தமிழ் ஸ்டூடியோவின் முதல் குறும்பட வட்டம் அக்டோபர் 11, 2008, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. அவ்விழாவில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 30 பேர் மட்டுமே,. கிட்டத்தட்ட 4 ஆண்டுகாலம் கழிந்த நிலையில் இன்று 51 வது குறும்பட வட்டம் நடைபெறுகிறது. இதில் நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் கடைசியாக குறும்பட வட்டம் 10.11.2012 அன்று கே.கே. நகரில் தியேட்டர் லேபில் நடத்தப்பட்டது பின்னர் 6மாதங்கள் கழிந்து இன்று(10.03.2013) மீண்டும் குறும்பட வட்டம் அரங்கேறுவதால் எழும்பூரிலுள்ள ஜீவன ஜோதி, ICSA அரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
|
விழாவை தலைமை தாங்க திரு. பாலுமகேந்திரா, இயக்குனர் ராம், மற்றும் திரைப்படக் கல்லூரி பேராசியர் ரவிராஜ் அழைக்கப்பட்டிருந்தனர்.
விழா சரியாக 5 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என முகநூல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பப்பட்டிருந்தாலும், ஓரிரண்டு நண்பர்களாக வந்து ஓர் அணியினராக திரள்வதற்கே காலதாமதமானதால் சரியாக 6 மணியளவில் 51 வது குறும்பட வட்டம் துவங்கப்பட்டது. அதற்கு முன்பாக எங்கள் தமிழ் ஸ்டூடியோவின் நிகழ்ச்சிகள் பெரும்பான்மையானவைகளுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்துதரும் திரு.பத்மநாபன் அவர்கள் அன்போடு செய்துகொண்டுவந்திருந்த இனிப்பும், காரமும் அரங்கில் நுழைந்த நண்பர்களுக்கு பரிமாறப்பட்டது. இனிப்பும் காரமும் நாவிலேயே நின்றுகொண்டிருக்க, மேலும் சூடாக இஞ்சி கலந்த தேநீரும் வழங்கப்படவே, அங்கு ஓர் இனிமையான மாலை வேளையை உணரக்கூடிய சூழல் உருவானது.
நண்பர்களின் அரட்டைச்சத்தமும், விருந்தினர்கள் ஒவ்வொருவரின் வருகையும், ஒலி அமைப்பவரின் பரிசோதனை சத்தமும், இருக்கை பற்றாக்குறையால் நாற்காலிகள் எடுக்க ஓடிய நண்பர்கள் ஒருபுறமுமாக, செந்தில் அவர்கள் ஒருபுறம் புத்தகங்களை அடுக்கி வைப்பதுமாக அந்த அரங்கம் முழுவதும் கோலாகலமாக காட்சியளித்தது. இது ஏதோ சம்பர்தாயமாக நடத்தப்படும் நிகழ்ச்சி போலல்லாமல் குடும்ப நிகழ்ச்சிபோல அரங்கேறியது குறும்பட வட்டம்.
6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியதும் தமிழ்ஸ்டூடியோவின் நிறுவனர் அருண் அவர்கள், குறும்பட வட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்துப் பேசினார்.
” முதல் குறும்பட வட்டத்தில் வந்தமர்ந்த நண்பர்களில் பெரும்பாலானோர் இந்த வட்டத்திற்கும் வந்துள்ளனர். அவர்களில் சிலரை உங்களுக்கு அறிமுகம் செய்வித்து அவர்களை பேச அன்போடு அழைக்கிறேன்,”, என அவர் அழைத்தது, யாழ் நிலவன் அவர்களை. திரு. யாழ்நிலவன் யாரெனில் தமிழ் ஸ்டூடியோவின் குறும்பட வட்டத்திற்கான செயலாளர். யாழ்நிலவன் சுருக்கமாக தமிழ் ஸ்டூடியோவின் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்களையும், தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டபின், திரு.பத்மநாபன் அவர்கள் அழைக்கப்பட்டார்.
திரு.பத்மநாபன் விரிவாக, முதன்முதலாக தோன்றிய சினிமா முதல், இந்தியாவில் திரையிடப்பட்ட சினிமாவான ”ஆலம் ஆரா”, மற்றும் முதல் பேசும்படமான “காளிதாஸ்” இவற்றின் வரலாற்றையும், இத்தகைய திரைப்படங்களை மக்கள் முதல்முறையாக திரையில் பார்க்கையில் அவர்கள் அடைந்த உவகையையும் பகிர்ந்துகொண்டார். இறுதியாக மருத்துவர். சிவபாத சுந்தரம் அவர்கள் பேசினார்.
திரு. சிவபாத சுந்தரம் அவர்கள் தொடர்ந்து தமிழ்ஸ்டூடியோவின் வளர்ச்சியில் பங்குகொண்டவர். தமிழ்ஸ்டூடியோவின் நிகழ்ச்சிகளுக்கு தன்னாலான நிதியுதவியை எப்போதும் செய்யத்தயாராக இருப்பவர். இவரும் நேரமின்மையின் காரணமாக சுருக்கமாக பேச்சை நிறைவு செய்தார். எனினும் தமிழ்ஸ்டூடியோவின் குறும்பட வட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்துக்கொண்டமர்ந்தார்.
நண்பர்கள் பேசி முடிந்ததும் சிறிது நேர அமைதிக்குபின் முதலாவதாக ரவிராஜ் அவர்கள் பேச அழைக்கப்பட்டார். திரு.ரவிராஜ் அவர்கள் சினிமாவில்தான் வில்லத்தனமாக நடிப்பாரே தவிர நிஜ வாழ்க்கையில் நகைச்சுவைத் தொனியை அழகாக கையாளக்கூடியவர். இவரது பேச்சில் எப்போதுமே நகைப்புத்தன்மை இருக்கும் என திரு. அருண் அவர்கள் அறிமுகப் படுத்திவைத்ததன் காரணமாக ரவிராஜ் அவர்களின் பேச்சைக்கேட்க அனைவரும் ஆர்வமாக அமர்ந்திருந்தனர். ” இன்று குறும்படம் எடுப்பது மிகவும் எளிதாக மாறிவிட்டது. எனது மாணவன் ஒருவன் என்னிடம் வந்து சார். நான் குறும்படம் எடுத்திருக்கேன் என்று சொன்னான். நான் உடனே அப்படியா., என்ற ஆச்சர்யத்துடன் ஓ.கே ஒளிப்பதிவு எப்படிப்பா கற்றுக்கொண்டாய் என்று கேட்டதற்கு, “யூ ட்யூப் ல பார்த்து சார்”, என்று சொன்னான். ’ஒ.கே எடிட்டிங் எப்படி உனக்குத் தெரியும்’ என்று கேட்க, “அதுவும் யூ ட்யூப் ல தான் சார் பார்த்தேன்”, என்றான். நான் சற்று ஆச்சர்யத்துடன், ‘கேமிரா எங்க காண்பி பார்க்கலாம்’ என்று கேட்க, அந்த மாணவனோ தன் கையில் வைத்திருந்த செல்போனை காண்பிக்கின்றான். இவ்வாறாக இன்று சினிமா எடுப்பதென்பது மிக சுலபமாக மாறிவிட்டது. சிறிது முயற்சி மட்டும் இருந்தால் நாம் நினைக்கும் சினிமாவை எடுத்துப் பார்த்துவிடலாம், சரியான துல்லியம் இல்லாவிட்டாலும் இது ஒரு பயிற்சியாக இருக்கும்”, என்று திரைப்படக்கல்லூரி பேராசிரியர் திரு. ரவிராஜ் அவர்கள் கூறினார். மேலும் அவர் DOORDHARSHAN சேனலுக்காக எடுத்த சில குறும்படங்களைப் பற்றியும் இந்த வட்டத்தில் பகிர்ந்துகொண்டார்.
அடுத்ததாக இயக்குனர். திரு. பாலுமகேந்திரா அவர்கள் பேச அன்போடு அழைக்கப்பட்டார். இதில் முக்கியமானதொரு விஷயம் என்னவெனில் இந்த குறும்பட வட்டத்தில் பாலுமகேந்திரா அவர்கள் ஒரு கதையை எவ்வாறு குறும்படமாக மாற்றுவது என்ற முறையை ஆர்வலர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதுதான் இந்நிகழ்வின் முக்கியமான பகுதி.
பாலுமகேந்திரா அவர்கள் எந்த கதையினை தேர்ந்தெடுத்தார், அது யாருடைய கதை, அது எவ்விதம் ஒரு குறும்படமாக மாறியது என்பனபற்றியெல்லாம் இங்கு காண்போம்.
திரு.பாலுமகேந்திரா பேசும்பொழுது முதலாவதாக சினிமாவுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். முதன்முதலாக புனே திரைப்படக் கல்லூரியில் படித்தது. ஆனால் அங்கு தான் கேட்ட இயக்குனர் பிரிவு கிடைக்காமல் போகவே ஒளிப்பதிவை தேர்ந்தெடுத்து அங்கு ஓர் ஆறுமாத காலமாக படிப்பில் கவனம் செலுத்தமால், வெறுமனே சுற்றித்திரிந்து. பின்னர், இங்கு முடிந்தவரையில் கற்றுக்கொண்டுவிடலாம் என்ற உந்துதலினால் ஆர்வத்தோடு, ஒளிப்பதிவு பயின்றது முதல் சினிமாவில் ஒரு ஒளிப்பதிவாளனாக தன்னை அடையளப்படுத்திக்கொண்டது வரை அவர் பகிர்ந்துகொண்டார்.
இச்சிற்றுரைக்குப்பின்னர், கதைக்கு வந்தார். அவர் தேர்ந்தெடுத்த கதை “தப்புக்கணக்கு”, இக்கதை “மாலன்” அவர்களது சிறுகதை.
இந்தக் கதையை பாலுமகேந்திராவின் ஆசைப்படி இயக்குனரும், பாலுமகேந்திராவின் சிஷ்யருமான இயக்குனர்.திரு.ராம் அவர்கள் படித்தார்.
இந்தக் கதை வித்தியாசமாக சிந்திக்கும் ஒரு சிறுமியின் வாழ்வைப் பற்றியது. இவள் தன் தாத்தாவுடன் அதிகமாக தோழமையுணர்வுடன் இருப்பவள். பெற்றோர்களைக் காட்டிலும் தாத்தாவுடன் தான் நட்பு. இவளது சிந்தனை எப்போதுமே சற்று வித்தியாசமானது. இவள் கேட்கும் கேள்விகளுக்கு தாத்தாவாலேயே பதில் சொல்வது சிரமமான காரியம். இப்படியான சூழ்நிலையில் கணக்குத்தேர்வில் ஒரு கேள்விக்கு 7*2=14, என்பது தவறு என சுட்டிக்காட்டி அதனால் அவளது கணக்கு மார்க்கும் குறைந்துவிடும். ஆனால் இந்தக் கணக்குத்தான் சரி என்பதனை உணர்ந்த தாத்தா எதற்கு அஞ்சாமல் நேராக பள்ளிக்குச்சென்று ஆசிரியை பார்த்து இதனை முறையிடுவார். ஆனால் அவரோ எதற்கும் பயப்படாமல் நிதானமாக ”இது தப்புத்தான் சார், நாங்க சொல்லிக்கொடுப்பது 2ஆம் வாய்ப்பாடு, இதில் ஒரு வாரத்திற்கு 7 நாள் எனில், இரண்டு வாரத்திற்கு , 2*7= 14, என்பதே சரியான பதில், ஆனால் இவள் எழுதியிருப்பது 7ஆம் வாய்ப்பாடு, இதற்கு எப்படி நாங்கள் மதிப்பெண் போடமுடியும்”, என தன்பக்க நியாயத்தை எடுத்துரைப்பாள் ஆசிரியை. ஆனாலும் சமாதானமாகாத தாத்தா பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்து முறையிடுவார், அவரும் ”2*7=14 தான், சரியான பதில், உங்கள் பேத்தி எழுதியது தவறான விடை “ என தலைமையாசிரியரும் வாதிட, தாத்தாவின் அடுத்த அடி பள்ளிக்கல்வி நிர்வாக இயக்குனரை நோக்கியதாக இருக்கும். ஆனால் அவரோ” இதில் பாதி சரி, பாதி தவறு”, என்று குட்டையைக் குலப்புவார்.
இவ்வாறு பயணிக்கும் கதையில் திருப்புமுனையாக பெற்றோருக்கும் இவ்விஷயம் தெரிந்து விட, சிறுமியின் தந்தையோ தாத்தாவைக் கண்டிப்பார். மேலும் சிறுமியைக் கூப்பிட்டு விசாரிக்கையில் அவளோ, “வாரத்திற்கு ஒரு ஞாயிறு, ஒரு திங்கள்......., அப்படின்னா, இரண்டு வாரத்திற்கு இரண்டு ஞாயிறு, இரண்டு திங்கள், இரண்டு செவ்வாய்..... எனவே 7*2=14” என்பாள். தாத்தாவின் சந்தோஷம் அதிகரிக்கும். ஆனால் சிறுமியின் தந்தையோ, சிறுமியை அழைத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு,” இவள் ஒரு பெண்பிள்ளை, இப்படியாக தொடர்ந்து இவ்வாறு வித்யாசமாக சிந்திக்கத்தொடங்கினால் இது இவளது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்”, என்றவாறெல்லாம் பேசி சிறுமியின் சிந்தனைக்கு முற்றுபுள்ளி வைப்பார். தாத்தாவின் கண்ணீருடன் கதை முடியும்.
இவ்வாறாக ஒரே நேரத்தில் பெண்ணடிமைத்தனத்தையும், இன்றையை கல்வியின் நிலையையும் ஒருசேர சாடியிருக்கும் கதையாக தப்புக்கணக்கு இருந்தது.
இப்படியான கதையை எவ்வாறு திரைக்கதை அமைத்து குறும்படமாக பாலுமகேந்திரா அவர்கள் மாற்றியமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் காணப்பட்டது.
ஆனால் அந்த சந்தேகங்களை அவரது குறும்படத்தைப் பார்ப்பதன்மூலமாக எளிதில் அறிந்துகொள்ளலாம்,.
அந்தச் சிறுமி வித்யாசமாக சிந்திப்பவள் என்பதனை கதையில் ”வானம் ஏன் நீல நிறமா இருக்கு?” என்ற கேள்விகளின் மூலம் நிறுவியிருப்பார் மாலன். ஆனால் பாலு மகேந்திராவோ இதனை காட்சிகளின் திரைக்கதைமூலமாக வடித்திருந்தார்.
கதை மாந்தர்களுக்கேற்ற, உருவங்களை திரையில் கொண்டு வந்து, அவர்களின் வாயிலாக கதை சொல்லப்பட்டது.
ஆனால் கதையின் சாராம்சத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் குறும்படம் அமைந்தது. (பாலு மகேந்திராவின் கதை நேரம் புத்தக வடிவிலும் குறுந்தகடாகவும் வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் கதையும் அதற்கான திரைக்கதையும் பின்னர் குறுந்தகட்டில் குறும்படமும் அடங்கியிருக்கும். திரைப்பட ஆர்வலர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். )
பாலுமகேந்திராவின் பகிர்வு நேரம் முடிந்தபின் அடுத்ததாக இயக்குனர் திரு.ராம் அவர்கள் பேச அழைக்கப்பட்டார்.
ராம் பேசுகையில் தமிழ் சினிமாவின் விமர்சனச் சூழலைக் குறித்துப் பேசினார். எவ்விதம் தனது ”கற்றது தமிழ்” திரைப்படம் பிரபல வார இதழ் ஒன்றால் புறக்கணிக்கப்பட்டது என்பதனையும், எழுத்தாளர்கள் சிலரது விமர்சனத்தையும் முன்னிட்டு தனது காட்டமான பேச்சை பதிவு செய்தார். அச்சமயத்தில் கற்றது தமிழ் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளையும் நினைவு கூர்ந்து அதற்கான பதிலையும் கூறினார். இவ்வாறாக ராமின் பேச்சு நிறைவடைந்த நிலையில் தமிழ் ஸ்டூடியோ நிறுவனர் அருண் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
”முதல் குறும்பட வட்டம் நடத்தப்பட்ட சமயத்தில் எண்ணிக்கையில் குறைவான நண்பர்கள் வந்தாலும் அன்று குறும்படம் எடுப்பதற்கான ஆவல் குறைவாகவே இருந்தது. நாங்களே இலவசமாக லெனின் மூலமாக படத்தொகுப்பும், தமிழ் ஸ்டூடியோவினால் கேமிராவும் கொடுத்து குறும்படம் எடுக்க அழைக்கையில் எவரும் முன்வரவில்லை, அப்போது குறும்படம் பற்றிய விழிப்புணர்வும் குறைவாக இருந்தது. அதேசமயம் குறும்படங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. ஆனால் பின்னர் நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளால் குறும்படம் எடுக்கும் ஆர்வம் மேலோங்கி எழ அனைவரும் குறும்படம் எடுக்கத்தொடங்கி விட்டனர்.
முன்னர் கூறியதைப் போல இப்போதும் அனைத்தும் இலவசமாக தருகிறோம் அனைவரும் குறும்படம் எடுக்க வாருங்கள் என்று கூறினால், இந்த அரங்கத்தில் உள்ள அனைவரும் முன்வருவர். இப்படியாக குறும்படம் பற்றிய பரவலான பார்வை அனைவருக்கும் இருப்பதால் எங்களது தேவை குறைவானதாக தோன்றியது. அதனால் குறும்பட வட்டம் சில மாதங்களாக தொடர்ந்து நடைபெறவில்லை, ஆனால் பழைய நண்பர்கள் ஆர்வம் மிகுதியால் மீண்டும் இந்த அரங்கில் குறும்பட வட்டம் நடத்தப்படுகிறது, இனி ஒவ்வொரு இரண்டாவது ஞாயிறும் குறும்பட வட்டம் நடைபெறும்” என்றும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தார்.
கூட்டமும் கலைந்து சென்றது. நிறைவானதொரு நிகழ்ச்சியை நடத்திய மனநிறைவில் தமிழ்ஸ்டூடியோ நண்பர்கள் கலைந்து சென்றனர்.
நிகழ்வில் பாலு மகேந்திரா பேசிய காணொளி பதிவு: http://www.4tamilmedia.com/cinema/cine-interview/12471
மாலனின் சிறுகதையை படிக்க:
http://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%
AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%
AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D
%E0%AE%AA%E0%AF%81%
E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E
0%AE%95%E0%AF%81/#more-6011
-- தமிழ்
--------------------------------------------------------------------------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்ட தொடக்க விழா, எழும்பூர் ஜீவன் ஜோதி அரங்கத்தில் மார்ச் 10'ஆம் தேதி நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாலு மகேந்திரா, இயக்குனர் ராம் மற்றும் பேராசிரியர் ரவிராஜ் [தரமணி திரைப்படக் கல்லூரி] ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் ஸ்டுடியோ அருண் நிகழ்ச்சியை தனது உரையுடன் தொடங்கி வைத்தார். ஏற்கனவே 50 குறும்பட வட்ட நிகழ்வுகள் நடந்திருப்பதையும், கடந்த 6 மாதங்களாக பொருளாதார காரணங்களுக்காக நடத்த இயலாமல் போனதையும் குறிப்பிட்டார். மீண்டும் இந்நிகழ்வை துவங்க உதவிய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். 2008 அக்டோபரில் மெரினாவில் முதல் குறும்பட வட்டம் துவங்கியதை நினைவு படுத்தி குறிப்பிட்டார். அன்றைய கால கட்டத்தில் குறும்படங்களின் வரவு மிக குறைவாக இருந்ததையும், குறும்பட உருவாக்கத்திற்கு எவ்வாறெல்லாம் தமிழ் ஸ்டுடியோ துணை இருந்தது என்பதை குறித்தும் பேசினார். நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளின் வரவுக்கு பின் தமிழ் குறும்படங்களின் வரவு அதிகரித்தது, ஆனால் அதன் தரம் மிக மோசமாக இருக்கிறது என்றார். நல்ல தரமான குறும்படங்கள் வெளி வர வேண்டும் என்று நோக்கில் மீண்டும் இந்த குறும்பட வட்டம் துவக்கியிருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் குறும்படங்கள் திரையிடப்பட்டு அது குறித்து விவாதம் நடைப்பெறும், சினிமா தொடர்பான ஒரு சிறப்பு விருந்தினரும் பங்கேற்பார் என்று குறிப்பிட்டார்.
ரவிராஜன் அவர்கள் தனது சினிமா பங்களிப்பு குறித்து சுருக்கமாக தெரிவித்தார். தனக்கு ஒருவர் காண்பித்த குறும்படத்தை குறித்து குறிப்பிட்டார். எங்கு ஒளிப்பதிவு பயின்றீர் என்று அவரை கேட்டதிற்கு, youtube`இல் தான் என்று கூறியுள்ளார், தொடர்ந்து பேசியதில் அவர் படத்தொகுப்பு, இயக்கம் போன்றவையையும் youtube`மூலம் பயின்றதாக குறிப்பிட்டார். தற்போது நீங்கள் 3 ஆண்டு படிக்க வேண்டிய கட்டாயமில்லை, ஆனால் தொடர்ந்து நல்ல சினிமாவை பார்ப்பதும், அது குறித்த தேடலும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்றார். Video'வில் மட்டுமல்லாமலும் Audio'விலும் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார், youtube'இலே அதற்கான பயிற்சிகள் இருக்கும் என்றார். தனது மாணவரின் கர்ண மோட்சம் குறும்படம் பல போட்டிகள் மூலம் 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தது குறித்தும் குறிப்பிட்டார்.
குறும்பட வட்டம் குறித்து, தொடர்ந்து பங்கெடுத்த இருவர் தங்கள் கருத்தினையும் வாழ்த்தையும் தெரிவித்தனர்.
பாலு மகேந்திரா, தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை குறித்து விவரமாக பேசினார். தனது முதல் 5 ஆண்டுகளில் பணிபுரிந்த 21 படங்களே தனது பிற்கால சினிமாவிற்கு அஸ்திவாரம் என்றார். நெல்லு திரைப்படத்தில் ஒளிப்பதிவு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை பகிர்ந்துக்கொண்டார். சிறுகதையை சினிமாவாக மாற்றுவது குறித்து பின்னர் பேசினார்.
அவர் பேசியதின் சுருக்கம்:
எழுத்தாளர் எழுதியதை முழுவதும் ஏற்பதும் ஏற்காததும் எனது சுதந்திரம், அந்த கதையின் ஆன்மாவை எடுத்துக்கொண்டு எனது சினிமாவுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வேன். எனது சினிமா, எழுத்தாளரின் கதை ஏற்படுத்திய தாக்கத்தைவிட அதிக தாக்கம் ஏற்ப்படுத்தும் விதமாக இருக்க முழு முயற்சி எடுப்பேன். எழுத்தில் ஒரு வரியில் சொல்லியிருப்பதை காட்சிப்படுத்த முடியாமலும் அல்லது, நான்கு அல்லது இன்னும் அதிகமான காட்சிகள் கொண்டு மட்டுமே காட்சி படுத்த முடியும் என்ற சூழல் ஏற்படலாம், அப்படியான சுழ்நிலையில் எழுத்தின் ஆன்மாவை சிதைக்காமல் என்னால் இயன்ற முறையில் காட்சிப்படுத்துவேன் என்றார்.
தப்பு கணக்கு என்ற மாலனின் சிறுகதையை எப்படி குறும்படமாகினார் என்பதையும் விளக்கினார். பாலு மகேந்திரா அனைவரையும் கண்களை மூடிக்கொண்டு ராம் வாசிப்பதை கூர்ந்து கவனிக்க சொன்னார். இயக்குனர் ராம் சிறுகதையை பொறுமையாக படித்தார்.
படம் திரையிடப்படும் முன்னரே ஆரம்ப காட்சியில் குழந்தை உறங்குவதை close shot`இல் காண்பித்திருப்பேன் அதை கவனியுங்கள், பின்பு அதற்கு விளக்கம் தருவதாக குறிப்பிட்டார். படம் திரையிடப்பட்ட பின் பாலு மகேந்திரா மீண்டும் பேசினார். கதையில் ஜனனி என்ற குழந்தை பாத்திரத்தின் பெயர் குறிப்பிட்ட சமூகத்தில் ஒருவரை குறிப்பதாக இருப்பதால் தனது கதாபாத்திரத்திற்கு சக்தி என்ற பொதுவான பெயரை வைத்ததாக குறிப்பிட்டார். கடல் ஏன் நீலம்? மரம் ஏன் பச்சை? என அடுக்கடுக்காக கேள்வி கேட்பவள் ஜனனி, இதை தான் எவ்வாறு காட்சி அமைத்தார் என்பதையும் குறிப்பிட்டார். ஆரம்ப காட்சியில் குழந்தை கையில் அணிந்திருக்கும் hair band`ஐ காட்ட தான் close shot` வைத்ததற்கு காரணமாக குறிப்பிட்டார். Hair band`ஐ குறித்து சக்தி அடுத்த காட்சியில் பேசுவது போல் ஒரு காட்சி இருக்கும். திரையிடலுக்கு பின் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பாலு மகேந்திரா அவர்கள் விளக்கம் அளித்தார்.
இயக்குனர் ராம், பாலு மகேந்திராவுடனான தனது ஆரம்ப கால சந்திப்பு அனுபவங்களையும் அவரிடமான தனது பழக்கம் குறித்தும் பேசினார். தமிழ் சினிமா விமரிசன சூழல் குறித்தும் பேசினார்.
அவர் பேசியதின் சுருக்கம்:
வெகுஜன இதழ்களில் வரும் விமரிசனம், பதிவர்கள் எழுதும் விமரிசனம், ஃபேஸ்புக்கில் வரும் விமரிசனம், சிற்றிதழில் வெளியாகும் எழுத்தாளர்கள்-இலக்கியவாதிகளின் விமரிசனம் என விமரிசனங்களை பிரிக்கலாம். ஆறு-ஏழு பேர் ஒன்றாக திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து விமரிசனம் எழுதுவது, ஆனந்த விகடன் போன்ற வெகுஜன இதழ்களில் வரும் விமரிசனமாகும். திரையரங்கில் பார்வையாளர்கள் கைத்தட்டினால், விமரிசனத்தில் மக்கள் இந்த காட்சிகளை இரசித்து பார்த்தனர் என எழுதுவார்கள். எனது கற்றது தமிழ் படத்தை, சத்யம் திரையரங்கில் , லோக்கல் தியேட்டரில், கலைஞர் தொலைக்காட்சியில், குடும்பத்துடன், மனைவியுடன், நண்பர்களுடன் என ஒவ்வொரு சூழ்நிலையில் பார்கையில் ஏற்படும் பாதிப்பு வெவ்வேறானது. இந்த படம் பார்க்கும் ஆறு-ஏழு பேர் அல்லது பத்திரிக்கையின் முக்கியமான நண்பர் யாருடனாவது நமக்கு சில கசப்புணர்வு இருந்தால் அது நம் படத்தின் விமரிசினத்தையும் பாதிக்கும்.
Blogger`கள் மற்றும் ஃபேஸ்புக்கில் தங்கள் கருத்தை விமரிசனமாக எழுதுகிறார்கள். இதை ஒரு public forum`இல் வைக்கிறோம் என்ற சிந்தனை அவர்களுக்கு இல்லை. வெகு சிலர் அதில் சிறப்பாகவும் செயல் படுகின்றனர். என் படத்தை நீங்கள் பார்ப்பதற்காக நான் எடுக்கவில்லை. எனக்காக மட்டுமே எடுக்கிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் பார்க்காதீர்கள். உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், கலைஞர் தொலைக்காட்சியில் அதை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனது அடுத்த படத்தை எனது மகளுக்காக தான் எடுக்கிறேன்.
சிற்றிதழ்களில் எழுதும் இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றொரு வகை. என்னை பொருத்தவரை தமிழ் சினிமா, தமிழ் இலக்கிய சூழலை விட பல மடங்கு நன்றாகவே இருக்கிறது.
பாலு மகேந்திரா அவர்களின் வீடு, மறுபடியும் படம் குறித்து சிலாகித்து பேசினார். சரியான விமரிசகர்கள் இருந்திருந்தால், எங்கள் இயக்குனரின் படமும் மிக பெரிய உயரத்தை எட்டியிருக்கும் என்றார்.
அருணின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதாக முடிவடைந்தது. அரங்கு நிறைந்த கூட்டமாக குறும்பட வட்டம் துவங்கியது. இறுதி வரை பெறும்பாலானோர் காத்திருந்து கவனித்தனர்.
-- யுகேந்தர்