குறும்பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் ஒரு நேர்காணல்
குறும்படங்கள் என்பது ஒரு தனித்துவமான கலை. ஒரு சுதந்திரமான கலையும் கூட. திரைப்படங்களில் செய்ய இயலாத பல விஷயங்களை, உண்மையாகவும் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாகவும் வெளிப்படுத்த குறும்படங்களால் மட்டுமே முடியும். ஒவ்வொரு கலைக்கும் ஒரு இலக்கிய வடிவம் இருக்கும். அதுபோல் திரைப்படங்களின் இலக்கிய வடிவம்தான் குறும்படம். ஆனால் அதைப் பற்றிய போதிய புரிதல் இல்லாத ஒரு நிலைதான் இன்னும் நம் சூழலில் இருக்கின்றது. 1990 களில் போரடித்தால் ‘வாடா வெளிய போய் விளையாடலாம்’ என்றார்கள். 2000 த்தில் போரடித்தால் ‘வாடா வீட்டுக்கு போய் வீடியோ கேம் விளையாடலாம்’ என்றார்கள். 2010 களில் போரடித்தால் ‘வாடா ஷார்ட் ப்லிம் எடுக்கலாம்’ என்கிறார்கள். இது இப்போதைய குறும்படங்களில் நிலையைப் பற்றி சொல்லப்படும் ஒரு நகைச்சுவைத் துணுக்கு. இதில் பெருமளவு உண்மையும் இருக்கின்றது. இது ஒரு சோகம் என்றால், திரைப்படங்களுக்கு செல்வதற்கு குறும்படங்களை ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்துவது மற்றோர் சோகம். குறும்படம் என்னும் கலையையே இதுபோன்ற வணிக முயற்சிகள் அழித்துவிடும் என்பதை குறும்பட படைப்பாளிகளே உணராமல் இருப்பது இக்கலையின் கால சோகம். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இப்போது குறும்படங்களை தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளிலும் பல அற்புதமான குறும்படங்கள் வெளிவருகின்றன. அதுபோன்று, ‘நாளைய இயக்குனர்கள்’ நிகழ்ச்சியில் பல சிறந்த குறும்படங்களை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வினுடன் அவரது திரைப்பயணம் குறித்து பேசியபோது...
|
திரை ஊடகம் மீதான ஆர்வம் எப்போது வந்தது?
கல்லூரி நாட்களில் என் நண்பனுடன் அமர்ந்து இரவு பகலாக படங்கள் பார்த்தபோது வந்தது இந்த ஆர்வம்.
குறும்படங்கள் எடுக்கத் தீர்மானித்தது எப்போது?
ஆர்வமிகுதியில் பெங்களூரில் திரைப்படக்கல்லூரி ஒன்றில் பயின்றேன். அங்கே ஏற்பட்ட குறும்படங்கள் மீதான exposure அதை எடுக்க தூண்டியது.
முதல் குறும்பட அனுபவம்?
திரைப்படக்கல்லூரியில் முதல் குறும்படத்திற்காக கதை எழுதி வர சொன்னபோது, ஒரு காவல்துறை விசாரனை ஒன்றில் வெளிப்படும் கொலைகளும் அதன் பின்னணியில் இருக்கும் multiple personality disorder கொண்ட கொலைகாரனையும் வைத்து எழுதிய கதையை கொண்டு சென்றேன். அதை முகத்தில் விட்டு எரியாத குறையாய் திருப்பித்தந்த என் ஆசிரியர் என் வாழ்க்கைக்கும் அந்த கதைக்கும் என்ன சம்மந்தம்; எதற்காக இந்த குறும்படம் எடுக்கிறாய் என்று கேட்டார். பதில் சொல்ல முடியவில்லை. அன்றிரவு அம்மாவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், புதிதாக பணி ஓய்வு பெற்ற கணக்கு ஆசிரியராகிய என் தந்தையின் மனக்கஷ்டங்களை பகிர்ந்துகொண்டார். அதையே கதையாக்கி முதல் குறும்படமாக (குரு) எடுத்தேன். என் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்தது.
முதல் குறும்படம் கற்றுத்தந்த அனுபவங்கள்?
நிறைய அனுபவங்கள் கிடைத்தது. நேர ஒழுங்கு முதல் நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் எப்படி கையாளவது உட்பட நிறைய அனுபவங்கள் கிடைத்தது.
நம் சமூகத்தில் குறும்படங்களின் அவசியம் என்ன?
அவசியம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் வேகமாக இந்த உலகத்தில், குறிப்பிட்ட நேரத்திற்குள், குறிப்பிட்ட பார்வையாளர்களை கவரவும், தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் படைப்பாளிகளுக்கு நிச்சயம் குறும்படங்கள் உதவுகின்றன.
ஒரு குறும்படம் என்பது எப்படியிருக்க வேண்டும்? வடிவ ரீதியில், கருத்தியல் ரீதியில், கலை ரீதியில்?
• வடிவ ரீதியாக, ஒரு குறும்படம், சினிமாவின் மூன்று அடிப்படை கட்டமைப்புகளை பின்பற்ற வேண்டும்.
• ஒவ்வோர் படைப்பாளிக்கும் சமூக பொறுப்புகள் உள்ளது. ஒரு படம் எடுக்கும்போது இதை அவன் மனத்தில் கொள்ள வேண்டும். ஒரு படம், பார்வையாளர்களுக்கு தவறான எண்ணங்களை விதைத்து விடவே கூடாது. அது ஒவ்வொரு படைப்பாளனின் கடமை.
• ஒரு கலையாக, சினிமா என்பது, காட்சி வழியாக ஒரு படைப்பாளி வெளிப்படுத்தும் கருத்தியல்தான். அதனால் அனைவருக்கும் தாங்கள் விரும்பிய விதத்தில் தங்களை நேர்த்தியாக வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை இருக்கிறது, ஆனால், சமூகப் பொறுப்போடு.
குறும்படம் எடுப்பதற்கான அடிப்படைத் தேவைகள் என்னென்ன?
• நல்ல கருவும் தீராத ஆர்வமும்
• திரையில் ஒரு கதையினை எப்படி சொல்வது என்கிற புரிதல், ஈடுபாடுள்ள ஒரு குழு, நீங்கள் விருப்பப்பட்டால் சிறிது பணம்...
குறும்படங்களுக்கான தயாரிப்பாளர்கள் இருக்கின்றனரா? அதை எப்படி சமாளித்தீர்கள்?
எனக்கு எதையுமே எதிர்பார்க்காமல் என் நண்பர்கள் உதவினர். ஆனால் குறும்படங்களை தயாரிக்க விருப்பமுள்ள தயாரிப்பாளர்களும் இருக்கின்றனர். அதில் போட்ட பணத்தை எடுக்கவும், குறும்பட விழாக்களில் பெரும் பரிசுத் தொகை, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் குறும்படங்களில் அனுமதிக்கப்படும் விளம்பரக் கட்டணங்கள், ஆகியன உள்ளிட்ட சிலபல வழிமுறைகள் உள்ளன.
நீங்கள் ஒரு குறும்படம் எடுக்கும் முன்பு எதை எதையெல்லாம் கவனத்தில் கொள்வீர்கள்?
முதலில் நல்ல கற்பனை வளத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கரு. அதே சமயம் அந்த கரு சமூகப் பொறுப்போடும் இருத்தல் வேண்டும்.
அடுத்தது திரைக்கதை, வடிவம், ஸ்டாரிபோர்ட், படப்பிடிப்பு அட்டவனை உள்ளிட்ட அனைத்தின் எழுத்து வடிவமும் கையில் இருத்தல் வேண்டும்.
குறும்படங்களின் கருவை எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?
என் மனதில் உதிக்கும் புதுமையான அதே சமயம் சுவாரசியமான காட்சியமைப்போடு கூடிய ஒரு களத்தை உருவாக்குவேன். உதாரணத்திற்கு, கறை என்ற ஒரு குறும்படத்தை எடுத்தேன். தன் தாயின் ரத்தத்தில் தோய்ந்த பணத்தை எடுக்க ஒரு பிக்பாக்கெட் திருடனுக்கு உதவும் குழந்தையின் காட்சியில் இருந்துதான் அந்த குறும்படத்தை உருவாக்கினேன். அதன் பின், என்னவாகியிருக்கும் என்று என்னை நானே கேள்வி கேட்டு, அதற்கான விடையாகத்தான் அந்த திரைக்கதையை அமைத்தேன்.
அதே போல் அசாத்தியமான வழிமுறைகளில் தங்கள் கருக்களை தேர்ந்தெடுக்கும் சில நண்பர்களையும் எனக்குத் தெரியும். ஒவ்வோரு படைப்பாளியை பொறுத்தும் இது மாறும்.
கரு முடிவானபின் அது திரைக்கதையாக உருமாறும் தருணங்களை சொல்லுங்கள்? என்னென்ன படிநிலைகளை அது கடக்க வேண்டும்? நீங்கள் உங்கள் திரைக்கதைகளை எவ்வாறு வடிவமைப்பீர்கள்?
ட்ரீட்மெண்ட்
அடிப்படையான கதையை உருவாக்கியவுடன், படத்தின் ட்ரீட்மெண்ட்டை எழுத வேண்டும். ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் கொண்ட ஒரு காட்சியாக இது இருக்கும். இந்த ட்ரீட்மெண்ட்டில் ஒரு துவக்கம், நடுமை, முடிவு இருத்தல் வேண்டும்.
கதையை நகர்த்தும் நாயகனையோ, நாயகியையோ, அறிமுகப்படுத்தி அவனோடு பயணிப்பதுதான் கதையின் துவக்கம்
நடுமை என்பது படத்தின் முடிச்சுகளை அறிமுகப்படுத்தி அதை எப்படி நாயகன் அவிழ்க்க முயல்கிறான் என்பதைக் கூறும்
முடிவு என்பது அந்த முடிச்சை அவன் அவிழ்த்தானா அல்லது வேறு என்ன ஆயிற்று என்று கூறுவது.
இந்த ட்ரீட்மெண்ட்டில் நல்ல திரைமொழி கையாளப்பட வேண்டும்.
முற்றிலும் நேரெதிர் குணாதிசயங்களைக் கொண்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கி உலவ விடுவது, கதையை சுவாரசியமாக்கி விடும்.
அடுத்து இந்த ட்ரீட்மெண்ட்டை மேலும் மெருகேற்றி அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு செல்வது.
திரைக்கதை
ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன், அதை திரைக்கதையாக மாற்ற வேண்டும். அதற்கும் நிறைய வழிகள் இருக்கின்றன. நமது இறுதி ட்ராஃப்ட்தான் திரைக்கதையாக மாறும். உதாரண திரைக்கதைகளை imsdb.com என்ற இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அந்த ட்ரீட்மெண்ட்டை செயல், வசனம், ட்ரான்சிஷன்ஸ் உடன் சேர்த்து முழு காட்சியாக மாற்ற வேண்டும். இதுதான் திரைக்கதையை அமைக்கும். ட்ரீட்மெண்ட்டில் இருந்த அதே வடிவம் திரைக்கதையிலும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
ஒரே மாதிரியான தகவல்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஒரு டாக்டர் ஒரு அறையில் நுழைந்து நாற்காலியில் உட்கார்கிறார் என்றால், “வாங்க பிரபல டாக்டர் ஸ்ரீனிவாசன். வந்து இந்த பிளாஸ்டிக் சேர் ல உட்காருங்க. ” என்று தயவுசெய்து எழுதாதீர்கள். சுருக்கமாக, ‘குட் மார்னிங் டாக்டர், உக்காருங்க’ என்பதே போதும். நீங்கள் அந்த கதாப்பத்திரமாக மாறி, அந்த கதாப்பாத்திரம் என்ன பேசியிருக்குமோ, அதைத்தான் வசனமாக எழுத வேண்டும்.
மீண்டும் இந்த திரைக்கதை வடிவத்தை மெருகேற்றி இறுதி வடிவத்தை அமைக்க வேண்டும்.
ஸ்டோரிபோர்டு
திரைக்கதை அமைத்து முடித்தவுடன், ஸ்டோரிபோர்டு தயார் செய்ய ஆரம்பிக்கவேண்டும். அழகான படங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வட்டங்களும் கோடுகளும் மட்டுமே அதற்கு போதுமானது. அந்த ப்ரேமில் துவக்கத்திலிருந்து இறுதி வரை, என்னென்ன நடக்கிறது, வசனம், மௌனம் உட்பட, எப்படி நடக்கிறது, அது எந்த மாதிரியான ஷாட் என்பது உட்பட அனைத்தையும் தெளிவாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு இயக்குநருக்கு தொழில்நுட்ப தெரிதலும் இருக்க வேண்டுமா?
அது ஒரு கூடுதல் சிறப்பு. ஆனால் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை.
படத்தின் ஒளிப்பதிவில் உங்கள் பங்கு எப்படிப்பட்டதாக இருக்கும்?
நான் உருவாக்கிய ஸ்டாரிபோர்டு, ஒளிப்பதிவாளருக்கு என் மனதில் எப்படிப்பட்ட காட்சியாக அது இருக்கிறது என்பதை காட்சிப்படுத்திவிடும். பிறகு இருவரும் அமர்ந்து பேசி, சில மாறுதல்களை செய்து இன்னும் மெருகேற்றுவோம்.
படத்தொகுப்பின் போது பல கருத்தியல் மோதல்கள் வருமே...உங்களுக்கு வந்திருக்கிறதா? இறுதி முடிவு உங்களுடையதாக இருக்குமா, படத்தொகுப்பாளருடையதாக இருக்குமா? அதில் உங்கள் ரோல் என்ன?
நிறைய விவாதங்கள் வரும். ஆனால் 90 சதவிகிதம் நான் படத்தொகுப்பாளரை நம்புவேன். அவர்தான் ஒரு பார்வையாளராக படத்தை முதல்முறை பார்ப்பவர். அவர் கருத்துகள் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.
இசை குறும்படங்களுக்கு அவசியம் என்று நினைக்கிறீர்களா?
மிக அவசியம். திரைப்படங்களுக்கு எந்தளவிற்கு இசை முக்கியமோ, அதே அளவிற்கு குறும்படங்களுக்கும் முக்கியம்.
கலை கலைக்காக. கலை சமூகத்துக்காக என்ற இருவேறு நிலைகள் இருக்கின்றன. உங்கள் கருத்து என்ன?
நான் முன்பே சொன்னது போல், ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு சமூகப் பொறுப்பு இருத்தல் வேண்டும். அதுதான் அவனது படைப்புகளிலும் வெளிப்படும். ஆனால் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு பெருமைமிக்க தனித்துவமும் இருக்கும். இது இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலையை மேற்கொண்டால், நல்ல படைப்புகளை உருவாக்க முடியும்.
குறும்படங்கள் உண்மையான மாற்று சினிமாவாக இருக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக. மாற்றங்களை விரும்பும் மக்கள், அதற்கான ஊடகமாக குறும்படங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். சினிமாக்களை காட்டிலும் எளிதாக, அதே சமயம் முழு சுதந்திரத்துடனும் குறும்படங்களில் செயல்பட முடியும்.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் வார்ப்பு நீங்கள். நாளைய இயக்குனர் நிகழ்ச்சி, குறும்படங்கள் என்ற ஊடகத்தை வணிகசமரத்திற்கு உட்பட்டதாக்கி விட்டது என்ற குற்றச்சாட்டினைக் குறித்து...
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளனாக, அந்த நிகழ்ச்சி எப்போதும் போட்டியாளர்களை குறும்படங்களை வணிகமயமாக்க உந்தியதில்லை. ஒவ்வொரு இயக்குனரின் தனித்துவம்தான் ஒவ்வொரு குறும்படத்திலும் வெளிப்பட்டது. நம் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு களம் அது. ஒரு கூடமாக, நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி, அதன் போட்டியாளர்களை, எதை செய்தாலும், சரியாக செய்ய சொல்லித்தான் கடுமை காட்டியது. அக்குறும்படம் வணிக சமரத்தோடு இருக்கவேண்டுமா இல்லையா, என்பதெல்லாம் இயக்குனரின் ரசனையை பொறுத்த விஷயம். அதில் நிகழ்ச்சி எப்போதும் தலை நுழைத்த்தில்லை.
குறும்படங்களிலும் இப்போது சினிமாவின் பாதிப்பில், பாடல், சண்டை எல்லாம் வந்துவிட்டதே...அதை எப்படி பார்க்கிறீர்கள்?
தான் விரும்பியதை எடுக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. அதை பார்ப்பதும் பார்க்காததும் நமது இஷ்டம்.
ஒரு படைப்பாளிக்கு இலக்கிய பரிச்சயம் அவசியமா? நீங்கள் இலக்கியங்கள் படிப்பதுண்டா?
நிச்சயம் தேவை. நானும் இலக்கியங்கள் படிப்பதுண்டு. ஆனால் பெரும்பாலும் சிறுகதைகளும் நாவல்களும்தான் படிப்பேன். அதில்தான் அதிக ஈர்ப்பு உண்டு. வேறு வகையான இலக்கியங்களையும் படிக்கத் துவங்க வேண்டும்.
வேற்று மொழி குறும்படங்கள் காண்பதுண்டா? மனதைக் கவர்ந்த படங்கள்?
பார்ப்பேன். பார்த்து வியந்த, உந்தித் தள்ளிய பல குறும்படங்கள் உண்டு. சமீபத்தில் நான் ரசித்த படம் Fata Galbena Care Rade ( The Yellow Smiley Face), Constantin Popescu இயக்கிய ரோமானியப் படம்.
குறும்படங்கள் என்பது ஒரு தனி ஊடகம். ஆனால் அது திரைப்படங்களுக்குச் செல்லும் வாயிலாக பெரும்பாலும் நினைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. அது குறித்து...
நம் திறமைகளை வெளிப்படுத்தும் களமாக குறும்படங்களை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் சினிமாவிற்கு போவது மட்டுமே குறும்படங்கள் எடுப்பதற்கான காரணமாக இருத்தல் கூடாது. தான் ஒரு கலைவடிவத்தை உருவாக்குகிறோம் என்ற பொறுப்பு படைப்பாளிகளுக்கு எப்போதும் இருக்க வேண்டும்.
எந்த புள்ளியில் குறும்படங்கள் திரைப்படங்களில் இருந்து மாறுபடுகின்றன?
இன்னும் இந்த கேள்விக்கான பதிலை நான் தேடிக்கொண்டே தான் இருக்கிறேன். பதில் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.
குறும்படங்களுக்கான பார்வையாளர் வட்டம் எப்படி இருக்கின்றது?
தமிழ்ச் சூழலை பொறுத்த வரையில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர்களும், சினிமா காதலர்களும்தான் குறும்படங்களுக்கான பார்வையாளர்களாக இருக்கின்றனர்.
நமது சூழலில் குறும்படங்களை சந்தைப்படுத்துதல் சாத்தியமா?
நிச்சயமாக. மெயின்ஸ்ட்ரீம் சினிமாக்களுக்கு நிகராக குறும்படங்களும் பிரபலப்படுத்தப்பட வேண்டும். கேரளா கஃபே, தாஸ் கஹானியன் போன்று பத்து குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக தரும் முயற்சிகள் தொடர்ந்தால், இது பெரிதாக சாத்தியப்படும் என்று நினைக்கிறேன்.
உங்கள் குறும்படங்களில் உங்களுக்கு மிகுந்த தன்னிறைவைத் தந்த படம்?
கரை. இந்த படத்தின் திரைக்கதை எனக்கு மிகுந்த தன்னிறைவை தந்த்து. ஏனென்றால் இது எனக்கு ஒரு சோதனை முயற்சி. படத்தை முடித்த பிறகு மிகுந்த திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்.
தொடர்ச்சியான குறும்பட அனுபவங்கள் கற்றுத்தந்தவை என்ன?
கிடைக்கும் அத்தனையையும் அதன் முழு வீச்சில் எப்படி பயன்படுத்துவது
படத்தின் நடிகர்களை, சினிமா எடுக்க உதவும் கருவிகளாக பயன்படுத்தாமல், அவர்களை மரியாதையுடன் நடத்துவது.
குறும்படங்களில் இருந்து திரைப்படங்களுக்கு செல்லும்போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?
சமூகப் பொறுப்பும், படைப்பின் நேர்மையும்.
திரைப்பட இயக்குனரான பின் குறும்படங்கள் எடுக்கும் எண்ணம் இருக்கின்றதா?
நிச்சயமாக குறும்படங்கள் எடுப்பேன். சினிமாக்களோடு ஒப்பிட்டால் மிகுந்த சுதந்திரத்தோடு இருக்கும் ஒரு கலை வடிவம் அது. அதனால் மிகவும் விரும்பி குறும்படங்கள் எடுப்பேன்.
குறும்படங்களுக்கு வரும் விமர்சனங்களை எவ்வாறு எடுத்துக்கொள்வீர்கள்? உங்கள் முதல் விமர்சகர் யார்?
நல்லதோ, கெட்டதோ இருதரப்பு விமர்சனங்களையும் நான் வரவேற்கிறேன். ஒரு படைப்பாளியாக பெரும்பாலான நேரங்களில், ஒரு படம் எடுத்து முடித்து அதைப் பார்க்கும்போதே, எது தவறாக இருக்கின்றது, எதை இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்ற நமக்கு தெரிந்துவிடும். பார்வையாளர்களிடம் இருந்தும் கிட்டத்தட்ட அதே விமர்சனங்கள்தான் வருகிறது. நானே கவனிக்காத ஏதோ ஒரு விஷயத்தை குறிப்பிடும் விமர்சனங்கள் வரும்போது மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.
எனக்கு வரும் நெகடிவ்வான விமர்சனங்கள் பெரிதும், படத்தை விமர்சிக்காமல் என்னை குறிவைத்து தாக்குவதாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில், என்னை நானே அமைதிப்படுத்திக் கொண்டு, இரண்டு நாட்கள் கழித்து, ஒரு பக்குவமான பதிலை அவர்களுக்கு அனுப்புவேன்.
குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்த பொழுது இருந்த புரிதலுக்கும், இப்போதுள்ள நிலையில் குறும்படங்கள் பார்ப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன? அப்போது எப்படி பார்த்தீர்கள், இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?
முதலில் படம் பார்க்கும்போது, படத்தின் உணர்வுகளை என்னால் முழுதாக உணர முடியும். ஆனால் படம் எடுப்பதைப் பற்றி கற்க ஆரம்பித்ததும், அந்த உணர்வை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் படத்தையோ குறும்படத்தையோ பார்க்கும்போது, அந்த படத்தில் காண்பிக்கப்படும் உணர்வுகளை அனுபவிக்காமல், படத்தை பற்றி விமர்சனப்பார்வையில் மதிப்பிட ஆரம்பித்துவிடுவேன். இது வரமோ, சாபமோ, கிட்டத்தட்ட எல்லா படைப்பாளிகளுக்கும் இதே நிலை இருக்கும்.
ஒரு குறும்படம் எடுக்க சராசரியாக எவ்வளவு செலவாகும்?
என்ன மாதிரியான படம் எடுக்கிறோம் என்பதை பொறுத்து அது மாறுபடும். 5000 ரூபாய் பணத்தில் தரமான படமெடுத்த நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன். என் குறும்படங்களுக்கு 30,000 முதல் 35,000 வரை நான் செலவு செய்தேன்.
எப்படிப்பட்ட படைப்புகளை வரும்காலங்களில் தர ஆசை?
என்னை கவரும், என்னை உந்தித் தள்ளும் எதையும் திரையில் நேர்த்தியாக கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். இப்படிப்பட்ட படங்களைத் தான் எடுக்க வேண்டும் என்று எந்த திட்டமும் இல்லை.
இங்கே குறும்படம் என்னும் கலை வளர என்னென்ன செய்ய வேண்டும்?
குறும்படக் கலை வளர வேண்டுமென்றால், முதலில் நாம் பிறரைப் பார்த்து மறுஉருவாக்கம் செய்யாமல் நமது சுயத்தை வெளிப்படுத்தவேண்டும். குறும்படத் துறையின் மேல் நிஜமான காதலும் உந்துதலும் உள்ள படைப்பாளிகளை ஒன்றிணைப்பதன் மூலமாகவும், அவர்களுக்கு கலை சார்ந்தும் தொழில் நுட்பம் சார்ந்தும் பல்வேறு நுணுக்கங்களை தெரிந்துகொள்வதன் மூலமும் நிகழ்த்திக் காட்ட முடியும்.
மேலும் மக்களிடையே குறும்படம் என்னும் கலை பற்றிய போதிய விழிப்புணர்வும் இல்லை. இந்த நிலையை மாற்ற பல குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக மாற்றி, கேரளா கஃபே, தஸ் கஹானியன் போன்ற முயற்சிகளைப்போல் மெயின்ஸ்ட்ரீம் படங்களாக வெளியிட வேண்டும். பொதுமக்களிடையே இந்த கலையை பரப்ப இது மிகவும் பயன்படும்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |