒருவன் நூடூல்ஸ் போன்ற ஒன்றை தலையுர்த்தி மேலிருந்து வாயில் போட்டுச் சாப்பிடுகிறான்.
அடுத்த காட்சியில் ஒரு குடும்பம் உணவருந்த உட்கார்ந்திருக்கிறது. சுத்தமான தட்டுகள் பரிமாறுவதற்குத் தயாராக உள்ளன. குழந்தைகள் தந்தைக்காக காத்திருக்கின்றனர். தந்தை யாருமில்லை அந்த உணவைச் சுமந்து வந்த அதே ஆள் தான். அவனது குடும்பமும் அதே உணவையே உண்கிறார்கள். அப்போது அங்கு ஒரு குழந்தை உணவை எடுத்து உண்ணப் போகையில் அதன் கையை மெதுவாக தட்டிவிட்டு இறை வணக்கம் செய்கிறார். அவர்களும் வணங்குகிறார்கள். உலகில் ஒவ்வொரு நாளும் உணவின்றி 25000 பேர் இறக்கிறார்கள் என்ற தகவல் பகிரப்படுகின்றது. பின் மெல்ல பின்னால் இசைக்கப்பட்ட அந்தப் பாடல் தழைய, "இது ஒரு உண்மைக் கதை" என்ற செய்தியுடன் முடிகின்றது இக்குறும்படம்.
எழுதி, இயக்கி, ஒளிபதிவு செய்து, இசைத்திருப்பவர் எல்லாம் ஒருவரே - ஃபெர்டினாந்த் திமதுரா. தான் சொல்ல நினைத்தை தெளிவாக ஆறே நிமிடத்தில் புரியும்படி சொல்வதில் வெற்றியடைந்திருக்கிறார். இப்படி நாம் மீதம் வைத்த உணவை உண்டு செரித்து ஒரு கூட்டமே உயிர் வாழ்கின்றது என்ற உண்மையைத்தான் நம்மால் செரித்துக் கொள்ளவே இயலவில்லை. பசியே இல்லாமல் புசிக்கும் இளைஞர் கூட்டம் ஒரு பக்கம். உணவில்லாமல் பசியில் உழலும் நாளைய இளைஞர்கள் ஒரு பக்கம் என்று சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை எளிமையாக பேசுகின்றது இக்குறும்படம். இதில் இருக்கும் ஒருவர் கூட நடிப்பது போலவே தெரியவில்லை. ஏதோ டிஸ்கவரி அல்லது நேஷனல் ஜியாகரஃபி போன்றதொரு சேனலில் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படம் போன்றே தோன்றுகின்றது. அத்தனை தத்துரூபம். கதை போலவே மனிதர்களும் உண்மையானவர்கள் தானோ என்ற சந்தேகம் வேறு எனக்கு உறுத்திக் கொண்டே இருக்கின்றது. அத்தனை இயல்பான காட்சியமைப்புகள். எத்தனை??
|
முதலில் அந்த உணவகம் முழுவதும் இளைஞர்களாலேயே நிரம்பியிருப்பதாக காட்டப் படுகின்றது. சாப்பிடும் நேரத்திலும் அலைபேசியை நோண்டிக் கொண்டிருக்கிறாள் அவ்விரு பெண்களில் ஒருத்தி. அது உணவின் மீது இன்றைய வசதி படைத்த இளைய சமுதாயம் காட்டும் ஒரு அக்கறையின்மையின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது. அடுத்த வேளைச் சாப்பாடைப் பற்றிக் கவலையில்லாதவர்களுக்கு அதன் மீது எப்போதும் பெரிதாய் அக்கறையிருப்பதில்லை. ஆனால் அதே நேரத்தில், மிச்சம் மீதியாகக் கிடைக்கும் எச்சில் உணவிற்காக அடித்துக் கொள்ளும் சிறார்கள். உணவின் மீதான ஏக்கமும், பசியும் பற்றும் அவர்களின் கண்களில் வெளிப்படுகின்றது.
கிடைத்தது எச்சில் பதார்த்தமே என்ற போதும், இறைவனுக்கு நன்றி சொல்லி உண்ணத் தொடங்கும் அவர்களின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கின்றது. உண்ணும் உணவின் மீதான மரியாதையை இதைவிட சிறப்பாய் யாராலும் காட்சிப் படுத்தவியலுமா என்று எனக்குத் தெரியவில்லை. மற்றபடி குறைகள் என்று பார்த்தால், ஒளிபதிவு கொஞ்சம் சுமார் ரகம்தான். கேமரா ஆடிக்கொண்டே இருக்கின்றது. சொல்ல வந்த கருத்திற்கு இசையுடன் வரும் அந்தப் பாடல் வலு சேர்க்கவே செய்கின்றது.
அந்த உயர்தர உணவகத்தில் புதிதாக தயாரிக்கப் பட்ட பொறித்த கோழி கூட அங்குள்ள ஊழியர்கள் யார் ஒருவரின் விரல் நுனியும் படாதவாறு பரிமாறப் படுகின்றது. அத்தனை சுத்தம், சுகாதாரம் பேணப்படும் அதே நாட்டில், அதே ஊரில்தான் எச்சில் பண்டங்களையே புசித்து வாழும் அற்ப ஜீவிகளாய் வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் யார்? இவர்களின் இந்த நிலைக்கு அந்த யுவதிகளுக்கும் பங்குண்டா? எனக்கும் உங்களுக்கும் உண்டோ? அரசு, சமூகம், பொருளாதாரம் என்று யாரைக் குறை கூறுவது??
* * *
அந்தப் பாடலின் மொழிப் பெயர்ப்பு:
அவர்களின் கதையை
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
அதை வேறு யாரும் கேட்பதற்கில்லை
எப்படி ஒருவரின் புன்னகை
என்னை கண்ணீரின் பக்கம் செலுத்துகிறது.
உங்களுக்கு அது எப்போதும் தெரியாது
ஏனென்றால் நீங்கள் எப்போதும் அங்கிருந்ததில்லை
நாம் பார்த்த இத்தனைக்கும் பின்பு
உங்களின் கண்களை மூடிக் கொள்ள முடிகிறதா?
அவர்களின் கதையை
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
நீங்கள் உண்மையென்று நினைக்கவும் மாட்டீர்கள்
நான் மறந்து விடவில்லை
அதனால் தான் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நமக்குத் தெரிந்த எல்லாவற்றிலும் இருந்து
நாம் என்ன கற்றுக் கொண்டோம்
நான் என் கண்களை மூடிக் கொண்ட பொழுதும்
காட்சிகள் அப்படியே இருக்கின்றன
அவர்களின் கதை
மீண்டும் தொடங்குகின்றது.
* * *
இந்த குறும்படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=MGNmvNIgqlY&feature=fvst
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |