இதழ்: 4, நாள்: 15- பங்குனி -2013 (March)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 2 - டிராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 3 - ராஜேஷ்
--------------------------------
ஒரு கதை கவிதையாகும் தருணம் 3 - யாளி
--------------------------------
குறும்பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் ஒரு நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் 51 வது குறும்பட வட்டம் - தமிழ், யுகேந்தர்
--------------------------------
நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
சின்னவனைச் சுழற்றியெடுக்கும் 'சுழிக் காற்று' - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
கிளர்ந்தெழும் மூன்றாம் சினிமா - விஸ்வாமித்திரன்
--------------------------------
பெல் அடிச்சாச்சு - திரைக்கதை - செந்தூரன் - படிமை மாணவர்
--------------------------------
சினிமா வடிவம் - அருண் மோகன்
 
   

   


உயிர் கொடுக்கும் கலை 2 - டிராட்ஸ்கி மருது

ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்

சென்ற இதழில் ஓவியர்களுக்கு முழுமையான மரியாதையும் ஆதரவும் கிடைக்காத சூழ்நிலை பற்றியும், சினிமாவில் கிராபிக்ஸ் கலைஞர்களின் பங்களிப்பை மறைத்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இடை தரகர்கள், கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை மறைத்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். கலைஞர்களுக்கான மரியாதை கிடைக்காத ஒரு சூழலில், முன்னிருந்து பத்திரிக்கை துறையோ, அல்லது சினிமா துறையோ, செயல்படுத்த வேண்டிய எந்த ஒரு காரியத்தையும் செய்யவில்லை. கலைஞர்கள் மதிக்கப்படாததற்கும் , போற்றப்படாததற்கும் இங்கு இருக்கும் பார்வையின்மை தான் காரணம் என்று சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன். அந்த பார்வை உலகளவிலும் இருக்கிறது.

சமீபத்திய ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து கலைஞர்களும் பங்கெடுத்திருந்தனர். Ang Lee`யின் Life of Pi` திரைப்படத்திற்கு Visual Effects'காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு Visual Effects' செய்த Rhythm & Hues Studios நிறுவனம் திவாலாகி (Bankrupt) விட்டதாக அறிவித்தது.

சரியான ஊதியம் இல்லாமல், அந்த படத்தின் சிறப்புக்காக உழைத்த அத்தனை கலைஞர்களையும் ஒரே நாளில் தெருவில் இறக்கி விட்டுவிட்டார்கள். தமிழகத்தை போன்றே, ஹாலிவுட்டிலும், இதே நிலைதான் இருக்கிறது.

இதை நான் இங்கு குறிப்பிட ஒரு காரணம் இருக்கிறது. கலைஞர்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்க்கொள்ளும் கடினமான பாதை, அந்த பாதையை கடக்க அவர்கள் எடுக்கும் சிரத்தையும், காலமும், நேரமும் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. 30-40 வருட அர்ப்பணிப்புக்கு பிறகே ஒரு கலைஞனின், செயல் அவனை சுற்றியுள்ள மக்களை சென்றடைகிறது. குறைந்த பட்சம் கடுமையான அர்ப்பணிப்போட வேலையை 30 வருடமாவது செய்திருக்க வேண்டும். தன்னை அடையாளம் கண்டு தன்னையே புரிந்துக் கொண்டு அதன் பின்பு ஒரு நல்ல படைப்பை கொடுக்கும் இடத்தை அடைவதற்கு மிகப் பெரிய கடின பாதையை அவர் கடக்க வேண்டியிருக்கிறது.

500 முதல் 600 ஆண்டுகள் சிறப்பான பாதையை அமைத்து கொடுத்துள்ள ஐரோப்பாவின் மேற்கத்திய நாகரிக சூழ்நிலையிருந்தும், அமெரிக்காவின் மிக உயரமான இடத்திலும் கலைஞர்கள் புறக்கனிப்படும் சூழ்நிலை இருக்கிறது. இது தொடந்து அடிக்கடி நடந்துக்கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லுவேன். இந்த விஷயத்தை நான் முன்னிருத்து சொல்வது, ஏனென்றால், தமிழ்நாட்டில் எனக்கு தெரிந்து ஒவ்வொரு பகுதியாக, கவனமாக செயல் பட்ட கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். கடந்த 150 ஆண்டுகளில் நவீன ஓவியம் பெரிய மாற்றங்களை ஏற்ப்படுத்தியிருக்கிறது. அந்த மாற்றங்களின் ஊடாக ஒரு பெரிய வளர்ச்சியோடு நவீன ஓவியம் செய்வதற்கான ஒரு பகுதி உருவாகியது. நானும் அந்த வழியிலிருந்து வந்தவன். ஓவிய கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு மேற்கத்திய கலை கல்லூரியில் கற்றுக்கொடுக்கும் முறையில் தான் பாடம் எடுத்தார்கள். அது திடீரென நிகழவில்லை, காலனிய ஆட்சியில் நாம் இருந்ததன் மூலம் கிடைக்க பெற்றது. உலகம் முழுவதும் இந்த படிப்பு முறைதான் நடைமுறையில் இருந்தது. ஒரு கலைஞன் வளர்வதற்கு என்னவெல்லாம் தேவை என்பதை அந்த படிப்பு முறை கற்று தந்தது. இதை குறை சொல்ல முடியாது. தேவையில்லை என்றும் சொல்லிவிட முடியாது. அதை கடந்து தான் வந்துள்ளோம். இதை நிராகரிக்கவும் முடியாது.

தற்சமயம் இருக்கும் தொழில்நுட்பம், அடுத்தடுத்து வருகிற வசதிகள் அனைத்தும் நான் சென்ற இதழில் குறிப்பிட்டது போல, நம் வேலைகளை எளிமையாக்குகிறது. கலைஞர்கள் தானே செய்ய வேண்டிய நிர்பந்தமான சில வேலைகளை தவிர்த்து கொடுப்பதற்கு நவீன சாதனங்கள் வந்துவிட்டது. ஆனால் அவருடைய ஆக்கப்பூர்வமான படைப்புத் திறன், அவருடைய செயல்பாடு ஆகியவைக்கு மாற்றே கிடையாது. அது அப்படியே தான் இருக்க வேண்டும்.

கடந்த 150 ஆண்டுகளில், ஒரு வளர்ச்சிய காலகட்டத்தில் நமது தொடர்பு சாதனம் எது என்று நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த புத்தகம், அங்கிருந்து இங்கு வரும் பயணிகளின் மூலம் கிடைக்கும் அனுபவம், அந்த நாகரிகத்திலிருந்து வருகிறவர்கள் அதை தெரிந்திருக்கிறவர்கள் நமக்கு கொண்டு வந்து சேர்ப்பது போன்றவையாகும். வரைப்படம், புத்தகம் அல்லது அடுத்த வந்த செய்திதாள் தான் ஆரம்ப கால தொடர்பு நிலை சாதனங்களாக இருந்தது. அதன் பின்பு புகைப்படம், சினிமா வந்தது. பிறகு வீடியோ வந்தது. நவீன தொழில்நுட்பங்கள் தற்கால தொடர்பு சாதனங்களாக இருக்கிறது.

நூறாண்டுக்கு முன்பு வெளிநாட்டு ஓவியம் அல்லது சிற்பம் குறித்த தகவலை ஒரு பகுதியாக அல்லது புகைப்படமாக புத்தகத்தில் மட்டுமே பார்க்க முடியும். இன்று அந்த சூழ்நிலையில்லை. அங்கு அருங்காட்சியத்தில் இருக்கும் படைப்புகளை இங்கு பார்க்கும் வசதியிருக்கிறது. ஓவிய கல்லூரி மூலமாக நவீன ஓவியம் சார்ந்த விஷயங்களை பார்ப்பதற்கான ஒரு பகுதி இங்கு இருக்கிறது. சினிமாவை பார்ப்பதற்கான 100 ஆண்டு வளர்ச்சி நமக்கு இருக்கிறது. புகைப்படத்தை பார்ப்பதற்கான வளர்ச்சி நமக்கு உண்டு.

கணினியின் தோற்றத்திற்கு பின்பு, அனிமேஷன் என்பது அனைவருக்கும் பரிச்சயமான ஒரு வார்த்தையாகி விட்டது. ஆனால் அனைவருக்கும் அனிமேஷன் குறித்து முழுமையான ஆழமும் தெளிவும் கிடையாது. பலர் கார்ட்டூன் படங்களைத்தான் அனிமேஷன் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் கார்ட்டூன், அனிமேஷன் பிரிவில் அனைவரும் அறிந்த ஒன்று. வால்ட் டிஸ்னி மற்றும் ஹாலிவுட் படங்களால் கார்ட்டூன் உலக மக்களை அதிகமாக சென்றடைந்தது. Inanimateable`ஐ animate செய்வது தான் அனிமேஷன் என்று கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தேன். கடந்த 100 ஆண்டுகளில் அனிமேஷன் செய்த பல அறியப்படாத பெரும் கலைஞர்கள் இருக்கிறார்கள். நான் குறிப்பிட போகும் கலைஞர்கள் ஒரு காலகட்டம் வரை எல்லாருக்கும் கிடைக்கப்படாத கலைஞர்களாக இருந்தார்கள். இப்போது Youtube இருக்கிறது. நான் சொல்லும் அனைத்து கலைஞர்களின் படைப்பையும் அங்கு பார்த்துவிடலாம். இருந்தாலும் எத்தனை பேர் பார்க்கிறார்கள். எத்தனை பேருக்கு இந்த கலைஞர்களுடைய படைப்புகள் பற்றிய விவரம் தெரியும். இது குறித்து பேச அல்லது தேடுகிற சூழல் இங்கிருக்கும் பகுதியில் யாருக்குமில்லை..

என்னை இதில் எப்படி நிறுத்திக்கொள்கிறேன் என்றால், நவீன ஓவியம் படித்த, நவீன ஓவியம் மட்டுமே வரைந்துக்கொண்டிருக்கும் கலைஞனாக என்னை பார்ப்பதில்லை. சங்கராபரணம் படம் போல, இங்கு சிலர் இருக்கிறார்கள். சாஸ்திரய சங்கீதத்தை பற்றி உயர்வாக பேச வேண்டுமென்றால், மேலை நாட்டு சங்கீதத்தை இழிவாக பேசுவார்கள். அது போலவே தமிழ்/இந்திய கலைகளை உயர்வாக சொல்வதென்றால், மற்ற உலக நாட்டு கலைகளை குறைவாக சொல்வார்கள். சிறப்பு அனைத்திலும் உள்ளது. எந்த காலகட்டத்தில், எப்படிப்பட்ட படைப்பு, யாருக்கு எப்படி சென்றடைந்திருக்கிறது என்பது முக்கியம். அன்றைய அரசியல் சூழ்நிலையென்ன என்பதையும், புற சூழலென்ன என்பதையும், தொடர்பு நிலையென்ன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவையெல்லாம் சேர்ந்து தான் ஒரு சமூகத்தை புரட்டி போடுகிறது. சமூகம் தான் ஒரு கலைஞனை தூண்டுகிறது. புதிய படைப்புகளையும், சம காலத்தில் அந்த சமூகத்தை பிரதிபளிக்க செய்யும் படைப்புகளையும் கலைஞர்கள் உருவாக்குவதற்கு சமூகம் தான் தூண்டுகோளாக இருக்கும்.

மதுரையில் எனக்கு கிடைத்த வாய்ப்பை குறித்து சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன். என் வீட்டு சூழ்நிலை, சினிமாவை பற்றிய பகுதி, அனிமேஷன் பற்றிய பகுதி, நவீன ஓவியம் பற்றிய பகுதி, அதனோடு தமிழகம் முழுக்க நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. Dali`யும் எனக்கு தெரிந்தது, நாயக்கர் கால சிற்பங்களையும், சோழர்கள் கால வெண்கல சிற்பங்களையும் பார்க்க வாய்ப்பும் சூழலும் இருந்தது. அதனுடன் கே.மாதவனையும் படித்தேன், இரசித்தேன். கோபுலுவையும் இரசித்தேன். Picasso`வை ஏழாவது எட்டாவது படிக்கும் போதே தெரிந்திருந்தது. ஒரு பகுதி புரிந்தது, மற்றொரு பகுதி
புரியவில்லை. இருந்தாலும் தேடுதல் இருந்துக்கொண்டே இருந்தது. ஓவியக் கல்லூரி என்னை இன்னும் அதிகமாக வளர்த்தது. எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் அனைவரும் மாபெரும் மனிதர்கள். அவர்கள் செய்துக்கொண்டு இருந்ததை நேராக பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல அற்புதமான கலைஞர்கள் எனக்கு முன்பு இருந்தார்கள். தனபால், சந்தான் ராஜ் போன்ற பெரிய கலைஞர்கள் எனக்கு முன்பு இருந்தார்கள். அவர்கள் செய்வதெல்லாம் பார்த்து கொண்டே இருந்தேன். அதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருந்தது.

அன்றும் இந்த ஏற்றத்தாழ்வு பார்வையிருந்தது. நான் வாரப் பத்திரிக்கைகளைப் படித்தேன், அதிலிருக்கும் ஓவியங்களையெல்லாம் இரசித்தேன். என்னை மேன்மையானவன் என நினைத்துக்கொண்டு, வாரப் பத்திரிக்கைகளை இழிவு என நினைத்தேன். இப்போதும் இழிவென சொல்லிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. இழிவு எல்லா இடத்திலும் இருக்கு. நவீன ஓவியத்தில் குப்பையை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எப்போதும் கோவிலில் இருக்கும் சிற்பம் தவிற மற்றவையெல்லாம் ஓவியம்/சிற்பம் இல்லை என சொல்லும் கூட்டத்தையும் பார்த்திருக்கிறேன். இப்படியான பார்வைகள் இருக்கிறது. ஆனால் அப்படி பார்க்க கூடாது. அவனவன் தன் பகுதியில் தன்னை நிறுத்திக் கொள்வதற்காக பேசும் பேச்சுக்கள் இவை. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள கூடாது. உங்களுக்கான கதவு மிக அகலமானது. உங்களுக்கான களம் மிகப் பெரியது. உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த தினசரி செய்தி இருக்கிறது. இலங்கையிலிருந்து வரும் செய்தி உங்களை பாதிக்கலாம். அதே நேரத்தில் அமெரிக்காவின் செய்தியோ அல்லது வேறு உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு அடுத்து பத்தாவது வினாடியில் கிடைத்துவிடுகிறது. ஏற்றத்தாழ்வு மனபான்மையுடன் தற்போது பார்க்க முடியாது. என் சிற்பம் அங்கு இருக்கிறது. அவன் சிற்பம் என் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. அவன் ஓவியம் என்னிடம் இருக்கிறது. நேற்று வரை இருந்த தொடர்பு நிலை வேறு, இன்று இருக்கும் தொடர்பு நிலை வேறாக உள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்பு, குறுவட்டுகளின் புழக்கம் இல்லாத காலங்களில் Film Society மட்டுமே நல்ல சினிமாவை பார்பதற்கான இடமாக இருந்தது. இன்றைய நிலை அப்படி கிடையாது. இன்றைய இளம் திரைப்பட கலைஞர்கள் Film Society'க்குச் சென்று பார்ப்பதில்லை. Korean, Japan மற்றும் சின்ன நாடுகளினுடைய படங்களையெல்லாம் தேடி Festival`க்கு சென்று, ஒரே இடத்தில் 15-20 நாள் 180-200 படங்கள் ஒன்றாக பார்த்துக்கொண்டிருந்த ஒரு கால கட்டம் இருந்தது. தற்போது உங்களை தேடி வந்துவிட்டது. தொடர்பு நிலை வேறு மாதிரியிருக்கிறது. அப்படியான நிலையில் பிரிவினைவாத, ஏற்றத்தாழ்வு பாவிக்கக்கூடிய மனப்பான்மையில் பேச முடியாது. அதற்கான இடமே இல்லை.

Korean, Japan மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இருக்கின்ற ஒவியத்தினுடைய கூருகளுக்கு நடுவில் காமிக் புத்தகத்துடைய தன்மை இருக்கிறது. மாபெரும் நவீன ஓவிய கலைஞர்களின் பாதிப்பு காமிக் புத்தகத்தில் வேலை செய்கிற சில கலைஞர்களுக்குள் இருக்கிறது. என்னை போலவே நவீன ஓவியத்தையும் வரைந்துக்கொண்டு காமிக் புத்தகத்திற்கும் வரையும் சில கலைஞர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பல தற்குறிகளுக்கு இதை குறித்து எந்த புரிதலும் கிடையாது. ஆகையால் உயர்வு தாழ்வு குறித்து பேசிக்கொண்டிருப்பவர்கள் கிணற்றுத் தவளையாக இருக்கலாம்.

ஒரு கலைஞனை ஆழமாக கவனிக்க வேண்டுமென்றால், அவர் தனது 30 முதல் 40 கால படைப்புகளை படிப்பதற்கான வாய்ப்பு ஏற்ப்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். பத்தாண்டிற்கு முன்பு என்ன வரைந்தார் என்றே தெரியாது , என்ன செய்தார் என்றே தெரியாது, திடீரென கலைஞனாக வரும் அதிசயம் எங்கேயும் நடக்காது. அப்படி நடப்பதும் கிடையாது. அவ்வாறு இல்லையெனில் எந்த சந்தேகமும் இல்லாமல் குறுக்கு வழியில் வந்தவர் தான். ஓவியம் ஒன்றை ஒருவர் செய்வார், அதை பார்த்து தான் செய்வது. இன்னொரு பத்து ஆண்டுகளில் வேறிடத்திற்கு சென்று, அங்கு பக்கத்தில் இருப்பவனை பார்த்து அவன் செய்வதையே தான் செய்வது. இப்படியான குறுக்குவழியில் வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் மிகவும் முக்கியமான நவீன ஓவியர்கள் இருக்கிறார்கள். Hebbar, M.F.Hussain, K.G.Subramanyan என இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் படைப்புகள் ஆரம்பத்தில் இருந்து பார்க்க கிடைக்கிறது. அந்த வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. அதையெல்லாம் பார்ப்பதன் மூலம் தான் அவர்களை மதிப்பிட முடியும்.

தமிழ் சினிமா கலைஞர்களில் Kurosawa`வை கொண்டாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் Kurosawa`வின் ஆழத்தை தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அவருடைய sense of composition. ஒரு ஓவிய கலைஞர் எப்படி இயங்குகிறாரோ அவ்வாரே இயங்கினார். அந்த வழியில் சினிமா கலைஞராவதற்கு முன்பு கிடைத்த பயிற்சியினால் தான் மற்றவர்களிடத்திலுருந்து அவர் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். Shakespeare படைப்புகள் சிலவற்றை திரைக்கு கொண்டு வந்தார், சாமுராய் கதைகள், கலாச்சார கதைகள் செய்தார். அனைத்தையும் கடந்து அவரின் narrative style, அந்த pictorial style`னால் தான் அவரின் திரைப்படம் நன்றாக இருந்தது. காட்சி படுத்துகிற தன்மையின் மூலமாக அவர் தனித்து விளங்கினார்.

ஆங்கிலேயரின் அதிக ஆதிக்கத்தில் இருந்தது முதல், கடந்த 140 வருடங்கள் மட்டுமே நம்மால் காட்சி படுத்த முடிந்திருக்கிறது. அதற்கு முன்பு நம்மால் இயலவில்லை, வாய்ப்பில்லை, வழியில்லை. ஆனால் இப்போது அப்படி சொல்ல முடியாது. அப்படியான சூழ்நிலை இப்போது கிடையாது. ஐரோப்பாவின், கடந்த 500-600 ஆண்டுகளை ஒவ்வொரு 10 ஆண்டுகளும் நாட்குறிப்பு போன்று காட்சிப்படுத்த பட்டுள்ளது என கூறலாம்.

ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும். அனைத்து கலைஞர்களும், அனைத்து சம்பவங்களும், அனைத்து புதினங்களும், இதிகாசங்களும், செய்தியும், தினப்படி வாழ்வும் எல்லாமும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. அனைத்தையும் காட்சிப்படுத்தி வளர்ந்த சமூகம் தான் அந்த சமூகம். நமக்கு அப்படியான ஒரு நிலை இல்லை.

மேற்கத்திய நாடுகளிலிருந்து, காலனிய காலகட்ட ஓவியர்கள் இந்தியா வந்தார்கள். அதற்கு முன்பு வரை நமக்கு ஒரு பாரம்பரிய வழக்கம் இருந்தது. ஒவ்வொரு 100 ஆண்டும் ஒரு வடிவம், ஒரு வரம்பு வைத்துக் கொண்டு , இலக்கனத்தோடு செய்தோம். இந்தியா வந்த ஓவியர்களுக்கு, இங்கு இருக்கும் அரச குடும்பத்து பெரிய ஆட்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த கலைஞர்கள் சிலர் இந்திய கலைஞர்களுடன் ஊடாடினார்கள். அவர்களுள் வந்த முக்கியமானவராக ரவி வர்மா கருதப்படுகிறார். அதே காலத்தில் சித்திரக்கார நாயுடுகள் இருந்தார்கள். தமிழ்நாட்டில்/தென் பகுதியில் இது போன்ற நேரத்தில் ஒரு பெரிய தேடல் நடந்தது. பின்பு அங்கிருந்து ரவி வர்மா பம்பாய் சென்றார். பம்பாயில் தன்னை வளப்படுத்திக்கொள்ள முனைந்தார். நாட்காட்டிகள் அடித்தார், ஹோலோகிராஃப் அடித்தார். அங்கிருக்கும் பார்ஸி தியேட்டரின் தன்மையை பார்த்து கடவுள் படங்கள் வரைந்தார்.

அந்த படங்களை பார்த்து மராட்டிய சினிமா வெளிவந்தது. மராட்டிய சினிமாவிற்கு சென்று தொழில் கற்றுக்கொண்டவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்து ஸ்டுடியோ ஆரம்பித்தனர். விஜயா வாஹினி ஸ்டுடியோ அப்படியாக ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஸ்டுடியோ அமைந்தவுடன், வேலை வாய்ப்புகள் அதிகரித்தது. அங்கிருந்து மக்கள் இங்கு வந்தார்கள். முதலில் வந்தவர்கள் சினிமா தெரிந்தவர்கள். பீம் சிங் போன்றவர்கள் சிலரும் மற்றும் பல மராட்டியர்களும் வந்தனர். சினிமாவில் கதை எழுத தமிழ் அறிஞர்கள் சிலர் உதவினார்கள். ஜெமினி படம் எடுத்தாலும் தமிழ் அறிஞர்களின் பங்கு இருந்தது. இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்ற முக்கியமான தொழில்நுட்பர்கள் அனைவரும் வட இந்தியர்களாக இருந்தனர். அவர்களுக்கு மட்டும்ர்ர் சினிமாவில் அப்போது அனுபவம் இருந்தது. மராத்திய சினிமா மூலம் கிடைத்த அனுபவம் அது. பெங்காலின் கலை கல்லூரி மற்றும் அதன் 100 ஆண்டு வளர்ச்சியினால், தெரு முனையில் செய்யும் காளியின் சிற்பமானாலும் அதில் மேற்கத்திய கலையின் தாக்கம் இருந்தது. பாம்பே துறைமுகமாகும் தருவாயில், மராட்டிய சினிமா வளரும் பட்சத்தில் அங்கு பெரிய வளர்ச்சியிருந்தது. அதன் பிறகு அங்கிருந்து பெங்காலிகள் தமிழ்நாட்டிற்கு கலை இயக்குனர்களாக வந்தனர். அங்கிருந்த மராட்டிய சினிமாவின் தன்மையோடு இங்கு தமிழ் சினிமா எடுக்கப்பட்டது. மராட்டிய தன்மையோடு கூடிய தமிழ் வரலாற்றை இங்கு எடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவை மராட்டிய தன்மையோடு கொண்ட வரலாற்றை நாம் எடுக்கும் ஒரு நிலை இருந்தது.

அந்த காலகட்டத்தில் பத்திரிக்கைகள் பெரிய இடத்துக்கு வந்துக்கொண்டிருந்தன. கல்கி , ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் வெளி வந்துக்கொண்டிருந்தன. தங்கள் இதழ்கள் அதிகமாக விற்க வேண்டும் என்பதற்காக பொன்னியன் செல்வன், சிவகாமி சபதம் போன்ற தொடர்கள் வெளிவந்தது. கதை காட்சிப்படுத்தும் தன்மையோடு இருக்கும் பட்சத்தில் மணியம் போன்ற ஆட்கள் படம் வரைந்தனர். இங்கிருக்கும் சிற்பங்கள், இந்திய சிற்பங்கள், மராட்டிய சினிமா மூலம் தமிழ் ஸ்டுடியோவுக்குள் நுழைந்த படங்கள், இவையனைத்தையும் கலந்தது போல பிரமிப்பை ஏற்படுத்தும் படியான சித்திரங்களை மணியம் அவர்கள் இந்த தொடர்களுக்காக வரைந்தார். ஆனந்த விகடன் பத்திரிக்கையில் கோபுலு போன்ற கலைஞர்கள் இருந்தார்கள். பின்பு வேறு மாதிரியான இடத்திற்கு ஆனந்த விகடன் சென்றது. அதில் இருந்த எல்லா கலைஞர்களையும் கொண்டாடிவிட முடியாது. சிலர் சிறந்த பங்காற்றியிருக்கிறார்கள். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக, சென்னை ஓவிய கல்லூரி இந்த கலைக்கு மிக பெரிய பங்களிப்பு செய்து வருகிறது. ராய் சவுத்ரி, பனிக்கர், தனபால் போன்றவர்களுடைய செழுமை படுத்தலினாலே கல்லூரி நல்ல இடத்திற்கு வந்தது.

நவீன ஓவியர் Andy Warhol`யோ அல்லது Dali`யையோ பார்ப்பவர்கள், மற்ற விஷயங்களையெல்லாம் குப்பை என சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் ஐரோப்பா அப்படி பார்க்கவில்லை. Popular ஆர்ட்டை நிராகரிக்கவில்லை. எல்லாமும் popular கிடையாது. அதே நேரத்துல எல்லாமும் serious கிடையாது. சீரியஸ்குள்ளாக இருப்பதாக சொல்லப்படுகின்ற போலியான பகுதிகள் அங்கேயும் இருக்கிறது, இங்கேயும் இருக்கிறது. நான் அடிக்கடி சொல்வதுண்டு, வார்த்தை தான் பொய் சொல்லும், கோடு பொய்யே சொல்லாது. உங்களையெல்லாம் நான் ஏமாற்றிவிட முடியும் அல்லது என்னுடைய தாத்பிரயத்தாலே உங்கள் கண்ணை கட்டிவிட முடியும் என நினைத்தேனென்றால், அது கிடையாவே கிடையாது. ஓவியத்தை பொருத்தவரையில், எனக்கு தெரியாததையும் சேர்த்து தான் நான் வரைகிறேன். என்னுடைய படம், இந்த பகுதி எனக்கு தெரியாது, அல்லது செய்ய நேர்த்தியில்லை, அல்லது பயிற்சியில்லை, அப்படியென்பதை அப்பட்டமாக காட்டிவிடும்.

ஒரு 100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பத்திரிக்கை வந்தது. என்க்ரேவிங் அதற்கு முன்பு இருந்தது. என்க்ரேவிங்கில் இருந்து ஹோலியாகிராம் வந்தது. புகைப்படம் வராத காலகட்டம். 150 ஆண்டுகளுக்கு முன், என்க்ரேவிங் காலகட்டத்தில், அதற்கு முன்பு ஒரு கலைஞர் செய்த படைப்பை, இன்னொரு கலைஞர் பிரிண்டிங்காக வேலை செய்ய வேண்டும். தொழில்நுட்ப மாற்றம் நடந்துக்கொண்டிருந்தது. இந்த மாற்றம் முழுவதையும் சந்தித்த கலைஞர்களும் இருக்கிறார்கள். Howard Pyle என்ற அமெரிக்க illustrator மிக முக்கியமானவர். அவர் ஆசிரியராகவும் பணி செய்தவர். Life, Harper Bazaar போன்ற பெரிய பத்திரிக்கைகளுக்கு படம் வரைந்து கொண்டும், canvas paint செய்துக் கொண்டுமிருந்தவர். பத்திரிக்கைகள் வந்த பின்பு அரச குடும்பங்களையும், பண வசதி படைத்த குடும்பங்களை மட்டுமே கலைஞர்கள் நம்பி இருக்க வேண்டிய நிலை மாறியது. பத்திரிக்கைகளும் ஓவியர்களுக்கு அதரவளிக்கும் நிலை வந்தது. பத்திரிக்கை நிறுவனங்கள் ஓவியர்களை ஆதரிக்கும் நிலை உலக அளவில் வந்தது. Pyle போன்ற முக்கியமானவர்கள் பத்திரிக்கை மூலமாக வந்தவர்கள். வேலை செய்வதோடு மட்டுமல்லாமல், இலவசமாக 20-30 இளம் கலைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அவருடைய மாணவராக இருந்து வந்தவர் N.C.Wyeth என்ற பெரும் கலைஞர். N.C.Wyeth`உடன் 15-20 ஓவியர்களுக்கு, பெண்கள் உட்பட Pyle கற்றுக்கொடுத்தார். அவருடைய மாணவர்கள் கிட்டத்தட்ட கடந்த நூற்றாண்டில் இந்த துறையை ஆட்சி செய்தார்கள் என சொல்லலாம்.

சினிமாவில் சென்று வேலை செய்தவர்கள், அனிமேஷனில் சென்று பணி செய்தவர்கள் , அவர்கள் துறை சார்ந்து இருக்கும் வாசல்களை தாண்டி உள்ளே செல்ல துணிந்தவர்கள் மட்டும் தான் இது போன்ற கலைஞர்களை தேடினார்கள். மேலே இருப்பவர்கள் அனைவரும் Dali'யையும் Picasso`வையும் தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான் சொல்லும் இந்த துறையில் பணி செய்த யாரும் குறைவானவர்கள் கிடையாது. 1920 காலகட்டத்தில் Hal Foster மற்றும் Hoggard போன்ற பெரிய கலைஞர்கள் காமிக் புத்தகத்தில் வரைந்து கொண்டு இருந்தார்கள். Hoggard அவர்களின் புத்தகம் தான் உலகம் முழுவதும் இருக்கும் ஓவிய கல்லூரி மாணவர்களுக்கு பைபிளாக விளங்குகிறது. இவர்கள் காமிக் புத்தகத்தில் வரைந்து கொண்டு இருந்தவர்கள்.

நான் உங்களுக்கு சில பெயர்கள் குறிப்பிட போகிறேன். இதுவரையில் இளம் கலைஞர்கள் தேடிச் சென்று பார்க்காத அல்லது நம் சூழலில் இருக்கும் நவீன ஓவியர்களுக்கு தெரியாத பெயர்கள். திமிராகவே சொல்லுகிறேன் என்றே நினைத்துக்கொள்ளுங்கள். இந்த பெயர்கள் பற்றிய நல்ல அபிப்ராயம் இவர்களுக்கு கிடையாது. இந்த பெயர்களுக்குரியவர்களுக்கு இருக்கும் உழைப்பும் அர்பணிப்பும் இவர்களுக்கு கிடையாது. அங்கும் 1960 வரையில், இக்கலைஞர்களை பெரிதாக கொண்டாடவில்லை. 1960`க்கு பின்பே இவர்களை கொண்டாட ஆரம்பித்தனர். 1920`இல் இருந்த கலைஞர்களை 1960`க்கு பிறகு தான் கொண்டாடினார்கள். இதுவும் ஒரு கலை, இதற்கு பின் பெரிய அர்ப்பணிப்பும் வாழ்வும் இருந்திருக்கிறது, பெரிய படைப்பு திறன் இருந்திருக்கிறது என்று பிறகு தான் உலகம் புரிந்துக்கொண்டு பார்க்க தொடங்கியது. Special Effects` குள்ளேயும், அனுமேஷன்க்குள்ளேயும், காமிக் புத்தகத்துக்குள்ளேயும், illustration செய்ய வேண்டும் என பல துறைகளில் கடந்த 100 ஆண்டுகளில் பல கலைஞர்கள் ஆர்வமுடன் பணி செய்தனர். இந்த கலைஞர்களுடைய பங்களிப்பு மிகப் பெரிய பங்கு. மேலே இருக்கும் இயக்குனர்கள், நமக்கு தெரிந்த மேலே இருக்கும் பெரிய நவீன ஓவியர்கள் மட்டுமே சிறந்த கலைஞர்கள் கிடையாது.

என்பதுகளில் ஆசிய நாடுகளிலிருந்து ஒரு ஊடாட்டம் இருந்தது. 1940`க்கு முன்பு ஆசியாவில் ஸ்பானிஷ் காலனிகள் இருந்தன. ஸ்பானிஷ் ஓவியர்களின் பாதிப்பும், அவர்களின் புத்தகமும் Fiji, Taiwan, Philippines அதை சுற்றியுள்ள நாடுகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்பானிய கலைஞர்களின் பாதிப்பால் உள்ளூர் கலைஞர்களும் மேலே வந்தனர். உள்ளூர் கலைஞர்கள் ஸ்பெய்ன் , அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்றனர். அந்த நாட்டு ஓவியர்களுடன் ஒரு ஊடாட்டம் ஏற்பட்டது. அந்த கலைஞர்களின் கலைப்படைப்பைப் படித்து அல்லது அதன் பாதிப்பினால் 80,90`களுக்கு பிறகு பல படைப்புகள் வெளிவந்தன. அந்த படைப்புகளை ஆசியா என்றும் சொல்ல முடியாது, ஐரோப்பா என்றும் சொல்ல முடியாது, அமெரிக்கா என்றும் சொல்ல முடியாது. அப்படியான அற்புதமான படைப்பு ஐரோப்பாவில் இன்று புழக்கத்தில் இருக்கின்றது. அதற்கு சாரம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா என மூன்றையும் கொண்டது அந்த படைப்புகள்.

குழந்தைகள் புத்தகத்திற்கு ஓவியம் வரைந்தவர்கள், காமிக் புத்தகத்தில் புரட்சிகரமான செயலை செய்தவர்கள், அனிமேஷன் சினிமாவில் மிக முக்கியமான காரியங்களை செய்தவர்களின் பெயர்களை குறிப்பிட உள்ளேன். இதுவரை இந்த கலைஞர்களை அறியாதவர்கள், தேடாதவர்கள், இவர்களின் சிறப்பையும் படைப்புகளையும் தேடிப் படியுங்கள். தற்போதைய சூழ்நிலையில் பெயர்களை கூறிவிட்டாலே, அவர்களை குறித்து தேடி படித்துக்கொள்ள எல்லா வசதியும் இருக்கிறது. மாணவர்களுக்காக, குறிப்பாக ஓவியம், அனிமேஷன், காமிக் புத்தகம் & சினிமா ஆகிய நான்கிலும் ஊடாடி ஒரே யோசனையில் செயல்படுகின்ற அல்லது செயல்பட வேண்டும் என நினைக்கின்ற வளர்ந்து வரும் கலைஞர்களுக்காவே இந்த பெயர்களை குறிப்பிடுகிறேன். இந்த கலைஞர்கள் அனைவரும் மிகவும் முக்கியமானவர்கள்.

அனிமேஷன் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது டிஸ்னியாகவே இருக்கும். டிஸ்னியில் பணி புரிந்த சில அனிமேட்டர்ஸ் சிறப்பாக, ஆழமாக செயல்பட்டனர். Nine Old Man என்று கூறுவார்கள். கடந்த 80 ஆண்டுகளில் டிஸ்னிக்கு சிறப்பாக பணியாற்றியவர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவரின் படைப்புகளை அனைத்தையும் பாருங்கள், படியுங்கள்.

Moebius – ப்ரென்ச் நாட்டு காமிக் புத்தக கலைஞர். அவர் எந்த விதத்திலும் Picasso அல்லது Dali`க்கு குறைவானவர் இல்லை. நவீன ஓவிய கர்த்தாகளுக்கு ஈடு இணையானவர் Moebius. அவர் காமிக் புத்தகத்தில் தான் பணி செய்தார். நெரேடிவ் ஆர்ட்டில் இவர் மிக முக்கியானவர்.

Winsoy Mccay & Georges Melies – இவர்களுடைய வாழ்வையும், படைப்புகளையும், படைப்புக்காக அவர்கள் எதிர்க்கொண்டவைகளையும், அவர்களின் artistic process ஆகியவை அனைத்தும் தேடிப் பாருங்கள். அவர்கள் செயல்பட்டு இன்று நமக்கு அளித்துச் சென்றிருக்கிற மிக முக்கியமான படைப்புகளை பார்ப்பதன் மூலம், நீங்கள் அடுத்த கட்டத்திற்கு ஒரு புதிய வடிவத்திற்கு செல்ல வேண்டும்.

Chuck Jones, Bill Hanna & Joe Barbera – இவர்கள் குறித்து பலருக்கு தெரிந்திருக்கும். இவர்களின் வரலாற்றையும், படைப்புகளையும், எப்படியான கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள் போன்றைவற்றை தேடி தெரிந்துக்கொள்ளுங்கள்.

H.R.Giger - Alien என்று சொன்னாலே, Ridley Scott'இன் ஏலியன் ஞாபகத்துக்கு வரும். Ridley Scott`னினுடைய ஏலியனுக்கு உள்ளுக்குள்ள இருக்கிற ஏலியன் creature`ஐ டிஸைன் செய்தது H.R.Giger என்ற ஸ்விஸ் நாட்டு கலைஞர். கடந்த 35-40 வருடங்களாக, வேற்று கிரகத்து மனிதனை எப்படி செய்வது எப்படி நினைப்பது என ஒரு scale போல அவர் செய்து வைத்துவிட்டார். மற்றவர்கள் அதிலிருந்து தான் மேலே செல்கிறார்கள். இதை ஆழமாக பார்க்க முடிந்த அல்லது தேடுகிற கலைஞர்களுக்கு மட்டுமே இவர்களை தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.

ஸ்டுடியோ கலாச்சாரத்தைக் கடந்து, தனித்து இயங்கிய சில கலைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களில்,
சமீபத்தில் இறந்த Bob Godfrey,
Geoff Dunbar,
George Dunning,
Faith & John Hubley என்ற தம்பதியினர்,
Halas & Batchelor என்ற தம்பதியினர்,
Jerzy Kucia,
Czechoslovakia's stop motion film maker Jiri Trnka,
Norman McLaren,
Frederic Back &
Raoul Servais ஆகியவர்கள் குறிபிடத்தக்கவர்கள்.

Norman McLaren – Canada Film Board`இல் பணி புரிந்தவர். என் சிறு வயதில் இவரின் படங்கள் என்னை அதிகம் பாதித்தது.

Robert Abel – Optical Animation செய்தவர். Character animation செய்வது மட்டுமல்லாமல், பரிட்ச்சார்த முயற்சியாக புதிய தொழில் நுட்ப முறையை உள்வாங்கி கொண்டு பணி செய்தவர்.

Heinz Edelmann – German Designer. இவரின் பங்களிப்பால் Yellow Submarine என்ற மிக முக்கியமான அனிமேஷன் படம் வெளியானது.

Tomi Ungerer – Caricaturist. Humorist. சிறப்பாக Pen & Ink’இல் வரைபவர். நையாண்டியான படைப்புகளில் செய்யும் மிக முக்கியமான கலைஞர்.

Ronald Searle – Bridge on the River Kwai படத்தில், ஜப்பானியர்களை ஆங்கிலேயர்கள் அடைத்து வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்க கூடும். இரண்டாம் உலகப் போரின் மிக முக்கியமான நிகழ்வு. அதில் இருந்தவரில் முக்கியமானவர் Ronald Searle. 90 வயது வரை வாழ்ந்தவர். என்னில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவரில் இவரும் ஒருவர். ஆங்கிலேய வாழ்க்கையை அவரை போல் நையாண்டியாய் செய்தவர்கள் யாருமில்லை.

John Lasseter – டாய் ஸ்டோரி திரைப்படத்தை எடுத்தவர். அவர் வாழ்வையும், செய்திருக்கும் முக்கியமான திரைப்படங்களையும் படிக்கவும், பார்க்கவும்.

Osamu Tezuka – ஜப்பானிய வால்ட் டிஸ்னி என குறிப்பிடலாம். ஜப்பானில் குருவை போல் எப்போதும் மதிக்கப்படுபவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் Kurosawa, இன்னொருவர் Osamu Tezuka. Manga காமிக் புத்தகம் வருவதற்கு காரணமாக இருந்தவர். முதல் தொலைக்காட்சி அனிமேஷன் செய்தவர். முதல் திரைப்பட அனிமேஷன் செய்தவர். காமிக் புத்தகம், அனிமேஷன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர் என மூன்றிலும் பணி புரிந்தவர். Anim என்று இன்று இருக்கும் zonor'க்கு தந்தை அவர்தான்.

Frank Frazetta – அமெரிக்க கலைஞர். அதீதமான கற்பனையுலகத்தை மையமாக வைத்து வரையப்படும் படத்திற்கு அவரின் படமே மாதிரி அளவு என்று கூறலாம். 80'களில் அவருடைய படங்களை முதன் முறையாக பார்த்தேன். என்னை அதிகமாக பாதித்தது. அவர் படங்கள் narrative`வாகவும் cinematic`காகவும் இருக்கும். அவர் படங்களை பார்க்கையில் முக்கியமான action'ஐ freeze செய்தது போல இருக்கும்.

Katsuhiro Otomo – 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான Akira அவருடைய ஓவியத்தால் உருவான அனிமேஷன் படம். அமெரிக்கா அல்லாத மற்ற நாட்டு அனிமேஷன் படங்களில் உலகளவில் முதலில் பெரிதாக பேசப்பட்டது, ஜப்பானிய படம் Akira.

Enki Bilal – அனிமேஷன் செய்திருக்கிறார். திரைப்ப்டம் எடுத்திருக்கிறார். காமிக் புத்தகத்திற்கு படம் வரைந்திருக்கிறார். நாடு கடந்து வந்து ப்ரென்ச் நாட்டு குடியாக மாறியவர்.

Lorenzo Mattotti – காமிக் புக் ஆர்ட்டிஸ்ட், பெயிண்ட்டர். மிக பெரிய ஃபேஷன் டிஸைனர். நன்றாக கவனிக்கவும், ஒருவர் தான் ஆனால் பன்முக தன்மை கொண்டவராக விளங்குகிறார்.மிக பெரிய பெயிண்டர். நம் ஊரில் இந்த பகுதி குறித்து பலருக்கு தெரியாது. தெரியாமலே உளறிக்கொண்டு இருப்பார்கள்.

Art Spiegelman – காமிக் புத்தக வராலாற்றையும், Mouse என்ற மிக முக்கியமான புத்தகத்தையும் எழுதியவர். இரண்டாம் உலக போரின் போது நாஸி படைக்களால் இவரின் பெற்றோர்கள் துன்புறத்தப்பட்டனர். அவர்கள் துன்பங்களை எலிகளாக, துன்பப்படுத்தியவர்களை பூனையாகவும் கருதி எழுதிய காமிக் புத்தகமே Mouse. பெற்றோர்களை நேர்காணல் கண்டு அதை பதிவு செய்து, அதன் மூலமாக காமிக் புத்தகத்தை
உருவாக்கினார். காமிக் புத்தக வரலாறு குறித்தும் காமிக் புத்தகத்தின் பங்களிப்பு குறித்தும் தெரியப்படுத்துவதற்காக பத்திரிக்கைகளை நடத்தினார். காமிக் புத்தக வராலாற்றினுடைய ஆசிரியர்.

Will Eisner & Hal Foster - கட்டங்களின் மூலமாக தொடர்பு நிலையை சொல்லுவது என்ற பகுதியை செய்தவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரின் Language சிறப்பானது.

Alex Raymond & Jack Kirby – காமிக் புத்தகத்தில் 60,70`களில் மிக முக்கியமானவர்கள். அவர்களுடைய சட்டகம்(Frame) மிக முக்கியமான ஒன்றாகும்.

Frank Hampson – Eagle என்று நான் சிறுவனாக இருந்த போது, 50` 60`களில் British Illustrated பத்திரிக்கை வந்தது. அதில் பங்காற்றிய கலைஞர்.

Denis Muren & Richard Edlund. - ஸ்டார் வார்ஸ் படத்தை தொடந்து தங்களை ஐ.எல்.எம் இல் இணைத்துக் கொண்டு இயங்கியவர்கள். ஸ்டார் வார்ஸ் ஆர்ட்டிஸ்ட்ஸ், அனிமேட்டர்ஸ் மற்றும் பப்பெட்டர்ஸ் முக்கியமானவர்கள்.

Willis O'Brien – King Kong பாத்திரத்தை உருவாக்கியவர்.

Jacques Tardi – காமிக் புத்தக ஆர்ட்டிஸ்ட்.

Frank Miller – காமிக் புத்தக் ஆர்டிஸ்ட்.

Alan Moore – காமிக் புத்தகம் எழுதுபவர், படம் வரைபவர்.

Maurice Sendak – குழந்தைகள் புத்தகத்திற்கு படம் வரைபவர்.

Quay Brothers – அனிமேஷன் சகோதரர்கள்.

Jan Lenica.

Ray Harryhausen

Roland Topor

Robert Crumb

George Bellows

இத்தாலி, ஃப்ரான்ஸ், செக்கோ ஸ்லோவாக்கியா, ரஷ்யா, போலந்து & ஹாலந்து நாட்டு Independent animators படைப்புகளை தேடி தெரிந்துக்கொள்ளுங்கள். ஓவிய கல்லூரி மாணவனாக இருந்த போதிருந்தே போலந்து நாட்டு கலைஞர்கள் என்னை அதிகமாக பாதித்தனர். என்னை ஊக்கப்படுத்தியவர்கள் அவர்கள். பன்முக தன்மைக் கொண்டவர்கள். வரைந்துக் கொண்டு மட்டும் இருக்காமல், பன்முக தன்மையுடன் விளங்கினர். நாடகத்திற்கு போஸ்டர் செய்வது, புத்தகத்திற்கு அட்டை வரைவது, பெயிண்ட்டிங் செய்வது, அனிமேஷன் படம் எடுப்பது, கதைக்கு படம் வரைவது, ஆடை வடிவமைப்பு செய்வது, சினிமாவிற்கு செட் போடுவது, பொம்மை வடிவமைப்பது, character டிஸைன் செய்வது என பன்முகத் துறையில் இயங்கினார்கள். என்னை பன்முகத் தன்மை கொண்டவனாக இருக்க அதிக ஊக்கபடுத்தியது போலந்து நாட்டு கலைஞர்கள்.

தொடர்ந்து ஓவிய உலகத் தொடர்புடன் ஓவிய மனத்துடன் இயங்கிய புகைப்பட கலைஞர்கள், திரைப்பட ஒளிப்பதிவாளர்களின் பங்களிபையும் தேடி பாடியுங்கள்.

Heavy Metal என்ற ப்ரென்ச் புத்தகம். Moeibus போன்ற ஐந்து கலைஞர்களால் துவங்கப்பட்டது. பாப்புலர் காமிக் புத்தகம் அல்லாமல், தாங்கள் நினைத்தை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. காமிக் புத்தகத்தில் தாங்கள் சொல்ல நினைத்த விடயங்கள், மாற்றான கருத்துகள், பொதுவான பதிப்பகம் செய்யாததை செய்து சில புத்தகங்களில் உருவாக்கினார்கள். அந்த புத்தகங்களில், விஞ்ஞான புதினங்கள் வர துவங்கிய 15
ஆண்டுகளுக்கு முன்பே பரிட்ச்சார்த்தமாக அனைத்தையும் செய்தார்கள்.

என் கால கட்டத்தில் இதையெல்லாம் தேடி போக வேண்டிய நிலை இருந்தது. இன்றைய சூழலில் உங்களுக்கு, உங்கள் வீட்டுக்குள்ளேயே அனைத்தும் இருக்கிறது. இந்த பெயர்களை வைத்துக்கொண்டு, இவர்களையெல்லாம் தேடி தெரிந்துக்கொள்ளுங்கள்.

சினிமாவை உயரத்திற்கு கொண்டு வந்திருப்பது, இந்த காமிக் புத்தகம் கலைஞர்களின் செயல்பாடுமாகும். சினிமா-காமிக் புத்தகம், இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரெதிராக வளர்ந்திருக்கிறது. கலைஞர்கள் அவரவர் துறையில் வைத்திருந்த ஈடுபாடே அதற்கு காரணம்.

இந்த கலைஞர்களை தேடி ருசித்து இன்பம் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் பார்வை அடுத்த கட்டத்திற்கும் வேறொரு பரிமாணத்திற்கு செல்ல வேண்டும். இந்த கலைஞர்களின் படைப்புகளை பார்ப்பதனால் கிடைக்கும் அனுபத்தின் மூலம், உலக பார்வை பெற்று தமிழ் சூழலுக்கு புதிய தரவுகளை இளம் கலைஞர்கள் தர வேண்டும் என நம்புகிறேன். ஆசை படுகிறேன்.

 

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </